Wednesday, December 7, 2011

சிறார்களுக்கு (8)

8. கர்ணன்.

மஹாபாரத யுத்தத்தின் போது, கர்ணன் மீது அர்ஜுனன் அம்பு தொடுக்க, கர்ணன் செய்த தர்மங்கள், அவனைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. செய்வதறியாது திகைத்த அர்ஜுனனை, சற்றே காத்திருக்குமாறு சொல்லி விட்டு, ஒரு முதியவன் வேடத்தில் கர்ணனிடம் சென்று, ஏதேனும் தானம் அளிக்குமாறு வேண்டினான்.

யாசித்தவர்களுக்கு “இல்லை என்று சொல்லிப் பழக்கப்படாத கர்ணன், “யுத்தகளத்தில், உங்களுக்கு  நான் என்ன தானம் அளிக்க முடியும்? என்றான். அவன் செய்த தர்மங்களை “தானமாக“ வழங்குமாறு வேண்டினார், அந்த முதியவர்.    அதன்படியே தனது உடலினின்று வெளியேறிக் கொண்டிருந்த குருதியினை ஏந்தி, ‘நான் செய்த தர்மத்தின் பலன்கள் அனைத்தையும் உனக்குத் தந்தேன் என்று தானம் செய்தான் கர்ணன்.

யாசகம் பெறச்சென்ற முதியவர், “கர்ணா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள், தருகிறேன் என்றார்.

இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். தனக்கு தேவையானதைப் பெற்றுக்கொண்டு திரும்பாமல், “கர்ணனுக்கு என்ன வேண்டும் என, முதியவரை  கேட்க வைத்தது எது?

வாழ் நாள் முழுவதும்,  மற்றவர்களுக்கு கொடுத்தே பழக்கப்பட்ட கர்ணனது இரத்தம், முதியவரது கைகளில் பட்டதும், தானும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்து விட்டதாம்.


 ===================================================================
நீதி:  நல்லவர்களின் நட்பை நாடிக் கொள். அது  உன் தீய 
     குணங்களை மாற்ற வல்லது
=============================================================








1 comment: