Monday, July 28, 2014

பிறந்த நாள் பரிசு.

1976. எனது நண்பர் ஒருவரது இல்லம்.

நானும் எனது மனைவியாக ஆகப்போகிறவரும் சந்திப்பதற்காக  நங்கள் ஏற்படுத்திக் கொண்ட இடம். ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

கணவன்-மனைவி என்னும் உரிமை இன்னமும் வாய்க்கப் பெறாத தினங்கள் அவை.

பேச்சு வாக்கில்,  ‘ஒரு பாட்டு பாடேன்..’ என்றேன்.

‘வேண்டாம்..’

‘ஏன்.?.’

‘எனக்கு சரியாக பாட வராது...’

பொய்.. நன்றாக பாடுவார். நல்ல குரல் வளம். ஓரளவிற்கு கர்னாடக சங்கீத ஞானம் உள்ளவர். பெரும்பாலான இராகங்களை அடையாளம் கண்டு கொள்வார். இருந்தும் ஏனோ தயக்கம்.

‘நீ நன்றாக பாடுவாய் என்பது தெரியும். அலட்டிக் கொள்ளாமல் பாடேன்.’

‘சரி.. பாடுகின்றேன்.  ஒரு கன்டிஷன். நீங்களும் ஒரு பாட்டு பாட வேண்டும்.’

‘அட... குயிலுடன் இன்னொரு குயில்தான் பாடணும்.. கழுதை அல்ல...’

‘நீங்கள் எனக்கு குயில்தான். பாடுங்கள்’

‘இன்று உன் ராசிக்கு இப்படி அனுபவிக்கனும்னு எழுதியிருந்தால், நான் மாற்றவா முடியும்? அனுபவித்துக் கொள். முதலில் நீ பாடு...’

பார்த்தேன்.. ரசித்தேன் என்ற பாடலைப் பாடினார்.

உங்களுக்கு, அந்த பாடல் தெரியும் என்றாலும், பாடலின் உன்னதமான வரிகளை உத்தேசித்து, அந்த பாடல் வரிகள் கீழே:

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன் .

கொடித்தேன் இனியங்கள் குடித்தேன்என
ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
துளிர் தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளிர் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்

மலர் தென் போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

கண்களை மூடி, நெக்குருகி பாடி முடித்தார். குரல் செழுமை, வரிகளின் பெருமை, உணர்வு பூர்வமான பாவம், அந்த நேரத்திற்கு ஏற்ற பாடல் தேர்வு -  ஆகியவற்றால் பிரமித்துப் போய்க் கேட்டுக் கொண்டிருந்தோம்.

பாடல் முடிந்தது. அனைவரிடமும் மௌனம்.

‘என்ன.. பாட்டு நன்றாக இல்லையா?’

பிறகுதான் நினைவுக்கு வந்து, நான், என் நண்பர் குடும்பம் - அனைவரும் கைதட்டி மகிழ்ந்தோம்.

பிறகுதான் சங்கடம் துவங்கிற்று.

‘இனி உங்களது முறை.’

‘ஐயோ... வேண்டாம். உனது இனிய பாட்டிற்கு பின், என் கழுதைக் குரலைக் கொண்டு பாடினால், சுவையான காஃபிக்குப் பின் எட்டிக் காயை உண்பது போல இருக்கும்..’

‘பரவாயில்லை.. எனக்கு வேண்டும்’.

விதி யாரை விட்டது! எந்த பிர்காவும் இல்லாத, சராகமாக பாடக்கூடிய
‘உள்ளம் என்பது ஆமை...’ என்ற பாட்டைப் பாடினேன்.

‘ஏன்.. நன்றாகத் தானே பாடுகிறீர்கள்?’

‘அது சரி... காக்கைக்கும் தன்.....’

சிரித்துக் கொண்டு சென்றோம்.

இது நடந்து 38 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இன்று நினைவுகளில் வாழுகிறார் எனதருமை விஜி

எங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் நாள் வரை, எங்களது அன்பு மகளைத் தூங்கச் செய்வதற்காக, நானும் எனது மனைவியும் மாறி,மாறி பாட்டுப் பாடுவோம். மகளும் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவார். 

தவறாமல் மனைவியின் பாடல் லிஸ்டில் ‘பார்த்தேன்.. ரசித்தேன்.. இடம் பெரும்’  அது சமயம், என்னை அறியாமல், எனது கைகள் மனைவியின் தலையை கோதிக் கொடுக்கும்.

அது போல எனது பாடல் லிஸ்டில் ‘உள்ளம் என்பது ஆமை..’ இடம் பெறும். அப்பொழுது, அவரது கைகள் தானாக என்னைப் பற்றிக் கொள்ளும்.

இன்று (29/07/2014), அவர் ஈன்றெடுத்த பெண் மகவுக்கு இன்று 35வது பிறந்த நாள்.




உள்ளம் என்பது ஆமை தான்.  

எல்லா உணர்வுகளையும் என்னுள்ளே சுருக்கிக் கொண்டு, பகிர்ந்து கொள்வதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும் உற்ற ஜீவன் இன்றி, சொன்னாலும் புரிந்து கொள்ள இயலாத இவ்வுலகத்தில், ஓட்டை மட்டும் காட்டிக் கொண்டு, தனித்திருக்கிறேன்.

மற்றவர்களுக்கு, எனது துணைவியார் ‘மாண்டார் லிஸ்டில்’ இன்னுமொரு பெயர். அவ்வளவே. எனக்கு அவரே தெய்வம்.

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை

தண்ணீ தணல் போல் எரியும்
செந்தணலும் நீராய்க் குளிரும்
........ பகை போல் தெரியும்
அது நாட்பட ,நாட்படப் புரியும்

எனது மகளுக்கு, நாங்கள் பாடித் தூங்கவைத்த இந்தப் பாடல்களையே பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன்.


நெஞ்சில் தூங்கிக் கிடக்கும்  நீதிகளோடும், நினைவுகளோடும் -  நான்.

2 comments:

  1. இனிய நினைவலைகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Thank U 'Thalil Suresh'! Untold sorrows are hiding behind my lines...

      Delete