பெண்ணுக்கு (மனைவிக்கு) எந்த வயதாக
இருந்தாலும், ஆணுக்கு (கணவனுக்கு) 60 வயது
முடிந்து 61 துவங்கும் போது, சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். பசு
பூஜை, கஜ பூஜை, கலச பூஜை என யாவும் முடிந்து, அபிஷேகம் ஆனபின், மனைவிக்கு மீண்டும்
ஒரு தாலி கட்டு கிறார் கணவன். திருக்கடையூர் கோவிலில் இந்த சஷ்டியப்த
பூர்த்தியினை செய்து கொண்டால் விசேஷம் என்கின்றனர். ஏன்? முன்னொரு காலத்தில், மிருகண்டு முனிவர்-
மருத்துவதி தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததாம்.
முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் புரிய, தவத்திற்கு இறங்கிய சிவன், "உனக்கு அறிவுள்ள குழந்தை பிறந்தால் 16 ஆண்டுகளே
உயிர் வாழும். அறிவற்றவன் பிறந்தால், நீண்டநாள்
வாழும், இதில் எந்தக் குழந்தை வேண்டும்?"
எனக்கேட்டாராம்!
மிருகண்டு திகைத்தார். அறிவுள்ள குழந்தையே வேண்டும் என தீர்மானித்தார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். மார்க்கண்டேயனுக்கு 16 வயது வந்தது. மார்க்கண்டேயன் சிவத்தலங்களுக்குச் சென்றார். 107 சிவத்தலங்கள் சென்ற மார்க்கண்டேயன் 108வது தலமாக திருக்கடையூர் வருகிறார். இவரது வாழ்வின் இறுதி நாளும் வந்து விடுகிறது. உயிரைப் பறிப்பதற்காக எமன் கோயிலுக்கே வந்து விடுகிறார். எமனைக்கண்ட மார்க்கண்டேயன், சிவலிங்கத்தை கட்டிக்கொண்டார். இருந்தாலும் எமன் விடவில்லை. மார்க்கண்டேயரது உயிரைப்பறிப்பதற்காக எமன் பாசக்கயிறை வீச, அந்தக்கயிறு சிவலங்கத்தின் மீது விழுகிறது. கோபம் கொண்ட சிவன், "எனக்குமா பாசக்கயிறு” என வெகுண்டு, எமனை அழித்துவிடுகிறாராம். இதனால் பூமியில் இறப்பே இல்லாமல் போக, பூமி பாரம் தாங்காத பூமாதேவியின் வேண்டுதலால் சிவன் மனமிறங்கி எமனுக்கு உயிர் தந்தாராம்.
எனவே இங்கு “சஷ்டியப்த பூர்த்தி” செய்து கொண்டால், என்றும் 16-ஆக இருக்கலாம் என்ற அவா கொண்டு,
பலர் இங்கு வந்து இந்த விசேஷத் தினை செய்து கொள்கின்றனர். இது சஷ்டியப்த பூர்த்தி தலம்: 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும், 60வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும், 69 வயது முடிந்து 70 வயது தொடங்குபவர்கள் பீமரதசாந்தி பூஜையும், 80வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமமும் செய்வதற்கு ஏற்ற தலமாம்..
எனது அடிப்படைச்
சந்தேகம், தனது கடமையினைச் செய்ய வந்த எமன் எதற்காக அழித்தொழிக்கப்பட வேண்டும்? யமனுக்கான
சட்ட திட்டங்களை வகுத்ததே சிவன் தானே? மேலும், மார்க்கண் டேயனுக்கு 16 வயதுதான்
ஆயுள், என நிர்ணயித்ததே சிவன் தானே? பெரிய இடத்தைக் கட்டிக் கொண்டால் (!),
ஆபத்த்திலிருந்து தப்பிக்கலாம் என்பது, தப்பான, ஆபத்தான் உதாரணமல்லவா? இருக்கட்டும்!
இதெல்லாம் அவரவர்கள் நம்பிக்கையின்பாற் பட்டது!
இதுவரை சுமார் இருவது முறையாவது, நண்பர்கள்-உறவினர்கள் என, இந்த ஊரில் நடைபெற்ற 'சஷ்ட்டியப்த பூர்த்திகளுக்கு" சென்று வந்துள்ளேன். எல்லா சஷ்ட்டியப்த பூர்த்தியிலும் புரோகிதர்கள், மறக்காமல் ஒரு ஜோக்(!) அடிக்கின்றனர். “சாருக்கு (ஆணுக்கு) இன்று
முதல் 61. திருப்பிப் போடுங்கள்! 16 ஆகிறது. எனவே இன்று முதல் 16 வயது
வாலிபனாகிறார்”
என்பதும், அதற்கு தம்பதிகள் அசடு
வழிந்துகொண்டு இளிப்பதும், மாறாது நடைபெறுகிறது.
சென்ற வாரம்
இம்மாதிரியான ஒரு நிகழ்விற்கு, அந்த ஊருக்கு செல்ல நேர்ந்தது. அங்கு நடந்தவைகளைக் கண்டு அசந்து
போனேன்!
மருத்துவ மனைகள்,
கல்விக் கூடங்கள், தொண்டு நிறுவனங்கள் யாவும் ‘வியாபார தலமாகிவிட்டது’ என அலுத்துக்
கொள்கிறேமே, இங்கு வந்து பாருங்கள். முழுமையான வியாபாரம் என்றால் என்ன என்று
தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய மண்டபத்தில்
விசேஷம் நடத்த உச்ச கட்டணம். சுற்று பிரகாரத்திற்கு வேறு வகையான கட்டணம். அம்மன்
கோவிலில் கொஞ்சம் மலிவு. (சுவாமியாக இருந்தாலும் கூட, பெண் என்றால், மதிப்பு
குறைவுதான் போலும்).
தங்குமிடம், உணவுக்
கூடம், மாலை, வீடியோ என எல்லாவற்றிலும் ஏறிய விலை விற்கிறார்கள். புரோகிதர்களின்
சம்பளம் (ஸம்பாவனை) உட்பட. எல்லாமே 'காண்டிராக்ட்' பேசிஸ் தான்.
தம்பதிகளுக்கு,
அபிஷேகம் ஆனபின் உடை மாற்ற வேண்டு மல்லவா? அந்த உடைகளை அங்கேயே
போட்டுவிடவேண்டுமாம். இது எந்த சாஸ்த்திரம் என புரியவில்லை. ஒரே சமயத்தில் 30
தம்பதிகளுக்கு அபிஷேகம் ஆனாலும் சரி. கழுகு போல, இதற்காக (உடைகளை எடுத்துக் கொள்ள)
ஆட்கள் காத்திருக்கிறார்கள். எங்கேயிருந்து கவனிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவிழ்க்கப் பட்ட
உடைகள், உடனடியாக கவர்ந்து கொள்ளப்படுகின்றன. கொஞ்சம் தாமதப் படுத்தினால், உருவிக்
கொண்டு விடுவார்கள் போல! நமது உடைகளை எடுத்துக் கொள்ள ‘தட்சனை’ வேறு தனியாக கேட்கிறார்கள்.
அபிஷேகத்தின் போது,
தம்பதிகள் கழுத்தில் போட்டிருந்த மாலையை, உடைமாற்றும் போது கழற்றி
கொடுத்தனர். கொஞ்ச நேரம், அதைக் கையில்
வைத்திருந்தேன். பின், இவைகளை என்ன செய்வது எனத்தெரியாமல், மாலைகளை பிரகாரத்தில்,
ஒரு ஓரமாக வைத்தேன். ‘விறுவிறு’ வென வந்தார் ஒருவர். ‘சரட்டென’ அந்த மாலைகளை கவர்ந்து கொண்டார். அது எங்களுடைய மாலை என சொல்ல
நினைத்தேன். என்னதான் செய்யப் போகிறார் என்ற ஆவல் தோன்ற, சற்று நிதானித்தேன்.
சற்றும் தயங்காமல், பக்கத்து மண்டபத்தில், வேறு யாருக்காகவோ போடப்பட்டிருந்த ‘கலசங்களுக்கு’ இந்த மாலைகளை அணிவித்தார். அடப்பாவிகளா!
இது மாத்திரமல்ல, தானமாக
அளித்த பச்சரிசி, வாழைக்காய் மற்றும் கலச தேங்காய், என யாவும் ரீ-சைக்கிளிங் செய்யப் படுகின்றன.
யாரோ ஒரு சூத்திரதாரி மறைவில் நின்று இயக்குவது போல, அனைத்து ரீ-சைக்கிளிங்கும்,
முறையாக, திட்டமிட்டபடி, ஒரு தவறும்-குழப்பமும் இல்லாமல் நடந்தேறுகின்றன. இது தவிர, நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும்,
ஒப்புக்கொள்ளப்பட்ட தொகைக்கு மேலாக ‘உங்களிஷ்டப்படி போட்டுக் கொடுங்கள்’ என்ற கோரிக்கை வந்தவண்ணம் இருக்கும்.
வியாபாரத்தனங்களும்,
பிழிந்தெடுக்கும் கூட்டமும், வியர்வையும், அழுக்கும் அலுப்பெற்ற, சற்று காலார வெளியே
வரலாம் என நினைத்து கோவிலின் வெளியே
வந்தேன்.
கோயிலின் வெளியே
இரண்டு தொல்லைகள்! ஒன்று பிச்சைக்காரர்கள். காசு கொடுக்காவிடில் “வாய்விட்டே’ சபிக்கிறார்கள். எப்போதும்
போல, வயதானவர்களுக்கு மாத்திரம் கொடுத்துவிட்டுத் தப்பித்தேன்.
மற்றொன்று நாய்கள்
கூட்டம். சிறிதும் பெரிதுமாக, ஒரு ஐம்பது தேறும். அதில், ஒரு குட்டி நாய்க்கு என்ன
தோன்றியதோ தெரியவில்லை! அத்தனைக் கூட்டதில், குறிப்பாக, என்னைத் தேர்ந்தெடுத்து,
கால் விரல்களைக் கவ்வியது. அதைக் கவ்வியது என்றுகூட சொல்ல முடியாது! கிட்டத்தட்ட கடித்துக்
கொண்டு தொங்கியது. குருதி பீரிட, நாயை உதறிவிட்டு, உள்ளூர் "பிரைமரி ஹெல்த்
சென்டரை" நோக்கி விரைந்தேன். நல்ல வேளையாக
டாக்டரும், நர்ஸ்களும் இருக்க, முதல் கோர்ஸ் இன்ஜெக்ஷன் ஆயிற்று.
அன்றைய தினத்தில்,
நாயின் பாசக்கயிற்றிலிருந்து காப்பாற்றிய, உள்ளூர் மருத்துவமனைதான்,
அமிர்தகடேஸ்வராகத் தோன்றினார்.
// எனது அடிப்படைச் சந்தேகம், தனது கடமையினைச் செய்ய வந்த எமன் எதற்காக அழித்தொழிக்கப்பட வேண்டும்? //
ReplyDeleteகடமையை ஒழுங்காக செய்யவில்லையே. அவன் ஏன் பாசக்கயிறை சிவன் மேலும் வீசவேண்டும்? மார்க்கண்டேயனை மட்டும் இழுத்துச் சென்றிருக்கலாமே?
இது எப்படி இருக்கிறதென்றால் கைது செய்ய சென்ற போலீஸ் பக்கத்தில் இருந்தவரையும் இழுத்து செல்லும்போது நாம் டென்ஷன் ஆவதில்லையா? அதுபோல தான்.
கூறியதில் தவறிருந்தால் மன்னிக்கவும்.