இந்த தலைப்பு குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், கவலையையும் பதிவிட்டு விட்டனர். சமூக பிரக்ஞை உள்ள அனைவரையும் அசைத்துப் பார்த்து விட்ட தலைப்பு.
சென்ற மாதம் கர்நாடகாவில் நிகழ்ந்த தொடர் இளம் வயது மரணங்கள் விவாதமாகியது. அப்புறம்? வேறு எதுவும் நிகழவில்லை. இரண்டு நாட்கள் பதறிவிட்டு , பின் மறந்தும் விட்டனர்.
உணவுப் பழக்க மாற்றம், நம் தலைமுறையின் மீது இறங்கும் ஒரு மெல்லிய கத்தி.
இந்திய கலாச்சாரத்தில் 'சமையல்' அலாதியான இடத்தைப் பிடித்திருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொரு விசேடத்திற்கும் தனித்தனியான பிரத்தியேக உணவு - தின் பண்டம் இருக்கும்.
காப்பரிசி, புட்டு, பொருளங்காய் உருண்டை, ஆடித் தேங்காய் , தினுசு தினுசாக பாயசங்கள், பலகாரங்கள், கொழுக்கட்டைகள், முறுக்கு - சீடை வகைகள், இனிப்பகள்... எண்ணி மாளாது.
உள்ளூரில் விளையும்-கிடைக்கும் பொருட்களை வைத்தும், கால நிலைக்கும் ஏற்றவாறு சமையல் வடிவமைக்கப் பட்டிருக்கும்.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில், நமது உணவுப் பழக்கம் முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. கண் முண்ணாலேயே சீரழிவு துவங்கி விட்டது.
இன்று 24 மணி நேரமும் பிரியாணி, சிக்கன், மீன் — எது வேண்டுமானாலும் தயார். ஆனால் இது எப்படி சாத்தியம்? இரவும் பகலும் ஆடு, மாடு, கோழிகளை வெட்டிக் கொண்டே இருப்பார்களா? டீப் ஃப்ரீசரில் குவித்து வைக்கிறார்களா? இல்லை.
நகரம் மட்டுமல்ல, சிறிய ஊர்களிலும் இன்று காலை ஆறு மணி முதல் இரவு பதினொன்று மணி வரை பிரியாணி எளிதாகக் கிடைக்கிறது.
ஆரோக்கியம் குறித்து பயம் இல்லை. விழிப்புணர்வு இல்லை. பசி தீர்க்கும் பொருட்டல்ல, trendடுக்காக தான் இன்றைய உணவுக் கலாச்சாரம்.
KFC, McDonald போன்ற நிறுவனங்கள் விதைத்த விதை இன்று பல தலைமுறைகளின் தட்டில் வேரூன்றியிருக்கிறது.
இதன் விளைவாக, இளம் தலைமுறையினர் கூட இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளால் தவிக்கின்றனர். நம் கண்முன்னே பலர் திடீரென உயிரிழந்தாலும், சமூகத்தில் எந்தப் புத்திச் சுடர் ஏற்றப்படுவதில்லை.
மசாலாவை அள்ளி கொட்டி, கொதிக்கும் எண்ணெயில் வறுத்து வைத்தால், அழுகிய உணவையே கூட மக்கள் சுவையாக விழுங்குகிறார்கள். இது வெறும் பழக்கம் அல்ல — ஒரு ஆபத்தான அடிமைத்தனம்.
இந்த உணவுப் பழக்கத்தின் தாக்கம் வெறும் உடல் நலத்தில் மட்டும் முடிவதில்லை.
குடும்பத்தின் பொருளாதாரத்தையும் அது மெதுவாக சுரண்டிக்கொண்டு வருகிறது.
ஒரு குடும்பம் மாதத்திற்கு மருத்துவச் செலவிற்காக செலவிடும் தொகை, கல்வி அல்லது சேமிப்பிற்கு செலவிடும் தொகையைவிட அதிகமாகிவிட்டது.
ஒருகாலத்தில் சமையலறை வீட்டு இதயம். இன்று அது வெறும் பாத்திர அலமாரியாகி விட்டது.
அம்மாவின் கையால் சமைத்த சத்தான உணவின் வாசனைக்கு பதிலாக, பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து வரும் “டேக்-அவே” வாசனையே நம் குழந்தைகளின் நினைவாகி வருகிறது.
மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
வயதுக்கு முன்பே இருதய அறுவை சிகிச்சை, இன்சுலின் ஊசி, கொழுப்பு குறைக்கும் மாத்திரைகள் — இவை இன்றைய இளம் தலைமுறையின் “சாதாரண வாழ்க்கை” ஆனது.
இதை ஒரு சமூகப் பேரழிவாக யாரும் அறிவிக்கவில்லை, ஏனெனில் இந்த பேரழிவின் சத்தம் சில்லறை சட்னி கிண்ணங்களிலும், வறுத்த மசாலா வாசனையிலும் மூழ்கிக் கிடக்கிறது.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு தவறான உணவும், நம் எதிர்காலத்தின் ஒரு சிறிய துண்டை நசுக்கிக் கொண்டிருக்கிறது.
இது வெறும் உணவுப் பழக்கமல்ல — இது நம் தலைமுறையின் உயிர்நாடியை வெட்டும் ஒரு மெல்லிய கத்தி.
இதன் தோற்றம், நகர்மயமாக்கலில் துவங்கியது. நகரங்கள் வளர, மக்கள் வேலை நேரம் நீள, வீட்டு சமையல் குறைகிறது; வெளியே சாப்பிடுதல் அல்லது வீட்டுக்கு உணவு ஆர்டர் செய்வது அதிகரிக்கிறது.
உலகளாவிய ஃபாஸ்ட்-புட் பிராண்டுகள் – KFC, மெக்டொனால்ட்ஸ், டொமினோஸ், ஸ்டார்பக்ஸ் போன்ற சங்கிலித் தொடர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் பரவியுள்ளன; இதனால் உள்ளூர் உணவுப் பழக்கங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைத்து வந்த, உடனே சாப்பிடக் கூடிய உணவுகள் இப்போது எங்கும் கிடைக்கின்றன.
நம் நாட்டைப் போலவே, பாரம்பரிய சமையல் கலாச்சாரம் கொண்ட நாடுகளிலும், மக்கள் முழு நாளும் விற்கப்படும் விரைவான, அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கு மாறி வருகின்றனர்.
சுகாதார தாக்கம் – அதிக எடை, டைப் 2 வகை நீரிழிவு, இதய நோய் போன்றவை இப்போது ஒரு நாட்டின் சிக்கலாக இல்லாமல், உலகளாவிய பிரச்சினைகளாகக் கருதப்படுகின்றன.இந்தியாவில் மாறுபாடு என்னவெனில், மாற்றத்தின் வேகம் மிகவும் அதிகம் — பாரம்பரிய சமையல் பழக்கங்கள் கடந்த பத்தாண்டில் திடீரென மாறிவிட்டன.
சிறிய நகரங்களிலும் வருடம் முழுவதும், நாள் முழுவதும் விரைவு உணவகம் சேவை சர்வ சாதாரணமாகி விட்டது. இது பிற பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகம்
மசாலாவை கொட்டி, எண்ணையில் பொரிக்கும் வகைதானே ஃபாஸ்ட்-புட்? பாரம்பரிய உணவைக் காட்டிலும் பன் மடங்கு அதிக கலோரிகளைக் கொடுப்பவை இவை என்பதை எப்பொழுது புரிந்து கொள்வார்களோ?
No comments:
Post a Comment