Monday, May 30, 2011

குழந்தைகளும் - தொலைக்காட்சிப் பெட்டியும்

இந்த கோடை விடுமுறைக்கு உறவினரின் குழந்தைகள் வந்திருந்தனர்.
இது எல்லோருடைய இல்லத்திலும் நடப்பது தானே எண்கிறீர்களா? 
ஒருமாதம் வீட்டில் குழந்தைகள் இருந்ததாலும், அவர்கள் கூடவே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாலும், இக்காலத்திய குழந்தைகளின் போக்கு குறித்து, நெருங்கி பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது.

எக்காலத்திலும் விடுமுறை என்றதும் பிள்ளைகள், உறவினர் வீடுகளுக்கு செல்வது வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது என்றாலும், விடுமுறையை குழந்தைகள் எதிர் நோக்கும் விதமும், விடுமுறையை கழிக்கும் விதமும், அவர்கள்து தினசரி நடவடிகைகளும் சற்றே மிரள வைகின்றன. நண்பர்ளுடன் பேசிப் பார்த்ததில், அவர்களும் கிட்டத்தட்ட இதே அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள். பிள்ளைகளின் நாட்களை டி.வி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் ஆகியவை நீக்கமற பங்கிட்டுக் கொள்கின்றன.

இது தலைமுறை இடைவெளியின் கோளாறா அல்லது உண்மையாகவே பிள்ளைகளின் நடவடிக்கைகள் திருத்தப்பட வேண்டுமா என்பதை வாசகர்கள் தீர்மாணிக்கலாம்.


1.  காலையில் எழுந்ததும் டூத் பிரஷை தேடுகிறார்களோ இல்லையோ, டி.வி ரிமோட்டினை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.  அதுவும் இக் காலத்தில் இந்த "பெட்டியை" படுக்கை அறையில் வேறு வைத்து விடுகிறார்களா? எந்த நேரமும் படுத்த படுக்கையாய் ஏதாவது ஒரு கார்ட்டூன் சேனலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் காலத்தில் இருந்த பம்பரம், கோலி, பச்சை தாண்டல், சடுகுடு, அடிபந்து,கில்லி போன்ற 'பத்தாம் பசலித்தனமான' விளையாட்டுக்கள் வேண்டாம்.  நவீன விளையாட்டுக்களையாவது விளையாடலாமல்லவா? பிள்ளைகள் என்றால் ஓடி ஆடி விளையாட வேண்டாமா?

டி.வி, குழந்தைகள் பால் ஏற்படுத்தும் விரும்பத்தகாத விளைவுகள் பற்றி பெற்றோர்களுக்கு அவசியம் பாடம் எடுத்தாக வேண்டும்.  (அவர்களே சீரியல்களில் மூழ்கிக் கிடந்தால் விமோசனமில்லை). 


சராசரியாக குழந்தைகள் 2 மணி நேரம் டி.வி பார்ப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.  மேலும் ஒரு மணி நேரம் வீடியோ கேமோ அல்லது கம்ப்யூட்டரில் கேமோ பார்க்கிறார்கள்.

உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும், துரு துருப்பாகவும் இருக்க வேண்டிய நேரத்தையும், நண்பர்களுன் விளையாடும் நேரத்தையும், பெற்றோர்களுடன் இருக்க வேண்டிய நேரத்தையும் டி.வி எடுத்துக் கொள்கிறது.

இந்த பெட்டி சிறந்த ஆசிரியராகவும், பொழுது போக்கு கருவியாகவும் உள்ளது தான். ஆணால் நல்லதை விட இது செய்யும் கெடுதலே அதிகமாக உள்ளது.

எனவே டி.வி யை பார்க்கும் விதத்தினை கட்டுப்படுத்துவது அவசியமா கிறது.

வண்முறை:

பல கார்ட்டூன் தொடர்கள், "நல்லவர்களை" காப்பாற்றுவதற்காக என்ற பெயரில், வன்முறைக் காட்சிகளையே தொடர்ந்து காட்டுகின்றன.  இது குழந்தைகள் பால் மாற்றமுடியாத, குண ரீதியான, தாக்கத்திய ஏற்படுத்தியே தீரும். என்னதான அம்மாககளும், அப்பாக்களும் பிறரை தாக்குவது தவறு என சொல்லிக் கொடுத்தாலும், இந்த டி.வி க்கள் 'நல்லவன்' அவ்வாறு செய்வது தவறில்லை என வற்புறுத்தி சொல்லிக் கொடுக்கின்றன. இந்த "டி.வி நல்லவர்கள்",    "தீயவர்கள்" மேல் செலுத்திடும் வன்முறை குழந்தைகளை ஒன்று பயமுறுத்துகின்றன அல்லது அவர்களையே வன்முறையாளராக மாற்றி விடுகின்றன.  ஏனெனில் பிள்ளைகள் fantasy -க்கும் reality-க்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள இயலாத வயதினர்.


உடல் பருமனாதல் மற்றும் ஆரோக்கியம்:

விடாமல் டி.வி பார்த்தல், உடல் நலத்தை பாதித்து,   சிறு வயதிலேயே பருமனாகி விடுகின்றனர். பணம் ஒன்றையே நோக்கமாக கொண்ட வியாபார நிறுவனங்கள், நிகழ்ச்சிகளினூடே வரும் விளம்பரங்கள் மூலம், பிள்ளைகளை உடல் நலக் கேடான உணவுகளை (ஜங்க் ஃபுட்ஸ்) உண்ணுமாறு வற்புறுத்துகின்றன.  சிப்ஸ், பர்கர், பீட்ஸா, ஒன்றுக்கும் உதவாத 'கோலா' பாணங்கள் - இவைகளை உதாரணமாகச் சொல்லலாம். 

அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள் சுறுசுறுப்பின்றியும், நொறுக்குத் தீனி பிரியர்களாகவுமே இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.  இவற்றைப் பற்றியெல்லாம் பத்திரிக்கைகளில் விபரமாக வந்துள்ளன. 

சரி..  இவற்றை தடுப்பது எப்படி?

1. டி.வி பார்க்கும் நேரத்தினை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.
    (ஒரு நாளைக்கு 30 நிமிடம் தான்)

2. குழந்தைகள் அறையினை,  புத்தகங்கள், puzzles, board games ஆகியவற்றால் 
    நிரப்பலாம்.    அவற்றை பயன் படுத்த உற்சாகப்படுத்தலாம்.

3. டி.வி யினை படுக்கை அறையினை விட்டு வெளியேற்ற வேண்டும்.

4. சாப்பிடும் போது, ஹோம் வொர்க்- போது டி.வி.க்கு ஆஃப்.

5. வாரம் ஒரு நாளாவது 'டி.வி இல்லாத நாளாக' இருக்க வேண்டும். அன்று 
    'ஸ்டேடியம்',        'ஸ்விம்மிங் பூல்' எங்காவது செல்லலாம்.

6.  பெற்றோர்கள்ளே டி.வி முன் பழி கிடக்காமல் 'உதாரணமாக' இருந்து 
     காட்டலாம்.

7. குழந்தைகளுடன் டி.வி.  பற்றி பேசுங்கள். நிதானமாக. ஆதரவாக. 
    பொறுமையாக,     புரியும்படியாக. (டி.வி பார்க்காதே என காட்டுக் 
     கத்தலாக அல்ல)

8. உபயோகமான புரோகிராம்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் 
    கொடுங்கள் - கூட இருந்து.

9. அவர்களுடன் விளையாடுங்கள். கூடுமானல் வெளியே.

10. குழந்தைகள் முன்னால், பிறரிடம் பேசும்போது, என் குழந்தைகள் டி.வி 
     பார்ப்பதை    விரும்புவதில்லை என் பெருமையாகச் சொல்லுங்கள் - 
     அவர்கள் காதில் விழும்படியாக.

----

Friday, May 27, 2011

'சமச்சீர் கல்வி'

பதவிக்கு வந்திருக்கும் புதிய அரசு 'சமச்சீர் கல்வி' திட்டத்தினை கிடப்பில் போட்டுள்ளது. இது குறித்து வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டுள்ளன. ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி திட்டத்தைப் பரிசீலிப்போம் என்று ஜெயலலிதா முன்பே சொல்லியிருக்க வேண்டும். இதன் மூலம் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களை ஓரளவாவது தவிர்த்திருக்கலாம்.  தனியார் நிறுவனங்கள் புதிய பாடத்திட்டத்தின் படி அமைந்த நூல்களுக்கு உரை தயார் செய்து, அவற்றை மாணவர்கள் பலரும் வாங்கிவிட்டனர். அரசு, 200 கோடி செலவழித்து, புதிய பாடத்திட்டத்தின் படி, பாடப் புத்தகங்களையும் அச்சடித்து விட்டது.   வினியோகம் மட்டும் தான் பாக்கி. இந்த கட்டத்தில், திட்டத்தினை நிறுத்துவதால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு?


மெட்ரிக் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்திருக்கும் பெற்றோர்களுக்கு இது பற்றிய சரியான புரிதல் உள்ளதா என்பது சந்தேகம்.  அவர்கள், மேம்போக்காக, படிப்பின் தரத்தை அரசு குறைத்து விட்டதாகத் தான் எண்ணுகிறார்கள். இவர்களுக்கு matric,  ஸ்டேட் போர்ட்  படிப்பின் குறைகளும் தெரியாது, சமச்சீரில் அந்தக் குறை நீக்கப்பட்டிருக்குமா, இருக்காதா எனவும் தெரியாது. பொதுப்படையாக அது கல்வியின் தரத்தைக் குறைத்து விட்டனர் எனவும், இதன் மூலம், அரசுப் பள்ளி களையும் தனியார் பள்ளிகளையும் ஒரே பாடத் திட்டத்தில் இணைக்கிறது என்று மட்டுமே தெரியும். அரசு பெற்றோர்களுக்கு சமச்சீர் கல்வி குறித்த எந்த விழிப்புணர்வையும் தரவே இல்லை. அதனால் அதை அமுல்படுத்தாமை குறித்த கவலை அவர்களுக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. 

ஓரளவு பணம் செலவழிக்கத்  தயாரான எல்லா பெற்றோர்களும் மெட்ரிக் பள்ளிகளையே நாடிச் செல்கின்றனர். இதனால் நகரங்களில் உள்ள ஸ்டேட் போர்ட் பள்ளிகளில் இயல்பாகவே , ஓரளவு வசதி இல்லாத வர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது உண்மையா, இல்லையா என்பதை பள்ளிகளை, நேரில் போய்ப் பார்த்தாலோ அல்லது ஆசிரிய நண்பர்களிடம் பேசினாலோ தெரிந்து கொள்ளலாம்.


விஷயத்திற்கு வருவோம்.  ஸ்டேட்போர்ட்,மெட்ரிக்குலேஷன் .... என பல்வேறு பாடத்திட்டங்கள், நம் மாநிலத்தில் இருக்கிறது.  நம்மவர்களுக்கு அனைத்தையும் அரசியலாக்கி, சார்புடன் (அல்லது) எதிர்த்துப் பேசியாகவேண்டும். இல்லையெனில் "பிழைப்பு" நடக்காது.  இது என்ன நோக்கு என புரியவில்லை.  உண்மை என்பது மக்களிடமிருந்து ஒளித்தே வைக்கப்படுகிறது. மக்களை உசுப்பேற்றி,  மொழி வெறி கொள்ளச் செய்வது நம் அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை. (உ-ம் 1967 இந்தி எதிர்ப்பு போராட்டம். இதனால் மாணவ குலம் அடைந்த நட்டத்தினை யாராவது எண்ணிப் பார்த்தார்களா? ஆனால் அனைத்து அரசியல்வாதி களின் குழந்தைகளும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஹிந்தி படித்துக் கொண்டுள்ளர்). எனவே, நாம் பாசாங்குகளையும், உள்ளூர் அரசியலையும் விட்டுவிட்டு நேர்மையாக இவ்விஷயத்தை பார்ப்போம். 

குறைந்தபட்சமாக, ஒரே மாநிலத்தில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே சீரான பாடத்திட்டத்தினை உறுதி செய்வதில் என்ன தவறு?  மாணவர்களிடையே கற்றுக் கொள்ளும் திறன் மாறுபடலாம்.  ஆணால் கற்றுக் கொடுப்பதில் 'பாரபட்சம்' இருப்பதை சகிப்பது எப்படி? சமச்சீர்க் கல்விமுறை என்பது சமுதாய மாற்ற முறைகளில் ஒன்று அல்லவா? சமச்சீர் கல்வி ஒரு முழுமையான தீர்வல்ல, எனினும், ஒரு நல்ல துவக்கம். 


ஸ்டேட்போர்டை விட 'மெட்ரிக்' பாடத்திட்டங்கள் சற்று தரம் கூடியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஸ்டேட் போர்ட் சிலபஸில் பயிலும் மாணவர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதை சமூக உணர்வுள்ள எவரும் எற்றுக் கொள்ள மாட்டார்கள்.  எனவே இது சரி செய்யப்பட வேண்டிய விஷயம்தான் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது.


இக் கோளாறினை சரி செய்வது என்பது,  எப்படி இருக்க வேண்டும்?  இதனை அணுகும் போது இரண்டு விஷயங்களைக்  கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ( 1   )         பொதுவான சிலபஸ் - சமச்சீர் பாடத்திட்டம்.

(2) பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் தகுதி, பள்ளிகளில் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள், அரசின் கண்காணிப்பு, கல்விக் கட்டணம் பற்றியது.

ஆனால் நடந்தது என்ன? 

தற்போது பிரச்சினையில் இருக்கும் முதலாவதை பார்ப்போம். புதிய பாடத்திட்டத்தினை உருவாக்கும் போது, இக்கால மாணவர்கள், போட்டி நிறைந்த உலகத்தை சந்திக்கப் போகிறார்கள் என்பதனையும், சம கால கல்விப் போக்கினயும் (குறைந்த பட்சமாக மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தினை) கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக  சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களை.   10+2 புத்தகங்களைவிட சி.பி.எஸ்.இ 10+2 புத்தகங்களில் விஷயம் தெளிவாகவும், நல்ல நடையிலும் விளக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. எல்லாவிதமான நுழைவுத் தேர்வுகளும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தங்களின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்க்கப்படுகின்றன.  சமச்சீர் கல்வியாளர்கள் புதிய பாடத்திட்டத்தினை வகுக்கும்போது சி.பி.எஸ்.இ சிலபஸை கவனத்திற் கொண்டாற்போல தெரியவில்லை. மாறாக மெட்ரிக் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, ஸ்டேட்போர்ட் அதிகப்படுத்தப் பட்டதாகச் சொல்கிறார்கள்.

 (அடிப்படையில் ஸ்டேட் போர்ட் சிலபஸ் மனப்பாடம் செய்யும் முறையினையும்,  சி.பி.எஸ்.இ சிலபஸ் மானவர்களை புரிந்து கொள்ளச் செய்யும் முறையினையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என விபரமறிந்த ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்)

எனவே புதிய பாடத்திட்டம் எந்த அளவிற்கு கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது என தெளிவாக்கப்படவில்லை. எப்படியாயினும் மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்க்கத்தான் செய்யும். ஏனெனில் அது அவர்களது 'தொழிலை' பாதிக்கும்.  நாங்கள் 'மற்றவர்களை விட ஒசத்தி' என்பது தானே அவர்களது தொழிலின் அடி நாதம்?

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஆகியவை ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தையும், தனியார் மெட்ரிக் பள்ளிகள் மெட்ரிக் என்ற பாடத்திட்டமும் (இதுவும் அரசால் உருவாக்கப்பட்டதே) பின்பற்றிவந்தன. மெட்ரிக் பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தைவிட தரத்தில் சற்று உயர்ந்ததாக இருந்தது.  ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தைத் உயர்த்துவதை விட்டு,  இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கும்போது, மெட்ரிக் பாடத்திட்டம் முன்பு இருந்ததைவிட தரம் குறைவாக ஆக்கும் முயற்சி நடைபெற்றதாக மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கருதினர். இதுதான் பிரச்னைக்கு ஒரு காரணம்.  மெட்ரிக் பள்ளிகளை முந்தய அரசு கட்டணக் கட்டுப்பாடு என ஆரம்பித்து, சிலபஸில் கை வைத்தது. அதாவது சற்றேரக் குறைய மிரட்டியது. புதிய சிலபஸை முடிவெடுக்கு முன் கல்வியில் பெரும்பான்மை பங்கு வகிக்கும் matric பள்ளிகளிடம் முறையாக கலந்தாலோசிக்காமல் செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இது உண்மையாயின்,  அரசு செயலாற்றியது பெரும் தவறு. முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம், சமசீர் கல்வியில் KG க்கான பாடத் திட்டங்கள் இல்லை. சமசீர் யின் கல்விபடி KG,  அரசு அங்கீகாரம் பெறாது.  இந்த கால சூழ் நிலையில் KG என்பது புறக்கணிக்கக் கூடிய ஒன்றா?


மேலும், புதிய பாடப் புத்தகங்கள் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டது போன்றுதானே இருந்தது. பலர் பாடதிட்டங்களை பார்த்துவிட்டு அதில் இருக்கும் பிழைகள், தரத்தினப் பற்றி எழுதியிருந்தனர். அதைப்பார்த்தால் பாடங்கள் மிகவும் மோசமாக இருப்பது போல் இருந்ததே. மேலும், இதில் அரசியலைப் புகுத்தி, கலைஞர் போற்றி புராணங்களும் இருந்ததாகச் சொல்கிறார்கள். 

எனவே "சமச்சீர்கல்வி" உறுதி செய்யப்படும்போதே, பாடத்திட்டங்கள், கல்வியாளர்களயும், சமூக இயலாளர்களையும் கலந்து ஆலோசித்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இனி இரண்டாவது விஷயத்தைப் பார்போம்:

நல்ல தரத்தோடு பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருந்தாலும் பெரும்பாலும் நகரின் சந்துபொந்துகளில் எல்லாம் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளே அதிகம்.  விந்தை என்னவெனில் இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில், மிகக் குறைவான திறனோடுதான் கற்றுக் கொடுக்கின்றனர். பிற வசதிகள் எனப் பார்த்தால், மைதானம் கூட இல்லாத, மிகக் குறைவான இடத்தில், காற்றோட்டம் கூட இல்லாத வகுப்புகளை வைத்துக்கொண்டு, "தொழில்" நடத்துகின்றனர். மெட்ரிக் பள்ளிகளில் படிக்கவைப்பது தான் பெருமைக்குரிய விஷயம் என்னும் நம் மக்களின் மணப்போக்கு ஒரு பிரதான காரணம்.  ஆணால் பெரும்பாலும் மெட்ரிக் பள்ளிகள் 90% பாஸ் ரிசல்ட் கொடுக்கின்றனர். 

இதற்கு மாறாக அரசுப் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் 'சம்பளம்' என்ன?  அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைகள் இருந்தாலும், பெருவாரியான பள்ளிகள் மைதானத்துடனும், நல்ல காற்றோத்துடனும், ஓரளவு வசதியாகத்தான்இருக்கின்றன.  இப்பள்ளிகளின் பாஸ் பர்ஸெண்டேஜ் என்ன?  30%க்கும் 70% க்கும் இடையேதானே உள்ளது! 

இந்த முரண் ஆச்சரியமளிக்கிறது!  அற்ப சம்பள அசிரியர்கள் 90% பாஸ் காண்பிக்க, கனத்த சம்பளம் பெறும் ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் பாஸ் பர்ஸெண்டேஜ் என்ன?

கோளாறு அரசு பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பவர்களிடையேதான்  அல்லவா?

என்ன செய்யலாம்?

(1) கோடிக் கணக்கில் புத்தகங்களை அடித்துவிட்டு, திடீரென சமச்சீர் திட்டத்தினை, மாற்று ஏற்பாடு ஏதும் இன்றி நிறுத்துவது சரியாகப் படவில்லை.  மாறாக, அரசியல் உள் நோக்கத்துடன் உள்ள அல்லது தேவையற்ற பாடங்களை நீக்கி விட்டு, இப்புத்தகங்களையே உபயோகிக்கலாம்.  அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், அனைத்து தரப்பும் (உள்ளூர் அரசியல் சார்பு அற்ற) கொண்ட, சமூக உணர்வு கொண்ட ஒரு கமிட்டி மூலம் புதிய பாடத்திட்டத்தினை,தற்போதுள்ள பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளைப் போக்கிவிட்டு,சி.பி.எஸ்.இ சிலபஸினை ஒட்டி தயாரிக்கலாம். 

(2) இது தவிர தனியார் பள்ளிகள் குறித்து சரியான வழிகாட்டுதல் நெறிகள் உருவாக்கப்பட்டு (லேப், மைதானம், ஆசிரியர்களின் தரம், பாதுகாப்பு போன்றவை), அவை முறையாக பின்பற்றப் படுகிறதா என ஒரு நேர்மையான கண்காணிப்பு இருக்க வேண்டும். 

(3) அரசு பள்ளிகளில் இருக்கும் வேகன்ஸிகளை நிரப்பவும், சரியான ரிசல்ட் கொடுக்க வில்லையெனில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயங்கக் கூடாது


  அரசியல்வாதிகளுக்கிடையே மாணவர்கள் சிக்கிக் கொள்வது பரிதாபம்!


Thursday, May 19, 2011

நோயுற்றவனின் தினங்கள்

இரு திணங்களாக உட்கார்ந்துவிட்டால் எழவும், எழுந்துவிட்டால் உட்காரவும் இயலாமல் - யாரோ முதுகுத்தண்டில் கத்தியால் குத்துவது போல இம்சை. இதற்காக ஆஸ்பத்திரி விஜயம்.
நோயுற்று படுக்கையில் விழுந்துகிடந்த அனுபவத்தினை பெறாதவர் யார்? நோயாளியின் பகல் பொழுதுகள் மிக நீளமானவை. ராப்பொழுதுகள் கொடுமை யானவை.


நோயாளிகளின் தினங்கள் டாக்டரின் கன்ஸல்டிங் ரூமில் துவங்குகிறது. நாம் விரும்பும் டாக்டரின் 'அப்பாயின்மெண்ட்' கிடைப்பது லாட்டரி போல.  
கிளினிக்கில் டோக்கன் வழங்குபவர், அனேகமாக ஒரு பெண்மணி யாகத்தான் இருப்பர். 


"பாருங்கம்மா.. என்னால் நிற்க முடியவில்லை.. தலை சுற்றுகிறாற்போல இருக்கிறது... கொஞ்சம் சீக்கிரம்......" 


நமது புராணம் எதுவும் அவள் காதில் விழாது. 


"டோக்கன் நெம்பர் 32... போய் உட்காருங்க...கன்ஸல்ட்டிங்க ஃபீஸை இப்பவே கட்டிடுங்க..."


வேறு வழியில்லை.. உள்ளே போய்விட்டு வரும் 31 பேரையும் எண்ணிக் கொண்டு பொறுமையற்று கிடக்க வேண்டியது தான். உங்களது 'டர்ன்' வரும்போது, வேறு யாராவது வி.ஐ.பி பேஷண்டோ அல்லது ஒரு மெடிக்கல் 'ரெப்' போ வராமலிருந்தால் அன்றைய தினம் அதிர்ஷ்ட தினம்.


டாக்டரின் தரிசனம் கிடைத்ததும், இவர் எதோ மாயம் செய்து வியாதியை குணமாக்கப் போகிறார் என்ற நம்பிக்கையுடன் வியாதியை சொல்ல ஆரம்பித்த உடண், அவர் பேடை எடுத்து எழுதுவார். சொன்னதை காதில் வாங்கினாரா சந்தேகம் வரும். ஆனால் அவர் எழுதுவது மருந்து பட்டியல்  அல்ல...   ஒரு பெரிய நாம் எடுக்க வேண்டிய 'டெஸ்ட்கள்' களின் பட்டியல். இதில் நமக்கு 'ஆப்ஷன்' ஏதுமில்லை. 


எக்ஸ்ரே, இரத்தம்,யூரின்,ஈ.ஸி.ஜி யூனிட்கள், ஸ்கேன் ரூம் -  யாவும் மருத்துவ மணையில் பல்வேறு இடங்களில் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும். ஒருவழியாக அங்கும் இங்கும் ஓடி, டெஸ்ட் ரிஸல்ட்களை எடுத்து கொண்டு வந்தால், டாக்டரை பார்க்க மீண்டும் ஒரு கியூ.


ஒருகணம்... ஒரே ஒரு கணம்தான் அந்த ரிஸல்ட்களை பார்ப்பார்.  விறு விறு வென மருந்து பட்டியல் எழுத ஆரம்பிப்பார். 


"சார்... எனக்கு என்ன பிரச்சினை?"  ஏன் இப்படி வலிக்கிறது?


"பார்ப்போம்..." இந்த மருந்தை ஒருவாரம் சாப்பிடுங்க...பெட் ரஸ்ட் எடுங்க..மறுபடியும் வந்து பாருங்க..!"


இது என்ன பதில்?


"ஏதும் சீரியஸான பிரச்சினையா?.. மருந்தில் சரியாகிவிடுமா?"


"அதான் மருந்து கொடுத்திருக்கேன் இல்ல... ஒரு வாரம் கழித்து பாப்போம்..."


"நெக்ஸ்ட்"


முடிந்தது கன்ஸல்டேஷன்.


வீட்டிற்கு திரும்பி வந்து, பகல் முழுதும், அம்மியின் அடியின் சுருண்டு கிடக்கும் பூரான் போல நாளெல்லாம் கட்டிலில் விழுந்து கிடப்பது நோயைவிட கொடுமையானது. நம்மை சுற்றி ஆரோக்கியர்கள் யாவரும் உண்டு, ஓடியாடிக் கொண்டிருக்க,  நாம் தாவரம் போல படுத்துக் கிடக்க வேண்டும். 


"ஹாட்பேக்கில் சாப்பாடு இருக்கு, தண்ணி பாட்டில், மருந்து வகையராக்கள் பக்கத்தில் இருக்கு. சாப்பிட்டு தூங்குங்கள்" -  மணைவி தன் 'கடைமைகளை' ஆற்றிவிட்டு புறப்பட்டுவிடுவாள்.  தொல்லை பண்ணாதே, பேசாமல் கிட என்று இதற்கு பொருள். 


தவழ்ந்து-தவழந்து போய் மெல்ல டி.வி யினைப் போட்டால் அனைத்து சேனல்களிலும் நீக்கமற வலிப்பு நடனங்கள் அல்லது விந்தை மனிதர்கள் உலவும் வினோத சீரியல்கள். இவற்றையா மக்கள் சலிப்பின்றி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்?


கடிகாரத்தை அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் ஐந்து நிமிடம் நகர்ந்திருக்காது.  பொழுதைப் போக்குவது என்பது இவ்வளவு சிரமமான காரியமா?


ஒருவாரம் கழித்து,  மீண்டும் டோக்கன், கியூ யாவற்றையும் கடந்து,  டாக்டரின் தரிசனம் பெற்று "சார்..முழுசும் சரியாகவில்லை...இன்னமும் வலி இருக்கத்தான் செய்கிறது....."


"அப்படியா..?" 


மேலும் சில டெஸ்ட்டுகளை எடுக்கச் சொல்லி லிஸ்ட் தயாராக, மிரண்டு போய,  இந்த வலியோடேயே காலத்தை தள்ளிவிட தீர்மாணித்து வீட்டிற்கு வந்து விட்டேன்.  


Health is Wealth  என்று சிறு வயதிலிருந்தே படித்தாலும் வயதாகும் போதுதான் இதன் முழுப் பொருள் விளங்குகிறது.


"ஆரோக்கியத்தின் அருமை - நோய்க்காலங்களில்"
==============================================================
(குறிப்பு:  10 நாள் கழித்து தானாகவே வலி குணமாகிவிட்டது)

Wednesday, May 11, 2011

எனக்கு ஒரு சந்தேகம்! (சும்மா சாம்பிள் தான்)

1. கல் தோண்றி - மண்தோன்றா...வரலாறு பேசும் தமிழ் நாட்டில்,  'டமிலே' தெரியாத 'தமிழ் திரை நாயகிகள்'  மட்டுமல்ல, உள்ளூர் 'ஜாக்பாட்'  டிற்கு வரும் நங்கையர்கள் கூட 'ஹாய்.. ஐயாம் வந்தனா..., ஹவுஸ் வொய்ஃப், கமிங் ஃப்ரம் சென்னை....' என்றுதான் சொல்லவேண்டும். "வணக்கம்...என் பெயர் வந்தனா, இல்லத்தரசி..." என்று சொன்னால் டி.வி ஸ்டேஷனில் வெளியே அனுப்பி விடுவார்களாம். சரியா தவறா?


2. தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் - செய்தி வாசிப்பவர்கள் வேலைக்கு 'ற்','ர','ண','ன',,ந','ல','ள','ழ'  - எழுத்துக்களை சரியாக உச்சரித்துவிட்டால் வேலை தரமாட்டார்கள் என்கிறேன். என்ன சொல்கிறீகள்?


3. 'பேசின் பிரிட்ஜ்' க்கு அப்பால், இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் தப்பு தப்பாகவேணும் 'இங்கிலீஷ்' பேசலாமே தவிர தமிழில் உரையாடக்கூடாது என சட்டம் இருக்கிறது என்கிறேன்.   மறுக்கப் போகிறீர்களா?


4. அடுத்த தேர்தலில் கெட்டி சட்னி, சாம்பார் போன்ற இலவச அறிவிப்புகள் இல்லையென்றால் அரசியல் கட்சிகளை 'தேர்தல் கமிஷன்' 'அங்கீகரிக்காது'  என்கிறேன். ஒத்துக் கொள்கிறீர்களா?


5. அலுவலகங்களில் 'ஜோல்னா பை' அனிந்து வந்தால் வேலை செய்ய வேண்டாம் என் சட்டம் கொண்டு வந்தால் தவறா?


6. திரை நாயகிகள் 'தலைமுடியினை' சதா அவிழ்த்துப் போட்டுக்கொள்ள வேண்டும்.     நாயகர்கள் 'ஷேவிங்' செய்யது கொள்ளக் கூடாது என்கிறேன் .. ஏதேனும் மாற்றுக் கருத்து உண்டா?


7. மேடையில் 25 பேர் உட்கார்ந்திருந்தாலும், பேச்சாளர்கள், அத்துணைபேரையும்' அவர்களே...அவர்களே...' என பட்டியலிட்டு விளித்தாகவேண்டடும்...சரியா?


8.மொபைல் வாங்குவதாக கணவு கண்டாலே 'டெலிபோண் கம்பணிகள்' அவருக்கு காசு கொடுக்கும்..சரியா?


9.தமிழ் நாட்டின் நெடுஞ்சாலைகளின் 'டோல் கேட் கட்டணம்' என்பது குறைந்த பட்சமாக எந்த வண்டியில் பயணப்படுகிறீர்களோ அந்த வண்டியின் விலை என நிர்ணயிக்கலாம் என்கிறேன். சம்மதமா?


10. டாக்டர்கள், கன்சல்டிங் ரூமில்,  உங்களுடன் மூன்று நிமிடம் பேசிவிட்டால் - அன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்ட்ட தினம்..சரியா? தவறா?

Tuesday, May 3, 2011

MAY DAY - BSNL


தொலைபேசித்துறை P&T இலாக்காவின் ஒரு அங்கமாக இருந்தது. 
பின் DOT ஆக மாறினோம். 

மாறி வரும் சூழ் நிலையில் DOT ஆக தொடர்வது இலாக்கா வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது என BSNL ஆக மாற்றப்பட்டோம்.. 

கடந்த இருபது ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாத அளவிற்கு, தொலைபேசி-தகவல் தொழில் நுட்பத்துறை அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. பேச்சு (VOICE)  ஒன்றே முக்கியமானதாக இருந்த நிலை போய் - டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் விளைவாக, VOICE என்பது, தகவல் தொழில் நுட்பத்தின் ஒரு 
சிறிய அங்கமாக மாறிவிட்டது. வங்கிகள், ரயில்வே போன்று - ஒரு துறை 
பாக்கி இல்லாமல் அனைத்து செக்டார்களும் "தகவல் தொழில் நுட்ப வலையில்"  இணைந்தன. 

இந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியினை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு,  மார்க்கட்டில் முதல் நிறுவனமாக இருந்திருக்க 
வேண்டிய BSNL -ன் நிலை என்ன?

கோளாறு எங்கே துவங்கியது?

தனியாளாக 'கோலோச்சிக் கொண்டிருந்த'   நாம், நமக்கு சற்றும் பழக்க 
மில்லாத 'போட்டிகளுக்கு மத்தியில் " வளர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவும் எப்படிப்பட்ட போட்டி? CUT THROAT COMPETITION  என்று சொல் வார்களே, அத்தகைய போட்டி.

இந்த கடுமையான போட்டியினை சந்திக்க நமது நிறுவனம் தயார் நிலையில் இல்லை !

நமது CMD -க்கள் எவரும் "மார்க்கட் ஸ்பெஷலிஸ்ட்" இல்லை!
மாறாக 'கோப்புகளில் ஊறிப்போனஅரசாங்க உயரதிகாரிகள்.

இவர்களின் தடித்த தோல்களுக்கு நாம் மார்க்கட்டை விட்டு 
வெளியேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லது மார்க்கட்டை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணரவே ஆண்டுகள் பல தேவைப்பட்டது!

CMD முதல் GM  வரை எவரும் BSNL-ஆட்கள் இல்லை!  இவர்களுக்கு நிறுவன வளர்ச்சியில் என்ன அக்கறை இருக்க முடியும்? 'விதுரன்'  போல வயிற்றுக்கு BSNL -ஐயும்,  விசுவாசத்தினை தனியாரிடமும் வைத்திருந் தார்கள். 

இவர்களுக்கு மார்க்கட் நுட்பங்களும்-அதன் மேலாண்மையும் பிடிபடவே இல்லை!

எதற்காக BSNL ஆக மாற்றப்பட்டோமோஅந்த நோக்கமே ஆட்சியாளர் களாலும்,  அதிகார வர்க்கத்தாலும் தோற்கடிக்கப்பட்டது. 

முடிவுகள் எடுப்பதில்-

டெண்டர்கள் விடுவதில்-  

வியாபார யுக்திகள் வகுப்பதில்-  

திட்டமிடுதலில் -

இருக்கும் Infra structure களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதில்  

-என அனைத்திலும் பின் தங்கினோம்.

நமது "ரெட் டேப்பிஸம்", ஊழல், ஊதாரித்தனம், பொறுப்பின்மை, குளறுபடியான திட்டங்கள்  - போன்றவை யாவும் நாம் "போட்டிகள் நிறைந்த சந்தைக் களத்தில்"  தோற்பதற்கு காரணமாயிற்று.

அனைத்து மட்டத்திலும் நமது பணிக் கலாச்சாரம் போட்டி நிலவும் சூழ் நிலையினை எதிர் கொள்ள போதுமானதாக இல்லை.

விளைவு...? 

BSNL மார்க்கட் ஷேர் (cell phone market) பதினைந்து சதவிகிதத்திற்கு வந்து விட்டது.

MTNL-மார்க்கட் ஷேர்  சொல்வதற்கே  மிகவும் சங்கடமாக உள்ளது! ஒரு சதத்திற்கும் கீழே!

இப்படியே கையாலாகாதவன் போல புலம்பப் போகிறோமா இல்லை
இல்லை நிலமைகளை திருப்பிப் போட முயற்சிக்கப் போகிறோமா?

காலம் கடந்து போய்விடவில்லை!

முதலில் நம்மால் முடியும் என நம்புவோம்!

150 ஆண்டுகளாக தொலைபேசி சேவை அளித்து வந்த நமக்கு
நேற்று வந்த கம்பெனிகளின் போட்டியினை சமாளிக்கத்தெரியாதா?
வேறு எல்லோரையும் விட நாம் மக்களை நன்கு அறிந்தவர்கள் அல்லவா?

நாம் நமது வல்லமைகளை நம்ப மறுக்கிறோம்.
நம்மாலும் செய்து காட்டமுடியும் என்பதை நம்ப வேண்டும்
மக்கள் இன்னமும் நம்மை விரும்புகிறார்கள்!

நாம்  உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் : 

BSNL - நிர்வாகத்தில் அரசியல் மற்றும் -மேல் மட்ட அதிகாரிகள் 
குறுக்கீடுகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்!

ITS -கள்  உள்ளே வரவேண்டும்-இல்லையனில், அவர்கள் மத்திய அரசாங்கத் திற்கே   திரும்பப் போய் தங்களது 'திறமை' களை காட்டட்டும்!

CMD -யாக நிபுணத்துவம் மிக்க - மார்க்கட் பொருளாதாரம் தெரிந்த, BSNL -க்கு விசுவாசமான  நபரை அமர்த்த வேண்டும்!

தனியார் நிறுவனங்களுக்கு சார்பாக செயல்படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு களையப்பட வேண்டும்!

அனைத்து நிலையிலான அதிகாரிகளும்-தொழிலாளர்களும் தங்களது  பணிக் காலாச்சாரத்தினை,  தற்காலத்தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். BSNL- ன் வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும்.

BSNL -லிடமிருந்து மத்திய அரசு பெற்ற ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் திரும்ப அளிக்கப்பட வெண்டும். நீக்கப்பட்ட ADC கட்டணங்கள், வெளி நாடுகளுக்கான கால்களின் கட்டனங்கள் BSNL -க்கு பாதகமில்லாத வகையில் முறைப்படுத்தப் படவேண்டும்! நமக்கு கொடுக்கப் படாத 7500 கோடிகளுக்கு நாம் செலுத்தி வரும் 14.5% அநியாய வட்டியினை ரத்து செய்ய வேண்டும்! இந்த கொடுக்கப் படாத கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாக BSNL சொல்வதை, DOT ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.  குறைந்த பட்சமாக இதைச் செய்தாலே நமது நட்டக் கணக்குகள் குறையும்.

காலத்திற்கேற்ற வியாபார தந்திரங்களை அனுசரிக்க வேண்டும்!

அடுத்த 'மே' தினத்தில் நமது "மார்க்கட் ஷேரினை" குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்திக் காட்ட வேண்டும்!

இதற்காக தேவைப்பட்டால் 'போராடவும்'  தயாராக வேண்டும்!

இதுவே இந்த "மேதினத்தில்"  நாம் மேற்கொள்ளவிருக்கும் சூளுரை!

அனைவருக்கும் நமது மாவட்டச் சங்கத்தின் மேதின வாழ்த்துக்கள்!!

Monday, May 2, 2011

சாய்பாபாவும் சர்ச்சைகளும்!!

சாய்பாபா மறைந்தார்.  காத்திருக்கும் 'வலையாளர்களும்'  'முற்போக்கு' எழுத்தாளர்களும், மாய்ந்து மாய்ந்து எழுத ஆரம்பித்து விட்டனர்.

இந்த கட்டுரைகள் மூன்று விதமாக பிரிக்கலாம்

(1) சாய்பாபா பித்தலாட்டக்காரர். பொய்யுரைப்பவர்.  இவரது   சாம்ராஜ்ஜியம் பெரும்பாலும் பொய், பித்தலாட்டம் போன்றவைமூலம் கட்டட்பட்டது! இவரது அற்புதங்கள் - அதாவது விபூதி, குங்குமத்தைக் காற்றிலிருந்து வரவழைத்து சாதாரணர்களுக்கும்,  லிங்கம், மோதிரம், தங்கத்தால் ஆன சங்கிலி போன்ற சிறு சிறு பொருள்களை வரவழைத்து காவஸ்கர், தெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள்முதல் பல சினிமா, அரசியல் பிரபலங்களும் தருவதுதான். இனி இந்த ட்ரஸ்டின் சொத்துக்கள் 'அம்போ' தான்.

(2)  இல்லை..இல்லை இவர் ஷீரடி சாய்ப்பாபாவின் மறுபிறவி.  அவதார புருஷன். இவர் மூலம் பல வியாதிகள் குணமடைந்தன. பக்தர்கள் ஆசீர்வதிக்கப் பட்டார்கள்.

(3) எது எப்படியோ...மக்களுக்கு பல நல்ல திட்டன்கள் தீட்டினார்.  நிறைவேற்றினார். ஊழல் இல்லை. கூடுமானவரை நல்லுபதேசங்கள் 
செய்தார்.  கொஞ்சம் பேராவது 'நல்ல மனிதாராக' மாறுவதற்கு முயற்சித்தார் அல்லவா? அது போதும்!


முதல் விதம் மிகவும் மேலோட்டமானது.  போலி-பித்தலாட்டம், காசு சேர்ந்துவிட்டது என்று ஒலிக்கும்போதே அதில் மறைந்திருக்கும் பொருள் 
என்னவென்றால், ‘நான் ரொம்ப விவரமானவன், ஏமாளி இல்லை, இவங்ககிட்ட எல்லாம் ஏமாற மாட்டேன்’ என்பதே!.  
இவர்கள்து கண்கள் சாய்பாபாவின் டிரஸ்ட்டில் உள்ள பணம்.

இரண்டாவது - பக்தி சார்ந்தது. உணர்வு பூர்வமானது.  எனவே விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை.

மூன்றாவது சற்று யோசிக்க வேண்டியது.

பாபாவிடம் பணம் சேர்ந்தது! உண்மைதான்! அணால் அதை வீட்டிற்கா எடுத்துச் சென்றார்?

அ)  எல்லா ஆன்மீகத்தேடல்களுக்கும் அடிப்படையான அமைதி அவரிடம் கிடைத்தது. 

ஆ) ஒழுக்கம். இதை மிக முக்கியமாக போதித்தார். அவரது பக்தர்களில் மதமாற்றம் செய்பவர்களையோ, வெடி குண்டு வன்முறை யாளர் களையோ காணமுடியாது. கூத்தாடிகள் மற்றும் அரசியல்வாதிகள் பின்னால் செல்லும் கூட்டம் நடந்துகொள்ளும் விதம் நாடறிந்தது தானே!. 

இ). சக மனிதருக்கு உபகாரம் செய்வது இவரால் குழைந்தப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப் படுகிறது.   மருத்துவ வசதிகள் யாவற்றிலும் பாபாவின் பக்தர்கள் நேரடியாக ஈடுபடுத்தப் பட்டனர். 

ஈ). எம்மதமும் சம்மதம் என்பது அவரது மற்றுமொரு வழிகாட்டுதல். மதங்களை மறுக்கவில்லை.ஆனால் இயைந்து இணைந்துவாழ வழியுறுத்தினார்/வழிகாட்டினார்.

உ) வேதங்கள்/பகவத்கீதை/யோகா போன்ற பண்டைய இந்தியாவின் ஆன்மீக வழிகளையே தன் பக்தர்களுக்கு கொண்டுசேர்த்தார்.

ஊ)  பொதுமக்களுக்கு சுகாதாரம்,  இலவச மருத்துவம், பள்ளிகள்/
கல்லூரிகள், குடி நீர் வசதிகள் போன்றவற்றை செய்து தந்தார்.

சுருக்கமாகச் சொன்னால் அவர் வித்தைகள் செய்திருக்கலாம். ஆனால் 
அவரால் யாரும் எதையும் இழக்கவில்லை.  சிலர் ஏதாவது பெற்றிருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்.  ஆன்மீகத்தின் மூலம் சில லட்சம் நல்ல குடிமகன்களை உருவாக்கினார்!

நான் இவர்பால் பக்தி கொண்டவரும் இல்லை! தூஷிப்பவனும் இல்லை.

எனது கேள்விகள் எல்லாம்:

அரசாங்கங்களும், அரசியல் வாதிகளும் தங்களுக்கு இடப்பட்ட
பணியினை / கடைமைகளை சரியாகச் செய்து விட்டால் "போலிச் 
சாமியார்களுக்கோ",  "நிஜச் சாமியார்கள்ளுக்கோ" தேவையிருக்காது தானே!

மருத்துவ வசதிகளும், குடி நீர்த்திட்டங்களுக்கும், கல்விக் கூடங்களுக்கும் அரசுகள் சாமியார்களை நாடுவது ஏன்? அவரிடமிருந்து இத்தகைய வசதிகளை பெறும்போதெல்லாம் இந்த 'முற்போக்கு வாதிகள்' என் மௌனியாக இருந்தார்கள்?


'அற்புதமமோ (அ) பித்தலாட்டமோ' சில ஆயிரம் பேராவது தங்களது சிந்தனையில் / செய்கையில் சாத்வீகத்தை கொண்டு வந்தாரா இல்லையா? 

இவர் யாரையாவது 'வெடிகுண்டு செய்யவைத்தாரா? இல்லை கோதுமையும் அரிசியும் கொடுத்து, பள்ளிக்கூடம் நடத்தி 'மத மாற்றம் 
செய்தாரா?

பாபாவின் விபூதியை கிண்டல்டிப்பவர்கள், கூட்டம் போட்டு முடவனை நடக்கவைக்கும் போதும், ஊமைகளை பேசவைக்கும் போதும் இந்த 'வினோத மதசார்பற்றவர்கள் எங்கே போயிருந்தார்கள்?

வெளி நாட்டிலிருந்து துப்பாக்கிகளும், வெடுகுண்டுகளும் கடத்தப் பட்டு இந்தியாவில் வெடிக்கச் செய்யும்போது ஒருவேளை 'ஆழ் நிலை' தியானத்திற்கு சென்று விட்டார்களோ? 

இந்து மத பெரியவர்கள் மறையும் போது மட்டும் நீட்டி முழக்கி கட்டுரை எழுதும் இந்த வினோத 'மத சார்பற்ற' கட்டுரையாளர்கள், பிற மதத்தவர் பற்றிய பேச்சு வந்தால் 'மௌன விரதம்' காக்கிறார்கள்.

சாய்பாபா அறக்கட்டளை சொத்துக்கள் பற்றி கூப்பாடு போடும் இந்த "போலி மத சார்பின்மை யாளர்கள்"  இதே அளவுகோலை 'மிஷனரிகளுக்கும்' பொருத்துவார்களா?

இந்தியாவில் 'மத சார்பின்மை என்பது' 'இந்துக்களை பழிப்பதிலும், இந்து மத தத்துவங்களை கொச்சைப்படுத்துவதிலும், இந்து மதத் தலைவர்ளின் மீது சேற்றை வாரி வீசுவதும் இந்து தெய்வங்களை அநாகரிகமாக சித்தரிப்பதில் மட்டும் தான்.

வாழ்க இந்திய மத சார்பின்மை!!