Wednesday, September 23, 2026

அம்மா இறந்துவிட்டாள்

அம்மா இறந்துவிட்டாள்!

இனி நான் இரவுகளில் நிம்மதியாகப் பட்டினி கிடக்க முடியும்!

இனி குளித்துவிட்டுத்தலை துவட்டாமல் இருக்க முடியும்!

இனி நான் கிணற்று மதின்மேல் அமர்ந்துதூங்கிவழிந்தபடி புத்தகம் வாசிக்கலாம்!

இனி இரவில் வெளியே கிளம்பும்போதுடார்ச் எடுக்க வேண்டியதில்லை!

இன்று சமையல் சரியாக வந்ததா எனஎவரும் கேட்டுத் துளைக்கப்போவதில்லை!

இனி நான் சென்ற இடத்திலேயே தூங்கிக் கொள்ளலாம்!

என்னைக் கடிந்துகொண்டு,அழுதுகொண்டிருக்கும் ஒரு பிறவி!

உடலால் சுமந்து,பின் மனதால் ஆயுள் முழுதும் சுமந்தவள்;இனி அவளுக்கு பாரமில்லை!

எல்லா விளக்குகளும் எரியும்போதேவீடு இருள்மண்டிக் கிடக்கிறது!

ஆசுவாசம்... 

அவளுக்கா? எனக்கா?


------

-கல்பற்றா நாராயணனின் (Kalpatta Narayanan) புகழ்பெற்ற மலையாளக் கவிதையான "அம்மா மரிச்சு" (Amma Marichu) வரிகள் தழுவல்.


Sunday, September 20, 2026

தேச பக்தி ஒரு கேடயமா?

நம் நாட்டின் முன்னேற்றம்—பொருளாதார ரீதியிலோ அல்லது உலக அரசியல் செல்வாக்கிலோ—எளிதான விஷயம் அல்ல என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகிறார். சில கடுமையான அபாயங்களைச் சந்தித்தபடிதான் நாம் பயணித்தாக வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

​நாம் இப்போது குறைக்கடத்தி (Semiconductor) சிப் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால், இணையவழித் தாக்குதல்கள் (Cyber Attacks) உட்படப் பல்வேறு இடையூறுகள் தொடரும் என எச்சரிக்கிறார்.

​'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வின் போது, இந்திய மின்சார நெட்வொர்க்குகளை ஹேக் செய்து செயலிழக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.

​நமது துணை மின் நிலையங்கள் (Substations) பெரும்பாலானவை உலகின் அதிநவீன மின்னணுச் சாதனங்களால் கட்டமைக்கப்பட்டவை. அந்தச் சமயத்தில் இணையவழித் தாக்குதலிலிருந்து தப்பிக்க, அனைத்துத் துணை மின் நிலையங்களையும் இணையப் பிணைப்பிலிருந்து தனிமைப்படுத்தி, அங்குள்ள பொறியாளர்களால் மட்டுமே நேரடியாக இயக்கும் வகையில் அவசர நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறுகிறார்.

​குறிப்பாகச் செமி கண்டக்டர் துறையில் நாம் ஆதிக்கம் செலுத்த முயலும்போது, அதைச் சீர்குலைக்க நிச்சயம் முயற்சிகள் நடக்கும். அதையெல்லாம் கடந்துதான் நாம் வெற்றிநடை போட வேண்டும்.

​இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எல்லா நாடுகளுக்குமே பொதுவானவை. சமீபத்தில்கூட ChatGPT, தானாகவே வேறொரு தளத்தை ஹேக் செய்யும் அளவுக்குப் நிலைமை சென்றுள்ளது.

​ஆனால், இந்தியாவில் ஒரு தொழில்துறைச் சிக்கல் எழும்போதெல்லாம், "எதிரிகள் சதி செய்கிறார்கள்" என்றே முடிவுக்கு வர வேண்டியதில்லை.

​எந்த ஒரு நாடு வளர்ச்சி பெறுவதையும் சில எதிர்ப்புச் சக்திகள் சகித்துக் கொள்ளாது என்பது உண்மைதான். இந்த கசப்பான அனுபவங்கள் காலம் காலமாக நடந்து வருபவையே.

​இருப்பினும், ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தின் தடங்கலின் போதும், "இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க வெளிநாட்டுச் சக்திகள் சதி செய்கின்றன" என்று அவசரமாக முடிவு செய்வதற்கு முன், தகுந்த ஆதாரங்களைப் பார்க்க வேண்டும். அதை மக்கள் முன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

​இந்தியாவில் ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது உற்பத்தி ஆலையைத் தொடங்கியபோது, அதை மூடுவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உணவு நஞ்சாக்கம், நிறுவனத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் கம்பிகளைத் துண்டித்தல், ராய்ட்டர்ஸ் வெளியிட்ட போலிச் செய்திகள்... எனப் பல நிகழ்ந்தன. இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள் நாட்டிற்குள்ளும் வெளியிலும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

​எனவே, எல்லா ஆபத்துகளையும் எதிர்நோக்கும் திறன் நமக்கு வேண்டும். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுமே இதற்கான தீர்வு.

​இதைவிட்டுவிட்டு, "ஐயையோ அடிக்கிறானே!" என்று புலம்புவதில் என்ன பயன்?

​ஒரு நாடு சுயமாக வளர்வதை எந்தப் போட்டியாளரும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

​தம்மைச் சுற்றிலும் எதிரிகளை வைத்துக்கொண்டு இஸ்ரேல் சாதிக்கவில்லையா? ஊழல், ராணுவத் தலையீடு, ஜனநாயக மறுப்பு, தீவிரவாதிகளுக்குச் சாதகமான சூழல் என அனைத்தையும் வைத்துக்கொண்டுள்ள பாகிஸ்தான்கூட இப்படிப் புலம்புவதில்லையே!

​எந்த நாடுதான் முழுமையான அமைதியுடன் இருக்கிறது? எல்லா நாடுகளிலுமே வன்முறையாளர்களின் தலையீடு, இல்லுமினாட்டிகளின் சதி, உள்நாட்டுக்கலவரம் என ஏதோவொன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளின் நிலையும இதுதான்.

​அமெரிக்காவிலேயே டிரம்பை வீழ்த்த முயற்சிகள் நடக்கவில்லையா?

​கடுமையான சட்டதிட்டங்களாலும் அதிகாரத்தாலும் சீனா தப்பித்துக்கொள்கிறது. உலகம் போற்றும் ஜனநாயகம் அங்கே இல்லை என்றாலும், நாட்டிற்கு எதிரான மனோபாவம் அங்கே உருவாக முடிவதில்லை; அதை அவர்கள் அனுமதிப்பதும் இல்லை. ஆனால் நம் நாட்டின் சூழல் வேறு!

​முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூட, "எனக்கு எதிராக வெளிநாடுகள் சதி செய்கின்றன" என்றுதான் அடிக்கடி பேசுவார்.

​இது உலக அரசியல்வாதிகள் அனைவருக்கும் வசதியான ஒரு வாதம்.

​எந்தெந்த அமைப்புகள் நம் நாட்டிற்கு எதிராகச் செயல்படுகின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக மக்கள் முன் வையுங்கள்.

​அதை விடுத்து, எப்போதும் "சதி... சதி..." என்று பேசிக்கொண்டிருப்பது சலிப்பையே தரும்.

​எனக்கு மோடிக்கோ, பாஜகவிற்கோ அல்லது நாட்டிற்கோ எதிரான கருத்துகள் எதுவும் இல்லை; அவர்கள்தான் என் தேர்வும் கூட. ஆனால், நியாயமான கேள்விகளை எதிர்கொள்வதில் காங்கிரஸிற்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் அல்லவா?

​தேசபக்தி என்பது ஒரு கேடயமா?


#patriotism #External threat # Politicians 

Wednesday, September 16, 2026

புதிதாக முளைத்த விநாயகர்-வேளுக்குடி

சில கோஷ்டிகளுக்கோ அல்லது சிறிய குழுக்களுக்கோ தலைவராக இருப்பது எளிது. அங்கே முழு அமைப்பிற்கும் நன்மை பயக்கும் செய்திகளை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. குழுவாதத்தை மட்டுமே மையமாகக் கொண்டு குதூகலமாகப் பேசலாம்.

​குழுவாதம் என்பது உற்சாகம், ஆரவாரம், சண்டைகள் மற்றும் வெறுப்புணர்வுகளை எளிதாகத் தூண்டும் வல்லமை மிக்கது; கிளர்ச்சியூட்டும் தன்மை கொண்டது.

​ஆனால், அவரே ஒரு பரந்துபட்ட அமைப்பிற்குப் பொறுப்பேற்றுவிட்டால், அத்தகைய கிளர்ச்சியூட்டும் பேச்சுகளைப் பேச முடியாது. ஏனெனில், அங்குப் பொறுப்பு அதிகம்.

​உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள், ஆன்மீக அன்பர்களால் ஒரு பொதுவான இந்து மத அபிமானியாகவே புரிந்து கொள்ளப்பட்டவர். அவரிடமிருந்து இத்தகைய குழுப் போக்கையோ அல்லது வெறுப்புப் பேச்சுகளையோ பக்தர்கள் எதிர்பார்க்கவில்லை.

​ஆனால் வேளுக்குடி, "தான் அப்படிப்பட்ட பொதுவான ஆசாமி இல்லை; வெறும் சிறு பிரிவிற்கான ஆசாமிதான்" என்பதைத் தனது பேச்சால் நிரூபிக்கும் போது பக்தர்கள் திகைத்துப் போகின்றனர். இதில் தவறு அவரிடம் இல்லை! அவரை அவரது தகுதிக்கு மேல் உயர்வாக நினைத்த பக்தர்கள் மீதுதான் தவறு. அவர் என்றுமே தான் ஒரு 'சைவ வெறுப்பாளர்' என்பதை மறந்துவிடவில்லை போல!

​அதனால்தான், இடம்-பொருள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், "புதுசா வந்த விநாயகர்" என்று வசைபாடியுள்ளார். இது தெய்வநிந்தனை என்றுகூட அவருக்குப் புரியவில்லை. தென்கலை வைணவர்களாக இல்லாத பல பக்தர்களும் ஆர்வலர்களும் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர்; அவரது ஆன்மீகப் பணிகளில் பங்கேற்றுள்ளனர் என்பதை அவர் மறந்தே போனார்.

​ஏன் இப்படி விபரீதமாகப் பேசினார் என்பது அவருக்கே வெளிச்சம். அந்தப் பேச்சு, பலரையும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. புராணங்களிலும் கதைகளிலும் கிடைக்கும் மேற்கோள்களை அவரவர் நாவன்மைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கொள்ளலாம். வேளுக்குடி, பிள்ளையாரை நிந்தனை செய்யவே அத்தகைய மேற்கோள்களை எடுத்துக்கொண்டார் போலிருக்கிறது.

​"புராணங்களில் விநாயகரைப் பற்றி எதுவுமே இல்லை; அவர் எங்கிருந்தோ புதிதாக வந்தார்" என்றெல்லாம் தேவையற்ற தீவிரப் பேச்சை விடுத்து, பேசுவதற்கு முன்பு நம் நாட்டில் விநாயகர் வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை யோசித்திருக்கலாம்.

​இது குறித்துச் சமூகத்தளத்தில் ஒருவர் எழுப்பிய நியாயமான கேள்வி இது:

"இதிகாச புராணங்கள் எதிலும் இல்லாத விஷயங்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலும் உள்ளன என்பதை சுவாமி அறியாதவர் அல்ல. உதாரணமாக, ராம-ராவண யுத்தத்தின் இறுதியில் அரக்கர் படைகள் 'குழமணி தூரம்', 'பொங்கத்தம் பொங்கோ' என்று கூத்துகள் ஆடியதைப் பற்றித் திருமங்கையாழ்வார் வர்ணிப்பது, வால்மீகி ராமாயணத்திலோ அல்லது பிற புராண இராமாயணச் சித்திரிப்புகளிலோ இல்லாத ஒன்று. அதனை அருளிச்செயல் என்று ஏற்கும் பட்சத்தில், விநாயகரைப் பற்றிய விஷயங்களுக்கு மட்டும் புராணப் பிரமாணம் எங்கே என்று கேட்பது நியாயமானதல்ல."


​மேலும், விநாயகர் வழிபாடு இல்லாத மரபுகள் இந்து மதத்தில் இல்லை. தற்போது நிலவும் அரசியல்-சமூகச் சூழலில், விநாயகரை ஒரு "சைவக் கடவுள்" என்பதாகக் கற்பனை செய்து வன்மத்தை வளர்ப்பது சிறுபிள்ளைத்தனம். காலம் காலமாகப் பிள்ளையார், எல்லாச் சம்பிரதாயங்களும் துதிக்கும் செல்லக் கடவுளாகவே திகழ்கிறார்.

​நமது ஆழ்வார்கள் அருளிய திருவாய்மொழியிலும் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

"அவரவர் தமதமது அறிவறி வகைவகை

அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவரவர் விதிவழி அடையநின்றனரே."


​(ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய புரிதலுக்கு ஏற்பத் தங்களுக்குப் பிடித்தமான தெய்வங்களை 'இவரே என் கடவுள்' என்று சரணடைகிறார்கள். அப்படி அவர்கள் வணங்கும் அந்தந்த தெய்வங்களும், தங்களைக் கும்பிடும் பக்தர்களுக்குக் குறைவில்லாமல் பலன்களைக் கொடுக்கின்றன. ஏனெனில், அவரவர் செய்த நல்வினைப் பயன்களுக்கு ஏற்ப அந்தந்த தெய்வங்களின் வடிவில் நின்று அருள்பாலிப்பவன் ஒரே பரம்பொருள்தான்.)

​இது நவீன யுகம். இந்து மதம் என்பதே காலத்திற்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வல்லமை மிக்கது என்பதை மறந்து, வேளுக்குடி இன்னும் 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

​அவர் இதில் எந்தவிதச் சேதக் கட்டுப்பாடும் (Damage control) செய்ய முயல்வதாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சர்ச்சையை மேலும் கிளறாமல், அவரைப் புறம்தள்ளிவிட்டு நாம் கால ஓட்டத்தைத் தொடர்வோம்.



#Vekukkudi #Vinayagar #controvercy #vekukkudi krishnan

Tuesday, September 15, 2026

UPI ககு வரி! அராஜக உச்சம்!

எவரேனும், பத்து வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கட்டிய ஓர் அத்தியாவசிய அமைப்பை, ஒரே நிமிடத்தில் வெடிவைத்து உடைத்தெறிவார்களா? வளர்த்த குழந்தையின் கழுத்தை வெட்டிப் பார்ப்பார்களா?

​செய்வார்கள்! நமது மத்திய அரசு செய்யும்.

​யுபிஐ (UPI) சேவைகளுக்கு வரி போட்டுள்ளார்கள். ஏன்? வங்கிகளுக்குச் செலவாகிறதாம்!

​வங்கிகளுக்கு ஆகும் எல்லாச் செலவையும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

​பணத்தைக் கையாள வங்கிகளுக்கு எவ்வளவு செலவாகிறது எனக் கணக்கெடுங்கள்.

​வங்கிகள் பணத்தை எண்ண, பணப் பெட்டகங்களில் (Currency Chest) வைக்க, நோட்டுகள் போலியா அல்லது கள்ள நோட்டா எனப் பார்க்க, ஏடிஎம்களில் (ATM) பணத்தை நிரப்ப, ஏடிஎம்களைப் பராமரிக்க, அதற்கான மின்கட்டணம், இணைய இணைப்புச் செலவு (Uplink cost), பணத்தைக் கொண்டுசெல்லும் வாகனங்களின் போக்குவரத்துச் செலவு, பாதுகாப்புச் செலவு (Security), பழைய நோட்டுகளைத் திரும்பப் பெற, அவற்றை மீண்டும் அச்சடிக்கும் செலவு, ரிசர்வ் வங்கிக்கு (RBI) ஆகும் செலவு என அனைத்தையும் பார்க்க வேண்டும்.

​வியாபாரிகள், பயனாளிகள் ஏடிஎம்களுக்குக் கட்டும் பணம், சில்லறை மாற்றுகின்ற செலவு, அவர்கள் பணத்தை எண்ணுகின்ற வேலை, அதைத் திரும்பக் கொண்டுவந்து வங்கியிலே கட்டுகின்ற வேலை என மேலும் பல செலவுகள் உள்ளன.

​இவை அனைத்தையும் யுபிஐ தவிர்க்கிறது. யுபிஐ செலவை ஈடுகட்டுவதாகக் கூறி மக்களைப் பிழிவது இரக்கமற்ற கொடூர மனம்; அது பேரறிவீனமான செயல்.

​பணத்தைக் கையாள்வதில் எவ்வளவு சிக்கல்கள் உள்ளன என்பதைப் பார்த்துவிட்டுத்தானே யுபிஐ கொண்டுவரப்பட்டது? அந்தச் சிக்கல்கள் இப்போது சரியாகிவிட்டனவா?

​வங்கிகள் என்று மட்டுமல்லாமல், காவல்துறை, நிர்வாகத் துறை, வருமான வரித்துறை என எல்லாவற்றிலும் யுபிஐ-யின் பயன்பாடு இருக்கிறது.

​எல்லாப் பரிவர்த்தனைகளும் வங்கிக் கணக்குகளுக்குள் வருவதால், எல்லாக் கணக்கு வழக்குகளையும் கண்காணிக்க முடியும்‌.

​எல்லாவற்றையும் விடுத்து, முட்டாள்தனமாக 2,000 ரூபாய்க்கு மேலே போனால் அரசு வரிவிதிக்கிறது.

​2014-இல் மோடி அரசு வந்தபோது, "கருப்புப் பணத்தைத் தடுப்போம், பணப் பரிவர்த்தனையைக் குறைத்து டிஜிட்டல் மயமாக்குவோம், மக்களுக்குச் சேவை செய்வோம்" என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர்எதிராகச் செயல்படுகிறார்கள்.

​"அரசின் பண உதவிகள் நேரடியாக வங்கிகள் மூலமாகவே மக்களுக்கு வரும்; அதனால் ஊழலை ஒழிக்க முடியும்" எனச் சவடால் அடித்துவிட்டு, இப்போது யுபிஐ-க்கு வரி போடுவோம் என்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களை விட மோசமாகச் செயல்படுகின்றனர். மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டு, உலக மகா தலைவர்கள் எனத் தங்களைச் சீராட்டிக்கொள்வது ஏமாற்று வேலை.

​கேஸ், மின்சாரம், மளிகை, செய்தித்தாள் என அனைத்திற்கும் டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்துகிறோம்! அதற்கு மோடியும் நிர்மலாவும் வேட்டு வைத்தார்கள்.

​2014-15-இல் என்னென்ன பேசினீர்கள் என்பதைச் சற்றே படித்துப் பாருங்கள்!

​மேலும், டிஜிட்டல் முறைக்கு மக்களைக் கொண்டுசெல்ல முயலாமல், "வரி விதிப்பேன், கொத்து பரோட்டா போடுவேன்" என்பது அராஜகம்.

​வங்கிக் கடன் முதல் அனைவரின் பொருளாதாரம் உயர டிஜிட்டல் முறையும் ஒரு காரணம்.

​இந்த அடிப்படை அறிவுகூட இல்லாத மனிதர்களை வைத்துக்கொண்டு 2029-இல் ஜெயிக்க முடியுமா?

​ஏற்கனவே ஜிஎஸ்டி (GST) !!இதில் இனி  புதிய கட்டணபம். 

​பள்ளிக் கட்டணம், காப்பீடு — அதிலும் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி என்றெல்லாம் கும்மி அடித்தது போதாதா? இதுவுமா?

​"லாபம் மட்டுமே எங்கள் நோக்கம்" என்று சொல்லிவிடுங்கள்; மக்கள் நலன் என நாடகமாடாதீர்கள்.

​100 கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில், அவர்களைப் பிடுங்கித்தின்று விளையாடுவது என்ன விதமான மனநிலை? இது பகல் கொள்ளை இல்லையா?

​மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்குவீர்கள் என்றால் யுபிஐ-யை இழுத்து மூடவேண்டியதுதான்.

​அமெரிக்க அண்ணன் சொல்வதற்குத் தலையாட்ட மோடி எதற்கு?

#TAX FOR UPI #MODI #NIRMALA SITARAMAN. #UNPOPULAR

Monday, September 14, 2026

பிரிக்ஸ் மாநாடு 2026 - புது டில்லி

 பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபரின் உரை:

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை:

பதற்றத்தைக் குறைத்தல், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் அமைதி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

அரசியல் தீர்வு மட்டுமே போர்களை முடிவுக்குக் கொண்டுவரும்:

பிரச்சினைகளுக்கான மூல காரணங்களைக் கண்டறிதல், சமாதான சகவாழ்வை ஏற்றுக்கொள்ளுதல், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை அவசியமானவை.

பாலஸ்தீன - இஸ்ரேல் விவகாரம்:

இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே சிக்கல்களை எளிதாக்கும். அமைதியிலும் சகவாழ்விலும் நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காகச் சீனா தனது சக பிரிக்ஸ் (BRICS) உறுப்பினர்களுடன் இணைந்து உரிய பங்கை ஆற்றுமா?

"ஒரு சுவையான சூப்பின் அழகு, அதில் சேர்ந்துள்ள பல்வேறு சுவைகளின் கலவையில்தான் உள்ளது."

பலதரப்பட்ட கலாச்சாரங்களின் அழகும் அதுவே.

விதிமுறைகள் இல்லாத உலகம் ஆபத்தானது:

போக்குவரத்து சிக்னல் (Traffic Signal) போக்குவரத்தைச் சீர்குலைப்பதில்லை; மாறாக ஒழுங்குபடுத்துகிறது.

சர்வதேச உறவுகள்:

நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதும், நேர்மறை ஆற்றலை உருவாக்குவதும் அவசியம். சர்வதேச அமைப்புகள் மற்றும் உடன்படிக்கைகளிலிருந்து வெளியேறுவது அல்லது போட்டி அமைப்புகளை உருவாக்குவது நல்லதல்ல.

பரஸ்பர மரியாதை:

ஒருவருக்கொருவர் உள்ள முக்கியக் கவலைகளை மதிக்க வேண்டும்; மேலும் பரஸ்பர புரிதலை அதிகரிக்கவும், கருத்து வேறுபாடுகளைச் சரியாகக் கையாளவும் பேச்சுவார்த்தைகளே சரியான தீர்வு.

                          -0-

உரைகளில் "அண்ணன் சீனா" நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் நடைமுறையில், தன்னை இன்னொரு "பிக்பாஸ்" ஆக உருவகப்படுத்திக் (project) கொள்கிறார். அமெரிக்காவிற்கு மாற்று நிச்சயம் சீனா அல்ல.

பிரிக்ஸை தங்களது சந்தை விரிவாக்கத்திற்கும், பிராந்திய தாதா பிம்பத்திற்கும் (regional dada image) பயன்படுத்த நினைக்காமல், அனைத்து நாடுகளும் தங்களது சுய அடையாளத்தோடு "அனைவரும் சமம்" எனும் கருத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

அண்ணன், தனது ஓயாத எல்லை சண்டையை எப்போது நிறுத்தப் போகிறார்? விட்டுக்கொடுத்தல் என்பது இருபுறமும் நடக்கவேண்டாமா?

உலக போலீஸ்காரரான அமெரிக்கா—அடி வாங்கினாலும் வலி வெளியே தெரியாமல் "நான் யாரு தெரியுமா... உங்க அப்பன் மவனே சிங்கம்டா!" என காமெடி படத்து வில்லன் பாணியில் கெத்து காட்டினாலும்—பிரிக்ஸின் வளர்ச்சி குறித்து உள்ளுக்குள் கடுமையாக எரிச்சல் அடைகிறார். மேற்கத்திய நாடுகளின் நிலையும் அதுவே!

#BRICKS 

#China #



Saturday, September 12, 2026

An usual Bla.. Bla by INC

இந்தியா, 2026 ல் வெற்றிகரமாக சுய திட்டத்துடன், தனது சொந்த வலுவில், உலக அளவில் தனது அந்தஸ்தையும், கௌரவத்தையும் நிலை நாட்டிக் கொண்டிருக்கையில், தேசியம் என்று ஒரு காலத்தில் உருட்டிக் கொணடிக் கொண்டிருந்த காங் எனும் குடும்பக் கட்சி, செயலிழந்து, திட்டமிழந்து, தேசப் பார்வை இழந்து, குருட்டுப் பூனைபோல, அங்கும் இங்கும் தாவிக்கொண்டு இருக்கிறது. 

ஆத்திரம் கண்ணை மறைக்கிறது அவர்கட்கு! பாரதிய ஜனதா எதிர்ப்பு வேறு; சொந்த நாட்டையே எதிர்ப்பது வேறு என்பது கூட அந்த 'மாஜி தேசிய வாதிகளுக்கு" புரியவில்லை!

உண்மையில், குருட்டு பார்வை கொண்ட ஒரு கட்சிதான் பிரதான எதிர்க்கட்சி என்பது சோகம். தெளிவான பார்வையும், மாற்று அரசியலை எடுத்துச் செல்லும் தேசப் பற்றாளர்கள் இல்லாத கட்சியாக அது மாறியுள்ளது, நாட்டின் துரதிர்ஷடம்.

அவர்கள், BJP ஐ விட அதிக தேசப் பற்றுடன், நாட்டை இதைவிட வலுவான பொருளாதார, தேசப் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து, நாட்டிற்கு எதிரான கருத்துக்களையே உதிர்த்துக் கொண்டு இருப்பது அவலம். 

சமீபத்தில், அக்கட்சியயின் பிரசங்கி ஒருவர், 1971 ல் சோவியத் யூனியன் உடனான ஒப்பந்தத்தை , இந்தியாவின் ஒப்பந்தம் என்பதை மறந்து, காங்கிரஸ் ஒப்பந்தம் என வர்ணிக்கிறார்.

அவர்களால், 1971 ஐ தாண்டி வர இயலாது அளவிற்கு, தத்துவார்த்த திவால் ஆகிக் கிடக்கின்றனர்.‌ இது 2026 என்பதை யாராவது அவர்களுக்குச் சொல்ல வேண்டும். 

Soviet Russia helped India, and every Indian respects that history. But that help was not charity to the Congress party. It was a strategic partnership with the Indian State, built on Indian national interest. Congress did not bring Soviet steel plants from its party fund, India paid for them. To claim 1971 treaty as Congress's private property is laughable.

What Jairam Ramesh deliberately hides is the fact he knows about another 'big Congress family' enterprise, which also signed a secret MoU with the Chinese Communist Party in 2008, the contents of which is still refused to be made public. That is the real history of foreign ties - not national interest but that one big Congress family interest.

And what is this lecture on self-advertisement? A party that turned every government scheme into Indira, Rajiv, Jawahar yojana, that printed history textbooks as Nehru-Gandhi family album, is now teaching PM Modi about self-promotion?

PM Modi does not need to advertise himself. The world advertises him. When Putin meets Modi, it is not a meeting of two politicians. It is a meeting of two leaders who dominate their nations' politics for two decades because their people trust them. Russia needs India today as much as India needs Russia - for oil, for defence, for a multipolar world. That respect was not built by tweets of Jairam Ramesh, but by 11 years of strong, non-apologetic foreign policy.

Congress ruled for 60 years and made India a Soviet client that had to plead for spare parts. Modi made India a power that buys Russian oil despite Western sanctions and says clearly - my energy policy is for my people.

Stop living in Soviet nostalgia. The world respects New India, not old Congress.

-#1971to2026 #Jayram Ramesh #Indo Soviet treaty #absurd 

Friday, September 11, 2026

சாலமன் பாப்பையா

கல்வியாளர, சொற்பொழிவாளர், திரு. சாலமன் பாப்பையா அவர்கள், தனது 90-ஆவது வயதில் காலமானார்.

காலை நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டு ரசிகர்களைத் தம் பேச்சால் கட்டிப்போட்டவர்.

'வெட்டி-ஒட்டிப் பேசும்' விவாதக் கலையை பட்டிமன்றம் என்ற வடிவத்ததில் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்று பிரபலப்படுத்தியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒருபுறம், எல்லாவற்றையும் மிகத் தீவிரமாகப் பேசும் பாரதி பாஸ்கர்; மறுபுறம் எல்லாவற்றையும் அன்றாட நகைச்சுவையாக விவரிக்கும் ராஜா; இவ்விருவருக்கும் நடுவில் ஓரளவுக்கு யூகிக்கக்கூடிய தீர்ப்புகளோடு காத்திருக்கும் பாப்பையா — இதுவே அவரது வெற்றிச் சூத்திரம்.

அக்காலத்தில், குறிப்பிட்ட சில உள்ளரங்கங்களில் மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருந்த இத்தகைய சுவாரசியமான சொற்பொழிவுகளை, மக்கள் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம் பரவலாக்கியவர் அவரே.

"கற்பில் சிறந்தவர் கண்ணகியா? மாதவியா?" போன்ற வழக்கமான பாணித் தலைப்புகளிலிருந்து விலகி, அன்றாடக் கவலைகளையும் குடும்பச் சிக்கல்களையும் பட்டிமன்றத் தலைப்புகளாக மாற்றியவர்.

"பிறந்த வீடா? புகுந்த வீடா?", "மருமகளா? மருமகனா?" போன்ற தலைப்புகள், அக்காலத்தில் எவரையும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் கட்டிப்போடக்கூடியவையாக இருந்தன.

தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில்,  விருந்தினர்களையும் உறவினர்களையும் கூட இரண்டாம் பட்சமாக்கி, மக்களைத் தொலைக்காட்சியின் முன் அமர வைத்தவர்.

இவரது உரைகளில் மலிவான நகைச்சுவையோ, எள்ளலோ, அநாகரிகமான கருத்துகளோ ஒருபோதும் இருந்ததில்லை. உருவக்கேலியோ, ரசனைக் குறைவான பேச்சுகளோ இடம் பெற்றதே இல்லை.

பட்டிமன்றம் போன்ற வெகுஜன மேடைகளிலும் நயமான உரைவீச்சுகளையும், தமிழ் இலக்கிய-கவிதை வரிகளையும் மேற்கோள்களாக எடுத்துரைத்தவர்.

அரங்கத்தை  அடுத்த நிலைக்கு உயர்த்த முயற்சித்ததோடு, பட்டிமன்ற உரைகள் வெறும் 'மேல்தட்டு மக்களுக்கு' (Elite) மட்டுமானது அல்ல என்பதையும் நிரூபித்துக் காட்டியவர்.

பேச்சு வழக்கில் கூடக் கூடுமானவரை இயல்பான எழுத்துத் தமிழையே பின்பற்றியவர்.

பட்டிமன்ற பேச்சுகள் அனைத்தும் "ஒரு ஏற்பாடு" அல்லது scripted என்றாலும், அதிலும் ஒரு professional approach உடன் செய்தவர்.

இவரது கம்பீரப் பேச்சும், எளிமையான நடையும் தமிழர்களின் நெஞ்சில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

Thursday, September 10, 2026

கடற்கொள்ளையர்கள்.

சில நிஜ சம்பவங்கள், கதை களைக்கட்டிலும்  படு சுவாரஸ்யமானவை!  திரில்லானவை.  


2023 டிசம்பர் மாதம். சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டார்கள் என்று உலகம் நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஹூதி தாக்குதல்கள் காரணமாக சர்வதேசக் கடற்படைகளின் கவனம் பல திசைகளில் பிரிந்திருந்தது. அந்தக் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி சோமாலியக் கடற்கொள்ளையர்களும் மீண்டும் கடலுக்கு வரத் தொடங்கினர்.

அப்படித்தான் MV ரூயன் (MV Ruen) என்ற சரக்குக் கப்பல் அவர்கள் கையில் சிக்கியது.

MV ரூயன் பல்கேரிய நிறுவனமான நேவிகேஷன் மரிடைம் பால்கரியா (Navibulgar) நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட, ஒரு பெரிய சரக்குக் கப்பல். தென் கொரியாவின் கவாங்யாங் துறைமுகத்திலிருந்து உலோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு துருக்கியின் கெம்லிக் துறைமுகத்தை நோக்கி அது சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் 18 மாலுமிகள் இருந்தனர். அவர்கள் பல்கேரியா, அங்கோலா மற்றும் மியான்மரைச் சேர்ந்தவர்கள்.

2023 டிசம்பர் 14 அன்று, சோகோத்ரா தீவுக்கு அருகிலுள்ள அரபிக்கடல் பகுதியில் ரூயன் சென்று கொண்டிருந்தபோது சுமார் ஆறு சோமாலியக் கடற்கொள்ளையர் கப்பலில் ஏறினர். 18 மாலுமிகளையும் சிறைபிடித்து, ரூயனை சோமாலியக் கடற்கரையை நோக்கி கொண்டு சென்றார்கள். டிசம்பர் இறுதியில் அது சோமாலியக் கடற்கரையிலிருந்து சில கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்தது.

இங்கேதான் இந்தக் கடத்தல் வழக்கமான சோமாலியக் கடற்கொள்ளை சம்பவத்திலிருந்து வேறுபடத் தொடங்கியது.

கடற்கொள்ளையர்கள் ரூயனை வெறும் பிணைத்தொகை பெறுவதற்கான கப்பலாக மட்டும் பயன்படுத்தவில்லை. அதை ஒரு “Pirate மதர் ஷிப்” ஆக மாற்றத் தொடங்கினர்.

கடற்கொள்ளையர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டு. அவர்களுடைய சிறிய படகுகளால் சோமாலியக் கடற்கரையிலிருந்து நூற்றுக்கணக்கான கடல் மைல்கள் தொலைவுக்குச் சென்று பெரிய சரக்குக் கப்பல்களைத் தாக்குவது கடினம். எரிபொருள், உணவு, ஆயுதங்கள், மனிதர்கள் அனைத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆனால் ஒரு பெரிய சரக்குக் கப்பலையே கைப்பற்றிவிட்டால்?

அந்தக் கப்பலையே மிதக்கும் கடற்கொள்ளையர் தளமாகப் பயன்படுத்தலாம்.

ரூயன் அதற்குப் பயன்பட்டது. இந்திய அரசின் பின்னர் வெளியான அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 35 ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் வரை அந்தக் கப்பலில் தங்கி, மற்ற வணிகக் கப்பல்களைத் தாக்குவதற்கான மதர் வெஸல் ஆக அதை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் வருவது போல் பிடிபட்ட 18 மாலுமிகளும் பிணைக் கைதிகளாக மாறி, கடற்கொள்ளையர் கும்பல் சொல்லும் இடங்களுக்கு ரூயன் கப்பலை ஓட்டிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

உலக நாடுகள் அனைத்தும் ரூயனைத் தேடி வந்தன. அது கடற்கொள்ளையர் கப்பலாக மாறியதால் அதை ஏவுகணைகளை வீசி அழிக்கவும் சர்வதேச சட்டத்தில் இடம் இருந்தது. ஆனால் அதில் பிணைக் கைதிகள் இருப்பதால் என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.

இந்தியக் கடற்படை அப்பகுதியில் நடக்கும் கப்பல் போக்குவரத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தது. அந்தத் தகவல்களை ஆய்வு செய்தபோது சாட்டிலைட் மூலம் ரூயன் மீண்டும் நகர்வது தெரியவந்தது.

இந்த முறை இந்தியக் கடற்படை அதை விடத் தயாராக இல்லை.

அரபிக்கடலில் ஏற்கெனவே பணியில் இருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் கொல்கத்தாவுக்கு (INS Kolkata) ரூயனை இடைமறிக்க உத்தரவு வழங்கப்பட்டது.

2024 மார்ச் 15 காலை ஐஎன்எஸ் கொல்கத்தா, ரூயனை இடைமறித்தது.

முதலில் நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக ஐஎன்எஸ் கொல்கத்தா தனது ட்ரோன் ஒன்றை ரூயன் அருகே அனுப்பியது.

அப்போது கடற்கொள்ளையர்கள் அந்த ட்ரோன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதைச் சுட்டு வீழ்த்தினர்.

அதோடு நிற்கவில்லை.

ஐஎன்எஸ் கொல்கத்தா மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதன் மூலம் நிலைமை முற்றிலும் மாறியது.

இப்போது அது சந்தேகத்திற்குரிய ஒரு வணிகக் கப்பல் மட்டும் அல்ல; இந்தியப் போர்க்கப்பல் மீது நேரடியாக ஆயுதத் தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்களின் கப்பல்.

ஆனால் ஐஎன்எஸ் கொல்கத்தாவுக்கு இன்னும் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருந்தது.

ரூயனுக்குள் பணயக் கைதிகள் இருந்தார்கள்.

எனவே கப்பலை ஏவுகணையால் தாக்கி அழிப்பது எளிதான ராணுவத் தீர்வாக இருந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமில்லை. கடற்கொள்ளையர்களைக் கொல்ல முயன்றால் பணயக் கைதிகளும் உயிரிழக்கலாம்.

நிலைமை கைமீறுவதை உணர்ந்த கொள்ளையர்கள், கப்பலை சோமாலியாவை நோக்கி ஓட்டிச் செல்லப் பணித்தனர். இன்னும் 100 கி.மீ கடந்தால் சோமாலியக் கடல் எல்லைக்குள் நுழைந்துவிடலாம். அதன்பின் அதனுள் நுழைந்து இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியாது.

அதனால் முதலில் இந்திய கடற்படை வீரர்கள் ரூயனின் ரேடார் மற்றும் ஜிபிஎஸ் அமைப்பை ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்தார்கள். ரூயன் இப்போது திசை தெரியாத கப்பலாக மாறியது.

ஆனாலும் கடற்கொள்ளையர்கள் விடவில்லை. "ஆப்பிரிக்கா இருக்கும் திசை மேற்கேதான், சூரியனைப் பார்த்து திசையைக் கண்டுபிடித்துச் செல்" என்றார்கள். ரூயனும் அப்படியே மெதுவாகச் செல்ல முயன்றது.

அதன்பின் ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலின் சுக்கானை தாக்கி அதை முற்றிலும் முடக்கியது. கப்பல் இப்போது நடுக்கடலில் நின்றது.

அடுத்து சென்டிமென்ட் அட்டாக் தொடங்கியது. பல்கேரிய கேப்டனும் மாலுமிகளும் ரேடியோவில் வந்தார்கள். "கப்பல் மேல் சுடாதீர்கள். நீங்கள் சுடும் ஒவ்வொரு குண்டுக்கும் எங்களில் ஒருவரைக் கொல்வோம் என்கிறார்கள்" என்றார்.

அவர் சொல்வது உண்மை என தெரிந்தாலும் ஐஎன்எஸ் கொல்கத்தா அடுத்த சதுரங்க நகர்வை நகர்த்தியது.

"இது சர்வதேச சட்டப்படி பைரேட் கப்பல். இதில் உள்ள நீங்கள் பிணைக் கைதி என சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நீங்களும், மீதமுள்ள மாலுமிகளும் சர்வதேசக் கடற்கொள்ளையருக்கு உதவும் நபர்கள். கப்பலில் உள்ள அனைவரையும் நாங்கள் கடற்கொள்ளையராக தான் கருதுவோம்" என்றது.

அதன்பின் கொள்ளையர்கள் அடுத்த காயை நகர்த்தினார்கள். பல்கேரிய கேப்டன் பல்கேரிய கப்பல் கம்பெனியைத் தொடர்பு கொண்டு அழுதார். அவர்கள் ஐஎன்எஸ் கொல்கத்தாவை தொடர்புகொண்டு "ஆறு கோடி டாலர் கொடுத்தால் பிணைக் கைதிகளை விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். நாங்கள் கொடுக்கத் தயார். நீங்கள் தயவுசெய்து கப்பல் மேல் தாக்குதல் நடத்தாமல் விட்டுவிடுங்கள். எங்களுக்கு அவர்கள் உயிர்தான் முக்கியம். நாங்கள் வேண்டுமானால் பல்கேரிய அரசிடம் பேசி டெல்லியில் லாபி செய்யவும் தயார்" என வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் ஐஎன்எஸ் கொல்கத்தாவுக்கு பிறப்பிக்கபட்டிருந்த உத்தரவு உறுதியானது: "நம் நோக்கம் கடற்கொள்ளையை ஒழித்து, இந்தியப் பெருங்கடலில் வணிகத்தைப் பாதுகாப்பதுதான். கொள்ளையரைத் தப்ப விட வேண்டாம்" என்று.

ஆனால் அதே சமயம் மாலுமிகள் கொல்லப்பட்டால் சர்வதேச அளவில் பிரச்சினையாகிவிடும். அதையும் இந்தியா விரும்பவில்லை. உடனடியாக கப்பலை கமாண்டோ ஆபரேஷன் மூலம் கைப்பற்ற முடிவு செய்தார்கள்.

கப்பலில் இறங்கி தாக்க, மும்பையில் இருந்து சி 17 (C-17) விமானம் மூலம் அதிரடிப்படை கமாண்டோ படை ஒன்று விரைந்து வந்துகொண்டிருந்தது.

இப்போது பல்கேரிய கேப்டனிடமிருந்து தகவல் வந்தது. கடற்கொள்ளையர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவு, "நாம் கப்பலில் உள்ள படகுகளை எடுத்துக்கொண்டு சோமாலியா போய்விடலாம்" என்கிறார்கள். இன்னொரு பிரிவு, "ஆறு கோடி வந்தால் தான் போவோம்" என்கிறார்கள் எனத் தெரியவந்தது.

ஆறு கோடி கேட்கும் பிரிவின் தலைவன் இருக்கும் இடம் ட்ரோன், பைனாகுலர்களால் கண்டறியபட்டு, அவன் நின்ற இடத்துக்கு கீழே கப்பலின் பக்கவாட்டில் வெடிமருந்து இல்லாத ஷெல்லால் அடித்தார்கள். அவனும், இன்னொருவனும் அடிபட்டு கீழே விழுந்தார்கள். அவன் கொல்லபட்டிருந்தால் கடற்கொள்ளையர் கோபத்தில் அனைவரையும் கொன்றிருக்கலாம். ஆனால் கொல்லாமல் சும்மா கீழே விழுந்து அடிபடும்படி ஷெல்லால் அடித்து தாக்கியதும் அந்த இரண்டாம் பிரிவிடையே பீதியை உண்டாக்கியது.

கமாண்டோக்கள் வரும் தகவலும் சொல்லபட்டது. அவர்கள் வந்தால் அதன்பின் பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. நேராக சுட்டுக்கொண்டுதான் கப்பலில் இறங்குவார்கள். அதன்பின் ஐஎன்எஸ் கொல்கத்தாவே நினைத்தாலும் அவர்களை தடுக்க முடியாது.

அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது.

ஒட்டுமொத்தக் கடற்கொள்ளையரும் சரணடைய முன்வந்தார்கள்.

அப்போது C-17 விமானம் மூலம் இந்தியாவிலிருந்து பறந்துவந்த கமாண்டோக்கள் கடலில் குதித்து, போர்க்கப்பல்களின் உதவியுடன் கப்பலில் ஏறினார்கள். 35 கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

அப்போது ரூயனில் சுமார் 37,800 டன் சரக்கும் இருந்தது.

35 கொள்ளையரையும் சோமாலியாவுக்கு அனுப்பாமல் நேராக மும்பைக்குக் கொண்டுவந்து இந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சர்வதேசக் கடற்கொள்ளையர் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

18 மாலுமிகளும் பாதுகாப்பாக பல்கேரியாவுக்குக் கப்பலுடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஐஎன்எஸ் கொல்கத்தாவின் கேப்டன் சரத் சின்சுன்வால் (Captain Sharad Sinsunwal) அரசியல் அழுத்தம், பேரம், ராணுவ நடவடிக்கை, சைக்கலாஜிக்கல் அட்டாக், சென்டிமென்டல் பிளாக்மெயில், கமாண்டோ ஆபரேஷன் என அனைத்தையும் திறமையாகக் கையாண்டு ஒரு மாலுமியும் மரணமடையாமல் அனைவரையும் 40 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டிருந்தார். அவருக்கு ஷௌர்யா சக்ரா (Shaurya Chakra) எனும் இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கால வீரதீர விருது வழங்கப்பட்டது.

~ நன்றி திரு நியாண்டர் செல்வன் ஜி

Saturday, September 5, 2026

முதியோர் இல்லங்கள்

 

முதியோர் இல்லங்கள்:

​இன்றைய தேதியில், "முதியோர் இல்லம்" சக்கை போடு போடும் ஒரு பிசினஸ். கடந்த ஆறு மாதங்களாக முதியோர் இல்லம் தேடிக் கொண்டிருப்பவர்களோடு தொடர்பில் இருப்பதால், பல ஆழமான விஷயங்கள் தெரியவருகின்றன. சற்று வசதியான விடுதிகள் மாதத்திற்கு ₹50,000 வரை வசூல் செய்கிறார்கள். இது இன்றைய தேதிக்கான கட்டணம். அடுத்தடுத்த ஆண்டுகளில், வருடா வருடம் 10% உயர்த்தப்படும். மருத்துவச் செலவுகள் தனி. இது சாதாரண மக்களுக்கு எப்படி கட்டுப்படியாகிறது என்று புரியவில்லை. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் கேள்விப்பட்டிராத பிசினஸ் இது. அனாதைகளைத் தவிர, சண்டையோ-சமாதானமோ பெரியவர்கள் ரோட்டுக்கு வந்ததில்லை; விரட்டப்பட்டதும் இல்லை.

முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் யார்?

​சமீபத்தில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கூறிய கருத்து நினைவுக்கு வருகிறது:

"முதியோர் இல்லங்களில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.

  1. தங்கள் சொத்து முழுவதும் பிள்ளைகளுக்குத்தான் என்று நினைத்து, அவசரப்பட்டு சொத்துகளைப் பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு, பின்னர் கைவிடப்பட்டவர்கள்.
  2. பிள்ளைகள் மற்றும் மருமகளிடம் அனுசரித்துப் போகாமல், அவர்களின் குடும்பப் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிட்டு, எதற்கும் விட்டுக்கொடுக்காமல் இருந்தவர்கள்."

பெற்றோர்களுக்கு தேவை விவேகம்!

​பிள்ளைகள் மீது பாசம் காட்டுங்கள்; சொத்துக்களை பிரித்துக் கொடுங்கள்; ஆனால் அந்தப் பாசத்தில் உங்கள் எதிர்காலப் பாதுகாப்பை இழந்துவிடாதீர்கள். சொத்தைக் கொடுப்பது தவறல்ல, ஆனால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளாமல் கொடுப்பதுதான் தவறு. வயதான காலத்திற்குத் தேவையான பொருளாதாரப் பாதுகாப்பை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். பாசம் இருக்கட்டும்... அதனுடன் கொஞ்சம் விவேகமும் இருக்கட்டும்!

​பிள்ளைகளுக்குத் திருமணமாகி தனிக்குடும்பமாக வாழத் தொடங்கிய பிறகு, அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ விடுங்கள். ஒவ்வொரு முடிவிலும் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? ஆலோசனை கேட்டால் மட்டும் சொல்லுங்கள்; அதுவும் பட்டும் படாமலும்! கருத்து கேட்கவில்லையா? அமைதியாக இருங்கள். அனுசரித்துப் போவது அவமானம் அல்ல. It's their life. தேவையில்லாத சண்டையைத் தவிர்ப்பது மிகப்பெரிய அறிவு.

தலைமுறை இடைவெளி (Generation Gap):

​தலைமுறை இடைவெளி எப்போதும் இருப்பதுதான். ஆனால், வேறு எந்தக் காலத்தையும் விட இப்போது இது பிரம்மாண்டமாக இருக்கிறது.

​பெரிசுகளே! அவர்கள் லேட்டாகத் தூங்குவார்கள், லேட்டாக எழுவார்கள். Swiggy ஆர்டர்கள் பல வரும். 'Heat and Eat' உணவுகள் சமையலறையை ஆக்கிரமிக்கும். Reels ஓயாமல் பார்ப்பார்கள்; பத்து நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்தி ஒன்றைப் பார்க்கவோ கேட்கவோ மாட்டார்கள். அதிகமாக ஈகோ பார்ப்பார்கள். இவையெல்லாம் கால மாற்றங்கள்; ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் இப்படித்தான் இருக்கப் போகிறது. இதற்காக வெகுண்டு எழுந்து சண்டைக்கு நிற்கக் கூடாது.

​அவர்களைத் தொந்தரவு செய்யாமல், உங்களுக்குப் பிடித்தவற்றை நீங்கள் சமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்திற்குத் தூங்கி எழலாம்; அவர்கள் ஆட்சேபிக்க மாட்டார்கள். முதியோர் இல்லங்களில் போய்ப் புதியவர்களிடம் அனுசரித்துப் போகும்போது, சொந்தப் பையன் வீட்டில் அனுசரிக்க மாட்டீர்களா?

​உங்களது உடல் சக்திக்கு மீறிய வேலைகளை உங்கள் மீது திணித்தால், "இயலாது" என்று நேராகச் சொல்லிவிடுங்கள். முணுமுணுப்பதை விட இது நல்ல தேர்வு. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துக்கொள்ளட்டும், பார்ட்டி செய்யட்டும்; அவர்களின் நட்பு வட்டம் அவர்களின் தேர்வு. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்.

பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள்!

​நீங்கள் ஜனித்ததே அவர்களால்! உங்களை வளர்ப்பதற்காக எத்தனை இரவுகளைத் தூக்கமின்றி கழித்திருப்பார்கள்? உங்களுக்காக எத்தனை ஆசைகளை விட்டுக்கொடுத்திருப்பார்கள்? இன்று அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பதற்காக, "அவர்கள் சுமை" என்று நினைக்காதீர்கள்.

​நேற்று நீங்கள் அவர்களின் விரலைப் பிடித்து நடந்தீர்கள்; நாளை அவர்களுக்கு உங்கள் கை தேவைப்படலாம். அவர்களுக்குப் பணம் மட்டுமே தேவையில்லை... ஒரு அன்பான வார்த்தை, ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரு மரியாதையான அணுகுமுறை, “நான் இருக்கிறேன்” என்ற நம்பிக்கை! அவ்வளவே!

​குடும்பம் சிதைவதற்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. சின்னச் சின்ன ஈகோ... “நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?” என்ற பிடிவாதம்... இவை போதும். அதேபோல் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றவும் பெரிய விஷயங்கள் தேவையில்லை. ஒரு சிறிய அன்பு, ஒரு மன்னிப்பு, ஒரு விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மனம்... இவை போதும்!

​சொத்தைப் பாதுகாப்போம்... உறவுகளை அதைவிட அதிகமாகப் பாதுகாப்போம்!

Let wisdom prevail!

Wednesday, September 2, 2026

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்!

​கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என ஒரு தடை உத்தரவு. காரணம், ஒருசிலர் ‘ரீல்ஸ்’ எடுக்கிறார்கள் என்பதற்காக! சட்டம் இயற்றுபவர்கள் தீரச் சிந்திக்காமல் செயல்பட்டால், அல்லது மக்களைக் கோயிலுக்கு வரவிடக் கூடாது என்ற தவறான எண்ணத்தோடு முடிவெடுத்தால் மட்டுமே இதுபோன்ற அராஜக விதிகளை அமல்படுத்த முடியும்.

​ரீல்ஸ் எடுத்தாலோ, உரத்த குரலில் பேசினாலோ, அனுமதி இன்றி புகைப்படம் எடுத்தாலோ, அல்லது போனை ‘சைலன்ட் மோடில்’ போடத் தவறினாலோ போனைப் பறிமுதல் செய்வோம் என்று எச்சரியுங்கள். ஒவ்வொரு மூலைக்கும் CCTV கேமராக்கள் எதற்காகப் பொருத்தப்பட்டுள்ளன? கொஞ்ச நாட்களுக்குக் கூடுதல் காவலர்களைப் பணியமர்த்தி விதிமீறல்களைக் கட்டுப்படுத்துங்கள்; பிரச்சினை முடிந்தது.

​அதை விடுத்து, செல்போனே எடுத்துச் செல்லக் கூடாது என்பது இக்காலத்திற்குச் சற்றும் சாத்தியமில்லாத ஒன்று.

​சில பெரிய கோயில்களுக்குச் சென்று தரிசித்துத் திரும்ப நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகிறது. அதுவரை போனை லாக்கரில் வைத்துவிட்டு வர வேண்டும். போனை வைப்பதற்கு ஒரு மணி நேரம் வரிசை; அதை மீட்டு எடுப்பதற்கு ஒரு மணி நேரம் வரிசை.

​மணி கணக்கில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு எத்தனையோ அவசரத் தேவைகளும் அழைப்புகளும் வரத்தானே செய்யும்?

​வீடு, பணியிடம், குழந்தைகள் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், காவல் துறை என யாருக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் அவசர அழைப்பு வரலாம். ஏன், கோயிலுக்குள்ளேயே ஒருவருக்கு திடீரென உடல்நலம் குன்றலாம்; உடன் வந்த முதியவர்களோ, குழந்தைகளோ கூட்டத்தில் காணாமல் போகலாம்; உடைமைகள் திருடு போகலாம். அப்படி ஒரு சூழலில் யாரிடம் உதவி கேட்பது? எப்படித் தொடர்புகொள்வது?

​முதியவர்களை அழைத்து வரும் குடும்பங்களுக்குத்தான் இந்த நடைமுறைச் சிக்கல்களின் தீவிரத்ன்மை புரியும். சிறப்பு வழியில் ('VIP') எளிதாகச் சென்று வரும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது எப்படிப் புரியும்?

​சொந்த மொபைல் எண்களையே நினைவில் வைத்திருக்க இயலாத இந்தக் காலத்தில், அவசர நேரத்தில் மற்றவரை எப்படித் தொடர்புகொள்வது?

"கோயிலுக்குச் செல்வதையே மக்கள் தயங்கும் அளவுக்கு இந்த விதிகளால் சிரமங்கள் உருவாகக் கூடாது" என்கிறார் அண்ணாமலை.

​அமைதியான முறையில் இறைத்தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்தத் தேவையில்லாத கட்டுப்பாடுகள் கடும் பதற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன.

​மக்களின் ஆன்மீக நம்பிக்கையையும் வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோயில் விதிமுறைகள் இருக்க வேண்டும். மாறாக, மக்களைக் கோயிலை விட்டே விலகிப் போகச் செய்வதற்கு அல்ல. ஒருவேளை அதுதான் நோக்கமா?

​எனவே, தமிழக அரசு இந்த நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களைத் துன்புறுத்தும் இந்தத் தடையைத் திரும்பப் பெற வேண்டும்.

​பாடல் பெற்ற ஸ்தலம், திவ்ய தேசம், வைப்புத் ஸ்தலம் என்ற வரிசையில், "செல்போன் தடைத் தலம்" என்று புதிதாக ஒரு பட்டியலை உருவாக்கத் தேவையில்லை.

​இந்து சமய அறநிலையத் துறை முதற்கட்டமாக 52 கோயில்களின் பெயர்களுடன் இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. மிக முக்கிய ஆலயங்களில் 'பாதுகாப்பு' காரணங்களுக்காக மட்டுமே இதை விதிவிலக்காகச் செயல்படுத்தலாமே தவிர, நிர்வாக வசதிக்காகப் பொதுமக்களை வதைக்கக் கூடாது.

​கோயில் வளாகங்கள் என்பவை வழிபாடு மட்டுமன்றி, ஆன்மீகச் சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும், சமூகக் கூடல்களும் நடக்கும் பொதுவெளிகளாகவே காலம் காலமாக இருந்துவந்துள்ளன என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

Tuesday, September 1, 2026

கடுதாசி தினம்

 செப்டம்பர் 1: ‘உலகக் கடிதங்கள் எழுதும் தினம்’ என்று கூகுள் சொன்னது.

​தபால் என்பது கூரியராகவும் பார்சலாகவும் மாறிவிட்ட இன்றைய சூழலில், "நாம் கடிதம் எழுதினோம்" என்பதே ஏதோ சங்க காலச் சிந்தனை போலாகிவிட்டது.

​அந்தக் காலத்துக் கடிதங்களுக்கு என்று ஒரு புரோட்டோகால் இருந்தது. கடிதத்தின் தலையில் பிள்ளையார் சுழி (௳) இருக்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும் அல்லது ஆசீர்வதிக்க வேண்டும். ‘நலமறிய ஆவல்’ என்று எழுத வேண்டும். எவ்வளவு கெட்ட செய்தியாக இருந்தாலும், "இங்கு அனைவரும் க்ஷேமம்" என்றுதான் தொடங்குவோம்.

​அக்காலத்தில் குடும்பங்களுக்கு இடையேயான ஒரே தொடர்பாடலே (Communication) தபால்தான்.

​தபால் கார்டுகளில் இண்டு இடுக்கு விடாமல், போஸ்ட் ஆபீஸ் சீல் அடிக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு, மீதி எல்லா இடங்களிலும் எழுதுவோம். பி.கு செருகல் தனிக்கதை.இப்போது Font size என்கிறார்களே... எங்கள் எழுத்தின் அளவிற்கு முன் அதெல்லாம் ஒன்றுமே இல்லை! கடிதம் முடிய முடிய எழுத்தின் அளவும் சுருங்கி கொண்டே வரும்.

​கடிதம் முடியும் போது "வேலும் மயிலும் துணை" என்றே முடியும். சில புரட்சியாளர்கள் "கடவுள் துணை" என்பார்கள்.

​இந்த முறை அநேகமாகக் எல்லாச் சாதாரணக் கடிதங்களிலும் பின்பற்றப்படும்.

​அன்றைக்குத் தபால்காரர் ஒரு காவல் தெய்வம் மாதிரி. தபால்காரர் அன்று ஊருக்குள் வரவில்லை என்றால், ஊரே பதற்றமாகிவிடும். ஆசிரியர்களும் தபால் நிலைய ஊழியர்களும் ஊருக்கே சொந்தக்காரர்கள் போல இருந்த காலம் அது.

​கார்டு ஒரு அணா; இன்லேண்ட் (Inland letter) 15 காசு. வசதி உள்ளவர்கள் இன்லேண்டில் எழுத, நாங்கள் கார்டு பக்கமே நிற்போம். பள்ளிக்கூட தேர்வு முடிவுகள் கூடக் கார்டில்தான் வரும். மாணவன் பாஸா, ஃபெயிலா என்பது ஊருக்கே தெரிந்துவிடும்!

​பழைய கடிதங்கள் ஒரு கம்பியில் செருகப்பட்டு, பல ஆண்டுகள் கூடத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கும். Trash என்ற பேச்சே கிடையாது.

​கண் முன்னே இந்த மாற்றம் எவ்வளவு வேகமாக நடந்துவிட்டது!

​வரலாற்றில் புகழ்பெற்ற பல கடிதங்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள், அண்ணாதுரையின் கடிதங்கள், கருணாநிதியின் கடிதங்கள், அரவிந்தரின் கடிதங்கள், கு.ப.ரா.வின் கடிதங்கள் எனப் பலவற்றை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

​நான் எழுதிய முதல் கடிதம் எதுவென்று எனக்கு நினைவில் இல்லை. "As I am suffering from fever, I request you to grant me one day leave..." என்று வகுப்பு ஆசிரியருக்கு எழுதியதுதான் மங்கலாக நினைவிருக்கிறது. அதைப் புத்தகமாக்க முடியாது.

இந்தக் காலக் கடிதம் (மெசேஜ்) ஒன்று:

"Hi da, I gt apntd in infos. 26lpa. TBH, in Tldr I dint expd dis. Les clbrte in a prty. Ayavnt tld yet 2mi gf."

என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா?"

Hi da, I got appointed in Infosys. 26 Lakhs per annum. To be honest, in TL;DR (Too Long; Didn't Read / சுருக்கமாகச் சொன்னால்), I didn't expect this. Let's celebrate in a party. I haven't told yet to my girlfriend."

தமிழில் இதன் பொருள்:

"ஹாய் டா! எனக்கு இன்ஃபோசிஸில் வேலை கிடைச்சிருச்சு ஆண்டுக்கு 26 லட்சம் சம்பளம்! உண்மையச் சொல்லணும்னா, சுருக்கமாச் சொன்னா நான் இத எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பார்ட்டி வச்சு கொண்டாடுவோம்! இதப்பத்தி நான் இன்னும் என் கேர்ள்ஃபிரண்டிட்ட (காதலியிடம்) கூடச் சொல்லல."