திரு எஸ்.
ராமகிருஷ்ணன் அவர்கள் எனது மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய கதாவிலாசம், துணை யெழுத்து, உப
பாண்டவம் நூல்களை திரும்ப,திரும்ப
படித்திருக்கிறேன். அவர், “புத்தகம் படிப்பது எப்படி” என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிக நல்ல ஆழ்ந்த பொருள் கூறும் அக்கட்டுரையினை
கீழே கொடுத்துள்ளேன். செம்மலர் இதழில் வெளியானது. (அவர்கள் சண்டைக்கு வந்தால்
உடணடியாக எடுத்து விடுவேன்.)
-0-
புத்தகம் படிப்பது
என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமானகலை. என்ன படிப்பது, எப்படி படிப்பது, ஏன் சில புத்தகங்கள்
உடனே புரிந்து விடுகின்றன, சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருஷமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது,
படிப்பதனால் என்ன பயனிருக்கிறது? இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும்
மேலாக இருக்கின்றன.
இந்தக் கேள்விகளை
வேறு வேறு வடிங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ, யாரிடமோ கேட்டுக்
கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான
பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்துக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.
நான் படிக்கத்
துவங்கிய வயதில், இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்கத் துவங்கும் ஒரு இளம்
வாசகன், அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.
இந்தக்
கேள்விகளுக்கான பதிலாக, நான் வாசிக்க சிபாரிசு செய்வது, ஒரு கட்டுரையை. How should one Read a Book? 1926 வது வருடம், இந்தக் கட்டுரையை வர்ஜினியா
வுல்ப் எழுதியிருக்கிறார். 83 வருங்களுக்குப் பிறகும், இக்கட்டுரை தரும் விளக்கம்
நெருக்கமாகவே உள்ளது.
வர்ஜினியாவின்
கட்டுரை, இந்தப் பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு
துவங்குகிறது. காரணம், புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும், வழிகாட்டலும்
பயனற்றதே. அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது. எது நல்ல புத்தகம் என்று, நமது வாசிப்பு
அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம், மற்றபடி இப்படி படித்தால் மட்டுமே
புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக் கூடியதில்லை.
ஆகவே
வர்ஜின்யாவின் கட்டிரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை
விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம்
உள்ள சிறிய கட்டிரை. ஆனால் பலமுறை
வாசித்து விவாதிக்க வேண்டியது.
வர்ஜீனியாவின்
முதல் பரிந்துரை எந்தப் புத்தகத்திய்யும் படிப்பதற்கு முனு அதைப் பற்றிய முன்
முடிவுகள் வேண்டாம். திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல
பாவிக்கா தீர்கள். எழுத்தின் மீதான உங்கள்
தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி
ஸ்தானத் தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுதாளனையும், குற்றவாளிக்
கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே!
ஒரு புத்தகம்
அதிகம் விற்பனையாவதாலோ, அல்லது பிரபலமாக இருப்பதாலோ, நல்ல புத்தகமாக இருக்கப்
போவதில்லை. மாறாக, அது நல்ல புத்தகமா இல்லையா என்பதை தீர்மானிக்க்கப் போவது
நீங்களும், உங்களது திறந்த மனமுமே. அந்த
மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக் கூடியது.ஆகவே,உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு
செய்கிறது என்றால், அதை அனுமதி யுங்கள்.
படிப்பதற்கான மன்னிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே
புத்தக வாசிப்பில் முக்கியமானவை.
இரண்டாவது
பரிந்துரை, எழுத்தையும் எழுத்தாளர்கள்யும், விமர்சினம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதான தில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்
கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும், வாசிப்பதற்கு மூன்று விஷயங்கள் முக்கிய மானவை.
ஒன்று அகப் பார்வை. அதாவது நாம் எதை
வாசிக்கிறோமோ, அதை என்ம் மனதால் உணர்ந்து கொள்வது.
இரண்டாவது கற்பனை.
படைப்பின் ஊடாக, வெளிப்படும் மனிதர்கள், நிலக் காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக்
கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.
இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.
மூன்றாவது
கற்றல். எழுத்தின் வழியாக நாம் கற்றுக்கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவு, தொகுப்பாகவோ,உண்மை யாகவோ, வாழ்வியல்
அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்க லாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற
ஏற்பாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.
ஒரு புத்தகம்,
புரியவில்லை என்றால் கொஞ்சகாலம் கழித்து மறுபடி படித்துப்பாருங்கள். அப்படியும்
புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்சாள் காத்திருந்துங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு
அவசரமாக வரவேண்டாம். காரணம், எளிய வரிகள்கூட இன்றும் புரிந்து கொள்ளப் படாமலே இருக்கின்றன.
ஆத்திசூடியில் வரும் “ஙப்போல்வளை” என்பதற்கு என்ன பொருள் என கேளுங்கள், எண்பது சதவீதம் பேர்
விழிப்பார்கள் ஆகவே எளிய விஷயங்களில் கூட
புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தை பார்த்துவிட முடியும். அதன் வேர்களை
கண்ணால் பார்த்து தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படித்தான் புத்தகங்களும்.
புத்தகங்களுடனான
நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது,
எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது, எந்த நிலைகளில் வாசகனை மீறிச்
செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்.
அத்தோடு
வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் துய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம்
வாசிப்பதற்கான முக்கிய காரண்களில் ஒன்று.
ஜனரஞ்சகமான நாவல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம், அது தரும் உடனடி
வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல்
படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதற்கும் அதன் தனித்துவமான
வாசிப்பு இன்பமே முக்கிய காரணமாக யிருக்கிறது.
புரிந்து கொள்ள
முடியவில்லை என்பதே, புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப் படாமல் போவதற்கு
புத்தகம் மட்டுமே காரணமாக இருந்து விடாது.
வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு;
எதற்காக எழுதப் பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.
ஒன்று அதன் மொழி
மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்கக் கூடும். எந்த பொருள் பற்றி பேசுகிறதோ, அது நமக்குப்
பரிச்சயமற்றிருக்கக்கூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயிற்சி
தேவைப்பட்டதாக இருக்கக்கூடும். அல்லது அந்தக் கதையோ, கவிதையோ எதைப்பற்றி
பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக, அரூபமான தளங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கக் கூடும். ஒரு படைப்பைப்
புரிந்து கொள்ள அது குறித்து ஆதாரமான அறிவிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையைப்
போல படைப்பை நாம் கற்பனை செய்துகொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை
நகர்த்திக் கொண்டு போக முடியும்.
சில புத்தகங்களை
வாசிப்பதற்கு, வயதும், அனுபவமும் போதாமல் இருக்கக் கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு மன நிலையில்,
புரிவதோடு, நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக, கலாச்சார, சரித்திர, விஞ்ஞான
அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளைப் புரிந்து கொள்ளும்
நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. ஆவை ஒரு
நாளில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ந்த
வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றன.
வர்ஜீனியாவும்
அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு
ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம், அப்படி
ஒப்பிட என்ன காரணம் என்று யோசிப்பதில்லை.
ஒவ்வொரு
புத்தகமும், ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு.
அதன் தனித்தன்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பீடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களை கழித்துக் கட்ட ஒப்பீடு அவசியம்தான்.
ஆனாலும் அப்போதும் கூட அந்தப் புத்தகத்தை பற்றிய தீர்ப்பு போன்ற முடிவுகளை வெளிப்படுத்து வதைவிட அதை எப்படி புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள்
மிகையாகவோ, வலிந்து உருவாக்கப்பட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமலோ இருக்கிறது;
அது எழுத்தாளனின் நோக்கமா அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரம்
இருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.
நாவலை வாசிப்பது
என்பது ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு
கட்டிடம் என்று சொல்லிக் கடந்து போவதை போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும்
உடனே புரிந்து விடாது. வார்த்தைகளைக்
கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப்
புரிந்து கொள்ள, நீங்கள் எழுத்தாளரின் சக ஜீவி போல, உடன் வேலை செய்யும்
ஒருவரைப்போல இணக்கமான மன நிலையோடு அணுகுங்கள்.
ஒரு நண்பனைப்போல
அவனோடு சேந்து பயிலுங்கள். சேர்ந்து
உரையாடுங்கள். எல்லா எழுத்தாளர்களூம் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மைப் போலவே ஏதோ சில
புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
எழுத்தாளர்
பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று
முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள்
மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல
புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே
புத்தகம் அதற்கான விதியை கொண்டிருக்கிறது.
ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே, வாசகனின் விருப்பத்திற்கு உரியதாக
புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.
ஷேக்ஸ்பியர்,
டிக்கன்ஸ், விக்டர் க்யூகோ, பால்சாக், மாப்சான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி
உள்ளீட்ட உலகின் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள்
புத்தகங்களில் சில, மிகக் குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள்.
லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு
பேர் மட்டுமே படிப்பதால், அது தரம் குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை
நிலையானதில்லை. அது மாறிக் கொண்டே
இருக்கக் கூடியது.
ஒவ்வொரு
புத்தகத்தையும், வாசகன் தனது குறிப்பிட்ட மன
நிலையில் இருந்தே படிக்கிறான். ஆதுவே
புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால்தான் ஒரே நேரத்தில், வாசகனால் பல்வேறு
விதமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கவும், ரசிக்கவும் முடிகிறது.
ஒரு புத்தகம்,
முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு. புத்தகத்தின் சில பகுதிகள்
பிடித்திருக்கிறது என்பது வேறு. பல
நேரங்களில் முழுமாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள்,
பத்திகளுக்காக அதை வாசித்துக் கொண்டேயிருப்போம். கதை, கவிதை, நாவல், சிறுகதை,
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக
வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசகன்
ஒவ்வொன்றையும் படிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேஷ பயிற்சியும் எடுத்துக்
கொண்டதில்லை.
கவிதையில்,
அரூபமாக உள்ள ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வாசகன், நாவலில் அரூபமான, மாயமான
சம்பவங்களை ஒத்துக் கொள்ள மறுக்கிறான்.
தர்க்கம் செய்கிறான். அதுதான்
சவாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை
வாசிக்கையில், அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில், அது உண்மையான்
மனிதர்களின் வாழ்வு போல நம்பப்படுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.
இன்று வாசகன், ஒரு
ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுகு இணையாக வைத்துப் பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை
முன் வைப்பதே வாசிப்பின் முதன்மை செயல்பாடாக உள்ளது. புத்தகத்தைப் பற்றிய
ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனை கட்டுப்படுத்துவதில்லை. சமூகம், உளவியல், மொழியியல், தத்துவக்
கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சனப் பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து
அணுகி, அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை புரிதல்களைக் கண்டு அடைவதும், விமர்சிப்பதும்
வாசகனின் முன் உள்ள சவாலாக உள்ளன.
ஆகவே வாசகன் ஒரு
புத்தகத்தின் வழியே எழுத்தாளின் மன அமைப்பை, அவனது பலம், பலவீனங்களை
ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களைக்
கண்டுபிடிக்க முயற்சிக் கிறான். மொழியை
எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும், அதன் அர்த்த தளங்களையும் கவனமாப் பரி சீலனை
செய்கிறான். விஞ்ஞான பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ள ப்படும் ஆய்வு போல
துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப் பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு
நிலை இன்று சாத்தியமாகி யிருக்கிறது.
வாசகன் என்பதே ஒரு
கற்பனைதான். ஒரு வாசகன் என்பவன்
எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே இல்லை. “ஏய் வாசகா!
உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்” என்று நகுலனின் ஒரு கவிதை வரி சொல்கிறது.
அதுதான் உண்மை. என்வரையில் ஒவ்வொரு
புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ ஒரு புதிர்களை அவிழ்க்கமுயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள்,
வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப் படுத்துகிறது.
ஆகவே புத்தகங்கள்
வாழ்வின் சின்னஞ்சிறிய ஆவணங்கள். அதன்
வழியே மனிதர்கள் கடந்த காலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தைத் சந்திக்க துணை கொள்ளலாம்.
எதிர்காலத்தைத் திட்ட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம்
கொண்டிருக்கின்றன.
-நன்றி:
செம்மலர்.
No comments:
Post a Comment