Tuesday, March 1, 2011

Life After Retirment

ஒவ்வொரு மாதக்கடைசியிலும் தாங்கள் வேலைசெய்து கொண்டிருக்கும்  
நிறுவனத்திலிருந்து பலர் பணி ஓய்வு பெற்றுக் கொண்டுதான் இருக் 
கிறார்கள்.  வேலைக்கு சேரும் போது இருந்த ஆர்வம், உற்சாகம், 
குதூகலம்,  உலகத்தை மாற்றிவிடத்துடிக்கும் உத்தேசங்கள் யாவும் 
வடிந்து,  அடுத்த நாள் முதல் அந்த நிறுவனம் அவருக்கு "மாஜி" என்ற 
அந்தஸ்தை வழங்கிவிடும் அந்த 'ரிடயர்மெண்ட்'  தினத்தை அவர்கள் எதிர் 
கொள்ளும் விதம் சுவாரஸ்யமானது, அலாதியானது.


'ரிடயர்மெண்ட்' பார்ட்டிகளில் - பலர் அழுதுவிடுவதை பார்த்திருக்கிறேன்.  
இந்த அழுகைக்கு என்ன காரணம் என வியந்தபோது 35-40 வருடத்திய 
சொந்தம், பாத்தியதை ஒரு நாள் "சட்டென்று"  அறுபடுவது, இனிமேல் 
நிறுவனத்திற்கு தான் ஒரு 'வெளியாள்' தான் என்ற "விழுங்க இயலாத 
உண்மை"  சுடும் போது அழுகையாக வெளிப்படுகிறதோ எனத் 
தோன்றுகிறது.    இந்த "நிராகரிப்பினை" எதிர்கொள்வது எல்லோருக்கும் 
எளிமையாக இருப்பதில்லை.

(பெண்களை திருமணம் செய்து கொடுத்தபின் தாய்கள் சிந்தும் 
கண்ணீருக்கு காரணமாக - இந்த "பாத்யதை" இழப்பும்  இருக்கிறதோ?)

"ரிடயர்மண்டினை"  ஆண்களும் பெண்களும் எதிர் கொள்ளும் விதம் 
தனித் தனியானவை. பெண்களுக்கு  'சமயலறை' வேலைகளிலிருந்து
எப்போதும் ரிடயர்மண்ட் இல்லையென்பதாலோ என்னவோ அவர்கள் மன ரீதியாக பதிக்கப்படுவதில்லை- தங்களது நண்பிகளை இனி பார்க்க 
இயலாது என்ற 'செண்டிமெண்ட்டைத்' தவிர.

ஆண்கள் 'புருஷ லக்ஷணம்' போய்விடுவதாக எண்ணிக் கொள்வதால், 
மாட்டிக் கொள்கிறார்கள்.

'பொருளாதார' காரணங்கள் பற்றி இப்போது பேசப்போவதில்லை.  அதற்கு முடிவும் இல்லை.  பணியில் இருக்கும்போதே சரியான 
திட்டமிடல்-குடும்ப கடமைகளை கூடுமானவரை முடித்துவிடுவது,
இப்போது பரவலாக கிடைக்கும் 'பென்ஷன்' திட்டங்களை பயன்படுத்திக் 
கொள்வது - போன்றவை மூலம் ஓரளவு பொருளாதார காரணிகளை 
நிவர்த்தித்துக் கொள்ளலாம்.

ஆணால் "மனரீதியான" பாதிப்புகள் எதும் இன்றி எப்படி "ரிடயர்மண்டினை"  எதிர் கொள்வது?


முதலில் தானும் ஒரு சாதாரண ஆசாமி தான்; அலுவலகத்தில் சில 
"காக்கைகள்"   'இந்திரன்-சந்திரன்'  கரைந்ததை உண்மை யென நம்பிக் 
கொண்டு தன்னை "சூப்பர் மேனாக" பாவித்துக் கொள்வதை நிறுத்திக் 
கொள்ள வேண்டும்.  வகித்த பதவிதான் செல்வாக்கினையும்-
பெருமைகளை அளித்தது; பதவி போனபின்னும் நிலைத்து நிற்கும்
புகழ் மட்டுமே (அப்படி ஏதேனும் இருந்தால்) தனக்கு உரியது என உணர 
வேண்டும். 

தாசில்தாரின் நாய் செத்துப் போனதற்கு அலுவலகமே திரண்டு வந்ததாம். 
ஆணால் தாசில்தாரே செத்துப் போனதற்கு 'ஒரு பய' வரவில்லையாம். 

எனவே டப்பாவிற்கு மணம் தந்தது பெருங்காயம் தானே தவிர 
டப்பாவிற்கென தனி மணம் எதும் இல்லை என்பதை உணர்ந்தால் நல்லது. 

 'உயர் பதவி' வகித்து ஓய்வு பெற்றவர்கள் சிலர் பாடுத்தும் பாடு 
விபரீதமானது.  இவர்களுக்கு தனியாக ஏதும் செய்துகொள்ள வராது.
தெரியாது!  'ஏவியே'  பழக்கப் பட்டவர்களுக்கு 'எடுபிடிகள்' யாருமில்லை 
என்ற நிலையில் மனைவி மக்களை படுத்துவது சொல்லி மாளாது.  
எனக்குத் தெரிந்த 'Upper Middle Class'  ஆள் ஒருவர் ஓய்வு பெற்றார்.  
பணியிலிருக்கும் போது 'ஓசி' யிலேயே காலம் தள்ளியவர்.  அலுவலக 
காரை, இஞ்சின் காணாமல் போகும் வரை 'சொந்த வேலைக்கு' 
தேய்த்தவர்.  பேனா முதல்,ரயில் டிக்கட்,  ஏர் டிக்கட், மளிகை சாமான், 
ராத்திரிக்கு டிபன் (அப்படியே வூட்டுக்கார அம்மாவுக்கும் ஒரு பார்சல்)  
வரை மங்களம் பாடியவர். திருட்டு பில்கள், கமிஷன்கள் தனி கணக்கு.  
வீட்டிற்கு   அனுப்பப் பட்டபின் அந்த பந்தாவெல்லாம் நடக்கவில்லை.  
அலுவலகத்தில் நாய்கூட வாலாட்டவில்லை.  வெட்டிப் பந்தா வேலைக்காகாத நிலையில், வேகத்தை மகன்களிடமும், மனைவி யிடமும் காட்ட, பொறுத்து - வெறுத்துப் போன குடும்பத்தினர் 
இந்த ஆளை முதியோர் காப்பகத்தில் கொஞ்சம் 'மரை கழண்ட நிலையில்'  
விட்டு விட்டனர்.

எனவே, ஓய்வு பெறுவதற்கு மனதினை' தயார் படுத்திக் கொள்ள 
வேண்டும்.  பணி ஓய்வு என்பது 'அஸ்தமனமல்ல'.   ஒரு 'எபிஸோட்'
முடிந்திருக்கிறது.  அவ்வளவுதான்.  இந்த நிகழ்வு தனக்கு மட்டும் 
பிரத்யேகமானதல்ல.  உலகில் தெரிந்து கொள்வதற்கும், ரசிப்பதற்கும் பல 
விஷயங்கள் காத்துக் கிடக்கின்றன.  கூடுமான வரை அடுத்தவருக்கு
உதவுவதற்கு முயல வேண்டும்.  இதைச் செய்யவில்லையெனில் நாமே 
'உபத்திரவாளிகள்' ஆகி விடுவோம்.  சோம்பியிருப்பதை விட்டு விட 
வேண்டும்.  காசுக்காக இல்லாவிட்டாலும், எதேனும் ஒரு வகையில் 
தங்களை 'பிசி' யாக வைத்துக் கொள்ள வேண்டும். இது மனதையும்
உடலையும் ஆரோகியமாக வைத்துக் கொள்ளும்.


தத்தமது நம்பிக்கைகளுக்கு ஏற்ற வகையில் 'ஆத்ம விசாரணையில்'  
ஈடுபடுவது நல்லது.  மதம் சாராத 'ஜக்கி வசுதேவோ' அல்லது 
'தெய்வத்தின் குரலோ' படிக்கலாம்.  படித்து, விட்டு விடாமல் 'உணர்ந்து'  
கொள்ள முயலவாவது வேண்டும்.  எவரையும் 'விழுந்து பிராண்டு 
வதில்லை' ,  'என் வேலையை நானே செய்துகொள்வேன்'  போன்ற 
எளிமையான சபதங்களை மேற்கொள்வது அவசியம்.

(முக்கியமாக 'சர்விசின்'   கடைசி சில வருடங்களாவது நேர்மையாக
வேலை செய்ய முயலலாம்)


2 comments:

  1. தன் சுய லாபங்களை இழக்க வேண்டுமே என்ற எண்ணமே பெரும்பாலனோரின் அழுகைக்கு காரணம். retirement என்பது அனுபவித்து கொண்டாட வேண்டிய ஒன்று. காலேஜ் முடித்து வீடு திரும்பும் எண்ணமே ஏற்பட வேண்டுமே தவிர, அழுகை அல்ல.

    ReplyDelete
  2. An Excellent article. Fine
    Brindha

    ReplyDelete