Monday, January 2, 2017

யூனியன் டெரிடரிகள்

துடிப்பான அரசு நிர்வாகி வேண்டுமா அல்லது தூங்கிவழியும் ஜனநாயக அமைப்பு வேண்டுமா என்பது சிரமமான கேள்வி.

துடியாக இயங்கும் அரசு இயந்திரம் எல்லோரையும் மயக்கும்தான்.  இறுதி வரை, ‘ நல்லவராகவே’ நீடிக்கும் ஒரு நிர்வாகியை/சர்வாதிகாரியை இனிமேல் தான் சரித்திரம் கண்டெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் கவர்ந்திழுகும் தனி நபர் சாதுர்யம், போகப்போக சாயம் வெளுத்து ஊழலுக்கும் அராஜகத்திற்கும் மட்டுமே துணைபோவதுதான் நடைமுறை. எனவேதான், ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், மக்களாட்சி உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் மக்களாட்சியும் இல்லாமல், கவர்னரின் ஆட்சி போலவும் இல்லாமல், இரண்டும் கெட்டான் அமைப்பாக,  ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவிக்கும்  யூனியன் டெரிடரிகள் என்ற அமைப்பினை, எதற்காக  விடாமல் அடை காத்துவருகிறோமோ தெரியவில்லை.  இங்கே அதிகாரத்தை  மாநில முதல்வரும், மத்திய அரசால் அப்பாயின்ட் செய்யப்படும் லெஃப்டின்ன்ட் கவர்னரும்  பகிர்ந்து கொள்கிறார்கள்.  எனவே, ‘பொலிடிகல் கமேண்ட்’ யாருக்கு என்பதில் இருவருக்கும்  இடைவிடாத போட்டி. இரட்டை அதிகாரமையம் செயல்படுவது, எந்தவகையான ஜனநாயகம் எனப் புரியவில்லை.  இதற்கு சட்ட ஒப்புதல் வேறு இருக்கிறது! இரண்டும் கெட்டானாக ஒரு ஜனநாயக அமைப்பு எதற்கு?

இந்தகுழப்பம் போதாதென்று, தற்போது, அப்சீன் மெஸேஜ் ஒன்று கவர்னருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிகழ்வில், அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட துறைச் செயலருக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்குத் தெரியாமலேயே சஸ்பெண்ட் செய்யப் படுவதும், இதில் அதிகார வர்க்கம் பிளவுபட்டு நிற்பதும் காணச் சகியவிலை.

சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராகி விளக்க மளித்த பின்னும்,  ‘சஸ்பென்ஷன் ‘என்பது சட்ட சம்மதமே எனினும் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள்,ஆளுனருக்கு எதிராக  திரும்புயுள்ள சூழல் ஏற்பட்டுள்ளதாக ‘தமிழ் ஹிந்து’ சொல்கிறது.

யூனியன் டெரிடரிகளில், அதிகார பகிர்வுகுறித்து விவாதம் தேவைப்படுகிறது. ஏனெனில் மத்திய அரசின் எக்ஸ்டன்டட்  ஆர்மாக இப்பதவி பராமரிக்கப் படுவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.  ஆளுனர், அதிகார வர்கம்,  மந்திரிசபை என மூவரும் மூன்று திக்கில் நின்று கொண்டால் பாதிக்கப்படுவது, மக்களும் – வளர்ச்சிப் பணிகளும் தான்.


No comments:

Post a Comment