“ஐயரா இருந்துகிட்டு, இப்படி மீன் திங்கிறியே சரியா...?”
“டேய், மச்சான் உன்னோட பீஸை சீக்கிரம் எடுத்துக்கோ, இல்லாங்காட்டி ஐயரு
அதையும் லவட்டிக்குவாரு..”
“வாயை மூடுங்கடா.. வெண்ண வெட்டிகளா.. ஜாதி பத்தி பேசாதீங்கன்னு
எத்தினைவாட்டி உங்ககிட்ட சொல்றது?”
“கோச்சுக்காதடா மாப்ளே.. சும்மா கலாய்க்கறோம்.. அவ்வளவுதான்.. சீரியஸா
எடுத்துக்காதடா..”
“ரஞ்சிதம் பார் அண்ட் ரெஸ்டாரெண்ட்டில்” ஒரு சரக்கு பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது. இங்கே ‘ஐயரே..” என விளிக்கப்பட்டவன் ‘வரது’ என்கிற வரதராஜன்.
அவனுடன் தாக சாந்தி செய்து கொண்டிருப்பவர்கள் அன்பழகன், தணிகைச்செல்வன்
அப்புறம் பன்னீர். இவர்கள் நாலவரும் B.E இறுதியாண்டு. ரூம் மேட்ஸ். அனபழகனைத் தவிர அனைவரும் அரியர் கோஷ்டியினர்.
இதில் அன்பழகனுக்கு காம்பஸ் ஆகிவிட்டது. HCL –ல் செலக்ட்
ஆகிவிட்டான். அதைக் கொண்டாடுவதற்காக இன்று
இங்கு ஸ்பெஷல் பார்ட்டி. இந்த கோஷ்டிக்கு இன்று ஒரு காரணம் அகப்பட்டது;
அவ்வளவுதான். இல்லாவிடில் வேறு ஏதாவது காரணம் இருக்கும், ‘பார்ட்டி’ செய்வதற்கு. ஆளுக்கு இரண்டு பீர்கள்
உள்ளே தள்ளிவிட்டனர். சைடு டிஷ்
சாப்பிடும்போது தான் மேற்கண்ட உரையாடல்.
‘டேய்.. வரது நீ எப்படா, மொதல்ல அசைவம் சாப்பிட்ட...?” என்றான் அன்பழகன்.
‘என்னா ....யித்துக்கு அதைத் தெரிஞ்சாகனும் உனக்கு?”
“இவன் ஒர்த்தன்டா.. எல்லாத்துக்கும் ரோஷம்
வந்திடும். எங்களுக்கெல்லாம் வீட்டிலேயே அசைவம்
பழக்கம். உனக்கு அப்பபடியில்லியே அதனால கேட்டேன்..”
“நாம் எல்லாருமே அசைவம் தான் தெரியுமா? ஆதி மனிதன்
முதலில் என்னத்தை தின்றான் என்கிறாய்? வேட்டையாடிய விலங்குகளைத்தான்.. அவன்
வழித்தோன்றல்கள் தான் நாம் எல்லோரும். இதில் ஜாதி எங்கேயிருந்து வந்தது? ஒருத்தனுக்கு
பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதால் சைவமாகவோ அசைவமாகவோ இருக்கலாம். ஆனால்
இன்னார் இதுதான் சாப்பிட வேண்டும் என வகுப்பது எல்லாம் தப்பு...”
‘ஏண்டா அவன் வாயைக் கிளர்ரே?.. அவன் உடனே, ஃபெர்ட்ரண்ட்
ரஸ்ஸல், ஏங்கல்ஸ் ன்னு எடுத்து விட ஆரம்பிப்பான். பார்ட்டி மூடே போயிரும்! மாப்ளே வரது... நாங்க ஒத்துக்கறோம்டா.. உனக்கு
ஜாதியில்லை, மதமில்லை. ஏற்கனவே மப்பு
ஏறிப் போயிருக்கு.. உன்னோட லெக்ஸரை எடுத்துவிடாதே. புறையேறிப் போயிரும்!’ என்றான் தணிகைச் செல்வன்.
நால்வரும் ஹாஸ்டலுக்குத் திரும்பினர். நால்வரும் ரூம் மேட்ஸ். நண்பர்கள். இதில் அன்பழகன் மட்டும்தான்
வசதியானவன். மற்ற மூவரும் மிகவும் சாதாரண
குடும்பப் பிண்ணனி. பெரும்பாலும் “பார்டிகள்” என்றால் அன்பழகன் செலவு செய்ய, மற்றவர்கள்
‘மொக்கைகள்’ ஆகவே இருப்பர். இது அவர்களுக்குள்
சகஜம். மேலும் வரதுவும் தணிகையும் ஒரே ஊர்.
பள்ளிப் பருவத்திலே கூட, வரதுவுக்கு பாடங்களைவிட, மற்ற விஷயங்கள் மிகவும்
பிடித்தமானவை. புதுமைப்பித்தன், ஹெமங்வே முதல் எஸ். ராம கிருஷ்ணன் வரை எல்லோரையும்
விரும்பிப் படிப்பான். அவன் பேசுவதைப் பார்த்தால் ‘நாத்திகன்’ போலத் தெரியும்.
வரதுவின் தந்தை சீனுவாசன், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில்
‘புரோகிதம்’ பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறு என்றால் நிஜமாகவே சிறுதான். மொத்தமே 100
வீடுகள்தான் இருக்கும். அந்த ஊர் சிவபெருமானே ‘பிச்சாண்டியாக’ இருக்க அங்கு ஊழியம் பார்க்கும் சீனுவாசனுக்கு மாத்திரம் எப்படி ‘குபேரப்’ பார்வை கிடைக்கும். நித்திய தரித்திரம் தான். திதிகள்,
கல்யாணம் செய்துவைத்து ஜீவனம் நடத்திக்கொண்டுள்ளார். இருக்கும் 100 வீடுகளில்
எப்போது பார்த்தாலுமா விசேஷம் நடக்கும்?
“டவுனில் புரோகிதம் பார்ப்பவர்கள் எல்லாம் “டூ வீலர்” கூட வைத்திருக்கிறார்களாமே!. தனக்கும் அப்படி ஒன்று இருந்தால், நடந்து-நடந்து
கால் தேயாமலாவது இருக்கும்” என்ற எண்ணம்
சீனுவுக்கு வரும். அடுத்த கணமே, சீ.. சீ.. அப்படியெல்லாம் ஆசைப்படக் கூடாது!
ஆண்டவன் இந்தமட்டும் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கவில்லையே என மனசைத் தேற்றிக்
கொள்வார். ஆனால், தனக்குப் பின் இந்த தொழிலில், தன்
ஏகபுத்திரன் வரதுவினை இழுத்துவிட சீனு தயாரில்லை. இந்த நிரந்தர தரித்திரம் தன்னோடு
போகட்டும் என விழைகிறார்.
அவனை என்ஜினியரிங் படிக்க வைத்துவிட்டால், இந்த பரம்பரை குடும்ப வறுமை, தன்
தலைமுறையோடு ஒழிந்துவிடும் என ஆசைப் பட்டார். இதற்காகவே வரது ஆறாவது படிக்கும் போதிலிருந்தே ‘வேப்பிலை’ அடிக்க ஆரம்பித்து விட்டார்.
“நல்லா படிடா.. நிறைய மார்க்கு வாங்குடா..98%-க்கு குறையாமல் இருக்கனும்.
அப்பதான் இஞ்சினியர்ங் ஃப்ரீ சீட் கிடைக்கும். என்னால பேமெண்ட் சீட்டெல்லாம் கணவு கூட காண முடியாது. என்ன புரிகிறதா? அதை
மனசுல வச்சுகிட்டு ஒவ்வொரு பாடத்தையும் படி. இல்லாட்டி என்னைப்போல சோத்துக்கே
போராட வேண்டியதுதான்..” இந்த உபதேசத்தை
பல்வேறு வார்த்தைகளில், வடிவங்களில், சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லியே
வந்திருக்கிறார்.
வரதுவுக்கு, பள்ளியில் படிப்பு நன்றாகவே வந்தது!
அப்பொழுதே பாடப்புத்தகங்களை, விரைந்து முடித்துவிட்டு வேறு புத்தகங்களைப்
படிப்பதில் விருப்பமுள்ளவனாக இருந்தான். குறிப்பாக தத்துவ புத்தகங்கள் அவணை
ஈர்த்தன.
“ஏண்டா, பாடப் புத்தகத்தை படிப்பதை விட்டுவிட்டு கண்டதையும்
படிக்கற..?” என்பார் அப்பா.
“நீ உன் வேத மந்திரங்களைவிட்டு வெளியில் வரமாட்டே..
அதற்கு வெளியே படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங் கள் இருக்குப்பா..”
“ஆமாம்... வேதத்தில் சொல்லாத்தையா வெளியில் சொல்லிடப் போறாங்க?
“இருக்குப்பா.. அப்புறம்..., ‘விஸ்வாமித்ர முனிவர்’ ஒருத்தர் இருந்தார் இல்ல? அவர் கடவுள்ன்னு ஒருத்தர் தனியா ஒரு இடத்தில் இல்லை.
அவர் எல்லா இடத்தி லேயும், பஞ்ச பூதங்களா நிறைஞ் சிருக்கார்னு சொல்லி யிருக்காரா?”
“கண்ட புத்தகத்தையும் படிச்சு உனக்கு மூளை கெட்டுப் போச்சு.. நாஸ்திகன்
மாதிரி பேசாதே?”
உண்மையில் வரது கேட்ட கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. அல்லது புரியவில்லை.
“நாத்திகன் என்று எப்போது சொன்னேன்?” என வியந்து
கொண்டான் வரது.
சீனுவாசன் எதிர்பார்த்தது போலவே, வரது பிளஸ் டூ வில் நல்ல மார்க்குகள் வாங்க, ஃப்ரீ சீட் கிடைத்தது.
வரதுவின் பெற்றோருக்கு எல்லையில்லா சந்தோஷம். இருக்கும் இடிந்த வீட்டை விற்றும்,
உள்ளுர் பிரமுகர்கள் உதவியிலும் கல்லூரி இறுதி ஆண்டு வரை வந்து விட்டான்.
முதல் பேட்சில், ரூம் மேட்ஸ்களில், அன்பழகனுக்கு சான்ஸ் கிடைத்து விட, மற்ற மூன்று
பேரும், பிற கம்பெனிகளின் இன்டெர்வியூக்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அன்பழகனுக்கு
வேலை கிடைத்ததில் மற்ற மூவருக்கும் மகிழ்ச்சிதானென்றாலும், தங்களுக்கு கிடைக்காமல்
போய்விடுமோ என்ற பயம் இருந்தது. எனவே இந்த “செம்”மிலேயே எல்லா அரியர்களையும் கிளியர் செய்துவிடவேண்டும்
என தீர்மாணித்துக் கொண்டனர்.
அடுத்த பேட்சில், பன்னீர் செலக்ட் ஆகிவிட்டான். தணிகைக்கும் வரதுக்கும் நெருக்கடியாகிவிட்டது.
இடையில் ஒரு சனி-ஞாயிறு விடுமுறையில், குறிஞ்சிப்பாடிக்கு
சனிக்கிழமை மாலை வந்தான் வரது.
கைகால் கழுவிக்கொண்டு அம்மா கொடுத்த காப்பியை குடிக்கும்
போது, அப்பா கேட்டார்.
“ஏண்டா, உன் ஃப்ரண்ட்ஸுக்கெல்லாம் அப்பாயின்மென்ட்
ஆகிவிட்டதாமே? உனக்கு என்ன ஆச்சு..?” என்றார்.
“கிடைக்கும்ப்பா.. இன்னும் மூனு நாலு கம்பெனிகள்
வருவாங்க.. அதுல ஏதாவது ஒன்னு கிடைச்சுடும்.”
“நான் கேள்விப்படற சங்கதிகள் ஒன்னும் நல்லாயில்ல வரது..
நீ அரியர் எல்லாம் வச்சிரிக்கியாமே? அப்படி வச்சிருந்தால் வேலை கிடைக்காதாமே?”
“அரியர்னா என்னாங்க..?” என்றாள் வரதுவின் அம்மா சுசீலா, சமையல் கட்டிலிருந்து!
“ம்ம்...அதுவா? உம்பையன் சில
பரீட்சையில் ஃபெயில் ஆகிட்டான், இல்லாட்டி பரீட்சையே எழுதலைன்னு அர்த்தம்..”
“ஏண்டா வரது.. ஏன் இப்படி பண்றே?
பரீட்சைக்கு படிக்காம வேற என்ன வேலை உனக்கு? இங்க இருக்கும் வரை
நல்லாத்தானே படிச்சே? பதறினாள் சுசீலா. “என்னமோ சொன்னீங்களே ‘அரியர்னு’? அதைப் பாஸ் பண்ணிட்டா வேலை
கொடுத்துடுவாங்காளா?”
‘கிடைக்கும்.. அதுக்கு இந்த துக்கிரிப் பய
படிக்கணுமே? உங்கிட்ட சொல்ல வேணாம்னு
பாத்தேன். நாம, இங்க நாயா உழச்சு, பணம் அனுப்புறதை, இவன் அங்கே, ஹாஸ்டலில் என்ன பண்ணுறான்னு
தெரியுமா? ஐயா, எல்லாரோடயும் சேந்து ‘தண்ணி’ அடிக்கிறார்.
சிகரெட்டு பிடிக்கிறார். புத்தி இப்படியெல்லாம் போச்சுன்னா படிப்பு எங்கே
மண்டையில் ஏறும்?” என்றார் சீனு.
“என்னங்க சொல்றீங்க...
நம்ம வரதுவா? “
“எல்லாத்தையும் விசாரிச்சுட்டுத்தான் சொல்றேன். இவன்
ரூம்ல இருக்கறவங்களுக்கு ரெண்டு பேத்துக்கு வேலை கிடைச்சுடிச்சு.. இவனுக்கு ஒரு
எழவும் இல்லை. அவுங்களுக்கு வேலை கெடச்ச துக்கு இவண் தண்ணி அடிச்சி கொண்டாடி
இருக்கான்!”
“ஐயோ ராமா.. இதென்ன சோதனை? இருந்திருந்து ஒரு புள்ளய பெத்தேன், எங்க
தரித்தரம் இத்தோடு போகட்டும்னு. நாங்க பட்டினி கிடந்து படிக்க வச்சா, இவன் இப்படி வந்து
நிக்கிறானே? இதுக்கா நாங்க, இந்த பாடு பட்டோம்? நம்ப முடியலியே என்னால? பாவிப்பயலே, குடும்பத்தை
ஒரு நிமிஷம் நினைச்சியாடா? உனக்காக நாங்க ஊரில் வாங்கிய கடனை நினைச்சியா? நீதான்
எங்களை கரையேத்தனும்னு நம்பினேனே? இப்படி மோசம் போனேனே?”
தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாள். சுவற்றில் முட்டிக் கொண்டாள். ‘ஓ’ வென ஓலமிட ஆரம்பித்தாள்.
வரது எழுந்து வெளியில் இருக்கும் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
அம்மாவின் அழுகை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பா ஏதும் பேசியதாகத்
தெரியவில்லை.
சற்று நேரம் பொறுத்து, அப்பா வெளியில் வந்தார்.
“எங்கூட வாடா..”
கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.
“உனக்கு வேலை கிடைக்காட்டியும் பரவாயில்லை. நீ துர்ப் பழக்கங்களை கற்றுக் கொண்டதுதான்
விசனமாய் இருக்குடா! ஒன்னு செய். வேலை
கிடைக்கலேன்னா எங்கூட புரோகிதத் தொழிலுக்கே வந்துடு. 'எனக்கு அமைஞ்ச பிராப்தம்
அவ்வளவு தான்'னு நினைச்சுக்கறேன். செய்யும் தொழிலுக்காகவாவது நீ கெட்ட
பழக்கத்திலிருந்து வெளியில் வருவாய் இல்ல?”
“உனக்குத்தான், புரோகித்த்தின் அடிப்படை தெரியுமே? என் கூட ஆறு மாசம் வந்தீன்னா எல்லாத்தையும்
கத்துக்கலாம்”
“அப்பா.. இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி, ரெண்டுபேரும் கூப்பாடு போட்டு டிராமா
பண்ணறீங்க? இந்த கம்பெனியில்லன்ன இன்னொரு கம்பெனி. அரியர் வைப்பதெல்லாம் பெரிய
விஷயமில்லேப்பா! கிளியர் செஞ்சுடுவேன். நான் சொல்லுவதை நம்பாம புரோகிதம் பாக்க
வரச் சொல்றீங்க!”
“எதுக்காக அரியர் வைக்கனும்? அப்புறம் எதுக்காக சேத்து வைச்சு படிக்கனும்? போட்டி நிறைஞ்ச
உலகம்டா இது. அந்த வேலைக்காக ஆயிரமாயிரம் பேர் காத்துக்கிட்டுருக்காங்க. உனக்கு இப்ப வேலை கிடைக்கலேன்னா அப்புறம்
மூவாயிரத்துக்கும், நாலியிரத்துக்கும் கம்பெனி கம்பெனியா, ஏறி இறங்கி, சிங்கியடிக்கனும். 'நீ எங்கேயோ போவேன்னு' மனக்கோட்டை கட்டினோம். அதையெல்லாம் தவிடு பொடியாக்கிட்டே. நீ
எங்களை காப்பாத்த வேணாம். உன்னையாவது காப்பத்திக்கனும்ல? அதனால தான் சொல்றேன்,
முடியலேன்னா எங்கூட வந்துடுன்னு! வழிவழியா வந்த தொழிலையே நீயும் செய்யலாம்”
“முடியாதுப்பா.. உங்ககூட புரோகிதம் பாக்க
நான் வரமாட்டேன். அது ஈனமானது, அதுல வருமானம் கம்மி என்பதால் இல்லை. அதில்
எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைப்பா. இதையெல்லாம் உனக்கு எப்படி புரியவைப்பது எனத் தெரியவில்லை.”
“இப்ப்ப நீ திதி செய்து வைக்கிறாய்.
யாருக்கு? செத்துப் போனவர்களுக்கு! மனுஷன் செத்துப் போனபின் ஒன்றும் இல்லை. Cease to Exist. சூன்யம் தான்.
நான் நம்பாத வேலைகளை என்னால் செய்ய முடியாது. அதே போலத்தான் மற்ற
சடங்குகளும். கடவுள் என்பதே மனுஷன் கண்டு பிடிச்சது தான் அப்பா”
“ரெண்டு மூனு தடவை பீர் குடிச்சேந்தான். இல்லேன்னு சொல்லலை. என்னவோ, குடித்துவிட்டு தெருவில் விழுந்து புரண்டுவிட்டது
போல ஏன் கூப்பாடு போடுகிறாய்? நீ, விடாமல்
வெத்திலை பாக்கு போடுறியே, அது மாத்திரம்
போதை இல்லையா? புராணங்களில் வரும் “சோம பாணம்”, “சுரா பாணம்” என்பதெல்லாம் என்ன?”
“வேலை கிடைக்காமல் போய்விடுமோன்னு, உனக்கு பயம், அவ்வளவுதானே? அது என் கவலை. நான் பாத்துக்கறேன். உனக்கு பாரமா இருக்க மாட்டேன். போதுமா?”
“ஈஸ்வரா.. என்ன பேச்சு பேசறான் இவன். இன்னும் என்ன வெல்லாம், உன்னால் நான் அனுபவிக்க வேண்டுமோ
தெரியவில்லை. படிச்சா புத்தி வரும்பாங்க.
உனக்கு க்ஷீனிச்சுப் போயிடுச்சு. உனக்கும் சுய புத்தியும் இல்லை. சொல்
புத்தியும் இல்லை. குடும்ப கஷ்டமும் தெரியலை. பீர் குடிச்சேன்னு எங்கிட்டேயே
சொல்றானே? படிக்காமல் இருப்பது சகஜம் என்கிறானே?”
“உன்னோடு பேசுவதுக்கு பதில, அந்த கோயில் செவுத்தோட பேசலாம். பையனா நீ? பிறந்து, இந்த மாதிரி துராக்கிரமமா பேசி, எங்க உயிரை வாங்குவதற்கு, நீ பிறக்காமலேயே இருந்திருக்கலாம். நான் சொல்லுவது
எதுவும் உன் மண்டையில்ஏறவே இல்லை. இனிமே உங்கிட்ட நான் பேசினேன்னா என்னை
செருப்பாலா அடி. உனக்கும் எனக்கு உறவு
இத்தோடு சரி. பகவான், இந்த கஷ்டத்தையெல்லம் பாத்துகிட்டு நான் உயிரோடு
இருக்கனும்னு எழுதியிருக்கான் போலிருக்கு” விருட்டென அவனை விட்டு அகன்றார்
சீனுவாசன். அவர் கற்ற வேதப்புத்தகங்களுக்கு எதிராக பேசியதும், அவனிடம் அவர் எதிர்பார்த்ததற்குக்கும், அவன் மீது அவர் வைத்த நம்பிக்கை யாவும் பொய்த்துப் போனதாக நம்பினார்.
விரக்தியும், வெறுப்பும் மேலிட மெயின் ரோடுக்கு வந்தான்
வரது. அங்கே முக்குட்டில் இருந்த பெட்டிக் கடை அருகே, தணிகை நின்று
கொண்டிருந்தான்.
‘என்ன ஐயிரே.. இந்த நேரத்தில இந்தப் பக்கம்?”
“அட சட்.. அதைச் சொல்லாதேன்னு எத்தினி வாட்டி சொல்றது?”
“சாரிடா மாப்ள...
இனிமே அந்த மாதிரி சொல்ல மாட்டேன்.
எதுக்கு ரோட்டுக்கு வந்தே?”
வீட்டில் நடந்தவற்றை எல்லாவற்றையும் விலாவரியாக்ச்
சொன்னான் வரது.
“அதான் மனசு வெறுப்பாயிருந்தது. ரோட்டிற்கு வந்தேன். அது
கிடக்கட்டும் நீ எதுக்கு இங்கே வந்தே”
மௌனமான நின்றான் தணிகை.
அவனாகச் சொல்லட்டும் எனக் காத்திருந்தான் வரது.
“என் வீட்லயும் அதே கதை தாண்டா. அரியர்,
தண்ணி, இன்னும் வேலை ஆகாதது எல்லாம் தெரிஞ்சு போச்சு. உன்னோட அம்மா வால, உன்னை அடிக்க
முடியலை. அதனால தன்னைத்தானே அடித்துக் கொண்டார். என்னோட அம்மா என்னை அடித்தே
விட்டாள்” தலைமுடியை விலக்கி காண்பித்தான் தணிகை. வீங்கியிருந்தது. லேசா இரத்தம்
கசிந்திருந்த்து. ‘கையில் கிடச்ச ஒரு கட்டையால” என்றான்.
“அடிக்கிற வரைக்கும் பாத்துக்கிட்டிருந்தியா?”
“அடிச்சது அம்மாடா.. நான் வேறென்ன செய்யனுங்கறே?”
“அதுவுமில்லாம, நான் செஞ்சது கொஞ்சம் கூட சரியில்லியேடா.. அரியர் வச்சேன்.
இன்னமும் காம்பஸ் ஆகலை”
“அவுங்க பாவம்டா.. டவுன்ல முனிசிபாலிட்டியில் தெரு கூட்டி என்னை படிக்க
வைக்கிறாங்க. என் தலைமுறையாவது நல்லா வரணும்னு கஷ்டப் படறாங்க. அப்பா
பிரயோசனமில்லை. சதா குடிதான். அதனாலதான், அம்மாவுக்கு குடின்னாலே அவ்வளவு கோவம்
வருது. அவுங்களை ஏமாத்தின மாதிரி நான் நடந்து கிட்டதால அவுங்க கோவம் நியாயம் தான்.”
“அதுவும் சரிதான்.” என்றான் வரது. தணிகையின்
அம்மாவையும் தன்னுடைய அம்மாவையும் நினைவில்
நிறுத்தினான். இருவரும் ஒரே மாதிரி ரியாக்ட் செய்திருக்கிறார்கள். இந்த சூழ்
நிலையில், எல்லா அம்மாக்களும் இப்படித்தான் செய்திருப்பார்களா?
“பயம்டா.. பயம்.. வேலை கிடைக்காமல் போய்விடுமோ? எங்கே
தங்களது தொழிலையே பையன்களும் செய்ய வேண்டி வந்திடுமோ என்ற பயம். அவர்களுக்கு, நம்மீது வைத்த நம்பிக்கை வினாகிவிட்டதாக நினைக்கிறார்கள். ஏனெனில் அவர்களது
வேலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லையே? நம்முடைய அம்மாக்கள் மிகுந்த அவசரத்தில்
இருக்காங்கடா! இருக்கும் நிலையிலிருந்து வெளியேறிவிட அவசரம். பணத்தைக் கண்டுவிட
அவசரம். கௌரவத்தைப் பெற்றுவிட அவசரம்! பையன்களை நல்ல நிலையில் உடனே பார்த்துவிட அவசரம். அது உடனே நடக்க வில்லை என்றதும் அத்திரம் வருகிறது.” என்றான் தணிகை.
“இதற்கு அடிப்படை என்ன தெரியுமா? ஏழ்மையும் வறுமையும்
தான். இதுக்கும் ஜாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைடா. பசியும், ஏழ்மையும் யாருக்கு
வந்தால் என்ன? விளைவும், வலியும் ஒரு மாதிரித்தான் இருக்கும்!. இதுவே நாம் வசதியான குடும்பமாக இருந்திருந்தால் இவ்வளவு கடுமையாக ரியாக்ட் செய்திருக்க மாட்டார்கள், புரிகிறதா?” என்று தொடர்ந்து சொன்னான் தணிகை.
சிந்தனை வயப்பட்ட வரது, “நம் தலைமுறையில் இந்த ஜாதிப் பிரிவுகள் தீராதாடா?” என்றான் வரது.
"தீராது.. தீர விடமாட்டார்கள். நமக்குள் இத்தனை
ஜாதிகளையும், மதங்களையும் உருவாக்கி வைச்சது யார் தெரியுமா? ஆள்பவர்களும், அதிகார
வர்கமும் தான். ஏனெனில், அவர்களுக்கு, அவர்கள் அதிகாரம் நீடிக்க ஜாதிகள் வேண்டும். மதங்கள்
வேண்டும். ஏழ்மை வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிழைப்பு நடத்த முடியும்.”
“அமாம்டா.. இப்போ நம்ம ரெண்டுபேர் கேசையே எடுத்துக்கோ,
என்ன பெரிய வித்தியாசத்தைக் கண்டே?
பொதுவானது ஏழ்மைதானே? அவுங்கவுங்க வர்ணத்திலே கூட காசு இருப்ப வனுக்குத் தான்
மரியாதை. மற்றவர்கள் தள்ளித்தான் நிற்க வேண்டும்” என்றான் வரது
‘சரி விடு. அதை பிறகு யோசிக்கலாம். நாளைக்கு விடிகாலை முதல் பஸ்ஸுக்கே ரெடியாகிடு. ஹாஸ்டலுக்குப் போய்
அரியருக்கும் இன்டர்வியூக்கும் உடணடியாக தயார் பண்ணிக்கணும். நம்ம
அம்மாக்களுக்காக!’
O.K பை... குட் நைட். கை குலுக்கிக் கொண்டார்கள் வரதுவும்,
தணிகையும்.
Good one; realistic one too...
ReplyDeletesuper story. good flow. samy
ReplyDeleteThank U Shri Samy
ReplyDelete