Saturday, December 17, 2011

சிறார்களுக்கு (12)


11.   இருட்டும் - வாளியும்


அது ஒரு ஆசிரமத்தின் அறை. அந்த அறையின் ஒரு மூலையில் ஒரு சாது, தியானத்தில் வீற்றிருந்தார்.  அறை முழுவதும் இருட்டு பரவியிருந்தது! உள்ளே நுழைந்த சீடர்களுக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை! இருட்டில் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். இந்த சப்தத்தில் கண் விழித்த சாது, சீடர்களை  நோக்கி,   நீங்கள் ஆளுக்கு ஒரு வாளி எடுத்துக் கொண்டு, அறையில் நிரம்பியிருக்கும் இருட்டினை மொண்டு வெளியே கொட்டுங்கள் என்றார். குருவின்  ஆணையினை சிரமேற்கொண்டு, சீடர்களும் வாளி-வாளியாக, மணிக்கணக்கில், இருட்டினை மொண்டு, மொண்டு வெளியே கொட்டிக்கொண்டிருந்தாலும், இருட்டு தீர்ந்த பாடில்லை!

இந்த கதையினைப் படித்ததும் இது என்ன பைத்தியக்காரத்தனம்? ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் இருட்டு போய்விடப் போகிறது என்று  நினைக்கிறீர்கள் அல்லவா?

உண்மைதான்! நமது உள்ளத்திலும், சமுதாயத்திலும் இது போலவே ஏகமாய் பொறாமை, வெறுப்பு, கோபம், துவேஷம், ஆத்திரம், சுயநலம் என பல இருள் மண்டிக் கிடக்கிறது. அவற்றை நீக்க வேண்டுமெனில், அன்பு, பொறுமை, பொதுநலம் பேணுதல் போன்ற நல்ல எண்ணங்களை உங்கள் மனதில் ஏற்றுங்கள். தீயவை தானாகவே விலகி விடும்.

 ======================================================================
நீதி:  வெறுமனே தீய எண்ணங்களை நீக்குவோம் என்ற கோஷத்தினால் ஒரு பயனும் இல்லை! ‘தீயனவற்றை நீக்கும் வல்லமை ‘நல்லனவற்றிற்கு  மட்டுமே உண்டு!
_______________________________________________________________________

No comments:

Post a Comment