13/02/2015. இரவு ஒரு மணி இருக்கும். வயிற்றில் ஏதோ சங்கடம் போலத்
தோன்றவே விழிப்பு ஏற்பட்டு விட்டது. வாமிட் செய்யவேண்டும் போல உணர்வும் தோன்றியது.
முந்தைய நாள் இரவு கூட, எப்பொழுதும் போல எதுவும் உண்ணவில்லையே! ஒத்துக் கொள்ளாமல் போவதற்கு
வாய்ப்பே இல்லையே என்ற சிந்தனையோடு, லேசாக கண்விழித்துப் பார்த்தேன்.
தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும் ஃபேன், சடாரெனெ எனக்கு இடது
பக்கமும் திடீரென வலது பக்கமும் சழன்று கொண்டிருப்பது போன்ற உணர்வு. சற்றே தலையை
திருப்ப முயல, எக்ஸார்ஸிஸ்ட் படத்தில்
வருவது போல, கட்டிலே படுக்கையறையின் உச்சிக்கும் கீழுக்குமாக பேய்ச்சுற்றல்
சுற்ற ஆரம்பித்தது. கண்களில் கிங்கரர்கள்
தென்பட ஆரம்பித்தனர்.
ஆஹா... தலை சுழலுகிறதே.. வாஷிங் மெஷினில் போட்டு சுழற்றுவது போல,
அனைத்தும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
சட்டென தலையனையை விலக்கி, கட்டிலை இருக்கப் பிடித்துக் கொண்டு,
அமைதியாக இருக்க முயல, தலைக்குள் நிகழ்ந்த
பூகம்பம், சில நிமிடங்களில் ஒரு நிலைக்கு வந்தது.
சரி... பாத்ரூமிற்குப் போகலாம்
என நினைத்து, அவசரப்பட்டு எழுந்து நின்று
கொள்ள யத்தனிக்க, நான்கு அடி தூரத்தில் இருக்கும் பாத்ரூமினுள், கதவை முட்டித்தள்ளி தூக்கி வீசப்பட்டேன். யார் என்னைத் தூக்கி வீசியது
என்பதை உணருவதற்குள் லேசாக மயக்கமும் ஏற்பட்டது. பாத்ரூம் என்னைச் சுற்றி
சுழன்றது. நல்ல வேளையாக பைப்களில் தலை மோதவில்லை. அவசரப்பட்டு எழுந்து
நின்றதில்தான் பிரச்சினை என்பதை உணர்ந்து,
பாத்ரூம் வேலைகளை நிதானமாக முடித்துக் கொண்டு, உட்கார்ந்த நிலையில் தவழ்ந்த
வண்ணம், மெல்ல, மெல்ல வாசற்கதவை நோக்கி நகர்ந்தேன்.
உதவிக்கு யாரையேனும் அழைத்தாலும், அவர்கள் வீட்டினுள் நுழைவது
எங்கனம்? அல்லது வேறு எதேனும் நிகழ்ந்து விட்டால், நிகழ்ந்தது வெளியே தெரியவே இரண்டு நாளாகி, உடல் நாற்றமடிக்க
ஆரம்பித்து விடுமே என்ற அச்சம் வேறு. எனவே, அங்குலம் அங்குலமாக எழுந்து, வாசற்
கதவைத் திறந்துவைத்துவிட்டு, அருகிலேலேயே இருக்கும் சோஃபாவில் சயனித்துக்
கொண்டேன். காலை ஏழுவரை, ஒரு ஃபுல் அடித்தாற்போல முழு பிரக்ஞையும் இல்லாமல், முழு நிதானமும்
இலாமல் கழிந்தது.
பின்னர் எனது வடை நன்பரை கூப்பிட்டு, நடந்தவற்றை விளக்கி, ‘எந்த
டாக்டரை அணுகலாம்? நியூரோவா, ஆர்த்தோவா
அல்லது ஜெனரல் பிஸிஷனா?’ எனக் கேட்டேன்.
“இம்மாதிரியான தலைச் சுற்றலுக்கு, காதில் பிரச்சனை அல்லது எனது
முப்பது வருட சினேகிதன் செர்வைகல் ஸ்பான்டிலைடிஸ் அல்லது ஹை பி.பி இவற்றில் ஏதாவதோ
ஒன்றோ அல்லது இதைத் தவிர்த்து வேறு இருக்கக் கூடுமோ” என்று வினவ,
‘ஓய்... உமக்கு என்ன, டாக்டர் என்ற நினைப்பா? எல்லாவற்றையும் நீரே
தீர்மாணித்துக் கொள்வீரா? அதெல்லாம் டாக்டரின் வேலை! அது கிடக்கட்டும், நீர் நேற்று என்னத்தை
விழுங்கி வைத்தீர்? அன்று செய்தது போல, ஏதாவது வடை-கிடை தின்று வைத்தீரா?’
‘அட.. அதெல்லாம் ஒன்றுமில்லை.. நேற்று உணவு ஏதும் கொள்ள வில்லைங்கானும்...’
நுணலும் தன் வாயால் கெடும். ‘அதாங்கானும் பிரச்சினை.., என்னத்தை யாவது
தின்று வைப்பதுதானே?’
அட, பசி மயக்கத்திற்கும், இந்த தலைக்குள் நிகழும் சுனாமிக்கும் கூடவா
வித்தியாசம் தெரியாது.. அதெல்லாம் காரணம் இல்லை.
“பேசாமல், அங்கேயே இரும்.. இன்னும் சற்று நேரத்தில் அங்கு வருகிறேன்”
இரு நன்பர்கள் புடை சூழ, கையில் ஒரு பி.பி மானிட்டரை எடுத்துக் கொண்டே
வந்து சேர்ந்தார். பி.பி நார்மல்.
அவருக்கு பல மருத்துவர்களை தனிப்பட்ட முறையிலே நன்கு தெரியும். எனவே,
திருப்பதி தரிசன கூண்டுகளையும், பாரதிராஜா படத்தில் வருவது போல, ஏழு கதவுகளைத்
திறந்து கொண்டு அதன் பின் மூலவர் தரிசனம் கிடைக்கப் பெறும், கடலூர் சம்பிரதாயங்களை
மீறி, எளிதாக டாக்டரை சந்திக்க முடிந்தது.
நடக்க ஆரம்பித்தால், தரை சடாரென பத்தடி கீழேயும், அடுத்த நொடி,
நெஞ்சுக்கு நேராகவும் வருவதுபோல இருந்தால் நடப்பது எப்படி? நன்பர்களுக்கு முன் ஏதேனும் ‘சீன்’ போடுவது
போலாகிவிடுமோ என பயந்து கொண்டு, தியான முறைகளைக் கைக் கொண்டு, சர்வ நிதானமாக
அடியெடுத்து வைத்தேன்.
இவருக்கு, மூளையையும், கழுத்தையும் எம்.ஆர்.ஐ எடுக்கனும். ஆனால் இந்த
மனிதர் இருக்கும் நிலையில், முக்கால் மணி நேரம் அந்த மெஷினுக்குள் படுக்க இயலாது.
எனவே, தலைச் சுற்றலைக் கம்மி செய்ய மாத்திரை தருகிறேன். நாளை ஸ்கேன் எடுத்துக்
கொள்ளுங்கள் என அறிவுரை தந்து, ஒரு டெக்கட்ரான் இன்ஜெக்ஷனையும் சில மாத்திரை களையும்
அளித்தார்.
என்ன விந்தை? இன்ஜெக்ஷன் செலுத்தப் பட்ட மறுகணம், உலகு ஒரு நிலைக்கு
வந்து விட்டது.
கொண்டுவந்து வீட்டில் விட்டுவிட்டு, ‘எதையாவது தின்று தொலையும்..
சாப்பிடாமல் இருந்தால் இப்படித்தான்’ என்ற உபதேச மழையோடு, சென்றனர்.
‘உடல், பசித்தால் தானே கேட்கும். பசிக்காத போது உண்ணுவதும், தாகம்
எடுக்காத போது நீர் அருந்துவதும், தூக்கம் வரும்பொழுது தூங்காமல் இருப்பதும் தான்
பிரச்சினைகளின் துவக்கம்’ என்பதை இப்பொழுது சொன்னால் அடிவிழும் என்பதால், வாயை
மூடிக்கொண்டு, சரி.. சரி.. என்றேன். எனது ஒரு நன்பரே உணவை கொண்டுவந்து வைத்து
விட்டு சென்றுவிட்டார்.
மாலை வரை அனைத்தும் சுகமே..
நினைத்துப் பார்த்தேன். இந்த உபாதைகளுக்கு எத்துனை தடவை, எத்துனை
பேரிடம் சிகிச்சை பெறுவது?
ஒரு பத்து வாரம் விடாமல் திருச்சியில் ‘அக்கு டச்’.
பத்து வாரம் ஆயுர்வேதம்.
சில மாதம் சித்தா..
பயன்தான் பெரிய பூஜ்யம்.
ஆரம்பத்தில் சரியாவது போல போக்கு காட்டிவிட்டு, பின் ‘போன மச்சான் திரும்பி
வந்தான்’ கதையாக உள்ளதே..
அல்லோபதி வேண்டாம் என நினைத்தாலும், மாற்று சிகிச்சை முறைகளில் தீர்வு
கிடைக்காததால், விரும்பாவிட்டாலும் அவர்களிடமே செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்
படுகிறேன்.
மாலையில், மறந்து போய், சட்டென சோஃபாவிலிருந்து எழுந்து கொள்ள, பத்தடி
தூரத்தில் இருக்கும் மற்றொரு சோஃபாவிற்கு, தூக்கி எறியப்பட்டது போல, தலை சுற்றி,
அந்தகால திரைக் கதாநாயகிகள், மயக்கம் வந்தாலும் சௌகரியாமாக, கட்டிலில் விழுந்து
வைப்பது போல, விழுந்து வைத்தேன்.
‘அட முட்டாளே.... நிதானமாக எழவேண்டும் என்ற புத்தி கூடவா இல்லை?’ என என்னை நானே சபித்துக் கொண்டு நிதானித்தேன்.
14/2/15. காதலர் தினம். எனதன்பு மனைவின் படத்திற்கு முன்னால்,
‘என்னால் இயன்ற அளவு, இறுதிவரை உனக்கு பணிவிடை செய்தேன்.. இப்பொழுது நீ பார்த்துக்
கொண்டுதானே இருக்கிறாய்? இனிமேலும் என்னை சோதிக்காதே..’ எனப் பிரார்த்திக் கொண்டு,
அதே மருத்துவ மணையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தேன்.
‘மூளையில் ( நல்ல வேளை.. அது மிஸ்ஸிங்.. என சொல்லவில்லையே) ஒன்றும்
பிரச்சினை இல்லை.. செர்வைகல் பிராப்ளம்தான்.. சட்டென திரும்பவது.. டூவீலர்
ஓட்டுவது போன்றவற்றை தவிர்க்கச் சொல்லும் ‘ரொட்டீன்’ அறிவுரைகள்.
இம்மாதிரியான பிரச்சினைகளை, கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவ மனையில் சரி
செய்கிறார்கள் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கி றார்களாம். இம்மாத இறுதியில்
அங்கு செல்வதாக உத்தேசம். கழுத்து எலும்பு தேய்ந்து, அதனால் வரும் இம்மாதிரியான
உபாதைகளுக்கு, தீர்வு இல்லையா என்ன?
சிலசமயம் துரதிர்ஷடம் துரத்தி வந்தாலும், பண்புகெட்ட காரியங்களை
கூசாமல் செய்யும் மனிதர்கள் நிறைந்த இக்காலத்தில், சீர்மிகு நன்பர்களைப்
பெற்றிருப்பது எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ தெரியவில்லை. அவர்களுக்கு என் வந்தனங்கள்.
No comments:
Post a Comment