நம் நாட்டின் முன்னேற்றம்—பொருளாதார ரீதியிலோ அல்லது உலக அரசியல் செல்வாக்கிலோ—எளிதான விஷயம் அல்ல என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகிறார். சில கடுமையான அபாயங்களைச் சந்தித்தபடிதான் நாம் பயணித்தாக வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
நாம் இப்போது குறைக்கடத்தி (Semiconductor) சிப் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால், இணையவழித் தாக்குதல்கள் (Cyber Attacks) உட்படப் பல்வேறு இடையூறுகள் தொடரும் என எச்சரிக்கிறார்.
'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வின் போது, இந்திய மின்சார நெட்வொர்க்குகளை ஹேக் செய்து செயலிழக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.
நமது துணை மின் நிலையங்கள் (Substations) பெரும்பாலானவை உலகின் அதிநவீன மின்னணுச் சாதனங்களால் கட்டமைக்கப்பட்டவை. அந்தச் சமயத்தில் இணையவழித் தாக்குதலிலிருந்து தப்பிக்க, அனைத்துத் துணை மின் நிலையங்களையும் இணையப் பிணைப்பிலிருந்து தனிமைப்படுத்தி, அங்குள்ள பொறியாளர்களால் மட்டுமே நேரடியாக இயக்கும் வகையில் அவசர நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறுகிறார்.
குறிப்பாகச் செமி கண்டக்டர் துறையில் நாம் ஆதிக்கம் செலுத்த முயலும்போது, அதைச் சீர்குலைக்க நிச்சயம் முயற்சிகள் நடக்கும். அதையெல்லாம் கடந்துதான் நாம் வெற்றிநடை போட வேண்டும்.
இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எல்லா நாடுகளுக்குமே பொதுவானவை. சமீபத்தில்கூட ChatGPT, தானாகவே வேறொரு தளத்தை ஹேக் செய்யும் அளவுக்குப் நிலைமை சென்றுள்ளது.
ஆனால், இந்தியாவில் ஒரு தொழில்துறைச் சிக்கல் எழும்போதெல்லாம், "எதிரிகள் சதி செய்கிறார்கள்" என்றே முடிவுக்கு வர வேண்டியதில்லை.
எந்த ஒரு நாடு வளர்ச்சி பெறுவதையும் சில எதிர்ப்புச் சக்திகள் சகித்துக் கொள்ளாது என்பது உண்மைதான். இந்த கசப்பான அனுபவங்கள் காலம் காலமாக நடந்து வருபவையே.
இருப்பினும், ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தின் தடங்கலின் போதும், "இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க வெளிநாட்டுச் சக்திகள் சதி செய்கின்றன" என்று அவசரமாக முடிவு செய்வதற்கு முன், தகுந்த ஆதாரங்களைப் பார்க்க வேண்டும். அதை மக்கள் முன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவில் ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது உற்பத்தி ஆலையைத் தொடங்கியபோது, அதை மூடுவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உணவு நஞ்சாக்கம், நிறுவனத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் கம்பிகளைத் துண்டித்தல், ராய்ட்டர்ஸ் வெளியிட்ட போலிச் செய்திகள்... எனப் பல நிகழ்ந்தன. இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள் நாட்டிற்குள்ளும் வெளியிலும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
எனவே, எல்லா ஆபத்துகளையும் எதிர்நோக்கும் திறன் நமக்கு வேண்டும். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுமே இதற்கான தீர்வு.
இதைவிட்டுவிட்டு, "ஐயையோ அடிக்கிறானே!" என்று புலம்புவதில் என்ன பயன்?
ஒரு நாடு சுயமாக வளர்வதை எந்தப் போட்டியாளரும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தம்மைச் சுற்றிலும் எதிரிகளை வைத்துக்கொண்டு இஸ்ரேல் சாதிக்கவில்லையா? ஊழல், ராணுவத் தலையீடு, ஜனநாயக மறுப்பு, தீவிரவாதிகளுக்குச் சாதகமான சூழல் என அனைத்தையும் வைத்துக்கொண்டுள்ள பாகிஸ்தான்கூட இப்படிப் புலம்புவதில்லையே!
எந்த நாடுதான் முழுமையான அமைதியுடன் இருக்கிறது? எல்லா நாடுகளிலுமே வன்முறையாளர்களின் தலையீடு, இல்லுமினாட்டிகளின் சதி, உள்நாட்டுக்கலவரம் என ஏதோவொன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளின் நிலையும இதுதான்.
அமெரிக்காவிலேயே டிரம்பை வீழ்த்த முயற்சிகள் நடக்கவில்லையா?
கடுமையான சட்டதிட்டங்களாலும் அதிகாரத்தாலும் சீனா தப்பித்துக்கொள்கிறது. உலகம் போற்றும் ஜனநாயகம் அங்கே இல்லை என்றாலும், நாட்டிற்கு எதிரான மனோபாவம் அங்கே உருவாக முடிவதில்லை; அதை அவர்கள் அனுமதிப்பதும் இல்லை. ஆனால் நம் நாட்டின் சூழல் வேறு!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூட, "எனக்கு எதிராக வெளிநாடுகள் சதி செய்கின்றன" என்றுதான் அடிக்கடி பேசுவார்.
இது உலக அரசியல்வாதிகள் அனைவருக்கும் வசதியான ஒரு வாதம்.
எந்தெந்த அமைப்புகள் நம் நாட்டிற்கு எதிராகச் செயல்படுகின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக மக்கள் முன் வையுங்கள்.
அதை விடுத்து, எப்போதும் "சதி... சதி..." என்று பேசிக்கொண்டிருப்பது சலிப்பையே தரும்.
எனக்கு மோடிக்கோ, பாஜகவிற்கோ அல்லது நாட்டிற்கோ எதிரான கருத்துகள் எதுவும் இல்லை; அவர்கள்தான் என் தேர்வும் கூட. ஆனால், நியாயமான கேள்விகளை எதிர்கொள்வதில் காங்கிரஸிற்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் அல்லவா?
தேசபக்தி என்பது ஒரு கேடயமா?
#patriotism #External threat # Politicians
No comments:
Post a Comment