Tuesday, September 9, 2025

எங்கு சென்றாலும் நாம் நாமே!

நரேந்திரன் என்னும் அமெரிக்க வாழ் இந்தியர் எழுதிய கட்டுரை! அவருக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொண்டு , அவரது கட்டுரை கீழே! 

ஒரு பழைய,  திரைப்படத்தில் வரும் ஒரு பாட்டில் இப்படியொரு வரி வரும்,

"உலகில் உள்ள நாடுகளில்என் கால்கள் படாத இடமில்லை....உங்களைப் போலேகும்பலும், கூச்சலும் இதுவரை கண்களில் படவில்லை....."

1960-களில் வந்த திரைப்படமென்று நினைக்கிறேன். துரதிருஷ்டவசமாக இந்த மாதிரியான கும்பல்களை, விசிலடிச்சான் குஞ்சுகளை வளர்த்துவிட்டவர்களில், அந்த ஹீரோவே முக்கியமானவர். அவரது திரைப்படங்கள் வெளியாகும் நாளெல்லாம் தியேட்டர்கள் அமளி துமளிப்படும். அவரது திரைப்படம் வெளியாகும் நாட்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் தங்களின் வேலை, வெட்டிகளைக் கைவிட்டுவிட்டு தியேட்டர் வாசலில் டிக்கெட் வாங்குவதற்காகத் தவம் கிடப்பார்கள். இரவெல்லாம் தியேட்டருக்கு முன்பாக உறங்கிக் கிடக்கிறவர்களும் இருந்தார்கள். அவரது ஒரே திரைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்த வெட்டிக் கூட்டங்களும் இருந்தன.

டிக்கெட் வாங்குவதற்கான கவுண்டர்களுக்குச் செல்லுவதற்கான குறுகிய வழிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் அடைபட்டுக் கிடப்பார்கள். பலபேர் அந்தக் கூட்ட நெரிசலில் சிக்குவர்களும் சகஜம். தண்டையார்பேட்டை "அகஸ்தியா" தியேட்டரில் வெளியான அவரின்  ஒரு திரைப்பட டிக்கெட் வாங்குவதற்காக நடந்த தள்ளுமுள்ளுக்களில் சிக்கி பலருக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவமும் உண்டு.

இதற்கு ஹீரோ மட்டுமே குற்றம் சொல்லுவது தவறு. வயதாகியும் மூளை வளராத, அறிவிழந்த முட்டாள் கூட்டத்திற்கு இதில் பெரும் பங்கு உண்டு. சினிமாவையும், தனிப்பட்ட வாழ்வையும் பிரித்தறியத் தெரியாத தற்குறிகள் நிறைந்த ஒரே இடம் இந்த பூவுலகில் தமிழ்நாடு மட்டும்தான். தியேட்டருக்கு வெளியே மட்டுமல்லாமல், தியேட்டருக்கு வெளியேயும் இந்தத் தற்குறிகள் ஆட்டம் போட்டார்கள். ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும் கட்டவுட்டிற்குப் பாலூற்றுவது, ஆளுயர மாலை சாற்றுவது போன்ற கேவலங்களை அவர்கள் நிறைவேற்றத் தவறுவதேயில்லை. அது இன்றுவரையில் தொடர்வதுதான் அவலம்.

இது அவருக்கு மட்டும் நிகழவில்லை. எல்லா பிரபல தமிழ் சினிமா நடிகர்களுக்கும் இது நடந்தது. இன்னமும் நடக்கிறது. உலகமெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது என்பதனைப் பற்றி எந்தத் தமிழனும் நாணுவதில்லை. மாறாக பெருமை கொள்ளுகிறான் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானது. உளவியல் ரீதியாக நிச்சயமாக இது ஆரயப்பட வேண்டிய ஒன்று என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. தனக்குப் பிடித்த பலான் சினிமா நடிகனை யாரேனும் கேலி செய்துவிட்டால் அவனுக்கு வருகிற ஆத்திரமும், கோபமும் அளவிடற்கரியது. அவனது பிரியப்பட்ட சினிமா நடிகன் நடித்த சினிமாப்படம் ஓடுவதற்காக அல்லது வசூலில் வெற்றி காண்பதற்காக மண் சோறு தின்பதில் ஆரம்பித்து, மொட்டையடித்துக் கொள்வது, அலகு குத்துவது என ஆரம்பித்து கடா வெட்டுவதுவரையில் வந்து நிற்கிறான்.

சினிமாவில் நடிக்கிற அவனுடைய பலான நடிகனும் தன்னைப் போல ஒரு மனிதன் மட்டும்தான் என்பதனை அவனுக்குச் சொல்லிப் புரிய வைப்பது சிரமம். அவனைப் பொறுத்தவரையில் அந்த சினிமா நடிகனே அவனுக்குக் கடவுள். அவன் உத்தரவிட்டால் மறுபேச்சு பேசாமல் மலத்தையும் நக்கித் திங்க அவன் தயாராக இருக்கிறான். தன்னுடைய பிரியப்பட்ட பலான சினிமா நடிகன் உண்மையில் ஒரு சதாாணமாாவன் என்பதையோ, முழு மூடன் என்பதனையோ, தனக்கு உயிரைக் கொடுக்கத் துடிக்கும் தன்னுடைய ரசிகனுக்காக ஒரு சிறிய துரும்பைக் கூடத் தூக்கிப்போடாத ஒரு சுய நலவாதி என்பதனையோ, போதை மருந்துகளுக்கும், பலவித பால்வினை நோய்களுக்கும் ஆளானவன் என்பதனையோ அவன் பொருட்படுத்துவதில்லை. கீழ்த்தரமான, நாயினும் கடையனான அவனது பிரியப்பட்ட சினிமா நடிகனை அரியணையில் அமர்த்த அவன் துடிக்கும் துடிப்பு விசித்திரமானது. யோசித்துப் பார்க்கையில் மிகவும் பரிதாபகரமானது.

இப்படியாகப்பட்ட மூடர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே வாழ்கிறார்கள் என்று நினைப்பது மகாப் பெரிய தவறு. இப்படியாகப்பட்ட, அசிங்கம்பிடித்த, புத்தியில்லாத தமிழர்கள் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதே கேவலத்தைச் செய்கிறார்கள். காண்போரை முகம் சுளிக்க வைக்கிறார்கள். 

கல்வி அவர்களைப் பண்படுத்தவில்லை. நாகரிகமான நடத்தையையும், பொது அறிவையும், ஒழுங்கையும் இழந்த இந்த மூடர்கள் அமெரிக்காவிலும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். படித்து, பல பட்டங்களைப் பெற்ற, ஒரு நல்ல வேலையில் இருக்கிற பெரும்பாலான தமிழர்கள் தங்களது பிரியப்பட்ட சினிமா நடிகனின் திரைப்படம் அமெரிக்கத் தியேட்டர்களில் வெளியாகுகையில் செய்கிற அநாகரிக, அனாச்சாரச் செயல்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைக்கும். அந்தத் தமிழனுக்கு ஓரளவேனும் சிந்திக்கும் திறன் இருந்தால் தான் வாழ வந்த ஒரு இடத்தில் இந்த நாகரிகமற்ற கும்பல்கள் செய்யும் கேவலங்களைக் கண்டு அவன் நிச்சயமாக நிச்சயமாக வருந்துவான். வருந்தவேண்டும்.

ஆனால், அந்தோ!

தலை நரைத்து, மண்டையில் மசிர் கொட்டிப் போன கிழட்டுத் தமிழனிலிருந்து, நேற்று வந்தவன்வரையில் அமெரிக்கத் திரையரங்குகளில் செய்கிற அனாச்சாரங்கள், அட்டூழியங்கள் மிக, மிகக் கேவலமானவை என மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்தக் கேடுகளைக் கண்ட வெள்ளைக்காரன் அவர்களை விரட்டியடிக்க முனைவதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது?

இதனைக் குறித்து ஏராளமாக எழுதலாம். ஆனால் எழுதி என்ன ஆகப்போகிறது?

இயல்புக் குணம் மாறுதில்லை; அமெரிக்காவாக இருந்தாலென்ன? இயல்பு  மறந்துவிடவா போகிறது? நம் மீது பட்டுவிடாமலிருக்க முடிந்தவரையில் விலகி நடப்பதுதான் சரியானது. நான் அப்படித்தான் இவர்களிடமிருந்து விலகி இருக்கிறேன்.

நண்பர் ஹரிஷ் ராகவேந்திராவின் ஆதங்கம் மிகச் சரியான ஒன்று.

"அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாகக் குறியேறியுள்ள இடங்களில் ஒன்று டெக்ஸாஸ் மாநிலத்தின் 

டாலஸ்(Dallas) மாநகரம். 

பொதுவாகவே அமெரிக்காவின் குடியிருப்புப் பகுதிகளில் இரைச்சல், காட்டுக் கூச்சல், தேவையில்லாத ஆரவாரம், அடிதடி அக்கப்போர்கள் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது யார் இருக்கிறார்கள் என்பது கூட பலமுறை நமக்குத் தெரியாமலேயே இருக்கும். ஒருவரை ஒருவர் தேவை இல்லாமல் அனுமதியின்றி சந்திக்கக்கூட முயல மாட்டார்கள். இவ்வாறிருக்க, தமிழ் தெலுங்கு போன்ற படங்கள் வெளியானால், ரஜினிகாந்த், பாலய்யா, மஹேஷ் பாபு, போன்ற திரை நடிகர்களுக்கு, தனது வீட்டின் உயரத்தையும் மிஞ்சும் வகையில் கட்டவுட் பதாகைகள் வைப்பது, அவற்றிற்கு, பாலாபிஷேகம் தீப ஆராதனை போன்ற சாங்கியங்கள் செய்வது டாலர் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிப்பது போன்ற செயல்களை, சமீபத்திய ஆண்டுகளில் இயல்பாக்கிக் கொண்டு வருகின்றனர் பல இந்திய வம்சாவழியினர். அப்போது "தலைவா..." "தேவுடா..."என்றெல்லாம் உரக்கக் கத்திக் கொண்டு நடனமாடுவதும், மேள தாளங்கள் கொட்டுவதும் கூட நடைபெறத் தொடங்கி ஆண்டுகளாகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவது, வாகனங்களை இஷ்டத்திற்கு நிறுத்தி விடுவது போன்றவையும் இதில் அடக்கம். இத்தனை ஆண்டுகளும் பொறுமை காத்த பல அமெரிக்கர்கள் தற்போது வெறுப்பைக் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். "I want my children to live in America, not India" என்றெல்லாம் பகிரங்கமாக பேசவும் எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 

நம்மவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர்.

"அவர்கள் சொல்வது சரிதான், நாம் தான் அந்த நாட்டின் கலாசாரத்திற்குத் தகுந்தவாறு நமது விழாக்களையும் பண்டிகைகளையும் கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும், அதிக ஆரவாரம் கத்தல் காதைக் கிழிக்கும் சத்தம் எல்லாம் கூடாது. போன இடத்தில் நம் இனத்தின், இந்தியாவின் மானம் மரியாதையை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்" என்ற தீர்க்கமான எண்ணம் கொண்ட சிலர். 

"அமெரிக்கா வந்தேறிகளின் பூமி, இங்கு வெள்ளைக்காரனும் வந்தேறிதான் நானும் வந்தேறிதான், எனக்கு இஷ்டப்பட்டதை எல்லாம் நான் செய்தே தான் தீருவேன், அவன் யார் என்னைக் கேள்வி கேட்க?" என்று முழங்குவதும், தன் குறைகளைச் சுட்டிக் காட்டும் அமெரிக்கர்களை, "நிறவெறி பிடித்தவன், பழுப்பு நிற சருமத்தினருக்கு எதிரானவன்" என்று சாயம் பூசம் செயலையும் செய்யும் அடுத்த வகையினர். 

புதுப்பட வெளியீடுகளின் போது இந்தியர்கள் திரையரங்குகளை சேதப்படுத்துவது உலகெங்கும் நடந்து வருகிறது. இந்தியத் திரைப் படங்களுக்கு திரையரங்கம் தர மறுப்பதும் ஒரு சில இடங்களில் நடந்து தான் வருகிறது. 

என் வெள்ளைக்கார நண்பர் ஒருவர் கூறுகிறார். 

"உங்கள் சினிமா நடிகர்களின் பேனர்கள் மீது நீங்கள் பால் ஊற்றுவதையும் அங்கே பட்டாசு வெடிப்பதையும் டாலர் மாலை போடுவதையும் அவர்களைக் கடவுளாக ஆராதிப்பதையும் பார்க்கும் எங்கள் குழந்தைகளுக்கு இதையெல்லாம் தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது...இது எங்களைச் சூழ்ந்துள்ள ஒரு பேராபத்தாகவே படுகிறது" என்று வேதனை தெரிவித்தார். 

இதெல்லாம் போதாது என்று அண்மையில் சூப்பர் மார்க்கெட்களில் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த சில பல இந்திய பெண்மணிகள் வேறு பிடிபட்டு வருகின்றனர். 

இது போன்ற செயல்களை எல்லாம் நாமாகவே உடனடியாக நிறுத்தா விட்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கப் போகின்றன. எந்த வம்பு தும்புக்கும் போகாமல், எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல், சட்ட திட்டங்களை நேர்மையுடன் கடைபிடித்து, நியாயதர்மத்துடன் வாழும் லட்சக்கணக்கான இந்திய அமெரிக்கர்களும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவது நிச்சயம்.

No comments:

Post a Comment