முதியோர் இல்லங்கள்:
இன்றைய தேதியில், "முதியோர் இல்லம்" சக்கை போடு போடும் ஒரு பிசினஸ். கடந்த ஆறு மாதங்களாக முதியோர் இல்லம் தேடிக் கொண்டிருப்பவர்களோடு தொடர்பில் இருப்பதால், பல ஆழமான விஷயங்கள் தெரியவருகின்றன. சற்று வசதியான விடுதிகள் மாதத்திற்கு ₹50,000 வரை வசூல் செய்கிறார்கள். இது இன்றைய தேதிக்கான கட்டணம். அடுத்தடுத்த ஆண்டுகளில், வருடா வருடம் 10% உயர்த்தப்படும். மருத்துவச் செலவுகள் தனி. இது சாதாரண மக்களுக்கு எப்படி கட்டுப்படியாகிறது என்று புரியவில்லை. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் கேள்விப்பட்டிராத பிசினஸ் இது. அனாதைகளைத் தவிர, சண்டையோ-சமாதானமோ பெரியவர்கள் ரோட்டுக்கு வந்ததில்லை; விரட்டப்பட்டதும் இல்லை.
முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் யார்?
சமீபத்தில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கூறிய கருத்து நினைவுக்கு வருகிறது:
"முதியோர் இல்லங்களில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.
- தங்கள் சொத்து முழுவதும் பிள்ளைகளுக்குத்தான் என்று நினைத்து, அவசரப்பட்டு சொத்துகளைப் பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு, பின்னர் கைவிடப்பட்டவர்கள்.
- பிள்ளைகள் மற்றும் மருமகளிடம் அனுசரித்துப் போகாமல், அவர்களின் குடும்பப் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிட்டு, எதற்கும் விட்டுக்கொடுக்காமல் இருந்தவர்கள்."
பெற்றோர்களுக்கு தேவை விவேகம்!
பிள்ளைகள் மீது பாசம் காட்டுங்கள்; சொத்துக்களை பிரித்துக் கொடுங்கள்; ஆனால் அந்தப் பாசத்தில் உங்கள் எதிர்காலப் பாதுகாப்பை இழந்துவிடாதீர்கள். சொத்தைக் கொடுப்பது தவறல்ல, ஆனால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளாமல் கொடுப்பதுதான் தவறு. வயதான காலத்திற்குத் தேவையான பொருளாதாரப் பாதுகாப்பை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். பாசம் இருக்கட்டும்... அதனுடன் கொஞ்சம் விவேகமும் இருக்கட்டும்!
பிள்ளைகளுக்குத் திருமணமாகி தனிக்குடும்பமாக வாழத் தொடங்கிய பிறகு, அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ விடுங்கள். ஒவ்வொரு முடிவிலும் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? ஆலோசனை கேட்டால் மட்டும் சொல்லுங்கள்; அதுவும் பட்டும் படாமலும்! கருத்து கேட்கவில்லையா? அமைதியாக இருங்கள். அனுசரித்துப் போவது அவமானம் அல்ல. It's their life. தேவையில்லாத சண்டையைத் தவிர்ப்பது மிகப்பெரிய அறிவு.
தலைமுறை இடைவெளி (Generation Gap):
தலைமுறை இடைவெளி எப்போதும் இருப்பதுதான். ஆனால், வேறு எந்தக் காலத்தையும் விட இப்போது இது பிரம்மாண்டமாக இருக்கிறது.
பெரிசுகளே! அவர்கள் லேட்டாகத் தூங்குவார்கள், லேட்டாக எழுவார்கள். Swiggy ஆர்டர்கள் பல வரும். 'Heat and Eat' உணவுகள் சமையலறையை ஆக்கிரமிக்கும். Reels ஓயாமல் பார்ப்பார்கள்; பத்து நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்தி ஒன்றைப் பார்க்கவோ கேட்கவோ மாட்டார்கள். அதிகமாக ஈகோ பார்ப்பார்கள். இவையெல்லாம் கால மாற்றங்கள்; ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் இப்படித்தான் இருக்கப் போகிறது. இதற்காக வெகுண்டு எழுந்து சண்டைக்கு நிற்கக் கூடாது.
அவர்களைத் தொந்தரவு செய்யாமல், உங்களுக்குப் பிடித்தவற்றை நீங்கள் சமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்திற்குத் தூங்கி எழலாம்; அவர்கள் ஆட்சேபிக்க மாட்டார்கள். முதியோர் இல்லங்களில் போய்ப் புதியவர்களிடம் அனுசரித்துப் போகும்போது, சொந்தப் பையன் வீட்டில் அனுசரிக்க மாட்டீர்களா?
உங்களது உடல் சக்திக்கு மீறிய வேலைகளை உங்கள் மீது திணித்தால், "இயலாது" என்று நேராகச் சொல்லிவிடுங்கள். முணுமுணுப்பதை விட இது நல்ல தேர்வு. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துக்கொள்ளட்டும், பார்ட்டி செய்யட்டும்; அவர்களின் நட்பு வட்டம் அவர்களின் தேர்வு. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்.
பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள்!
நீங்கள் ஜனித்ததே அவர்களால்! உங்களை வளர்ப்பதற்காக எத்தனை இரவுகளைத் தூக்கமின்றி கழித்திருப்பார்கள்? உங்களுக்காக எத்தனை ஆசைகளை விட்டுக்கொடுத்திருப்பார்கள்? இன்று அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பதற்காக, "அவர்கள் சுமை" என்று நினைக்காதீர்கள்.
நேற்று நீங்கள் அவர்களின் விரலைப் பிடித்து நடந்தீர்கள்; நாளை அவர்களுக்கு உங்கள் கை தேவைப்படலாம். அவர்களுக்குப் பணம் மட்டுமே தேவையில்லை... ஒரு அன்பான வார்த்தை, ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரு மரியாதையான அணுகுமுறை, “நான் இருக்கிறேன்” என்ற நம்பிக்கை! அவ்வளவே!
குடும்பம் சிதைவதற்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. சின்னச் சின்ன ஈகோ... “நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?” என்ற பிடிவாதம்... இவை போதும். அதேபோல் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றவும் பெரிய விஷயங்கள் தேவையில்லை. ஒரு சிறிய அன்பு, ஒரு மன்னிப்பு, ஒரு விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மனம்... இவை போதும்!
சொத்தைப் பாதுகாப்போம்... உறவுகளை அதைவிட அதிகமாகப் பாதுகாப்போம்!
Let wisdom prevail!