சில காலம் முன்பு, இடது அடி வயிற்றின் கோடியில்
ஒரு ப்ரீதி இட்லி சைசில் ஒரு வீக்கம். பரம
சாதுவான வீக்கம். வலிக்காது. எழுந்து
நின்றால் வரும். படுத்துக் கொண்டால் காணாமற் போய்விடும். கொஞ்ச நாளிலேயே அத்யந்த
நன்பனாகி விட்டது அவ்வீக்கம். அதனுடன்
பேசலாம். எதிர்த்தெல்லாம் பேசாது. அதை செல்லமாய், மெதுவாய், லேசாக அழுத்திவிட்டால்,
சமர்த்தாக உள்ளே போய்விடும். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் தலைகாட்டும். சரி
போ... அது பாட்டுக்கு ஓரமா இருந்துக்கட்டும். அதென்ன வாடகையா தரப்போகிறது?
தொந்தரவில்லாமல் இருந்து விட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன்.
சில நாட்களில், ப்ரீதி இட்லி சைசில் இருந்த
வீக்கம், கும்பகோணம் துணி இட்லி சைசுக்கு பெரிசானது. வலி இல்லாவிடினும், ‘நான்
ஒருத்தன் இருக்கேன் பார்’ என நினைவுறுத்தும் படியாக அசௌகரியம்.
இரண்யனை வதம் செய்ய, நரசிம்மன் கைவிரல்களால் அவனது
குடலைக் கிழித்து வெளியே போட்டானாம். எனக்கு, ஹிரண்யன் என்னும் குடல், நரசிம்மன்
தயவில்லாமலேயே வெளியே வந்து கொண்டிருந்த்து.
தன்னை பத்திரமாக மூடிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்
மூன்று லேயர்களில் பலவீன ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியே, சற்று காற்றாட
வெளியே வந்துவிடும் எனது குடல் பகுதி. இதனால்தான்
இந்த குடலிறக்கத்திற்கு ஹிரண்யா என்று பெயர் வைத்தார்களோ என்னவோ! இப்படி தனது இருப்பிடத்தைத்
விட்டு, எல்லை தாண்டிய பயங்கரவாதியாக மாறி, அவ்வப்போது வெளியே வந்து இம்சைகொடுக்க
ஆரம்பித்தான் ஹிரண்ய கசிபு.
வந்து விட்டால், ஹெரண்யா தானாக குணமாகாது;
சர்ஜரி ரிப்பேர் மட்டுமே சரியாக்கும் என கூகுளாண்டவர் அருள் பாலித்தாலும், எனது
இஷ்ட தெய்வமான ‘யோகாவை’ வேண்டினேன். அவர்
ஏகபாத – சர்வாங்க ஆசனங்களைப் பரிந்துரைத்தார். மோடிக்கு கருப்புப் பண முதலைகள்
காட்டியது போல சற்றே ‘பாவலா’ காட்டிவிட்டு ஹிரண்யா தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை
காட்டிக் கொண்டிருந்தது. எனவே இவ்விஷயத்தில் அனுபவம் பெற்ற ஒருவரைத்
தொடர்புகொண்டேன். அவர் இடது, வலது, நடு
(கட்சியெல்லாம் இல்லை – சும்மா திசைகள் தான்) என மூன்று ஹெர்ணியா அறுவை சிகிச்சை
மேற்கொண்டவர். அவர் ‘ஆபரேஷனெல்லாம் செய்து
கொள்ளாதே, எனக்கு நிறைய இம்சை கொடுத்துக் கொண்டிருக்கிறது; நீ இதற்காக விற்கும் ‘ஹெர்ணியா
பெல்டை’ பயன்படுத்து... சரியாகிவிடும் என நல்வாக்கு சொல்ல, அமேசானுக்கு அடித்தது
யோகம். ஒரு சுபயோக சுப தினத்தில் ஹெர்ணியா
பெல்ட் வந்து சேர்ந்தது. அந்த பெல்ட், ‘சூப்பர்
மேன்’ பேண்டுக்கு மேல் போடும் ஜட்டி போல ஒருவிதமாக இருந்தது. அதனால் என்ன? கத்தியின்றி ரத்தமின்றி ஹிரண்யனை
விரட்டியடிக்கும் மந்திர பெல்ட்டை எதற்காக உதாசீனப் படுத்தனும் என மூன்று மாதம்
அணிந்து திரிந்தேன்.
அப்பாவிடம் அடங்கி ஒடுங்கித் திரிந்து,
அம்மாவைக் கணட்தும் அழுது ஆர்பாட்டம் செய்யும் சிறுவன் போல, பெல்ட்டை எடுத்ததும்
ஹிரண்யணின் அட்டூழியம் அதிகமாகிவிடும். இந்த பெல்ட், தசைகளை பலவீனமாக்குவதையும்
உணர முடிந்தது.
சரி... வேறு வழியில்லை. ‘சஸ்திர சிகிச்சையே
பலனளிக்கும் போல’ எனத் தீர்மாணித்து நான் மிகவும் விரும்பும், சர்ஜன் டாக்டர் சசிதர்
அவர்களை நாடினேன். நம்பற்கரிய
நேர்மையாளர். தொழிலில் நேர்த்தி. திறமை சாலி. அவர் பார்த்த உடனேயே, ‘ இது சர்ஜரி’
தான் எனத் தீர்மாணித்து, சில பல டெஸ்ட்களைப் பரிந்துரைத்தார்.
ஆபரேஷன் செய்து கொள்வதில் பயமொன்றுமில்லை என்றாலும்,
தனியனாக வாழ்வதால், சமாளிக்க முடியுமா, சமையல் செய்துகொள்ள இயலுமா, மாடியில் குடியிருப்பதால், படியேற முடியுமா,
எனது அடிப்படையான தேவைகளை பிறர் உதவியின்றி செய்து கொள்ள இயலுமா, எனது நெடு நாளைய
நண்பன் ‘மயக்கம்’ வந்து விட்டால் என்ன செய்வது, ஒரு வாரத்திற் காவது பிறரின் உதவி
தேவைப்படுமே என்ற சந்தேகம், பயம் இருந்தது. பிறவி சங்கோஜியான எனக்கு இது பெரும்
தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனது ஆகட்டும். 64 வயதிலேயே இவ்வளவு தயங்கினால்,
இன்னும் வயதாகும் போது மேலும் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இப்போது இரத்தக்
கொதிப்பு, சர்க்கரை இல்லை. இனி வரும் காலங்களில் எப்படியோ தெரியாது. எனவே
துணிந்திடு மனமே என உறுதி கொண்டு, டெஸ்ட்களை எடுக்கச் சென்றேன்.
கதைகளில் ‘அஷ்ட திக்கு பாலகர்கள்’ என்று
சொல்வார்கள். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு தெய்வங்கள். எனது சர்ஜன் எடுக்க்ச் சொன்ன டெஸ்ட் லேபரட்டரிகள் யாவும், அஷ்ட திக்கு
பாலகர்களுக்கு சொந்தம் போல. திசைக்கு ஒன்றாக இருந்தது. தெற்கே ஸ்கேன். வடக்கே
கார்டியாலஜிஸ்ட் ஒபினியன். கிழக்கே இரத்த சோதனை. மேற்கே ஈஸிஜி.
அனைத்து டெஸ்களையும் அஸ்வமேதயாகம் போல
முடித்துக் கொண்டேன்.
இந்த டெஸ்ட்களில், மோடி உபத்திரவம் தருவார் எனக் கருதவேயில்லை.
ஒவ்வொரு டெஸ்ட்டும் ரூ 900, ரூ 700
பிடித்தது. அவர்கள் எவரிடத்திலும் ஸ்வைபிங் மெஷின் இல்லை. ஒவ்வொரு லேபிற்கும் அவ்வளவு நூறு ரூபாய்
நோட்டுகளை எங்கிருந்து சேகரிப்பது? நூறு
ரூபாய் நோட்டிக்களைச் சேகரிப்பதற்குள் விழி பிதுங்கிற்று. பல மருந்துக் கடைகளிலும் பி.ஓ.எஸ் இல்லை. அப்படியானால்,
இவர்கள் யாவரும் வியாபாரத்தை எந்தக் கணக்கிலும் காட்டுவதில்லை போலும்.
மருத்துவ செலவிற்காக சிட்டியூனியன் பேங்கில்
போய், அவசரத்தை விளக்கி, எனது அக்கவுண்டிலிருந்து முப்பதாயிரம் பணம் கேட்டால் மறுத்தார்கள். அதிகபட்சமே 24000 தான் தரமுடியும்
என்றார்கள். நீங்கள் யாரிடம்
வேண்டுமானாலும் கம்பெளயின்ட் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு அவ்வளவுதான் அதிகாரம்
என்கிறார்கள். காரணத்தை விளக்கியும்,
ஆதாரத்தைக் காண்பித்தும் பணம் கொடுக்க மறுக்கும் இந்த வங்கிக்காரர்கள் ரெட்டிகளுக்கு
மாத்திரம் எப்படி கோடிக்கணக்கில் பணம் வழங்கினார்களோ தெரியவில்லை.
ஈஸிஜியில் பிரச்சினை என்றாலும் (ஆட்ரியல்
ஃப்ளட்டர்) சர்ஜரி செய்ய ஒப்புதல்
வழங்கினார்கள். இந்த சடங்குகளைப் பூர்த்தி செய்வதற்குள்ளாகவே சர்ஜரி
முடிந்த்து போல ஆயாசமாகிவிட்டது.
சற்றே நீண்ட தையல் போடுமளவு சர்ஜரி இருந்தது. ஒருவழியாக
மூண்றாம் நாள் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டார்கள்.
எனது நண்பர்களுக்கு நான் பகிரங்கமாக நன்றி
சொல்ல வேண்டிய தருணம் இது. குறிப்பாக திருவாளர்கள் சக்திவேல், பி.டி அரசு,
விஜயராகவன், செந்தில், தியாகு ஆகியோருக்கு எனது
நெஞ்சார்ந்த நன்றிகள்.
சர்ஜரிக்குப் பின் கவனமாக இருக்க வேண்டிய
விஷயங்கள் பல. முதல் விரோதி இருமல் – தும்மல். ஒவ்வொரு தும்மலுக்கும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளையோ
அல்லது கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையோ எளிதாக தரிசிக்கலாம். தும்மி
முடித்ததும் கண்கள் இருள.. தலை சுற்ற.. தையல் போட்ட இடத்தில் 22000 V ஷாக்
அடிக்க.. என்னே இன்பம்....
மட்டையடியாக பளு தூக்காதே, ஸ்ட்ரெயின் செய்யாதே
என உபதேசிப்பது வேஸ்ட். தனியர்களுக்கு
இவையெல்லாம் செய்யாமலிருக்க இயலாது.
ஆனால், சில யுக்திகளைக் கைக் கொண்டால் சமாளிக்கலாம். உதாரணமாக தும்மல் வரும்போல இருந்தால், அழுத்தமாக,
வலிக்கும்படி மூக்கைக் கிள்ளிக் கொள்ள வேண்டும். தும்மல் அடங்குகிறது. சமையலின் போது தாளிப்பதை
அறவே தவிர்க்க. படி ஏறும்போது,
ஒவ்வொருபடியாக... எந்தப் பக்கம் சர்ஜரி நடக்கவில்லையோ அந்தப் பக்க காலை எடுத்து
வைத்து... இப்படி பல யுக்திகளைப் பழகிக் கொண்டுள்ளேன்.
ரெகவரி பீரியடைக் கடந்துவிட முடியும் என்றே
கருதுகிறேன். நன்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.
Wishing you speedy recovery to enable to lead normal life.
ReplyDelete