அக்காலத்தில்
ஒன்றாம் தேதிக்காக காத்துக் கொண்டிருந்த நேரங்களும், அந்த தேதி கொடுக்கும் குதூகலமும்
தனித்துவமானவை. முதல் தேதி என்று ஒரு திரைப்படமே வந்தது; சிவாஜி நடித்தது. முதலிரவில் மணமகன் மணமகளுக்காகக்
காத்திருக்கும் அனுபவத்தையொத்தது, ஒன்றாம் தேதியன்று, மத்தியதரத்தினர்
சம்பளத்திற்காகக் காத்திருப்பது.
சம்பளதின
கரண்சித் தாள்கள் தரும் சுகம் அலாதியானது. அவற்றை பான்டின் ரகசிய பாக்கட்டினுள்
ஒளித்து வைத்து, வீட்டிற்கு கொணருவதும், மனைவிக்கும் குழந்தைகளுக்கும், அன்று, ஏதேனும்
தின் பண்டங்கள் வாங்கிவருவதும், அக்காலத்திற்கே உரித்தான இன்பங்கள். சடங்குகள்.
சம்பளம், நேரிடையாக
ஆன்லைனில் அவரவது பாங்க் அக்கவுண்டில் போடப்பட்டு, நாம் ஏ.டி.எம் கார்டுகள் மூலம்
பணம் எடுக்கும் முறை வந்தபின்னும், கிம்பளங்கள் பெருகிய பின்னும், ஒன்றாம் தேதி
தனது திரில்லையும், முக்கியத்துவத்துவதையும் இழந்தது.
எனது அலுவலக ‘நண்பி’
ஒருவரின்
முகத்தில் எப்போதும் ஒரு சோகமும், சலிப்பும் இருந்து கொண்டே இருக்கும்! ஏதோ
குடும்பப் பிரச்சினை போல! அதையெல்லாம் கேட்பது நாகரீகமன்று என்பதால் வினவுவதில்லை!
அவருக்கும் கூட, ஒன்றாம் தேதி குதூகலத் தேதியாகிவிடும் விந்தையைக்
கண்டிருக்கிறேன். ஏ.டி.எம் வந்தபின், அந்த
பெண்மணிக்கு அந்த ஒரு நாள் மகிழ்ச்சியும் விடை பெற்றுக் கொண்டது. அவரது கணவன் அப்பெண்மணியின் ஏ.டி.எம்
கார்டையும், பின் நெம்பரையும் வாங்கிக் கொண்டு விட்டாராம். இதனால், இன்கிரிமெண்டோ,
பதவி உயர்வோ எதுவும் அவரது முகத்தில் எந்தவித மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததில்லை. அவர், அவரது வீட்டிற்கு பணம் கொண்டுவரும் ஒரு
மெஷின் அவ்வளவே! “பெண்களும் ஏ.டி.எம்
கார்டுகளும்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமளவிற்கு சில
சந்தோஷங்களும், சோகங்களும் உள்ளன. அவை பின்.
சில தினங்களுக்கு முன் பணம் எடுக்க ஏ.டி.எம்-க்கு செல்ல நேர்ந்தது. வண்டியை
நிறுத்திவிட்டு வரிசையில் நிற்க எத்தனிக்கும் போது, ஒரு பெண்மணி அதே நோக்கத்திற்காக டூ வீலரில் வந்திறங்கினார்.
வண்டியை நிறுத்தும் போது, அவரது துப்பட்டா, வண்டி ஸ்டேன்டில் சிக்கிக் கொண்டது. இக்கட்டான சூழலாதலால், விரைந்து சென்று அவரது
வண்டியைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு, அவரது துப்பட்டாவை விடுவித்துக் கொள்ள
உதவினேன். காரியம் முடிந்தது. அதி விரைவில் என்னைக் கடந்து, ஏ.டி.எம் வரிசையில்
எனக்கு முன்னால் நிற்க முயன்றார். தாராளமாக நீங்களே முதலில் செல்லலாம் என
வழிவிட்டு விட்டேன்.
அவரது முறை வந்தது. ஏ.டி.எம்
அறையினுள் சென்றார். சிறிய கண்ணாடியை எடுத்து, மேக்கப்பை சரிசெய்து கொண்டார். தனது
கைப்பையினை ஏ.டி.எம் மெஷின் மேல் வைத்தார். மறைவான இடத்திலிருந்து டெபிட் கார்டை
எடுத்தார். ஏதேதோ எண்களை அழுத்திய வண்ணமிருந்தார். பின் நெம்பரை மறந்துவிட்டாரோ?
ஒரு ஐந்து நிமிட போராட்டத்திற்குப் பின் அவருக்கு பணம் கிடைத்து விட்டது. பணத்தையும், கார்டையும் எடுத்துக் கொண்டு,
எனக்கு வழி விட்டார்.
உள்ளே சென்று பார்த்த பொழுது அப் பெண்மணி தனது கைப்பையினை ஏ.டி.எம் மெஷின்
மேலேயே வைத்துவிட்டு சென்றதைக் கண்டேன். நான் பணம் எடுக்காமல் அவரது கைப்பையினை
எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். நல்ல வேளை, அந்த பெண், தனது டூ வீலரை இன்னமும்
கிளப்பும் முயற்சியில்தான், இருந்தார். அவரிடம் மீட்டெடுத்த கைப்பையினை நீட்டி, “‘இது
உங்களுடையதா?” என வினவ, கூலாக ‘ஆம்’ என
பதிலளித்துவிட்டு, அவரது டூ வீலரின் சீட்டினைத் திறந்து, உள்ளே இருந்த அறையில்
வைத்துக் கொண்டார்.
அந்த அம்மணி, மாட்டிக்கொண்டுவிட்ட அவரது துப்பட்டாவை எடுப்பதற்கு உதவி
செய்தபோதும் சரி, வரிசையில் எனக்கு முன்னால் முந்திக்கொண்டு சென்றதை அனுமதித்ததற்கும்
சரி, அவரது கைப்பையினை மீட்டெடுத்துக் கொடுத்த்தற்கும் சரி, ‘நன்றி’ என்ற ஒரு
வார்த்தை அவரிடமிருந்து வரவே இல்லை. 'நன்றி' என்ற வார்த்தை அவரது அகராதியிலிருந்தௌ நீக்கப்பட்டு விட்டதா அல்லது அவருக்கு உதவியாக வேண்டியது உலகத்தின்
கடமையெனவும், அவ்வாறு உதவியவர்களை உதாசீனப்படுத்துவது அவரது உரிமை எனவும்
நினைத்துக் கொண்டாரோ என்னவோ?
பணம் எடுக்க வரிசைக்கு மீண்டும் திரும்பிய போது, எனக்கு முன் பத்து பேர்,
சேர்ந்து விட்டிருந்தனர்.
சிலபேர் அப்படித்தான். வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு எடுத்துக்கொள்ள மட்டுமே தெரியும். எதையுமே கொடுக்கத்தெரியாது, நன்றி உள்பட! இதுவும் ஒருவகை ஊனமே. நல்லவேளை, அவர் உங்களுக்கு உறவல்ல என்று நிம்மதி அடையுங்கள்!
ReplyDeleteநீங்க வேறே! சொந்தங்கள் இதைவிட மோசமாக இருக்கிறார்கள்!
Delete