Saturday, May 16, 2026

தமிழ் இனி மெல்ல வளரட்டும்.

நன்பர் ஒருவரை, என்ன செய்கிறீர்கள் என வினவ, ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, "மூசிக் செம்மையாக அடிச்சிருக்கான்.. கேட்குக்கிணே, இட்லி சுட்டு தின்னேன்" என்றார்.

இசையை அடிப்பதும் , இட்லியை சுடுவதும் எங்கனம் என வினவ நினைத்தாலும், கேட்க அஞ்சி வாளவிருந்தேன்.

தமிழில் பிரத்தியேகமான வார்த்தைகள் இருக்கின்றன.

தமிழில் சமையல் செய்முறைகளுக்கே தனித்தனி வினைச்சொற்கள் இருந்தன. அவை வெறும் “cook” என்ற பொதுவார்த்தை அல்ல; உணவின் தன்மை, சூடு கொடுக்கும் முறை, நீர்/எண்ணெய் பயன்பாடு, பதம் ஆகியவற்றைக் கொண்டு வினைகள் மாறும்.

இட்லி — அவித்தல் 

தோசை — வார்த்தல்

அடை — தட்டுதல் வார்த்தல்

வடை — பொரித்தல்

அப்பளம் — சுடுதல்

காய்கள் - வதக்குதல்

சோறு வேகவைத்தல்

அல்லது சோறு வடித்தல்.

கஞ்சி — காய்ச்சுதல்

பாகு — காய்ச்சுதல் / பதப்படுத்துதல்

தாளித்தல்,

கிளறுதல் — கேசரி,உப்புமா போன்றவற்றை கிளறுதல்,

மசித்தல் — கிழங்கு போன்றவற்றை மசித்தல்

அரைத்தல்,

பிசைத்தல்,

உருட்டுதல்,  

நொதித்தல் — மாவு புளித்தல்

பொங்குதல் — பால்/சோறு பொங்குதல்

உலர்த்துதல் — வத்தல், வடகம் உலர்த்துதல்

புகையிடுதல் — சில பாரம்பரிய உணவுகளில் புகை காட்டுதல்

சுண்டுதல் — கடலை சுண்டல் செய்தல், சுண்டுமளவு கொதிக்கவிடல்,கிண்டுதல் — களி, கூழ் போன்றவற்றை தொடர்ந்து கிளறிக் கெட்டியாக்குதல்,

துழாவுதல் — சோற்றை துழாவுதல்

தமிழில் ஒரு செயலைப் பார்க்கும் பார்வை மிகத் துல்லியமாக இருக்கும்

“சுடுதல்” என்பது பொதுவாக நெருப்பு/சூடு கொடுப்பதை மட்டுமே குறிக்கும். ஆனால் இப்போது எல்லாவற்றையும் “சுட்டேன்” என்று சொல்லிவிடுவது அந்த நுணுக்கங்களை மங்கச் செய்கிறது.

சரியான சொல்லைப் பயன்படுத்தும் பொழுது, மொழியின் சுவையும் செய்முறையின் நுணுக்கமும் காக்கப்படும்.தமிழில் சமையல் மொழி என்பது ஒரு பெரிய பண்பாட்டு களஞ்சியம் தான்.. அதேபோலத்தான் இசைக்கும்.    

கலைகளுக்கும் கருவிகளுக்கும் தனித்தனி வினைச்சொற்கள் இருந்தன.  

வீணையை மீட்டல்

 யாழை இசைத்தல்

(“யாழ் மீட்டல்” என்றும் வரும்; ஆனால் “யாழ் இசைத்தல்”தமிழ் நயம் உடையத

மிருதங்கம் வாசித்தல் வழக்கில் வந்தது.

குரலால் பாடுதல்

ஒத்து ஊதுதல்

புல்லாங்குழல் ஊதுதல்

நாதஸ்வரம் வாசித்தல் / ஊதுதல்

மணி அடித்தல்

பறை அறைத்தல்

தவில் கொட்டுதல்

சங்கு ஊதுதல்

கம்பி இழுத்தல் (சில நாட்டுப்புற இசை வழக்குகள்)

சிலம்பம் சுழற்றுதல்

கரகம் ஆடுதல்

கூத்து ஆடுதல்/கட்டுதல்.

இப்போது “music play பண்ணு”, “டிரம் அடிச்சேன்”, “song போட்டேன்” போன்ற பொதுவழக்குகள் அதிகமாகிவிட்டன. அதனால் செயலின் தன்மையும், கருவியின் அடையாளமும், மொழியின் நயமும் மங்குகிறது.

தமிழின் சிறப்பு என்னவென்றால்: ஒரு செயலை மட்டும் சொல்லாது —அது எப்படி செய்யப்படுகிறது என்பதையும் சொல்லும்.

இது தமிழின் தொழிலறிவு சார்ந்த செறிவு.

விவசாயம், சமையல், இசை, கைவினை — எல்லாவற்றிலும் இப்படிப் பட்ட துல்லிய வினைச்சொற்கள் இருந்தன.

மொழி என்பது வெறும் தொடர்பு கருவி மட்டும் அல்ல;ஒரு சமூகத்தின் அனுபவ அறிவு சேமிப்பகமும் கூட.

Monday, May 11, 2026

அரசியல் பரிணாமம்!

இளமைக் காலங்களில், இடது சாரி சித்தாந்தங்களினால் ஈர்க்கப்படாதவர்கள் இருக்க முடியாது. 'இழக்க அடிமைச் சங்கலிகள், பெறுவதற்கு பொற்காலம்' என்றால் யார்தான் மயங்க மாட்டார்கள்?

மெல்ல மெல்ல, கண்ணோட்டம் மாறிப்போய் விட்டது.

கொள்கை மோதல் மறக்கடிக்கப் பட்டு, ஈர்ப்பு அரசியலுக்குள் தள்ளப் பட்டு விட்டனர்.

“எது சரி? யார் சரி?” என்ற மோதல் தேவை இல்லை! 

யார் மக்கள் மனதில் பிம்பத்தை உருவாக்க முடியும் என்றாகிவிட்டது. 

சித்தாந்த வேறுபாடு தேவையற்றது என்பது விநோதம். 

நடப்பது சூழ்நிலைக்கேற்ப நடக்கும் வணிக அரசியல்.

தலைவர்கள் பிம்பங்களே (Brands).; கட்சிகள் இயக்கங்கள் அல்ல, மற்றும் ஒரு மேடை (Platforms); 

தொண்டர்கள் உறுப்பினர்கள் அல்ல; லைக்கர்கள் (like); மக்கள், வாக்காளர்கள் அல்ல, ட்ரெண்ட் ஃபாலோயர்கள்.

அவர்களின் சிந்தனையைத் தூண்டும் அவசியமே இல்லை.

Data க்களும் AI க்களும் மக்களை, வடிவமைத்து உணர்ச்சியமாக்கு கின்றன. .

ஒரு வணிக நிறுவனம் சந்தையை கைப்பற்ற திட்டமிடுவது போல,

இன்றைய கட்சிகள் தரவு சேகரிப்பு,

 உணர்ச்சி தூண்டல், (Emotional Targeting), மனப்பிம்ப உருவாக்கம் (Perception Building), போக்கு இயக்கம் (Trend Engineering), , கேலிச்சித்திர உளவியல் (Meme Psychology), (Image Calibration செய்கின்றனர் .

யார் உண்மையை பேசுகிறார்கள் என்பது லட்சியமே அல்ல. மக்களின் மன ஓட்டத்தை கட்டுப்படுத்தினாலே போதும்.  



இவை, ஜனநாயகத்தின் புதிய வடிவமோ, பரிணாமமோ அல்ல; 

இணையக் உளவியல் ஆட்சி (Digital Era Psychological Governance) மட்டுமே!


முரண்பாடுடைை சித்தாந்திகள், சண்டையிட வேண்டாம்.

கட்டிப் புரண்டு இசைந்து போகிறார்கள். Courtesy வேறு; நீர்த்துப் போதல் வேறு.

Sunday, May 10, 2026

Mother's day

 நீரின்றியும் பெற்றோரின்றியும் உலகு அமைவதில்லை!!


அம்மாக்கள் லெக்சர்கள் கொடுப்பதில்லை;

அனுசரணையான போலி வார்த்தைகள் பேசுவதில்லை.

வாரிசுகள் பற்றி கர்வம் கொள்வதுமில்லை.


எல்லா உயர்விற்கும் காரணமாக இருப்பார்கள்;

ஆனாலும் அமைதியானவர்கள்.


கலங்கரை விளக்குகள் வழிகாட்டும்;

தனக்குத்தானே வெளிச்சம் அடித்துக் கொள்வதில்லை!


“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்”

அந்த அன்னையர்க்கு

 நல்வாழ்த்துகள்!