அவள் விகடன் சேனலில் திருமதி.சுஜாதாவின் விரிவான பேட்டி நான்கு பகுதிகளாக வெளிவந்திருக்கிறது.
பட்டுக்கோட்டை பிரபாகரன் ஐயா, தனது முகநூல் பக்கத்தில் விளாசியுள்ளார். அவர்கட்கு நன்றி. ஒரு காலத்தில் கல்கி, விகடன், குமுதம் போன்ற ஜாம்பவான்கள் தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டாடினார்கள். அவர்களும் வளர்ந்தார்கள்; எழுத்தாளர்களும் வளர்ந்தார்கள்.
ஆனால், இன்றைய தேதிக்கு படுமட்டமான ரசனையுடன், விஷமமாக திருமதி சஜாதாவை பேட்டி எடுத்து , வெளியிட்டு உள்ளனர். ப.கோ.பி அவர்களது பதிவை நன்றியுடன் கொடுக்கப் பட்டுள்து.
_____
உலகமே கொண்டாடும் புகழ் பெற்ற தமிழ் ஆளுமையின் பர்சனல் பக்கம் எப்படியிருக்கும் என்று அறிய எல்லா வாசகர்களுக்கும் ஆர்வம் இருக்கும் என்பதால்.. சுஜாதா கொட்டாவி விடுவாரா, கொசு அடிப்பாரா, அரித்தால் சொறிந்துகொள்வாரா போன்ற அதி முக்கியமான கேள்விகளை மட்டும்தான் கேட்கவில்லை.
கேள்விகளின் நோக்கத்தில் திருமதியிடமிருந்து சர்ச்சையான பதில்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதே நோக்கமாகத் தெரிந்தது.
ஆனால் இதைப் புரிந்துகொள்ளாமல் திருமதி சுஜாதா வெளிப்படையாக உண்மைகளை எதார்த்தமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு தன் கணவரின் பலங்களை விடவும் பலவீனமான அம்சங்களையே பிரதானமாக சொல்கிறார்.
ஒரு வேளை சுஜாதா இன்றிருந்து அவரிடம் இந்தப் பேட்டி பற்றிக் கேட்டால் ஒரு புன்னகையோடு நகர்ந்து விடுவார்.
ஆனால் சுஜாதா என்கிற சிறந்த படைப்பாளியைத் தன் மானசீக வழிகாட்டியாக, ஆதர்ச நாயகராக, அபிமான எழுத்து நட்சத்திரமாக அவர் இருந்தபோதும், இல்லாத போதும் கொண்டாடும் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு இந்தப் பேட்டி வருத்தம் தந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
மாமியார் மெச்சிய மருமகள் இல்லை என்பது போல மனைவி மெச்சிய கணவனும் அபூர்வமே.
சுஜாதா என்கிற அறிவுஜீவி, நவீன சிந்தனையாளர், விஞ்ஞானக் கதைகளில் புதிய உலகம் காட்டியவர், அடுத்த இருபதாண்டுகளுக்குப் பிறகான உலகை, நாகரிக கலாச்சாரப் போக்கைக் கணித்தவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவராகவும் இருந்தேயாக வேண்டுமா என்ன? அவர் சராசரி சிந்தனையாளர் இல்லை. ஆகவே அவர் சராசரி கணவரும் இல்லை. சராசரி அப்பாவும் இல்லை.
நான்கு பகுதிகளிலும் சொன்ன பதில்களில் சுஜாதாவின் இரக்கம், மனிதநேயம், பணத்திற்கு அடிமையாகாத தன்மை, ஆடம்பரத்தை விரும்பாத எளிமை இதெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அவற்றை அவரின் வெகுளித்தனம், குடும்பத்தின் மீதான அக்கறையின்மை, ஒரு வகை அலட்சியப் போக்கு, ரசனை குறைபாடு போன்ற பெரிதுபடுத்த அவசியமற்ற குடும்பத்தின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் ஓவர் ஷேடோ செய்துவிட்டன.
திருமதி சுஜாதா தன் கணவரைப் பற்றி வெளிப்படையாகப் பேச உரிமை இருக்கிறது. அது ரசனைக்குரியதா என்பதே பலரின் கேள்வி. சுஜாதா அவர் கணவர் மட்டுமல்ல, இரண்டு மகன்களின் அப்பாவும்கூட. அவர்களின் வாரிசுகளுக்கு தாத்தாவும்கூட. அவர்கள் இந்தப் பேட்டிகளைப் பார்த்தார்களா, அவர்களின் கருத்தென்ன என்று அவள் விகடன் விரைவில் ஒரு பேட்டி கண்டு வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு..
சுஜாதாவின் தீவிர ரசிகர்களில் ஒருவனாக வருத்தத்துடன் நான்.
___
'சுஜாதா' என்ற பெயரே அதிகமான வ்யூவர்ஸைக் கொடுக்கும் என்ற காரணத்தாலேயே, சுஜாதாவை, சுஜாதாவை மூலமே கேவலமாக சித்தரித்துள்ளது விகடன்.
இந்த நுணுக்கம் தெரிந்தே , விகடன் ஆசிரியர் குழுமம் விஷமத்தனமாக வெளியிட்டுள்ளது.
லெகண்டரி எழுத்தாளர்களைக் கொண்டாடாவிட்டாலும், சிறுமைப் படுத்துவது என்னவிதமான சாக்கடைச் சிந்தனை? சிறுமதி படைத்த விகடன் .
No comments:
Post a Comment