Showing posts with label Humour. Show all posts
Showing posts with label Humour. Show all posts

Tuesday, September 1, 2026

கடுதாசி தினம்

 செப்டம்பர் 1: ‘உலகக் கடிதங்கள் எழுதும் தினம்’ என்று கூகுள் சொன்னது.

​தபால் என்பது கூரியராகவும் பார்சலாகவும் மாறிவிட்ட இன்றைய சூழலில், "நாம் கடிதம் எழுதினோம்" என்பதே ஏதோ சங்க காலச் சிந்தனை போலாகிவிட்டது.

​அந்தக் காலத்துக் கடிதங்களுக்கு என்று ஒரு புரோட்டோகால் இருந்தது. கடிதத்தின் தலையில் பிள்ளையார் சுழி (௳) இருக்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும் அல்லது ஆசீர்வதிக்க வேண்டும். ‘நலமறிய ஆவல்’ என்று எழுத வேண்டும். எவ்வளவு கெட்ட செய்தியாக இருந்தாலும், "இங்கு அனைவரும் க்ஷேமம்" என்றுதான் தொடங்குவோம்.

​அக்காலத்தில் குடும்பங்களுக்கு இடையேயான ஒரே தொடர்பாடலே (Communication) தபால்தான்.

​தபால் கார்டுகளில் இண்டு இடுக்கு விடாமல், போஸ்ட் ஆபீஸ் சீல் அடிக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு, மீதி எல்லா இடங்களிலும் எழுதுவோம். பி.கு செருகல் தனிக்கதை.இப்போது Font size என்கிறார்களே... எங்கள் எழுத்தின் அளவிற்கு முன் அதெல்லாம் ஒன்றுமே இல்லை! கடிதம் முடிய முடிய எழுத்தின் அளவும் சுருங்கி கொண்டே வரும்.

​கடிதம் முடியும் போது "வேலும் மயிலும் துணை" என்றே முடியும். சில புரட்சியாளர்கள் "கடவுள் துணை" என்பார்கள்.

​இந்த முறை அநேகமாகக் எல்லாச் சாதாரணக் கடிதங்களிலும் பின்பற்றப்படும்.

​அன்றைக்குத் தபால்காரர் ஒரு காவல் தெய்வம் மாதிரி. தபால்காரர் அன்று ஊருக்குள் வரவில்லை என்றால், ஊரே பதற்றமாகிவிடும். ஆசிரியர்களும் தபால் நிலைய ஊழியர்களும் ஊருக்கே சொந்தக்காரர்கள் போல இருந்த காலம் அது.

​கார்டு ஒரு அணா; இன்லேண்ட் (Inland letter) 15 காசு. வசதி உள்ளவர்கள் இன்லேண்டில் எழுத, நாங்கள் கார்டு பக்கமே நிற்போம். பள்ளிக்கூட தேர்வு முடிவுகள் கூடக் கார்டில்தான் வரும். மாணவன் பாஸா, ஃபெயிலா என்பது ஊருக்கே தெரிந்துவிடும்!

​பழைய கடிதங்கள் ஒரு கம்பியில் செருகப்பட்டு, பல ஆண்டுகள் கூடத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கும். Trash என்ற பேச்சே கிடையாது.

​கண் முன்னே இந்த மாற்றம் எவ்வளவு வேகமாக நடந்துவிட்டது!

​வரலாற்றில் புகழ்பெற்ற பல கடிதங்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள், அண்ணாதுரையின் கடிதங்கள், கருணாநிதியின் கடிதங்கள், அரவிந்தரின் கடிதங்கள், கு.ப.ரா.வின் கடிதங்கள் எனப் பலவற்றை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

​நான் எழுதிய முதல் கடிதம் எதுவென்று எனக்கு நினைவில் இல்லை. "As I am suffering from fever, I request you to grant me one day leave..." என்று வகுப்பு ஆசிரியருக்கு எழுதியதுதான் மங்கலாக நினைவிருக்கிறது. அதைப் புத்தகமாக்க முடியாது.

இந்தக் காலக் கடிதம் (மெசேஜ்) ஒன்று:

"Hi da, I gt apntd in infos. 26lpa. TBH, in Tldr I dint expd dis. Les clbrte in a prty. Ayavnt tld yet 2mi gf."

என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா?"

Hi da, I got appointed in Infosys. 26 Lakhs per annum. To be honest, in TL;DR (Too Long; Didn't Read / சுருக்கமாகச் சொன்னால்), I didn't expect this. Let's celebrate in a party. I haven't told yet to my girlfriend."

தமிழில் இதன் பொருள்:

"ஹாய் டா! எனக்கு இன்ஃபோசிஸில் வேலை கிடைச்சிருச்சு ஆண்டுக்கு 26 லட்சம் சம்பளம்! உண்மையச் சொல்லணும்னா, சுருக்கமாச் சொன்னா நான் இத எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பார்ட்டி வச்சு கொண்டாடுவோம்! இதப்பத்தி நான் இன்னும் என் கேர்ள்ஃபிரண்டிட்ட (காதலியிடம்) கூடச் சொல்லல."


 

Monday, February 16, 2026

2k kids

 A year ago, a relative of mine complained that her daughter was not willing to get married and asked me to “advise” her.

Being the girl’s Thatha, I was also—very modestly—interested in finding a suitable bridegroom. After all, old habits die hard. 😄

However, I am fully aware of the 2K kids’ approach towards life and their uncompromising respect for personal choice. So I wasn’t particularly enthusiastic about talking to her.

Since I couldn’t avoid it altogether, I kept it simple. I told her that it was entirely her choice whether she wanted to tie the knot or not, and that I had no right to compel her. I only added one small thought:

“Just think about life in your 40s and 50s—when parents may no longer be around and family circles become smaller.”

As expected, she brushed me aside instantly.

“I know better than you, Thatha. Everyboy is a rogue today!”

Conversation over.

Last month, she returned—this time with a request.

She has a love boy, and now I am expected to convince her mother, who is not willing to accept the alliance.

When I gently pointed out the contradiction, I told her calmly:

“That was my opinion then, and this is my stand now.”

She had no reply.

And that made me think.

When I look at these 2K kids, I feel both fear and amazement.

Fear—because of how confidently they take life-altering decisions.

Amazement—because of how lightly they carry them.

They seem to live life with ease, without unnecessary complications.

They don’t hold on to rigid stands or permanent positions.

What they believe today is valid for today.

If tomorrow brings a new understanding, they accept it without embarrassment or regret.

They don’t wrestle with life.

They simply flow with it.

Time does change—everyone knows that.

But has it really changed this fast?

Saturday, September 6, 2025

Coffee on board

I was flying Air India Express from Varanasi to Chennai. I asked for two coffees—just two coffees, not a plot of land. The airhostess looks at me, curiously  and says, “Sir, ₹400.”


I said, “Okay… do you want it in cash, UPI, or should I mortgage my luggage?”

She comes back with the coffee, but again: “Sir, it’s ₹400.”

At this point, I started checking the cup—maybe there’s a diamond ring inside?

And then she says it the third time. So I finally asked her, “Madam, should I drink the coffee first or pay first? Because doing both together might cause turbulence.”

Even the passengers around laughed—though quietly… they didn’t want to be charged for “laughing onboard.”

Sunday, November 18, 2018

பா(வா)ல் கிண்ணம்



என்னிடம்  ‘இண்டெக்ஷன் ஸ்டவ்’ என்ற ஒரு வஸ்து இருக்கிறது. காஃபி போடுவதற்கு மட்டுமே, அதன் பயன்பாடு.

லோகத்தில் எல்லோரும் என்ன செய்வார்கள்? ‘ஆன்’ பட்டனைத் தொடுவார்கள். அடுப்பு உயிர் பெறும். அவ்வளவுதானே?  ஆனால், என்னுடையது, என்னைப் போலவே அலாதி டைப். ஆன் பட்டனைத் தவிர மற்ற பட்டன்களையெல்லாம் ஒவ்வொன்றாக அமுக்கிக் கொடுக்கணும்.  கொஞ்சம் கிட்ட போய், கொஞ்சணும். கெஞ்சணும்.  சிணுங்கிக் கொண்டு உயிர்பெற்றாலும் பெறும் அல்லது ‘தேமே’ என்று, சும்மா கிடந்தாலும் கிடக்கும். ‘கண்ணே..கலைமானே..’ பாடியபின் சிவப்புவிளக்குகள் எரியும். ‘அப்பாடா..’ என காஃபி போடும் வேலையைத் துவங்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கொஞ்சம் வயசான தம்பதியினரைப் போல சதா சண்டி பண்ணிக் கொண்டிருக்கும்.

‘ஆன்’ செய்யமட்டுமல்ல.. ஆஃப் செய்யவும் அதே போராட்டம். பால் பொங்கிக் கொண்டிருக்கும்... பயந்து, பாய்ந்து ஆஃப் பட்டணைத் தொட்டால் ஆஃப் ஆகாது. பால் யாவும் பொங்கி வழிந்து அடுப்பையும், டேபிளையும் ரணகளப் படுத்திவிட்டுத்தான் ஆஃப் ஆகும்.  அடுப்பையும், டேபிளையும் க்ளீன் செய்ய அடுத்த அரைமணி நேரம் அகும்.

இந்த இம்சைக்கு பயந்து, ‘உலகளந்தப் பெருமாள்’ போல, ஆஃப் பட்டணில் ஒரு கை.. சற்றே தள்ளியிருக்கும் மெயின் ஸ்விட்சில் ஒரு கை வைத்துக் கொண்டு, ஊர்த்துவ தாண்டவ போஸில் நின்று கொண்டு, ஆஃப் செய்யணும்.

ஒரு நாள் எரிச்சலாகிப் போய், இண்டக்ஷணை பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை என ஆவேசமுற்று, சர்வீஸ் ஸ்டேஷணுக்கு எடுத்துப் போனேன்.  அரை மணி நேர காத்திருப்பிற்குப்பின் என்முறை வர, ‘என்ன சார் பிரச்சினை...?

அடுப்பு செய்யும் அழிச்சாட்டியத்தை விலாவாரியாக எடுத்துரைக்க முயல, சட்டசபை சபா நாயகர் போல, ‘போதும்.. உட்கார்.’ என கையமர்த்தினார். மனிதர் நிறைய அனுபவப் பட்டிருப்பார் போல.

பவர் கேபிளைச் செருகி, ஆன் செய்தார். உடனே பளிச்சென உயிர் பெற்றது. திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப செய்த போதும், புதுப் பெண்போல உடனே பிரகாசமுற்றது. மெக்கானிக் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஸ்டவ்வை சுருட்டி உள்ளே வைத்து, ‘போ.. அந்தண்டை..’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

கொஞ்சம் அசிங்கமாக உணர்ந்து, ‘சே... அவசரப்பட்டு விட்டோமோ..?’ மற்ற சாக்கட்டுகளில் செருகி ட்ரை செஞ்சிருக்கலாமோ என எண்ணியபடி  வீட்டிற்குத் திரும்பினேன்.

சாயங்காலக் காபிக்கு முயலும்போது, ‘இண்டெக்ஷன்’ அதே சண்டி. ஒருகையில் ஸ்டவ்... அடுத்த கையில் பவர் கேபிள் என, ‘பவதி பிக்ஷாந்தேகி’ என்பது போல, வீட்டில் உள்ள அனைத்து சாக்கெட்டுகளிலும் முயல, ஏளனமாகப் பார்த்துக் கொண்டு ‘கம்முனு’ கிடந்தது . 

பழைய டெக்னிக்கான கொஞ்சிக் குலாவி, தட்டிக் கொடுத்தபின், ‘ம்ம்ம்... அப்படி வா வழிக்கு’ என்றபடி உயிர் பெற்றது.

ஸ்டவ்தான் அப்படி என்றால், பால் காய்ச்சவும், டிகாக்ஷனுக்கு வென்னீர் தயார் செய்யவும் வால்கிண்ணம் (அதென்ன வால்..?) என்ற ஒரு பாத்திரம் உண்டு. கையச் சுட்டுக் கொள்ளாமலிருக்க உதவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் உற்றி, ஆன் செய்தால், அந்த வால் கிண்ணம், ஏதோ ‘மாய மோகினி’ போல, ஸ்டவ் மேல் வட்டமடிக்கும். ஏதோ கொஞ்சம் ஒரு ‘பெக்’ போட்டவன் போல ஆடி நின்றுவிட்டால் பரவாயில்லை..சுற்றிச்சுற்றி வந்து மொத்த வால்கிண்ணத்தையும் கீழே தள்ளிவிட்டுவிட்டுதான், மறு வேலை பார்க்கும் என் செல்ல ஸ்டவ்.

ஒருவேளை சர்ஃபேஸ் ஈவனாக இல்லாததால் இப்படி வட்டமடிக்கிறது போலும் என நினைத்து, சுத்தியலால், வால் கிண்ணத்தின் அடிப்பாகத்தை நசுக்க முயன்று, நிலைமையை கெடுத்துக் கொண்டேன். அடுப்பின் மேல் வைத்தஉடனே, சர்ரென கீழ்  நோக்கிப் பாய்கிறது, ‘காஜா’ போல..

இந்தப் பீடை பிடித்த காஃபியை நிறுத்திவிடலாம் என்றாலும் அது சாத்தியமாகது போல...

ப்ளீஸ்.. எவராவது ஒரு கப் சூடா ஸ்ட்ராங்கா காஃபி கொடுங்களேன். ஆயாசமா இருக்கே!

Saturday, June 24, 2017

கார்டு வாங்கலையோ.. கார்டு!!

மனுஷனுக்கு எந்தெந்த விதங்களிலெல்லாம் இம்சை வந்து சேரும் என்பது யூகிக்கமுடியாத சமாச்சாரம்.  அதிமுகவிற்கு வரும் இம்சைகளைக்கூட மோடி புன்னியத்தில் சமாளித்து விடலாம். ஆனால் மோடி நமக்குக் கொடுக்கும் குடைச்சல் இருக்கே!  சரியான நமுட்டு விஷமம் புடிச்ச ஆள்.

இது நாள் வரை, நான் பசுமாடு போல, அரசாங்கம் சொல்லும் வரியைக்கட்டிவிட்டு, தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். குடைச்சல் வந்து சேர்ந்தது ‘பான் கார்டு’ மூலம்.ஆதார் கார்டுடன், பான் கார்டையும் இணை. அதுவும் ஜூன் 30க்குள்ளாக என்று ஒரு ஆணை.  

இந்த வங்கிக்காரர்கள், செக்குமாடு போல, உடணடியாக அருகில் இருக்கும் வங்கிக்கிளைக்கு வந்து, ஆதார் எண்ணை சமர்ப்பிக்குமாறு சகட்டுமேனிக்கு, நாளொன்றுக்கு பத்து எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள்.  மெஸேஜ் அனுப்பும் ப்ரோக்ராமில், ‘யாரெல்லாம் ஆதார் எண் சமர்ப்பிக்கவில்லையோ, அவர்களுக்கு மட்டும்’ என்று ஒரு கண்டிஷன் போடமாட்டார்களா?  வேகாத வெயிலில் வங்கிக்குச் சென்றால், ‘ நீங்க, முன்னாலயே ஆதாரை கொடுத்து விட்டீர்களே?’ என அழகு காண்பிப்பார்கள்.  இந்த பிடுங்கலாவது உள்ளூரோடு முடியும்.   ஆனால், ஆதார்-பான் கார்டு இணைப்பு இருக்கே, அது கங்கையையும் காவிரியையும் கூட இணைத்துவிடுவது சுலபம் என்று தோன்ற வைக்கும்.

இன்னும் என்னென்ன கார்டை, எந்தெந்த கார்டோடு இணைக்கச் சொல்லி உத்தரவு வரப்போகிறதோ என பீதியாயக் இருக்கு!  டிபார்ட்மெண்ட் ஐ.டி கார்டு,  க்ரெடிட் கார்டு, டிரைவிங்க் லைஸென்ஸ் கார்டு, மெடிகல் கார்டு, உள்ளூர் லைப்ரரிகார்டு என கைவசம் ஒரு கத்தை கார்டு வைத்திருக்கிறேன். என் வீட்டுப் பால்காரர், பேப்பர் போடுபவர் என பலரும் ஆளுக்கொரு ஒரு அட்டையை திணித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். தேவுடா....‘மன் கி பாத்’ நமக்கு இல்லையே!

ஆதார்கார்டை, பான்கார்டுடன் இணைக்க, ஒரு தளத்தின் இணைப்பை வழங்கியிருந்தார்கள். உள்ளே சென்று இணைப்பைச் சொடுக்கினால்,  பெயர் பொருத்தமில்லை என ரிஜெக்ட் ஆகியது.  இதென்ன கல்யாணப் பொருத்தமா.. அதெப்படி பொருந்தாமல் போகும் என சிண்டைப் பிய்த்துக்கொண்டு (வழுக்கை விழுந்துவிட்டாலும்) ஆராய்ந்து சொல்லச் சொன்னால்,  இரண்டு கார்டிலும் பெயர் வேறுவிதமாக இருக்கிறது  எனப் பதில் வந்தது.

தமிழ் நாட்டிற்கு, வேறு எந்த மானிலத்திற்கும் இல்லாத ஒரு இம்சை இருக்கிறது.  இங்கே பெயர் என்றால் பெயர்தான். அதற்கு சஃப்க்ஸ்-ப்ரிஃபிக்ஸ் எல்லாம் கிடையாது. பெயருடன் பெரும்பான்மையாக ஒரு இனிஷியல் இருக்கும். அது அனேகமாக அப்பா பெயர். அவ்வளவே! பலராமன் என்றால் பலராமன் தான். அட்டாச்மென்ட்கள் இல்லை. 

ஆனால் வடக்கே  கிவன் நேம், ஃபர்ஸ்ட் நேம், சர் நேம், மிடில் நேம், பெட் நேம் என பல தினுசுகள் இருக்கும் போல. இந்தப் பெயர்களுக்கு என்னதான் விளக்கம் எனத் தெரிந்துகொள்ள முப்பது வருடமாக முயன்று தோற்றுவிட்டேன். 

R. பலராமன் என்றால் என் பெயர் ராமச்சந்திரன் பலராமன். பலராமன். R  என்றால் என் பெயர் பலராமன் ராமச்சந்திரன்.

பான் கார்டு அப்ளை செய்யும் போது, ஏஜண்ட் பெயரைக் கேட்டார். சொன்னேன். அப்பா பெயர் என்னவென்றார். ‘ராமச்சந்திரன்’ என்றேன். அந்த புன்னியவான் எந்தப்பெயரை எங்கு எழுதினாரோ தெரியவில்லை. கார்டில் பலராமன் ராமச்சந்திரன் என வந்திருந்தது. அட, இது அப்பாவின் பெயர்தானே.. இருந்துட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன். இது நடந்தது 15 வருடங்கள் இருக்கும். இப்ப வந்தது வினை.

ஆதாரில் என்பெயர் பலராமன். ஆனால் பான் கார்டில் என்பெயர் பலராமன் ராமச்சந்திரன்.  எனவே இணைக்க முடியாதாம். இதென்ன இம்சை. இரண்டு கார்டிலும் அப்பா பெயர் ராமச்சந்திரன் தானே? ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்றால், முடியாது என்றது சிஸ்டம். இந்தியாவில் மனிதர்கள் கூடவே பேசுவது சாத்தியமாகத நிலையில், மிஷினுடன் என்னத்தைப் பேச?

சரியென ஆன்லைனில், பெயரை மாற்றும் ஆப்ஷனுக்குச் சென்றேன்.

அடாடா.. எப்படித்தான் மைனஸ் -12 சைஸில் எப்படித்தான்  ஃபாண்ட் வைக்கிறார்களோ? மஞ்சள் நிறக்கட்டங்களில்,  உமிக்கொசு சைசில் எழுதியிருப்பதைப் படித்தாக வேண்டும். அதைப் புரிந்து கொள்ளவேண்டும். பின் ஃபில்லப் செய்யணும். சை.. பெயரை மாற்ற காசு வேறு கேட்டார்கள். ஆன்லைனில் கட்டியாகிவிட்டது.

ஒரு வழியாக என்பெயர் பலராமன்.என் அப்பா பெயர் ராமச்சந்திரன் தான் என டைப் செய்தவுடன்,  பெயர் மாற்றம் செய்யணும் என்றால், எந்தெந்த சர்டிபிகேட் தேவை அவர்கள் சிஸ்டம் என ஒரு லிஸ்ட் படித்தது.  எல்லாம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கிற வேலை. 

நான் பலராமன் தான் என நிரூபிக்க ஆதார் கார்டு, பென்ஷன் ஆர்டர், பென்ஷன் புக், வங்கிக் கணக்கு முதல் பக்கம் எல்லாம் கொடுத்தேன்.

பதினைந்து நாள்  கழித்து மெயில் வந்தது. “பெயரை உறுதிப் படுத்த பென்ஷன் ஆர்டரோ, ஆதார் கார்டோ, வோட்டர் ஐ.டியோ ஏற்றுக் கொள்ளக் கூடிய தஸ்தாவேஜூகள் இல்லை. போய் பள்ளிக்கூட சர்டிபிகேட்டை தேடி எடுத்துவா..”

அடப்பாவிகளா.. நான் பள்ளியைமுடித்தது 1969ல். அந்த சர்டிபிகேட்டை எங்கே தேட? நான் படித்த படிப்புகளின் அடிப்படையில் தானே  வேலை கிடைத்தது? அப்பாயின்மெண்ட் ஆர்டரில் பலராமன் என்று தானே இருக்கு? நாப்பது வருடம் குப்பைகொட்டிவிட்டு ரிடயர்மெண்ட் (சூப்பரானுவேஷனில் தான்) ஆர்டரும் அதன் அடிப்படையில்தானே?   அதில் பலராமன் என்றுதானே இருக்கிறது? அதை எப்படி சான்றாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்-என வினவினால், “ஆத்தா வையும்.. சந்தைக்குப் போகனும்.. காசு கொடு...” என சொன்னதையே சொல்லும் கமல் போல, ஸ்கூல் சர்டிபிகேட் கொடு என சண்டித்தனம் செய்த்து இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்.

வீட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டாகிவிட்டது. 1971-ல் சேலம் பேலஸ் தியேட்டர் சைக்கிள் ஸ்டேண்டில் கொடுத்த ‘டோக்கன் கூட’ கிடைத்தது.. எஸ்.எஸ்.எல்.ஸி சர்டிபிகேட் காணவில்லை.

இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் என்ன பெண்டாட்டியா என்ன, கோவிச்சுக்க முடியுமா? முறையிடுவதைத் தவிர வேறு வழி?

ஐயா.. ஆதார் கார்டும், வோட்டர் ஐடியும், பென்ஷன் புக்கும் ‘பலராமன்’ என்றுதானே இருக்கு? அதன் அடிப்படையில் பான் கார்டில் பெயர் மாற்றக் கூடாதா? அரசாங்கத்தின் பெட் திட்டமான ஆதாரையே நம்ப மாட்டீர்களா என அழுது புரண்டாலும், ஸ்கூட்ல் சர்டிபிகேட்... சந்தைக்கு போகனும்னு அடம்.

வேறு வழியின்றி, பிரதம மந்திரியின் ‘குறைகேட்கும்’ அலுவலகத்திற்கு முறையீடு செய்தேன். ஐயா... சத்தியமா நான் பலராமன் தான். ஆதார், ரிடயர்மெண்ட் ஆர்டர்..இத்தியாதிகளை நம்புங்கள். இது நாள் வரை சம்பளத்தில் வருமான வரி பிடித்தமெல்லாம் ‘பலராமன்’ என்ற பெயரில் அதே பான் கார்டு எண்ணில், கட்டும்போது ஏற்றுக் கொண்ட வருமான வரித்துரை, இப்போது ஏற்றுக் கொள்ள மறுப்பது அக்கிரமம், வரிகளை ஏற்றுக்கொள்ளும்போது இது முரணாகத் தெரியவில்லையா.. எனப்  புலம்பியிருந்தேன்.

நமது அதிகார வர்க்கத்திற்கு மூளை எப்போதும் நேரே போகாது போல. “தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், தவளைக்கு காது கேட்காது.. அதனால்தான்  தாவ முடியவில்லை” என தீர்மாணிக்கும் அதிபுத்திசாலி அல்லவா?  

இந்த முறையீட்டை, அவர்கள் யாருக்கு அனுப்பியிருக்கனும்? பான் கார்டு பெயரை மாற்றும் அலுவலகத்திற்குத்தானே? அவ்வளவு எளிதாக முடிவெடுத்துவிட்டால், அதிகார வர்கத்தின் மூளை என்னவாவது? எனது புகாரினை, ஆதார் அலுவலகத்திற்கு அனுப்புவிட்டனர்.

ஐயகோ... ஆதார் அட்டையில் பழுதொன்றுமில்லை. பிரச்சினை பான் கார்டில் தான் என புலம்பினால், ‘Further comments not allowed.. some problems noticed” என பதில் வருகிறது.

படுபாவிகள்.. ஆதார் கார்டில் பெயரை மாற்றித் தொலைக்கப் போகிறார்களோ என அச்சமாக இருக்கிறது.

திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான். அதை அமுல் படுத்தும் பொழுது, மேலே இருக்கும் ஒன்றரை கிலோ சமாசாரத்தை கொஞ்சமாவது பயன்படுத்த வேண்டாம்?  செக்கு மாடுபோல அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

சிக்கலைத் தீர்க்கப் போகிறார்களா? இல்லை புதுசாக ஏதாவது சிக்கலை தோற்ற்விக்கலாமா என யோசிப்பார்களா தெரியவில்லை.


அரசாங்கத்தோடு பேசி புரியவைக்க இயலாது. என் பெயர் பலராமன் தான் என ஏற்றுக் கொண்டால், ரூ 101/- உண்டியலில் போடுவதாக வடிவழகியம்மனுக்கு வேண்டிக் கொண்டுள்ளேன். அது மட்டுமே இங்கு சாத்தியம்.

Friday, December 30, 2016

ஹெர்ணியா

சில காலம் முன்பு, இடது அடி வயிற்றின் கோடியில் ஒரு ப்ரீதி இட்லி சைசில் ஒரு வீக்கம்.  பரம சாதுவான வீக்கம்.  வலிக்காது. எழுந்து நின்றால் வரும். படுத்துக் கொண்டால் காணாமற் போய்விடும். கொஞ்ச நாளிலேயே அத்யந்த நன்பனாகி விட்டது  அவ்வீக்கம். அதனுடன் பேசலாம். எதிர்த்தெல்லாம் பேசாது. அதை செல்லமாய், மெதுவாய், லேசாக அழுத்திவிட்டால், சமர்த்தாக உள்ளே போய்விடும். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் தலைகாட்டும். சரி போ... அது பாட்டுக்கு ஓரமா இருந்துக்கட்டும். அதென்ன வாடகையா தரப்போகிறது? தொந்தரவில்லாமல் இருந்து விட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன்.

சில நாட்களில், ப்ரீதி இட்லி சைசில் இருந்த வீக்கம், கும்பகோணம் துணி இட்லி சைசுக்கு பெரிசானது. வலி இல்லாவிடினும், ‘நான் ஒருத்தன் இருக்கேன் பார்’ என நினைவுறுத்தும் படியாக அசௌகரியம்.

இரண்யனை வதம் செய்ய, நரசிம்மன் கைவிரல்களால் அவனது குடலைக் கிழித்து வெளியே போட்டானாம். எனக்கு, ஹிரண்யன் என்னும் குடல், நரசிம்மன் தயவில்லாமலேயே வெளியே வந்து கொண்டிருந்த்து.  

தன்னை பத்திரமாக மூடிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மூன்று லேயர்களில் பலவீன ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியே, சற்று காற்றாட வெளியே வந்துவிடும் எனது குடல் பகுதி.  இதனால்தான் இந்த குடலிறக்கத்திற்கு ஹிரண்யா என்று பெயர் வைத்தார்களோ என்னவோ! இப்படி தனது இருப்பிடத்தைத் விட்டு, எல்லை தாண்டிய பயங்கரவாதியாக மாறி, அவ்வப்போது வெளியே வந்து இம்சைகொடுக்க ஆரம்பித்தான் ஹிரண்ய கசிபு.

வந்து விட்டால், ஹெரண்யா தானாக குணமாகாது; சர்ஜரி ரிப்பேர் மட்டுமே சரியாக்கும் என கூகுளாண்டவர் அருள் பாலித்தாலும், எனது இஷ்ட தெய்வமான ‘யோகாவை’ வேண்டினேன்.  அவர் ஏகபாத – சர்வாங்க ஆசனங்களைப் பரிந்துரைத்தார். மோடிக்கு கருப்புப் பண முதலைகள் காட்டியது போல சற்றே ‘பாவலா’ காட்டிவிட்டு ஹிரண்யா தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை காட்டிக் கொண்டிருந்தது. எனவே இவ்விஷயத்தில் அனுபவம் பெற்ற ஒருவரைத் தொடர்புகொண்டேன்.  அவர் இடது, வலது, நடு (கட்சியெல்லாம் இல்லை – சும்மா திசைகள் தான்) என மூன்று ஹெர்ணியா அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்.  அவர் ‘ஆபரேஷனெல்லாம் செய்து கொள்ளாதே, எனக்கு நிறைய இம்சை கொடுத்துக் கொண்டிருக்கிறது; நீ இதற்காக விற்கும் ‘ஹெர்ணியா பெல்டை’ பயன்படுத்து... சரியாகிவிடும் என நல்வாக்கு சொல்ல, அமேசானுக்கு அடித்தது யோகம்.  ஒரு சுபயோக சுப தினத்தில் ஹெர்ணியா பெல்ட் வந்து சேர்ந்தது.  அந்த பெல்ட், ‘சூப்பர் மேன்’ பேண்டுக்கு மேல் போடும் ஜட்டி போல ஒருவிதமாக இருந்தது.  அதனால் என்ன? கத்தியின்றி ரத்தமின்றி ஹிரண்யனை விரட்டியடிக்கும் மந்திர பெல்ட்டை எதற்காக உதாசீனப் படுத்தனும் என மூன்று மாதம் அணிந்து திரிந்தேன்.

அப்பாவிடம் அடங்கி ஒடுங்கித் திரிந்து, அம்மாவைக் கணட்தும் அழுது ஆர்பாட்டம் செய்யும் சிறுவன் போல, பெல்ட்டை எடுத்ததும் ஹிரண்யணின் அட்டூழியம் அதிகமாகிவிடும். இந்த பெல்ட், தசைகளை பலவீனமாக்குவதையும் உணர முடிந்தது.

சரி... வேறு வழியில்லை. ‘சஸ்திர சிகிச்சையே பலனளிக்கும் போல’ எனத் தீர்மாணித்து நான் மிகவும் விரும்பும், சர்ஜன் டாக்டர் சசிதர் அவர்களை நாடினேன்.  நம்பற்கரிய நேர்மையாளர். தொழிலில் நேர்த்தி. திறமை சாலி. அவர் பார்த்த உடனேயே, ‘ இது சர்ஜரி’ தான் எனத் தீர்மாணித்து, சில பல டெஸ்ட்களைப் பரிந்துரைத்தார்.

ஆபரேஷன் செய்து கொள்வதில் பயமொன்றுமில்லை என்றாலும், தனியனாக வாழ்வதால், சமாளிக்க முடியுமா, சமையல் செய்துகொள்ள இயலுமா,  மாடியில் குடியிருப்பதால், படியேற முடியுமா, எனது அடிப்படையான தேவைகளை பிறர் உதவியின்றி செய்து கொள்ள இயலுமா, எனது நெடு நாளைய நண்பன் ‘மயக்கம்’ வந்து விட்டால் என்ன செய்வது, ஒரு வாரத்திற் காவது பிறரின் உதவி தேவைப்படுமே என்ற சந்தேகம், பயம் இருந்தது. பிறவி சங்கோஜியான எனக்கு இது பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனது ஆகட்டும். 64 வயதிலேயே இவ்வளவு தயங்கினால், இன்னும் வயதாகும் போது மேலும் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இப்போது இரத்தக் கொதிப்பு, சர்க்கரை இல்லை. இனி வரும் காலங்களில் எப்படியோ தெரியாது. எனவே துணிந்திடு மனமே என உறுதி கொண்டு, டெஸ்ட்களை எடுக்கச் சென்றேன்.

கதைகளில் ‘அஷ்ட திக்கு பாலகர்கள்’ என்று சொல்வார்கள். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு தெய்வங்கள். எனது சர்ஜன் எடுக்க்ச் சொன்ன  டெஸ்ட் லேபரட்டரிகள் யாவும், அஷ்ட திக்கு பாலகர்களுக்கு சொந்தம் போல. திசைக்கு ஒன்றாக இருந்தது. தெற்கே ஸ்கேன். வடக்கே கார்டியாலஜிஸ்ட் ஒபினியன். கிழக்கே இரத்த சோதனை. மேற்கே ஈஸிஜி.
அனைத்து டெஸ்களையும் அஸ்வமேதயாகம் போல முடித்துக் கொண்டேன். 

இந்த டெஸ்ட்களில்,  மோடி உபத்திரவம் தருவார் எனக் கருதவேயில்லை. ஒவ்வொரு டெஸ்ட்டும்     ரூ 900, ரூ 700 பிடித்தது. அவர்கள் எவரிடத்திலும் ஸ்வைபிங் மெஷின் இல்லை.  ஒவ்வொரு லேபிற்கும் அவ்வளவு நூறு ரூபாய் நோட்டுகளை எங்கிருந்து சேகரிப்பது?  நூறு ரூபாய் நோட்டிக்களைச் சேகரிப்பதற்குள் விழி பிதுங்கிற்று.  பல மருந்துக் கடைகளிலும் பி.ஓ.எஸ் இல்லை. அப்படியானால், இவர்கள் யாவரும் வியாபாரத்தை எந்தக் கணக்கிலும் காட்டுவதில்லை போலும்.

மருத்துவ செலவிற்காக சிட்டியூனியன் பேங்கில் போய், அவசரத்தை விளக்கி, எனது அக்கவுண்டிலிருந்து முப்பதாயிரம் பணம் கேட்டால் மறுத்தார்கள்.  அதிகபட்சமே 24000 தான் தரமுடியும் என்றார்கள்.  நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கம்பெளயின்ட் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு அவ்வளவுதான் அதிகாரம் என்கிறார்கள்.  காரணத்தை விளக்கியும், ஆதாரத்தைக் காண்பித்தும் பணம் கொடுக்க மறுக்கும் இந்த வங்கிக்காரர்கள் ரெட்டிகளுக்கு மாத்திரம் எப்படி கோடிக்கணக்கில் பணம் வழங்கினார்களோ தெரியவில்லை.

ஈஸிஜியில் பிரச்சினை என்றாலும் (ஆட்ரியல் ஃப்ளட்டர்) சர்ஜரி செய்ய ஒப்புதல்  வழங்கினார்கள். இந்த சடங்குகளைப் பூர்த்தி செய்வதற்குள்ளாகவே சர்ஜரி முடிந்த்து போல ஆயாசமாகிவிட்டது.

சற்றே நீண்ட தையல் போடுமளவு சர்ஜரி இருந்தது. ஒருவழியாக மூண்றாம் நாள் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டார்கள்.

எனது நண்பர்களுக்கு நான் பகிரங்கமாக நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. குறிப்பாக திருவாளர்கள் சக்திவேல், பி.டி அரசு, விஜயராகவன், செந்தில், தியாகு ஆகியோருக்கு எனது  நெஞ்சார்ந்த நன்றிகள்.

சர்ஜரிக்குப் பின் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பல. முதல் விரோதி இருமல் – தும்மல். ஒவ்வொரு தும்மலுக்கும்  பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளையோ அல்லது கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையோ எளிதாக தரிசிக்கலாம். தும்மி முடித்ததும் கண்கள் இருள.. தலை சுற்ற.. தையல் போட்ட இடத்தில் 22000 V ஷாக் அடிக்க.. என்னே இன்பம்....

மட்டையடியாக பளு தூக்காதே, ஸ்ட்ரெயின் செய்யாதே என உபதேசிப்பது வேஸ்ட்.  தனியர்களுக்கு இவையெல்லாம் செய்யாமலிருக்க இயலாது.


ஆனால், சில யுக்திகளைக் கைக் கொண்டால் சமாளிக்கலாம்.  உதாரணமாக தும்மல் வரும்போல இருந்தால், அழுத்தமாக, வலிக்கும்படி மூக்கைக் கிள்ளிக் கொள்ள வேண்டும்.  தும்மல் அடங்குகிறது. சமையலின் போது தாளிப்பதை அறவே தவிர்க்க.  படி ஏறும்போது, ஒவ்வொருபடியாக... எந்தப் பக்கம் சர்ஜரி நடக்கவில்லையோ அந்தப் பக்க காலை எடுத்து வைத்து... இப்படி பல யுக்திகளைப் பழகிக் கொண்டுள்ளேன்.

ரெகவரி பீரியடைக் கடந்துவிட முடியும் என்றே கருதுகிறேன். நன்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

Thursday, September 3, 2015

மொய்

“Things aren’t often what they appear to be at first blush. But embarrassment is.” 


மாதம் ஒரு நூறு கிராமுக்கு குறையாமல், திருமண அழைப்பிதழ் வந்து விடுகிறது. தினுசு தினுசாக பத்திரிகை டிசைன் வருவது போல, ‘பத்திரிகை வைப்பதும்’ பலவிதங்களில் ‘நவீனமாகி’ விட்டது. பத்திரிகையை ஸ்கேன் செய்து எல்லோருக்கும் மெயில் அனுப்பி, கூடவே ஃபோனில் கூப்பிட்டு சொல்வது வழக்கமாகிவிட்டது.   ‘என்னங்கானும், நீர் கல்யாணத்துக்கு வரவேயில்லை’ என்ற ராமர் அம்புக்கு, ‘அப்படியா, பத்திரிகை வரவேயில்லையே?’ என்று போஸ்டல் மேல் பழியைப் போடமுடியாது. இந்த வழக்கம் ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. பேப்பர் செலவு மீதி. மரங்கள் இல்லாவிடினும் சில கிளை களாவது தப்பும். தாமதம் இல்லை. நேரம் மிச்சம்.

சில ‘ஆபீஸர்ஸ்’ இருக்கிறார்கள். “நீங்க என் ஆபீஸுக்கு வந்து, என் மகன்/ள் கல்யாணப் பத்திரிகையை வாங்கிக் கொள்கிறீர்களா?” என்பர். அதெற்கென்ன...ஹி..ஹி வந்தே வாங்கிக்கொள்கிறேன் என வழிவோர் சிலர் இருந்தாலும், என் நண்பர் ஒருவர் சட்டென், ‘மொய்க் கவர் வீட்ல வந்து வாங்கிக்கிறீங்களா?’ எனக் கேட்டுவிட்டதாகச் சொன்னார்.  அது உண்மையோ இல்லையோ, மிகச் சரியான பதில் அதுதான்.

அலுவலகங்களில் பார்க்கலாம். சம்பந்தமில்லாத ஒருவர், ‘இன்னாருக்கு கல்யாணம்.. இந்தாங்க பத்திரிகை..’ என தகவல் சொல்லிக் கொண்டே, காலை தினசரி பேப்பர் மாதிரி போட்டுக் கொண்டே செல்வார்.

மௌனகுரு மாதிரி, வாயைத்திறக்காமல், தன் வீட்டு விழாவிற்கான பத்திரிகையை சுண்டல் மாதிரி கொடுத்துவிட்டுச் செல்வோரும் உண்டு.

“நோட்டீஸ் போர்டில்” பத்திரிகையை ஒட்டி ‘அனைவரையும்’ அழைப் போரும் உண்டு.

நமக்கு நல்ல அறிமுகமான நண்பர் வருவார். அவருடனே,  கை  நிறைய பத்திரிகையோடு இருக்கும் மற்றொருவரையும் அழைத்து வருவார். அவரை எந்த ஜென்மத்திலும் பார்த்திருக்க மாட்டோம். பார்க்கப் போகும் வாய்ப்பும் இருக்காது. ஆனால் நமது நண்பர், ‘சார்... என்னோடு ஃப்ரண்டு, அவரது வீட்டுக் கல்யாணம்.. பத்திரிகை வைக்கிறார்..’ என்பார். அந்த திடீர் நட்பும்,  நம்மிடமே, நமது பேரைக் கேட்டு அழைப்பிதழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதி பத்திரிகை நீட்டுவார்.

இதுதான் சங்கடம். இந்த திருமணத்திற்கு போவதா வேண்டாமா? ஒரிஜினல் நண்பருக்கு என்றால் அவசியம் போகணும்.. அவர் மூலம் வரும் திடீர் நட்புக்கு என்ன செய்வது?

இப்படி ஒரு கல்யாணம் நேர்ந்துவிட்டது. 

வேலைமெனக்கெட்டு, வழியில் பார்த்து அந்த கல்யாணத்திற்கு வந்துவிடனும் என்ற வேண்டுகோள் வேறே!  நாள் நெருங்கட்டும் பார்க்கலாம் என தீர்மாணிப்பதை ஒத்திவைக்கும் போது, வெளியூரிலிருக்கும் வேறு ஒரு நண்பர் கூப்பிடுகிறார்.

‘சார்... அந்த திருமணத்திற்கு போகிறீர்களா?’

‘போகக்கூடும்..ஏன்..?’

‘நான் வெளியூரில் இருப்பதால். வர இயலாது..!’

‘ஒஹோ.. உங்களுக்கு தெரிந்தவரா?’

‘இல்லை... பத்திரிகை வைத்துவிட்டார். நீங்கள் போகும் பொழுது எனக்கும் சேர்த்து மொய் வைத்துவிடுகிறீர்களா?’

‘அதுக்கென்ன வைத்துட்டா போகுது...?’

இக்கட்டான சூழல்களில் வலுவே சென்று மாட்டிக் கொள்வது எமது குல வழக்கம். சரி... போய்த்தான் வந்துவிடலாமே, என முடிவெடுத்து விட்டேன். மண்டப வாசலில் இயல்பாக கண்கள், எனது நண்பரைத் தேட.. அவர் தென்படவே இல்லை...’

மண்டபத்தில், ஏகக் கூட்டம். பெரிய கை போலிருக்கிறது. தெரிந்த முகம் யாதொன்றும் இல்லை. ஏற்கனவே சங்கோஜி…


யாரோ ஒருவர் சாப்பிட வாருங்கள் என அழைக்க, சங்கடமாக சாப்பாட்டு ஹாலில்.

அப்புறம், மொய்க்கவர் கொடுக்கணுமே?

சம்ரதாயங்கள் முடியாததால், பலரும் மொய்க் கவர்களை மணமகள் தந்தையிடத்திலோ அல்லது மணமகன் தந்தையிடத்திலோ கொடுத்துக் கொண்டிருந்தனர்.

வந்தது சந்தேகம்.  யாரிடம் கொடுப்பது? யார் பத்திரிகை வைத்தது? பையன் அப்பாவா? பெண்ணின் அப்பாவா?

மறந்துவிட்டதே...வெளியில் வைத்திருக்கும் போர்டையும் கவணிக்க வில்லையே?

பையன் பக்கம்தான் பத்திரிக்கை கொடுத்ததாக நினைவு...
அப்படி என்றால், இதில் பையனின் அப்பா யார்? பெண்ணின் அப்பா யார்?

இருவருக்கும் என்னைத் தெரியாது, என்னையும் இருவருக்கும் தெரியாது..

எனக்கு பின்னே ஒரு இருநூறு பேர், கையில் மொய்க்கவருடன் வரிசையில்..

பின்னே இருப்பவரின் காதைக் கடித்தேன். ‘இதில் பையனின் அப்பா யார்?’ அவர் விந்தையாகப் பார்த்துவிட்டு, ஒரு தம்பதியினரைக் காட்டினார். அவரிடம் கவர்களைத் திணித்துவிட்டு..

விடு ஜூட்....


Wednesday, September 17, 2014

ஸ்வாமி ஜென்னானந்தா...






இப்பொழுதெல்லாம் ‘ஜென்’ மனோநிலை பற்றி  நிறைய பேசுகிறார்கள்!

அப்படியென்றால் என்ன? 

விசாரித்ததில், அந்த நிலையை அடைவதற்கு முன்னால் சில பரீட்சைகளில் தேர்வாக வேண்டுமாம்.; இதில் தேறி விட்டோமானால், ஜென் நிலை சாத்தியமாம்!



பரீட்சை 1:

பிராட்பேண்ட் DSL  நிற்கிறதா இல்லையா என மோடத்தை உற்றுப் (அல்லது வெறித்து) பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நிற்பது போல வேகமாக ‘படக்-படக்’ என அடித்துக் கொண்டுவிட்டு, திரும்பவும் மெதுவான ‘‘படக்-படக்’ கிற்கு வந்துவிட்டாலும் உங்களது ‘லப்-டப்’ எகிறாமல் இருக்கிறதா? பதினெட்டாவது முறையாக முயற்சித்து DSL நின்றுவிடும் வரை பொறுமை காப்பீர்களா?

பரீட்சை 2:

DSL தான் நின்றுவிட்டதே என பிரசன்னவதனமாகிவிடக் கூடாது! இன்டர்னெட் பட்டன் சிவப்பிலேயே நின்று வெறுப்பேற்றும். அப்போதும் நீங்கள் கன்னத்தில் வைத்த கையை எடுக்காமல் பொறுமை காப்பீர்களா? சில சமயம் மோடம் மீண்டும் விட்ட இடத்திலிருந்து, அதாவது DSL அடித்துக் கொள்வதிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கும்! பொறுமையானந்தாவாக இருக்க பழகினால் பாஸாகலாம்.

பரீட்சை – 3:

IRCTC –ல் டிக்கட் பதிவு பண்ணும் பொழது, பேஜ்  லோடு ஆகாமல், பிரௌசர் வட்டமாக ‘வடை’ சுட்டுக்கொண்டே இருந்தாலும் உங்கள் பி.பி எகிறாமல் இருக்கிறதா? அப்படியே ஃபார்ம் பூர்த்தி செய்துவிட்டு கேட்வே மாறி உங்களது பேங்கிலிருந்து பணம டிரான்ஸ்ஃப்ர் செய்தபின்னும் டிக்கட் கிடைக்காமல் போகலாம்! ஒரு வாரத்தில் பணம் திரும்ப கிடைக்கலாம். ஆனால் மீண்டும்-மீண்டும் முயற்சி செய்ய போதுமான பேலன்ஸ், பாங்க் அக்கவுண்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான மனோநிலை உங்களிடம் இருக்கிறதா?

பரீட்சை – 4:

திருப்பதி கியூவில் மணிக்கணக்கில் நின்றுவிட்டு, கடவுள் தரிசனம் செய்யும் பொழுது- சாரி..சாரி... டாக்டரை பார்க்க டோக்கன் போட்டு மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த பின் உங்கள் முறை வரும் பொழுது, எவரேனும் ஒருவர் டாக்டருக்கு வேண்டப்பட்டவர் என்ற ஹோதாவில் குறுக்கே நுழைந்தாலோ - பாய்ந்தாலோ  ‘சம நிலை ‘ இழக்காமல் இருக்கிறீர்களா?

உள்ளே போய் கடவுளை தரிசனம் செய்யும் பொழுது, நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து எடுத்த லேபரட்டரி ரிப்போர்ட்களை, டாக்டர் ஒரே ஒரு விணாடிமட்டும், ‘என்னாத்தே கண்ணையாவின்’ படத்தைப் பார்ப்பது பார்த்துவிட்டு தூக்கிப் போட்டாலும் ‘டென்ஷனாக மாட்டீர்களே?’

பரீட்சை – 5:

கோச் நெம்பரைப் பார்க்காமல், வெறும் ‘பெர்த்’ நெம்பரை மட்டும் பார்த்துவிட்டு, உங்களது பெர்த்தில் குஷாலாக படுத்துக்கொண்டு, அவரும் ‘ஜென்’ போல தூங்கிக் கொண்டிருந்தால், அவருக்கு பொறுமையாக தெளிவுபடுத்தி அவரை அப்புறப்படுத்தும் வரை ‘கோபப்படாமல்’ இருப்பீர்களா?

பரீட்சை – 6.

விமான டிபார்சருக்கு அரை மணி இருக்கும் பொழுது, போர்டிங் கேட் ஒன்று என ஒரு டிஸ்பிளேயிலும், பதினொன்று என இன்னொரு டிஸ்பிளேயிலும் போட்டால் பதறாமல் இருப்பீர்களா? இரண்டு கேட்டிற்கும் அரை கிலோமீட்டர் தூரம் என்றாலும் கூட!

பரீட்சை – 6:

உங்களுக்குப் பின் ஆர்டர் செய்தவர்களுக்கெலாம் சர்வ் செய்யப்பட்டாலும், உங்களது ஆர்டரை எடுத்துக் கொண்ட பேரர் ‘வனவாசம்’ போய்விட்ட நிலையில், எரிச்சலுற்ற உங்களது குழந்தைகள் அடம் பிடித்தாலும் ‘ஸ்ரீதேவியாக’ இருப்பீர்களா இல்லை அவரது ‘அக்காவாக’ மாறி விடுவீர்களா?

பரீட்சை – 7:

ஏதேனும் ஒரு DTH சர்வீஸ்  அல்லது IVRS பயன்படுத்தும் வங்கிகளை, ஒரு விசாரணைக்காகவோ அல்லது புகாருக்கோ அணுகும் பொழுது, ஒன்றை அல்லது இரண்டை அல்லது மூன்றை அழுத்தி-அழுத்தி மாய்ந்து போய் இறுதியில் (டச் ஃபோனில் எப்படி அழுத்துவது?) ஒன்றும் நடவாமல் போய் டெலிஃபோனை உடைக்கலாமா என்ற அளவுக்கு பொறுமை சோதிக்கப் பட்டாலும் நிலைதவறாமல் புன்னகைக்கிறீர்களா?

பரீட்சை – 8:

வெகு முக்கியமான ஒரு பணியாய் இருக்கும் பொழுது லோம்பார்டு இன்ஸூரன்ஸ் எடுத்தால் ஒரு ஸ்பூன் ஃப்ரீ என்று அட்டூழியமாய் சதாய்த்தாலும்,  “நோ மேடம்.. ஐயாம் நாட் இன்டரஸ்ட்ட்” என சொல்ல இயலுகிறதா?

பரீட்சை – 9

அப்பாவியான நீங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்களது புது ஸ்மார்ட் ஃபோனை காண்பிக்கும் பொழுது, அக்கிரம்மாய்              மிஸ் எலிஸபெத்தோ அல்லது மிஸ் டெய்லரோ, பிறந்தாள் ட்ரஸ்ஸோடு ஃபோட்டோ அனுப்பி கான்டாக்ட் பண்ணச் சொன்னால் பதறாமல் இருக்க முடிகிறதா?

பரீட்சை – 10

கடைசி ஓவர். ஆறு ரன் எடுத்தால் எடுத்தால் வெற்றி. கைவச ஒரே விக்கட் என்ற நிலையில், டி.வி யில் மூழ்கியிருக்கும் பொழுது, “என்ன எழவு.. எப்ப பாத்தாலும் டி.வி.. வீட்டில வேலையே இல்லை? நான் மனுஷியா அல்லது மிஷினா? இங்கே உடனே வாங்க..” மனையாட்டி உத்தரவிட்டால், சிரித்துக் கொண்டே “ இதோ வந்துட்டேன் “ என தடாலடியாய் ஓட முடிகிறதா?

-         எல்லாவற்றிற்கும் உங்களது பதில் ‘ஆம்..’ என்றால் நீங்கள் ‘ஜென் நிலையை அடைய தகுதியானவர் எனப் பொருள்!!