Tuesday, February 17, 2015

மாற்று மருத்துவம்

“ஃபேஸ்புக்” கில் பரிந்துரைக்கப் படும் மாற்று மருத்துவ முறைகளைப் பற்றி, ஒருமுறை எழுதிவிடுவது நல்லது என நினைக்கிறேன்.

தற்பொழுது, ஒரு நாளைக்கு ஒரு பத்து பேராவது, சகலவிதமான நோய்களுக்கும் மாற்று மருத்துவ முறைகளைப் பற்றி எழுதுகிறார்கள். 

எழுதுகிறார்கள் என்று கூட சொல்ல முடியாது.  காப்பி பேஸ்ட் செய்கிறார்கள். இவர்களில் கனிசமானோர் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அல்லர். செவி வழி பாட்டி மருத்துவ குறிப்புக்களே! 

குறிப்பாக, சிறுநீர்க் கற்கள், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை  நோய் போன்றவற்றிற்கான தீர்வுகள் மிக  அதிகமான வருகின்றன. 

ஏன், புற்று  நோய்க்குக் கூட மருந்து சிபாரிசு செய்கிறார்கள்.

மாற்று மருத்துவ முறைகளில் இருக்கும் பிரச்சினை என்ன வென்றால், தங்களால் தீர்க்க முடியாத வியாதிகளே இல்லை என கூறிக் கொள்வதுதான். இது தவிர அல்லோபதியை திட்டித் தீர்ப்பதும் நடக்கும்.

மாற்று மருத்துவ முறைகளில் பலனே இல்லை என்று சொல்லக் கூடாது. 

ஆனால், பெரும்பாலும் அவை ஆராய்ச்சிக்கு உட்பட்டதில்லை.  ஒரே மாதிரி நோய்வாய்ப்பட்ட இரு மனிதர்களுக்கு மாற்று மருத்துவ முறையில் ஒருவருக்கும், ஆங்கில மருத்துவ முறையில் ஒருவருக்கும் சிகிச்சையளித்து, அதில், மாற்று மருத்துவ முறை தன்னை நிரூபித்துக் கொண்டால் மட்டுமே, அது நிரூபணமானதாகும்.

தற்போது, முகனூலில் நடப்பது என்னவென்றால், எங்கோ ஒருவர் எழுதியதை, குஷாலாக, காப்பி – பேஸ்ட் செய்வது தான்.

வெளினாட்டு பாதிரியார் ஒருவர், சோற்றுக் கற்றாழை புற்று நோயைத் தீர்க்கலாம் என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகமே என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரே தனது முன்னுரையில் – இந்த முறை  நவீன சிகிச்சைக்கு மாற்று அல்ல என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதை தமிழ்ப் படுத்தி, நூறு ரூபாய்க்கு புற்று நோய் தீரும் என யாரோ ஒருவர் எழுத, அதைக் காப்பி பேஸ்ட் செய்து ஒரு கோஷ்யே அலைகிறது. 

அது மாத்திரம் அல்ல. சர்க்கரை நோய்க்கு வெந்தியம்-கொத்தமல்லி, அப்புறம் ஒரு செடி, வெண்டைகாய் மருந்து, பீன்ஸ் மருந்து என பலவும் சொல்லித் திரிகிறார்கள். சிறுநீர் கற்களுக்கும் கணக்கிலடங்கா முறைகள் சொல்கிறார்கள்.

இவையாவும் ஸ்டேன்ட் அலோன் ட்ரீட்மென்ட் அல்ல.. துணை நிற்கும் உபாயங்களே.. 

இந்த காப்பி & பேஸ்ட் இன்டெர்னெட் டாக்டர்களின் பேச்சை நம்பி, எத்துனை பேர் தங்களது உடலை கெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.  

நீங்கள் கூட படித்திருக்கக் கூடும்.. சில நாள் முன்பு, சில நாட்கள் மருந்து சாப்பிட்டாலே, சர்க்கரை நோய் தீரும் என வட மானிலத்தில் ஒருவர் சொன்னதை நம்பி, அங்கே கொடுத்த மருந்துகளை விழுங்கிவைத்து, பின் சர்க்கரை 500-ஐ தாண்டிப் போக, அபாயகரமான நிலையில் மருத்துவ மணையில் சேர்க்கப் பட்டார்.

முகநூலில் தாங்களும் ஏதாவது சொல்கிறோம் பேர்வழி என எதையாவது சொல்லித் திரிவதா? அவர்கள் நோயாளிகளின் உயிருடன் விளையாடு கிறார்கள் என்பதாவது தெரிகிறதா இல்லையா எனப் புரியவில்லை.

சொல்வது யாராவது தேர்ச்சிபெற்ற மருத்துவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. சும்மா ஃபார்வேர்ட் செய்யும் கோஷ்டிகள். ஏதேனும் சந்தேகம் கேளுங்கள்? பதிலே வராது – அல்லது சொல்லத் தெரியாது. 

சும்மா சித்தர்கள்-முனிவர்கள் என்பது போல, மரியாதைப் பட்டவர்களின் பெயர்களை வைத்துக் கொண்டு ஜல்லியடித்தால் எப்படி?

ஆங்கில மருத்துவம் மட்டுமே உயர்வு என்று சொல்லவில்லை. குறைந்த பட்சம் எங்களால் தீர்க்க முடியாத வியாதிகள் என, அவர்கள் லிஸ்ட் சொல்லி விடுவார்கள். 

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது வேறு. வணிகம் என்பது வேறு. விஞ்ஞானம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைப் பயன்படுத்தி எப்படி காசு பார்ப்பது என்பது வணிகம். பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கிறார்கள். அது விஞ்ஞாணம். அதை வைத்துக் கொண்டு பணம் பண்ணும் மருத்துவ கம்பெணிகள் அதிகம். (சில சமயம் மருந்துக்காக நோய்களை உண்டு பண்ணுகிறார்களோ என சந்தேகம் கூட வருகிறது)

தற்போது அல்லோபதியைக் கண்டு, மக்கள் அலறுவதின் காரணம் அவர்கள் காசேதான் கடவுளடா என்று இருப்பது தான். கிளினிகலாக டயக்னோசிஸ் செய்யக் கூடிய வியாதிகளுக்குக் கூட பல்லாயிரம் ரூபாய் செலவுக் கணக்கில் பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. 

ஆங்கில,  நோய் கண்டுபிடிக்கும் முறைகளும்-மருந்துகளும் சாதாரண மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டு போய்விட்டன,. எனவேதான் ஜனங்கள் மாற்று மருத்துவ முறைகளை நாடுகின்றனர். 

மக்களின் இந்த பீதியை பயன்படுத்திக் கொண்டு, மாற்று மருத்துவ முறைகளில் காசு செய்யும் கோஷ்டிகளும் பல இருக்கின்றன. 

சில தினசரி பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். அப்பப்பா... எத்துனை விளம்பரங்கள்? ‘வாலிப வயோதிக அன்பர்களே.. ‘ முதற்கொண்டு, இரத்தக் கொதிப்பு – சர்க்கரை உட்பட, பல நோய்களுக்கும் தீர்வு சொல்லி, மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு, எப்படி வியாபாரம் செய்கின்றனர்  என்பது புரியும்.

இம்மாதிரியான லாட்ஜ் டாக்டர்களைப் போல ஆரம்பித்துவிட்டனர், இந்த முகனூல் போலி டாக்டர்கள். 

சர்க்கரை 500-ஐத் தாண்டும் பொழுது கூட, தனக்கு ஒன்றும் இல்லை என நாமாகவே நினைத்துக் கொண்டால் சரியாயிற்றா? பரலோகம்தான் போக வேண்டும்.

ஒரு இண்டகரேட்டட்  மருத்துவ முறை இருந்தால், நல்லது. அதாவது அல்லோபதி-மற்றும் மாற்று மருத்துவ முறைகளை இணைத்து செயல்படுத்தப் படும் முறை. சைனாவில் இது போல செய்கிறார்கள் என்று கேள்வி.. உண்மை தெரியவில்லை.

இனி,

அடிப்படையில், ஆரோக்கியம் பல விஷயங்களை ஆதாரமாகக் கொண்ட்து. 

1. நமது வாழ்க்கை முறை.

2. உணவுப் பழக்க வழக்கம்-மற்றும் உண்ணும் முறை.

3. ஹெரிடிட்டரி.

4. சுற்றுச் சூழல்.

5. செடன்டரி லைஃப்.

6. நமது எண்ணங்கள். (சதா எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருந்தால், என்ன மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது)

குப்பை உணவுகளைத் தவிர்த்து, மனதில் நல் எண்ணங்களை வளர்த்து, சோம்பித் திரிவதைத் தவிர்த்து, முறையாக ஒரு யோகா மாஸ்டரிடம் யோகா பயின்று, பசித்த போதுமட்டும் உண்டு, மலச் சிக்கல் இல்லாமல் பழகி, ஏழு மணி நேரம் உறங்கி வந்தாலே பல நோய்கள் அண்டாது.

யோகா கூட, துணை முறையாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர, அதை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தின்பேன்; எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்; ஆனால் அரை மணி நேரம் யோகா செய்தால் போதும் என்றால், அவர்களைப் பார்த்து, சிரிக்காமல் வேறு என்ன செய்வது?

இது ஒருபுறம் இருக்க, இப்பதிவின் நோக்கம், இன்று வெறும் வயிற்றில் இள நீர் சாப்பிட்டால், இரத்த நாளங்கள் வெடிக்கும்; ஃபுட் பாய்ஸின் ஆகும் என ஒருவர் பயமுறுத்தி யிருந்தார். 


இளனீர் விஷம் அல்ல; அது ஃபுட் பாய்ஸின் ஆகாது.   எது சாத்தியம் என்றால், ஏற்கனவே ஆசிட் ரெஃப்லெக்ஸ் உள்ளவர்களுக்கு,  நெக்லிஜிபில் அளவுக்கு, வயிறு உப்புசம் ஆகக் கூடும். அவ்வளவே! ஏனெனில் இளனீரின் பி.ஹெச். வேல்யூ 4.2 விலிருந்து 5.3 வரை இருக்கும். அதாவது ஸ்லைட்லி அஸிடிக். மற்றபடி இளநீர் உடலுக்கு மிக நல்லது.

காப்பி – பேஸ்ட் ஆசாமிகளை தவிர்க்க இயலாது. ஆனால் நாம் விழிப்புணர்வோடு இருக்கலாம் அல்லவா?

உண்மையில், விந்தை புரியும் மூலிகைகள் இருக்கின்றன. தகுதியான ஆட்களிடம் கேட்டு/பயின்று பலன் பெறுவோம்.



Sunday, February 15, 2015

ஒரு நாள்... ஒரு இரவு...

13/02/2015. இரவு ஒரு மணி இருக்கும். வயிற்றில் ஏதோ சங்கடம் போலத் தோன்றவே விழிப்பு ஏற்பட்டு விட்டது. வாமிட் செய்யவேண்டும் போல உணர்வும் தோன்றியது. முந்தைய நாள் இரவு கூட, எப்பொழுதும் போல எதுவும் உண்ணவில்லையே! ஒத்துக் கொள்ளாமல் போவதற்கு வாய்ப்பே இல்லையே என்ற சிந்தனையோடு, லேசாக கண்விழித்துப் பார்த்தேன்.

தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும் ஃபேன், சடாரெனெ எனக்கு இடது பக்கமும் திடீரென வலது பக்கமும் சழன்று கொண்டிருப்பது போன்ற உணர்வு. சற்றே தலையை திருப்ப முயல, எக்ஸார்ஸிஸ்ட் படத்தில்  வருவது போல, கட்டிலே படுக்கையறையின் உச்சிக்கும் கீழுக்குமாக பேய்ச்சுற்றல் சுற்ற ஆரம்பித்தது. கண்களில் கிங்கரர்கள்  தென்பட ஆரம்பித்தனர்.

ஆஹா... தலை சுழலுகிறதே.. வாஷிங் மெஷினில் போட்டு சுழற்றுவது போல, அனைத்தும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

சட்டென தலையனையை விலக்கி, கட்டிலை இருக்கப் பிடித்துக் கொண்டு, அமைதியாக இருக்க முயல,  தலைக்குள் நிகழ்ந்த பூகம்பம், சில நிமிடங்களில் ஒரு நிலைக்கு வந்தது. 

சரி... பாத்ரூமிற்குப் போகலாம் என நினைத்து, அவசரப்பட்டு எழுந்து  நின்று கொள்ள யத்தனிக்க, நான்கு அடி தூரத்தில் இருக்கும் பாத்ரூமினுள், கதவை முட்டித்தள்ளி தூக்கி வீசப்பட்டேன். யார் என்னைத் தூக்கி வீசியது என்பதை உணருவதற்குள் லேசாக மயக்கமும் ஏற்பட்டது. பாத்ரூம் என்னைச் சுற்றி சுழன்றது. நல்ல வேளையாக பைப்களில் தலை மோதவில்லை. அவசரப்பட்டு எழுந்து நின்றதில்தான் பிரச்சினை என்பதை உணர்ந்து,  பாத்ரூம் வேலைகளை நிதானமாக முடித்துக் கொண்டு, உட்கார்ந்த நிலையில் தவழ்ந்த வண்ணம், மெல்ல, மெல்ல வாசற்கதவை நோக்கி நகர்ந்தேன்.

உதவிக்கு யாரையேனும் அழைத்தாலும், அவர்கள் வீட்டினுள் நுழைவது எங்கனம்? அல்லது வேறு எதேனும் நிகழ்ந்து விட்டால், நிகழ்ந்தது வெளியே தெரியவே இரண்டு நாளாகி, உடல் நாற்றமடிக்க ஆரம்பித்து விடுமே என்ற அச்சம் வேறு. எனவே, அங்குலம் அங்குலமாக எழுந்து, வாசற் கதவைத் திறந்துவைத்துவிட்டு, அருகிலேலேயே இருக்கும் சோஃபாவில் சயனித்துக் கொண்டேன். காலை ஏழுவரை, ஒரு ஃபுல் அடித்தாற்போல முழு பிரக்ஞையும் இல்லாமல், முழு நிதானமும் இலாமல் கழிந்தது.

பின்னர் எனது  வடை நன்பரை கூப்பிட்டு, நடந்தவற்றை விளக்கி, ‘எந்த டாக்டரை அணுகலாம்?  நியூரோவா, ஆர்த்தோவா அல்லது ஜெனரல் பிஸிஷனா?’ எனக் கேட்டேன்.

“இம்மாதிரியான தலைச் சுற்றலுக்கு, காதில் பிரச்சனை அல்லது எனது முப்பது வருட சினேகிதன் செர்வைகல் ஸ்பான்டிலைடிஸ் அல்லது ஹை பி.பி இவற்றில் ஏதாவதோ ஒன்றோ அல்லது இதைத் தவிர்த்து வேறு இருக்கக் கூடுமோ” என்று வினவ,

‘ஓய்... உமக்கு என்ன, டாக்டர் என்ற நினைப்பா? எல்லாவற்றையும் நீரே தீர்மாணித்துக் கொள்வீரா? அதெல்லாம் டாக்டரின் வேலை!  அது கிடக்கட்டும், நீர் நேற்று என்னத்தை விழுங்கி வைத்தீர்? அன்று செய்தது போல, ஏதாவது வடை-கிடை  தின்று வைத்தீரா?’

‘அட.. அதெல்லாம் ஒன்றுமில்லை.. நேற்று உணவு ஏதும் கொள்ள வில்லைங்கானும்...’

நுணலும் தன் வாயால் கெடும். ‘அதாங்கானும் பிரச்சினை.., என்னத்தை யாவது தின்று வைப்பதுதானே?’

அட, பசி மயக்கத்திற்கும், இந்த தலைக்குள் நிகழும் சுனாமிக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது.. அதெல்லாம் காரணம் இல்லை.

“பேசாமல், அங்கேயே இரும்.. இன்னும் சற்று நேரத்தில் அங்கு வருகிறேன்”

இரு நன்பர்கள் புடை சூழ, கையில் ஒரு பி.பி மானிட்டரை எடுத்துக் கொண்டே வந்து சேர்ந்தார். பி.பி நார்மல்.

அவருக்கு பல மருத்துவர்களை தனிப்பட்ட முறையிலே நன்கு தெரியும். எனவே, திருப்பதி தரிசன கூண்டுகளையும், பாரதிராஜா படத்தில் வருவது போல, ஏழு கதவுகளைத் திறந்து கொண்டு அதன் பின் மூலவர் தரிசனம் கிடைக்கப் பெறும், கடலூர் சம்பிரதாயங்களை மீறி, எளிதாக டாக்டரை சந்திக்க முடிந்தது. 

நடக்க ஆரம்பித்தால், தரை சடாரென பத்தடி கீழேயும், அடுத்த நொடி, நெஞ்சுக்கு நேராகவும் வருவதுபோல இருந்தால் நடப்பது எப்படி?  நன்பர்களுக்கு முன் ஏதேனும் ‘சீன்’ போடுவது போலாகிவிடுமோ என பயந்து கொண்டு, தியான முறைகளைக் கைக் கொண்டு, சர்வ நிதானமாக அடியெடுத்து வைத்தேன்.

இவருக்கு, மூளையையும், கழுத்தையும் எம்.ஆர்.ஐ எடுக்கனும். ஆனால் இந்த மனிதர் இருக்கும் நிலையில், முக்கால் மணி நேரம் அந்த மெஷினுக்குள் படுக்க இயலாது. எனவே, தலைச் சுற்றலைக் கம்மி செய்ய மாத்திரை தருகிறேன். நாளை ஸ்கேன் எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை தந்து, ஒரு டெக்கட்ரான் இன்ஜெக்ஷனையும் சில மாத்திரை களையும் அளித்தார்.

என்ன விந்தை? இன்ஜெக்ஷன் செலுத்தப் பட்ட மறுகணம், உலகு ஒரு நிலைக்கு வந்து விட்டது.

கொண்டுவந்து வீட்டில் விட்டுவிட்டு, ‘எதையாவது தின்று தொலையும்.. சாப்பிடாமல் இருந்தால் இப்படித்தான்’ என்ற உபதேச மழையோடு, சென்றனர்.

‘உடல், பசித்தால் தானே கேட்கும். பசிக்காத போது உண்ணுவதும், தாகம் எடுக்காத போது நீர் அருந்துவதும், தூக்கம் வரும்பொழுது தூங்காமல் இருப்பதும் தான் பிரச்சினைகளின் துவக்கம்’ என்பதை இப்பொழுது சொன்னால் அடிவிழும் என்பதால், வாயை மூடிக்கொண்டு, சரி.. சரி.. என்றேன். எனது ஒரு நன்பரே உணவை கொண்டுவந்து வைத்து விட்டு சென்றுவிட்டார்.

மாலை வரை அனைத்தும் சுகமே..

நினைத்துப் பார்த்தேன். இந்த உபாதைகளுக்கு எத்துனை தடவை, எத்துனை பேரிடம் சிகிச்சை பெறுவது?

ஒரு பத்து வாரம் விடாமல் திருச்சியில் ‘அக்கு டச்’.
பத்து வாரம் ஆயுர்வேதம்.
சில மாதம் சித்தா..
பயன்தான் பெரிய பூஜ்யம். ஆரம்பத்தில் சரியாவது போல போக்கு காட்டிவிட்டு, பின் ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக உள்ளதே..

அல்லோபதி வேண்டாம் என நினைத்தாலும், மாற்று சிகிச்சை முறைகளில் தீர்வு கிடைக்காததால், விரும்பாவிட்டாலும் அவர்களிடமே செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப் படுகிறேன்.

மாலையில், மறந்து போய், சட்டென சோஃபாவிலிருந்து எழுந்து கொள்ள, பத்தடி தூரத்தில் இருக்கும் மற்றொரு சோஃபாவிற்கு, தூக்கி எறியப்பட்டது போல, தலை சுற்றி, அந்தகால திரைக் கதாநாயகிகள், மயக்கம் வந்தாலும் சௌகரியாமாக, கட்டிலில் விழுந்து வைப்பது போல, விழுந்து வைத்தேன்.

‘அட முட்டாளே.... நிதானமாக எழவேண்டும் என்ற புத்தி கூடவா இல்லை?’ என என்னை நானே சபித்துக் கொண்டு நிதானித்தேன்.

14/2/15. காதலர் தினம். எனதன்பு மனைவின் படத்திற்கு முன்னால், ‘என்னால் இயன்ற அளவு, இறுதிவரை உனக்கு பணிவிடை செய்தேன்.. இப்பொழுது நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்? இனிமேலும் என்னை சோதிக்காதே..’ எனப் பிரார்த்திக் கொண்டு, அதே மருத்துவ மணையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தேன்.

‘மூளையில் ( நல்ல வேளை.. அது மிஸ்ஸிங்.. என சொல்லவில்லையே) ஒன்றும் பிரச்சினை இல்லை.. செர்வைகல் பிராப்ளம்தான்.. சட்டென திரும்பவது.. டூவீலர் ஓட்டுவது போன்றவற்றை தவிர்க்கச் சொல்லும் ‘ரொட்டீன்’ அறிவுரைகள்.

இம்மாதிரியான பிரச்சினைகளை, கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவ மனையில் சரி செய்கிறார்கள் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கி றார்களாம். இம்மாத இறுதியில் அங்கு செல்வதாக உத்தேசம். கழுத்து எலும்பு தேய்ந்து, அதனால் வரும் இம்மாதிரியான உபாதைகளுக்கு, தீர்வு இல்லையா என்ன?

சிலசமயம் துரதிர்ஷடம் துரத்தி வந்தாலும், பண்புகெட்ட காரியங்களை கூசாமல் செய்யும் மனிதர்கள் நிறைந்த இக்காலத்தில், சீர்மிகு நன்பர்களைப் பெற்றிருப்பது எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ தெரியவில்லை. அவர்களுக்கு என் வந்தனங்கள்.

Wednesday, February 4, 2015

The Secret of Old Age



The Secret of Old Age

Before Middle age – Do not fear..
After Middle age – Do not regret..

Enjoy your life – While you can..
Do not wait till you cannot even walk  Just to be sorry and to regret!
As long as it is physically possible, visit places you wish to visit

When there is an opportunity,
get together with old Classmates,
Old colleagues and old friends,
The gathering is not just about eating;
It’s just that there is not much time left…

Money kept in the banks may not be really yours,
When it is time to spend, just spen!

Treat yourself well as you are getting old..
Whatever you feel like eating, just eat
It most important to be HAPPY!!

Foods which are good for health – eat often 
And more but that is not everything,
Things which are not good for health – eat less once a while
But do not abstain from them totally!

Treat sickness with optimism,
Whether you are poor or rich,
Everyone has to be go through birth, aging, sickness and DEATH
There is no exception, that is life!

Do not be afraid or worried when you are sick,
Settle all the outstanding issues before hand 
and you will be able to leave without regret.

Let the doctors handle your body,
Let God / Nature handle your life!
But be in charge of your own moods

If worries can cure your sickness – then go ahead and worry!
If worries can prolong your life – then go ahead and worry!
If worries can exchange for happiness, then go ahead and worry!

Our kids will make their own fortune..

Look after four treasures:
1. Your ld body – pay more attention to health – 
         you can rely on yourself on this!

2. Retirement funds- money that you have earned,
         It is best to keep them yourself!

3. Your old companion – 
         treasure every moment with your other half,
         one of you will leave first!

4. Your old friends – seize every opportunity to meet up with your                  
         friends, such opportunities will become rare as the time goes by..

Things you must DO everyday..SMILE AND LAUGH..

Running water does not flow back.  So it is with life, make it happy,

முதுமையின் ரகசியம்...


எனதன்பு முதிய நண்பனே! முதுமை கண்டு அஞ்சவேண்டியதில்லை;
பிறப்பதும், வயதாவதும்,நோய்வாய்படுவதும், மரணிப்பதும் இயல்பான ஒன்றே!இவை ஏதும் உனக்கு மட்டுமே நடக்கும் பிரத்தேயேக நிகழ்வல்ல!
 சற்றே கண்களைத் திறந்து பார்...ரசிக்க வேண்டியவை உலகில் கொட்டிக் கிடக்கின்றன..சப்தமின்றி மலரும் பூக்களை ரசி!சலிப்பின்றி ஆர்பரிக்க்ம் கடலை ரசி!மௌன பிரம்மாண்டமான மலைகளை ரசி!தத்தித் தவழும் ஓடைகளையும்,
சீறும் ஆறுகளையும் பார்..மரகதக் காடுகளையும், அதன் மடியில் விளையாடும் விலங்குகளையும் பார்..ரசிக்க வேண்டியவை உலகில் கொட்டி கிடக்கின்றன.. நடந்தவை குறித்து வருந்தாதே!அதனால் பலனேதும் இல்லை..ஆயுளின் பாதிக் கிணறு தாண்டும் வரை எதற்கும் அஞ்சாதே!தாண்டியபின் நடந்தவை குறித்து வருந்தவும் செய்யாதே! நேற்றும் – நாளையும் உன்னுடையதல்ல! 
கடந்தவையாவும் உன் விருப்பம் போல அமையாமல் இருந்திருக்கக் கூடும்!

நடக்கவிருப்பதற்கும் எவரும் உத்தரவாதம் இல்லை! எனினும். இக்கணம் உண்ணுடையதுதானே!
ருசித்து வாழ்.. கோலூன்றுவதற்கு முன்னரே, பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிடு,

கேட்க வேண்டியவற்றை கேட்டுவிடு..உன்னால் முடியும் பொழுதே..... வாழ்வை சுவைத்துக்கொள்-நேர்வழியில்!

தளர்ந்தபின் வருந்தியும் - விரும்பியும் பலனில்லை நன்பா!

 இதுவே சந்தர்ப்பம்.. உன பள்ளித் தோழனைப் பார்..கல்லூரி நட்பைத் தேடிப்பார்..உன்னிடம்-உன்னோடு வேலை செய்தவர்களை நாடிப்பார்..அவை உண்டு களித்து கலைவதற்கு அல்ல..நினைவுகளை அசைபோடு..மலரச் செய்.. இதோ... உன் கண் முண்ணே காலம் கரைந்து கொண்டிருக்கிறது..முடிவு எப்போதும் வரலாம்..இக்கணம் விட்டால் எக்கணமும் இல்லாமல் போகலாம்..அதற்குள் அவர்களைப் பார்த்துவிடு.. ஆடி ஓடி சேர்த்து வைத்த பணம் யாவும்உண்ணுடையது என எண்ணாதே.. போகும் பொழுது உன் அரஞாண் கயிற்றைக் கூடஅறுத்துத் தான் புதைக்கப் போகிறார்கள்.உணர்ந்து கொள்..கொண்டு போவது யாதொன்றுமில்லை.. தேவைப் படும் பொழுது உனக்காக செலவழிக்கத் தயங்காதே..இலவு காத்த கிளியாகாதே.. முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்..இக்கணம் மகிழ்ச்சியாக இருக்கிறாயா?
அதுவே வாழ்வின் பொருள்..! நல்லனவற்றை அடிக்கடி உண்.. அது நல்லது..விருப்பமானவற்றை விலக்கி விடாதே.. குறைவாக உண்.. நோய் வரட்டும்.. நம்பிக்கையோடு எதிர்கொள்..நோய் வராதவர் யார்?
தாய் கொண்டுவந்ததை நோய் கொண்டு செல்வது புதியதல்லவே?நீ மட்டும் விலக்கா என்ன?வாழ்வே அதுதானே? உடலுக்குமட்டுமே மருத்துவர்.. ஆன்மாவுக்கு இறைவனே! உன் சந்தோஷத்திற்கு நீ மட்டுமே பொறுப்பாளி!இது இருந்தால் மகிழ்வேன்.. அது கிடைத்தால் மகிழ்வேன்.என மகிழ்ச்சிகு  நிபந்தனைகள் விதிக்காதே..அப்படி ஒன்று உலகில்  நடக்கவே நடக்காது! கவலைப் பட்டால், வலி தீரும் எனில் தாராளமாக கவலைப் படு..கவலைப் பட்டால் சந்தோஷம் வரும் எனில் தாராளமாக கவலைப் படு..கவலைப் பட்டால் வாழ்வு நீடிக்கும் எனில் தாராளமாக கவலைப் படு..உனக்கே புரியும்,  எது சரியென.. வார்சுகளுக்காக  கலங்காதே..செய்ய வேண்டியது என்ன வென்று அவர்களுக்குத் தெரியும்..அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்.. உனக்கான கடமைகளை விரைந்து முடி...சிக்கல்களைத் தீர்த்துக் கொள்.. விடாப்பிடியாக சினம் கொண்டிருப்பவர்களையும்,உன்னை அவமானப் படுத்திப் பார்ப்பதில் மகிழ்வோரும் இருப்பர்அவர்களைப் புறம் தள்ளு.. அனைவரையும் மன்னிக்கக் கற்றுக் கொள்..அன்பு ஒன்றே அனைத்தையும் வெல்லும்... நான்கு மந்திரங்களை மறக்காதே.. 1.       உடல் நலத்தைப் பேண்.. மன நலமும் கூடத்தான்.. அதுவே      
       அடிப்படை!

2.       உன்காலம் வரை உன் பணத்தை உன்னிடமே வைத்துக் கொள்..

3.       வாழ்க்கைத்துணையை நேசி..ஒவ்வொரு கணமும்    ஆனால் புரிந்துகொள்.. இருவரில்      ஒருவர் முந்தியே ஆகவேண்டும்.. மனதளவில் தயாராகு..  

4.       நட்புக்களை ஒரு பொழுதும் இழக்காதே.. ஆறு ஒரு பொழுதும் பின்னோக்கிப் போகாது... மீண்டும் வாழ இயலாது.. ஒவ்வொரு கணத்திலும் புன்னகை செய்.. நகைக் கற்றுக் கொள்.. அன்பும் மகிழ்ச்சி பெருகட்டும்...

அற்றார்....

இன்று எனது  நண்பர் ஒருவர், ஆதரவற்றோர்களுக்கு (சுமார் 100 பேர்) ஒரு வேளை உணவளித்தார். அற்றார் பசி, ஒருவேளை தீர்த்தேன் என்றார்.

அற்றார் என்றால், அம் முதுமக்கள் ஏதுமற்றர்கள்.
உறவு அற்றார்..
பொருள் அற்றார்..
உற்றம் அற்றார்..
சுற்றம் அற்றார்..
நட்பு அற்றார்...

ஆனாலும்....

உணர்வற்றவர்களா?
பசியற்றவர்களா?
சுய மதிப்பற்றவர்களா?
கௌரவமற்றவர்களா?
மானமற்றவர்களா?
ஈனப் பிறவிகளா?

கேள்வி மனதைக் குடைகிறது!

ஒரு வருடத்திற்கு முன்பு வரை அனாதைகளுக்கு உணவளிப்பது ‘சமூக சேவை.’  அல்லது  ‘எனக்கும் மனித நேயம் இருக்கிறது, அவர்களுக்கு உணவளிப்பது ஒரு சமூக கடமை.’ என்பதாகத்தான் புரிந்து கொண்டி ருந்தேன்.

சற்றே, மிகவும் சற்றே உற்று நோக்கினால் கூட, மனம் பரிதவித்துப் போகிறது! அவர்களுக்குளாக, ஒரு வேதனைச் சமுத்திரம் பொங்கிக் கொண்டிருப்பதும், விரக்தியின் உச்சத்தில் பரிதவித்துக் கொண்டிருப்பதும் புரிகிறது.

அவர்கள் விரும்புவது என்ன? வெறும் உணவுப் பொட்டலங்களையா? ‘வயிற்றை நிரப்பிக் கொள்வது’ மட்டுமே அவர்களது விழைவாக இருக்கிறதா?

‘எல்லாம் நல்லாத்தான் இருந்ததையா, காலத்தின் கோலம் எங்களை இப்படி ஆக்கிவிட்டது’ என விழி நீர் சிந்தாத முதியோர்களைக் கண்டதுண்டா?’  ‘சீக்கிரம் ஆண்டவன் எங்களை அழைத்துக் கொள்ள வேண்டும்’ என வேண்டுகோள் வைக்காத, உதாசீனப்படுத்தப் பட்ட முதியோர்களைக் கண்டதுண்டா?

தற்போது மானுடம் நசிந்துதான் போயிற்றா?

சுய நலப் பிண்டங்களாக மாறிவிட்டதா நமது சமுதாயம்?

இந்திய நாட்டின் சிறப்பே, அது எந்த மதமாக இருந்தாலும், குடும்பத்தையும், வயதானவர்களைப் பேணுவதை யதார்த்தமான கடமையாக கொண்டதல்லவா நமது கலாச்சாரம்? எங்கே தவறிழைத்தோம்?  அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் ஏன் பெருகிக் கொண்டே போகின்றன?

‘எங்க உடம்புல தெம்பும், கையில காசும் இருக்கிற வரைக்கும் நாங்க எல்லோருக்கும் இனிப்பாத்தான் இருந்தோமுங்க... எந்த குறையும் இல்லாம எல்லப் புள்ளைங்களுக்கும் நல்லாத்தான் குடும்பம் அமச்சுக் கொடுத்தோமுங்க.. அவுங்களுக்கு கால் முளைச்சுடுச்சு..., எங்களை முட்டாள்ன்னு நினைக்கறாங்க..  தெம்பு போனதுக்கப்புறம், எங்களை சுமையா நினைக்கறாங்க..  நாங்க அவுங்களுக்கு வேண்டாத பளுவா போயிட்டோமுங்க..’  சொல்லும் வார்த்தைகளே இப்படியென்றால், மனதில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள் எவ்வளவு இருக்கும்?

தாய், தந்தை, மக்கட் செல்வங்கள், உற்றம், சுற்றம் ஏதும் இல்லாமல் ‘சுயம்பு அனாதைகளாக’ பிறந்தவர்களா இந்த முதியோர்கள்?

‘எல்லாம் இருந்துதையா... இப்ப யாரும் கண்டுக்கல... யாரையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லீங்கையா! எல்லாம் எங்க விதி..’
பேச மறுத்து, தனக்குள்ளேயே புழுங்கும் பரிதாபிகளாகி விட்டனரே?..- ஏன்?’   

நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதுவேதான் தங்களுக்கும் திரும்ப வரும் என்பது கூடவா சமூகத்திற்கு புரியவில்லையா?

‘இன்னும் கொஞ்சம் சாப்பாடு போட்டுக்கறீங்களா..?’

வேணாங்கநீங்க அன்பா கேட்டதே போதும்….’


புரிகிறதா அவர்களுக்கு என்ன வேண்டும் என?

Saturday, January 24, 2015

உணவே விஷம்.

நமது நாட்டில் மக்களின் வாழ்வு, தொழில் நுட்பத்தினால் மேன்மை அடைந்துள்ளது எனப் பெருமிதம் கொள்கிறேம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த மக்களைவிட உடல் வலிமையிலும், நோய் எதிர்ப்ப சக்தியிலும் பின் தங்கியிருக்கிறோமா அல்லது வலுவாகியிருக்கிறோமா என்பது ஆராயப்பட வேண்டிய வினா.

மனிதனின் சராசரி ஆயுள் அதிகமாகி உள்ளது! உண்மை.. ஆனால் முற்காலத்தில் இறுதிவரை தெம்புடன் இருந்து வந்தனர். இப்பொழுது அதிக நாள் வாழ்கிறோம். உபகரணங்கள், மற்றும் மருந்துகள் மூலமாக – நடைப் பிணம் போல.  சாலை முக்குக் கடையில் ‘டீ’ போடுபவர் கூட கேட்கிறார்! சர்க்கரை நார்மலா? ஆஃபா?

நமது தேகம் வலுவிழந்து போனதற்கு நாம் நமது பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கத்தை கைவிட்டது தான் காரணம்.

நமது உணவுப் பழக்கம் ‘உணவே மருந்து’ அடிப்படையில் அமைந்தது. தற்போதைய உணவுப் பழக்கத்தால் ‘உணவே எமன்’ என்ற  நிலைக்கு  தள்ளப்பட்டிருக்கிற்றோம்.

நமது உணவான இட்லி-சாம்பார், அவியல், ரசம், சிறுதானியங்கள் , எள், சிகப்பரிசி, பெருங்காயம், கசகசா போன்றவை உடலை வலுவாக்கின.

கீழ்க்கண்ட பத்து விதிகளை கடைப்பிடித்தாலே, பெரும்பாலான வியாதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்?

1. பிராஸஸ்டு (பதப்படுத்திய) உணவுப் பக்கம் போக வேண்டாம்.  ரெடிமேட் சப்பாத்தி, நூடுல்ஸ், டப்பா பால்-தயிர், சிப்ஸ் போன்றவை. ‘சுருக்கமாக ரெடி டு ஈட்’ வேண்டவே வேண்டாம்.

2. இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு என வற்புறுத்தும் டி.வி விளம்பரங்களின் வரும் உணவு-போஷாக்கு பாணங்களைத் தவிருங்கள்.

3. சிப்ஸ், கணக்கின்றி கிடைக்கும் நொறுக்குத் தீனி வகைகளைத் தவிர்க்கலாம். பதிலாக கொட்டைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் உன்னதம்.

4. இயந்திரங்களால் தயாரிக்கப்படும் உணவுகள். மனிதர்களின் கைபட்ட உணவே உத்தமம். குறிப்பாக, தாய்-மனைவி.

5. பருவ கால உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். வருஷம் முழுவதும் மாம்பழம் என்பது தப்பாட்டம்.

6. காய்கறிகள் முதலிடம். பறவைகள் இறைச்சி / மீன்கள் இரண்டாம் இடம். நான்கு கால் பிராணிகளின் இறைச்சி குறைவாக.

7. இயற்கையான முறையில், இரசாயனக் கலப்பின்றி விளையும் தானியங்கள் / காய்கறிகளை தெரிவு செய்யுங்கள்.

8. உப்பும் சர்க்கரையும் மிதமாக.

9. செயற்கை குளிர் பாணங்கள் (கோலா வகைகள்) பக்கம் போக வேண்டாம்.

10. மருத்துவருக்கு கொடுப்பதைவிட, பலசரக்கு கடைக் கார்ருக்கு கொடுங்கள். தரம் அறிந்து தேடிப் பார்த்து வாங்கவும்.

பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கத்திற்கு திரும்பினாலே பாதி பிரச்சினைகள் இல்லை.
                                                                                            -சுதேசி செய்தி (ஜனவரி-15)

Wednesday, January 21, 2015

அல்ப ஆசை...

வயசான காலத்தில், வாயை மூடிக் கொண்டு ‘கம்மென..’ இருந்திருக் கலாம். அல்லது கிடைக்கும் இடத்திற்குப் போய் விட்டிருக்கலாம். சபலம் யாரை விட்டது? வாயைக் கட்ட முடியாமல் அப்படி என்ன அல்ப ஆசை? 

மதியம் மூணு மணி. தூக்கம் கண்களை சுழற்றும் நேரம். ஒரு மயக்கத்தில் கிடந்த சமயம்.  யாருடைய போதாத காலமோ, எனது நன்பருக்கு என்னை சீண்டிப் பார்க்க வேண்டும் என தோன்றிவிட்டது. 

வேலைமெனக்கெட்டு, அந்த நேரத்தில், என்னைக் கூப்பிட்டு, கண காரியமாக, இன்று ஐந்து வடை சாப்பிட்டேன் என சொல்லிவைத்தார். 

ஏற்கனவே, எனக்கு, அந்த வட்ட வடிவ, பொன்னிற அமிர்தத்தின் மேல் மையல் அதிகம். ஆசை காட்டிவிட்டார்.

இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு, மேலே கிரிஸ்பியாக, உள்ளே சாஃப்டாக, மணமணக்கும் சூடான மெதுவடைகள் மனதில் ஓடியது. ஆஹா..

“இதை ஏன், இந்த நேரத்தில் என்னிடம் சொல்லி, ஆசையை கிளப்பிவிட்டீர்?  வடை சாப்பிடும் ஆசை வந்து விட்டது.  நானே செய்யப் போகிறேன்!”

‘கேளும், உமக்கு வடை வேண்டுமெனில், ஆனந்த பவனுக்கோ, ஆனந்தமில்லா பவனுக்கோ சென்று சாப்பிட்டுவிட்டு வாரும்! நானே செய்கிறேன் என கிளம்பினீர்... விளைவுக்கு நான் பொறுப்பல்ல...’


“வடை செய்வதில் என்னங்கானும் பொல்லாத சாமர்த்தியம் வேண்டிக் கிடக்கு? நான் செய்யப் போகிறேன்.. உமக்கும் கொண்டு வந்து தருகிறேன்”

‘இந்த வேலையே வேண்டாம்... நீரே செய்து, நீரே சாப்பிட்டுக் கொள்ளும்.. என்னிடம் கொண்டுவந்து கொடுக்கும் எண்ணம் ஏதாவது இருந்தால், அதை உடனடியாக ரத்து செய்து விடும்.. புரிகிறதா? நான் என்ன பரிசோதனைச் சாலை எலியா?’

‘உமக்கு சாப்பிடும் கொடுப்பினை இல்லைங்கானும்... செஞ்சு காமிக்கிறேன் பாரும்...’

‘மனுஷனுக்கு சாமர்த்தியம் இல்லாட்டியும் பரவாயில்லை! ஆனால் தனக்கு சாமர்த்தியம் இல்லைன்னு தெரிஞ்சுக்கற சாமர்த்தியமாவது வேணும்... நமக்கு வடை சுட வராதுன்னு அனுபவப்பட்டு சொல்றேன்... கேட்க மாட்டேங்கிறீர்.. அனுபவியும்...’

வைத்து விட்டார்.

உடனடியாக களத்தில் இறங்கினேன். உளுந்தை ஊர வைப்பதற்கு முன்னால், திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டிக் கொள்ளலாமா என உத்தேசித்து, வேண்டாம்.., அவர் ராஜபக்ஷேவை கவிழ்த்து விட்ட (ஆ)சாமி யாச்சே என பயந்து, வடைப் பிரியரான ஆஞ்சனேயரிடமே,  ‘உளுந்தும், இஞ்சியும், பச்சை மிளகாயும், வெங்காயமும் நான் உனக்குத் தருவேன், செம்முகத்துத் தூமணியே நீ எனக்கு மெதுவடை தா’ வென பிரார்த்தனை. 

அரைத்த மாவு விழுதிலிருந்து கொஞ்சம் விண்டு, பிளாஸ்டிக் பேப்பரில் ‘சொத்’ தென மெல்ல அறைந்து, வட்ட மாக்கி, நடுவில் ஓட்டை போட்டால்,  விரலைவிட்டு மாவு விலகாமல் கூடவே வந்தது. இது என்ன ‘உடன் பிறப்பு’ மாவா? ‘கையை’ விட்டு விலக மாட்டேன் என்கிறதே என வியந்து, மீண்டும் வழித்து ஒரு அறை. ஹி..ஹி.. குறி தவறி, பிளாஸ்டிக் பேப்பரைவிட்டு விலகி, மேடையில் விழுந்தது மாவு. 

ரோஷக்கார மாவு போலும் – டைகோ போல.. கூட்டணியிலிருந்து விலகிவிட்டதே எனத் தவித்து, இந்த முறை, நிதானமாக முயல, வட்ட வடிவில் மாவும், நடுவில் பெரும் குழியும்.

அப்படியே எடுத்து, எண்ணெய் சட்டியில் போட முயல, மாவு அப்படியே ஒன்று சேர்ந்து கொண்டு, ‘ஸ்ரீலங்கா’ மேப் போல நீள் உருண்டையாக எண்ணையில் விழுந்தது. சே.... அப சகுனமாயிற்று.. அதை எடுத்து, டஸ்ட் பின்னில் போட்டு, மீண்டும் முயல, இம்முறை மாவு கையைவிட்டு விலகாமல் ‘ஜாமீன் வாங்க’ மறுத்தது.  லேசாக உதறி என்ணையில் போட யத்தனிக்க, வடைமாவுக்கு பதிலாக, விரல் நுணி எண்ணைசட்டியில்! ஆ.. வென அலறி, தண்ணீர் மக்கில் கையை நனைத்து ஆசுவாசம். ஆனால், அதற்குள், வடை பழைய ‘சோவியத் யூனியன்’ சைசில் சட்டி முழுவதும் ஒரே வடையாக..  அதை எடுக்க முயல, அது பழகிரி போல, இன்னமும் நான் சட்டியில்தான் இருப்பேன் என அடியில் ஒட்டிக் கொண்டது.. அதுவும் டஸ்ட்பின்னுக்கு அர்ப்பணம்

விரல் எரிச்சலுக்காக தண்ணீரில் கையை நனைத்ததால், அடுத்த வடை ஒழுங்காக வந்தது. (தண்ணீரில் கையை லேசாக தொட்டுக் கொள்வதுதான் சூட்சமமா?) ஆனால் வட்ட வடிவமும், மெதுவடைக்கே உரித்தான அந்த ‘கவர்ச்சி’ தொப்பூழும், மிஸ்ஸிங்.. ஓட்டை இல்லாத வடையா? 

சரி..சரி.. ஷேப் எப்படி இருந்தால் என்ன? சுவைதான் முக்கியம் என சமாதானம். 

இனியும் டஸ்ட்பின்னுக்கு அர்ப்பனம் செய்ய, மாவு இல்லாததினால், வந்த வரைக்கும் லாபம் என செய்தாயிற்று.  

எடுத்துப் பார்த்தால், முற்போக்கில் அது போண்டா போலவும், பிற்போக்கில் பக்கோடா போலவும் தெரிந்தது. எந்தப் போக்கிலும் வடை போலத் தெரியவில்லை. 

பெயரில் என்ன இருக்கிறது? சகலமும் பரமாத்வே (உளுந்துமாவே) அல்லவா? போண்டா,வடை, பக்கோடா நாமகரணம் சொல்லிக்கொள்வதெலாம் நமது வசதிக்காகத்தான் என ‘பலராமானந்தா’ தத்துவம்.

தேறியது.. பத்து உளுந்து உருண்டைகள் என வைத்துக் கொள்ளலாம்.

பத்து ‘அனாமிகாவையும்’ நானே விழுங்குவது சாத்தியமில்லாத காரணத்தால், காஷ்மீர் கூட்டணிக்கு ஆள் தேடுவது போல, இதை யாரிடம் பகிர்ந்து கொள்ளலாம் தேடினேன். கீழே குடியிருக்கும் பாட்டியிடம் கொண்டுபோய் கொடுத்தேன். இந்த கூட்டணியின் தர்ம்ம் என்னவென்றால் , ‘அந்த பாட்டிக்கு சரியாக கண் தெரியாது’ என்பது தான். 

அவர் இந்த வஸ்துவை உருட்டிப் பார்த்துவிட்டு ‘இது என்ன?’ என்றார்! வாயில் போட்டுக் கொண்டு, ‘இது என்ன போன மாசம் செய்த களியின் மீதியா?’  என்று கேட்கக் கூடிய அபாயம் கண்ணுக்கு தென்படவே, பாட்டியிடமிருந்து வடைகளை ‘பறித்துக் கொண்டு’ வந்துவிட்டேன்.

ஒரு சந்தேகம் சொல்லுங்கள்! இந்த ‘வடை மாகத்மியத்தை’ என்னை கிளப்பிவிட்ட அந்த நன்பருக்கு சொல்லலாமா, வேண்டாமா?இப்பவே, அவருடைய வீரப்பா வில்லன் சிரிப்பு காதில் ஒலிக்கிறதே?

(சமயலறையை சுத்தம் செய்ய 'ஸ்வச் பாரத் ஆட்கள் யாராவது இருக்காங்களா? மோடியிடம் கேட்டுப் பார்க்கனும்)
                                                                 -0-

Tuesday, January 20, 2015

கங்கை நதிக் கரையினிலே ...

ஜன்னல் கதவை மெல்லத் திறந்தேன். வெளியே கடுமையான பனி மூட்டம். எதிரில் ஐந்தடிக்குமேல் பார்க்க முடியவில்லை. குளிர் முழுத்தீவிரத்தோடு எதிர்ப்படும் எல்லாவற்றையும் ஊடுருவிக் கொண்டிருந்தது. எனக்கு தாடைகள் நடுங்கத் துவங்கிவிட்டன.  நான் தங்கியிருந்த அறை, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்தது. அது ஒரு மொட்டை மாடி. மொட்டைமாடியின் இருபக்கத்திலும் அறைகளைக் கட்டி விட்டிருந்தனர். எனவே வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மணி காலை ஐந்தரைதான். எனது ஊர்பழக்கம், இங்கும் விழிப்பு வந்துவிட்டது. விடுதியில் எவரேனும் விழித்திருக்கும் சுவடே காணோம்.  நிசப்தத்தில் அனைத்தும் உறைந்து கிடந்தது. சூடாக ‘டீ’ சாப்பிடத் தோன்றியது! எனக்கு அதிகாலையில் டீ சாப்பிடும் வழக்கம் இருந்ததில்லை! குளிர், பழக்க வழக்கங்களைக் கூட மாற்றிவிடுகிறது. மனைவி இருந்திருந்தால், இந்த குளிருக்கு என்ன சொல்லுவாள்? அவள் குளிரை குதூகலமாக அனுபவிப்பாள். மலைகளையும் அருவிகளையும் காணும் போதெல்லாம் உற்சாக ஊற்றுதான்.  அவளுக்கு ‘டீ’ எப்பொழுதுமே விருப்பமான ஒன்று. விரக்தியான ஒரு சிரிப்புதான் வந்தது. அவள் இருந்திருந்தால், இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமென்ன?
 அறையைப் பூட்டிக் கொண்டு, கீழே இறங்கினேன். மாடிப் படிகளில் சில நாய்களும், பிச்சைக் காரர்களும் சுருண்டபடி. வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. காவலாளியை, போராட்டத்திற்குப் பின்  தான் எழுப்ப முடிந்தது. தூக்கத்தில் முணகியபடி கதவைத்திறந்து விட்டான். ‘சை.. இந்த லாட்ஜில் வாட்ச்மேனாக இருப்பதைவிட கக்கூஸ்களில் இரண்டு ரூபாய் டிக்கட் விக்கலாம்!’.  இது என்ன லாஜிக் எனப் புரியவில்லை. காலை நேரத்தில் அவனை வம்பிழுக்கும் உத்தேசமும் இல்லை. அந்த அளவிற்கு இந்தியும் எனக்குத் தெரியாது. காசி,பனாரஸ், வாரணாசி என பல பெயரில் அழைத்தாலும், நமக்கு ‘காசி’ மட்டுமே பழகிவிட்டிருந்தது. வெளியே காசி நகரம், விழித்து வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது போலும். நாலு நாட்களாக இந்த தெருவில் போய் வந்து கொண்டிருந்த படியால், ஆளைக் குழப்பும் சந்துகள் பிடிபட்டுவிட்டிருந்தன.

கடும் பனியிலும், பண்டாக்களும் புரோகிதர்களும், சற்று தூரத்திலேயே ஓடும் கங்கையை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், யாத்ரீகர்கள் பூஜைச் சாமான்களோடு ஓடிக் கொண்டி ருந்தனர்.
 இந்த மூடுபனியிலும் காய்கறி தள்ளு வண்டிகள். 

 பருத்த மாடுகள்,  நகர சந்துகளெங்கும் சானமிட்டபடி அசைந்து சென்று கொண்டிருந்தன. ஆடுகளுக்கு சட்டை போட்டு விட்டிருந்தனர்.

 சற்று தள்ளி, தெருமுனையொன்றில் டீக்கடை.  அருகில் சென்றதும் சாய்வாலா என்னை அடையாளம் கண்டுகொண்டார். புன்னகையுடன் ‘ஆவோ சாப்.. சாய் சாஹியே?’  கைகள் குளிரால் நடுங்குவதைக் கண்டதும், குமுட்டியில் வைத்திருந்த கெட்டிலை அகற்றி, கைகளை வாட்டிக் கொள்ளச் சொன்னார், சைகையில். எனக்கு இந்தி வராது என்பது அந்த தெருவுக்கே தெரியும் போலுள்ளது. சூடான இஞ்சி டீ இதமாகத்தான் இருக்கிறது. அந்த டீக்கடைக் காரருக்கு ஏதேனும் கொஞ்சம் கூடுதாலக செய்ய வேண்டும் எனத் தோன்றியது. குடித்து முடித்த பிளாஸ்டிக் கப்பை  நீட்டி, ‘அவுர் ஏக் சாய்...’ திரும்ப அறைக்கு திரும்பும் போது, யாத்ரீகர்கள், அந்த கடும் குளிரிலும், கங்கையில் குளித்துவிட்டு, ஈரமான உடைகளுடன் சென்று கொண்டிருந்தனர். எனக்கு கங்கையை பார்க்க வேண்டும் போல் தோன்றவே, எதிர் சந்துவழியே சென்றேன். மெல்லிய வெளிச்சத்தில், இந்தியாவின் அந்த மகத்தான நதியில், விளக்குகள் மினுங்கியபடி மிதந்து கொண்டிருந்தன.  நதியின் அக்கரை தெரியவில்லை. படிகள் எங்கும், யாத்திரை வந்தவர்களுக்கு, எதோ ஒரு பூஜை செய்வித்துக் கொண்டிருந்தனர் பண்டாக்கள். பக்தர்கள் ‘ஹே.. மாதா’ என்றோ, ‘சம்போ மகாதேவ்’ என்றோ முழங்கியபடி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தனர். கங்கை என்னவோ எந்த சலனமும் இன்றி, நிசப்தாக ஓடிக் கொண்டிருந்தாள்.
 அறைக்கு வந்து, குளித்து, வேட்டி அணிந்து, வெற்று உடம்பில் துண்டு ஒன்றை போர்த்திக் கொண்டு, எனக்கான ஒரு ‘சாஸ்திரிகள்’ இடத்தை  நோக்கி நடந்தேன். எனக்கு என்ன வேண்டும் என,  இந்த காசியில் வந்து சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன்? சட்டென மனிதில் வெறுமையும், தனிமையும், விரக்தியும் அப்பிக் கொண்டது. சாஸ்திரி, விஸ்தாரமாக, சர்வ நிதானமாக, மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார். அவற்றை திரும்பச் சொல்ல வில்லையெனில், அடித்து விடுவார் போல. அவ்வளவு திருத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். பள்ளி மாணவன் போல, அவர் சொன்னவற்றை, திரும்பச் சொல்லி, சடங்குகளை செய்து கொண்டிருந்தேன். பெயர் சொல்லுங்க... ‘விஜி..’ ;
கோத்திரம்....? சொன்னேன்..
 மந்திர கோஷங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. புரோகிதர்களுக்கு தானம் அளிக்கும் முறை வந்தது. ஒரு புரோகிதருக்கு வெள்ளியினால் ஆன ‘பசுவின்’ உருவம் பதித்த காயின் ஒன்று. நெருப்பாற்றை கடக்க இது உதவுமாம். ‘ஏங்க... நாம ஒரு பசுமாட்டிற்கு, ஒருவருஷத்திற்காகும் தீவனச் செலவை ஏற்றுக் கொண்டால் என்ன? கோவிந்தபுரத்தில் அந்த வசதி இருக்கிற தாமே?’ ‘அது கோவிந்தபுரமோ அல்லது வேறு எந்தபுரமோ, உனக்கு விருப்பம் எனில் எதுவேண்டுமானலும் செய்யலாம். இந்த வாரமே போகலாம் வா..’ அவள் உயிருடன் இருக்கும் பொழுது, செய்த அந்த புன்னியத்தைவிடவா, இந்த ‘வெள்ளிக் காசு’ செய்துவிடும்? பிறருக்கு உதவுவது என்றால் கண்களில் பிரகாசம் வந்துவிடும் அவளுக்கு. செய்யும் உதவிகளை ஆர்பாட்டமில்லாது, அமைதியாக மறுபேருக்கு தெரியாமல் செய்ய வேண்டும் அவளுக்கு... ‘என்ன மாமா என்ன யோசனை...? இந்த பஞ்சபாத்திர உத்தரிணிகளை அவருக்கு கொடுங்கோ!’ ‘நமக்கு தேவையில்லாத்தை கொடுப்பதில் என்ன பெருமை இருக்கு? அவர்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதில்தான் திருப்தி!’ ‘சரி..’ ‘நம்மிடம் ஒரு தையல் மிஷின் இருக்கு, அதை அவளுக்கு கொடுத்துவிடலாம். அதை வைத்துக் கொண்டு, பிழைத்துக் கொள்வாள். அவளுக்குத்தான் டைலரிங் தெரியுமே?’ ‘உன் விருப்பம் விஜி..’ தான காரியங்கள் நடந்து கொண்டே இருந்தது... அவளது ஈகைக் குணங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. புரோகிதர்களுக்கு உணவு படைத்து, சன்மானம் அளித்து, அனைத்தும் நிறைவடைந்தது. ‘உங்க பத்தினிக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும், நாலு நாளா சிரத்தையோடு பிரமாதமா நடத்திட்டீங்க... ஒரு வருஷமா நீங்க செய்து கொண்டிருந்த, பல பித்ரு காரியங்கள் இன்றோடு பூர்த்தி யாகிறது. இனிமே வருஷாந்திரம் வரும் திதி தான்.   நீங்க ஷேமமா இருப்பீங்க...  உங்க வாரிசுகளும் நல்லா இருப்பாங்க.... ’  வாழ்த்தினார் சாஸ்திரி. எதை எதிர்பார்த்து இந்த காரியங்களைச் செய்கிறேன்? இங்கு செய்வது நிஜமாகவே அந்த ஆன்மாவுக்கு போய்ச்சேரும் என நம்புகிறேனா? அவள் நற்கதியடைய இந்த கர்மாக்கள் உதவுமா? தெரியவில்லை!
 தடங்கல்கள் இடையூறுகள் எல்லாவற்றிற்கும் இடையே, காசியில்தான் மனைவியின் முதல்  வருஷ காரியங்களை செய்தாக வேண்டும் என, ஏன் பிடிவாதமாய் இருந்தேன்? இந்த  நிகழ்வுக்காக ஏன் எனது தோலை தடித்ததாக மாற்றிக் கொண்டேன்? இயல்புக்கு மாறாக மௌனத்தையே ஏன் மொழியாகக் கொண்டேன்?
 இத்துடன் விஜியுடனான அனைத்தும் முடிந்துவிட்டதா? ஒருவருட காலம் காத்திருந்தது இக்கணத்திற்காகவா? மனைவியை இறைவன் காலடியில் சேர்ப்பித்தாகிவிட்டது என்ற நிறைவா? அது சாத்தியம் தானா?
 மனதில் தோன்றும் உணர்வுகளை விவரிக்க முடியவில்லை.  நிறைவா அல்லது கடமை முடித்த பெரு மூச்சா? இல்லை...
 அவள் மறைந்தாலும் நான் அவளுக்கான என் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறேன். எனக்கு பிடிக்கிறதோ அல்லது இல்லையோ – நம்புகிறேனோ அல்லது இல்லையோ – அது பற்றி கவலையில்லை. உன்னை நான் இன்னமும் நேசிக்கிறேன். இப்பொழுதும் உனக்கு உதவிடவே விரும்பிகிறேன் என்பதை வேறு எப்படி அவளுக்குப் புரியவைக்க முடியும்!
 உனக்கு நன்றி சொல்கிறேன். தடங்கல் இன்றி உனக்கு செய்ய வேண்டியவற்றை செய்ய அனுமதித்ததற்கு.. வெறுமையா அல்லது நிறைவா அல்லது மீண்டும் தனிமையா எனப் புரியாத ஒரு மன நிலையில், கர்மாக்களை முடித்தவுடன், கங்கைக் கரையை நோக்கி நடந்தேன். நான் தங்கியிருந்த இடம், ‘அனுமன் கட்’.  சில நாட்களாக இங்கே தங்கியிருந்தாலும், இன்றுதான் சுற்றுமுற்றும் ஆழ்ந்து பார்க்கத் தோன்றியது. ‘சுமோ’ மாதிரியான வாகனங்கள் ஏழெட்டு நின்று கொண்டிருந்தன. அனைத்து வாகனங்களின் முதுகிலும் மரக் கட்டைகள்!  மரக்கட்டைகளின் மேல் மனித உடல்கள். ஆணா... பெண்ணா? உடல் முழுதும் வெள்ளைத் துணியால் கட்டப் பட்டிருந்தது. வண்டிகள் வந்ததும், உடல் மேல் போர்த்தப் படும் ஒருவகை ‘பள.. பள..’ துணிகளை விற்கவும், எரிப்பதற்கான மரக்கட்டைகளை விற்கவும், பறையொலிக்கவும் பேரம் நடைபெறுகிறது. இரவோ, பகலோ எந்த நேரமும் இந்த துறையில் பிணங்கள் எரிந்து கொண்டே யிருக்கின்றன. மார்வாடி போல ஒருவர். அவரைச் சூழ்ந்து கொண்டு, பலர் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். இறந்தது யார் எனத் தெரியவில்லை. அவர் விடாக் கொண்டன் போல.. தலையை ஆட்டிக் கொண்டு, ‘நஹி.. நஹி.. ‘ என சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குடும்பத்தில் யார் தலையிட்டரோ தெரியவில்லை.. பேரம் முடிந்தது  போலும். சட்டென உடல் கீழே இறக்கப் பட்டது. மூங்கில் பாடையில் வைக்கப்பட்டு கட்டப்பட்டது. உடலை பாடையோடு எடுத்துச் சென்று கங்கையில் முக்கி எடுத்தனர். உடலிலோ அல்லது பாடையிலோ ஆங்காங்கே செருகப் பட்டிருந்த பத்து ரூபாய் நோட்டுக்கள் கங்கையில் மிதந்தன. சட்டென பாய்ந்த சென்ற சிறுவர்கள், மீன்களை தனது நீண்ட அலகுகளால் கொக்கு ஒன்று கொத்திப் பிடிக்கும் லாகவத்தோடு, பணத்தை கவர்ந்து கொண்டனர். சிதையில் அடுக்கப் பட்டது  உடல். சுருக்கமாக சடங்குகள் அரங்கேறு கின்றன. பக்கத்தில் இரண்டு சிதைகளை எரியூட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். உடலிலிருந்து கபாலம் முதலில் தீயினால் துண்டாகி கீழே விழுகிறது. பிறகு கால்களும் தொடைகளும். மிஞ்சி யிருப்பது, கழுத்தெலும்பு முதல் இடுப்பு வரையிலான பகுதிதான். அவற்றை யெல்லாம், லாவகமாக ஒரு சுழற்று சுழற்றி எரியும் மரக்கட்டைகளிடையே தள்ளுகிறார். மண்டையோடு அவருக்கும் தப்பி, உருண்டு  கீழே விழுகிறது! கபாலம் சிரிக்கிறதா? அழுகிறதா? பற்கள் மேலிட தாவாங்கட்டை சிதறிக் கிடக்க, அவை நம்மைப் பார்த்து சிரிப்பது போலத்தான் இருந்தது. குச்சியினால் கெந்தி, அதையும் தீயில் இடுகிறார் வெட்டியான். இப்பொழுது அந்த மார்வாரி, சடங்குகள் முடிந்து சிதைக்கு தீ மூட்டினார். திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்த அவர், மேல் படிக்கட்டுக்கு வந்தபின், புகை கணியத்துவங்கிய சிதையினை பார்த்தார். சற்றுமுன் பேரம் பேசிய அவர், ஜிப்பாவில் கையைவிட்டு, ஒரு கத்தை ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்துவிட்டு, நடக்க ஆரம்பித்தார். சிறுவர்களும் இளைஞர்களும் ‘ஹோ...’இறைச்சலுடன் ரூபாய் நோட்டுக்களை அள்ளிக்கொண்டனர். என்னைச் சுற்றிலும் எட்டு உடல்களாவது எரிந்து கொண்டிருக்கும் பொழுது ஏன் காற்றில் நாற்றமில்லை?
 




பார்வையை வேறு பக்கம் நகர்த்திய பொழுது, காலையில் தானம் பெற்றுக் கொண்ட ஒரு புரோகிதர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். ‘இங்கே அவ்வளவாக நாற்றம் இல்லை.. ஏன்?’ ‘உங்களுக்கு தெரியாதா சுவாமி...? காசியில் பிணங்கள் நாறுவதில்லை!காகம் கரைவதில்லை!பூ மணப்பதில்லை!மாடு முட்டுவதில்லை! உண்மைதானோ? பூவைத் தவிர மற்றெல்லாம் நிஜம் போலத்தான் தெரிந்தது. ‘இங்கு வருபவர்கள், அழுவது கூட இல்லையே, ஏன்?’ ‘சுவாமி.. இது பிரேத பூமி... இங்கே இறப்பவர்கள் புன்னியம் செய்தவர்கள். அவர்களுக்கு மறு பிறப்பு இல்லை...’ ‘அதெல்லாம் சரி.. எல்லாம் சொல்லலாம் தான். நிஜத்தில் சோகத்தை அவ்வளவு எளிதாகக் கொள்ளமுடியாமா? இங்கே ஒருவர் கூட அழுது பார்க்கவில்லையே’ ‘எதுக்கு அழனும்? மரணம் என்பது தானே உலக தர்மம்! பிறந்தவர் எல்லாம் போய்த்தானே ஆகனும்?  நாம மட்டும் சாசுவதமா என்ன? இன்னிக்கு அவர்.. நாளைக்கு நான்.. அப்புறம் நீங்க... அவ்வளவுதானே வித்தியாசம்..?’ ‘இங்கே, பழைய துணிகளை கங்கையில் வீசியெறிவதை பார்த்திருபீங்களே? அது போலத்தான் சுவாமி மரணமும்.
 உயிருக்கு, இந்த உடல் ஒத்து வரல... பழசாப் போச்சு அல்லது உயிரைத் தாங்கும் அளவுக்கு உடலுக்கு வலுவில்ல.. அல்லது உடலை நாமே உடச்சுப் போட்டுடுவோம்.. ஆக்ஸிடென்ட், தற்கொலை ... இது போல...
 அந்த உயிர் என்ன பண்ணும்..? சர்தான் போடான்னு, அந்த உடலை துறந்து, வேறு ஒரு உடலை எடுத்துக்கும்...’ அழிவெல்லாம் உடம்புக்குத்தான் - ஆன்மாவுக்கு அழிவே இல்லை சாமி...!
 ‘அம்மா,அப்பா, மனைவி, மகன் , புருஷன்-பொண்டாட்டி இதெல்லாம் மனுஷ உடம்புக்குத்தான்.. எப்ப உடம்பைவிட்டு உயிர் போயிடுச்சோ, அப்பவே அவுங்களுக்கு உறவு போயிடுச்சு... அவர்கள் பிதுர்க்கள்.. இதுக்கு போய் அழுது என்னத்த சாதிக்க முடியும்?’ படு இயல்பாகச் சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார் அந்த புரோகிதர். காசியில் என் கடமைகளை முடித்துக் கொண்டு, ஊர்  வந்து சேர்ந்து விட்டேன். மனோ நிலையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? சோகத்தை சுமந்துகொண்டு, மீண்டும்  பைத்தியம் போல திரிவேனா?
 தெரியவில்லை.. அனால் அந்த புரோகிதர் சொன்னது போல, துயரத்தையும் அழுகையையும் என்னால் தள்ளி வைக்க முடிந்திருக் கிறது! உதாசீனப்படுத்தப்படுவதும், அவமானப்படுத்தப் படுவதும் இனி என்னைப் பாதிக்காது என நம்புகிறேன்.
 பாதிக்காமலிருப்பது மட்டுமல்ல... அவற்றைப் புன்னகையோடு சகித்துக் கொள்வதையும் கங்கை எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டாள். பேரரசர்கள் முதல் பிச்சைக்காரர்கள் வரை,ஆனவத்தின் உச்சத்திலிருந்தவர் முதல்அடங்கிக் கிடக்கும் சாதுக்கள் வரை,பேரழகால் உலகை வளைத்துப் போட்டசௌந்தர்யவதிகள் முதல் குரூபிகள் வரை,தனவான் முதல் லோபி வரை... இன்னும் எத்தனை எத்தனையோ விதவிதமான மனிதர்கள் அனைவருமே இந்த கங்கைக் கரையில் சாம்பலாகி இருக்கிறார்கள்! யுகம் யுகமாய்,கோடானு கோடி ஜனனங்களையும் மரணங்களையும் பார்த்துவிட்டு, இன்னமும் மாறா அமைதியோடு,
சாட்சி பூதமாய்,மர்மம் புன்னகையோடு பயணித்துக் கொண்டே இங்கே என்முன்னே ஓடிக் கொண்டிருக்கும் கங்கையே! உனக்குள் அமிழ்ந்து கிடக்கும் யுகங்கள் எத்தனை?சாம்பலாகிப் போன சாம்ராஜ்யங்கள் எத்தனை?எத்துனை கோடி தேவர்களையும் மனிதர்களையும் கண்டிருப்பாய்?அந்த துயரம் உன்னைப் பாதிக்கவே இலையா?


மாகாபாரத யுத்தத்தில், உயிர் நீத்த பாண்டவ-கௌரவர்களுக்கும் கூடஇங்குதானே நீர்ப்பலி நடந்தது?உனக்கு எதுவும் நினைவில்லையா?உன்னை எதுவுமே பாதிக்காதா? கங்கைத் தாயே!நீ கற்றுத்தந்த பாடத்தை, நான் பெற்றுக் கொண்டேன்...
-0-

Tuesday, January 13, 2015

சகியாமை:


சமீப நாட்களில், நாம் மிகவும் உணர்ச்சி வயப்படுபவர்களாகவும், தங்களுக்கு உதிப்பது மட்டுமே சரி என்பது போலவும் சிந்திக்க ஆரம்பித்து விட்டோமோ என கவலையாக இருக்கிறது. சாதிய பிடிப்பு அதிகம் உள்ள சமுதாயத்தில், எதை எழுதினாலும் எவராவது கோபித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது!

அந்த புத்தகம் சரியா அல்லது தவறா என்பது பற்றி வினா எழுப்பப் போவதில்லை. அத்தகைய கேள்விக்கு தீர்மாணமான முடிவு இல்லை. அவர் எழுதியது சரித்திரமும் இல்லை. அவர் எழுதியது மட்டுமில்லை. எவர் எழுதும் புதினங்களும் வரலாறு இல்லை. (வரலாறே கூட ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமாக எழுதப்படுவது நடக்கிறது அல்லவா?) ஆவனமும் இல்லை.

அவர் எழுதியதில் உள்நோக்கம்  இருப்பதாகவே வைத்துக் கொள்ளலாம். அதற்கு எதிர்வினையாற்றுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. புதினத்தை எதிர்த்து, அவரது நாவல் பிழையானது என எத்துனை முறை வேண்டுமானாலும் கட்டுரைகள் எழுதலாம். ஆய்வுகள் நடத்தலாம்.  புதினம் தவறு என நிரூபிக்கவும் செய்யலாம். அதைவிடுத்து, போராட்டங்களும் மிரட்டல்களும் சரியெனத் தோன்றவில்லை. பாரதி ஒரு குறிப்பிட்ட சாதியினை (பெயரைச் சொல்லியே), மிகக் கடுமையாக விமரிசித்ததை நாடறியும். இன்னும் பல எழுத்தாளர்களும் இவரைப்போலவே எழுதியிருப்பார்கள்.

இது குறிப்பிட்ட எழுத்தாளருக்கெதிரான போராட்டமாகப் பார்ப்பதைவிட, எவரும் தங்களுக்கெதிராக எழுதிவிடக் கூடாது என்ற மனோபாவமாகத்தான் பார்க்கிறேன். இதனால் அவர் எழுதியது சரியென்று பொருளில்லை. சிந்தனைத்தளத்தின் மேல் தாக்குதல் தொடுக்கலாமா என்பதுதான் என் சந்தேகம். எல்லோரிடமும் சம்மதம் பெற்றுத்தான் எழுதியாக வேண்டும் என்றால், இனி புத்தகங்களே தேவையில்லை. சமுதாயத்தின் அறிவியலியக்கத்தை நிறுத்தி விடலாம். தர்க்கம் இல்லால் அறிவுத்தளம் இயங்கமுடியாது. தர்க்கத்தில் முடிவு எட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவரவர் வாதத்தை வைப்பதுதான் முதல் நோக்கம்.

இலக்கியம் எப்பொழுதும் முழு உண்மையைத்தான் பேசுகின்றன என்பது பொய். அது ஒரு பார்வை அவ்வளவே!

ஆளாளுக்கு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டால், முதல் பலி, கருத்துக்கள்தான். அவ்விதம் நிகழ அனுமதித்துவிட்டால், அராஜகம் மட்டுமே நிலைக்கும்.

உங்களது கருத்துக்களை முற்றாக எதிர்க்கிறேன். அதைப் போன்றதொரு முட்டாள்தனமா, அபத்தமான, தீங்கான கருத்தினைக் கேட்டதேயில்லை. ஆனால் அம்மாதிரியான கருத்தினை சொல்லும் சுதந்திரம் உங்களுக்கு மறுக்கப்பட்டால், அச்சுதந்திரத்தைப் பெறுவதற்காக உங்களுடன் இனைந்து போராட நான் தயார் என ஒரு தொழிற்சங்கத் தலைவர் சொல்லுவார். அதுதான் சரி.

நான் சொல்லுவதை நீ ஏற்றுக்கொள். மீறினால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பது சரியா? ஒரு எழுத்தாளன் என்பவர் தனிமனிதன். அவனுக்குப் பின்னால் சாதிய அமைப்புகள் அல்லது பிற அமைப்புகள் அணிதிரளும் சாத்தியக் கூறுகள் குறைவு.

இன்று அவர் சரண்டர் ஆகிவிட்டார். வென்றது யார்?  தோற்றது யார்?