கடலூரை சூரையாடிய
புயலினால் தடைபெற்ற மின்சாரம், பத்து நாட்களுக்குப்பின், சற்றுமுன் (௦07/01/2011 - 1900 hours) சீரடைந்தது.
கடந்த சில நாட்களாக மக்கள் தண்ணீருக்கு மன்றாடியது போன்ற பிரச்சினைகள் பல
இருந்தாலும், வேறு சில நல்ல விஷயங்களும் காணக் கிடைத்தன.
அலுவலகம் முடிந்து
வந்ததும் தொலைக்காட்சி முன்னால் மக்கள் தஞ்சமடைய முடியவில்லை! வாசற்கதவுகள்
அடைக்கப் படவில்லை! பெண்கள் சீரியல்களில் புகுந்துகொண்டு, கண்ணீர் சிந்தவில்லை! “வீடியோ
கேம்” எனும் மாய உலகில் சிறுவர்கள் விளையாடவில்லை!
நிலவொளியில், வீட்டைவிட்டு
வெளியில் வந்து, ஆண்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவினர். அரட்டையானாலும் பெண்கள்
பக்கத்து வீட்டினரோடு பேசினர். மிக முக்கியமாக சிறுவர்கள் வீடுகளின் முன்னால் கட்டுமானத்திற்காக
குவிக்கப் பட்டிருக்கும் மணற்குன்றுகளில் விளையாடினர். “ஓடிவிளையாடு பாப்பா..” என்ற வரிகள் நிஜமாயின.
இதோ, மின்சாரம்
வந்துவிட்டது! தெருவில் விளக்குகள் எரிகின்றன. ஆனால், தெருக்களில் மனிதர்களைக்
காணோம்! வீடுகளெங்கும் தொலைக்காட்சி அலற
ஆரம்பித்துவிட்டது. பெண்கள் சீரியல்களில் ஆழ்ந்து விட்டனர். வீடுகளின் முன், இன்னமும்
மணற்குவியல்கள் இருக்கின்றன. ஆனால் விளையாட குழந்தைகள் இல்லை! மனிதர்கள் மீண்டும் தத்தமது
வளைகளில் புகுந்து கொண்டனர்.
இன்னும் இரண்டு
நாள் கழித்து,மின்சாரம் வந்திருக்கக் கூடாதா?
that's true sir
ReplyDelete