“இப்ப என்னதான்டீ
சொல்றே?” ஷாலினியைப் பார்த்து இறைந்தாள் கற்பகம்.
“எத்தனை தடவை
சொல்றது? முன்னே பின்னே தெரியாத ஒருஆளை, என்னால் கட்டிக்க முடியாதும்மா!”
விஷயம் இதுதான். ஷாலினிக்கு வரன் தேடுகின்றனர், அவளது
பெற்றோர் ராகவனும், கற்பகமும்.
ஷாலினி சென்னையில்
ஒரு வங்கியில் ஆடிட்டராக பணிபுரிகிறாள். வயது இருபத்தி நாலாகிறது. தற்போது
பார்த்திருக்கும் வரனுக்கும் சென்னையிலேயே
வேலை. அவருக்கும் வங்கிப் பணிதான். ராகவனுக்கும் கற்பகத்திற்கும் இந்த வரன்
பிடித்திருக்கிறது. ஷாலினியின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது! திடீரென ஒருவனைக்
காட்டி இவன் தான் உனக்கு புருஷன் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். அவன்
யார்? அவனுக்கு என்னென்ன பிடிக்கும்? அவன் குணம் என்ன? அவனுக்கு பிடித்ததெல்லாம்
தனக்கும் பிடித்தாக வேண்டுமா? முதலில் அவன் மேல் தனக்கு காதல்..வேண்டாம்..
குறைந்தபட்சம் அன்பாவது உண்டாக வேண்டும் என்கிறாள்! இவை ஒன்றுமே இல்லாமல் காலையில்
தாலி கட்டிக் கொண்டு அன்று இரவே அவனோடு உறங்குவது என்ற ஏற்பாடு, அவளுக்கு
அறுவறுப்பாக இருக்கிறது. இதுவரை ‘நட்பு’ கூட உண்டாகாத ஒரு ஆளை கணவன் என்று ஏற்றுக்
கொள்வதில், அவளுக்கு உள்ள சங்கடத்தை அவளது தாயாரால் புரிந்து கொள்ளவில்லை!
“என்னடி சொல்றே?
ஒன்னா, பிடிக்குதுன்னு சொல்லு. இந்த வரனை முடிக்கறோம். இல்லே பிடிக்கலேன்னு சொல்லு! வேறு இடம்
பாக்கறோம். ரெண்டும் இல்லாம புதுசா ஒன்னு சொல்லாதே” என்கிறாள் கற்பகம்.
கடந்த ஒரு
வாரமாகவே வீட்டில் களேபரம். தினசரி அம்மாவுக்கும் பெண்ணுக்கும் சண்டை. சில சமயம் சாப்பிடாமலேயே
ஆபீஸுக்கு போகிறாள் ஷாலினி. இன்றும் அப்படியே!
இப்போது
கற்பகத்தின் கோபம் ராகவன் பக்கம் திரும்பியது.
“என்னத்துக்கு
இடிச்சபுளி மாதிரி, நாங்க ரெண்டுபேரும் சண்டை
போட்டுக்கொள்வதை வேடிக்கை
பார்த்துக்கொண்டு, இந்த வீட்டில்
உட்கார்ந்து கொண்டிருக்கீங்க? ‘உங்க’ பெண்ணிடம் பேச
மாட்டீர்களா? அவள் என்னதான் சொல்லுகிறாள்? அவளுக்கு என்ன வேண்டும்? அவளை எதுவும்
கேட்க மாட்டீர்களா?” என ராகவன் மீது பாய்ந்தாள்.
ராகவனுக்கு ஷாலினியைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவளை கட்டாயப்படுத்த
விரும்பவில்லை.
“ஆத்திரப்படாதே! இன்னிக்கு லன்ச் அவர்ல அவள் ஆபீஸுக்கு போகிறேன். பேசிப்
பார்க்கிறேன்” என்றார்.
“ஆமாம்.. வீட்டில் பேசிக் கிழிச்சாச்சு.. இப்ப ஆபீஸுக்கு போய்ப் பேசி
என்னத்தை சாதிக்கப் போறீங்க..?” என்றாள் கற்பகம்.
மதியம் ஒன்றரை மணிக்கு அவள் பணிபுரியும் வங்கிக்கு சென்றார். ஷாலினி லன்ச்
முடித்துவிட்டு, பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாங்கப்பா.. எதனாச்சும் முக்கியமான விஷயமா? சாப்பாட்டு நேரத்திலே
வந்திருக்கீங்களே? நீங்க சாப்பிட்டாச்சா?”
‘அதெல்லாம் ஆச்சு ஷாலு... நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?”
அந்த வரன் விஷயமாகத்தான் பேசப் போகிறார். “அப்பா, நீங்களும் அம்மா
மாதிரித்தான் பேசறீங்க.. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கெல்லாம் புரியாது. நான்
சொல்றதென்னன்னா...”
“அதெல்லாம்
தெரியும் ஷாலினி! நீ யாரையாவது விரும்பிறியா? அப்படியான தயங்காம சொல்லு. நீ
விருப்பப்படும் பையனையே கல்யாணம் செய்து வைக்கிறேன்.” என்றார்.
“இந்த
ஜென்மத்துக்கு உங்களுக்கெல்லாம் புரியப் போவதில்லை! நீங்கள் சொல்வது போல, அப்படி ஒரு பையனை எனக்கு
பிடித்திருந்தால், உங்கள் அனுமதிக்காக
காத்துக் கொண்டிருக்க மாட்டேன்.. தெரியுமா?”
எரிச்சலுடன், விருட்டென தன்
ரூமிற்குச் சென்றுவிட்டாள் ஷாலினி.
சற்று நேரம், வெறுமனே உட்கார்ந்திருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினார் ராகவன்.
ராகவன்-கற்பகம்
தம்பதிக்கு இரு பெண்கள். இளையவள் மைதிலி. பி.டெக்
இறுதியாண்டு சென்னையில் படிக்கிறாள். காம்பஸ் செலக்ட் ஆகிவிட்டது.
ஷாலினிக்கு,
மைதிலி மீது பிரியம் அதிகம். மேலும், வயது வித்தியாசம் குறைவு என்பதால், எல்லா
விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். மிகுந்த அன்னியோன்யம். மைதிலி, தனது அக்காவை பெயர்
சொல்லித்தான் கூப்பிடுவாள்.
அன்று இரவு, தனது
அறையில் படித்துக் கொண்டிருந்தாள் ஷாலினி.
அப்போது, மைதிலி வந்தாள்.
“சொல்லுடீ..!”
“இதோ பார் ஷாலு...உனக்கு பார்த்திருக்கும் வரன் விஷயமாகத்தான் பேச வந்திருக்கேன். இந்த விஷயத்தில், உனக்கு மூணு ஆப்ஷன் இருக்கு!
ஒன்னு, கல்யாணமே செய்துக்க மாட்டேன் என்று, கறாரா சொல்லிவிடு.
இல்லாட்டி உனக்கு புடிச்ச பையனை கட்டிக்க. அப்படி, நீ யாரையும் ‘லவ்’ பண்ணலேன்னா அம்மா-அப்பா பாக்குற பையனை செய்துக்க. இதில் எதுவுமே செய்யாம, எல்லாரையும்
போட்டு அனாவசியத்துக்கு குழப்பாதே.”
“நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு
யாருகிட்டேயும் டிக்ளேர் பண்ணல. எனக்கு பிடிச்ச பையனை பாத்தேன்னா
கட்டிக்குவேன். அந்த “ஸ்பார்க்” , எனக்கு இன்னும் வரலை. அம்மா சொல்றாங்க என்பதுக்காக, எவனோ ஒருத்தனை புருஷனா ஏத்துக்க முடியாது. அதுவுமில்லாம, இந்த நிமிஷமே சொல்லுன்னு ஏன் உயிரை எடுக்கறாங்க?
கொஞ்ச நாள் போகட்டுமே?”
‘ஏண்டீ.. நெஜமாத்தான் கேக்கறேன்! உனக்கு “அது சம்பந்தமான உணர்வு“ இருக்கா, இல்லியா? கல்யாணம்னாலே காது சிவக்கலை? மனசு படபடக்கவில்லை? கொஞ்சம் மதப்பா இல்லே?
“நீ நிறைய தமிழ் சினிமா
பாக்கும் போதே நினச்சேன். இந்த மாதிரி ஏதாவது
பெனாத்துவேன்னு தெரியும்......”
சட்டென்று, ஷாலினிக்கு எல்லாம் பிடிபட்டது! “ஏய்.. மைதிலி, கண்டுபிடிச்சுட்டேன். யு ஆர் இன் லவ்! கரெக்ட்? யாருடீ
உன் ஆளு?”
சொன்னாள். மைதிலிக்கு ஒருவருடம் சீனியராம்.
எம்.என்.ஸியில், சென்னையிலேயே வேலை பார்க்கிறானாம். அந்த கம்பெனியில் தான்
மைதிலியும் வேலைக்கு சேரப்போகிறாளாம் .
“நான் வேலைக்கு சேர்ந்ததுமே, மேரேஜ் செஞ்சுக்கலாம்ன்னு
சொல்றார்டீ.. எனக்கும் அதில் இஷ்டம் தான்”
‘எனக்காக நீ, அந்த பேங்க் வரனை
கட்டிக்கோன்னு சொல்லவரலை. நீ சொல்றதில லாஜிக் இல்லைன்னு சொல்றேன். வீணா
அம்மா,அப்பா கஷ்டப்படராங்க. அதுவுமில்லாம, உனக்கு பாத்துருக்கும் பையன்
நல்லாத்தான் இருக்கான்.”
என்றாள் மைதிலி.
“உன் ‘லவ்’ மேட்டரை, ஏங்கட்ட கூட சொல்லாம மறச்சுட்டேல்ல...”
“இந்த விஷயத்தையெல்லாம் ரொம்ம நாள் மறைக்க முடியாது டீ. உனக்கு செட்டில் ஆகட்டும்,
அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன். என்
மேட்டரால், உன் கல்யாணத்திற்கு ஏதும் பிரச்சினை ஆயிடக்
கூடாது! அதனால்தான் உன்னிடம் சொல்லலை. நீ எந்த வழிக்கும் ஒத்து வராம முரண்டு பிடிக்கிறதுனால, உங்கிட்ட மட்டும், இப்ப சொன்னேன். உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவேன்?
எனக்கென்னவோ நீ இந்த வரனை வேண்டாம்ங்கிறது சரியா படலை. அதுவுமில்லாம நீ கடைசிவரை கன்னியாகவே இருக்கப் போறியா, இல்லியே? எனக்கென்னவோ நீ லவ் பண்ணுவேன்னு தோணலை! ஆகையினாலே இப்ப பாத்திருக்கும் வரனே பரவாயில்லைன்னு
தோணுது! ”
"எனக்காக கேக்கறேன்னு நினைக்காதே! உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்!"
'ரொம்பவும் டயலாக் விடாதே! நீ நினைச்ச மாதிரியே உன் ஆளை கல்யாணம் செய்துக்கலாம்! அதுக்கு நான் பொறுப்பு. கவலைப் படாமல் போய்த்தூங்கு!" எனறாள் ஷாலு.
எனக்கென்னவோ நீ இந்த வரனை வேண்டாம்ங்கிறது சரியா படலை. அதுவுமில்லாம நீ கடைசிவரை கன்னியாகவே இருக்கப் போறியா, இல்லியே? எனக்கென்னவோ நீ லவ் பண்ணுவேன்னு தோணலை! ஆகையினாலே இப்ப பாத்திருக்கும் வரனே பரவாயில்லைன்னு
தோணுது! ”
"எனக்காக கேக்கறேன்னு நினைக்காதே! உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்!"
'ரொம்பவும் டயலாக் விடாதே! நீ நினைச்ச மாதிரியே உன் ஆளை கல்யாணம் செய்துக்கலாம்! அதுக்கு நான் பொறுப்பு. கவலைப் படாமல் போய்த்தூங்கு!" எனறாள் ஷாலு.
அடுத்தனாள் ஆபீஸ்
புறப்படும்போது அப்பாவிடம் சொன்னாள். “அப்பா.. இந்த பாங்க் வரனை முடிச்சுடுங்க.” என்றாள்.
பாய்ந்தோடி
வந்தாள் அம்மா சமையாறையிலிருந்து! “நெஜமாவாடி சொல்றே?”
“ஆமாம்..”
‘அந்த கருமாரியம்மன் தான் உன் மனசை மாத்தியிருக்கா’ அம்மனுக்கு மஞ்சள் துணியில் காசு முடித்துவைக்க ஓடினாள், கற்பகம்.
ஒருவேளை, தான்
நேற்று ஆபீஸில் போய்ப் பேசியதால்தான், கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டாளோ என
யோசித்தார் ராகவன்.
அடுத்த ஒருமாதத்தில்
திருமணம் நன்றாக நடந்தது.
ஷாலினி
ஒத்துக் கொண்டு கல்யாணம் செய்து கொண்டாலும், , கற்பகத்திற்கு, மகள் பற்றிய பீதியுடனே இருந்தாள். “எந்த
நிமிஷத்தில் என்ன சண்டை போட்டுக்கொண்டு வந்து
நிற்பாளோ” என்ற கிலி அவள் மனதில் ஒரு ஓரமாக இருந்து கொண்டுதான் இருந்தது.
ஷாலினி சொன்ன ‘அறுவறுப்பாய்
இருக்காது?” என்ற வார்த்தைகள் அவளை பயமுறுத்திக்கொண்டிருந்தது.
“அந்த சப்ஜெக்டைப் போய் பெற்ற பெண்ணிடம் எப்படிக் கேட்பது?” என சங்கோஜப்பட்டாள் கற்பகம்.
‘ஏங்க,. ஷாலு
புகுந்த வீட்டில் அனுசரிக்சுப் போவாளா? எனக்கு பயமாயிருக்குங்க..” என்றாள் ராகவனிடம்.
திருமணம் முடிந்து, இரு நாள் கழித்து, ‘மறுவீடு அழைப்பிற்காக’ மாப்பிள்ளையும், ஷாலுவும் அன்று காலை வந்தார்கள். ஷாலுவின் மாடியறையை
ஒழுங்கு செய்து வைத்திருந்தார் ராகவன்.
ஷாலுவின் முகபாவத்தைப்
வைத்து ஏதும் கண்டுபிடிக்க முடிய வில்லை, கற்பகத்தால்.
அடுத்த நாள் காலை. இன்னமும், மாடியிலிருந்து ஷாலுவும், மாப்பிள்ளையும் கீழே வரவில்லை.
டிபனுக்கு
இட்லியும், தோசையும் செய்திருந்தாள் கற்பகம். தொட்டுக் கொள்ள சட்னிக்கு அரைக்கும்
போது, கிழே வந்தாள் ஷாலு.
‘அம்மா..
சட்டினிக்கு இத்தனை மிளகாய் போடாதே.. அவருக்கு காரம் ரொம்ம பிடிக்காது”. மிக்சி ஜாருக்குள் கையை விட்டு, நாலு மிளகாயை எடுத்து, வெளியே போட்டாள். பின், அவளுக்கும், மாப்பிள்ளைக்குமாய் காஃபி எடுத்துக் கொண்டு மாடிக்கு விரைந்தாள்.
கற்பகத்துக்கு,
சந்தோஷத்தில் கண்ணீர்! “தேவி கருமாரி, என்னைக் காப்பாத்தி விட்டாயடீ!” என்றாள்
“இந்த கூத்த
பாத்தீங்களா?” என்றாள் ராகவனிடம்.
“எல்லாம் பாத்துக்கிட்டுத்தான்
இருக்கேன்.”
“கல்யாணத்துக்கு
ஒத்துக்கறதுக்கே, என்னெவெல்லாம் மாய்மாலம் செஞ்சா உங்க பொண்ணு? இப்ப என்னடான்னா, கல்யாணம்
ஆன ரெண்டாம் நாளே, புருஷனுக்கு காரம் ஆகாதுன்னு ஓடி வர்ராள், பாத்தீங்களா?”
‘கற்பகம், நம்ம
நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பகுதியான பெண்கள், ‘அந்த முகம் தெரியாத கணவனுக்காக’,
அன்பையும்
காதலையும், மனதில், நாளும் பொழுதும், சேர்த்துக் கொண்டே
இருக்கிறார்கள். அவனுடன் மானசீகமாக
வாழ்கிறாள். சல்லாபிக்கிறாள். ஏன், சண்டை கூட போடுகிறாள். அவளே தேடிக்கொண்டாலோ, அல்லது நாம் அடையாளம் காட்டினாலோ, அவள் சேர்த்து
வைத்திருந்த காதலையெல்லாம் அவன் மீது பொழிய ஆரம்பித்து விடுகிறாள்.
சில கலாச்சார
தாக்கங்களினால், இந்த மரபினை, அவர்களது அறிவு ஒத்துக் கொள்வதில்லை, அல்லது ஒத்துக்
கொள்ள தயங்குகிறது. சரியோ, தப்போ, நமது நாட்டு பெண்களின் இரத்தத்தில் இது ஊறிப்
போயிருக்கிறதே!”
“என்னிக்குத்தான்
நீங்க புரியறமாதிரி பேசுவீங்களோ தெரியலை.
டேபிளில் கோதுமை கஞ்சி இருக்கு, குடிச்சுடுங்க, அப்புறம், சுகர் ‘லோ’ ஆயிடும்”
-0-
மிகவும் நல்லாயிருக்கு சார். எழுதியமைக்கு நன்றி.
ReplyDeleteThanks "Hollywood Rasikar".
ReplyDeleteகடைசி பத்தி முத்தாய்ப்பு...
ReplyDeleteநல்லா இருக்கு....
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க சார்..
ReplyDelete