Saturday, December 17, 2011

புதிய தலைமுறை தொலைக்காட்சி


புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ‘ரெட் சல்யூட்

இன்று (17/12/20111) அன்று இரவு 2130 மணிக்கு, ‘ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் ஒரு அற்புதமான நிகழ்ச்சியினை, "புதிய தலை முறைதொலைக்காட்சி"ஒளிபரப்பியது.  பி.எஸ்.என்.எல் ஊழியர்களும், ஓய்வு பெற்ற பொது மேலாளர்களும், தோழர் மதிவானன் அவர்களும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களும், மற்றும் சிலரும்  பேட்டி எடுக்கப்பட்டனர். நிகழ்ச்சி நிலையத்தாரால் தொகுத்து வழங்கப்பட்டது!

சிறார்களுக்கு (12)


11.   இருட்டும் - வாளியும்

Friday, December 16, 2011

பாத்தாலே புடிக்கல....................


அலுவலகத்திலோ அல்லது நன்பர் குழாமிலோ, நமக்கு சிலரைப் பார்த்தாலே பிடிக்காது. அவர்களது இருப்பே எரிச்சலை உண்டாக்கப் போதுதானதாக இருக்க, சிலரது இருப்பு நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

மற்றவர்களைப் பற்றி யோசிப்பது ஒருபுறம் இருக்கட்டும்!, நமது இருப்பினை (Presence)  மற்றவர்கள் எப்படி உணருகிறார்கள் என யோசித்துப் பார்த்தால், அப்படி ஒன்றும் கிலாசிக்கும்படியாக இல்லை தான்.

காரியம் ஆகவேண்டும் என்பதற்காகவோ அல்லது அந்த நபர், பதவிப் படிக்கட்டுகளில், ஒருபடி மேலே இருக்கிறார் என்பதற்காவோ இளிக்கும் காக்கைகள் கூட்டத்தை ஓட்டிவிட்டு  யோசித்தால், மற்றவர்களிட்டையே பாப்புலராக இருக்க சில “கோட்பாடுகள் இருப்பதாக தென்படுகிறது.

மனிதர்கள் யாவரும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள். மகிழ்ச்சியானவர்கள் தங்களைச் சுற்றயுள்ளவர்களை மகிழ்ச்சியாக்கி விடுவார்கள். நம்மை மற்றவர் விரும்புவதும், விரும்பாததும் நமது கைகளில்தான் உள்ளது.  நாம் விரும்பத்தக்க மனிதராக இருக்க சில எளிய வழிமுறைகள்:

                                                 1.       கவணியுங்கள்:

அடுத்தவர் சொல்லுவதை கவணிப்பது, காது கொடுத்துக்  கேட்பது முக்கி யமானது.  இச்செயல், கேட்பவர் மனதில், “தனக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்கிறார் என்ற எண்ணத்தினை உண்டாக்கும். ஆழ்மனதில் படியும்.  "கவணிக்கப் படுகிறோம் என்று அவர் உணரும்போது சொல்பவர் மனதில்  நீங்கள் உயருகிறீர்கள். இடம் பெறுகிறீர்கள் . மனதளவில் நெருங்குகிறீர்கள். உங்களை மிக முக்கியமானவராகக் கருதத் துவங்குவார்.

இது நண்பர்களுக்கு மட்டுமல்ல, கணவன் மனைவிக்கும் இடையேயும் கூட முக்கியமானது. 


மனைவி (அ) கணவன் ஏதேனும் பேசிக் கொண்டிருக்கும்போது,  மற்றவர் “மோட்டு வளையையோ அல்லது “கனவுலகில் மிதப்பதோ அல்லது “இது வரை  நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் என வினவுவதோ  தப்பாட்டம்.  


தாங்கள் சொல்லுவதை கவணிக்கவில்லை என்ற உணர்வு, மற்றவர்களை காயப்படுத்தும்.


நீங்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற உணர்வு விரிசலுக்கே வழிவகுக்கும். மேலும் இது சப்தமில்லாமல் ‘அவமதிக்கும் முறையே!  இது 
உத்திரவாதமாக பிரிவை உண்டாக்கும். மேலும் உங்களது நன்பரோ / மனைவியோ ஏதோ ஒரு விஷயத்தை தீவீரமாக சொல்லிக் கொண்டிருக்கும் போது, சம்பந்தமில்லாமல் ‘கொலவெறி பாட்டை பாடியது யார்? என அபத்தமாக்க் கேட்கக் கூடாது.  நட்பை இழக்க மிகச் சுலுவான வழி இது.

அனைவருமே தாங்கள் பேசுவது கவணிக்கப் படவேண்டும் எனவே விரும்புவார்கள்.

                                               2.    தகுதியாக்கிக் கொள்ளுங்கள்.

இன்னொரு விஷயம். நீங்கள் உங்களது அறிவினை விருத்தி செய்து கொள்ளுவது முக்கியம். 


உங்களிடம் ஆலோசனையோ அல்லது குறிப்போ கேட்கும் போது கூடுமான வரை பதில் சொல்லும் அளவுக்காவது!  


தெரியாவிட்டால் ‘தெரியாது, ‘கேட்டுச் சொல்லிவிடுகிறேன் எனச் சொல்வதுதான் உத்தமம்.சும்மா ‘கேஸ் விடுவது ஆபத்து! உங்களது ‘புளுகுகள் வெகுவிரைவிலேயே கண்டுகொள்ளப்படும். 


Credibility யினை இழப்பது மோசமான விளைவை உண்டாக்கும். அதே சமயம் உங்களுக்கு தெரியும் / முடியும் என்றால் தயங்காமல் முழுமையாக உதவி செய்யுங்கள்.

                                              3.        கலகலப்பாக இருங்கள்:

உம்மனாம் மூஞ்சிகளையும், சிடு மூஞ்சிகளையும், வெங்கடுப்பான்களையும் எவரும் விரும்புவதில்லை. உரையாடுவதற்கு 'தோதான' நபராக மாறுங்கள். உங்களுடன் பேசுவதை மற்றவர்கள் விரும்ப வேண்டும்.
“நான் சொல்வது மட்டுமே சரி என்ற போக்கு உதவாது!


பிறரைக் காயப்படுத்தாத நகைச்சுவை எவரையும் வசப்படுத்தும். 


சொல்வதை சுவாரஸ்யமாக, சுருக்கமாக சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.


குறிப்பாக மற்றவர் சோகமாகவோ, துக்கத்திலோ இருக்கும்போது ஆறுதல் கூறுவது அவசியம்.  


“இதுஎன்ன பெரிய விஷயம்? நான் பட்ட கஷ்டத்தை விடவா இது பெரிது போன்ற  சுயபுராணங்கள்,  எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். சரியான ‘போர் ஆசாமி எனப் பெயர் வாங்குவது கவைக்குதவாது!
                                                                                                      


4.    ஒத்துக் கொள்ளுங்கள்:

இது மிகவும் முக்கியமானது! உலகில் எவருமே நூறு சதம் முழுமை யானவர்கள் அல்ல! “தன் பிழை  நோக்காமல்” ,” பிறன் பிழை மட்டும்  நோக்குவது உங்களை வெறுக்கத்தக்க மனிதராக மாற்றிவிடும். எனக்கு வேண்டிய ஒருவர், “எல்லோரையும், குறை சொல்லும் வழக்கமுள்ளவர். முகத்துக்கு நேரே மற்றவர்கள் அவரிடம் சிரித்துப் பேசினாலும், அவர் அந்தண்டை போனபின் “இவர் பெரிய யோக்கியமா? இந்த தப்பைச் செய்யவில்லையா? அந்த தப்பை செய்யவில்லையா?என கிண்டலடிப்பதைப் பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் உங்களது ‘நல்லனவற்றை மட்டுமே பேசவேண்டும் என விரும்புவது நூற்றுக்கு நூறு தவறு.  


நீங்கள் இல்லாத பொழுது, முதலில் உங்களது ‘அல்லன மட்டுமே பேசப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இவற்றை தவிர்க்க நல்ல வழி ‘நீங்கள் மற்றவர்களின் “நல்லனவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதே!  நீங்கள் சொல்லியது / செய்தது தவறு என்றால் தயங்காமல் “ஒத்துக் கொள்ளுங்கள்!” .  நாம் நினைப்பது போல இது மரியாதைக் குறைவோ இழுக்கோ அல்ல! மாறாக உங்களது மதிப்பு பன்மடங்கு உயரும். 





 5.        நேசியுங்கள்:

நிபந்தனையுடன் கூடிய நட்பு (அல்லது) காதல் என்று உலகில் ஒன்றும் இல்லை! உளமாற அன்பு செலுத்தும் போது குறைகள் தெரியா.  குறைகளுடனே  நட்பை ஏற்றுக் கொள்வது உத்தமம். அதற்காக அவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு துணை போக வேண்டாம்.



              

6.       பரிசு:
நீங்கள் வெளியூருக்கு போகிறீகள். அப்போது, உங்கள்  நன்பரை நினைவுகொண்டு, அவருகு ஏதேனும் பரிசு வாங்கி வாருங்கள். அது விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என அவசியமில்லை! சிறிய 20 ரூபாய் “ஊதுபத்தி ஸ்டாண்டாகக் கூட இருக்கலாம்.  வெளியில் சென்றாலும் உங்களது நினவுகளில் நன்பர் இருக்கிறார் என்பதை உணரவைப்பதே விலை உயர்ந்த பரிசு.
                            


இதையும் மீறி உங்களை எவரும் விரும்பவில்லை எனில் திரு 'மன்மோகன் சிங்கிடம்' அவர்களிடம்தான் ஆலோசனை கேட்கவேண்டும். 
                  -oOo-

Thursday, December 15, 2011

தேசிய குறும்பட, ஆவணப்பட திருவிழா -2011 (புதுவை)


கடந்த பத்தாண்டுகளில் குறும்பட தயாரிப்புகள், தமிழகத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.  முதல் முயற்சியாக, Films Disional Corporation of India, புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் “தேசிய ஆவணப்பட, குறும்படத் திருவிழாபாண்டிச்சேரியில் 16,17 மற்றும் 18-12-2011 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.

நாற்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள்/ஆவணப்படங்கள் திரையிடப் பட உள்ளன.  இதன் துவக்க விழா 15/12/2011 அன்று மாலை ஏழு மணிக்கு, புதுவை பெத்திசெமினார் ஆரம்பப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவில், மண்டல தணிக்கை அதிகாரி திரு.பக்கிரிசாமி, பிரபல எடிட்டர் திரு.லெனின், திரு வசந்தபாலன் (அங்காடித்தெரு இயக்குனர்), மற்றும் “த.மு.எ.க.ச”- வைச் சார்ந்த திரு, ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"விழா மேடையில் நிகழ்த்தப்பட்ட முக்கிய விருந்தினர்களின் உரைச் சுருக்கம்"

1.      திரை அரங்குகளை வணிக சினிமாக்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இன் நாட்களில், முற்போக்கு சிந்தனை கொண்ட திரைப் படங்கள், மக்களுக்கு சென்றடைய வேண்டுமெனில், குறும்படங்கள் மட்டுமே சிறந்த வழி! மக்கள், இம்மாதிரியான படங்களை பார்க்க வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பம்தான், இம்மாதிரியான விழாக்கள்.

2.      இம்மாதிரியான படங்கள், மெல்லிய உணர்வுகளைப் பேசும்! மானுடம் பேசும்! மக்களின் பிரச்சினைகளைப் பேசும்! மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் அழுக்குகளை  நீக்கும். மக்களை தரமுயர்த்தும்.

3.      குறும்படங்கள், வணிகத் திரைப்படங்கள் போல அல்ல; இம் மாதிரியான படங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது பற்றி விவாதிக்கப் பட வேண்டும். விவாதம் செய்வது, வெறும் விவாதத்திற்காக அல்ல; மாறாக படங்களைப் புரிந்து கொள்ள!

4.      மாணவர்களுக்கும், புதிய இளம் கலைஞர்களுக்கும், இம்மாதிரியான விழாக்கள், “குறும்படங்கள் பற்றிய நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். சம காலத்திய சினிமாக்களின் “ட்ரெண்ட் பற்றி அறிந்து கொள்ள முடியும்! இவ்விழாக்களில், துறை சார்த்த சிறந்த அறிஞர்கள் பங்கேற்பதால், புதிய இயக்குனர்களும், இளைஞர்களும் திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பதற்கான, ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.

5.      ஒரு படத்திற்கு எடிட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வேண்டும்.  2 மணி நேரம் ஓடும் திரைப்படத்திற்காக, மூன்று மணி நேர சினிமா எடுக்கப்படும். கதையின் போக்கை மாற்றாமல், சுவாரஸ்யமாக, சினிமாவினை Present  செய்வது எடிட்டர் கையில் தான் உள்ளது.

6.      குறும்படங்களுக்கும் / ஆவணப்படங்களுக்கும் சென்ஸார் இல்லை!

7.      எதிர்காலத்தில், இந்திய குறும்படங்கள் மட்டுமின்றி சர்வ தேசிய குறும்படங்களையும், இது போன்ற விழாக்களில்  திரையிடலாம். இதற்கு த.மு.எ.ச முயற்சி எடுக்கும்.

8.      சினிமாவின் வீச்சும், செல்வாக்கும் மிக அதிகம்.  மொத்த தமிழ்ச்சினிமாவுக்கான மொத்த "Turnover", 250 கோடிக்குள்தான் இருக்கும். அதாவது, எந்த ஒரு பெரிய தொழிற் சாலையின் Turnover-ஐ விட குறைவாகவே !  ஆனால், மக்களிடையே திரைப்படங்களுக்கான செல்வாக்கு அபரிதமானது. அது ஏற்படுத்தும் தாக்கமும், பாதிப்பும் மிக அதிகம். எனவேதான் தரமான திரைப்படங்கள் மக்களுக்கு அவசியம் போய்ச் சேர வேண்டும் என விரும்புகிறோம்.  அது கலாச்சார ரீதியாகவும், பண்பு ரீதியாக்வும் மக்களை தரமுயர்த்தும். 

9.      உதாரணமாக 1967 வரை கறுப்பர்களும்-வெள்ளையர்களும் திருமணம் செய்து கொண்டால் செல்லாது என்ற அமெரிக்காவின் சட்டத்தினை (17 மாகானங்களில்)  மாற்றி யமைத்த பெருமை ஒரு குறும்படத்தினையே சாரும்.!

10.  மக்களின் மனங்களை மேப்படுத்துவதில் திரைப்படங்களுக்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் இல்லை. தத்துவங்கள் கூட செய்ய இயலாதவற்றை, திரைப்படங்கள் செய்யும். திரைப்படங்கள் மூலம் சொல்லப்படும் கருத்துக்கள், எளிதாக மக்களைச் சென்றடையும். ஏனெனில் திரைப்படம் என்பது, எழுத்து, நடிப்பு, இசை, நடனம் என,  கலைகளின் எல்லா அம்சத்தினையும் உள்ளடக்கியது.

விழாவின் இறுதியில் WIND “  என்ற குறும்படத்தினைக் காட்டினார்கள். இத்திரைப்படத்தினைப் பற்றிய கருத்துக்கள் அடுத்த பகுதியில் தொடரும்!


============================================================================
(பாண்டிச்சேரி, கடலூர் பகுதியைச் சார்ந்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தின பயன் படுத்திக் கொள்வது  நல்லது)
============================================================================


Wednesday, December 14, 2011

தியாகச் சுடர்கள்






                 ரம்யா- - - - - - -- - - -- - - - - - வினிதா 


கொல்கத்தாவின் AMRI-மருத்துவமணை. அங்கே தோழியர்கள் R.K. வினிதா (23)  மற்றும் ரம்யா ராஜப்பன்(24) இருவரும் நர்ஸாக பணியாற்று கின்றனர். 09/11/2011 வெள்ளிக் கிழமை அன்று விடியற்காலை மூன்று மணி!  மருத்துவ மணை தீப்பிடித்துக் கொண்டது.


நிர்வாகிகள் யாவரும் தீயனைப்பு நிலையத்திற்குக்கூட சொல்லாமல் பதுங்கிக் கொண்டனர்.  எங்கும் தீ.  புகை மண்டலம்.

அதுவும் சாதாரண புகை அல்ல! மருத்துவ மணையெங்கும் நிறைந்திருக்கும்,பிளாஸ்ட்டிக் பொருட்களும் மருந்துகளும் கிளப்பிய, தாங்கொனா மூச்சு முட்டும் புகை. உதவிக்கு எவரும் இல்லை.


இந்த கண்மணிகள் இருவரும் பாய்ந்து, பாய்ந்து வார்டுகளுக்குச் சென்று, அங்கே படுத்துக் கிடக்கும் நோயாளிகளைத் தூக்கிக் கொண்டும், கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டும், கீழிறங்குகின்றனர்.   இப்படி ஒருவர்-இருவரை அல்ல, எட்டு பேரை காப்பாற்றி யிருக்கின்றனர். ஒன்பதாவது நோயாளியை காப்பாற்றச் செல்லும்போது, அந்தோ! 
தீயினுள் சிக்கி மாண்டனர். 


இரு நர்ஸ்களும், எட்டு மாதங்களுக்கு முன் தான் ஹைதராபாத்தில் பயிற்சி முடித்து, கொல்கத்தாவில் பணிக்குச் சேந்துள்ளனர். ஒரு விபத்து நேர்ந்துவிட்டால், சாதாரணமாக என்ன தோன்றும்? தமது உயிரை காப்பாற்றிக் கொள்ளத்தானே!  இந்த தியாகச் சுடர்கள் ஆபத்தை துனிந்தே எதிர்கொண்டுள்ளனர். இவர்களது பணி அர்ப்பணிப்பை என்ன வென்று சொல்வது? இவர்கள் மற்ற யாவருக்கும் முன்னால் ஓடி வந்திருந்தால், ஏன என்று யவரேனும் கேட்டிருக்க முடியுமா? தானாக ஓடி, ஓடி உயிர்களைக் காப்பாற்றும் மனோதிடமும்,தியாக உணர்வும் எங் கிருந்து பெற்றனர்?


கார்கில் போரின் போது, உயரத்திலிருந்து கொண்டு சுடும், பாகிஸ்தானி யர்களின் குண்டுகளுக்கு இறையாவோம் எனறு தெரிந்தே முன்னேறிச் சென்று பலியான இராணுவ வீர்ர்களுக்கு இணையானவர்கள் அல்லவா இவர்கள்! இன்னும் சொல்லப் போனால்,இந்த கண்மனிகள் இருவரும், அவர்களுக்கும் மேலானவர்கள். ஏனெனில், முன்னேறிப்போ என கமாண்டர் ஆணையிடும் போது, அதை சட்ட ரீதியாக, வீரர்கள் மீற முடியாது! ஆனால் உன் உயிரைக் கொடுத்தாவது, நோயாளிகளைக் காப்பாற்று என, எவர் இவர்களை ஆணையிட்டனர்? இவர்கள்து தியாகத்திற்கு நிகர் ஏது?


கேரள அரசு, வினிதாவின் இறுதிச் சடங்குகளை Kothanellore-ரிலும், ரம்யாவின் சடங்குகளை உழவனூரிலும் முழு “அரசு மரியாதையுடன் நடத்தியது. மறைந்த தோழியர்களுக்காக, மேற்சொன்ன இரு ஊர் களிலும், வியாபாரிகள், கடைகளச் மூடி மரியாதை செலுத்தியுள்ளனர்.


தோழியர்களே!  உங்களைப் போன்ற சிலர் இன்னும் இருப்பதால் தான், இந்தியாவில் தர்மம் சிறிதாவது நிலைத்துள்ளது!  உங்களுக்கு நாங்கள் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம். வேறென்ன சொல்ல முடியும்? 

Monday, December 12, 2011

இது போன்ற கூத்துக்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்!


கொல்கத்தாவில் AMRI மருத்துவமனையில், கடந்த வெள்ளியன்று, நடை பெற்ற தீவிபத்தில்,  93 பேர் இறந்து போயினர்.  விபத்து நடந்த இந்த மருத்துவமனையின், கீழ்த்தளத்தில் தான் முதலில் “தீ ஆரம்பித்ததாம். இந்த ‘கீழ்த்தளம் வாகனகள் நிறுத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட இடம். இந்த இடத்தில் மிக எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை  போட்டு, குடோன் போல உபயோகித்து வந்திருக்கின்றனர். 
காலை மூன்று மணிக்கு தீப்பிடித்திருக்கிறது! ஆஸ்பத்திரி தரப்பிலிருந்து தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் சொல்லவே இல்லை!. 4.10 மணிக்குத் தான் தகவல் போயிருக்கிறது. அப்பவும் நிர்வாகம் சொல்லவில்லை! பக்கத்து காவல் நிலையத்திலிருந்து செய்தி போய் வந்திருக்கிறார்கள்! இதிலிருந்தே தெரியவில்லை, நிர்வாகத்தின் “களவானித்தனம்”?. 


கடந்த 2010, மார்ச் மாதம் நிகழ்ந்த தீவிபத்தின் காரணமாக (43 பேர் கருகி சாவு), மேற்குவங்க அரசு, ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்றினை அமைத்தது.  இக்குழு, நகரில் 48 கட்டிடங்கள் அடையாளம் கண்டு, இக் கட்டிடங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப் பிடிக்கவில்லை எனச் சொல்லியது! இக்குழுவில், தீயனைப்புத்துறை, மின்சார வினியோகத்துறை, கொல்கத்தா கார்பொரேஷன் – ஆகியவற்றைச் சார்ந்த உயர் அதிகாரிகள் இருந்தனர்.  இக்குழு, பாதுகாப்பற்றது என சுட்டிக் காட்டிய 48 கட்டிடங்களில் ஒன்றாம், இந்த மருத்துவமணை. இந்த அறிக்கையின் மீது அரசாங்கத்தின் ‘மேல்நடவடிக்கை என்ன? எவருக்கும் தெரியாது!

 கீழ்த்தளத்தில், அபாயகரமான பொருட்களை போட்டுவைத்திருந்ததை இக்குழு, சுட்டிக்காட்டியபோது, கடந்த ஆகஸ்ட் மாதமே, இத்தகைய பொருட்களை அகற்றிவிடுவதாக எழுத்து பூர்வமாக மருத்துவமணை நிர்வாகம் சொல்லியுள்ளது. ஆனால், எதையும் செய்யவில்லை.

 இந்தியாவில், இது போன்ற துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

1997-ஜூன் 13-ல் ‘உப்ஹார் திரையரங்கில் நடந்த தீவிபத்தில் 59 பேர் உயிரழந்தனர்.  குடந்தையில் 100 சின்னஞ்சிறிய மலர்கள் தீயில் கருகின. நமது சிவகாசியில், தீ விபத்தின் காரணமாக, வருடா-வருடம், பல உயிர்கள் கருகுகின்றன.  இதுபோல இன்னும் ஏராளம். ஒவ்வொரு தீவிபதிற்குப் பின்னும் ஏதேனும் ஒரு விசாரணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இக் குழுக்கள் என்னத்தைக் கண்டுபிடித்தன? இவற்றின் சிபாரிசுகள் அமுலாக் கப்பட்டனவா? நாம் எதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டோமா? 

தீ விபத்து என்றில்லை. எல்லா பெரிய விபத்துக்களுக்குப் பின்னும், (முக்கியமாக ரயில் விபத்து) காரணம் கண்டறிய ஒரு குழு போடப்படும். அவற்றின்அறிக்கைகளை குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களோ?  அவற்றின் அறிக்கைகளை செயலாக்கி யிருந்தால், இம்மாதிரியான விபத்துக்கள் ஏன் நிகழ்கின்றன?

குழுவின் அறிக்கைகளை எவரும் நினைவில் வைத்துக் கேட்பதில்லை. அடுத்த விபத்து நடக்கும் வரை இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு, பின்னர் மறந்து விடுவோம். (சென்னை சென்டரலில் இருந்து ஒரு ஆள் தன்னந்தனியாக ரயிலை ஓட்டிப்போய் விபத்து ஏற்படுத்தினானே? அந்த கேஸ் என்ன வாயிற்று?)

மிகப்பெரிய ஆஸ்பத்திரி என்று சொல்லப்படும் AMRI மருத்துவமணையே இந்த இலட்சனத்தில் இருக்கிறது என்றால், நகரில் சந்து பொந்துகளில் எல்லாம் இயங்கும் ஆஸ்பத்திரிகளை நினைத்தாலே கலக்கமாயிருக்கிறது.


சென்னையில், மிகப் பெரிய துணி நிறுவனங்களும், நகைக்கடைகளும் இருக்கும் பகுதிக்குச் சென்றிருப்பீகள்தானே?  அங்கெல்லாம் ஏதேனும் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் என்னவாகும் என நினைத்தாலே கதி கலங்குகிறது! ‘தீ என்ற புரளியே கூட போதும்! மிதிபட்டே நூற்றுக் கணக்கில் சாவர்கள். உள்ளே செல்லுவதற்கும்-வெளியே வருவதற்கு அவ்வளவு குறுகலான படிகள். அதுவும் சில கடைகளில் விபத்து ஏற்பட்டால் அவர்களை ‘முருகன் தான் காப்பாற்ற வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் எப்படி லைசென்ஸ் கிடைக்கிறது? நமது "பிணம்  தின்னி" அதிகார வர்க்கம், வாயிலும், பையிலும் அள்ளிக் கொட்டிக் கொள்வதில் காட்டும் அக்கறையினை கொஞ்சம் விதி முறைகளை கடைப்பிடிப்பதிலும் காட்டினால், மக்கள் பிழைப்பார்கள்.  இல்லை, இன்ஸ்பெக்க்ஷன்களை ‘கல்லா கட்டுவதற்கு இன்னுமொரு வழியாகக் கொள்ளுவார்க ளேயானால்,ஒன்றும் செய்ய முடியாது!

இந்த தீவிபத்திற்குப் பிறகாவது அரசுகள் விழித்துக் கொள்ளுமா? எல்லா மருத்துவமணைகளையும், ஷாப்பிங் மால்களையும், ஹோட்டல்களயும் ஆய்வு செய்வார்களா? விதிமுறைகளை கடைப் பிடிக்காத கட்டிடங்களை தயவு தாட்சண்யமின்றி மூடுவார்களா?

Friday, December 9, 2011

ஸ்டாப் தி மேட்னஸ் ( STOP THE MADNESS )


முல்லைப் பெரியார் அணை விவகாரத்தினால், பாரம்பர்யமாக நெருங்கிய நல்லுறவு கொண்டிருந்த தமிழர்களும்-மலையாளிகளும் அடித்துக் கொள்கின்றனர். சபரிமலைக்கு செல்லும் தமிழர்களும், தமிழகமெங்கும் டீக்கடை முதல், நகைக்கடைகள் நடத்திக் கொண்டிருக்கும் மலையாளிகளும் தாக்கப்படுகின்றனர்.  சாதாரண சபரிமலை பக்தர்களும், டீக்கடை நாயர்களும் என்ன தவறுசெய்தனர்?  அவர் களுக்கும் அணை விவகாரத்திற்கும் என்ன நேரிடைத்தொடர்பு? இவர்களை ஏன் அடிக்க வேண்டும்? போராட்டம் என்பது வேறு! அராஜகம் என்பது வேறு!

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது, “சிங் குகள் குறி வைத்து தாக்கப்பட்டது போன்ற அராஜகம் அல்லவா இது! பாஸிஸத் தின் ஆரம்பம். இதைக் கண்டிக்க வேண்டிய அரசியல் வாதிகளும், மீடியாக்களும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்?

மதியிழந்த அரசியல்வாதிகள், ஓட்டு அரசியல் நடத்திக்கொண்டி ருக்கின்றனர்.  UDF – LDF இரண்டுக்கும் இடையே, எம்.எல்.ஏ–க் கள் எண்ணிக்கையில், வித்தியாசம் இரண்டே இரண்டுதான்.  இது மாறி விட்டால் போதும்! கேரளத்தில் ஆட்சி மாறிவிடும். இதற்காகத்தான் இந்த கூத்தடிக்கின்றனரா?   

அரசியல்வாதிகளே! எப்படி நாட்டைப் பற்றியும், கொள்கைகள் பற்றியும்,  தேசத்தின் இறையாண்மை பற்றியும் சிந்தனையற்றுப் போய்விட்டீர்கள்?

எதை வேண்டுமானாலும் சொல்லலாம்! எப்படி வேண்டுமானாலும் மக்களை உசுப்பேற்றிவிடலாம்! வாக்கு அரசியல் மட்டுமே போதும் என நினைத்து விட்டீர்களா? உங்களால், எந்த பிரச்சினக்குமே தீர்வு காணவே முடியாதா? ஆகப் பெரிய தேசீய கட்சிகள் கூட, குறுகிய இன, மொழி உணர்வு களைத் தூண்டிவிட்டு ஏன் குளிர் காய்கிறீர்கள்?

நீங்களெல்லாம், பத்திரமாக திருவனந்தபுரத்திலும் சென்னையிலும் இருந்து கொண்டு, சாதாரண மக்களை ஏன் இரத்தம் சிந்தவைக்கின் றீர்கள்?

தமிழகத்திலும், கேரளத்திலும் இருக்கும் தொழிற்சங்கவாதிகளும், சமூகவியலாளர்களும், இலக்கியவாதிகளும், ஓய்வு பெற்ற “வி.ஆர்.கே“ போன்ற நீதிபதிகளும் என்ன செய்கிறார்கள்? மக்கள் அடித்துக் கொள்வதை நிறுத்த வீதியில் இறங்கியிருக்க வேண்டாம்? 

மக்கள் அராஜகத்திற் கெதிராகவும், இன-மொழி வெறி கோஷத்திற் கெதிராகவும் குரல் கொடுத்தாக வேண்டும்!


அரசியல்வாதிகளுக்கு, அணை விவகாரம் தீராமலிருந்தால்தான் ‘பிழைப்பு நடத்த முடியும். இவர்கள் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல மாட்டார்கள். மாறாக இன்னும் கொஞ்சம் எண்ணை ஊற்று வார்கள்! இன்னும் பிரச்சினை பெரிதாக எரியட்டும் என்று! ஏனெனில் இரத்தம் சிந்தப்போவது அவர்களல்லவே!

இந்து-முஸ்லீம்கள் இனக்கலவரம் நடந்த போதெல்லாம், தடுத்து நிறுத்த ‘உண்ணாவிரதம் மேற்கொண்ட “மகாத்மா காந்தியினைபின் பற்று வதாகக் கூறிக் கொள்ளும் சீடர்கள் ஒருவர் கூடவா இரு மாநி லங்களிலும் இல்லாமல் போய்விட்டனர் ?


அடிப்படையாக அணைவிவகாரம், ஒரு காலக்கெடுவுக்கு உட்பட்டு தீர்க்கப்பட வேண்டும். தேர்ந்த பொறியியல் நிபுணர்களின் சிபாரிசுப் படி அமைந்த, சுப்ரீம்கோர்ட்டின் முடிவுக்கு இரு மாநிலங்களும் உட் பட வேண்டும்!

அதுவரை, இரு மாநில மக்களும் நல்லுறவுடன் இசைந்து வாழ அனைத்து தரப்பிலும், உடணடியாக, முயற்சி எடுத்தாக வேண்டும்! 


தெருவில் அடித்துக் கொள்வது, பிரச்சினை தீர்வுக்கு உதவாது என்பதை புரிய வைக்க வேண்டும்! செய்வார்களா?
=======================================================
My related article:   Click here
=======================================================

Thursday, December 8, 2011

அலுவலகத்தில் பெண்கள்:


எதற்காக இக்கட்டுரை?:

நேற்று எனது நன்பர் ஒருவர், அலுவலகத்தில் பெண்களுக்கு ஏதும் சலுகைகள் கொடுக்கப்பட வேண்டுமா என வினவியிருந்தார். அதற்குப் பதிலாக பெண்கள், ஆண்களுக்கு மரியாதை அளிக்கவேண்டும் எனவும் கோரியிருந்தார். அதற்கு நான் பதிலளிக்கும் போது, பெண்களுக்கு, அலுவலகங்களில்,சில நியாயமான சலுகைகள் அளித்தாக வேண்டும் எனவும், அது ஆண்களின் கடமை எனவும்,நேர்மையாக அவ்விதம் நடந்து கொண்டுகொண்டால் (எதையும் அவர்களிடம் எதிர்பாராது), மரியாதை தானாகக் கிடைக்கும் எனவும் பதிலிருத்து இருந்தேன். இந்த மிகச் சுருக்கமான பதில் எனக்கே திருப்தி அளிக்காத்தால், சற்று விரிவாக:






இவர்கள் யார் ?:

அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள், வேறெங்கிருந்தோ வந்து விடவில்லை. இந்த சமுதாயத்திலிருந்துதான் வந்திருக்கின்றனர். எனவே இந்த சமுதாயத்தில் அவர்கள் எந்தெந்தவிதமான,உபாதைகளை அனுபவிக்கின்றனரோ, அவையனைத்தையும் அலுவலகத்திலும் பெறக்கூடும்! காலம் மாறிக் கொண்டு வருகிறது என்றாலும், மகளிரை ‘செக்ஸ் சிம்பலாக, மறைமுகமா வேனும் பார்ப்பது முற்றிலும் நீங்கவில்லை. எனவே அவர்களுக்கு பாலியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகிறது. நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. அவரவர் மனசாட்சியே சொல்லும்.  தனியாக அலுவலகத்தில் வேலைசெய்ய வேண்டியிருப்பது, சில “வக்கிரங்களின்சேம்பருக்கு செல்ல நேருவது, இரட்டை பொருளுடன் உரையாடுவோரினை தவிர்ப்பது, போன்றவற்றில் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுவது அவசியமாகிறது.


இடமாற்றம் (Transfer):

இதில் அதிகம் பாதிக்கப்படுவோர் மகளிரே. ஒரு இடத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, திருமனம் ஆனதும், கணவன் இருக்கும் இடம் நாடி டிரான்ஸ்ஃப்ரில் செல்வதினால், அவர்களது பதவி உயர்வு, சீனியாரிட்டி உட்பட பலதும் பாதிக்கப்படுகிறது. நமது ரூல்ஸில் கூட Wife joining Husband”  என்றுதான் சொல்லப் படுகிறதே தவிர, ‘Husband joining wife” பேசப்படுவதில்லை. இதன் காரணமாகவே வேலையைவிட்டுவிடும் பெண்கள் அதிகம்.


உடல் உழைப்பு:

பெண்களின் உடலமைப்பே, மிகக் கடினமான வேலைகளை செய்வதற்காக ஏற்பட்டதல்ல. பளு தூக்குதல், பணி நிமித்தம் ஏணிகளில் ஏறுதல், மின் உபகரணங்களை கையாளுதல் போன்றவற்றில் சில சலுகைகளை கொடுப்பதில் தவறில்லை. அதிலும் ஐம்பது வயதுக்கப்பிறகு (மெனோபாஸ் பீரியடுக்குப் பின்) பெண்களின் உடல் பல விதங்களிலும் பலவீனப்படுகிறது. எனவே சிலவேலைகளை அவர்களுக்கு கொடுப்பதில் கண்டிப்பாக சலுகை தேவைதான்.

லேட் அவர்ஸில்:

சமூகம், பெண்களுக்கு அதிகம் ஓய்வு அளிப்பததே இல்லை. ஆண்கள், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த்தும், டி.வி முன்னரோ, புத்தகம் முன்னரோ அமர்ந்து விடுவான். இல்லாவிடில் நண்பர்கள் கூட்டம் இருக்கவே இருக்கிறது. இவன் எவ்வாறு “களைப்படைந்துவருகிறானோ அதுபோலத்தானே பெண்களும்? ஆனால் அவர்களை நாம் விடுவதில்லை. இரவு உணவு சமைப்பது, குழந்தைகளுக்கு பாடம், சமயலறை ஒழிப்பு என அவர்களுக்கு ‘இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்கிவிடுகிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, அடுத்த நாள் உணவிற்கு சில ஏற்பாடுகள் செய்துவிட்டு, பின் அவனுக்கு ‘கம்பெனியும் கொடுத்துவிட்டு, பின் தூங்கி, அவனுக்கு முன் எழவேண்டும்.

எனவே பெண்களுக்கு, அலுவலகத்தில்,  ஒவர் டைம் இல்லாமல் பார்த்துக் கொள்வது, பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பிவிடுவது பொன்ற சாதாரண சலுகைகள் அவசியமே!


விடுமுறை:

ஆண்கள் லீவு எடுத்தால், குடும்பவிஷேசம் அல்லது அவனுக்கு உடல் நலம் குன்றுதல் போன்றவை மட்டும்தான். பெண்களுக்கு அப்படியில்லை! குடும்பத்தில் எவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும், நாம் வைத்திருக்கும் ஏகப்பட்ட பண்டிகைகளை கொண்டாடுவதற்காகவும், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும், சமூக obligation போன்றவற்றிற்கும் விடுமுறை எடுக்க வேண்டி யுள்ளது.  எனவே ஒரு குறிப்பிட்ட நாளில் ஆணும்-பெண்ணும் விடுமுறை கோரினால், பெண்களுக்கு விடுமுறை கொடுப்பதில் முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை.

உடற்கூறு:

ஆண்கள் பிள்ளை பெறுவதில்லை. எனவே அது சம்பந்தமான உபத்திரவங்கள் அவனுகுத் தெரியாது. அது மாத்திரமல்ல; அவர்களுக்கென்றே சில மாதாந்திர உபத்திரவங்கள் உண்டு. இது தவிர மெட்டர்னிட்டி லீவு முடிந்து, உடனே அலுவல கத்திற்கு வரும் பெண்களின் சில பிரச்சினைகள் சிக்கலானது. அவற்றை யெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவ்வப்போது, சற்று, ‘ரெஸ்ட் ரூமிற்கு அவர்கள் சென்றுவருவது அவசியமே!

குழந்தை வளர்ப்பு:

இதை விலாவாரியாக சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். யாவருக்கும் தெரியும். குழந்தை சற்று பெரிதாக வளரும்வரை அவர்கள் படும் பாடு, ஒவ்வொரு நிலையிலும் சொல்லிமாளாது.  இதுபற்றி, பெரும்பாலான ஆண்கள் அலட்டிக் கொள்வதில்லை. இந்த மாதிரியான “டென்ஷன், அவர்களது  பணியில் ரிஃப்ளெக்ட் ஆகாது என எப்படி எதிர்பார்க்க முடியும்?


குடும்பம்-சமூகம்



இது தவிர, அவர்கள் ‘ஈவ் டீஸ் செய்யப்படுவதின் மூலமும்,  குடும்பத்திற்கு 


போதுமான  நேரம் ஒதுக்க முடியாமலும், அவதிப்படுகிறார்கள். அதிலும் 

அனுசரித்துப் போகாத மாமியார்-மாமனார் அமைந்துவிட்டால் நிலைமை இன்னும் 

மோசம். வீட்டுவேலை என்பதை அவர்கள் தலையில் கட்டிவிட்டு ஆண்கள் 

நிம்மதியாக இருக்கின்றனரே?


முடிவாக:


பெண்கள் வேலையே செய்யவேண்டியதில்லை என சொல்லவில்லை! அவர்களும் 

வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டியவர்களே! ஆனால் சிறு-சிறு 

சலுகைகளை அவர்களுக்கு கொடுப்பதினால் ஒன்றும் ஆகிவடாது. அது ஆண்களின் 

சமூக கடமைகூட. இதனால், அவர்கள் உங்களிடம் ‘குழைய வேண்டும் என 

எதிர்பார்க்காதீர்கள். இது எல்லாவற்றையும் விட மோசமானது.


(நான் சென்னது பொதுவாக; விதிவிலக்குகள் எதிலும், எங்கேயும், எப்போதும் 

உண்டு)