மனுஷனுக்கு
எந்தெந்த விதங்களிலெல்லாம் இம்சை வந்து சேரும் என்பது யூகிக்கமுடியாத
சமாச்சாரம். அதிமுகவிற்கு வரும்
இம்சைகளைக்கூட மோடி புன்னியத்தில் சமாளித்து விடலாம். ஆனால் மோடி நமக்குக்
கொடுக்கும் குடைச்சல் இருக்கே! சரியான நமுட்டு
விஷமம் புடிச்ச ஆள்.
இது
நாள் வரை, நான் பசுமாடு போல, அரசாங்கம் சொல்லும் வரியைக்கட்டிவிட்டு, தலையை
ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். குடைச்சல் வந்து சேர்ந்தது ‘பான் கார்டு’
மூலம்.ஆதார் கார்டுடன், பான் கார்டையும் இணை. அதுவும் ஜூன் 30க்குள்ளாக என்று ஒரு
ஆணை.
இந்த
வங்கிக்காரர்கள், செக்குமாடு போல, உடணடியாக அருகில் இருக்கும் வங்கிக்கிளைக்கு வந்து,
ஆதார் எண்ணை சமர்ப்பிக்குமாறு சகட்டுமேனிக்கு, நாளொன்றுக்கு பத்து எஸ்.எம்.எஸ்
அனுப்புவார்கள். மெஸேஜ் அனுப்பும் ப்ரோக்ராமில்,
‘யாரெல்லாம் ஆதார் எண் சமர்ப்பிக்கவில்லையோ, அவர்களுக்கு மட்டும்’ என்று ஒரு
கண்டிஷன் போடமாட்டார்களா? வேகாத வெயிலில்
வங்கிக்குச் சென்றால், ‘ நீங்க, முன்னாலயே ஆதாரை கொடுத்து விட்டீர்களே?’ என அழகு
காண்பிப்பார்கள். இந்த பிடுங்கலாவது
உள்ளூரோடு முடியும். ஆனால், ஆதார்-பான்
கார்டு இணைப்பு இருக்கே, அது கங்கையையும் காவிரியையும் கூட இணைத்துவிடுவது சுலபம்
என்று தோன்ற வைக்கும்.
இன்னும்
என்னென்ன கார்டை, எந்தெந்த கார்டோடு இணைக்கச் சொல்லி உத்தரவு வரப்போகிறதோ என பீதியாயக்
இருக்கு! டிபார்ட்மெண்ட் ஐ.டி கார்டு, க்ரெடிட் கார்டு, டிரைவிங்க் லைஸென்ஸ் கார்டு,
மெடிகல் கார்டு, உள்ளூர் லைப்ரரிகார்டு என கைவசம் ஒரு கத்தை கார்டு
வைத்திருக்கிறேன். என் வீட்டுப் பால்காரர், பேப்பர் போடுபவர் என பலரும் ஆளுக்கொரு ஒரு
அட்டையை திணித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். தேவுடா....‘மன் கி பாத்’ நமக்கு
இல்லையே!
ஆதார்கார்டை,
பான்கார்டுடன் இணைக்க, ஒரு தளத்தின் இணைப்பை வழங்கியிருந்தார்கள். உள்ளே சென்று
இணைப்பைச் சொடுக்கினால், பெயர்
பொருத்தமில்லை என ரிஜெக்ட் ஆகியது. இதென்ன
கல்யாணப் பொருத்தமா.. அதெப்படி பொருந்தாமல் போகும் என சிண்டைப் பிய்த்துக்கொண்டு
(வழுக்கை விழுந்துவிட்டாலும்) ஆராய்ந்து சொல்லச் சொன்னால், இரண்டு கார்டிலும் பெயர் வேறுவிதமாக இருக்கிறது
எனப் பதில் வந்தது.
தமிழ்
நாட்டிற்கு, வேறு எந்த மானிலத்திற்கும் இல்லாத ஒரு இம்சை இருக்கிறது. இங்கே பெயர் என்றால் பெயர்தான். அதற்கு
சஃப்க்ஸ்-ப்ரிஃபிக்ஸ் எல்லாம் கிடையாது. பெயருடன் பெரும்பான்மையாக ஒரு இனிஷியல்
இருக்கும். அது அனேகமாக அப்பா பெயர். அவ்வளவே! பலராமன் என்றால் பலராமன் தான்.
அட்டாச்மென்ட்கள் இல்லை.
ஆனால்
வடக்கே கிவன் நேம், ஃபர்ஸ்ட் நேம், சர்
நேம், மிடில் நேம், பெட் நேம் என பல தினுசுகள் இருக்கும் போல. இந்தப் பெயர்களுக்கு
என்னதான் விளக்கம் எனத் தெரிந்துகொள்ள முப்பது வருடமாக முயன்று தோற்றுவிட்டேன்.
R. பலராமன் என்றால்
என் பெயர் ராமச்சந்திரன் பலராமன். பலராமன். R என்றால் என் பெயர் பலராமன்
ராமச்சந்திரன்.
பான்
கார்டு அப்ளை செய்யும் போது, ஏஜண்ட் பெயரைக் கேட்டார். சொன்னேன். அப்பா பெயர்
என்னவென்றார். ‘ராமச்சந்திரன்’ என்றேன். அந்த புன்னியவான் எந்தப்பெயரை எங்கு எழுதினாரோ
தெரியவில்லை. கார்டில் பலராமன் ராமச்சந்திரன் என வந்திருந்தது. அட, இது அப்பாவின்
பெயர்தானே.. இருந்துட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன். இது நடந்தது 15 வருடங்கள்
இருக்கும். இப்ப வந்தது வினை.
ஆதாரில்
என்பெயர் பலராமன். ஆனால் பான் கார்டில் என்பெயர் பலராமன் ராமச்சந்திரன். எனவே இணைக்க முடியாதாம். இதென்ன இம்சை. இரண்டு
கார்டிலும் அப்பா பெயர் ராமச்சந்திரன் தானே? ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்றால்,
முடியாது என்றது சிஸ்டம். இந்தியாவில் மனிதர்கள் கூடவே பேசுவது சாத்தியமாகத
நிலையில், மிஷினுடன் என்னத்தைப் பேச?
சரியென
ஆன்லைனில், பெயரை மாற்றும் ஆப்ஷனுக்குச் சென்றேன்.
அடாடா..
எப்படித்தான் மைனஸ் -12 சைஸில் எப்படித்தான் ஃபாண்ட் வைக்கிறார்களோ? மஞ்சள்
நிறக்கட்டங்களில், உமிக்கொசு சைசில்
எழுதியிருப்பதைப் படித்தாக வேண்டும். அதைப் புரிந்து கொள்ளவேண்டும். பின் ஃபில்லப்
செய்யணும். சை.. பெயரை மாற்ற காசு வேறு கேட்டார்கள். ஆன்லைனில் கட்டியாகிவிட்டது.
ஒரு
வழியாக என்பெயர் பலராமன்.என் அப்பா பெயர் ராமச்சந்திரன் தான் என டைப் செய்தவுடன், பெயர் மாற்றம் செய்யணும் என்றால், எந்தெந்த
சர்டிபிகேட் தேவை அவர்கள் சிஸ்டம் என ஒரு லிஸ்ட் படித்தது. எல்லாம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கிற
வேலை.
நான்
பலராமன் தான் என நிரூபிக்க ஆதார் கார்டு, பென்ஷன் ஆர்டர், பென்ஷன் புக், வங்கிக்
கணக்கு முதல் பக்கம் எல்லாம் கொடுத்தேன்.
பதினைந்து
நாள் கழித்து மெயில் வந்தது. “பெயரை
உறுதிப் படுத்த பென்ஷன் ஆர்டரோ, ஆதார் கார்டோ, வோட்டர் ஐ.டியோ ஏற்றுக் கொள்ளக்
கூடிய தஸ்தாவேஜூகள் இல்லை. போய் பள்ளிக்கூட சர்டிபிகேட்டை தேடி எடுத்துவா..”
அடப்பாவிகளா..
நான் பள்ளியைமுடித்தது 1969ல். அந்த சர்டிபிகேட்டை எங்கே தேட? நான் படித்த
படிப்புகளின் அடிப்படையில் தானே வேலை
கிடைத்தது? அப்பாயின்மெண்ட் ஆர்டரில் பலராமன் என்று தானே இருக்கு? நாப்பது வருடம்
குப்பைகொட்டிவிட்டு ரிடயர்மெண்ட் (சூப்பரானுவேஷனில் தான்) ஆர்டரும் அதன் அடிப்படையில்தானே?
அதில் பலராமன் என்றுதானே இருக்கிறது? அதை
எப்படி சான்றாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்-என வினவினால், “ஆத்தா வையும்..
சந்தைக்குப் போகனும்.. காசு கொடு...” என சொன்னதையே சொல்லும் கமல் போல, ஸ்கூல் சர்டிபிகேட்
கொடு என சண்டித்தனம் செய்த்து இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்.
வீட்டை
தலைகீழாகப் புரட்டிப்போட்டாகிவிட்டது. 1971-ல் சேலம் பேலஸ் தியேட்டர் சைக்கிள்
ஸ்டேண்டில் கொடுத்த ‘டோக்கன் கூட’ கிடைத்தது.. எஸ்.எஸ்.எல்.ஸி சர்டிபிகேட்
காணவில்லை.
இன்கம்டாக்ஸ்
டிபார்ட்மெண்ட் என்ன பெண்டாட்டியா என்ன, கோவிச்சுக்க முடியுமா? முறையிடுவதைத் தவிர
வேறு வழி?
ஐயா..
ஆதார் கார்டும், வோட்டர் ஐடியும், பென்ஷன் புக்கும் ‘பலராமன்’ என்றுதானே இருக்கு?
அதன் அடிப்படையில் பான் கார்டில் பெயர் மாற்றக் கூடாதா? அரசாங்கத்தின் பெட்
திட்டமான ஆதாரையே நம்ப மாட்டீர்களா என அழுது புரண்டாலும், ஸ்கூட்ல் சர்டிபிகேட்...
சந்தைக்கு போகனும்னு அடம்.
வேறு
வழியின்றி, பிரதம மந்திரியின் ‘குறைகேட்கும்’ அலுவலகத்திற்கு முறையீடு செய்தேன்.
ஐயா... சத்தியமா நான் பலராமன் தான். ஆதார், ரிடயர்மெண்ட் ஆர்டர்..இத்தியாதிகளை
நம்புங்கள். இது நாள் வரை சம்பளத்தில் வருமான வரி பிடித்தமெல்லாம் ‘பலராமன்’ என்ற
பெயரில் அதே பான் கார்டு எண்ணில், கட்டும்போது ஏற்றுக் கொண்ட வருமான வரித்துரை, இப்போது ஏற்றுக் கொள்ள மறுப்பது அக்கிரமம், வரிகளை ஏற்றுக்கொள்ளும்போது இது
முரணாகத் தெரியவில்லையா.. எனப்
புலம்பியிருந்தேன்.
நமது
அதிகார வர்க்கத்திற்கு மூளை எப்போதும் நேரே போகாது போல. “தவளையின் நான்கு
கால்களையும் வெட்டிவிட்டால், தவளைக்கு காது கேட்காது.. அதனால்தான் தாவ முடியவில்லை” என தீர்மாணிக்கும் அதிபுத்திசாலி
அல்லவா?
இந்த
முறையீட்டை, அவர்கள் யாருக்கு அனுப்பியிருக்கனும்? பான் கார்டு பெயரை மாற்றும்
அலுவலகத்திற்குத்தானே? அவ்வளவு எளிதாக முடிவெடுத்துவிட்டால், அதிகார வர்கத்தின்
மூளை என்னவாவது? எனது புகாரினை, ஆதார் அலுவலகத்திற்கு அனுப்புவிட்டனர்.
ஐயகோ...
ஆதார் அட்டையில் பழுதொன்றுமில்லை. பிரச்சினை பான் கார்டில் தான் என புலம்பினால், ‘Further comments not
allowed.. some problems noticed” என பதில் வருகிறது.
படுபாவிகள்..
ஆதார் கார்டில் பெயரை மாற்றித் தொலைக்கப் போகிறார்களோ என அச்சமாக இருக்கிறது.
திட்டம்
என்னவோ நல்ல திட்டம்தான். அதை அமுல் படுத்தும் பொழுது, மேலே இருக்கும் ஒன்றரை கிலோ
சமாசாரத்தை கொஞ்சமாவது பயன்படுத்த வேண்டாம்?
செக்கு மாடுபோல அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
சிக்கலைத்
தீர்க்கப் போகிறார்களா? இல்லை புதுசாக ஏதாவது சிக்கலை தோற்ற்விக்கலாமா என
யோசிப்பார்களா தெரியவில்லை.
அரசாங்கத்தோடு
பேசி புரியவைக்க இயலாது. என் பெயர் பலராமன் தான் என ஏற்றுக் கொண்டால், ரூ 101/-
உண்டியலில் போடுவதாக வடிவழகியம்மனுக்கு வேண்டிக் கொண்டுள்ளேன். அது மட்டுமே இங்கு
சாத்தியம்.
No comments:
Post a Comment