Thursday, February 9, 2012

வதங்கிப் போன தாமரை!!


நமது மாண்புமிகு சட்டசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சாமியார்களாகவோ, உத்தம புத்திரர்களாகவோத்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கும் அறிவீனமோ, மூடப்பழக்கமோ நமக்கு இல்லைதான்.

ஆனால், உயர்ந்தபட்ச ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் காட்டுவதற்கான புனித இடமாகக்(!) கருதப்படும் சட்டசபையில், கர்னாடக மாநில அமைச்சர் திரு. லக்ஷ்மன் சவதி, ஒரு பெண் கற்பழிக்கப்படும் காட்சியினை தனது மொபைல் ஃபோனில், கண்டு களித்துக் கொண்டருந்தாராம். அனேக மாக இந்தியசட்டசபைகளின் வரலாற்றில், என்றென்றும் ஒருதீராத களங்கமாகவே இருக்கும், இவரது நடத்தை.

சட்டசபைகளில் நமது மான்புமிகுக்கள், நடந்து கொள்ளும் மான்பு, சமீபகாலமாக, கிலாசிக்கக் கூடியனவாக இல்லை. 

முஷ்டியை உயர்த்துவது,  நாக்கினை மடக்கி மிரட்டுவது போல பேசுவது, கை நீட்டிப் பேசுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது, கூச்சலிடுவது, மேஜை மற்றும் மைக்குகளை உடைத்தெறிவது, நாற்காலிகளை தூக்கி எறிவது, சபாநாயகரை சூழ்ந்துகொண்டு கோஷமிடுவது, காலணிகள் பறப்பது, பேப்பர்களைக் கிழித்தெறிவது, அடுத்த மாண்புமிகுவின் முதுகில் செல்லமாகத்(!) தட்டுவது, முதல்வர்களை துதிபாடுவது, முக்கியமான விவாதத்தில் கூட தூங்குவது, அல்லது சபைக்கே வராமலிருப்பது போன்ற நடவடிக்கைகளை, சகல மக்கள் மன்றங்களிலும் காண்கிறோம்.  

உச்ச கட்டமாக சில ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவரின் சேலையினை பற்றி இழுத்ததை காணும் துர்பாக்கியம் கூட, நமக்கு கிடைத்தது!

தற்போது, கர்னாடக அமைச்சர்கள், தங்கள் பங்கிற்கு,  சட்டமன்றத் திலேயே, “போர்னோ ரேஞ்சுக்குகான கிளிப்பிங்குகளை, பார்த்த விவகாரம் கிளம்பியுள்ளது. அனேகமாக இந்திய சட்டமன்ற சரித்திரங்களில் ‘போர்னோ பார்த்து, சாதனை நிகழ்த்திக் காட்டிய அற்புதம், கர்நாடக பி.ஜே.பி அமைச்சர்களைத்தான், சார்ந்ததாக இருக்கும்.

இந்தோனிஷியாவில், போர்னோவினை எதிர்க்கும் கட்சியினைச் சார்ந்த ஒரு எம்.பி இந்தோனிஷிய பாராளுமன்றத்திலேயே “போர்னோபார்த்ததாக குறிப்பிட்டுள்ளது ‘தி ஹிந்து.

இந்திய கலாச்சாரத்தினைப் பாதுகாக்கும் “காவலனாகதன்னைக் காட்டிக் கொள்ளும் பி.ஜே.பி, “காதலர் தினத்தின் போதெல்லாம் ‘பப் களில் புகுந்து, அங்கு இருக்கும் காதலர்களை இழுத்துப் போட்டு அடிக்கும் “கலாச்சாரக் காவலர்களின் அனுதாபிகளான பி.ஜே.பி,  ஆளும் மானிலத்தில்தான் இத்தகைய கூத்துக்கள்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தானாகவே(!) முன்வந்து பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனராம்.  சில தினங்களுக்கு முன்தான் உடுப்பியில் (கர்னாடகா) “ஒரு மாதிரியான கேளிக்கைக்கு அனுமதி அளித்துவிட்டு விழித்துக் கொண்டிருந்தது கர்னாடக அரசு.

சினிமா கூத்தாடிக் கட்சிகளுக்கும், ஜாதி அடிப்படையிலான கட்சிகளுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை. அவர்களிடம் எந்தவிதமான ‘தத்துவ அடிப்படைகளையும் எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸின் கொள்கைகள் நீர்த்துப் போய், ஆண்டுகள் பலவாகின்றன. சந்தர்ப்பவாதமும், ஊழலும், அமெரிக்காவின் கால்களைக் கழுவிக் குடிப்பதும், நேருவின் குடும்பத்தினரையே அதிகார மையமாத் திகழ வைப்பதும்தான், அக்கட்சியின் கொள்கையாகி விட்டது.

ஆனால், ஓரளவு (சரியோ தவறோ, அவர்கள் வகுத்துக் கொண்ட சில கோட்பாடுகளின் அடிப்படையில்) தத்துவம் பேசும் கட்சிகளில் முக்கிய மானவை பி.ஜே.பி யும், இடது சாரிகளும்.

ஆனால் நாங்கள் “கொள்கை பேசுவதெல்லாம் சும்மா;  நாங்கள்  எந்த வகையிலும் காங்கிரஸுக்கு மாற்று இல்லை; எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான், என தீர்மானமாக நிரூபித்துக் கொண்டுள்ளது பி.ஜே.பி; குறிப்பாக கர்னாடகத்தில்.

எங்களிடம் வித்தியாசமாக எதையும் எதிர்பார்க்காதீர்கள். “சுதேசி”,  “இந்திய கலாச்சாரம் என்பதெல்லாம் வெறும் வெற்றுக் கூச்சல்கள்தான் என சொல்லாமல் சொல்லியிருக்கிறது பி.ஜே.பி. இந்த தவறை சாதாரண தொண்டர்கள் செய்திருந்தால் கூட புரிந்து கொள்ள முடியும்! அமைச்சர்களே, அதுவும் சட்டமன்றத்திலேயே செய்துள்ளனர் என்பதை ஜீரணிக்க இயலவில்லை.

இனியும், அரசியல்வாதிகள் மீது, எவரேனும், ஏதேனும், சிறிதளவாவது நம்பிக்கை வைத்திருந்தால், அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும்.  
                              -0-

1 comment:

  1. Hello RB !

    Very HOT opinion i find .
    சினிமா கூத்தாடிக் கட்சிகளுக்கும், ஜாதி அடிப்படையிலான கட்சிகளுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை. அவர்களிடம் எந்தவிதமான ‘தத்துவ அடிப்படைகளையும்’ எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸின் கொள்கைகள் நீர்த்துப் போய், ஆண்டுகள் பலவாகின்றன. சந்தர்ப்பவாதமும், ஊழலும், அமெரிக்காவின் கால்களைக் கழுவிக் குடிப்பதும், நேருவின் குடும்பத்தினரையே அதிகார மையமாத் திகழ வைப்பதும்தான், அக்கட்சியின் கொள்கையாகி விட்டது.

    Fine.
    BT Arasu

    ReplyDelete