Friday, February 27, 2015

'மகா பாரதம் -மாபெரும் விவாதம்' - புத்தகம்

மாகா பாரதம், இந்தியாவை இணைக்கும் சங்கிலியின் ஒரு கன்னி, ஒரு பெருங்கடல். அதில் மூழ்கி, அறிஞர்கள், அவரவர்களுக்கு, தங்கள் பாங்கில் பாரத்த்தைப் பார்த்த வண்ணம், முத்தெடுத்து எழுதியிருக்கிறார்கள். 

இன்னும் எத்துனை பேர்கள் வேண்டுமானாலும் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டே இருக்கலாம்.  அவ்வளவு கொட்டிக்கிடக்கும் இக்காப்பியத்தை, எண்ணிலடங்கா எழுத்தாளர்கள், இராஜாஜி முதல் எஸ்.ரா உட்பட (உபபாண்டவம்) பலர் காப்பியத்தினை அல்லது அதன் ஒரு பகுதியை, தங்கள் பாணியில் விரித்து எழுதியுள்ளனர். ஒவ்வொரு விரிவுரைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.

இராஜாஜி – கதை சொல்லும் போக்கு. சோ-தத்துவ வியாக்யானம், என்பது போல!  வாசுதேவன் நாயரின் இரண்டாம் நிலை முற்றிலும் புதுமையான நோக்கு..

அரசியல்வாதியும், தமிழ் ஆர்வலருமான திரு பழ. கருப்பையா அவர்கள் “மகாபாரதம் மாபெரும் விவாதம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் ஒரு “கேரக்டர் அனாலிஸில்” என்ற வகையில் இருக்கிறது. ஒவ்வொரு கதை நிகழ்வையும் (எபிஸொட்) எடுத்துக் கொண்டு,   நிகழ்வு மாந்தர்ளின் மன நிலை, தத்துவார்த்த நிலைபாடு, அவர்களது குணாதிசயம் ஆகியவற்றை, இக்கால கண்ணோட்டத்தோடு பார்க்கும் நூல்.

‘புனிதம்’  அல்லது ‘தெய்வீக அந்தஸ்து’ கொடுத்து,  ‘நமஸ்கரிக்கும்’ பாங்கினை புறந்தள்ளி, சற்றும் தாட்சண்யமில்லாமல் விமர்சரிக்கிறார். பாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் எதுவும் விதிவிலக்கில்லை, கிருஷ்ணன் உட்பட.

பாரதம் குறித்து நூல் இயற்றிய, ‘சோ’, ‘இராஜாஜி’  ஆகியவர்களின், பாரதம் குறித்த அவர்களது பார்வையையும் கூட விமர்சிக்கிறார்.

‘பாஞ்சாலி’, ‘குந்தி’  ஆகியவர்கள் குறித்த இவரது பார்வை மாறுபட்டதே! இவர்களை முற்றிலும் ‘அரசியல் பெண்மணிகள்’ என்கிறார்.

சில வார்த்தையாடல்கள் வெகு கூர்மையானவை.

எழுத்தாளர், அரசியல் வாதியல்லவா? அதுவும் திராவிடக் கட்சி அல்லவா?
கிருஷ்ணனைப் பேசும் பொழுதே, பழ. கருப்பையா அவர்களது அரசியல் சிந்தனை, அவரை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்து ‘தற்போதைய அரசியல் நிகழ்வுகளை ஒரு பிடி பிடிக்க வைத்துவிட்டு, பின்  மறுபடியும் மகாபாரத்திற்குச் இட்டுச் செல்கிறது.

‘பார்ப்பனர்’, ‘சத்திரியர்’ போன்ற தற்காலத்திற்கு நெருடலான சப்ஜெட்களை தயங்காமல், ஓரளவிற்கு நியாயமாக அலசுகிறார்.

இவரது பார்வையில், கீதை, ‘வருணாசர தர்மத்தை’ நிலை நாட்ட, இடைப்பட்ட காலத்தில் பாரதத்தில்  செருகப்பட்ட நூல் .

எழுதும் போக்கினைப் பார்த்து, எங்கே கீதை மற்றும் பாரதத்தின் சாரமான ‘தர்மத்தை நிலை நாட்டும்’ மையக் கருவிற்கு கேடு விளைவித்து விடுவாரோ என அச்சமேற்பட்டது.  இல்லை... கடைசிவரை ‘சில தர்மங்களை’ விமர்சித்தாலும், தர்மம் காக்கப் படவேண்டியதே என்பதில் உடன்படுகிறார். வியாசரையும் – கிருஷ்ணனையும் கிலாசித்துப் பேசிகிறார்.

தேர்ந்த நடை, நல்ல தமிழில்.

ஆனால், பீசுமனன் (பீஷ்மர்), வீமன், இராசாசி, செயத்துரதன், தோடம்(தோஷம்), சயித்ரதன் பல சொற்களுக்கு சில வார்த்தைகளுக்கு பழகிக் கொள்ள வேண்டும்.

படித்து முடித்தவுடன், ஒரு நாள் பூரா, சன்டிவியில் வரும் ராஜா, சாலமன்ன் பாப்பையா போன்றோர் பங்கெடுத்த, சுவாரஸ்யமான ஒரு பட்டிமன்றத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது.

மேடைப் பேச்சாளர்கள் உட்பட (ஏன் தின்னைப் பேச்சாளர்களும் கூட) பலரும் படித்துப் பார்க்க வேண்டிய புத்தகம்.  மாறுபட்ட பார்வை அல்லவா?

கிழக்கு பதிப்பகம். 310 பக்கங்கள். ரூ. 250/-

ஹலோ பத்ரி சார்... 250 ரூபாய்க்கு ஒரு நல்ல பேப்பரில் போடக்கூடாது? பழுப்புக் காகிதத்தில், இவ்வளவு மங்கலாக (இங்க் செலவாகி விடுமா?) அச்சடித்துக் கொடுத்தால்,  படிப்பது எப்படி?

1 comment:

  1. Previous to his new position, he is a congress man Sir. Good writer. Nice.


    ReplyDelete