1. வண்ணான் முகத்தில் விழித்த ராஜா
ஆர். ராஜேந்திரன் என்று ஒரு நண்பர். சுருக்கமாக ஆர்.ஆர். கடலூர் நகராட்சி, உயர் நிலைப்பள்ளியில், உதவித்தலைமை ஆசிரியராக இருக்கிறார். பெரியவர்களுடன் மல்லாடுவதைவிட, சிறார்களை வளைப்பது சுலபம் என்கிறார். நல்ல விஷயங்களை, சிறுவர்களிடம் இப்போது விதைத்து வைத்தால், நூற்றில் ஒருவரது மனதிலாவது அது தங்கி, பெரியவர்களானதும் நல்ல குடிமகனாக உருவாகலாம் என நம்புகிறார்.
இவர் குழந்தைகளுக்காக, சிறு-சிறு கதைகளையோ, கட்டுரை களையோ சொல்ல விரும்புகிறார். அவரது உருவாக்கங்களை, இந்த வலைப்பூவினில், அவரது பங்களிப்பு இருக்கும்வரை, தொடர்ந்து வெளியிட, மகிழ்ச்சியுடன் சம்மதித்திருக்கிறேன். கருத்து அவருடை யது; நடை மாத்திரம் எனது. இவை யாவும் “ஆர்.ஆர் பக்கங்கள்” என்ற லேபிளைத் தாங்கிவரும். இந்த லேபிளில் வருபவை யாவும் குழந்தை களுக்கானவையே! இனி அவரது முதல் முயற்சி:
கிருஷ்ணதேவராயர் நாட்டை சுபிட்சமாக நிர்வகித்துக் கொண்டி ருந்தார். அவரது அரசவையில் ‘தெனாலிராமனும்’ இருந்தார் என்பது தெரியும் அல்லவா? “ராஜா” என்றாலே அவ்வப்போது தவறு செய்வதும், “உடன்” இருப்பொர் அதை திருத்துவதும் சகஜம் தானே?
ஒரு நாள் காலை, எழுந்ததும், உப்பரிகையில் நின்று, கீழே குனிந்து நோக்க, அங்கே ஒரு சலவைத்தொழிலாளி, சென்றுகொண்டி ருந்தான். எதேச்சையாக அவன் மேலே பார்க்க, அங்கே ராஜாவைக் கண்டதும் ‘வணக்கம் மகாராஜா’ என கும்பிட்டான்.
நாளின் முதல் வணக்கத்தை, ஒரு வண்ணானிடமிருந்து பெற்றதை மகிழ்ச்சியாகக் கொள்ளவில்லை ராஜா. வண்ணான் முகத்தில் விழித்ததால், இன்று என்ன பிரச்சினை வருமோ என கலங்கிப் போனார். அவர் பயந்தது போலவே, அவருக்கு, சற்று நேரத்தில் வயிற்றுவலி வந்துவிட்டது. அரண்மனை வைத்தியர் வந்து, அவரது வலியினைக் குணப்படுத்தி விட்டாலும், அந்த வண்ணானை பார்த்ததால்தான் தனக்கு உபாதை வந்து விட்டது என நம்பிய ராஜா, சேவகனை அழைத்து, அந்த வண்ணானை சிறைப் பிடித்து, அவனது தலையை வெட்டிவிடுமாறு உத்தரவிட்டார்.
விஷயம் அறிந்த சலவைத் தொழிலாளி, பதறியடித்து, தெனாலி ராமன் வீட்டிற்கு ஓடினான். விஷயத்தைத் தெரிந்து கொண்ட தெனாலிராமன், அவனை தனது வீட்டிகுள் ஒளித்து வைத்தார். தன் முகத்தை ஒரு சாக்கினால் மறைத்துக் கொண்டு, கிருஷ்ண தேவரா யரது அரசவைக்கு சென்றார்.
‘ஏய், தெனாலிராமா, உனக்கு ஏதும் பைத்தியமா? எதற்காக சாக்கினுள் தலையைவிட்டுக் கொண்டுள்ளாய்” என கோபமாக வினவினார் ராஜா.
“மன்னியுங்கள் மன்னா, இன்று அரண்மனைக்கு அருகில் ஒரு பீடை பிடித்தவன் உலவுகிறானாம். அவன் முகத்தில் விழித்தால் துயரங்கள் ஏற்படுமாம். அதனால்தான் இப்படி தலையை மூடிக் கொண்டுள்ளேன்” என்றான் தெனாலி.
“நீ பயப்படாதே.. அந்த பீடைபிடித்தவன் முகத்தில் நான் தான் விழித்தேன். உடனே வயிற்றுவலி வந்துவிட்டது. அவனைப் பிடித்து சிரச்சேதம் செய்ய உத்தரவு பிறப்பித்துவிட்டேன். எனவே, நீ பயப் படாமல், சாக்கைவிட்டு வெளியே வா” என்றார் ராஜா.
“மன்னியுங்கள் மன்னா! தரித்திரம் பிடித்தவனை நீங்கள் பார்த்ததால், உங்களுக்கு வயிற்றுவலிதான் வந்தது. உங்களை அவன் பார்த்ததால் அவனுக்கு மரண தண்டனை அல்லவோ கிடைத்தது? இப்போது சொல்லுங்கள். யார் அதிகம் பீடை பிடித்தவன், நீங்களா அல்லது அந்த வண்ணானா?”
ராஜாவுக்கு புத்தி வந்தது. மரண தண்டனையை ரத்து செய்தார்.
--------------------------------------------------------------------------------------------------------
நீதி: தனது உபாதைகளுக்கெல்லாம் பழிசுமத்த பிறரைத் தேடாதே!
--------------------------------------------------------------
--------------------------------------------------------------
No comments:
Post a Comment