Tuesday, January 17, 2012

மனசே, நீ ஒரு ம(ரு)ந்திர சாவி..!

(ஒரு பக்கக் கதை)


“அப்பா, இந்த போரடிக்கும் வேலையெல்லாம் என்னால் அகாது..

“ஒரே ஒரு நாள் ராத்திரிதான்டா.  காலையிலே வீட்டுக்கு வந்தூடலாம்

“வீட்டுக்கு வராம அங்கேயேவா குடியிருக்கப் போறேன்? அந்த ஆஸ்பத்திரி என்விரான்மென்டே எனக்கு பிடிக்காது அப்பா

“மனுஷாளுக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கனும்டா! அந்த மனுஷன் நமக்கு நிறைய செஞ்சிருக்கார்டா, இந்த சின்ன காரியத்தைக்கூட செய்யறதுக்கு ஒனக்கு உடம்பு வளையமாட்டேங்குதில்ல?

“....

“நீ போய் ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்துட்டு, ஃப்ரண்ட்ஸொட சேந்து தம்மடிச்சுட்டு கிட,  நான் போய்ப் பாத்துக்கறேன்

"ஆரம்பிச்சுட்டியா உன்னோட யூஷூவல் டயலாக்கை?  நானே போய்த் தொலையறேன்

சரியான நச்சு இந்த அப்பா.  அவருடைய சொந்தக்காரர், யாரோ ஒரு ஆள். ஒன்னுவிட்ட மாமாவோ, சித்தப்பாவோ ஏதோ ஒரு உறவு  சொன்னார். ரங்கன் என்று பெயர். பக்கத்து உடையார்பட்டி என்னும் கிராமத்தில் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். ரெண்டு மாசம் முந்தி, இடது கை கட்டைவிரலில், கம்பி குத்திவிட்டது.  அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. அது செப்டிக் ஆகி விட்டது.

இங்கே சேலத்தில் கொண்டுவந்து காண்பித்ததில், ஆபரேஷன் செய்தாகனும் சொல்லிட்டாங்க போல. இன்னிக்கு சாயங்காலம் ஆபரேஷன், ஆகிவிட்டது!  ஒரு நாள் இருந்து விட்டு, நாளைக்கு டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாக சொன்னார்களாம். அப்பா ஆபரேஷன் முடிந்து ரூமில் கொண்டுவந்து விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்துவிட்டார். 

அப்பாவிற்கு இரவானால், கண் சரியாக தெரியாது. லேசாக மாலைக் கண். அதுதான், என்னைப் போய் இன்னிக்கு ராத்திரி போய் பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார்.

இன்னிக்கு ஃபரண்ட்ஸ் உடன் ‘நண்பர்கள் படம் பார்க்க திட்டமிட்டி ருந்தேன். அப்பா அதற்கு வேட்டு வைத்துவிட்டார். வேலை தேடிக்கொண்டிருக்கும் ஆள் என்றாலே இந்த மாதிரி வேலைகள் எல்லாம் வந்து சேரும் போல!

ஆஸ்பத்திரிக்கு போகும் போது, இரவு மணி ஏழு இருக்கும். அவர் படுத்திருக்கும் ரூமைத் திறந்தபோது, ரங்கன் ‘பள்ளி கொள்ளாமல் உலாத்திக் கொண்டிருந்தார்.

‘சித்தப்பா...

“யாரது? மணிகண்டனா?

“ஆமாம்..

‘அப்பா வரலியாடா?

“இல்லை, என்னைப் போகச் சொன்னார். அவருக்கு ராத்திரியானால் கொஞ்சம் தடுமாற்றம் வரும்

‘அட, ஆமாம்டா.. நான் மறந்தே போனேன். உங்கப்பாவுக்கு ராத்திரியில கண் சரியா தெரியாது. ஞாபகம் இருந்திருந்தால், வராதே என, நானே சொல்லியிருப்பேன்..

‘சித்தப்பா, இந்த கட்டைவிரல் ஆபரேஷனுக்கா, அட்மிட் பண்ணிட் டாங்க?

“ஆமடா.. நிறைய சதை எடுக்கும்படியா ஆயிடிச்சு, வயசாயிடிச்சில்ல? அதான் ராத்திரி இருந்துட்டு நாளைக்கு போகலாம்னுட்டாங்க

“எதனாச்சும் சாப்பிடறதுக்கு வாங்கிட்டு வரட்டா?

“ஒன்னும் வேண்டாம், ஆஸ்பத்திரியிலேயே கொடுத்துட்டாங்க. நீ இந்த பக்கத்து பெஞ்சிலேயே படுத்துக்கலாம். நீ சாப்டாச்சா?

‘இல்லை, இனிமேத்தான், நான் கீழே போய் கேண்டீன்ல சாப்பிட்டு விட்டு வர்ரேன். அது வரைக்கும் தனியா இருப்பியா?

‘தனியா இருக்கறதுக்கென்ன? நீ போய் வா.

கீழேபோய் சாப்பிட்டு விட்டு, ஒரு தம் அடித்துவிட்டு மெள்ளத்தான் மேலே வந்தேன்.

இந்த மருந்து வாசனையும், பினைல் வாசனையும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. என்ன செய்ய? பெட்டிற்கு எதிர்ப்பக்கத்தில், அட்டென் டென்களுக்காக போடப்பட்டிருந்த இருந்த பெஞ்சில் தலை சாய்த்தேன்.

மணி பதினொன்றிருக்கும். சித்தப்பா “ஐயோ, அப்பா.. என கத்தினார்.

எழுந்து பார்த்தால், சித்தப்பா விரலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

‘டேய், மணிகண்டா கட்டைவிரல் வலி உயிர் போகிறதடா, போய் நர்ஸை கூட்டிக்கிட்டு வாடா என அலறினார்.

எழுந்துபோய் வார்டு நர்ஸை கூப்பிட்டுக் கொண்டு வந்தேன். அவர் வந்து காயத்தை சோதித்தார். இரத்த அழுத்தம் பார்த்தார். பல்ஸ் பார்த்தார். வலிக்கு இரண்டு மாத்திரை தந்துவிட்டு சென்றார்.

அரைமணி நேரம்தான் சென்றிருக்கும். சித்தப்பா மீண்டும் அலற ஆரம்பித்தார்.

“ஐயோ வலிக்குதடா, நர்ஸ் கிட்டே போய் மாத்திரை வாங்கியாடா

இதென்ன பிடுங்கலாய்ப் போயிற்று? இதுக்குத்தான் ஆஸ்பத்திரிக்கெல்லாம் போகமாட்டேனென்றேன்.

மீண்டும் நர்ஸ் இடம் போய் முறையிட்டேன்.

“அவருக்கு ஒன்னுமில்ல. எல்லாம் நல்லாத்தான் இருக்கு. மறத்துப் போகறதுக்கு போட்ட ஊசியின் எஃபெக்ட் போனதால் அவருக்கு வலிக்கிறது. நகக்கண் இல்லையா? அப்படித்தான் வலிக்கும். பொறுத்துக்கச் சொல்லு

அதை, திரும்ப வந்து ரங்கனிடம் சொன்னால் இன்னும் வேகமாய் அலறுகிறார். “வலி தாங்கலியடா

மீண்டும் நர்ஸிடம் போய் ஏதாவது வலி மாத்திரை கேட்டேன்.

“ஏன் தம்பி, உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாது? வலி மாத்திரையெல்லாம் சும்மா, சும்மா தர முடியாது. டாக்டர் எழுதியிருக்கறபடி தான் தரமுடியும். அவரிடம் கேட்டுவிட்டேன். அவ்வளவுதான் கொடுக்கச் சொன்னார்

இதென்ன கஷ்டம்?

கீழேபோய் மீண்டும் ஒரு ‘தம்போட்டுவிட்டு, வரும்போது சித்தப்பா விற்காக ‘சிலது வாங்கிக் கொண்டு வந்தேன்.

“சித்தப்பா, வாயைத் திற, இப்ப நான் கொடுக்கும், நாலு மாத்திரையை முழுங்கக் கூடாது.  நாக்குக்கடியில் அடக்கி வைத்துக் கொள். தானே கரைய வேண்டும். கசக்காதாம். லேசா தித்திப்பாகத்தான் இருக்குமாம். உடனே வலி சரியாய்ப் போய்
விடும். மீண்டும் வலியெடுத்தால், இன்னும் நாலு மாத்திரை எடுத்து நாக்குக்கடியில் வைத்துக்கொள். ரொம்ப பவர்ஃபுல் மாத்திரை. விலை அதிகம். வெளியில் போய் வாங்கிக் கொண்டு வந்தேன்.

“சரிடா.. ரொம்ப புன்னியமாப் போச்சு.. என்றார் அனத்தலுடன்

அதன் பின் சித்தப்பா தொந்தரவில்லை. காலை, அப்பா வந்து என்னை ‘ரிலீவ்செய்ய வந்தார்.

‘ராத்திரி எனக்கு வலி ரொம்ப தாங்க முடியலடா. உம் பையன் தான் வெளியில போய் எனக்கு மாத்திரை வாங்கியாந்தான். விலை அதிகமாம். போட்டவுடனே வலி மறைஞ்சு போச்சுடா. விடிய காத்தாலே மறுபடியும் வலி வந்தப்ப, மேலும்  நாலு மாத்திரை எடுத்துக் கொண்டேன். இப்ப பரவாயில்லைடா என்றார்.

‘ஆரோட பய இவன்? ஒடம்புதான் வணங்காது. ஆனா புத்திசாலியில்ல எம்மவன்?

ரங்கனை, அப்பாவிடம் ஒப்படைத்து விட்டு, கீழே இறங்கி வந்தேன். 

ராத்திரி, சித்தப்பாவுக்காக, ‘ஐந்து ரூபாய்க்கு வாங்கிய, ஒரு கைப்பிடி அளவு, ‘காஸ்ட்லி மருந்தான ‘சீரக மிட்டாய்களின், மீதியை தூரக் கொட்டிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

Saturday, January 14, 2012

ஃபேஸ்புக்கும் – உயர் நீதி மன்றமும்.


தில்லி உயர் நீதி மன்றம், சமூக வலைத்தங்களுக்கு எதிராக, வாளை சுழற்றியுள்ளது.
ஆட்சேபிக்கத்தக்க விஷயங்களை அகற்றுவதற்கான நடைமுறையினை ஏற்படுத்தாவிடில், சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்படக்கூடும் என  நீதிபதி ஒருவர் கருத்து தெரிவித்துவிட்டார். இந்த மாதிரியான ‘அப்ரோச்சினை லிபரலைசேஷன்-குலோபலைசேஷன் காலத்தில் ஏற்க இயலாது என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதலில், இது தொழில் நுட்பரீதியாக சாத்தியப்படுபவை அல்ல. குறிப்பிட்ட I.P  ஐ தடுக்கலாம். ஆனால், அனுமதித்த வலைத்தளத்தில், கோடிக்கனக்கானோர் அதில் தெரிவிக்கும் கருத்துக்களை சென்ஸார் செய்வது எப்படி? ஒவ்வொரு “போஸ்டையும் சரிபார்த்து, அப்ரூவ் செய்து, அதன் பின்னர்தான் வெளியிடப்படவேண்டும் என்றால் மட்டுமே இது சாத்தியம். தணிக்கைக்காக, தனியாக ஒரு மிகப்பெரிய இலாக்காவே போட வேண்டும்.  ஏனெனில், இது தொழில்  நுட்பம் சார்ந்த விஷயம் அல்ல! ஆட்சேபகரமான கட்டுரைகளை வெளியிடுவது மனிதர்கள்தாம்.
  
பத்திரிக்கை செய்தியினை பார்த்து, எதுவெல்லாம் ஆட்சேபிக்கத்தக்க விஷயங்கள் என, கோர்ட் கருதுகிறது என ‘முழுமையாகத் தெரியவில்லை. கீழ்க்கண்டவை ஆட்சேபகரமானவை எனக் கருதுகிறார்கள் என ஓரளவுக்கு அறிய முடிகிறது.

(அ) அவதூறு மற்றும் நாகரிகமற்ற முறையில் திட்டி எழுதப்படுபவை
(ஆ) பாலுணர்வு சம்பந்தமான வெளியிடப்படுபவை

சென்ஸார் விஷயத்தில் ‘சீனாஉதாரணம் காட்டப்படுகிறது.  நாம் எப்போதிலிருந்து சீனாவினை பின்பற்றத் துவங்கினோம்?  “சீன பானி ஜன நாயகத்தை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுவிட்டதா என்ன? சீன அரசியலமைப்பை இந்தியாவும் ஏற்றுக் கொண்டால், நாமும் இதுபோன்ற தடைகளை விதிக்கலாம். அது சாத்தியமில்லாத நிலையில், எதற்காக சீனா மாதிரியான தணிக்கை முறை வேண்டும் என்கின்றனர்?

சீனாவில் எவையெல்லாம் தடைசெய்யப்பட்டுள்ளன எனப்பார்த்தால், பொதுவாக இவற்றை நமது சௌகரியத்திற்காக மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்

           (1)    சீன இறையாண்மைக்கு எதிரான எல்லாமும் (சீன அரசை எதிர்க்கத்தூண்டுவது,             
         சோஷலிஸ முறையினை எதிர்க்கத் தூண்டுவது, ஒருமைப்பாட்டிற்கு ஊறு 
         விளைவிப்பது  ... இத்தியாதி..  ....இத்தியாதி....)

(2) மூட நம்பிக்கைகள், பாலுணர்வு, வதந்தி போன்றவற்றை பரப்புவது

             (3)    விலாசத்தினை மறைத்து அல்லது அநாமதேயமாக எழுதுதல்.


இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரச்சாரங்கள் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள் ளனவே? அரசியல் சட்ட புனிதத்தைக் காப்பதற்காக நிறைய சட்டங்கள் உள்ளன. அரசு எப்போது நினைத்தாலும் இவைகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம். அரசு மாத்திரமல்ல  தனி நபர்கள் கூட ‘அவதூறு குறித்து நஷ்ட ஈடு வழக்கு தொடரலாம்.

தேவைப்படின், அவதூறாக எழுதுபவர்கள் குறித்த தகவலைக் கேட்டால் கொடுக்க வேண்டும் என ‘சைபர் சட்டங்களில் மாறுதல் கொணரலாம்.

அடுத்து பாலுணர்வு. இதுபற்றி நிறைய பேசியாகிவிட்டது. சட்டம் போட்டெல்லாம் இவற்றை தடுக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரியும். சமூக வலைத்தளங்கள் இல்லாத போது பாலுணர்வு தூண்டப்படவில்லையா?  சமூக வலைத்தளங்கள் இல்லாவிடில் ‘அவர்கள் இன்னொரு வழியினைக் கண்டுபிடிப்பார்கள். இது சமூகப் பிரச்சினை. அதைத் தீர்க்க இதுவெல்லாம் வழியில்லை. இவர்களது ஆசானான ‘அமெரிக்க நீதிமன்றங்களிலேயே “பாலுணர்வு தூண்டும் தளங்கள்தடுக்கப்பட வேண்டும் என்ற வாதம் எடுபடவில்லை. குறைந்தபட்சம் “18-வயதுக்கு கீழ் உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்ளுதல், வன்புறை+பாலுணர்வு ஆகியவற்றிற்கு ஏதும் செய்ய முடிந்தால் நல்லது. அதுவும் தொழில்  நுட்பத்தினைக் கொண்டு செய்ய முடியாது. சமுதாயத்தின் ‘மெச்சூரிட்டிமற்றும் நாட்டின் கலாச்சாரத்தினைச் சார்ந்துதான் சாத்தியம்.


அநாமதேயம் மற்றும் வசைபாடுவது: இது கவலை கொள்ளத் தக்க விஷயம் தான். வெறுப்பு உமிழும், மத-இன விரோத மற்றும் பிராந்திய உணர்வைத்தூண்டும் கட்டுரைகள் வலைகளில் மண்டிக் கிடக்கின்றன. இவ்வைகை கட்டுரைகள் மக்களிடையே விரோதத்தினை வளர்க்கின்றன. ஆனால் இவை தொழில் நுட்பத்திற்கு அப்பாற்பட்ட விஷயமல்லவா?  இம்மாதிரியான போஸ்ட்கள் போடுவோரது விலாசத்தினைப் பெற்று வழக்கு பதிவு செய்யலாம்.  ஆனால் ‘அநாமதேயங்களை தடுப்பது சாத்தியமே.


சில சட்டங்களை கடுமையாக்கலாமே தவிர, சென்ஸார் என்பது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று.

இறுதியாக,  வெளி நாடுகளில் கடன் பெறுதல், அணு எரிபொருள், தொழில் நுட்பம், சர்வதேச வர்த்தகம், பொருளாதாரம் என ஒன்று பாக்கியில்லாமல் அனைத்திற்கும், நாம் சர்வதேச “பெரியண்ணன் அமரிக்காவை நம்பியிருக்கும் இந்த நிலையில், காற்றில் வாளைச் சுழற்றுவது வெட்டி வேலை. ஏனெனில் அமெரிக்காவை ஆள்வது ஒபாமா அல்ல! பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் தான் (கூகுளும் அதில் சேர்த்தி).  அத்தகைய கம்பெனிகளுக்கு எதிராக அமெரிக்கா ஒருபோதும் நிலையெடுக்காது.  நாம் சும்மா ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கலாம். அவ்வளவே!

Friday, January 13, 2012

பதினாறு வயதினிலே!


பெண்ணுக்கு (மனைவிக்கு) எந்த வயதாக இருந்தாலும், ஆணுக்கு (கணவனுக்கு)  60 வயது முடிந்து 61 துவங்கும் போது, சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள். பசு பூஜை, கஜ பூஜை, கலச பூஜை என யாவும் முடிந்து, அபிஷேகம் ஆனபின், மனைவிக்கு மீண்டும் ஒரு தாலி கட்டு கிறார் கணவன். திருக்கடையூர் கோவிலில் இந்த சஷ்டியப்த பூர்த்தியினை செய்து கொண்டால் விசேஷம் என்கின்றனர். ஏன்? முன்னொரு காலத்தில், மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததாம். முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் புரிய, தவத்திற்கு இறங்கிய சிவன், "உனக்கு அறிவுள்ள குழந்தை பிறந்தால் 16 ஆண்டுகளே உயிர் வாழும். அறிவற்றவன் பிறந்தால், நீண்டநாள் வாழும், இதில் எந்தக் குழந்தை வேண்டும்?" எனக்கேட்டாராம்!

மிருகண்டு திகைத்தார். அறிவுள்ள குழந்தையே வேண்டும் என தீர்மானித்தார்.  பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். மார்க்கண்டேயனுக்கு 16 வயது வந்தது. மார்க்கண்டேயன் சிவத்தலங்க
ளுக்குச் சென்றார். 107 சிவத்தலங்கள் சென்ற மார்க்கண்டேயன் 108வது தலமாக திருக்கடையூர் வருகிறார். இவரது வாழ்வின் இறுதி நாளும் வந்து விடுகிறது. உயிரைப் பறிப்பதற்காக எமன் கோயிலுக்கே வந்து விடுகிறார். எமனைக்கண்ட மார்க்கண்டேயன்,  சிவலிங்கத்தை கட்டிக்கொண்டார். இருந்தாலும் எமன் விடவில்லை. மார்க்கண்டேயரது உயிரைப்பறிப்பதற்காக எமன் பாசக்கயிறை வீச, அந்தக்கயிறு சிவலங்கத்தின் மீது விழுகிறது. கோபம் கொண்ட சிவன், "எனக்குமா பாசக்கயிறு என வெகுண்டு, எமனை அழித்துவிடுகிறாராம். இதனால் பூமியில் இறப்பே இல்லாமல் போக,  பூமி பாரம் தாங்காத பூமாதேவியின் வேண்டுதலால் சிவன் மனமிறங்கி எமனுக்கு உயிர் தந்தாராம்.

எனவே இங்கு “சஷ்டியப்த பூர்த்திசெய்து கொண்டால், என்றும் 16-ஆக இருக்கலாம் என்ற அவா கொண்டு, பலர் இங்கு வந்து இந்த விசேஷத் தினை செய்து கொள்கின்றனர். இது சஷ்டியப்த பூர்த்தி தலம்: 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும், 60வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும், 69 வயது முடிந்து 70 வயது தொடங்குபவர்கள் பீமரதசாந்தி பூஜையும், 80வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமமும் செய்வதற்கு ஏற்ற  தலமாம்..


எனது அடிப்படைச் சந்தேகம், தனது கடமையினைச் செய்ய வந்த  எமன் எதற்காக அழித்தொழிக்கப்பட வேண்டும்? யமனுக்கான சட்ட திட்டங்களை வகுத்ததே சிவன் தானே? மேலும், மார்க்கண் டேயனுக்கு 16 வயதுதான் ஆயுள், என நிர்ணயித்ததே சிவன் தானே? பெரிய இடத்தைக் கட்டிக் கொண்டால் (!), ஆபத்த்திலிருந்து தப்பிக்கலாம் என்பது, தப்பான, ஆபத்தான் உதாரணமல்லவா? இருக்கட்டும்! இதெல்லாம் அவரவர்கள் நம்பிக்கையின்பாற் பட்டது!

இதுவரை சுமார் இருவது முறையாவது, நண்பர்கள்-உறவினர்கள் என, இந்த ஊரில் நடைபெற்ற 'சஷ்ட்டியப்த பூர்த்திகளுக்கு" சென்று வந்துள்ளேன்.  எல்லா சஷ்ட்டியப்த பூர்த்தியிலும் புரோகிதர்கள், மறக்காமல் ஒரு ஜோக்(!) அடிக்கின்றனர். “சாருக்கு (ஆணுக்கு) இன்று முதல் 61. திருப்பிப் போடுங்கள்! 16 ஆகிறது. எனவே இன்று முதல் 16 வயது வாலிபனாகிறார்என்பதும், அதற்கு தம்பதிகள் அசடு வழிந்துகொண்டு இளிப்பதும், மாறாது நடைபெறுகிறது.

சென்ற வாரம் இம்மாதிரியான ஒரு நிகழ்விற்கு, அந்த ஊருக்கு செல்ல  நேர்ந்தது. அங்கு நடந்தவைகளைக் கண்டு அசந்து போனேன்!

மருத்துவ மனைகள், கல்விக் கூடங்கள், தொண்டு நிறுவனங்கள் யாவும் ‘வியாபார தலமாகிவிட்டது என அலுத்துக் கொள்கிறேமே, இங்கு வந்து பாருங்கள். முழுமையான வியாபாரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய மண்டபத்தில் விசேஷம் நடத்த உச்ச கட்டணம். சுற்று பிரகாரத்திற்கு வேறு வகையான கட்டணம். அம்மன் கோவிலில் கொஞ்சம் மலிவு.   (சுவாமியாக இருந்தாலும் கூட, பெண் என்றால், மதிப்பு குறைவுதான் போலும்).

தங்குமிடம், உணவுக் கூடம், மாலை, வீடியோ என எல்லாவற்றிலும் ஏறிய விலை விற்கிறார்கள். புரோகிதர்களின் சம்பளம் (ஸம்பாவனை)  உட்பட. எல்லாமே 'காண்டிராக்ட்' பேசிஸ் தான். 

தம்பதிகளுக்கு, அபிஷேகம் ஆனபின் உடை மாற்ற வேண்டு மல்லவா? அந்த உடைகளை அங்கேயே போட்டுவிடவேண்டுமாம். இது எந்த சாஸ்த்திரம் என புரியவில்லை. ஒரே சமயத்தில் 30 தம்பதிகளுக்கு அபிஷேகம் ஆனாலும் சரி. கழுகு போல, இதற்காக (உடைகளை எடுத்துக் கொள்ள) ஆட்கள் காத்திருக்கிறார்கள். எங்கேயிருந்து கவனிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவிழ்க்கப் பட்ட உடைகள், உடனடியாக கவர்ந்து கொள்ளப்படுகின்றன. கொஞ்சம் தாமதப் படுத்தினால், உருவிக் கொண்டு விடுவார்கள் போல! நமது உடைகளை எடுத்துக் கொள்ள ‘தட்சனை’ வேறு  தனியாக கேட்கிறார்கள்.

அபிஷேகத்தின் போது, தம்பதிகள் கழுத்தில் போட்டிருந்த மாலையை, உடைமாற்றும் போது கழற்றி கொடுத்தனர்.  கொஞ்ச நேரம், அதைக் கையில் வைத்திருந்தேன். பின், இவைகளை என்ன செய்வது எனத்தெரியாமல், மாலைகளை பிரகாரத்தில், ஒரு ஓரமாக வைத்தேன். ‘விறுவிறு வென வந்தார் ஒருவர். ‘சரட்டென அந்த மாலைகளை கவர்ந்து கொண்டார். அது எங்களுடைய மாலை என சொல்ல நினைத்தேன். என்னதான் செய்யப் போகிறார் என்ற ஆவல் தோன்ற, சற்று நிதானித்தேன். சற்றும் தயங்காமல், பக்கத்து மண்டபத்தில், வேறு யாருக்காகவோ போடப்பட்டிருந்த ‘கலசங்களுக்கு இந்த மாலைகளை அணிவித்தார். அடப்பாவிகளா!

இது மாத்திரமல்ல, தானமாக அளித்த பச்சரிசி, வாழைக்காய் மற்றும் கலச தேங்காய்,  என யாவும் ரீ-சைக்கிளிங் செய்யப் படுகின்றன. யாரோ ஒரு சூத்திரதாரி மறைவில் நின்று இயக்குவது போல, அனைத்து ரீ-சைக்கிளிங்கும், முறையாக, திட்டமிட்டபடி, ஒரு தவறும்-குழப்பமும் இல்லாமல் நடந்தேறுகின்றன. இது தவிர,  நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒப்புக்கொள்ளப்பட்ட தொகைக்கு மேலாக ‘உங்களிஷ்டப்படி போட்டுக் கொடுங்கள் என்ற கோரிக்கை வந்தவண்ணம் இருக்கும்.

வியாபாரத்தனங்களும், பிழிந்தெடுக்கும் கூட்டமும், வியர்வையும், அழுக்கும் அலுப்பெற்ற, சற்று காலார வெளியே வரலாம் என நினைத்து கோவிலின் வெளியே வந்தேன்.

கோயிலின் வெளியே இரண்டு தொல்லைகள்! ஒன்று பிச்சைக்காரர்கள். காசு கொடுக்காவிடில் “வாய்விட்டே சபிக்கிறார்கள். எப்போதும் போல, வயதானவர்களுக்கு மாத்திரம் கொடுத்துவிட்டுத் தப்பித்தேன்.

மற்றொன்று நாய்கள் கூட்டம். சிறிதும் பெரிதுமாக, ஒரு ஐம்பது தேறும். அதில், ஒரு குட்டி நாய்க்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை! அத்தனைக் கூட்டதில், குறிப்பாக, என்னைத் தேர்ந்தெடுத்து, கால் விரல்களைக் கவ்வியது. அதைக் கவ்வியது என்றுகூட சொல்ல முடியாது! கிட்டத்தட்ட கடித்துக் கொண்டு தொங்கியது. குருதி பீரிட, நாயை உதறிவிட்டு, உள்ளூர் "பிரைமரி ஹெல்த் சென்டரை"  நோக்கி விரைந்தேன். நல்ல வேளையாக டாக்டரும், நர்ஸ்களும் இருக்க, முதல் கோர்ஸ் இன்ஜெக்ஷன் ஆயிற்று.

அன்றைய தினத்தில், நாயின் பாசக்கயிற்றிலிருந்து காப்பாற்றிய, உள்ளூர் மருத்துவமனைதான், அமிர்தகடேஸ்வராகத் தோன்றினார்.

Thursday, January 12, 2012

அனுபவங்கள்


                  (புத்தக விமரிசனம்)

புத்தகத் திருவிழாக்களில், ‘சாகித்ய அகதெமி விருது பெற்ற மொழி பெயர்ப்பு நாவல்களை வாங்கிவிடுவது வழக்கம். புதுவையில்  நடைபெற்ற புத்தக காட்சியில், அப்படி வாங்கிய ஒரு நாவல் ‘அனுபவங்கள். மூலம் வங்கமொழி. ஆசிரியர்: திவ்யேந்து பாலித். தமிழில் திருமதி புவனா நடராஜன். (சாகித்ய அகதெமி பதிப்பு. 220 பக்கங்கள். விலை  நூறு ரூபாய்)

கல்கத்தா நகரத்து, மத்திம வர்க்க பெண். வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைக்கப் படுகிறார். அங்கே போய், மாதங்கள் கழிந்தபின் தான் தெரிகிறது, அவன் லோக்கலில் ஒரு ‘செட்டப் வைத்திருக்கிறான் என்று. விவாகரத்து. தாய்நாடு திரும்பியபின், சமூகத்தால், உறவினரால், நண்பர் களால் அவள் படும் அவஸ்த்தைகள், நுனுக்கமாக விவரிக்கப் படுகின்றன.

வேலைதேடிக் கொள்கிறாள். அவளுக்கு இடப்பட்ட பணி, ‘கால் கேர்ல்ஸ்பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை தயார் செய்வது!

பணியிடத்தில், அவளுக்கு ‘விவாகரத்து பெற்று தனியாய் இருக்கும் பெண் என்கிற காரணத்தால், அலுவலக அதிகாரிகள் அவளுக்கு  “காரண காரிய பதவி உயர்வு அளிக்கிறார்கள்.

தான் பேட்டி எடுத்த “கால் கேர்ல்ஸ்களின் கதைகளின் அனுபவத்தில், அலுவலகச் சூழலை எவ்விதம் எதிர்கொள்கிறாள் என்பது கதையின் இறுதியில் சொல்லப் படுகிறது.


சாதாரண கதை.  நிறைய கதைகள் இதுபோல வந்துள்ளன.  சொல்லிச் சொல்லி “நைந்து போன கதைக்கரு.

பெரும்பகுதி இடங்களில், மொழியாக்கம்  சரளமாக இருந்தாலும், சில இடங்களில் இரண்டு தடவை வாசித்தால் மட்டுமே புரிகிறது.  “சாகித்ய அகதெமி விருது பெற்ற நாவல் என்ற நிலையில் பார்த்தால் சற்று ஏமாற்றம்தான்.


125-ம் பக்கம் முதல், 141ம் பக்கம் வரை, ஒரு கட்டுரைபோல இருக்கும் ‘தாம்ஜாலி யின் உரை கனமானது. படித்துத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கருத்துக்கள். 

Wednesday, January 11, 2012

நான்கு மனைவிகள்


சிறார்களுக்கு (17)
(பெரியவர்களுக்கும் கூட)

பணக்கார வியாபாரி ஒருவருக்கு,  நான்கு மனைவிகள். 

அதில் நான்காவது மனைவியை மிகவும் நேசித்தான். அவளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிவித்து அழகு பார்த்தான். எல்லாவற்றில்லும் சிறந்ததை அவளுக்குத்தான் வழங்குவான்.

மூன்றாவது மனைவி மிகவும் வனப்புள்ளவள். தனது  நன்பர்களிடம், தனது இந்த அழகான மனைவி பற்றி, பீற்றிக் கொள்வான். ஆனாலும், எங்கே அவள் தன்னைவிட்டு ஓடிவிடுவாளோ என அச்சப் பட்டுக்கொண்டே இருப்பான்.

இரண்டாவது மனைவி மிகவும் நம்பிக்கையானவள். புத்திசாலியும் கூட. இவனுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம், தீர்வுக்கு இவளைத்தான் நாடுவான்.


முதல் மனைவி, இவனுக்கு பூரண விசுவாசி. வீட்டை பராமரிப்பதிலும், குடும்பத்திற்காக உழைப்பதிலுமே இவளது நேரம் கழியும். ஆனால், இவளைக் கண்டால் வியாபாரிக்கு பிடிக்கவே பிடிக்காது.  இவளைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ள மாட்டான்.


ஒரு நாள் வியாபாரி, நோயில் விழுந்தான். மரணம் நெருங்குவது தெரிந்துவிட்டது. தனியாக சாவதற்கு அச்சப்பட்டான். நான்காவது மனைவியைக் கூப்பிட்டு, “அன்பே,  நான் இறந்துவிடுவேன். வாழும்போது, உன்னை எவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டேன்? நான் இறக்கும் போது என்னுடன் இறக்கத் தயாரா? என வினவினான். ஒரே வரியில் பதில் கிடைத்த்து. ‘முடியவே முடியாது! இந்தபதில், அவனுள் கத்திபோல இறங்கியது.


மூன்றாவது அழகு மனைவியை கேட்டான்.  ‘முடியாது! நீ செத்தால், நான் வேறு ஒருவனை மணந்து கொள்வேன். வாழ்க்கையை அனுபவிப்பதை விட்டு, உன்னோடு சாக முடியாது என்றாள். விதிர்ந்து போனான் வியாபாரி.


இரண்டாவது மனைவியிடம், ‘நீ எப்போதும் எனக்கு உதவியிருக் கிறாய். இப்போதும் அவ்விதம் உதவ முடியுமா? என்னோடு இறக்கத்தயாரா? என்றான். ‘இந்த முறை அவ்விதம் உதவ முடியாது! வேண்டுமானல் சுடுகாடு வரை வருகிறேன்; அவ்வளவுதான்என்றாள். இந்த பதில் இடி போல தாக்கியது அவனை.


அப்போது ஒரு குரல் “நான் உன்னைவிட்டு, என்றும்  அகல மாட்டேன். நீ எங்கு சென்றாலும் வருவேன் என்றது. நிமிர்ந்து பார்த்தான், எலும்பும் தோலுமாய், வற்றலாக நின்று கொண்டிருந்தாள், முதல் மனைவி! இவ்வளவு அன்பான மனைவியை, உடல் நன்றாக இருக்கும் போது,  மிக நன்றாக கவணித்துக் கொள்ளாமல், வெறுத்துக் கிடந்தேனே? என மிகவும் வருத்தமுற்றான் வியாபாரி.

உண்மையில்,  நாம் அனைவருக்குமே நான்கு மனைவிகள் உள்ளனர். நாம் விவரித்த நான்காவது மனைவி, நமது ‘உடல்’.  என்னதான் அலங்கரித்து வைத்தாலும், இறந்தபின் நம்மைவிட்டு விலகிவிடும். உபயோகப்படாது!


மூன்றாவது மனைவி? அதுதான் நமது செல்வம். இறந்தபின் வேறு ஒருவரை நாடிச் சென்றுவிடும்.


இரண்டாவது மனைவி, நமது சுற்றமும் நட்பும். எவ்வளவுதான் நமக்கு உதவி யிருந்தாலும், சுடுகாடு வரைதான் வரமுடியும்.


முதல் மனைவிதான் நமது ஆன்மா!  வாழும்போது புலன் இன்பத்திலும், பொருளைத் தேடு வதிலும், உறவுகளைத்  நாடுவதிலும் நேரத்தை செலவிட்டு விட்டு, உதாசீனப்படுத்திய முதல் மனைவி.


============================================================================
 நீதி:  ஆன்மா மட்டுமே உடன் வருவது! அதுவேதான் நாம்.
       மற்றவை அல்ல! எனவே மரணம் வரை காத்திராமல், 
       இப்பொழுதே ஆன்ம வளர்ச்சிக்கு தேவையானதை செய்து 
       விடுவதே நல்லது.
============================================================================

Sunday, January 8, 2012

“எம்புருஷன்.... “ (சின்னஞ்சிறு கதை)


“இப்ப என்னதான்டீ சொல்றே? ஷாலினியைப் பார்த்து இறைந்தாள் கற்பகம்.

“எத்தனை தடவை சொல்றது? முன்னே பின்னே தெரியாத ஒருஆளை, என்னால் கட்டிக்க முடியாதும்மா!

விஷயம் இதுதான். ஷாலினிக்கு வரன் தேடுகின்றனர், அவளது பெற்றோர் ராகவனும், கற்பகமும்.

ஷாலினி சென்னையில் ஒரு வங்கியில் ஆடிட்டராக பணிபுரிகிறாள். வயது இருபத்தி நாலாகிறது. தற்போது பார்த்திருக்கும் வரனுக்கும் சென்னையிலேயே வேலை. அவருக்கும் வங்கிப் பணிதான். ராகவனுக்கும் கற்பகத்திற்கும் இந்த வரன் பிடித்திருக்கிறது. ஷாலினியின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது! திடீரென ஒருவனைக் காட்டி இவன் தான் உனக்கு புருஷன் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். அவன் யார்? அவனுக்கு என்னென்ன பிடிக்கும்? அவன் குணம் என்ன? அவனுக்கு பிடித்ததெல்லாம் தனக்கும் பிடித்தாக வேண்டுமா? முதலில் அவன் மேல் தனக்கு காதல்..வேண்டாம்.. குறைந்தபட்சம் அன்பாவது உண்டாக வேண்டும் என்கிறாள்! இவை ஒன்றுமே இல்லாமல் காலையில் தாலி கட்டிக் கொண்டு அன்று இரவே அவனோடு உறங்குவது என்ற ஏற்பாடு, அவளுக்கு அறுவறுப்பாக இருக்கிறது.   இதுவரை ‘நட்பு கூட உண்டாகாத ஒரு ஆளை கணவன் என்று ஏற்றுக் கொள்வதில், அவளுக்கு உள்ள சங்கடத்தை அவளது தாயாரால் புரிந்து கொள்ளவில்லை!

“என்னடி சொல்றே? ஒன்னா, பிடிக்குதுன்னு சொல்லு. இந்த வரனை முடிக்கறோம்.  இல்லே பிடிக்கலேன்னு சொல்லு! வேறு இடம் பாக்கறோம். ரெண்டும் இல்லாம புதுசா ஒன்னு சொல்லாதே என்கிறாள் கற்பகம்.

கடந்த ஒரு வாரமாகவே வீட்டில் களேபரம். தினசரி அம்மாவுக்கும் பெண்ணுக்கும் சண்டை. சில சமயம் சாப்பிடாமலேயே ஆபீஸுக்கு போகிறாள் ஷாலினி. இன்றும் அப்படியே!

இப்போது கற்பகத்தின் கோபம் ராகவன் பக்கம் திரும்பியது.

“என்னத்துக்கு இடிச்சபுளி மாதிரி, நாங்க ரெண்டுபேரும் சண்டை 
போட்டுக்கொள்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு,  இந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கீங்க? ‘உங்க’  பெண்ணிடம் பேச மாட்டீர்களா? அவள் என்னதான் சொல்லுகிறாள்? அவளுக்கு என்ன வேண்டும்? அவளை எதுவும் கேட்க மாட்டீர்களா? என ராகவன் மீது பாய்ந்தாள்.

ராகவனுக்கு ஷாலினியைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவளை கட்டாயப்படுத்த விரும்பவில்லை.

“ஆத்திரப்படாதே! இன்னிக்கு லன்ச் அவர்ல அவள் ஆபீஸுக்கு போகிறேன். பேசிப் பார்க்கிறேன்என்றார்.

“ஆமாம்.. வீட்டில் பேசிக் கிழிச்சாச்சு.. இப்ப ஆபீஸுக்கு போய்ப் பேசி என்னத்தை சாதிக்கப் போறீங்க..? என்றாள் கற்பகம்.

மதியம் ஒன்றரை மணிக்கு அவள் பணிபுரியும் வங்கிக்கு சென்றார். ஷாலினி லன்ச் முடித்துவிட்டு, பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாங்கப்பா.. எதனாச்சும் முக்கியமான விஷயமா? சாப்பாட்டு நேரத்திலே வந்திருக்கீங்களே? நீங்க சாப்பிட்டாச்சா?

‘அதெல்லாம் ஆச்சு ஷாலு... நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?

அந்த வரன் விஷயமாகத்தான் பேசப் போகிறார். “அப்பா, நீங்களும் அம்மா மாதிரித்தான் பேசறீங்க.. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கெல்லாம் புரியாது. நான் சொல்றதென்னன்னா...

“அதெல்லாம் தெரியும் ஷாலினி! நீ யாரையாவது விரும்பிறியா? அப்படியான தயங்காம சொல்லு. நீ விருப்பப்படும் பையனையே கல்யாணம் செய்து வைக்கிறேன். என்றார்.

“இந்த ஜென்மத்துக்கு உங்களுக்கெல்லாம் புரியப் போவதில்லை!   நீங்கள் சொல்வது போல, அப்படி ஒரு பையனை எனக்கு பிடித்திருந்தால்,  உங்கள் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்க மாட்டேன்.. தெரியுமா?

எரிச்சலுடன், விருட்டென தன் ரூமிற்குச்  சென்றுவிட்டாள் ஷாலினி.

சற்று நேரம், வெறுமனே  உட்கார்ந்திருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினார் ராகவன்.

ராகவன்-கற்பகம் தம்பதிக்கு இரு பெண்கள். இளையவள் மைதிலி.  பி.டெக் இறுதியாண்டு சென்னையில் படிக்கிறாள். காம்பஸ் செலக்ட் ஆகிவிட்டது.

ஷாலினிக்கு, மைதிலி மீது பிரியம் அதிகம். மேலும், வயது வித்தியாசம் குறைவு என்பதால், எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். மிகுந்த அன்னியோன்யம். மைதிலி, தனது அக்காவை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள்.

அன்று இரவு, தனது அறையில் படித்துக் கொண்டிருந்தாள் ஷாலினி. 
அப்போது, மைதிலி வந்தாள்.

“சொல்லுடீ..!

இதோ பார் ஷாலு...உனக்கு பார்த்திருக்கும் வரன் விஷயமாகத்தான் பேச வந்திருக்கேன். இந்த விஷயத்தில்,  உனக்கு மூணு ஆப்ஷன் இருக்கு!
ஒன்னு, கல்யாணமே செய்துக்க மாட்டேன் என்று, கறாரா சொல்லிவிடு.
இல்லாட்டி உனக்கு புடிச்ச பையனை கட்டிக்க.  அப்படி, நீ யாரையும் ‘லவ்பண்ணலேன்னா அம்மா-அப்பா பாக்குற பையனை செய்துக்க. இதில் எதுவுமே செய்யாம, எல்லாரையும் போட்டு அனாவசியத்துக்கு  குழப்பாதே.

“நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு யாருகிட்டேயும் டிக்ளேர் பண்ணல. எனக்கு பிடிச்ச பையனை பாத்தேன்னா கட்டிக்குவேன்.  அந்த “ஸ்பார்க்” , எனக்கு இன்னும் வரலை.  அம்மா சொல்றாங்க என்பதுக்காக,  எவனோ ஒருத்தனை புருஷனா ஏத்துக்க முடியாது. அதுவுமில்லாம, இந்த நிமிஷமே சொல்லுன்னு ஏன் உயிரை எடுக்கறாங்க? கொஞ்ச நாள் போகட்டுமே?

‘ஏண்டீ.. நெஜமாத்தான் கேக்கறேன்!  உனக்கு “அது சம்பந்தமான உணர்வு“ இருக்கா, இல்லியா? கல்யாணம்னாலே காது சிவக்கலை? மனசு படபடக்கவில்லை? கொஞ்சம் மதப்பா இல்லே? 

“நீ நிறைய தமிழ் சினிமா பாக்கும் போதே நினச்சேன்.  இந்த மாதிரி ஏதாவது பெனாத்துவேன்னு தெரியும்......

சட்டென்று, ஷாலினிக்கு எல்லாம் பிடிபட்டது!  “ஏய்.. மைதிலி, கண்டுபிடிச்சுட்டேன். யு ஆர் இன் லவ்! கரெக்ட்? யாருடீ உன் ஆளு?

சொன்னாள். மைதிலிக்கு ஒருவருடம் சீனியராம். எம்.என்.ஸியில், சென்னையிலேயே வேலை பார்க்கிறானாம். அந்த கம்பெனியில் தான் மைதிலியும் வேலைக்கு சேரப்போகிறாளாம் . 

“நான் வேலைக்கு சேர்ந்ததுமே, மேரேஜ் செஞ்சுக்கலாம்ன்னு சொல்றார்டீ.. எனக்கும் அதில் இஷ்டம் தான்

‘எனக்காக நீ, அந்த பேங்க் வரனை கட்டிக்கோன்னு சொல்லவரலை. நீ சொல்றதில லாஜிக் இல்லைன்னு சொல்றேன். வீணா அம்மா,அப்பா கஷ்டப்படராங்க. அதுவுமில்லாம, உனக்கு பாத்துருக்கும் பையன் நல்லாத்தான் இருக்கான்.என்றாள் மைதிலி.

“உன் ‘லவ் மேட்டரை, ஏங்கட்ட கூட சொல்லாம மறச்சுட்டேல்ல...
“இந்த விஷயத்தையெல்லாம் ரொம்ம நாள் மறைக்க முடியாது டீ. உனக்கு செட்டில் ஆகட்டும், அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்.  என் மேட்டரால், உன் கல்யாணத்திற்கு ஏதும் பிரச்சினை ஆயிடக்
கூடாது! அதனால்தான் உன்னிடம்  சொல்லலை. நீ எந்த வழிக்கும் ஒத்து வராம முரண்டு பிடிக்கிறதுனால, உங்கிட்ட மட்டும், இப்ப சொன்னேன். உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவேன்? 
எனக்கென்னவோ நீ இந்த வரனை வேண்டாம்ங்கிறது சரியா படலை. அதுவுமில்லாம  நீ  கடைசிவரை கன்னியாகவே இருக்கப் போறியா, இல்லியே? எனக்கென்னவோ நீ லவ் பண்ணுவேன்னு தோணலை! ஆகையினாலே இப்ப பாத்திருக்கும் வரனே பரவாயில்லைன்னு 
தோணுது! 


"எனக்காக கேக்கறேன்னு நினைக்காதே! உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்!"


'ரொம்பவும் டயலாக் விடாதே!  நீ நினைச்ச மாதிரியே உன் ஆளை கல்யாணம் செய்துக்கலாம்! அதுக்கு நான் பொறுப்பு. கவலைப் படாமல் போய்த்தூங்கு!" எனறாள் ஷாலு. 

அடுத்தனாள் ஆபீஸ் புறப்படும்போது அப்பாவிடம் சொன்னாள். “அப்பா.. இந்த பாங்க் வரனை முடிச்சுடுங்க. என்றாள்.

பாய்ந்தோடி வந்தாள் அம்மா சமையாறையிலிருந்து! “நெஜமாவாடி சொல்றே?

“ஆமாம்..


‘அந்த கருமாரியம்மன் தான் உன் மனசை மாத்தியிருக்கா அம்மனுக்கு மஞ்சள் துணியில் காசு முடித்துவைக்க ஓடினாள், கற்பகம்.

ஒருவேளை, தான் நேற்று ஆபீஸில் போய்ப் பேசியதால்தான், கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டாளோ என யோசித்தார் ராகவன்.

அடுத்த ஒருமாதத்தில் திருமணம் நன்றாக நடந்தது.

ஷாலினி ஒத்துக் கொண்டு கல்யாணம் செய்து கொண்டாலும், , கற்பகத்திற்கு, மகள் பற்றிய பீதியுடனே இருந்தாள். “எந்த நிமிஷத்தில் என்ன சண்டை போட்டுக்கொண்டு வந்து  நிற்பாளோ என்ற கிலி அவள் மனதில் ஒரு ஓரமாக இருந்து கொண்டுதான் இருந்தது.

ஷாலினி சொன்ன ‘அறுவறுப்பாய் இருக்காது? என்ற வார்த்தைகள் அவளை பயமுறுத்திக்கொண்டிருந்தது.


“அந்த சப்ஜெக்டைப் போய் பெற்ற பெண்ணிடம் எப்படிக் கேட்பது? என சங்கோஜப்பட்டாள் கற்பகம்.

‘ஏங்க,. ஷாலு புகுந்த வீட்டில் அனுசரிக்சுப் போவாளா? எனக்கு பயமாயிருக்குங்க.. என்றாள் ராகவனிடம்.

திருமணம் முடிந்து, இரு நாள் கழித்து, ‘மறுவீடு அழைப்பிற்காக மாப்பிள்ளையும், ஷாலுவும் அன்று காலை வந்தார்கள். ஷாலுவின் மாடியறையை ஒழுங்கு செய்து  வைத்திருந்தார் ராகவன்.

ஷாலுவின் முகபாவத்தைப் வைத்து ஏதும் கண்டுபிடிக்க முடிய வில்லை, கற்பகத்தால்.

அடுத்த நாள் காலை. இன்னமும், மாடியிலிருந்து ஷாலுவும், மாப்பிள்ளையும் கீழே வரவில்லை.

டிபனுக்கு இட்லியும், தோசையும் செய்திருந்தாள் கற்பகம். தொட்டுக் கொள்ள சட்னிக்கு அரைக்கும் போது, கிழே வந்தாள் ஷாலு.

‘அம்மா.. சட்டினிக்கு இத்தனை மிளகாய் போடாதே.. அவருக்கு காரம் ரொம்ம பிடிக்காது.  மிக்சி ஜாருக்குள் கையை விட்டு, நாலு மிளகாயை எடுத்து, வெளியே போட்டாள். பின், அவளுக்கும், மாப்பிள்ளைக்குமாய் காஃபி எடுத்துக் கொண்டு மாடிக்கு விரைந்தாள். 

கற்பகத்துக்கு, சந்தோஷத்தில் கண்ணீர்! “தேவி கருமாரி, என்னைக் காப்பாத்தி விட்டாயடீ! என்றாள்

“இந்த கூத்த பாத்தீங்களா? என்றாள் ராகவனிடம்.

“எல்லாம் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.

“கல்யாணத்துக்கு ஒத்துக்கறதுக்கே, என்னெவெல்லாம் மாய்மாலம் செஞ்சா உங்க பொண்ணு? இப்ப என்னடான்னா, கல்யாணம் ஆன ரெண்டாம் நாளே, புருஷனுக்கு காரம் ஆகாதுன்னு ஓடி வர்ராள், பாத்தீங்களா?

‘கற்பகம், நம்ம நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பகுதியான பெண்கள், ‘அந்த முகம் தெரியாத கணவனுக்காக’, அன்பையும் காதலையும், மனதில், நாளும் பொழுதும், சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.  அவனுடன் மானசீகமாக வாழ்கிறாள். சல்லாபிக்கிறாள். ஏன், சண்டை கூட போடுகிறாள். அவளே தேடிக்கொண்டாலோ, அல்லது நாம் அடையாளம் காட்டினாலோ, அவள் சேர்த்து வைத்திருந்த காதலையெல்லாம் அவன் மீது பொழிய ஆரம்பித்து விடுகிறாள்.

சில கலாச்சார தாக்கங்களினால், இந்த மரபினை, அவர்களது அறிவு ஒத்துக் கொள்வதில்லை, அல்லது ஒத்துக் கொள்ள தயங்குகிறது. சரியோ, தப்போ, நமது நாட்டு பெண்களின் இரத்தத்தில் இது ஊறிப் போயிருக்கிறதே!

“என்னிக்குத்தான் நீங்க புரியறமாதிரி பேசுவீங்களோ தெரியலை.  டேபிளில் கோதுமை கஞ்சி இருக்கு,  குடிச்சுடுங்க, அப்புறம், சுகர் ‘லோ ஆயிடும்
                                 -0-

Saturday, January 7, 2012

இன்னும் இரண்டு நாள் கழித்து வரக்கூடாதா?

கடலூரை சூரையாடிய புயலினால் தடைபெற்ற மின்சாரம், பத்து நாட்களுக்குப்பின், சற்றுமுன் (௦07/01/2011 - 1900 hours) சீரடைந்தது. கடந்த சில நாட்களாக மக்கள் தண்ணீருக்கு மன்றாடியது போன்ற பிரச்சினைகள் பல இருந்தாலும், வேறு சில நல்ல விஷயங்களும் காணக் கிடைத்தன.

அலுவலகம் முடிந்து வந்ததும் தொலைக்காட்சி முன்னால் மக்கள் தஞ்சமடைய முடியவில்லை! வாசற்கதவுகள் அடைக்கப் படவில்லை! பெண்கள் சீரியல்களில் புகுந்துகொண்டு, கண்ணீர் சிந்தவில்லை! “வீடியோ கேம் எனும் மாய உலகில் சிறுவர்கள் விளையாடவில்லை!

நிலவொளியில், வீட்டைவிட்டு வெளியில் வந்து, ஆண்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவினர். அரட்டையானாலும் பெண்கள் பக்கத்து வீட்டினரோடு பேசினர். மிக முக்கியமாக சிறுவர்கள் வீடுகளின் முன்னால் கட்டுமானத்திற்காக குவிக்கப் பட்டிருக்கும் மணற்குன்றுகளில் விளையாடினர். “ஓடிவிளையாடு பாப்பா.. என்ற வரிகள் நிஜமாயின.

இதோ, மின்சாரம் வந்துவிட்டது! தெருவில் விளக்குகள் எரிகின்றன. ஆனால், தெருக்களில் மனிதர்களைக் காணோம்! வீடுகளெங்கும்  தொலைக்காட்சி அலற ஆரம்பித்துவிட்டது. பெண்கள் சீரியல்களில் ஆழ்ந்து விட்டனர். வீடுகளின் முன், இன்னமும் மணற்குவியல்கள் இருக்கின்றன. ஆனால் விளையாட குழந்தைகள் இல்லை! மனிதர்கள் மீண்டும் தத்தமது வளைகளில் புகுந்து கொண்டனர்.

இன்னும் இரண்டு நாள் கழித்து,மின்சாரம் வந்திருக்கக் கூடாதா?

Thursday, January 5, 2012

கடலூரை புரட்டிப் போட்ட “தானே” புயல்!


29/12/2011 - வியாழன் :   கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என முன்னறிவிப்பு வந்துவிட்டது.  இரவு, சுமார் பத்து மணியளவில் மழைத்தூரல் ஆரம்பமாகிவிட்டது. பி.எஸ்.என்.எல் தவிர, அனத்து தனியார் மொபைல் டவர்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டன. . மின்சார வாரியம், முன்னெச்சரிக்கையாக  மின்சாரத்தினை  நிறுத்திவிட்டது.

வெள்ளி காலை வரலாறு காணாத வகையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில், கடலூர் மாவட்டத்தை சூரையாடியது, ‘தானே’ என பெயரிடப்பட்ட புயல்.  புயலின் கோரத்தாண்டவத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான குடிசைவீடுகள் அழிந்தன.   நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் தூர மின்வொயர்கள் அறுந்து வீழ்ந்தது. 1250 க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள்  பிடுங்கி எறியப்பட்டன. கடலூர் மைக்ரோவேவ் ஸ்டேஷனில் இருந்த 100 மீட்டர் கோபுரம் அடியோடு சாய்ந்தது!

வர்த்தக நிறுவனங்களுடைய அலங்கார பேனர்கள், ஏ.ஸி அவுட்டோர் யூனிட்டுகள், செல் டவர்கள், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் விழுந்தன. 

அடியோடு சாய்ந்த மரங்கள், வீடுகளின் மீதும் கட்டிடங்கள் மீதும் விழுந்ததால் கட்டிடங்கள் உடைந்தன! கண்ணாடிகள் நொறுங்கின. புயலினால் பாதிக்கப் படாத வீடுகளே இல்லை என்ற அளவில் சேதம்.



31/12/2011 - சனி காலை:

பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முயற்சியால், பாதிக்கப்பட்ட 254 செல் டவர்களில், 136 உடனடியாக சரிசெய்யப்பட்டன. மக்கள் பி.எஸ்.என்.எல் செல் சேவையினைப் பெற்றனர். இது அனைத்து மக்களாலும், பத்திரிக்கைகளாலும் பாராட்டு பெற்றது!  எந்த தடையும் இன்றி அனைத்து தொலைபேசி நிலையங்களும் ‘ஜெனரேட்டர்’  முலம் இயக்கப்பட்டன.

01/01/2012.  புது வருடம் என்றாலும், B.S.N.L  தோழர்கள் விடுமுறை என்பதையும் பொருட்படுத்தாது பணிக்கு வந்து நிலைமையை சீரமைக்க முயன்றனர். செயல்பாடிழந்த மீதமிருந்த செல் டவர்களும் முழுமையாக உபயோகத்திற்கு உட்படுத்தப் பட்டன.  

இந்த நிமிடம் வரை கிராமப்புறங்கள், தொடர்ந்து ஏழாவது நாளாக மின்சாரம் இன்றி உள்ளனர். மக்கள் குடிநீருக்கு அலாய்ப்பறக்கின்றனர். வியாபாரிகள் ஐந்து ரூபாய்க்கு விற்கும் மெழுகுவர்த்தியினை இருபது ரூபாய்க்கு விற்கின்றனர். கெரோசின் லிட்டர் 100 ரூபாய். விரைவில் கடலூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்ப விழைகிறோம். 



புயல் சேத புகைப்படங்கள் : Click here