Friday, February 17, 2012

இப்படியாகக் காதல் செய்வீர்...(ஒருபக்க சிறு கதை)

சோடியம் ஒளியில், கேட்டில் இருக்கும் “வி. சொக்கலிங்கம் – டெபுடி செக்ரடரிஎன்ற பித்தளை பெயர்ப்பலகை மின்னுகிறது. மணி எட்டாகிறது. அவர் இன்னும் வீட்டிற்கு..,  சாரி பங்களாவிற்கு  வரவில்லை. வீட்டினுள் அவரது மனைவி ஸ்வர்ணம் மாலையிலிருந்து  யார் யாருடனோ, மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.  அப்படி என்னதான்  விஷயம் இருக்கும், இவ்வளவு நேரம் பேச?  கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே? எப்படியும் சொக்கலிங்கம் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவார். அவரிடம், இவ்வளவு நேரம் தொலைபேசியதின் சாராம்சத்தை சொல்லாமல் தூங்கமாட்டார். எனவே பொறுத்திருக்கலாம்.

ஸ்வர்ணத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை! கணவனுக்கு ஃபோன் போட்டார். “என்னங்க, வீட்டிற்கு வருவதற்கு எவ்வளவு நேரமாகும்?


"இப்பத்தான் செக்ரடேரியட்டிலிருந்து புறப்பட்டேன். பயண நேரம் தான். அரை மணியில் வந்துவிடுவேன். ஏதாவது முக்கியமான விஷயமா? 


“தலைபோகிற விஷயமொன்றுமில்லை! நேரா வாங்க. பேசிக்கலாம்.

சொக்கலிங்கத்திற்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. மாநில அரசின், தொழில் துறையில் டெபுடி செக்ரடரியாக இருக்கிறார். கன்ஃப்ர்டு. பீர் தொந்தியும், வாங்கி, வாங்கி, வீங்கிய பையுமாக, சஃபாரி உடையில் இருக்கும் அவரை சுமந்துகொண்டு அவரது “இனோவா  உள்ளே  நுழைகிறது. டிரைவர் போட்ட “சலாமைதலையாட்டி ஏற்றுக் கொண்டு, “நாளை பார்ப்போம்  என கூறிவிட்டு, பங்களாவின் உள் நுழைகிறார்.

அவர் உடைமாற்றிக் கொண்டுவரவும், ஸ்வர்ணம் அவருக்கு உணவு பரிமார தயாராக இருந்தார்.  சாப்பிட்டுக் கொண்டே, “என்ன விஷயம் சொல்லுஎன்றார்.

“நம்ம பையன் ‘குமரனுக்கு வரும் ஏப்ரலில், 25 வயது  பூர்த்தியாகிறது. அவன் வேலைக்குப் போய், இந்த மாசத்தோட மூணு வருஷமாயிடுச்சு..

“அதுக்கென்ன இப்ப?

“யாராவது ஒரு குட்டியை புடிச்சுக்கிட்டு வந்து, இவளைத்தான் கட்டிக்குவேன்னு ஏதும் சொல்றதுக்குள்ள, நாமளே அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து முடிச்சுடனும்"

“ஆமாம்.. ஆமாம்,  நானும் கூட யோசிச்சுக்கிட்டுதான் இருக்கேன். சீக்கிரமா ஒரு இடத்தை அவனுக்கு செட்டில் பண்ணணும்.

இவர்கள் கவலைப்படும் “குமரன்“ அவர்களது மகன். மூத்தவன்.  இளையவளுக்கு சென்ற வருடம் திருமணம் செய்வித்துவிட்டார்கள். குமரன், பி.டெக் முடித்துவிட்டு பெங்களூருவில் ‘ஆரக்கிளில் வேலை பார்க்கிறான். புத்திசாலிப் பையனாதலால், விரைந்து நிர்வாகப்படிகளில், ஏறிவருகிறான்.

“நம்ம ஜாதியில, நமக்கேத்தமாதிரி, தெரிஞ்ச பொண்ணுங்க யாராவது இருக்காங்களா? “ என்றார் சொக்கலிங்கம்.

“இருக்காங்க.  சாயங்காலம் முழுசும் அதுபற்றித்தான் விசாரிச்சுக்கிட்டிருந்தேன்.  உங்க தங்கச்சி புருஷனோட, சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தி இருக்கிறாள். சகுந்தலான்னு பேர். பி.இ படிச்சிருக்காளாம். அவளும் பெங்களூருவில்தான் வேலை பார்க்கிராளாம்.நாம கூட, ரொம்ப நாளைக்கு முன்னால, அவளைப் பார்த்திருக்கோம்.  நல்லாத்தான் இருப்பா. ஆனா சட்டுனு முகம்  நினைவுக்கு வரமாட்டேங்குது.

‘அப்படியா? எனக்கும் அந்தப் பெண் நினைவில்லை. பொண்ணோட அம்மா-அப்பா, அப்படி-இப்படின்னு ஒன்னும் கிராஸ் இல்லையே?

‘என்ன ஒன்னும் தெரியாதமாதிரி கேக்குறீங்க? அவங்க எல்லாம், நம்ம ஜனங்கதான்.  நீங்க மறந்துட்டீங்க போல. அதையெல்லாம் விசாரிக்காமலா இருப்பேன்? எல்லாம் சுத்தம் தான்.

‘நீ விசாரிச்சு வச்சிருப்பேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் கன்ஃப்ர்ம் பண்ணிக்கறதுல என்ன தப்பு? கல்யாணத்திற்கப்புறம் தெரியவந்திச்சுன்னா கஷ்டம் தானே? அதுனால கேட்டேன்.

“அதுபத்தி  கவலைப்பட வேண்டாம்.   நமக்கு வேண்டியவங்களைவிட்டு விசாரிச்சுட்டேன்.

“அப்ப சரி.. ஸ்டேட்டஸ் எப்படியாம்?

“பொண்ணோட அப்பா, பெங்களூரில் ரியல் எஸ்டேட் செய்யராராம். பொண்ணு பேர்ல ஒரு ஃப்ளாட் இருக்கு. அந்த வீடே, பெரிய ரூவா ஒன்னு தேறுமாம்!

“அவ எங்க வேல பாக்குறா?

“இண்டெல் கார்பொரேஷன்ல..

“எவ்வளவு சம்பளம் வருமாம்?

“எழுவதாயிரம்னு சொன்னாங்க..

“பரவாயில்லியே. நல்ல இடமாத்தான் இருக்கு.

“நான் உங்க தங்கச்சி கிட்ட பேசிட்டேன். அவுங்க சொல்றதைப் பாத்தா, பொண்ணு வீட்டில,  நம்ம பையனுக்கு கொடுக்க இஷ்டப்படுவாங்க போலத்தான் தெரியுது!  நீங்க உங்க தங்க்ச்சி வீட்டுக்காரர் கிட்ட பேசுங்க.

“சரி, அவுங்களுக்கு ஃபோனைப் போடு

"கொஞ்சம் இருங்க பேசலாம்; அதுக்கு முன்னால, உங்க பையன் கிட்ட பேசிடுங்க. பேச்சு வார்த்தை ஆரம்பித்தப்பின், குமரன் எதனாச்சும் குழப்பிட்டான்னா, கௌரவக் குறைவாகப் போய்விடும்

“நல்லாத்தான் ஐடியா கொடுக்குற! இப்ப பேசலாமா, இல்ல தூங்கியிருப்பானா?


“அவனாவது, இன்னேரத்தில தூங்கறதாவது? பேசுங்க!


பையனை போனில் அழைத்தார். 

“குமரா, அப்பா பேசறேண்டா.  நல்லா இருக்கியா? என்ன ஒரு மாசமா சென்னைக்கு வரல? ஆஃபீஸில பிசியா?

“என்னப்பா, அங்கே வந்து 20 நாள்தானே ஆவுது? அதுவுமில்லாம டெய்லி, அம்மாகிட்ட பேசிக்கிட்டுதானே இருக்கேன்? இப்ப நீ எதுக்கு கூப்பிட்டேன்னு நேரா விஷயத்துக்கு வா. நான் பார்ட்டிக்கு போகனும்.

“பெங்களூர்ல, இண்டெலில், சகுந்தலான்னு 'நம்ம' பொண்ணு ஒண்ணு வேலை செய்யுதாம். நம்ம சொந்தக்காரப் பொண்ணு!

“அப்பா, இன்டெலில் நூற்றுக் கணக்கில் பொண்ணுங்க இருக்காங்க. அதுக்கென்ன?

“முழுசும் கேளுடா!  பொண்ணு நம்ம ஆளுகதானாம். ரொம்ப நல்லா இருக்குமாம். அம்மா விசாரிச்சுட்டா. உன்னை ஒரு வார்த்தை கேட்டுகிட்டு, அவளோட அம்மா-அப்பா கிட்ட, உனக்கு பெண் கேட்டு பேசலாம்னுதான் ஃபோன் போட்டேன்.

“எனக்கு அப்படி யாரையும் தெரியாதுப்பா..

“நீ ஒருதடவை நேரா போய் அந்த பொன்ணைப் பாத்து, விசாரிச்சுட்டு வாயேண்டா.. உனக்கு புடித்திருந்தால் மேலே பாக்கலாம்

“தமாஷெல்லாம் பண்ணாதேப்பா.. அந்த பொண்ணுகிட்ட போய் என்னன்னு  கேட்பது? என்னை மேரேஜ் பண்ணிக்கிறியான்னா?

“இதையெல்லாம் இந்த காலப் பசங்களுக்கு, அதுவும் உனக்கு, சொல்லித்தரணுமா? அவளை நேரா போய்ப் பாத்துட்டு வந்து உங்க அம்மாகிட்ட சொல்லிடு, புரிஞ்சுதா?“

“பாக்கலாம்...


போனை வைத்துவிட்டார். 

“குமரன் பேசறதப் பாத்தா, பையனுக்கு கல்யாணத்தில் இஷ்டம் போலத்தான் தெரியுது. நாம, பொண்ணோட அப்பாவிடமே  பேசிடலாம். அவுங்களுக்கு ஃபோனைப் போடு. முதல்ல  நீயே பேசு, நான் அப்புறமா பேசிக்கிறேன்..

பெண்ணின் அப்பா, தர்மலிங்கம் தான் போனை எடுத்தார். 

“யாரு சொக்கலிங்கத்தோட வீட்லயா பேசறீங்க? நல்லாயிருக்கிங்களா? என்ன.. என்ன ....என்னங்க இப்படிக்கேட்டுட்டீங்க?   உங்களைத் தெரியாதவங்க இருக்க முடியுமா? நல்லாத்தெரியும். சொல்லுங்க என்ன விஷயமா கூப்பிட்டீங்க?

‘ஒண்ணுமில்ல.. உங்களுக்குத்தான் தெரியுமே? எங்க பையன் குமரன் பெங்களூரில ‘ஆரக்கிளில் வேலை பாக்குறான். அவனுக்கு நம்ம ஜனத்தில நல்ல பொண்ணு கிடச்சா முடிச்சுடலாம்னு பாக்குறோம். எங்க சொத்துபத்து நிலவரம் தான் உங்களுக்குத் தெரியுமே? உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைச்சா, தோதான இடம் அமையும்போது சொல்லுவீங்கன்னு தான் கூப்பிட்டேன்”.    மற்ற விஷயங்களைப பேசிவிட்டு,  குமரனைப்பற்றிய குறிப்புகளையும் சொன்னாள் ஸ்வர்ணம்.

“அதுக்கென்ன? அவசியம் பாக்கறேன். அடுத்தவாரமே உங்களுக்கு தகவல் சொல்றேன்.  உங்க வீட்டுக்காரர் இன்னும் செக்ரடேரியட்லிருந்து வர்லியா?

“இன்னும் வர்லீங்க.. டெபுடி செகரட்டரி ஆனதுக்கப்புறம் எப்ப போவார், எப்ப வருவார்னு சொல்ல முடியலீங்க!

“இருக்கட்டும் பரவாயில்லை..  நானே அப்புறம் கூப்பிட்டு பேசறேன்.
                                ---

தர்மலிங்கம், தனது மனைவி புஷ்பாவை அழைத்தார். உனக்கு சொக்கலிங்கத்தைத் தெரியுமா? சென்னையில், கவர்மெண்ட்ல இருக்கிறாரே?

“தெரியுமே.. சாயங்காலம், அவுங்க வீட்டுக்காரம்மா பேசினாங்க. அவுங்க பேசுறதப் பாத்தா, அவுங்க பையனுக்கு, நம்ம பொண்ணு சகுந்தலாவைக் கேக்குறாங்க போலத்தெரியுது

“அமாம். அதை மனசுல வச்சுகிட்டுத்தான், ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்கன்னு சொல்றாங்க!

“நல்ல இடம்தான். தாராளமா சகுந்தலாவை குடுக்கலாம். கிராமத்துல, நில புலன்கள் எல்லாம் இருக்கு. கவர்மெண்ட்ல பவர்ஃபுல் போஸ்ட் வேற. எப்படியும் 10 கோடி சொத்து தேறும்.

"சகுந்தலாவிடம் கேட்டுப்பார்".

அவள், மாடியில் தனது அறையில் இருந்தாள்.

“ஏண்டி சகுந்தலா, உனக்கு ஆரக்கிளில் வேலை செய்யும் குமரனைத் தெரியுமாடி?” 

“உளறாதே மம்மி! திருப்பதியிலே மொட்டை அடிச்சவனைப் பாத்தியான்னு கேக்குறமாதிரி இருக்கு நீ விசாரிக்கறது. அதுவுமில்லாம எங்க கம்பெனிக்கு, அவுங்ககூட காண்டிராக்ட் இப்ப ஏதுவுமில்லை. ஆகையினால, அவுங்க கூட  கான்டாக்ட் கிடையாது! எதுக்கு கேக்குற?

விவரமாகச் சொன்னாள்

“அவனுக்கு என்ன சம்பளமாம் ம்ம்மி?

“ஒரு லட்சமாம்

“ஓ! டுவல் லாக்ஸ் பர் ஆனமா? வீடு, கார் எல்லாம் இருக்காமா? என்ன கார் வச்சுருக்கான்??

“என்ன கார் வச்சுருக்கானெல்லாம் தெரியாது. அவன் அப்பன் கோடீஸ்வரன். கிம்பள ராஜா! பையனுக்கு நல்லதாத்தான், வாங்கித் தந்திருப்பான்.

“எனக்கு ஒரே ஒரு கண்டிஷன்தாம்மா. எனக்கு அடுத்த வருஷம், ஒரு ஃப்ராஜக்டுக்காக ஸ்டேஸ் போகும் சான்ஸ் வரும். அவனும் அதே மாதிரி இருந்தாத்தான் ஒத்து வரும்.  கிரீன் கார்டு தான் என் லட்சியம். அதுக்கு ஒத்து வராத மாதிரி இடமாயிருந்தா வேண்டாம்.

‘நீ அவனைப் பார்த்து பேச முடியுமா?

“டிரை பண்றேன்...
                                     ----

அடுத்த வாரம் குமரன் தனது பி.ஸிக்கு முன் இருக்கும் போது, ஒரு மெஸேஜ் வந்தது.  ‘ஒன் மிஸ் சகுந்தலா ஃப்ரம் இண்டெல் ஈஸ் வெய்டிங்க ஃபார் யுமீட் ஹர் அட் லவுன்ச்

வெளியே வந்தான்.  எழுந்து நின்றாள் சகுந்தலா. "ஆள் பரவாயில்லை தான்" என்று கணக்குப் போட்டாள்.  

‘யூ மஸ்ட் பீ குமரன்!

“யா. மே ஐ நோ ஹூ யு ஆர், இஃப் யு டோண்ட் மைன்ட்..?

“ஐ ஆம் சகுந்தலா, ஃபரம் இண்டெல்.உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்.  ஒரு வருஷத்துக்கு முன்னாடி, என் ஃப்ரண்ட் தேவகின்னு ஒருத்தி இங்கே, ஆரக்கிளில் வேலை செய்தாள். அப்புறம் கான்டாக்டே இல்லாம போச்சு. ஒரு விஷயமா அவளைப் பாக்கணும். இப்ப எங்க இருக்கான்னு தெரியல. என்னோட அம்மா தான்  சொன்னாங்க.. இங்கே குமரன்னு ஒருத்தர் இருக்கார். நம்ம சொந்தக்காரர்தான்.  அவரிடம் போய் விசாரின்னு. அதான் நேரே வந்தேன்.

‘அது ஒன்னும் பெரிய பிராப்ளம் இல்ல.  ஸ்டாஃப் ரோல் எங்கிட்ட தான் இருக்கு. வெரிஃபை பண்ணி சொல்றேன். முடிஞ்சா, இப்ப எங்க இருக்காங்கன்னும் கேட்டு, உங்களுக்கு ஃபோன் பண்றேன். 

“ஓ.. தேங்க் யூ..

நெம்பர்களை பரிமாறிக்கொண்டனர்.

‘ஹொவ் அபவுட் எ காஃபி?

“வொய் நாட்?

அடுத்த நாள் குமரன், சகுந்தலாவுக்கு ஃபோன் செய்தான். யூஷூவல் “எப்படி இருக்கீங்க..” க்கு அப்புறம் சொன்னான், “இஃப் யூ டோன்ட் மைன்ட் ... ஷெல் ஐ ஸே ஒன் திங் அபவுட் யு?"

'நோ ப்ராப்ளம்.. கோ அஹெட்"


"குந்தலா, யு லுக் ஸோ பிரட்டி

“நானும் அதையே சொல்லனும்னு எதிர்பாக்காதீங்க..

சிரித்தார்கள். முதல் நாள் தேடிக்கொண்டு வந்த ‘தேவகியைப்பற்றி, அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

ஒரு மாததில், அவர்கள் இருவரும் ‘டிஸ்கோத்தே களுக்கு போகும் வரை முன்னேறினார்கள்.

அவர்கள் லேசான "ரெட் வைன் அருந்திவிட்டு, அவளது இடையினைப் பற்றிக் கொண்டு, அவன் நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவளைக் கேட்டான்.

“சகுந்தலா.. வில் யூ மேரி மீ.?

அதற்கான பதிலை முத்தமாகத்தந்தாள் சகுந்தலா
                               ------
சகுந்தலா தனது ‘மம்மியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


‘மம்மி ஹி இஸ் குட்.  நான் எதிர் பார்த்தமாதிரியே அவனுக்கும் அடுத்த வருஷம் ஸ்டேட்ஸ்ல  ஃப்ராஜக்ட் வருதாம். எப்படியும், கொஞ்ச வருஷத்தில கிரீன் கார்ட் வாங்கிவிடுவோம். ஸோ, யு கேன் புரொஸீட் வித் திஸ் அலயன்ஸ்


"அப்புறம் நீ ஏதும் எங்களை குறை சொல்லக் கூடாது!


"அதெல்லாம் ஒண்ணுமில்லை! "


"அப்ப, நாங்களே  நேரே போய் சொல்லிட்டு வரலாமா?"


"அதெல்லாம் வேண்டாம்.  அவனே, அவங்க அப்பாகிட்ட சொல்லுவான். அவுங்களே நம்ம வீட்டிற்குவருவாங்க!"


'அது வரைக்கும் கூடவா பேசிக்கிட்டீங்க? 


"ஆமாம்.."



"சரியான ஆளுதாண்டி நீ!"

ஸ்வர்ணம் தனது மகனிடம் கேட்டாள். என்னடா அவளைப் பாத்தியா? பேசினியா? உனக்கு இஷ்டமா?

எனக்கு ஓ.கே தான், அம்மா! குட் சாய்ஸ். மேலே நீங்களே, நேரா போயி பேசி முடிச்சுடுங்க..
                               ------

சொக்கலிங்கம், ஸ்வர்ணத்திடம் கேட்டார். யாரு முதல்ல பேச ஆரம்பிக்கனும்? பொண்ணு வீட்டுக்காரங்களா? பையன் வீட்டுக் காரங்களா? நாமளே முதல்ல கேட்டுப் போய் கௌரவத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது பாரு?” 


"அதை நீங்க, உங்க அப்பா கிட்ட கேட்டுக்குங்க.. இங்க யாருகிட்டயும் கேக்காதீங்க..


இவரது அப்பா, ‘வெங்கடேசன் கிராமத்திலிருக்கிறார். அவரிடம் விசாரித்ததில், ‘நாமதாண்டா, நம்ம வழக்கப்படி பொண்ணு கேட்டு  போகணும்”.  அதுமட்டுமில்லாமல்,  போகும்போது இன்னின்ன வாங்கிக் கொண்டு போகவேண்டுமென லிஸ்ட் வேறு சொன்னார்.


"சரி.. சரி. வச்சுடு.. போய்ட்டு வந்து விவரம் சொல்றோம்."
-------

பெங்களூரில், தர்மலிங்கத்தின் வீட்டில், தடபுடலான உபச்சாரத்துடன் வீற்றிருந்தார் சொக்கலிங்கம்.

“நம்ம காலத்தில, எந்த ‘லவ்வைக் கண்டோம். ‘கிவ்வைக் கண்டோம்! ஏதோ அப்பா காட்டின களுதைய, கட்டிக்கிட்டோம்.  நம்ம பசங்க அப்படியில்லியே? ஏதோ சின்னப் பசங்க, ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க. அவுங்க ஆசைக்கு நாம ஏன் தடை போடனும்? அவுங்க விருப்பப்பட்ட மாதிரியே செஞ்சுடலாம்னுதான், நானே நேரே கிளம்பி, பொண்ணு கேட்டு வந்துட்டேன்.என்றார் சொக்கலிங்கம்

‘சரியா சொன்னீங்க போங்க!  நமக்கு நம்ம பசங்க சந்தோஷம் தானே முக்கியம்? உண்மைய சொல்லப்போனா, உங்க கூட சம்பந்தம் வச்சுக்க நாங்கதான் கொடுத்து வச்சுருக்கணும்

திருமணம் நல்லபடியாக, தடபுடலாக, ஆர்பாட்டமாக நடந்து முடிந்தது. 
-------
இப்படியாக ‘குமரனும், ‘ சகுந்த லாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

10 comments:

  1. இது ஒருபக்க சிறுகதையா? ஒரு மினி சினிமா பார்த்த ஃபீலிங். நல்லாயிருக்கு ஐயா ... நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். என் நட்பு வட்டத்தில் "சிறுகதை" என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள். அவர்களை சமாதானப் படுத்தத்தான் 'ஒரு பக்கக் கதை' என்று சொல்லிவிடுவது
      எனது 'பெண்ணைப் பெற்றவன்' கதை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அது பெரிசாயிருக்கு எப்படி படிப்பது என்கிறார்கள். என்ன செய்வது? Anyway, மீண்டும் நன்றி திரு.ஹாலிவுட் ரசிகன்.
      அன்புடன்
      பலராமன்.

      Delete
  2. அருமையான 'காதல்' கதை:-))))))

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ துளசிகோபால் அவர்களே!

      Delete
  3. superb love?! story.
    nigalkaalathin nitharsanathai unarthiyathu.

    ReplyDelete
  4. Hello Sir !

    Very Fine . A new information about LOVE .
    Good story . OK . Who is that friend in ur close circle running away ?

    BT Arasu

    ReplyDelete
  5. You and Me are of the same caste! My father and your father are crorepathis!
    Our Love at first sight is so Divine !
    This is today"s 'convenient' Love.
    Very interesting story depicting reality.!

    ReplyDelete
  6. நன்று.... காதல் கதைதான்....

    ReplyDelete
  7. http://shivanthaperumal.blogspot.in/2012/10/blog-post_7.html

    ReplyDelete