Saturday, February 11, 2012

ஏ.டி.எம்

அக்காலத்தில் ஒன்றாம் தேதிக்காக காத்துக் கொண்டிருந்த நேரங்களும், அந்த தேதி கொடுக்கும் குதூகலமும் தனித்துவமானவை. முதல் தேதி என்று ஒரு திரைப்படமே வந்தது; சிவாஜி  நடித்தது. முதலிரவில் மணமகன் மணமகளுக்காகக் காத்திருக்கும் அனுபவத்தையொத்தது, ஒன்றாம் தேதியன்று, மத்தியதரத்தினர் சம்பளத்திற்காகக் காத்திருப்பது.

சம்பளதின கரண்சித் தாள்கள் தரும் சுகம் அலாதியானது. அவற்றை பான்டின் ரகசிய பாக்கட்டினுள் ஒளித்து வைத்து, வீட்டிற்கு கொணருவதும், மனைவிக்கும் குழந்தைகளுக்கும், அன்று, ஏதேனும் தின் பண்டங்கள் வாங்கிவருவதும், அக்காலத்திற்கே உரித்தான இன்பங்கள். சடங்குகள்.

சம்பளம், நேரிடையாக ஆன்லைனில் அவரவது பாங்க் அக்கவுண்டில் போடப்பட்டு, நாம் ஏ.டி.எம் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் முறை வந்தபின்னும், கிம்பளங்கள் பெருகிய பின்னும், ஒன்றாம் தேதி தனது திரில்லையும், முக்கியத்துவத்துவதையும் இழந்தது.

எனது அலுவலக ‘நண்பிஒருவரின் முகத்தில் எப்போதும் ஒரு சோகமும், சலிப்பும் இருந்து கொண்டே இருக்கும்! ஏதோ குடும்பப் பிரச்சினை போல! அதையெல்லாம் கேட்பது நாகரீகமன்று என்பதால் வினவுவதில்லை! அவருக்கும் கூட, ஒன்றாம் தேதி குதூகலத் தேதியாகிவிடும் விந்தையைக் கண்டிருக்கிறேன்.  ஏ.டி.எம் வந்தபின், அந்த பெண்மணிக்கு அந்த ஒரு நாள் மகிழ்ச்சியும் விடை பெற்றுக் கொண்டது.  அவரது கணவன் அப்பெண்மணியின் ஏ.டி.எம் கார்டையும், பின் நெம்பரையும் வாங்கிக் கொண்டு விட்டாராம். இதனால், இன்கிரிமெண்டோ, பதவி உயர்வோ எதுவும் அவரது முகத்தில் எந்தவித மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததில்லை.  அவர், அவரது வீட்டிற்கு பணம் கொண்டுவரும் ஒரு மெஷின் அவ்வளவே!  “பெண்களும் ஏ.டி.எம் கார்டுகளும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமளவிற்கு சில சந்தோஷங்களும், சோகங்களும் உள்ளன. அவை பின்.

சில தினங்களுக்கு முன் பணம் எடுக்க ஏ.டி.எம்-க்கு செல்ல நேர்ந்தது. வண்டியை நிறுத்திவிட்டு வரிசையில் நிற்க எத்தனிக்கும் போது, ஒரு பெண்மணி  அதே நோக்கத்திற்காக டூ வீலரில் வந்திறங்கினார். வண்டியை நிறுத்தும் போது, அவரது துப்பட்டா, வண்டி ஸ்டேன்டில் சிக்கிக் கொண்டது.  இக்கட்டான சூழலாதலால், விரைந்து சென்று அவரது வண்டியைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு, அவரது துப்பட்டாவை விடுவித்துக் கொள்ள உதவினேன். காரியம் முடிந்தது. அதி விரைவில் என்னைக் கடந்து, ஏ.டி.எம் வரிசையில் எனக்கு முன்னால் நிற்க முயன்றார். தாராளமாக நீங்களே முதலில் செல்லலாம் என வழிவிட்டு விட்டேன்.

அவரது முறை வந்தது.  ஏ.டி.எம் அறையினுள் சென்றார். சிறிய கண்ணாடியை எடுத்து, மேக்கப்பை சரிசெய்து கொண்டார். தனது கைப்பையினை ஏ.டி.எம் மெஷின் மேல் வைத்தார். மறைவான இடத்திலிருந்து டெபிட் கார்டை எடுத்தார். ஏதேதோ எண்களை அழுத்திய வண்ணமிருந்தார். பின் நெம்பரை மறந்துவிட்டாரோ? ஒரு ஐந்து நிமிட போராட்டத்திற்குப் பின் அவருக்கு பணம் கிடைத்து விட்டது.  பணத்தையும், கார்டையும் எடுத்துக் கொண்டு, எனக்கு வழி விட்டார்.

உள்ளே சென்று பார்த்த பொழுது அப் பெண்மணி தனது கைப்பையினை ஏ.டி.எம் மெஷின் மேலேயே வைத்துவிட்டு சென்றதைக் கண்டேன். நான் பணம் எடுக்காமல் அவரது கைப்பையினை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். நல்ல வேளை, அந்த பெண், தனது டூ வீலரை இன்னமும் கிளப்பும் முயற்சியில்தான், இருந்தார். அவரிடம் மீட்டெடுத்த கைப்பையினை நீட்டி, “‘இது உங்களுடையதா?என வினவ, கூலாக ‘ஆம் என பதிலளித்துவிட்டு, அவரது டூ வீலரின் சீட்டினைத் திறந்து, உள்ளே இருந்த அறையில் வைத்துக் கொண்டார்.

அந்த அம்மணி, மாட்டிக்கொண்டுவிட்ட அவரது துப்பட்டாவை எடுப்பதற்கு உதவி செய்தபோதும் சரி, வரிசையில் எனக்கு முன்னால் முந்திக்கொண்டு சென்றதை அனுமதித்ததற்கும் சரி, அவரது கைப்பையினை மீட்டெடுத்துக் கொடுத்த்தற்கும் சரி, ‘நன்றி என்ற ஒரு வார்த்தை அவரிடமிருந்து வரவே இல்லை.  'நன்றி' என்ற வார்த்தை அவரது அகராதியிலிருந்தௌ நீக்கப்பட்டு விட்டதா அல்லது அவருக்கு உதவியாக வேண்டியது உலகத்தின் கடமையெனவும், அவ்வாறு உதவியவர்களை உதாசீனப்படுத்துவது அவரது உரிமை எனவும் நினைத்துக் கொண்டாரோ என்னவோ?

பணம் எடுக்க வரிசைக்கு மீண்டும் திரும்பிய போது, எனக்கு முன் பத்து பேர், சேர்ந்து விட்டிருந்தனர்.

Thursday, February 9, 2012

வதங்கிப் போன தாமரை!!


நமது மாண்புமிகு சட்டசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சாமியார்களாகவோ, உத்தம புத்திரர்களாகவோத்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கும் அறிவீனமோ, மூடப்பழக்கமோ நமக்கு இல்லைதான்.

ஆனால், உயர்ந்தபட்ச ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் காட்டுவதற்கான புனித இடமாகக்(!) கருதப்படும் சட்டசபையில், கர்னாடக மாநில அமைச்சர் திரு. லக்ஷ்மன் சவதி, ஒரு பெண் கற்பழிக்கப்படும் காட்சியினை தனது மொபைல் ஃபோனில், கண்டு களித்துக் கொண்டருந்தாராம். அனேக மாக இந்தியசட்டசபைகளின் வரலாற்றில், என்றென்றும் ஒருதீராத களங்கமாகவே இருக்கும், இவரது நடத்தை.

சட்டசபைகளில் நமது மான்புமிகுக்கள், நடந்து கொள்ளும் மான்பு, சமீபகாலமாக, கிலாசிக்கக் கூடியனவாக இல்லை. 

முஷ்டியை உயர்த்துவது,  நாக்கினை மடக்கி மிரட்டுவது போல பேசுவது, கை நீட்டிப் பேசுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது, கூச்சலிடுவது, மேஜை மற்றும் மைக்குகளை உடைத்தெறிவது, நாற்காலிகளை தூக்கி எறிவது, சபாநாயகரை சூழ்ந்துகொண்டு கோஷமிடுவது, காலணிகள் பறப்பது, பேப்பர்களைக் கிழித்தெறிவது, அடுத்த மாண்புமிகுவின் முதுகில் செல்லமாகத்(!) தட்டுவது, முதல்வர்களை துதிபாடுவது, முக்கியமான விவாதத்தில் கூட தூங்குவது, அல்லது சபைக்கே வராமலிருப்பது போன்ற நடவடிக்கைகளை, சகல மக்கள் மன்றங்களிலும் காண்கிறோம்.  

உச்ச கட்டமாக சில ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவரின் சேலையினை பற்றி இழுத்ததை காணும் துர்பாக்கியம் கூட, நமக்கு கிடைத்தது!

தற்போது, கர்னாடக அமைச்சர்கள், தங்கள் பங்கிற்கு,  சட்டமன்றத் திலேயே, “போர்னோ ரேஞ்சுக்குகான கிளிப்பிங்குகளை, பார்த்த விவகாரம் கிளம்பியுள்ளது. அனேகமாக இந்திய சட்டமன்ற சரித்திரங்களில் ‘போர்னோ பார்த்து, சாதனை நிகழ்த்திக் காட்டிய அற்புதம், கர்நாடக பி.ஜே.பி அமைச்சர்களைத்தான், சார்ந்ததாக இருக்கும்.

இந்தோனிஷியாவில், போர்னோவினை எதிர்க்கும் கட்சியினைச் சார்ந்த ஒரு எம்.பி இந்தோனிஷிய பாராளுமன்றத்திலேயே “போர்னோபார்த்ததாக குறிப்பிட்டுள்ளது ‘தி ஹிந்து.

இந்திய கலாச்சாரத்தினைப் பாதுகாக்கும் “காவலனாகதன்னைக் காட்டிக் கொள்ளும் பி.ஜே.பி, “காதலர் தினத்தின் போதெல்லாம் ‘பப் களில் புகுந்து, அங்கு இருக்கும் காதலர்களை இழுத்துப் போட்டு அடிக்கும் “கலாச்சாரக் காவலர்களின் அனுதாபிகளான பி.ஜே.பி,  ஆளும் மானிலத்தில்தான் இத்தகைய கூத்துக்கள்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தானாகவே(!) முன்வந்து பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனராம்.  சில தினங்களுக்கு முன்தான் உடுப்பியில் (கர்னாடகா) “ஒரு மாதிரியான கேளிக்கைக்கு அனுமதி அளித்துவிட்டு விழித்துக் கொண்டிருந்தது கர்னாடக அரசு.

சினிமா கூத்தாடிக் கட்சிகளுக்கும், ஜாதி அடிப்படையிலான கட்சிகளுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை. அவர்களிடம் எந்தவிதமான ‘தத்துவ அடிப்படைகளையும் எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸின் கொள்கைகள் நீர்த்துப் போய், ஆண்டுகள் பலவாகின்றன. சந்தர்ப்பவாதமும், ஊழலும், அமெரிக்காவின் கால்களைக் கழுவிக் குடிப்பதும், நேருவின் குடும்பத்தினரையே அதிகார மையமாத் திகழ வைப்பதும்தான், அக்கட்சியின் கொள்கையாகி விட்டது.

ஆனால், ஓரளவு (சரியோ தவறோ, அவர்கள் வகுத்துக் கொண்ட சில கோட்பாடுகளின் அடிப்படையில்) தத்துவம் பேசும் கட்சிகளில் முக்கிய மானவை பி.ஜே.பி யும், இடது சாரிகளும்.

ஆனால் நாங்கள் “கொள்கை பேசுவதெல்லாம் சும்மா;  நாங்கள்  எந்த வகையிலும் காங்கிரஸுக்கு மாற்று இல்லை; எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான், என தீர்மானமாக நிரூபித்துக் கொண்டுள்ளது பி.ஜே.பி; குறிப்பாக கர்னாடகத்தில்.

எங்களிடம் வித்தியாசமாக எதையும் எதிர்பார்க்காதீர்கள். “சுதேசி”,  “இந்திய கலாச்சாரம் என்பதெல்லாம் வெறும் வெற்றுக் கூச்சல்கள்தான் என சொல்லாமல் சொல்லியிருக்கிறது பி.ஜே.பி. இந்த தவறை சாதாரண தொண்டர்கள் செய்திருந்தால் கூட புரிந்து கொள்ள முடியும்! அமைச்சர்களே, அதுவும் சட்டமன்றத்திலேயே செய்துள்ளனர் என்பதை ஜீரணிக்க இயலவில்லை.

இனியும், அரசியல்வாதிகள் மீது, எவரேனும், ஏதேனும், சிறிதளவாவது நம்பிக்கை வைத்திருந்தால், அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும்.  
                              -0-

Sunday, February 5, 2012

அக்ரஹாரத்து பிச்சைக்காரன்.


“ஐயரா இருந்துகிட்டு, இப்படி மீன் திங்கிறியே சரியா...?

“டேய், மச்சான் உன்னோட பீஸை சீக்கிரம் எடுத்துக்கோ, இல்லாங்காட்டி ஐயரு அதையும் லவட்டிக்குவாரு..

“வாயை மூடுங்கடா.. வெண்ண வெட்டிகளா.. ஜாதி பத்தி பேசாதீங்கன்னு எத்தினைவாட்டி உங்ககிட்ட சொல்றது?

“கோச்சுக்காதடா மாப்ளே.. சும்மா கலாய்க்கறோம்.. அவ்வளவுதான்.. சீரியஸா எடுத்துக்காதடா..

“ரஞ்சிதம் பார் அண்ட் ரெஸ்டாரெண்ட்டில்”  ஒரு  சரக்கு பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது.  இங்கே ‘ஐயரே.. என விளிக்கப்பட்டவன் ‘வரது என்கிற வரதராஜன்.  அவனுடன் தாக சாந்தி செய்து கொண்டிருப்பவர்கள் அன்பழகன், தணிகைச்செல்வன் அப்புறம் பன்னீர். இவர்கள் நாலவரும் B.E இறுதியாண்டு. ரூம் மேட்ஸ். அனபழகனைத் தவிர அனைவரும் அரியர் கோஷ்டியினர்.

இதில் அன்பழகனுக்கு காம்பஸ் ஆகிவிட்டது. HCL –ல் செலக்ட் ஆகிவிட்டான்.  அதைக் கொண்டாடுவதற்காக இன்று இங்கு ஸ்பெஷல் பார்ட்டி. இந்த கோஷ்டிக்கு இன்று ஒரு காரணம் அகப்பட்டது; அவ்வளவுதான். இல்லாவிடில் வேறு ஏதாவது காரணம் இருக்கும், ‘பார்ட்டி செய்வதற்கு. ஆளுக்கு இரண்டு பீர்கள் உள்ளே தள்ளிவிட்டனர்.  சைடு டிஷ் சாப்பிடும்போது தான் மேற்கண்ட உரையாடல்.

‘டேய்.. வரது நீ எப்படா, மொதல்ல அசைவம் சாப்பிட்ட...? என்றான் அன்பழகன்.

‘என்னா ....யித்துக்கு அதைத் தெரிஞ்சாகனும் உனக்கு?

“இவன் ஒர்த்தன்டா.. எல்லாத்துக்கும் ரோஷம் வந்திடும்.   எங்களுக்கெல்லாம் வீட்டிலேயே அசைவம் பழக்கம். உனக்கு அப்பபடியில்லியே அதனால கேட்டேன்..

“நாம் எல்லாருமே அசைவம் தான் தெரியுமா? ஆதி மனிதன் முதலில் என்னத்தை தின்றான் என்கிறாய்? வேட்டையாடிய விலங்குகளைத்தான்.. அவன் வழித்தோன்றல்கள் தான் நாம் எல்லோரும். இதில் ஜாதி எங்கேயிருந்து வந்தது? ஒருத்தனுக்கு பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதால் சைவமாகவோ அசைவமாகவோ இருக்கலாம். ஆனால் இன்னார் இதுதான் சாப்பிட வேண்டும் என வகுப்பது எல்லாம் தப்பு...

‘ஏண்டா அவன் வாயைக் கிளர்ரே?.. அவன் உடனே, ஃபெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஏங்கல்ஸ் ன்னு எடுத்து விட ஆரம்பிப்பான். பார்ட்டி மூடே போயிரும்!  மாப்ளே வரது... நாங்க ஒத்துக்கறோம்டா.. உனக்கு ஜாதியில்லை, மதமில்லை.  ஏற்கனவே மப்பு ஏறிப் போயிருக்கு.. உன்னோட லெக்ஸரை எடுத்துவிடாதே. புறையேறிப் போயிரும்! என்றான் தணிகைச் செல்வன்.

நால்வரும் ஹாஸ்டலுக்குத் திரும்பினர்.  நால்வரும் ரூம் மேட்ஸ்.  நண்பர்கள். இதில் அன்பழகன் மட்டும்தான் வசதியானவன்.  மற்ற மூவரும் மிகவும் சாதாரண குடும்பப் பிண்ணனி.  பெரும்பாலும் “பார்டிகள் என்றால் அன்பழகன் செலவு செய்ய, மற்றவர்கள் ‘மொக்கைகள்ஆகவே இருப்பர்.  இது அவர்களுக்குள் சகஜம். மேலும் வரதுவும் தணிகையும் ஒரே ஊர்.


பள்ளிப் பருவத்திலே கூட, வரதுவுக்கு பாடங்களைவிட, மற்ற விஷயங்கள் மிகவும் பிடித்தமானவை. புதுமைப்பித்தன், ஹெமங்வே முதல் எஸ். ராம கிருஷ்ணன் வரை எல்லோரையும் விரும்பிப் படிப்பான். அவன் பேசுவதைப் பார்த்தால் ‘நாத்திகன் போலத் தெரியும்.

வரதுவின் தந்தை சீனுவாசன், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் ‘புரோகிதம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  சிறு என்றால் நிஜமாகவே சிறுதான். மொத்தமே 100 வீடுகள்தான் இருக்கும். அந்த ஊர் சிவபெருமானே ‘பிச்சாண்டியாக இருக்க அங்கு ஊழியம் பார்க்கும் சீனுவாசனுக்கு மாத்திரம் எப்படி ‘குபேரப் பார்வை கிடைக்கும். நித்திய தரித்திரம் தான். திதிகள், கல்யாணம் செய்துவைத்து ஜீவனம் நடத்திக்கொண்டுள்ளார். இருக்கும் 100 வீடுகளில் எப்போது பார்த்தாலுமா விசேஷம் நடக்கும்?

“டவுனில் புரோகிதம் பார்ப்பவர்கள் எல்லாம் “டூ வீலர்கூட வைத்திருக்கிறார்களாமே!.  தனக்கும் அப்படி ஒன்று இருந்தால், நடந்து-நடந்து கால் தேயாமலாவது இருக்கும் என்ற எண்ணம் சீனுவுக்கு வரும். அடுத்த கணமே, சீ.. சீ.. அப்படியெல்லாம் ஆசைப்படக் கூடாது! ஆண்டவன் இந்தமட்டும் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கவில்லையே என மனசைத் தேற்றிக் கொள்வார். ஆனால்,  தனக்குப் பின் இந்த தொழிலில், தன் ஏகபுத்திரன் வரதுவினை இழுத்துவிட சீனு தயாரில்லை. இந்த நிரந்தர தரித்திரம் தன்னோடு போகட்டும் என விழைகிறார்.  

அவனை என்ஜினியரிங் படிக்க வைத்துவிட்டால், இந்த பரம்பரை குடும்ப வறுமை, தன் தலைமுறையோடு ஒழிந்துவிடும் என ஆசைப் பட்டார்.  இதற்காகவே வரது ஆறாவது படிக்கும் போதிலிருந்தே ‘வேப்பிலை அடிக்க ஆரம்பித்து விட்டார்.

“நல்லா படிடா.. நிறைய மார்க்கு வாங்குடா..98%-க்கு குறையாமல் இருக்கனும். அப்பதான் இஞ்சினியர்ங் ஃப்ரீ சீட் கிடைக்கும். என்னால பேமெண்ட் சீட்டெல்லாம்  கணவு கூட காண முடியாது. என்ன புரிகிறதா? அதை மனசுல வச்சுகிட்டு ஒவ்வொரு பாடத்தையும் படி. இல்லாட்டி என்னைப்போல சோத்துக்கே போராட வேண்டியதுதான்..இந்த உபதேசத்தை பல்வேறு வார்த்தைகளில், வடிவங்களில், சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லியே வந்திருக்கிறார்.

வரதுவுக்கு, பள்ளியில் படிப்பு நன்றாகவே வந்தது! அப்பொழுதே பாடப்புத்தகங்களை, விரைந்து முடித்துவிட்டு வேறு புத்தகங்களைப் படிப்பதில் விருப்பமுள்ளவனாக இருந்தான். குறிப்பாக தத்துவ புத்தகங்கள் அவணை ஈர்த்தன.

“ஏண்டா, பாடப் புத்தகத்தை படிப்பதை விட்டுவிட்டு கண்டதையும் படிக்கற..? என்பார் அப்பா.

“நீ உன் வேத மந்திரங்களைவிட்டு வெளியில் வரமாட்டே.. அதற்கு வெளியே படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங் கள் இருக்குப்பா..

“ஆமாம்... வேதத்தில் சொல்லாத்தையா வெளியில் சொல்லிடப் போறாங்க?

“இருக்குப்பா..  அப்புறம்...,  ‘விஸ்வாமித்ர முனிவர் ஒருத்தர் இருந்தார் இல்ல? அவர் கடவுள்ன்னு ஒருத்தர் தனியா ஒரு இடத்தில் இல்லை. அவர் எல்லா இடத்தி லேயும், பஞ்ச பூதங்களா நிறைஞ் சிருக்கார்னு சொல்லி யிருக்காரா?

“கண்ட புத்தகத்தையும் படிச்சு உனக்கு மூளை கெட்டுப் போச்சு.. நாஸ்திகன் மாதிரி பேசாதே?

உண்மையில் வரது கேட்ட கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. அல்லது புரியவில்லை.

“நாத்திகன் என்று எப்போது சொன்னேன்?என வியந்து கொண்டான் வரது.

சீனுவாசன் எதிர்பார்த்தது போலவே, வரது பிளஸ் டூ வில் நல்ல மார்க்குகள் வாங்க, ஃப்ரீ சீட் கிடைத்தது. வரதுவின் பெற்றோருக்கு எல்லையில்லா சந்தோஷம். இருக்கும் இடிந்த வீட்டை விற்றும், உள்ளுர் பிரமுகர்கள் உதவியிலும் கல்லூரி இறுதி ஆண்டு வரை வந்து விட்டான்.

முதல் பேட்சில், ரூம் மேட்ஸ்களில்,  அன்பழகனுக்கு சான்ஸ் கிடைத்து விட, மற்ற மூன்று பேரும், பிற கம்பெனிகளின் இன்டெர்வியூக்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அன்பழகனுக்கு வேலை கிடைத்ததில் மற்ற மூவருக்கும் மகிழ்ச்சிதானென்றாலும், தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் இருந்தது. எனவே இந்த “செம்மிலேயே எல்லா அரியர்களையும் கிளியர் செய்துவிடவேண்டும் என தீர்மாணித்துக் கொண்டனர்.

அடுத்த பேட்சில், பன்னீர் செலக்ட் ஆகிவிட்டான்.  தணிகைக்கும் வரதுக்கும் நெருக்கடியாகிவிட்டது.

இடையில் ஒரு சனி-ஞாயிறு விடுமுறையில், குறிஞ்சிப்பாடிக்கு சனிக்கிழமை மாலை வந்தான் வரது.


கைகால் கழுவிக்கொண்டு அம்மா கொடுத்த காப்பியை குடிக்கும் போது, அப்பா கேட்டார்.

“ஏண்டா, உன் ஃப்ரண்ட்ஸுக்கெல்லாம் அப்பாயின்மென்ட் ஆகிவிட்டதாமே? உனக்கு என்ன ஆச்சு..? என்றார்.

“கிடைக்கும்ப்பா.. இன்னும் மூனு நாலு கம்பெனிகள் வருவாங்க.. அதுல ஏதாவது ஒன்னு கிடைச்சுடும்.

“நான் கேள்விப்படற சங்கதிகள் ஒன்னும் நல்லாயில்ல வரது.. நீ அரியர் எல்லாம் வச்சிரிக்கியாமே? அப்படி வச்சிருந்தால் வேலை கிடைக்காதாமே?

“அரியர்னா என்னாங்க..? என்றாள் வரதுவின் அம்மா சுசீலா, சமையல் கட்டிலிருந்து!

“ம்ம்...அதுவா?  உம்பையன் சில பரீட்சையில் ஃபெயில் ஆகிட்டான், இல்லாட்டி பரீட்சையே எழுதலைன்னு அர்த்தம்..

“ஏண்டா வரது.. ஏன் இப்படி பண்றே?  பரீட்சைக்கு படிக்காம வேற என்ன வேலை உனக்கு? இங்க இருக்கும் வரை நல்லாத்தானே படிச்சே? பதறினாள் சுசீலா. “என்னமோ சொன்னீங்களே ‘அரியர்னு’? அதைப் பாஸ் பண்ணிட்டா வேலை கொடுத்துடுவாங்காளா?

‘கிடைக்கும்.. அதுக்கு இந்த துக்கிரிப் பய படிக்கணுமே?  உங்கிட்ட சொல்ல வேணாம்னு பாத்தேன்.  நாம, இங்க நாயா உழச்சு, பணம் அனுப்புறதை, இவன் அங்கே, ஹாஸ்டலில் என்ன பண்ணுறான்னு தெரியுமா? ஐயா, எல்லாரோடயும் சேந்து ‘தண்ணி அடிக்கிறார். சிகரெட்டு பிடிக்கிறார். புத்தி இப்படியெல்லாம் போச்சுன்னா படிப்பு எங்கே மண்டையில் ஏறும்? என்றார் சீனு.

“என்னங்க சொல்றீங்க...  நம்ம வரதுவா? “ 

“எல்லாத்தையும் விசாரிச்சுட்டுத்தான் சொல்றேன். இவன் ரூம்ல இருக்கறவங்களுக்கு ரெண்டு பேத்துக்கு வேலை கிடைச்சுடிச்சு.. இவனுக்கு ஒரு எழவும் இல்லை. அவுங்களுக்கு வேலை கெடச்ச துக்கு இவண் தண்ணி அடிச்சி கொண்டாடி இருக்கான்!

“ஐயோ ராமா.. இதென்ன சோதனை?  இருந்திருந்து ஒரு புள்ளய பெத்தேன், எங்க தரித்தரம் இத்தோடு போகட்டும்னு. நாங்க பட்டினி கிடந்து படிக்க வச்சா, இவன் இப்படி வந்து நிக்கிறானே? இதுக்கா நாங்க, இந்த பாடு பட்டோம்?   நம்ப முடியலியே என்னால? பாவிப்பயலே, குடும்பத்தை ஒரு நிமிஷம் நினைச்சியாடா? உனக்காக நாங்க ஊரில் வாங்கிய கடனை நினைச்சியா? நீதான் எங்களை கரையேத்தனும்னு நம்பினேனே? இப்படி மோசம் போனேனே?

தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாள். சுவற்றில் முட்டிக் கொண்டாள்.  ‘ஓ வென ஓலமிட ஆரம்பித்தாள்.

வரது எழுந்து வெளியில் இருக்கும் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டான். அம்மாவின் அழுகை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பா ஏதும் பேசியதாகத் தெரியவில்லை.

சற்று நேரம் பொறுத்து, அப்பா வெளியில் வந்தார்.

“எங்கூட வாடா..

கோயிலுக்கு அழைத்துச் சென்றார்

உனக்கு வேலை கிடைக்காட்டியும் பரவாயில்லை.  நீ துர்ப் பழக்கங்களை கற்றுக் கொண்டதுதான் விசனமாய் இருக்குடா! ஒன்னு செய்.  வேலை கிடைக்கலேன்னா எங்கூட புரோகிதத் தொழிலுக்கே வந்துடு. 'எனக்கு அமைஞ்ச பிராப்தம் அவ்வளவு தான்'னு நினைச்சுக்கறேன்.   செய்யும் தொழிலுக்காகவாவது நீ கெட்ட பழக்கத்திலிருந்து வெளியில் வருவாய் இல்ல?

“உனக்குத்தான், புரோகித்த்தின் அடிப்படை தெரியுமே?  என் கூட ஆறு மாசம் வந்தீன்னா எல்லாத்தையும் கத்துக்கலாம்

“அப்பா.. இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி, ரெண்டுபேரும் கூப்பாடு போட்டு டிராமா பண்ணறீங்க? இந்த கம்பெனியில்லன்ன இன்னொரு கம்பெனி. அரியர் வைப்பதெல்லாம் பெரிய விஷயமில்லேப்பா! கிளியர் செஞ்சுடுவேன். நான் சொல்லுவதை நம்பாம புரோகிதம் பாக்க வரச் சொல்றீங்க!

“எதுக்காக அரியர் வைக்கனும்? அப்புறம் எதுக்காக சேத்து வைச்சு  படிக்கனும்?  போட்டி நிறைஞ்ச உலகம்டா இது. அந்த வேலைக்காக ஆயிரமாயிரம் பேர் காத்துக்கிட்டுருக்காங்க.  உனக்கு இப்ப வேலை கிடைக்கலேன்னா அப்புறம் மூவாயிரத்துக்கும், நாலியிரத்துக்கும் கம்பெனி கம்பெனியா, ஏறி இறங்கி, சிங்கியடிக்கனும். 'நீ எங்கேயோ போவேன்னு' மனக்கோட்டை கட்டினோம். அதையெல்லாம் தவிடு பொடியாக்கிட்டே. நீ எங்களை காப்பாத்த வேணாம். உன்னையாவது காப்பத்திக்கனும்ல? அதனால தான் சொல்றேன், முடியலேன்னா எங்கூட வந்துடுன்னு! வழிவழியா வந்த தொழிலையே நீயும் செய்யலாம்

“முடியாதுப்பா.. உங்ககூட புரோகிதம் பாக்க  நான் வரமாட்டேன். அது ஈனமானது, அதுல வருமானம் கம்மி என்பதால் இல்லை. அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைப்பா. இதையெல்லாம்  உனக்கு எப்படி புரியவைப்பது எனத் தெரியவில்லை.

“இப்ப்ப நீ திதி செய்து வைக்கிறாய்.  யாருக்கு? செத்துப் போனவர்களுக்கு!  மனுஷன் செத்துப் போனபின் ஒன்றும் இல்லை.  Cease to Exist.   சூன்யம் தான்.   நான் நம்பாத வேலைகளை என்னால் செய்ய முடியாது. அதே போலத்தான் மற்ற சடங்குகளும். கடவுள் என்பதே மனுஷன் கண்டு பிடிச்சது தான் அப்பா

“ரெண்டு மூனு தடவை பீர் குடிச்சேந்தான். இல்லேன்னு சொல்லலை.  என்னவோ, குடித்துவிட்டு தெருவில் விழுந்து புரண்டுவிட்டது போல ஏன் கூப்பாடு போடுகிறாய்?  நீ, விடாமல்  வெத்திலை பாக்கு போடுறியே, அது மாத்திரம் போதை இல்லையா? புராணங்களில் வரும் “சோம பாணம், “சுரா பாணம் என்பதெல்லாம் என்ன?

“வேலை கிடைக்காமல் போய்விடுமோன்னு, உனக்கு  பயம், அவ்வளவுதானே? அது என் கவலை. நான் பாத்துக்கறேன். உனக்கு பாரமா இருக்க மாட்டேன். போதுமா?

“ஈஸ்வரா.. என்ன பேச்சு பேசறான் இவன்.  இன்னும் என்ன வெல்லாம், உன்னால் நான் அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை. படிச்சா புத்தி வரும்பாங்க.  உனக்கு க்ஷீனிச்சுப் போயிடுச்சு. உனக்கும் சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. குடும்ப கஷ்டமும் தெரியலை. பீர் குடிச்சேன்னு எங்கிட்டேயே சொல்றானே? படிக்காமல் இருப்பது சகஜம் என்கிறானே?

“உன்னோடு பேசுவதுக்கு பதில, அந்த கோயில் செவுத்தோட பேசலாம். பையனா நீ? பிறந்து, இந்த மாதிரி துராக்கிரமமா பேசி,  எங்க உயிரை வாங்குவதற்கு, நீ  பிறக்காமலேயே இருந்திருக்கலாம். நான் சொல்லுவது எதுவும் உன் மண்டையில்ஏறவே இல்லை. இனிமே உங்கிட்ட நான் பேசினேன்னா என்னை செருப்பாலா அடி.  உனக்கும் எனக்கு உறவு இத்தோடு சரி. பகவான், இந்த கஷ்டத்தையெல்லம் பாத்துகிட்டு நான் உயிரோடு இருக்கனும்னு எழுதியிருக்கான் போலிருக்கு”  விருட்டென அவனை விட்டு அகன்றார் சீனுவாசன். அவர் கற்ற வேதப்புத்தகங்களுக்கு எதிராக பேசியதும்,  அவனிடம் அவர் எதிர்பார்த்ததற்குக்கும், அவன் மீது அவர் வைத்த நம்பிக்கை யாவும்  பொய்த்துப் போனதாக நம்பினார்.    


விரக்தியும், வெறுப்பும் மேலிட மெயின் ரோடுக்கு வந்தான் வரது. அங்கே முக்குட்டில் இருந்த பெட்டிக் கடை அருகே, தணிகை நின்று கொண்டிருந்தான்.

‘என்ன ஐயிரே.. இந்த நேரத்தில இந்தப் பக்கம்?

“அட சட்.. அதைச் சொல்லாதேன்னு எத்தினி வாட்டி சொல்றது?

“சாரிடா மாப்ள...   இனிமே அந்த மாதிரி சொல்ல மாட்டேன். எதுக்கு ரோட்டுக்கு வந்தே?

வீட்டில் நடந்தவற்றை எல்லாவற்றையும் விலாவரியாக்ச் சொன்னான் வரது.

அதான் மனசு வெறுப்பாயிருந்தது. ரோட்டிற்கு வந்தேன். அது கிடக்கட்டும் நீ எதுக்கு இங்கே வந்தே

மௌனமான நின்றான் தணிகை.

அவனாகச் சொல்லட்டும் எனக் காத்திருந்தான் வரது.

“என் வீட்லயும் அதே கதை தாண்டா.  அரியர், தண்ணி, இன்னும் வேலை ஆகாதது எல்லாம் தெரிஞ்சு போச்சு. உன்னோட அம்மா வால, உன்னை அடிக்க முடியலை. அதனால தன்னைத்தானே அடித்துக் கொண்டார். என்னோட அம்மா என்னை அடித்தே விட்டாள் தலைமுடியை விலக்கி காண்பித்தான் தணிகை.  வீங்கியிருந்தது. லேசா இரத்தம் கசிந்திருந்த்து. ‘கையில் கிடச்ச ஒரு கட்டையால என்றான்.

“அடிக்கிற வரைக்கும் பாத்துக்கிட்டிருந்தியா?

“அடிச்சது அம்மாடா.. நான் வேறென்ன செய்யனுங்கறே?

“அதுவுமில்லாம, நான் செஞ்சது கொஞ்சம் கூட சரியில்லியேடா.. அரியர் வச்சேன். இன்னமும் காம்பஸ் ஆகலை

“அவுங்க பாவம்டா.. டவுன்ல முனிசிபாலிட்டியில் தெரு கூட்டி என்னை படிக்க வைக்கிறாங்க. என் தலைமுறையாவது நல்லா வரணும்னு கஷ்டப் படறாங்க. அப்பா பிரயோசனமில்லை. சதா குடிதான். அதனாலதான், அம்மாவுக்கு குடின்னாலே அவ்வளவு கோவம் வருது. அவுங்களை ஏமாத்தின மாதிரி நான் நடந்து கிட்டதால அவுங்க கோவம் நியாயம் தான்.

“அதுவும் சரிதான்.என்றான் வரது. தணிகையின் அம்மாவையும் தன்னுடைய அம்மாவையும்  நினைவில் நிறுத்தினான். இருவரும் ஒரே மாதிரி ரியாக்ட் செய்திருக்கிறார்கள். இந்த சூழ் நிலையில், எல்லா அம்மாக்களும் இப்படித்தான் செய்திருப்பார்களா?

“பயம்டா.. பயம்.. வேலை கிடைக்காமல் போய்விடுமோ? எங்கே தங்களது தொழிலையே பையன்களும் செய்ய வேண்டி வந்திடுமோ என்ற பயம். அவர்களுக்கு, நம்மீது வைத்த நம்பிக்கை வினாகிவிட்டதாக நினைக்கிறார்கள்.  ஏனெனில் அவர்களது வேலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லையே?  நம்முடைய அம்மாக்கள் மிகுந்த அவசரத்தில் இருக்காங்கடா! இருக்கும் நிலையிலிருந்து வெளியேறிவிட அவசரம். பணத்தைக் கண்டுவிட அவசரம். கௌரவத்தைப் பெற்றுவிட அவசரம்! பையன்களை நல்ல நிலையில் உடனே பார்த்துவிட அவசரம். அது உடனே நடக்க வில்லை என்றதும் அத்திரம் வருகிறது. என்றான் தணிகை.

“இதற்கு அடிப்படை என்ன தெரியுமா? ஏழ்மையும் வறுமையும் தான். இதுக்கும் ஜாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைடா. பசியும், ஏழ்மையும் யாருக்கு வந்தால் என்ன? விளைவும், வலியும் ஒரு மாதிரித்தான் இருக்கும்!. இதுவே நாம் வசதியான குடும்பமாக இருந்திருந்தால் இவ்வளவு கடுமையாக ரியாக்ட் செய்திருக்க மாட்டார்கள், புரிகிறதா?”  என்று   தொடர்ந்து சொன்னான் தணிகை.

சிந்தனை வயப்பட்ட வரது, “நம் தலைமுறையில் இந்த ஜாதிப்  பிரிவுகள் தீராதாடா?என்றான் வரது. 

"தீராது.. தீர விடமாட்டார்கள். நமக்குள் இத்தனை ஜாதிகளையும், மதங்களையும் உருவாக்கி வைச்சது யார் தெரியுமா? ஆள்பவர்களும், அதிகார வர்கமும் தான். ஏனெனில், அவர்களுக்கு, அவர்கள் அதிகாரம் நீடிக்க ஜாதிகள் வேண்டும். மதங்கள் வேண்டும். ஏழ்மை வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிழைப்பு நடத்த முடியும்.

“அமாம்டா.. இப்போ நம்ம ரெண்டுபேர் கேசையே எடுத்துக்கோ, என்ன பெரிய வித்தியாசத்தைக் கண்டே?  பொதுவானது ஏழ்மைதானே? அவுங்கவுங்க வர்ணத்திலே கூட காசு இருப்ப வனுக்குத் தான் மரியாதை. மற்றவர்கள் தள்ளித்தான் நிற்க வேண்டும்என்றான் வரது

‘சரி விடு. அதை பிறகு யோசிக்கலாம். நாளைக்கு விடிகாலை  முதல் பஸ்ஸுக்கே ரெடியாகிடு. ஹாஸ்டலுக்குப் போய் அரியருக்கும் இன்டர்வியூக்கும் உடணடியாக தயார் பண்ணிக்கணும். நம்ம அம்மாக்களுக்காக!

O.K   பை... குட் நைட்.  கை குலுக்கிக் கொண்டார்கள் வரதுவும், தணிகையும்.

Friday, February 3, 2012

புத்தகம் படிப்பது எப்படி


திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எனது மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர்.  அவருடைய கதாவிலாசம், துணை யெழுத்து, உப பாண்டவம்  நூல்களை திரும்ப,திரும்ப படித்திருக்கிறேன். அவர், “புத்தகம் படிப்பது எப்படி என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  மிக நல்ல ஆழ்ந்த பொருள் கூறும் அக்கட்டுரையினை கீழே கொடுத்துள்ளேன். செம்மலர் இதழில் வெளியானது. (அவர்கள் சண்டைக்கு வந்தால் உடணடியாக எடுத்து விடுவேன்.)
-0-
புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமானகலை.   என்ன படிப்பது, எப்படி படிப்பது, ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்து விடுகின்றன, சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருஷமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது, படிப்பதனால் என்ன பயனிருக்கிறது? இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாக இருக்கின்றன.

இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ, யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.  இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்துக் கொண்டேயிருக்கிறான்.  ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.

நான் படிக்கத் துவங்கிய வயதில், இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்கத் துவங்கும் ஒரு இளம் வாசகன், அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.

இந்தக் கேள்விகளுக்கான பதிலாக, நான் வாசிக்க சிபாரிசு செய்வது, ஒரு கட்டுரையை. How should one Read a Book? 1926 வது வருடம், இந்தக் கட்டுரையை வர்ஜினியா வுல்ப் எழுதியிருக்கிறார். 83 வருங்களுக்குப் பிறகும், இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது.
வர்ஜினியாவின் கட்டுரை, இந்தப் பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம், புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும், வழிகாட்டலும் பயனற்றதே. அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது.  எது நல்ல புத்தகம் என்று, நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம், மற்றபடி இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக் கூடியதில்லை.

ஆகவே வர்ஜின்யாவின் கட்டிரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது.  மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டிரை.  ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது. 

வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை எந்தப் புத்தகத்திய்யும் படிப்பதற்கு முனு அதைப் பற்றிய முன் முடிவுகள் வேண்டாம். திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்கா தீர்கள்.  எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத் தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுதாளனையும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே!

ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ, அல்லது பிரபலமாக இருப்பதாலோ, நல்ல புத்தகமாக இருக்கப் போவதில்லை. மாறாக, அது நல்ல புத்தகமா இல்லையா என்பதை தீர்மானிக்க்கப் போவது நீங்களும், உங்களது திறந்த மனமுமே.  அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக் கூடியது.ஆகவே,உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால், அதை அனுமதி யுங்கள்.  படிப்பதற்கான மன்னிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.

இரண்டாவது பரிந்துரை, எழுத்தையும் எழுத்தாளர்கள்யும், விமர்சினம் செய்வது எளிமையானது.  ஆனால் புரிந்து கொள்வது எளிதான தில்லை.  அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும், வாசிப்பதற்கு மூன்று விஷயங்கள் முக்கிய மானவை. ஒன்று அகப் பார்வை.  அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ, அதை என்ம் மனதால் உணர்ந்து கொள்வது.

இரண்டாவது கற்பனை. படைப்பின் ஊடாக, வெளிப்படும் மனிதர்கள், நிலக் காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.  இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.

மூன்றாவது கற்றல்.  எழுத்தின் வழியாக நாம் கற்றுக்கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவு, தொகுப்பாகவோ,உண்மை யாகவோ, வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்க லாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஏற்பாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.

ஒரு புத்தகம், புரியவில்லை என்றால் கொஞ்சகாலம் கழித்து மறுபடி படித்துப்பாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்சாள் காத்திருந்துங்கள்.  அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம், எளிய வரிகள்கூட இன்றும் புரிந்து கொள்ளப் படாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் “ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என கேளுங்கள், எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள்  ஆகவே எளிய விஷயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தை பார்த்துவிட முடியும். அதன் வேர்களை கண்ணால் பார்த்து தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படித்தான் புத்தகங்களும்.

புத்தகங்களுடனான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது, எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது, எந்த நிலைகளில் வாசகனை மீறிச் செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்.

அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் துய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கிய காரண்களில் ஒன்று.  ஜனரஞ்சகமான நாவல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம், அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே.  அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கிய காரணமாக யிருக்கிறது.

புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே, புத்தக வாசிப்பின் பெரிய சவால்.  ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப் படாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்து விடாது.  வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு; எதற்காக எழுதப் பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.

ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்கக் கூடும்.  எந்த பொருள் பற்றி பேசுகிறதோ, அது நமக்குப் பரிச்சயமற்றிருக்கக்கூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயிற்சி தேவைப்பட்டதாக இருக்கக்கூடும். அல்லது அந்தக் கதையோ, கவிதையோ எதைப்பற்றி பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக, அரூபமான தளங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.  ஒரு படைப்பைப் புரிந்து கொள்ள அது குறித்து ஆதாரமான அறிவிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையைப் போல படைப்பை நாம் கற்பனை செய்துகொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டு போக முடியும்.

சில புத்தகங்களை வாசிப்பதற்கு, வயதும், அனுபவமும் போதாமல் இருக்கக் கூடும்.  அந்தப் புத்தகம் இன்னொரு மன நிலையில், புரிவதோடு, நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக, கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளைப் புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை.  ஆவை ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை.  தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றன.

வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம், அப்படி ஒப்பிட என்ன காரணம் என்று யோசிப்பதில்லை.

ஒவ்வொரு புத்தகமும், ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு.  அதன் தனித்தன்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  பிறகு அதை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.  மோசமான புத்தகங்களை கழித்துக் கட்ட ஒப்பீடு அவசியம்தான். ஆனாலும் அப்போதும் கூட அந்தப் புத்தகத்தை பற்றிய தீர்ப்பு போன்ற முடிவுகளை வெளிப்படுத்து வதைவிட அதை எப்படி புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ, வலிந்து உருவாக்கப்பட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமலோ இருக்கிறது; அது எழுத்தாளனின் நோக்கமா அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரம் இருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.

நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டிடம் என்று சொல்லிக் கடந்து போவதை போல எளிதானதில்லை.  கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்து விடாது.  வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கிய உலகமது.  ஆகவே அதைப் புரிந்து கொள்ள, நீங்கள் எழுத்தாளரின் சக ஜீவி போல, உடன் வேலை செய்யும் ஒருவரைப்போல இணக்கமான மன நிலையோடு அணுகுங்கள்.

ஒரு நண்பனைப்போல அவனோடு சேந்து பயிலுங்கள்.  சேர்ந்து உரையாடுங்கள். எல்லா எழுத்தாளர்களூம் இயல்பில் வாசகர்களே.  ஆகவே அவர்களும் நம்மைப் போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள்.  நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள்.  ஆகவே புத்தகம் அதற்கான விதியை கொண்டிருக்கிறது.  ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே, வாசகனின் விருப்பத்திற்கு உரியதாக புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை. 

ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், விக்டர் க்யூகோ, பால்சாக், மாப்சான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளீட்ட உலகின் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில, மிகக் குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால், அது தரம் குறைந்தது என்று எண்ணிவிட முடியாது.  புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை.  அது மாறிக் கொண்டே இருக்கக் கூடியது.

ஒவ்வொரு புத்தகத்தையும், வாசகன் தனது குறிப்பிட்ட மன  நிலையில் இருந்தே படிக்கிறான்.  ஆதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால்தான் ஒரே நேரத்தில், வாசகனால் பல்வேறு விதமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கவும், ரசிக்கவும் முடிகிறது.

ஒரு புத்தகம், முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு. புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு.  பல நேரங்களில் முழுமாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது.  ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள், பத்திகளுக்காக அதை வாசித்துக் கொண்டேயிருப்போம். கதை, கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம்.  வாசகன் ஒவ்வொன்றையும் படிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான்.  அதற்கென அவன் எந்த விசேஷ பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை.

கவிதையில், அரூபமாக உள்ள ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வாசகன், நாவலில் அரூபமான, மாயமான சம்பவங்களை ஒத்துக் கொள்ள மறுக்கிறான்.  தர்க்கம் செய்கிறான்.  அதுதான் சவாசகனின் இயல்பு.  ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில், அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில், அது உண்மையான் மனிதர்களின் வாழ்வு போல நம்பப்படுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.

இன்று வாசகன், ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுகு இணையாக வைத்துப் பேசப்படுகிறான்.  தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன் வைப்பதே வாசிப்பின் முதன்மை செயல்பாடாக உள்ளது. புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனை கட்டுப்படுத்துவதில்லை.  சமூகம், உளவியல், மொழியியல், தத்துவக் கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சனப் பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி, அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை புரிதல்களைக் கண்டு அடைவதும், விமர்சிப்பதும் வாசகனின் முன் உள்ள சவாலாக உள்ளன.

ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளின் மன அமைப்பை, அவனது பலம், பலவீனங்களை ஆராய்கிறான்.  அதற்கான உளவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக் கிறான்.  மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும், அதன் அர்த்த தளங்களையும் கவனமாப் பரி சீலனை செய்கிறான். விஞ்ஞான பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ள ப்படும் ஆய்வு போல துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப் பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகி யிருக்கிறது.

வாசகன் என்பதே ஒரு கற்பனைதான்.  ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே இல்லை. “ஏய் வாசகா! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலனின் ஒரு கவிதை வரி சொல்கிறது.  அதுதான் உண்மை.  என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ ஒரு புதிர்களை அவிழ்க்கமுயற்சிக்கிறது.  மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப் படுத்துகிறது. 

ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னஞ்சிறிய ஆவணங்கள்.  அதன் வழியே மனிதர்கள் கடந்த காலத்தை அறிந்து கொள்ள முடியும்.  நிகழ்காலத்தைத் சந்திக்க துணை கொள்ளலாம். எதிர்காலத்தைத் திட்ட முடியும்.   நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.
                                               -நன்றி: செம்மலர்.

Monday, January 30, 2012

யதா ராஜா... ..


அரசு அலுவலகங்களில், பணி ஓய்வு பெறுபவர்களுக்கும், பதவியர்வு பெற்றோ அல்லது மாற்றல் பெற்றோ வெளியூர் செல்லும் நபர்களுக்கும் “பாராட்டு விழாக்கள் நடத்துவது என்னும் சடங்கு, நடந்து கொண்டுதான் இருக்கும்.
விழாவிற்கு சற்றுமுன் வரை, சம்பந்தப்பட்டவரை, அவரவர் அனுபவத் திற்கேற்றாற் போல, ‘வசவு மழை பொழியும் அன்பர்கள், மைக்கின் முன் நின்றதும், விழா நாயகனை வில்லாதி வில்லன், சூரதி சூரன், நல்லவன், வல்லவன், ஆய்... ஊய்.. என அலப்பரை செய்வதைக் கேட்டு, சலித்துவிட்டது.
எனவே, இது போன்ற சடங்கு விழாக்களில் கலந்து கொள்வதில் உற்சாக மேதும் காட்டுவதில்லை.
இது போன்ற ஒரு பாராட்டுக் கூட்டம், இன்று அலுவலகத்தில் ஒருவருக்கு நடைபெற்றது. பாராட்டு மழையின் ஊடே, ஒருவர், ஒரு சமஸ்கிருத மேற்கோள் ஒன்றை குறிப்பிட்டார். “Yatha Raja Thatha Praja !
என் போன்ற அறிவிலிகளுக்காக அதனை தமிழில் “அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிமக்கள் என்று மொழியாக்கம் செய்தார்.
பலமேடைகளில், பலராலும் மேற்கோள் காட்டப்படும் இந்த வாக்கியத் தினை, யார் சொன்னது என்று அறியும் ஆவல் ஏற்பட்டது! நிச்சயமாகத் தெரிந்த விஷயம், இது இது ராஜாக்கள் காலத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே.
தேடிப் பார்த்ததில், இது சாணக்கியனின் சொல். அரசன் என்ன செய்கிறானோ, அதைத்தான் குடி மக்களும் பின்பற்றுவர். அவன் செய்வதை குடிகள் கவணமாகப் பார்த்துக் கொண்டிருப்பர். ஆகவே ராஜாவே, நீ முன்னுதாரணமாக, யோக்கியனாக, நல்லவனாக, தீரனாக, தயாள சிந்தையுடன் நடந்து காட்ட வேண்டியது அவசியம்; அப்போது தான் நீ சிறந்த குடிமக்களைப் பெறுவாய் என்ற பொருளில் சொல்லப்பட்டது.
முடியாட்சிகாலத்தில், ராஜாக்கள் இந்த உபதேசத்தினை எந்த அளவிற்கு கடைப்பிடித்தனரோ தெரியவில்லை.  அரசன் எந்த “சமயத்தை தழுவுகி றானோ, அந்த “சமயம் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை மட்டும் பார்த்திருக்கிறோம்.
குடியரசு காலத்தில், அரசுகளை மக்களே தீர்மாணிப்பதால், மக்கள் “எம் மாதிரியான அரசு வேண்டும் எனத் தீர்மாணிக்கிறார்களோ, அம்மாதிரியான அரசே மக்களுக்கு வாய்க்கும். (அதாவது yatha praja, thatha raja என உல்டாவாகப் படிக்க வேண்டும்)

தங்களுக்கு எந்த மாதிரியான அரசு வேண்டும் என்பதை தீர்மாணிக்கும் நேரங்களில், மக்கள், தங்களை ஆளுவதற்கு (அதாவது ஓட்டு போடுவதற்கு)  எதனை அளவுகோலாக கொள்ளுகின்றனர் என்பதை, “நூறு சதம்”, ‘இதுதான்  என்பதை தீர்மாணமாகச் சொல்ல முடியவில்லை.
இந்தியத் தேர்தல்களில், பெரும்பாலான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் ‘இலவசங்கள் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன.
மக்களிடம் வாக்குகள் பெறுவதற்கு, இலவச லேப்டாப், இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச தாலிக்குத் தங்கம், இலவச நிலம், இலவச பசுமாடு, இலவச ஆடு, இலவச கோழி, இலவச சாப்பாடு, இலவச பிரியாணி, இலவச குவார்ட்டர், இலவச ரேஷன் அரிசி, இலவச டி.வி – ஆகியவைதான் தீர்மாணிக்கின்றனவா?
அல்லது மக்களே, அரசியல் வாதிகள் மாறி மாறி சம்பாதித்துக் கொள்ளட்டும் என தேர்ந்தெடுக்கிறார்களா - தெரியவில்லை!
தற்காலத்தில், சாணக்கியன் சொல்லான ‘அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்பதோ, அல்லது  நவீன மொழியான “குடிகள் எவ்வழியோ அவ்வழியே அரசுஎன்பதோ பொறுத்தமானதாகத் தெரியவில்லை.
“மக்கள் எதற்கு தகுதியானவர்களோ, அதற்கு ஏற்ற அரசையே பெறுகிறார்கள் என்பது தான் பொறுத்தமாகத் தெரிகிறது!
என்றாவது ஒரு நாள், “மக்கள் அரசு என்றால் என்ன?, “அரசியல் அதிகாரம் மக்களிடம் சேர்வது என்றால் என்ன?, “அம்மாதிரியான மாற்றம் நிகழ என்ன செய்ய வேண்டும்?, “சரியான அரசியல் கல்வியை எங்கு பெற வேண்டும்? என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலா போய்விடு வார்கள்?
நம்பிக்கை கொள்வோம்.