அறுபத்து மூன்றாவது குடியரசு தினம் அனுசரிக்கப்படுகிறது.
1950 ஜனவரி 26-ல்,
இந்திய பாராளுமன்றம், குடியரசுக்கான புதிய சட்டவரைவை ஏற்றுக் கொண்ட நாள் முதல், இந்தியா
மதச்சார்பற்ற குடியரசாக பரிணமித்தது. எதற்காக இந்திய போராளிகளும்,தலைவர் களும்
விடுதலைக்காக, சர்வபரித் தியாகங்கள் செய்தனரோ அதற்கான பொருளைத் தந்த நாள் அது.
விடுதலைக்குப் பின்னான இந்தியாவின்
வரலாற்றினை புரட்டிப் பார்த்தால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியா
இது தானா, என சந்தேகமாய் உள்ளது.
நமது அரசியல் தலைமை, குணம் கெட்டுப்
போய், மக்களது பிரச்சினைகளில் சொரணையற்று, பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக்
கொண்டு, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத்
துடிப்பது கண்கூடாகத் தெரிகிறது. இது குறித்து அவர்களுக்கு வெட்கமேதும்
இருப்பதாகத் தெரியவில்லை!
காந்திஜி வெளிநாட்டுத் துணிகளை எரிக்கச்
சொன்னார். அவருக்குத் தெரியாதா, உடுக்கக் கோவணம் கூட இல்லாத நிலையில்
லட்சக்கணக்கானோர் இருக்க, எதற்காகத் துணிகளை எரிக்க வேண்டும் என? தெரியும்.
எங்களது செல்வங்களை கொள்ளை கொண்டு போக அனுமதிக்க மாட்டோம் என்பது தானே அதன் பொருள்?
உள் நாட்டு நெசவாளர்களின் வயிற்றிலடித்துவிட்டு, அன்னிய துணிகள் வேண்டாம்
என்பதுதானே அதன் பொருள்? இன்றைய நிலை
என்ன? சில்லறை வணிகத்தில் கூட அமெரிக்க முதலாளிகளை அனுமதித்தே தீருவேன் என அடம்
பிடிக்கிறதே, காங்கிரஸ்! என்ன ஒரு
கொள்கைச் சீரழிவு?
லஞ்சமும், கூட்டுக் கொள்ளையும் அரசியல்வாதிகளின்
இரு கண்களைப்போல மாறிவிட்டதே? ஒவ்வொரு தேர்தலிலும் எத்தனை ரௌடிகள், கொள்ளைக்காரர்கள்,
கற்பழித்தவர்கள், பல்வேறு கட்சிகளின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள்? கொள்ளைக்காரர்கள்
மட்டுமல்ல, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட அரியணையில் வீற்றிருக்கிறார்களே?
அரசு அதிகாரம் என்பது கொள்ளையடிப்பதற்கான எளிய வழியாக மாறிவிட்டது! அரசியல்வாதிகள்-அரசு
அதிகாரிகள்– பெருமுதலாளிகள் ஆகியோரது கள்ளக் கூட்டணி எல்லை மீறிப் போய்விட்டது. சமீபத்திய
தொலை தொடர்பு ஊழல் சந்தி சிரிக்கிறது.
சுவிஸ் வங்கிகளில் கோடிக்கோடியாய் (460
மில்லியன் என்கிறார்கள்) கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் யார் யார்? அந்த பட்டியலை வெளியிட எவருக்கேனும் தைரியம்
இருக்கிறதா? இந்தியாவிலேயே ஒரு இணைப் பொருளாதாரம் நடத்தும் அளவுக்கு கறுப்புப்
பணம் இருக்கிறதே? இவைகளையெல்லாம் வெளியில் கொணரக் கூடாது எனத்
திட்டமிட்டு செயல்படும்
தலைவர்களைப் பெற்றிறுப்பது நமது விதியா?
குடியரசின் தோல்வியா?
தற்போதைய அரசியல் தலைமைக்கு, மதங்கள்
வேண்டும்! ஜாதிகள் வேண்டும்! ஏழ்மை
வேண்டும். மக்கள் ஒற்றுமையின்றியே இருக்க வேண்டும். கலவரங்கள் வேண்டும். அடிதடிகள்
வேண்டும். அப்போது தான், நாட்டிற்கோ, அவர்களுக்கோ பிரச்சினை வரும்போது ஏதாவது ஒரு
கலவரத்தைத் தூண்டிவிட்டு,
பிரச்சினையை திசை திருப்பி, தப்பித்துக் கொள்ளலாம்.
கேவலம், மாநிலங்களுக்கிடையேயான அற்ப பிரச்சினைகளைக் கூட தீர்க்க வக்கற்று, வெட்கமில் லாமல், வேடிக்கை பார்த்துக்
கொண்டு, ஓட்டுக்களைப் பொறுக்குவதற்காக காத்து நிற்கும் இந்த அரசியல்வாதிகளை என்ன
செய்வது?
கலவரங்களில் ஓட்டு ஏதும் சிக்காதா என,
பினந்தின்னிக் கழுகுகளைப் போல அலைந்து கொண்டிருக் கின்றனரே!
“முல்லைப் பெரியார்” என்ன
சீனாவிலா இருக்கிறது? சர்வதேச நீதிமன்றம்
வந்து பஞ்சாயத்து செய்ய?
தெலுங்கானா பிரச்சினையை 1947-முதல் தீர்த்துக்கொண்டிருக் கிறார்கள்!
வடகிழக்கு மாநிலங்களில் என்றும் தீராத
(தீர்க்க விழையாத) பிரச்சினைகள்!
காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி தானா
என்பது அங்கு போய்ப் பார்த்தவர்களுக்குப் புரியும்.
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் எவ்வளவு
உயிர் இழப்புகள்? எத்தனை கோடிகள் ரூபாய்கள் இழப்புகள்? இது குறித்து ஏதேனும்
கவலையோ, அக்கறையோ அரசியல் வாதிகளுக்கு இருப்பதற்கான அறிகுறிகூட காணோம்.
இவர்கள் எந்தகாலத்தில் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகிறார்கள்?
விடுதலை அடைந்தபின் நாட்டின் ஊழல்களைப்
பட்டியல் போட்டால், அடுத்த குடியரசு தினவிழா வரை கூட நீளும்!
இது தவிர, எல்லைக் கப்பாலிருந்து,
விடாமல் வரும் பயங்கரவாத பிரச்சினைகளுக்கு அளவில்லை! அதில்கூட முடிவெடுக்க
வக்கற்றுப் போய் ‘நபும்சகர்களைப்’ போல நடந்து
கொள்கிறது அரசு.
தாக்குதல், பாராளுமன்றத்தில்
நடந்தாலும் சரி, பம்பாயில் நடந்தாலும் சரி. தீர்மானமான நடவடிக்கை என்பது அரசியல்
வாதிகளுக்கு மறந்து போன ஒன்று. ஆளாளுக்கு பொறுப்பில்லாமல், மக்களை குழப்பும் விதமாக
அறிக்கை விடச் சொல்லுங்கள், அனைவரும் ரெடி!
ஓட்டுக்களுக்காக எதை வேண்டுமானலும்,
எப்படி வேண்டுமானலும், எந்த அளவுக்கும் கீழ்த்தரமாக பேசலாம் என்பது அவர்களது
சட்டவிதி.
காந்திஜி, நேதாஜி,
அம்பேத்கர்,ஜவஹர்லால், சர்தார் வல்லபாய் பட்டேல், பகத்சிங், பாரதி போன்றோர் கணவுகண்ட
இந்தியா இது தானா?
விடுதலைக்குப் பிறகு, அரசியல் தலைமை,
இந்தியா எந்த திசையில் பயணிக்க வேண்டும்
என்று முடிவு செய்ய திராணியற்றுப் போயினர் என்பது தான் உண்மை. இந்தியா தனது தேசீய
குணத்தை முற்றாக இழந்து நிற்பது எவரது கண்களுக்கும் புலணாக வில்லை.
தொலை தொடர்பு வசதிகள் ஏதுமற்று இருந்த
காலத்தில் கூட, ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலைகள்
இந்தியாவெங்கும் எழுப்பிய அதிர்வினில் சிறு பகுதி கூட, நமது அரசாங்கத்தால், நமது மக்களின் மீதே நடத்தப்படும்
தாக்குதல் குறித்து இல்லை. காஷ்மீர்
படுகொலைகள் பற்றி நாட்டில் எத்துனை பேருக்குத் தெரியும்? வச்சாத்தி வன்முறை பற்றி
இந்தியாவில் எத்தனை பேருக்குத்தெரியும்?
உள்நாட்டுப் பிரச்சினைகளைத்
தீர்ப்பதில் மட்டுமல்ல நமது
அரசுகளின் தோல்வி; வெளி நாட்டுக் கொள்கைகளில் கூடத்தான்.
நவீன காலத்தில், பணக்கார நாடுகள்,
அடுத்த நாட்டின் மீது படையெடுத்துத் தான், கொள்ளையடிக்க வேண்டும் என்ற நியதியை,
வெகு காலத்திற்கு முன்னரே மாற்றிக் கொண்டுவிட்டனர். மாறாக, மற்ற நாடுகளின்
அரசியல்-பொருளாதார கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்வதில்
ஈடுபடுகின்றனர். அந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
அவர்களது, நவீனமாக அடிமைப் படுத்தும்
யுக்திகளை, சுதந்திரப் போராட்ட்த்தின் போது காட்டிய தீவீரத்தோடு,
புத்திசாலித்தனமாக, நமது நாட்டைக் காப்பாற்றுவதிலும், நமது மக்களைக்
காப்பாற்றுவதிலும் காட்டியிருக்க வேண்டாம்?
மாறாக தற்போது இந்தியாவை ஆளும்
பெருமுதலாளிகள், சர்வதேச பெருமுதலாளிகளோடு கூட்டு சேர்ந்து கொள்ளைக்கு துணையல்லவா
போகின்றனரே?
பரிதாபம் என்னவென்றால்,மக்கள் இவை
குறித்து விழிப்புணர்ச்சி ஏதுமற்று இருப்பது தான்.
ஜாதியும், மொழியும், மதமும் தங்களை வெறியேற்றுவதை
அனுமதிக்காமல், நாங்கள் தான் 99%.
எங்களுக்காகத்தான் அரசு என புரிந்து கொண்டு, இலவசங்களிலும், சாராயத்திலும்,
சினிமாக்களிலும் மதி மயங்கிக் கிடக்காமல், கட்சி அரசியலை மட்டும் மனதில்
கொள்ளாமல், “உண்மையான அரசியல் அதிகாரம்” என்றால்
என்ன புரிந்து கொள்வார்களேயானால் மட்டுமே, நாட்டிற்கு விடிவுகாலம்.
அதுவரை நமது அரசியல் வாதிகளுக்கு
கொண்டாட்டம் தான்.
ஆனால் அப்படியெல்லாம் நடந்துவிடாதபடி மக்களைப் ‘பார்த்துக்
கொள்வதில்’ நம்மவர்கள் கில்லாடிகள்.
இது ஏதோ தீவீரவாத கட்டுரை என
நினைத்துவிடாதீர்கள். எனது நாட்டை நேசிப்பதால், “எமது மக்களின் அரசியல் விழிப்புணர்வு” கண்டு நொந்து போனதால் எழுந்த சில
வார்த்தைகள் தான்.
வாழ்க
இந்தியா!
No comments:
Post a Comment