மலைவழிப்பாதைகள் என்றுமே கவர்ச்சிக்
கன்னிகள்தான். சலிக்காத காட்சிகள்.
ஆனாலும் ஸ்ரீநகரிலிருந்து பெஹல்காமிற்குச் செல்லும் வழி, ரசிக்கவைக்கும்.அடுத்துச்
சொல்வதென் றால் சோனாமார்க்கிற்குச் செல்லும் வழி.
சோனாமார்க்கிற்குச் செல்லும் வழியெங்கும் உடன்
கைபிடித்துக் கொண்டே வரும் நதி சிந்து.
வளைந்து நெளிந்து, மலையிடுக்குகளிலும் சமவெளிகளிலும் நளினமாக ஊர்ந்தும்,
பாய்ந்தும், சீறியும் உடன் வருகிறது. சோனாமார்கில் பார்க்க வேண்டுமெனில் ஆங்கே
விரிந்து கிடக்கும் க்ளேசியரைச் சொல்வார்கள். என்னைக் கேட்டால் அந்த ஊருக்குச்
செல்லும் வழியே பிரமாதம் என்பேன்.
சோனாமார்கின் அடிவாரத்தில் நாம் சென்ற வாகனத்தை
நிறுத்திவிடுவார்கள். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் மலைகளில் ஏறிச் சென்றால்
மேற்சொன்ன க்ளேசியரைப் பார்க்கலாம். எப்பொழுதும் போல, க்ளேசியருக்கும் மேல்
மலைக்கவைக்கும் பனிமூடிய சிகரங்கள்.
பிரச்சினை என்னவென்றால், காஷ்மீர் முழுவதும்
நாம் அமர்த்தியிருக்கும் டாக்ஸியை மலை அடிவாரத்திலேயே நிறுத்திவிடுகிறார்கள்.
அதற்குமேல் செல்ல, உள்ளூர் டாக்ஸியைத்தான் நாட வேண்டும். அது யூனியன் விதியாம். அவர்கள்
கூறும் கட்டணத்திற்கு GPFஓ அல்லது
DCRGஓ தான் வாங்கனும். உதாரணமாக இந்த சோனா மார்கில் மேலே செல்ல வேண்டிய
தூரத்திற்கு அவர்கள் கேட்கும் வாகணக் கட்டணம் ரூ 5000/- . அதுவும் முழு ஆறுகிலோ
மீட்டர் தூரத்திற்கும் அல்ல; பாதியிலேயே (மூன்று கிலோ மீட்டர்) இறக்கிவிட்டு, பின்
குதிரையிலோ அல்லது நடந்தோ போகச் சொல்லிவிடுவார்கள். குதிரைச் சவாரிக் கட்டணத்தைக்
கேட்டால், குதிரையின் விலையைச் சொல்வார்கள். போதுமான காசு இருந்து மேலே போனால்,
ஸ்லெட்ஜ் கட்டணம் ஆயிரம் என்பார்கள். தலை சுற்றும்.
எனது
Cab Driver, நல்லவேளையாக கீழிருந்தே மேலே சென்று
கீழேவர குதிரைக் கட்டணம் ரூ.1200/-க்கு அமர்த்திக் கொடுத்தார். நான் சென்ற குதிரை மீடியம் சைஸ். பார்ப்பதற்கு சாதுவாகத்தான்
இருந்த்து. அதன் மேல் ஏறுவதும் இறங்குவதும் கடினமாக இல்லை. ஆனால் பிரச்சினை
வேறுவடிவில் வந்தது. கற்களிலும், இடுக்குகளில் ஒற்றையடிப்பாதையில் புதுப்பெண்போல
தலையைக் குனிந்துகொண்டு மெல்ல-மெல்ல சென்று கொண்டிருந்த குதிரை, திடீரென வான்
நோக்கி அன்னாந்து, ‘ம்மஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..’ என
கனைத்தது. குதிரையின் கூட நடந்து வந்தவர், ‘கயிற்றை இறுகப் பிடிங்க..’ என
ஹிந்தியில் அலற... அதை மொழிபெயர்த்து, எனது மூளை புரிந்துகொள்ளுவதற்குள், கன நேரத்தில்.
நான் பயணித்த குதிரை விருட்டென ஒரே பாய்ச்சலாம எதிரே வந்துகொண்டிருந்த ஒரு
குதிரையை நோக்கிப் ஓடியது. இதை சற்றும் எதிர்பாராத நான் குதிரையிலிருந்து
......... வேண்டாம்; அது சோகக் கதை.
இடுப்பைப்
பிடித்துக்கொண்டு, பேண்ட் - சட்டையை சரிசெய்து கொண்டு, என்னவாயிற்று என
விசாரித்தால், எதிரே வந்து கொண்டிருந்த குதிரை, இந்தக்குதிரையின் காதலி என்றார் குதிரை
வாடகைதாரர். இடுப்பு வலி-வீக்கம் தீர கோட்டக்கல் ஆயுர்வைத்யசாலையில் அப்பாயிண்மென்ட் கேட்டுள்ளேன்.
வழியெங்கும்,
இந்த இடத்தில்தான் ஷாருக்கான் பாட்டுப்பாடினார்..அமிதாப் சண்டைபோட்டார்.. மது
டான்ஸ் ஆடினார் என, அவர் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் குஷி அவருக்கு; என் இடுப்பு
வலி எனக்கு.
அடுத்த
நாள் பெஹல்காம்.
பெஹல்காமில்
பார்ப்பதற்கு பத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. வழக்கம்போல அடிவாரத்திலேயே, நான் வந்த டாக்ஸி நிறுத்தம். அதற்கும்மேல்
பயணிக்க ஜி.பி.எஃப்.
அதிசயமாக இந்த இடத்தில் மட்டும் எந்தெந்த இடங்களுக்குச் செல்ல
எவ்வளவு கட்டணம் என யூனியனில் வரையறுத்து, அறிவிப்புப்பலகையில் போட்டுள்ளனர். ரூ 1200
முதல் ரூ 5000 வரை கட்டணம் செல்கிறது.
கொடுக்கும் ரூபாய்க்கு ஏற்ப இடங்கள் காண்பிக்கப்படும். நான் மூன்று
இடங்களைமட்டும் தேர்வு செய்தேன். சந்தன்வேலி, பேடாப் வேலி, அருவேலி. சர்க்கரை
இனிக்கிறது என சொல்லவேண்டுமா என்ன? எல்லா இடங்களும் கண்கொள்ளாக் காட்சிகள். இதில்
சந்தன் வேலி என்பது ‘அமர்நாத்’ யாத்திரை செல்வோரின் பேஸ்கேம்ப். இங்கிருந்து அமர்நாத் குகை வெறும் 30 கி.மீ
தான். யாத்திரை செல்வோர் குதிரையில்தான்
செல்ல வேண்டுமாம்.
டைகர் ஹில் (கார்கில் சண்டை நடந்த்தே... அந்த இடம்) வெகு
அருகில். பெஹல்காமுற்குச்
செல்வதாயிருந்தால், காலை எட்டு-ஒன்பது மணிக்கே சென்றுவிடுங்கள். இல்லையெனில் எல்லா
இடங்களையும் கவர் செய்ய இயலாது.
வழியெங்கும்
ஆப்பிள் தோட்டங்கள். மலைச் சரிவுகளில் வால்நட் (வாதுமைக் கொட்டை) மரங்கள்,
மேப்பிள் மற்றும் வில்லோ எனப்படும் கிரிக்கெட் பேட் செய்யப்பயன்படும் மரங்கள்.
கீழேகொடுக்கப்பட்டுள்ள
புகைப்படத்தொகுப்பைப் பாருங்கள்.
உபரியாக..
டூரிஸ்ட்
ஆபரேட்டர்கள் சென்ஸிடிவான விஷயங்களை பேசுவதில்லை. மதம்..பாகிஸ்தான்..இந்தியா என
எதிலும் தங்கள் கருத்தைச் சொல்வதில்லை. ஃப்ரொஃபஷனலஸ். நாமும் அப்படியே நடந்து கொள்ளவேண்டும்.
ஃபேஸ்புக்போலவே, வாட்ஸப்போலவோ நமது கருத்தை அந்தவினாடியே சொல்லியாகவேண்டும் என்ற
உந்துதலுக்கு ஆட்படக்கூடாது. வந்த வேலை
ஊர்சுற்றிப் பார்ப்பது. அதைமட்டுமே கவனிக்கவேண்டும். டூரிஸ்ட்களுக்கு ஆபத்து
ஏற்படாதவாறு கவனித்துக் கொள்கிறார்கள்.
நான் சென்ற படகுவீடு சாப்ரி குழுவினர் (9797111189) டிரைவர் அயூப் சாப்ரி
(9906546016). இது ரெகமென்டேஷன் அல்ல. ஒரு தகவலாக மட்டுமே; நன்றாக பாதுகாப்பாக
கவனித்துக் கொண்டனர் என்பதால்.
பொதுவாக
இளைஞர்கள் மாநில-மத்திய அரசாங்கங்கள் மேல் அசாத்தியக் கோபத்தோடு இருக்கிறார்கள். தங்களுக்கு
அவர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக நம்புகிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் பல
நடந்துகொண்டிருக்கின்றனதான். அவை அவர்களைத் திருப்தியுறச் செய்யவில்லை. வேலை வாய்ப்பு மிக அதிகம் வேண்டும் என
விரும்புகிறார்கள். ‘பாக்’கும் வேண்டாம்-இந்தியாவும்
வேண்டாம். விடுதலைதான் வேண்டும் என்பது பொதுவான அபிப்ராயம்.
பாதுகாப்புப்
படைகள் உயிரைக் கொடுத்து கடமையாற்றுகிறார்கள். அவர்கள் மட்டும்
இல்லையெனில்......
காஷ்மீருக்கான
தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அங்கே தென்படவில்லை.
No comments:
Post a Comment