Wednesday, October 26, 2011

சப்தம் என்பதே ஜாலி! அதைப் போட்டுப் பார்ப்பதே ஜோலி!


தீபாவளியும்-மழையும், ஊழலும் அரசியலும் மாதிரி. இன்றும் (26/10/2011) அப்படியே. முதல் நாள் இரவு பிடித்த மழை, தீபாவளியன்று மதியம் வரை நீடித்தது. எனவே ஊரில் யவரும் காலையில் சரியாக ‘வெடிக்க முடிய வில்லை போலும். மாலை நான்கு மணிக்கு வெடிக்க ஆரம்பித்தார்கள். இரவு 12 மணி வரை வெடித்து தீர்த்தனர்.

உண்மையிலேயே காது வலிக்க ஆரம்பித்து விட்டது.  சப்தம் என்றால் லேசாக இல்லை! வீட்டின் “போர்ட்டிக்கோவில் போடப் பட்டிருந்த விளக்கின் ‘டோம் படால் என கீழே விழுந்து நொறுங்கும் அளவிற்கு!  அப்படியென்றால் காதின் “ஜவ்வு என்ன கதியாகி யிருக்கும்?
தீபாவளியென்றால், இந்திய சூழ்நிலையில், பட்டாசுகள் தவிர்க்க இயலாது தான். ஆனால் ஒலிக்கு ஒரு அளவு வேண்டாம்? அரசாங்கத்தினால், ‘வெடியின் சப்த்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெடிகள் மட்டுமல்ல, நமக்கு மிக நெருங்கிய உறவினரான ‘லவுட் ஸ்பீக்கர்கள், மற்றும் ‘ப்ப்ளிக் அட்ரஸிங்  சிஸ்டங்க ளுக்கும் கூட அரசின் ஒலி அளவு கட்டுப்பாடு இதோ:

Area/Zone
Day Time
Night Time
Industrial Area
75 dB (A) Leq
70 dB (A) Leq
Commercial Area
65 dB (A) Leq
55 dB (A) Leq
Residential Area
55 dB (A) Leq
45 dB (A) Leq
Silence Zone
50 dB (A) Leq
40 dB (A) Leq

ஆனால் சர்வ சாதாரணமாக நமது வெடிகள் 200 db ஐ த்தாண்டி வெடிக் கின்றன. ஸ்பீக்கர்கள் ‘அன்பார்ந்த பொது மக்களே! என பெருங்குரலில் அதட்டுகின்றன.

தற்போதுதான் உள்ளாட்சி தேர்தல் முடிந்தது. நாமினேஷன் தாக்கல் செய்ய போகும்போது வெடி.  தாக்கல் செய்துவிட்டு வந்தவுடன் வெடி. ஜெயித்து வந்ததும் வெடி. ஒவ்வொரு தடவையும், 10000 வாலாக்கள்.  தாங்கொணா சப்தத்தால், தலை கிறுகிறுத்துப் போய் உட்காரும் சமயம், வெடிவளி (தீபாவளி அல்ல) வந்து விட்டது, நமது துரதிர்ஷ்டம்.  இந்த சித்திர வதையை அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.  

சிவகாசிக்காரர்கள் இந்த ஒலி அளவு கட்டுப்பாடு பற்றி, யவரையோ ‘கண்டு கொண்டதால்,  கண்டு கொள்வதில்லை போலும். வருடா வருடம் ஒலியின் அளவு கூடிக் கொண்டே போகிறது. தாள இயல  வில்லை.

பொதுவாகவே நாம் சப்தம் விரும்பிகள். சாலைகளில் ஓடும் வண்டி களின் ஹாரன்கள் கூட, ரயில்களுக்காகவோ அல்லது கப்பல் களுக்காகவோ செய்யப் பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன்.

லவுட் ஸ்பீக்கர்கள் நமது குடும்ப உறுப்பினர். குழந்தை பிறந்தால் பாட்டு, வயசுக்கு வந்தால் பாட்டு, கல்யாணத்திற்கு பாட்டு, இறந்தால் பாட்டு.

இனி ஐயப்பன் சீசன் வரப்போகிறது.  காலை மூன்று மணி முதல், இரவு எவ்வளவு நேரம் வரையிலும் “காது செவிடாகும் வரை அனைத்து பெரிய/பிளாட்பார கோயில்களிலும் உச்ச ஸ்த்தாயி பாடல்கள் உறுதி. ஐயப்பன் கோவிலுக்கு போயிருக்கிரிர்களா? அமைதி வடிவான  ‘ஐயப்பனுக்கு கூட மலையில் “வெடிவழிபாடுஎன்று ஒன்றை வைத்து விட்டனர்.  நீங்கள் சற்றும், எதிர்பாராத தருணத்தில், அந்த வெடி எழுப்பும் மகா பிரளய சப்தத்தில், இதயம் நின்று விடாமல் இருக்க ஐயப்பன் தான் அருள் செய்ய வேண்டும்.


ஆடி மாசம் என்றால், அனைத்து அம்மன் கோயில்களிலும் எல்.ஆர். ஈஸ்வரி, ஒருமாதம் குத்தகை எடுத்து விடுவார். அருகில் ஆஸ்பத் திரியோ? அலுவலகமோ? எதுவானல் என்ன? அவர் கத்தலாம்.


பஸ்ஸில் பயணம் செய்யும் போது கூட, பேருந்தில் சக்கரம் இருக்கிறதோ இல்லையோ, ஸ்பீக்கர் இருந்தாக வேண்டும். இலவச இணப்பாக வீடியோவும்.  நெடுதூரம், பேருந்தில் இரவு ரங்களில் போக வேண்டியிருந்தால், உங்கள் நிலைமை என்ன வாகும்?

நான் மேற்சொன்ன, லிஸ்ட்டில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும்  வால்யூம் தான் ஹீரோ!   மிக உச்சமாக, இதற்கு மேல் திருகவே முடியாது என்ற அளவுக்கு, வால்யூம் இருக்க வேண்டும்.  இல்லா விடில் ரகளை.

நாய்ஸ் பொல்லியூஷன் பற்றி நமது விழிப்புணர்வு சந்தேகத்திற் கிடமானது.

குழந்தைகள், முதியோர், பரீட்சை நேரம், நோயுற்றொர், என்போன்று அமைதி விரும்புவோர் ஆகியோர், “வாயையும் , “காதையும் மூடிக் கொண்டு கிடக்க வேண்டியது தான். இல்லாவிடில் சுளுக்கு!


இதே வலைப்பூவில் இது குறித்து எனது முந்தைய இடுகைக்கு 
                                                                       Click here

Monday, October 24, 2011

திபாவளிக்கு முதல் நாள்

உங்களை, கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப் போவதாக உத்தேசம். கொஞ்சம் என்றால், ஒரு 44 வருடங்கள் பின்னால். “அட.. போப்பா கிழவா! என்கிறீர்களா! எனக்காக, அடம் பண்ணாமல், வந்துதான் பாருங்களேன்!


ஆத்தூருக்கு அருகில் "ஆனையாம்பட்டி" என்று ஒரு கிராமம். “ஜலதரங்க வித்துவான் “ஆனையாம்பட்டி கணேசன் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டி ருக்கிறீர் தானே? அதே ஆனையாம்பட்டிதான்! அந்த ஊரின், பெரிய தெரு ஒன்றில் குடியிருந்தோம். (மொத்தமே இரண்டு தெருதான் அப்போது) 

பாரதிராஜா தனது சினிமாக்களில், சித்தரித்த, ‘அக்ரஹாரம் ஒன்றினை நினவில் கொண்டு வாருங்கள். அதுபோலத்தான் இருக்கும் அந்த தெரு. விசாலமாக-நீளமாக.  வீதியின் ஒருபக்கம், பெருமாள் கோவில், அடுத்த பக்கம் சிவன் கோவில். நடுவில் ஒரு பஜனை மடம். பெரும்பாலான வீடுகளின் சுவற்றில், காவிப்பட்டைகள் தீட்டியிருக்கும். தெருவைத் தள்ளி,  கொஞ்ச தூரத்தில் ‘ஸ்வேத நதி ஓடும்.  பழமையான வீடுகள்.  அந்த தெருவின் நடுவில் உள்ள ஒரு பெரிய வீட்டில், நாங்கள் குடியிருந்தோம்; வாடகைகுத்தான். 

வீட்டின் முன், இரு பக்கமும் பெரிய திண்ணைகள். நடுவில் வாசற்படி.  குனிந்து உள்ளே வரணும், உயரம் கம்மி. அடுத்து ரேழி. அந்தக் காலத்தில் ரேழி என்பது இருட்டாகத்தான் இருக்கும். ரேழி எனப் படுவது, ஒரு சிறிய “நடைமாதிரி. இந்த வார்த்தையே புதிதாக இருக்கிற தல்லவா? அதைத்தாண்டி உள்ளே வந்தால் பெரிய கூடம். நடுவில் முற்றம். கூடத்தை அடுத்து, சாமன்கள் வைக்கும் அறை; அதன் பின் சமையலறை.

அது தீபாவளிக்கு முதல் நாள்.  வீடு திமிலோகப்பட்டுக் கொண்டி ருந்தது.  அம்மா சமையலறையில், டின் டின்னாக பட்சணம் செய்து குவித்துக் கொண்டிருக்கிறாள். விறகு அடுப்புதான். ஸ்வீட் வகைகள் முதல் நாளே தயாராகி விட்டன. பட்சணம் என்றவுடன், தற்போதைய ‘ஆனந்த பவனை நினைத்துக் கொள்ளாதீர்கள். கைமுறுக்கு, தேன் குழல் (பாட்டி இதனை மனங்கோம்பு என்பாள்), மிக்ஸர் இவைகள் தான்.

பாட்டி, அப்பாவின் நாலு முழ வேட்டியினை துவைத்து, காயவைத்து, அதை சமையல் கட்டில் பரப்பி, அதன் மேல், கை முறுக்கு சுற்றிக் கொண்டிருக்கிறாள். வேட்டியின் நடுவில் ஏதோ, மாவினால், சின்னதாக பிடித்து வைத்திருக் கிறார்களே-அது என்ன என்று கேட்கிறீர்களா? அதுதான் பிள்ளையார்; முறுக்கு விண்டுவிடாமலும், வாணலியில் வெடித்து விடாமலும் அவர் பார்த்துக் கொள்வார்.  மணி-மணியாய் முறுக்கு சுற்றுவதில், தன்னை மிஞ்ச, “ஜில்லா  விலேயே ஆளில்லை என, பாட்டி தானே சொல்லிக் கொள்வாள்.

அம்மா, இரண்டு அடுப்பில் எண்ணை வாணலிகளை வைத்து, ஒன்றில் தேன் குழலும், இன்னொன்றில் முறுக்குமாக, மாறி-மாறி போட்டு எடுத்துக் கொண்டிருக்கிறாள். முறுக்கு என்றால் இப்போது போல, கிலோ கணக்கெல்லாம் இல்லை; 58, 108 என்று,  எண்ணிக்கையில் தான் செய்யணும்.  மூணு சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்று என ‘அகலத்தில் சைஸ் எல்லாம் உண்டு.

ஸ்வீட் வகையாறாக்களில், வீட்டுக்கு வீடு மைஸூர்பாகு நிச்சயம். அப்போதெல்லாம் தீபாவளியையும் ‘மைஸூர் பாகை யும், கல்யாணமும் ‘சண்டையும்போல பிரிக்க முடியாது. அப்புறம் ரவாலாடு அல்லது மாலாடு. எந்த வீட்டிற்குப் போனாலும் இந்த ஐட்டங்கள் உத்தரவாதம்.

“அம்மா, நான் வேணா முறுக்கெல்லாம் டின்னில் அடுக்கி வைக்கட்டுமா என்று கேட்டுப் பார்த்தேன். “கரண்டிக் காம்பாலே சூடு போடுவேன்; போடா அந்தண்டை - என விரட்டுகிறாள். நான் எதற்காக அம்மாவுக்கு ‘உபகாரம் செய்ய வந்தேன் என அவளுக்குத் தெரியாதா? 
ஆனால், பாட்டிக்கு நான் செல்லம். திட்டவே மாட்டாள். இங்கே வாடா ‘பாலு’ (என்னைத்தான்) என கூப்பிட்டு, “ஏகமா வேக்கறது.. கொஞ்சம் விசிறிவிட்டு போயேண்டா என்பாள். பாட்டியின் பாசாங்கு எனக்குத் தெரியும்! விசிறிக் கட்டையை எடுத்து நாலு விசிறு விசிறியதும், அம்மா பாக்காத போது ரெண்டு கை நிறைய பட்சணத்தை எடுத்துக் கொடுப்பாள். டிராயர் பை நிறைய  நிரப்பிக் கொண்டு ஓடிவந்துவிடுவேன்.


“இந்த “கடன்காரன் தொச்சு (துரைசாமி) எங்கே ஒழிஞ்சு போனான்? மிக்ஸருக்கு அவல் பொறி வாங்கச்சொல்லி நாலு நாழிகையாகிறது. இன்னும் வரல அம்மா அடுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறாள்.

'கடன்காரன்' என்றதும் தீபாவளி செலவுக்காக கடன் வாங்கியவன் என நினைத்துக் கொள்ளாதீர்கள். தனது தம்பி ‘துரைசாமியைத்தான், அன்பொழுக அப்படி கூப்பிடுகிறாள். அப்போதெல்லாம், வீட்டுக்கு ஒரு ‘தொச்சுஅவசியம் இருப்பார். அம்மாவின் தம்பியோ, அப்பாவின் தம்பியோ அல்லது “அம்மாஞ்சி என வினோதமான உறவுப்பெயர் கொண்ட ஒருவரோ, எடுபிடி வேலை செய்து கொண்டு இருப்பார்.

முற்றத்தின் ஓரமாக, ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டி ருக்கிறாரே, அவர்தான் என் தாத்தா. அப்பாவழி பாட்டி-தாத்தா தான்.
காது மந்தம். அருகில் போய், அலறினால் ‘யாரு? என்பார்.

கண்பார்வையும் குறைவு. பத்து நிமிடம் தூணையே உற்றுப் பார்த்து விட்டு, ‘ஏண்டா... நீ தொச்சு தானே? ஏன் நின்று கொண்டே இருக்கிறாய்? உட்காரேன் என்பார்.

நினைவு கொஞ்சம் தவறும். “நாளை பண்டிகைக்கு விளாம்பழம், சோளக் கதிர் எல்லாம் வாங்கி விட்டீர்களா? என்பார்.

“அட..சட்... நீ வாயை மூடிக்கொண்டிருக்கப்போறியா இல்லையா? சதா சர்வகாலமும் கொழுக்கட்டையே ஞாபகம் என தாத்தாவைப் பார்த்து கத்துகிறாரே, அவர்தான் என் அப்பா. ஆனால், அம்மா அவரை “துர்வாசர்”  (முன் கோபத்துக்கு பெயர் போன முனிவர்)  என்று தான் பக்கத்து வீட்டில் சொல்லுவாள்.

எனது அக்காவுக்கு இது தலை தீபாவளி. அத்திம்பேரையும், அக்கா வையும் அழைத்துவர ‘கெங்கவல்லிக்கு கிளம்பிக் கொண்டிருக் கிறார் அப்பா. கெங்கவல்லி என்பது இந்த கிராமத்திலிருந்து ஒரு மைல்.

கிளம்பிப் போனவர் உடனடியாகத் திரும்பி வந்துவிட்டார்.  ‘அலமு... கொஞ்சம் தண்ணி கொண்டுவா... வெளியில் போகும்போது சகுனம் சரியில்லை..  சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்தார்.  எதிர்த்தாற்போல எவரோ வந்து விட்டாற் போலிருக்கிறது.

“கைவேலையாய் இருக்கேன்.. எழுந்து வர முடியாது.. நீங்களே வந்து குடித்துக் கொள்ளுங்கள் என அம்மா குரல் பதிலாக வந்தது. பிற நாளாக இருந்தால், இந்த பதிலுக்கு உடணே சண்டை வந்திருக்கும்.

“டேய்..பாலு.. உள்ளே போய் ஒரு தம்ளர் தண்ணி கொண்டுவாடா.. அது என்ன, டிராயரில் எண்ணைக் கறை?

“ஒன்னுமில்லியேப்பா.. “

தண்ணீர் குடித்துவிட்டு, அம்மா இருக்கும் திக்கு நோக்கி ... ‘ஏய்... அலமு இந்த பயலுக்கு, சதா தின்னக் கொடுக்காதே.. நாளும் கிழமையும் அதுவுமா வயித்தைக் கெடுத்துப்பான்என்றார்.  உடன டியாக பையில் இருக்கும் பட்சணத்தை காலி பண்ண ‘ஸ்வேதநதி க்கு எடுத்தேன் ஓட்டம்.

ஆத்தங்கரை, ஆல மரத்தில் சாக்கட்டி கோடு போட்டு, ‘கிரிக்கெட் விளையாடும் பசங்களுக்கு, பந்து பொறுக்கிப் போட்டுவிட்டு (ஒரு போதும் எனக்கு பேட்டிங் தர மாட்டார்கள்), வீடு திரும்பியபோது, கூடம் நிரம்பி இருந்தது. அக்கா, அத்திம்பேர், சித்தப்பா, சித்தி, அவர்கள் குழந்தைகள் என வீடே.. ஜே..ஜே...

தாத்தா, மாப்பிள்ளையைத் தவிர, மற்றேல்லாரையும் பார்த்து, கண்களை இடுக்கிக் கொண்டு, ‘மாப்பிள்ளை.. சௌக்கியமா.? எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

எனக்கு பட்சணம் தரமறுத்து, “கரண்டிக் காம்பால் அடிப்பதாகச் சொன்ன அம்மா, மாப்பிள்ளைக்கு மட்டும் தட்டு நிறைய பட்சங் களை கொண்டு வந்து வைத்தாள். அக்கா கூட, நிமிஷத்துக்கு ஒரு தடவை, ‘அத்திம்பேரை பார்த்து ஈஷிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் “என்ன வேணும், .என்ன வேணும்“ என உபசாரம் செய்து கொண்டிருந்தாள்.  எல்லாமே "அத்திம்பேருக்குத்தான்" என்பது, அநியாயமாய் பட்டது. சிடுமூஞ்சி அப்பா கூட அவரிடம் சிரித்து-சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது என்ன ஓரவஞ்சனை? அடுத்த ஜன்மாவில் ‘அத்திம்பேராக பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.

‘வாடா... பாலு.. நீ இப்ப பத்தாவது தானே படிக்கிறே என்றார், அக்கா புருஷன்.

“அவனுக்கென்ன.. படிப்பில் மகா சூட்டிகை....கிளாஸில் அவன் தான் எப்போதும் ஃப்ர்ஸ்ட். பிரைஸ் எல்லாம் வாங்கியிருக்கான் தெரி யுமோ" என்றாள் அம்மா.   புளுகு.  அரையாண்டில் ‘எலக்டிவ் மேத்தமடிக்சில் ஃபெயில்’. 

அப்படியா?  நல்லா படிக்கணும்.. தெரியுமா?  எங்கே ‘பித்தாகொரஸ் தேற்றம் சொல்லு பாக்கலாம்?

“கூப்பிட்டியா  பாட்டி... ?  சமையலறைப் பக்கம் பார்த்தேன்.

“இங்கே வாடா.. நீ தேற்றம் எல்லாம் சொல்ல வேண்டாம். உனக்கு தீபாவளிக்கு என்ன வேணும்?

இது நல்ல ஏற்பாடாகத் தெரிந்தது!

“செட்டியார் கடையில் ஓலைப் பட்டாசு விக்கிறாங்க.. பாக்கட் மூணு ரூபா.  நூறு வெடி இருக்கும்.

“மூணு ரூபா தானே?  வாங்கிட்டாப் போச்சு.. “

காசு எடுக்க, பாக்கெட்டில் கைவிடுகிறாரா எனப் பார்த்தேன்.. ம்ஹூம்..  அப்பாவிடமும், அக்காவிடமும் பேசுகிறாரே தவிர, காசு கொடுப்பதாய்த் தெரியவில்லை. நானும் வேண்டுமென்றே அத்திம்பேர் முன்னால் குறுக்கும் நெடுக்குமாய், அவ்வப்போது நடந்து பார்த்தேன்.  மனுஷன் கண்டு கொள்ளவே இல்லை.

‘அத்திம்பேர்.  ராத்திரி பத்து மணி வரைக்கும் தான் செட்டியார் கடை திறந்திருக்கும்.

“அதுக்கென்ன இப்போ..?

“ஓலைப் பட்டாசு வாங்கித் தர்ரதா சொன்னீங்களே.?

“நாளைக்கு கூட வாங்கிக்கலாம்டா..

எரிச்சலாக வந்தது.  “நாளைக்கு தீந்து போயிடும் அத்திம்பேர்..

“அப்படியெல்லாம் தீந்து போகாது.  நிறைய ஸ்டாக் வைத்திருப்பான்

‘என்ன சொல்றான் ..பாலு....பித்தாகொரஸ் தியரியெல்லாம் சரியா சொன்னானா?”  என்று வந்தார் அப்பா!

“நான் வாசலுக்குப் போறேம்ப்பா...

அப்பா வேலை மெனக்கெட்டு சீனுவெடிக்கட்டை (இப்போது சர வெடி என்கிறோமே.. அந்த சீன வெடிதான்), தனித் தனித்தனியாகப் பிரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் அப்பா. அப்போதுதான் தலைக்கு பத்து வெடி வரும். ஒரு சரவெடியினை மட்டும், முழுசாக, மாப்பிள்ளைக்கு என்று எடுத்து வைத்துவிட்டார். அக்கிரமம். அத்திம்பேர் மீது பொல்லாத கோபம் வந்தது.

காலை மூன்று மணிக்கெல்லாம் எழுப்பி விட்டாள் அம்மா.  ராத்திரி முழுக்க தூங்கியிருக்க மாட்டாளோ?

வீட்டில் பத்து பேருக்கும் மேல் விருந்தினர். . எல்லோருக்கும் எண்ணெய் எடுத்துக் கொடுத்து, குளிக்க வென்னீர் போட்டு, எல்லோரையும் பாத் ரூமிற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். அப்பா முன்னமேயே எழுந்து குளித்து விட்டாற் போலிருந்த்து. சாமி படத்தின் முன்னால், புது டிரஸ், பட்சணம், வெடிகளை, படைப்ப தற்காக  அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

நானும், மற்றவர்களும் குளித்து முடித்து, அப்பாவிடம் நமஸ்காரம் செய்து புது டிரஸ் வாங்கிக் கொண்டிருந்தோம்.
‘அப்பா.. பட்டாசு....
“இரு பறக்காதே... உன் அத்திம்பேரும் வரட்டும்..
‘அதுக்குள்ள வெளிச்சமாயிடும். மத்தாப்பு எரியரதெல்லாம் நல்லா தெரியாது
“நாளும் கிழமையுமா, நீ எங்கிட்ட, திட்டு வாங்காம இருக்க மாட்டேல்ல....
ஒரு வழியாய் அத்திம்பேர் என்கிற வில்லனும் வந்து சேர.. பட்டாசுக் கட்டை எடுத்துக் கொண்டு வெளியே போணோம். என் பங்கிற்கு, நாலு கம்பி மத்தாப்பு பெட்டி, இரண்டு சாதா மத்தாப்பு பெட்டி, கொஞ்சம் ‘விஷ்ணு சக்கரம், தரைச் சக்கரம், இருபது உதிரி வெடி கிடைத்தது. “கலசம் எல்லாம் அத்திம்பேருக்காம்!

தெருவே வாசலில் கூடி, மத்தாப்பும் வெடியுமாய் குதூகலித்துக் கொண்டிருந்தது.  அந்த ஒரு மணி நேர சந்தோஷம் முடிந்தது. நான் உதிரி வெடிகளை வெடிக்காமல் “ஜேபியில்போட்டு வைத்துக் கொண்டேன். ஆற்று ஆலமரத்தடியில் வெடிப்பதற்கு.  பொழுது நன்றாக விடிந்ததும், தெருவின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை நடந்தேன்.  யார் வீட்டில் அதிகமாக ‘வெடிக் காகிதங்கள்  கிடக்கின்றன என ஆராய்வதற்கு!  என் வீட்டைவிட குறைவாக இருந்தால் சந்தோஷமும், அதிகமாக இருந்தால் துக்கமும் வரும்.
உலா முடிந்து வீட்டிற்குள் வந்தால், தாத்தா அப்போது தான், குளிக்க புறப் பட்டுக் கொண்டிருந்தார்.
‘பாலு.. தாத்தாவை கையைப் பிடித்து அழைத்துப் போய் பாத்ரூமில் விட்டுவா. என்றார் அப்பா. இது ஒரு நச்சு வேலை!  பாத் ரூமிற்கு ஒரு அடி முண்ணாலேயே, தாத்தாவை, விட்டு விட்டு வந்துவிட்டேன்.  
“ஹையா.. அப்பா சொன்ன பேச்சை முழுசா கேக்கலை.. ஒரு திருப்தி.

அம்மா,  “தீபாவளி லேகியம் என்று ஒன்று கொடுத்தாள்.  அந்த வயதில், தீபாவளி தினங்களில், எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு விஷயம், இந்த லேகிய சமாச்சாரம். "திபாவளி லேகியம் ஒடம்புக்கு நல்லதுதா, சாப்ப்பிடு! நாட்டு மருந்தெல்லாம் போட்டு, வெல்லம்-நெய் கலந்து, குழைவாக இருக்கும்டா. கொஞ்சம் காரமாக-இனிப்பாக இருக்கும் . அஜிரணத்திற்கு நல்லது, நன்றாக பசியெடுக்கும்" என்றாள் 


கையில் வாங்கி, அம்மா பார்க்காத போது, தாத்தாவுடைய பழைய வேட்டியின் உள்ளே போட்டுவிட்டேன்.

தாத்தா குளித்து முடித்துவிட்டு வெளியே குச்சியை ஊன்றிக் கொண்டு வந்தார்.  அவ்வளவு தான், அவரைப் பார்த்ததும், அனைவரும் இடியாய் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.  அத்திம்பேர் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, கீழே விழுந்து, சிரித்தார்.  விஷயம் இது தான். தாத்தா, ‘சீயக்காய்ப் பொடி' என்று நினைத்து பாத்ருமில் வைத்தி ருக்கும் மஞ்சள் பொடி யினை தலை முழுசும் அப்பிக் கொண்டு, குளித்துவிட்டு வந்திருக்கிறார்.

அக்கா, ‘மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட.. தாத்தா.. தாத்தா... என பாட ஆரம்பித்து விட்டாள். (மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட. ராமா.  ராமா என்று ஒரு பிரபலமான சினிமா பாட்டு ஒன்று இருந்தது).

"தான்" தான், அத்துனை பேரின் சிரிப்புக்கும் காரணம் என்பதை உணராத தாத்தா, “இப்பவெல்லாம் சீயக்காய்ப்பொடி என்ணையே போறதில்லை என்று சொல்லிக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தார். அன்று முழுவதும் அந்த தெருவிற்கே அவர்தான் “ஹாஸ்ய“  நாயகன்.

அத்திம்பேரும், அக்காவும் அன்று மாலையே ஊருக்கு புறப்பட்டார்கள்.

“அத்திம்பேர்.. ஓலைப்பட்டாசு  வாங்கித்தருவதாக சொன்னீர்களே..

“கார்த்திகைக்கு வாங்கித் தர்ரேண்டா..
-0-

நிகழ் காலத்திற்கு வருவோம்.  அத்திம்பேர் என அழைக்கப் பட்ட அந்த வில்லன், தற்போது கிழவனாகி விட்டார்.

இப்போது கூட அவரைப் பார்க்கும் போது, “கடைசி வரை எனக்கு ஓலைப் பட்டாசு வாங்கித்தராமல் ஏமாற்றி விட்டீர்கள் அல்லவா? என கேட்கத் தோன்றும்.

"வேண்டாம். வாங்கித்தராமலேயே இருந்ததால்" தான், நாற்பது தீபாவளிக்குப் பின்னும்,  இவ்வளவு தீர்க்கமாக, அந்த தீபாவளியினை நினைவில் வைத்திருக்க முடிகிறது.

“இந்த தீபாவளிக்கு என்ன பட்சணம் செய்யலாம் என்றார் என் மனைவி.  “ஒன்றும் வேண்டாம் போ.. ஏதாவது, டையார் ஆனந்த பவனில் வாங்கிக் கொள்ளலாம். வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுக்க அது போதாதா? நமக்கு என்ன வேண்டிக்கிடக்கிறது? என்கிறேன்.

தீபாவளி உற்சாகமெல்லாம் வடிந்தபின்னும் கூட, வருடா வருடம் அந்த தினத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது அந்த வருடத்திய தீபாவளியை கொண்டாட அல்லா.. சிறு வயது தீபாவளி நினைவுகளை அசை போட...

திபாவளி வாழ்த்து!



நண்பர்கள் அனைவருக்கும் எனது திபாவளி வாழ்த்துக்களும் / வணக்கங்களும்

Saturday, October 22, 2011

பதினொரு நிமிடங்கள்

சிலரை “வசிய எழுத்தாளர்கள் என்று சொல்லுவார்கள். எக்கு தப்பாகவோ அல்லது வம்படியாகவோ கூட எழுதுவார்கள்; ஆனாலும் அவர்களது எழுத் தாற்றல், சொற்களின் தேர்வு, வாக்கிய அமைப்பு, வாதத் திறன், நடையின் நவீனம்,  நம்மைக் கட்டிப் போட்டுவிடும்.  நம்மையறியாமல் நாம் அவர்களது ‘பக்தர்களாகிவிட்டிருப்போம்.  இம்மாதிரியான எழுத்தாளர்கள் எப்போதாவதுதான் தென்படுவார்கள். “கான்ஷியஸாக படிக்க வில்லை என்றால், நம்மை அவர்களோடு இழுத்துச் சென்றுவிடுவார்கள் –  நமது “சோமாதிரி.  

இம்மாதிரியான எழுத்தாளர்களில் ஒருவர் Paulo Coelho. இவர் எழுதிய  “The Alchemist”   நாவலை வாசித்த சுகானுபவம், இவரது மற்றறொரு  நாவல் Eleven Minutes-ஐ படிக்கத் தூண்டியது.  கதை நேர்மையாகத் தான் இருக்கிறது! ஜாலங்கள் செய்ய வில்லை.


கதையின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது: “ஒரு காலத்தில் மரியா என்று ஒரு விலை மாது இருந்தாள்..... “.   புத்தகத்தை மூடும் வரை இந்த டெம்போவைக் குலைக்காமல், உற்சாகத்துடன் கதை சொல்லிச் செல்கிறார் Paulo Coelhoஇவரது சிறந்த புத்தகங்களில் ஒன்றான The Alchemist –ஐ படித்துவிட்டு இதனைப் படித்ததால், இரண்டிற்கும் உள்ள வித்தி யாசம், நம்மை திடுக்கிட வைக்கிறது.

கதை, பிரேசில் நாட்டில் பிறந்த சிறுமி ‘மரியா’,  விடலைப்பருவ காதலில் அகப்பட்டுக் கொள்வதில் ஆரம்பிக்கிறது. பின் "ஜெனீவாவில்" எப்படி தடுமாறுகிறாள் என விவரிக்கிறது. "காதலையும், காமத்தையும்" மையமாகக் கொண்டு சொல்லப்படும்  இந்த ‘கத்தி மேல் நடக்கும் கதையினை, மிக சாமர்த்தியமாக சொல்லிச் செல்கிறார்.

இப்புத்தகம் வாசிக்க, ஒரு திறந்த மன நிலை (Open Minded State) தேவைப் படுகிறது.  இல்லையெனில் இந்த நாவல் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் பல வர்ணனைகளும், சம்பவங்களும்  Soft Porn வகையைச் சார்ந்ததாக இருக்கிறது. கதையின் முக்கிய கேரக்டர் ‘மரியா வின் பணியினையும், அவரது மன நிலையினையும் சேர்த்துப் பார்த்தால், இந்த வர்ணனைகள் தவிர்க்க இயலாதவை,  கதைக்கு தேவைப் படுபவை எனத் தெரியும்.

நாவலின் நடுவே வரும் ‘மரியாவின் டைரி கதைக்கு பளு சேர்க்கிறது, 
கதையை மேலே நகர்த்திச் செல்கிறது.  டைரியின் வரிகள் யாவும் புத்திசாலித்தனமாக, “பெண்களின் மொழியில் Convincing ஆக 
 சொல்லப் பட்டிருக்கிறது. லைப்ரரியனொடும், ஆர்ட்டிஸ்ட்டோடும் மரியா நிகழ்த்தும் உரையாடல்கள் மிக சுவாரஸ்ய மானவை. 

படித்துப் பாருங்கள். 

Monday, October 17, 2011

பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலைக்கும் காங்கிரஸ் அரசாங்கம்.

பிரிட்டிஷார், 400 ஆண்டு காலம், இந்தியாவைக் கொள்ளையடித்து, வெறும் சந்தைக் களமாக மாற்றி, உள் நாட்டு தொழில்கள் அனைத்தயும் நாசம் செய்துவிட்டு, வெறும் சக்கையாக்கிவிட்டு சென்றனர்.

நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்தியாவில் கனரக தொழிற்சாலைகளை நிறுவ, தொழில் நுட்பத்திற்கும், மூலதனத்திற்கும் மேலைய நாடுகளிடம் கையேந் தினார்.

இந்தியாவில் பாம்பாட்டிகளும், பராரிகளும்தான் இருக்கின்றனர் என மேலை  நாடுகள் கைவிரித்த நிலையில், நமக்கு கை கொடுத்தது, அப்போதைய ‘சோவியத் யூனியன்’. நமது “நெய்வேலி” உட்பட ஏராளமான கனரகத்  தொழிற் சாலைகளுக்கு மூலதனமும், உபகரணங்களும், தொழில்  நுட்பமும் கொடுத்து உதவினர்.

மாபெரும் உருக்காலைகளும், அணல் மின் நிலையங்களும், அணைகளூம் உருவாயின.  இந்த பொதுத் துறை நிறுவனகளை நவீன இந்தியாவின் ‘கோயில்கள்’ என வர்ணித்தார் ஜவஹர்லால்.  பின்னர் வந்த இந்திரா காந்தியும் ஒரளவிற்கு தந்தை வழியே சென்றார். தனியார் வங்கிகள் ‘சண்டித்தனம்’ செய்தபோதும், தனியார் எண்ணை நிறுவனங்கள் முரண்டு பிடித்தபோதும் தயக்கமின்றி அந்த நிறுவனங்களை “தேசிய மயமாக்கி”  நாட்டினை உறுதியாக்கிக் காட்டினார் இந்திரா.

நமது பொதுத் துறை நிறுவனங்கள் இல்லையெனில், இந்தியா மற்றுமொரு ஏழை ஆப்பரிக்க நாடாகத்தான் இருந்திருக்கும். இவ்வாறு, ஜவஹர்லால் நேருவும், பின்னர் இந்திரா காந்தியும் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் யாவும், தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் திட்டமிட்டு சீர்குலைக்கப் படுகின்றன. சப்தமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் குரல்வளை நெரிக்கப் படுகிறது.

மீடியாக்கள் பொதுத்துறைக்கு எதிரான மலிவான பிரசாரத்தினை நெடுங்காலமாக நடத்தி வருகின்றன. இவர்களது வாதம் எப்போதும்  ஒன்றுதான். பொதுத் துறை நிறுவனகள், ‘லஞ்சம் மிகுந்தவை’, “சோம்பலானவை”, திறன் குறைந்தவை’. இக் குற்றச்சாட்டுகள் உண்மையே இல்லை என சொல்லவில்லை! இவை யாவும் சரி செய்யக் கூடியது தான். தேவை  ஒரு “பொலிடிகல் வில்” அவ்வளவுதான்.

ஆணால்,    BSNL  வருவதற்கு முன்னால் டாட்டாவும், அம்பானியும் செல்ஃபோன் கால்களுக்கு நிமிடத்திற்கு 11 ரூபாய் வசூலித்துக் கொண்டிருந்ததை, மீடியாக்கள், சௌகரியமாக மறந்து விடுவார்கள். இன்றும் கூட கிராமப் புரங்களுக்கு செல்ல மறுத்து, நகரங்களிலேயே ‘காசு’ பார்க்கும் வித்தையை காண மறுப்பார்கள்.


உண்மை என்ன?

பல்வேறு வெளி நாட்டு நிறுவனங்கள் நமது அணல் மின் நிலையங் களுக்கு ‘மிக அதிக விலையில்’ பாய்லர்களை அனுப்பிக் கொண்டி ருந்தபோது, BHEL  நமக்கு திறன் மிகு பாய்லர்களை, உள் நாட்டு தயாரிப்பாக, குறைந்த விலையில் தரவில்லை?

பழுப்பு நிலக்கரி அடுப்பெரிக்கக் கூட பயன்படாது என்று வெளி நாட்டு நிறுவனங்கள் சொன்னபோது, இதே, லிக்னைட்டைக் கொண்டு 2000 மெகா வாட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்யது காட்ட வில்லை நமது NLC   நிறுவனம்?

சாமானியர்களுக்கு தனியார் வங்கிச் சேவைகள் இல்லை என்றபோது, நமது பொதுத் துறை வங்கிகள் கிராமங்களுக்குக் கூட தனது சேவையை விஸ்த்தரிக்கவில்லை?

இது போல பல நூறு உதாரணங்களைச் சொல்லலாம்!  ஒவ்வொறு பொதுத் துறைக்கும் பின்னால், தேச நலன் மண்டிக் கிடக்கிறது.

LPG என்று சொல்லப்படும், தாராளமயம், தனியார்மயம், உலக மயம் என்ற “புதிய பொருளாதார கொள்கைகள்” வந்த பின்னால், அனைத்து பொது துறை நிறுவனகளும் நமது அரசாங்கத்தால் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன. அமெரிக்கர்களின் கால்களை கழுவிக் குடிக்கும் நமது பல மீடியாக்கள், இந்த நாசகார, தற்கொலைப் பாதைக்கு “ஆமாம் சாமி” போடுகின்றன.

இந்த வரிசையில் புதிதாக ஒன்றை கிளப்பி விட்டுள்ளது நமது ‘பிளானிங் கமிஷன்’.  நமது BHEL பற்றி ஒரு அறிக்கை தயார் செய்துள்ளது இந்த கமிஷன். BHEL தயார் செய்யும் கொதிகலன்கள் ‘சீன தயாரிப்பு களைவிட’ மட்டமானவையாம். திறன் குறைந்த வையாம். திட்டங்களை காலத்தே நிறைவேற்ற மாட்டார் களாம்.

இத்தகைய குற்றச்சாட்டுகளை, பல்வேறு வடிவங்களில், நமது மீடியாக்களும், வேடம் அனிந்த “அறிவு ஜீவிக்களும்” காலம் காலமாக, பொதுத் துறைக்கு எதிராக, மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. தற்போது இந்த லிஸ்ட்டில் ‘பிளானிங் கமிஷன்’. சேர்ந்து கொண்டுள்ளது.

இது குறித்து மார்க்ஸிட் எம்.பி திரு. தபான் சென் திரு. மன்மோகன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திட்டக் கமிஷன் BHEL  மீது சுமத்தியுள்ள குற்றச் சாட்டுக்கள்:

1.       BHEL – ன் மிகுமின் கொதிகலன்கள் திறன் குறைந்தவை.
2.       குறித்த நேரத்தில் ‘டெலிவரி’ செய்யப்படவில்லை.
3.       இதனைக் காட்டிலும் சீன தயாரிப்புகள் மேலானவை.

இந்த குற்றச் சாட்டுக்கள் குறித்து வியப்பு தெரிவித்த திரு. தபான் எம்.பி அவர்கள், இந்த குற்றச் சாட்டுக்கள் யாவும் தீய நோக்கம் உடையவை! BHEL –ன் இமஜை சீர்குலைக்கும் நடவடிக்கை! உண்மைக்கு மாறானது என்கிறார்.

இந்தியாவில், கடந்த இரு வருடங்களில் நிறுவப்பட்ட 40 மின் நிலையங்களில் மேற்கொள்ளப் பட்ட,  ஒரு ஆய்வு, BHEL  நிறுவனத்தால் நிறுவப்பட்ட கொதிகலன்கள் யாவும், எந்த ஒரு சர்வ தேச கொதிகலன்களுக்கும் சளைத்தது இல்லை என சான்றுரைத் துள்ளது. அது மாத்திரமில்லை BHEL வழங்கிய கொதிகலன்களில், உபயோகப் படுத்தப்படும் Secondary Fuel Oil (SFO) , சீன தயாரிப்புகளை விட 12 மடங்கு குறைவாக செலவாகிறது  எனவும் கூறியுள்ளது!

எந்த சர்வதேச அமைப்பும், உலக ரீதியில் டெண்டர்களை வெல்லும், நமது BHELL  நிறுவனத்தின் மீது எந்த வொரு குற்றச்சாட்டுக் கூறாத நிலையில், நமது பிளானிங் கமிஷன் மட்டும் இவ்வாறு ஒரு அறிக்கையினை தாயார் செய்ய வேண்டிய நிர்பந்தம் என வினவு கிறார் திரு. தபான் சென்.

உலகின் எந்த ஒரு  நிறுவனத்தின் (கொதிகலன்கள்) திறனோடு BHEL தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என சவால் விடுகிறார் இவர்.

எனவே பிரதமர் உடனடியாக தலையிட்டு, பிளானிங் கமிஷனின் இந்த அறிக்கையை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார், திரு. தபான் சென். இல்லையினில் உலக மார்க்கெட்டில் BHEL இமேஜ் பாதிக்கப்படும். 

பிளானிங் கமிஷனின் அறிக்கை தற்செயலானது என  நம்ப இயலவில்லை!

திரு. தபான் சென்னின் கடிதத்திற்கு பதில் சொல்லுவாரா நமது பிரதமர்?

கடந்த பத்து வருடங்களாக நமது அரசாங்கங்கள் கடை பிடித்துவரும் ‘புதிய பொருளாதார’ கொள்கைகள் நம்மை எங்கே கொண்டுபோய் விட்டுள்ளது என்பது தெரியுமா?

பணக்காரர்களுக்கும்-ஏழைகளுக்கும் உள்ள வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஏழைகள் மேலும் ஏழையாகவும் பணக் காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவும் மட்டுமே புதிய பொரு ளாதார கொள்கை உதவுகின்றது.

உலகெங்கும் தற்போது நடைபெறும் ‘வால் ஸ்ட்ரீட்டை நிரப்புவோம்’ போராட்டம் எதற்காக என்பதை மன்மோகன் உணருவார?

ஏர் இண்டியாவை ஒழித்தாயிற்று, பி.எஸ்.என்.எல்-ஐ ஒழிக்க அனைத்து திட்டங்களும் தயார். இன்னும் பல்வேறு நிறுவங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.

எல்லாவற்றையும் சீனாவிடமிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும்  வாங்கிக் கொள்ளலாம் என்றால் நமது இளைஞர்களுக்கு வேலை கொடுப்பது யார்? சீன தயாரிப்புகள் எத்தனை இந்திய கம்பெனிகளை ‘காலி’ செய்துவிட்டது என்பது, நமது ‘செயல்படும்’ பிரதமருக்கு தெரியுமா? இதன் மூலம் எத்தனை கோடி வேலைகளை இழந்து விட்டோம் என்பதாவது புரியுமா? இப்படி ஒரு அரசாங்கம்!  இப்படி ஒரு பிரதமர்!


இந்தியாவின் கனிசமான பகுதிகளில் ‘மாவோயிஸ்ட்’கள் செல்வாக்கு பெறுவதற்கு நிலவும் சமூக-பொருளாதார காரணங்கள் எவை என்பது திரு. மன்மோகனுக்கு புரியுமா?

‘வால் ஸ்ட்ரீட்’ நிரப்பும் போராட்டம் இந்தியாவிலும் பரவக்கூடும் என்பதும், ‘அன்னா ஹசாரேவுக்கு’ கிடைத்திட்ட ஆதரவு அலை என்பது, மக்கள் கோபம் என்ற ‘ஐஸ்பர்க்கின்' ஒரு 'டிப்’ தான் என்பதை காலத்தே புரிந்து கொண்டால் தேசத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும்  நல்லது.

Saturday, October 15, 2011

புரட்சி 2020 – சேதன் பகத்


மற்றும் ஒரு ஆங்கில நாவல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
இளம் இந்திய-ஆங்கில எழுத்தாளர்களில் விரும்பிப் படிக்கப்படுபவர்களில் ஒருவர் “சேதன் பகத்” இவர் தனது ஐந்தாவது நாவலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். பெயர்:  ‘ரெவொல்யூஷன் 2020’.

கதைமாந்தர்களில் முக்கியமானவர்கள் மூவர். கோபால், ராகவ் மற்றும் ஆர்த்தி.  

இவர்களில் கோபால் கேரக்டர் மூலமாகவே கதை சொல்லப்பட்டிருக் கிறது. மூவரும் பள்ளிப்பருவத்தி லிருந்தே நண்பர்கள்

இவர்களில் கோபால் கீழ்-நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர். ராகவ் உயர்- மத்தியதர வர்க்கம். ஆர்த்தி அதிகார/ அரசியல் பின்புலத்திலிருந்து.

கோபாலும், ராகவும் JEE / AIEEE தேர்வில் போட்டியிடுகின்றனர். ராகவ் தேர்ச்சிபெற கோபால் தோல்வி யடைகிறார். இவர்கள் இருவரும் ஆர்த்தியை காதலிக்கின்றனர்.

இந்த ஸ்ரீதர் காலத்திய முக்கோனக் காதல் கதையை, அரசியல் கலந்து, சூடான ‘மசால் வடையாகத்’ தருகிறார் சேதன் பகத்.  கோபால் பணம் சம்பாதிப்பதை குறியாகக் கொள்ள, ராகவ் சினிமா கதாநாயகன் போல உலகைத் திருத்த உத்தேசிக்கிறார்.

“சேதன் பகத்” என்ன சொல்ல வருகிறார் என்பது குழப்பம் தான். வாழ்க்கையில் வெற்றிபெற ஊழலைத் துணையாகக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார், கோபால் மூலம்.

இந்திய மத்திதர வர்க்கம், அன்னா ஹசாரே பின்னால் நிற்பது போல, ராகவ் ஊழலை எதிர்க்கிறார். அதே மேலெழுந்த வாரியான பார்வை. ஊழலின் அஸ்த்திவாரம் எது, ஆதாரம் எது என்பதை கோடிகூட காண்பிக்க வில்லை. கேரக்டரிலும் ஆழம் இல்லை.

வெற்றிபெறும் மனிதருக்குப் பின்னால் போகும் பெண்ணாக ஆர்த்தி’. 

கதையில் சினிமாத்தனம் தூக்கலாக இருக்கிறது.  கடைசி அத்தியாயங்கள் அவசர அவசரமாக முடித்தாற் போல உள்ளது.  இவருடைய புத்தகங்களில் வரும் புத்திசாலித்தனமான வாதங்களோ, யதார்த்தமான நகர-உயர் மத்தியதர சூழ்நிலை வர்ணணைகளும் மிஸ்ஸிங். 

பெரும்பகுதியான இடங்களில் அடுத்த என்ன வரப் போகிறது என்பது யூகிக்கும்படியாகவே உள்ளது. இந்த முக்கோணக் காதலில், யார் சரி-யார் தவறு என்பதில் ஆசிரியருகே குழப்பமா அல்லது நீங்களே தீர்மாணித்துக் கொள்ளுங்கள் என விட்டுவிடுகிறாரா தெரியவில்லை!  கதையில் கேரக்டர்களை டெவலப் செய்வதில், இன்னும்  கொஞ்சம் கவணம் கொண்டிருக்கலாம்.

மும்பை சினிமாவை மனதிற்கொண்டு எழுதப் பட்டாற்போல இருக்கிறது.
நீங்கள் சேதனின் விசிறியாக இருந்தால், இதற்கு முன்னால் வெளியான நாவல்களை மனதிற்கொண்டு படிக்காதீர்கள். ஏமாற்றமடைவீர்கள்.
மற்றவர்களுக்கு, ஒரு நல்ல டைம் பாஸ் நாவல். படிக்கலாம்