உலக பெண்க்ள் தினம். இது ஒரு வருடாந்திர சடங்கு போல இப்போதெல் லாம் கொண்டாடப்பட்டு வருகிறதா என சந்தேகம் வருகிறது. ஏன் இந்த
தினம் என்பதை பெண்களும் கூட கேட்பதில்லை. ஒருசில பத்திரிக்கை கள் தவிர ஒரு மேம்போக்கான 'விஷயங்களைத்' தரு கின்றனவே தவிர, கணமான கட்டுரைகள் காணக்கிடைப்பது அரிதாகவே உள்ளது. நாம் மேலும்-மேலும் ஜாதி,மத,இன,பிராந்திய, கோஷ்டி கோட்பாடுகளில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாக, சமூக பிரக்ஞை இழந்து வருகிறோமா என கவலையாயிருக்கிறது.
இலவசங்களும்-சாராயமும், விடாது துரத்தும் டி.வி க்களும் மக்களை மழுங்கடிப்பதாக உள்ளனவே தவிர, சிந்திக்க வைப்பதாக இல்லை. உலக வணிகர்கள் 'காதலர் தினம்' போல, மகளிர் தினத்தையும் வர்த்தகத்திற்கு பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். ('அக்வா ஃப்ரஷ்' வாங்கி னால் 25% ஆஃப்பர்.)
மீடியா, விளம்பரங்களில், பொது வாகவே பெண்களை கிளுகிளுப்புக்
காகவும்-செக்ஸ் அப்பீலுக்காகவுமே
பயன்படுத்திக் கொண்டிருகின்றன்.
ஏதோ ஒரு "ஸ்ப்ரே அடித்துக் கொண்டால்" எல்லா பெண்களும் ஓடி வருவார்களாம். பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. 'ஷேவிங் பிளேடுக்கும்-கிரீமுக்கும்' பெண்கள் எதற்கு?
இவை பெண்களைக் கேவலப்படுத்துவதோடு ஆண்களின் ரசனையையும்
தரக்குறைவாக்கி விடுகிறது. இந்தமாதிரியான பாணியினை பத்திரிக்
கைகள் தொடர்ந்து செய்து, இவை ரசணைகுறைவானவை-இழிவானவை
என்பதையே உணர முடியாத அளவுக்கு மரத்துப் போகச் செய்து விட்டன.
பெண்களுக்கென நடத்தப்படும் பத்திரிக்கைகள் என்ன செய்கின்றன்?
பிரமாதமான வித்தியாசம் ஏதும் இல்லை. இவைகளை இரண்டு வகை களாக பிரிக்கலாம். ஒன்று உள்ளூர் மொழிகளில் வெளிவரும் பத்திரிக்
கைகள். இவைகளில் நன்றாக எப்படிச் சமைக்கலாம், விதவிதமான கோலங்களை எப்படிப் போடலாம், கைத்திறனை எப்படி வளர்த்துக் கொள்ளலாம், வீட்டை எப்படி அலங்கரிக்கலாம், உடலை எப்படிச் சிக்கென வைத்துக்கொள்ளலாம், எந்த உடை அணியலாம், அழகாக எப்படி இருக்கலாம்…30 வகையான ஊறுகாயகள்.. 30 வகையான குழம்புகள்.. இன்ன பிற....
இன்னொன்று உயர்கல்வி கற்று, நல்ல சம்பளத்திலிருக்கும் பெண்களுக்கான 'ஆங்கில பத்திரிக்கைகள்'. இவற்றில் ஆண்களைக் கவரும் விதங்களில் பெண்களின் படங்களைப் போட்டு நிரப்பி விடு கின்றன. இதே குழம்பு செய்யும் முறையினை வண்ண வண்ண படங்களில் ஆங்கிலத்தில்... இது தவிர சில தகா உறவுகள்-பாலுறவு பற்றி விளக்கங்கள். இந்த ஒரே பாணியை அசராமல் பத்திரிக்கைகள் செய்து வருகின்றன.
எப்படியாயினும், சுற்றி வளைத்து ஆண்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய விஷயங்களாகவே பாடம் நடத்துகின்றனர்.
விதவிதமாகச் சமைத்துப் போட வேண்டும், கணவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டும், வீட்டைக் கண்ணாடி போல வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களை மீண்டும் மீண்டும் பெண்களின் மூளையில் ஏற்றுகின்றன. அதாவது இவை எல்லாம் பெண்களின் வேலைகள்… இவற்றை இன்னும் அழகாக, சுவையாக எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
இந்த விஷயங்களுக்கு ஏற்றாற்போல மேக்கப் ஐடங்கள், எடை குறைப்பு, சமையல் பொருள்கள் என்று வியாபாரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. மிகவும் கெட்டிக் காரத்தனமாக, நுட்பத்துடன் பெண்களேஅறியாவண்ணம் நுகர்வு கலாசாரத்தை மண்டையில் ஏற்றி விடுகிண்றனர்.
எப்போதாவது, அபூர்வமாக உருப்படியான விஷயங்கள் வந்தால், இப்படிப்பட்ட விஷயங்களுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ள பெண்கள், ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். அதுவே சமையல் இணைப்பு என்றால் உடனே வாங்கி விடுகிறார்கள். வியாபரிகளின் நோக்கம் நிறைவேறி விட்டதல்லவா?
இது தவிர 'பக்தி கொண்ட' மனைவிகளுக்காக, எந்த விரதம் இருந்தால் கணவருக்கு நல்லது, எந்தக் கோயிலுக்குப் போனால் என்ன என்ன பிரச்னைகள் தீரும், அதற்கு பெண்கள் செய்ய வேண்டியவை என்ன என்று சொல்லி, சுத்தமாக மழுங்கடித்து விடுகின்றனர்.
ஆண்களை இந்த பெண்கள் பத்திரிககைகளை வாங்க வைப்பதற்காக, விநோதமாக ‘உங்கள் கணவருக்கு மசாஜ் செய்வது எப்படி?’, ‘கணவரிடம்
பாராட்டு வாங்குவது எப்படி?’ என்றெல்லாம் கவர்ஸ்டோரிகள் வெளியி டுகின்றனர். இப்பத்திரிகைகளில் வரும் கதைகள், அனுபவங்கள் எல்லாம் பெண்களைத் தியாகிகளாகச் சித்தரிக்கின்றன. எவ்வளவு பிரச்னை வந்தாலும் பெண் என்ற இலக்கணத்தை மீறாமல், வாழ்க்கையில் வெற்றி பெறுபவளே சிறந்த பெண் என்கிறார்கள். பெண்களின் உடல், மனம் சார்ந்த பிரச்னைகள், சாதாரண பெண்கள் சிறு தொழிலதிபர்களாக மாறிய
விஷயங்கள் போன்றவை குறைவாக வரும்.
தொலைக்காட்சி சேனல்களில்?
இதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா? அதுவும் நமது பெண்கள் மதிமயங்கிக் கிடக்கும் 'சீரியல்களில்' நமது கற்பனைக்கும்
எட்டாத வக்கிரங்கள். ‘அவளைக் கொல்ல வேண்டும்.’ ‘இவளை அவள் கணவனிடமிருந்து பிரிக்க வேண்டும்.’ ‘அவள் குழந்தையைக் கடத்தி, அவளைத் துடிதுடிக்கச் செய்ய வேண்டும்.’ ‘இவளைப் பைத்தியக்காரியாக மாற்றி ஓட வைக்க வேண்டும்' - இப்படிப்பட்ட 'தீம்' களோடு பவனி வருகின்றன.
எங்கோ ஒருசில அமைப்புகள்-இவர்களுக்காக போராடி-'ஞானஸ்நானம்' அளிக்க முயன்று கொண்டிருக்க, மிகப் பெரும்பான்மையான பெண்கள், பட்டுப்புடவைகளிலும், நகைக் கடைகளிலும், டி.வி சீரியல்களிலும் உழன்று கொண்டிருக்க..எப்போதும் நாம் இப்படித்தான் இருந்து கொண்டி ருக்கப் போகிறோமா...புரியவில்லை.