“படிப்பு” - புத்தக விமரிசனம்.
-0-
சப்தமின்றி,
ஆரவாரமின்றி, மேல்பார்வைக்கு பரம சாதுவாக தோற்றமளிக்கும் ஒரு ‘சூறாவளி’ யைப் படித்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட
ஒரு நாவல் தான் “படிப்பு”. கதையின் ஆரம்பம், அந்தகால ‘லட்சுமி’ நாவல் போல
துவங்குகிறது. ஆஹா.. “ஒரு தேவையற்ற புத்தகத்தை வாங்கிவந்து விட்டோமோ”
என்ற சந்தேகம்,
பத்தாம் பக்கத்தை தாண்டுவதற்குள், தவிடுபொடியாகியாகிறது!
ஒரு குடும்பக் கதை, அரசியல்-பொருளாதார பின்னனியுடன், ஒரு தீவீரமான சமூகப்
பார்வையில் சொல்லப்படுகிறது. கதையின் நிகழ்வு தோராயமாக 1915-1935 களில் நிகழ்வதாகக்
கொள்ளலாம். அக்காலத்திய குடும்பப்பின்னனிக்
கதையில், இத்தனை சாகசங்களை, பக்கத்துக்கு பக்கம் எப்படி சாத்திய மாக்கினார், அதுவும் 40
ஆண்டுகளுக்கு முன்னால் என்பது தீராத ஆச்சரியம். ஒவ்வொரு அடுத்த பத்திக்கும்,
ஆசிரியர் ஒளித்து வைத்திருக்கும், ‘பொடிகளும்-வெடிகளும்’
ஏராளம்-ஏராளம்.
கதாசிரியர், கதையின் ஓட்டத்தில், சொல்லிச் சென்ற விஷயங்களை விட,
சொல்லாமல்விட்ட செய்திகளை எண்ணி விடுவது சுலபம். துளிக்கூட செயற்கைத்தனமோ-நாடகத்தனமோ இல்லாமல், மணிப்பிரவாகமாக
செல்கிறது கதை.
பால்யவிவாகம், அக்கால குடும்ப-கிராம கட்டமைப்பு, ஏழ்மை, இசை, நாடகம்,
இலக்கியம் என அனைத்தும் கதையை ஒட்டி, காட்டாறு போல கூடவே ஓடி வருகிறது. நாட்டின் விடுதலைக்கு முன்னால் நடந்த கதை
என்பதால், சுதந்திரப் போராட்டத் தருணங்கள், ஒரு சாமானியனின் பார்வையில், மிகை
ஏதுமின்றி, யதார்த்தமாக, பாசாங்குகளற்று, நேர்மையாக சொல்லப் பட்டிருக்கிறது. சொல்லப்
பட்டிருக்கிறதென்ன? ஒரு சித்திரமாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது!
ஒரு உன்னதமான ‘திரில்லருக்கு’ நிகரான சுவாரஸ்யம், கதை முழுவதும் காணக் கிடைக்கிறது. கதையின் வர்ணனைகள் யாவும், துல்லியமானவை!
நுணுக்கமானவை! இயல்பானவை! உண்மை அனுபவத்திற்கு வெகு அருகாமையில் உள்ளவை.
காந்திஜியும், சாவர்கரும், திலகரும் கூட சமகால தலைவர்களாக, ஒரு எளிய
மனிதனின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்! ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட் சட்டம், அன்னிய
துணி எரிப்ப்பு (அது குறித்து சாமானியனின் விமரிசனம், குறித்துக்
கொள்ளப்படவேண்டியவை), ஒத்துழையாமை இயக்கம் என அக்காலத்திய நிகழ்வுகள் யாவும்
சொல்லிச் செல்லப்பட்டிருக்கிறது என்பது கூட முக்கியமில்லை; அவை யாவும் தினசரி
குடும்ப நிகழ்வோடு ஒப்பிட்டுக் காண்பித்திருப்பது ஆச்சரியம். குறிப்பாக,
காந்தியின் ‘ஒத்துழையாமை’ இயக்கம், ‘
வீ ட்டுப்பெண்களின் தினசரி செயல்பாடுகளோடு’ போகிற
போக்கில்
ஒப்பிட்டு சொல்லியிருப்பது திடுக்கிட வைக்கிறது! ‘அரசியல் மூடநம்பிக்கை’ போன்ற பதப்
பிரயோகங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
குறிப்பிடத்தக்க விஷயம், கதை ‘சுந்தரம்’ என்ற நான்கு வயது
சிறுவனின் பார்வையில் துவங்குகிறது. அவன் வளர, வளர, அவன் பார்வையிலேயே கதையும் கூடவே வளருகிறது! புத்தகத்தை முடிக்கும்
பொழுது, ‘சமூக மாற்றங்களை விரும்பிய’, பாரதி போன்றவர்களை ஒருசேர தரிசித்த அனுபவம்
கிடைக்கிறது. உன்னதமான நாவல். படிக்க வேண்டியவை லிஸ்ட்டில் இடம்பெற வேண்டிய புத்தகம்.
சாஹித்ய அகதெமி நாவல்கள் (மொழிபெயர்ப்பு செய்யப் பட்டவை) யாவும், அட்டையின்
அடுத்த பக்கத்திலிருந்தே ஆரம்பித்து விடுகிறது. எழுதப்பட்ட காலத்தில் எதிர்கொண்ட
விமரிசன்ங்கள், முன்னுரை போன்றவை இருந்திருந்தால் இன்னமும் ரசிக்கலாம். இப்படிப்பட்ட ஒரு நாவலை, அதன் மூலத்தில் படிக்க
மிகுந்த அவா கொண்டேன். ஆனால் தெலுங்கு தெரியாதே! (இதன் ஆங்கில வடிவமும் கிடைக்கிறது. பெயர்: "SUNDARAM LEARNS")
========================================================================
புத்தகத்தின் பெயர்: “படிப்பு”
ஆசிரியர்: “கொடவடிகன்டி குடும்பராவ்”
தமிழில்: “இளம்பாரதி”
வெளியீடு: “சாகித்ய அகாதெமி”
பக்கம்: 248
விலை: ரூ. 85/-
========================================================================
nalla vimarsanam.... vaalththukkal
ReplyDelete