Friday, July 18, 2014

ஷார்ட் பிரேக் ....

உக்கிரமான வெய்யில். வறண்ட வாணிலை. சலிப்பூட்டும் தினசரி வேலைகள். வெறுமை கொண்ட மணம். இன்னும் ஒரு நாள் கழிந்தது என தினங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது, “என்ன ஃப்ரண்டு..., குற்றாலம் போய் வரலாமா?” என உற்சாகக் குரல் எழுப்பினார் நண்பர் ஒருவர்!

தண்ணீரைப் பார்த்ததும் ‘படகு’ சவாரி என்பதும், அருவியைக் கண்டதும் சட்டையை கழற்றுவதும் எனக்கு என்றைக்கும் ஏற்புடையாதாக இருந்ததிதில்லை. அருவிக் குளியல்  நிதானமாக அனுபவிக்க வேண்டிய விஷயம். குற்றாலக் கூட்டம் பிரசித்தம் ஆயிற்றே? மந்தை போல, மேலே வந்து விழுவதும், கால்களை மிதித்துக் கொண்டு நெருக்கித் தள்ளுவதும், ஐந்து நிமிடத்திற்குமேல் நின்றால் ‘லத்தியால்’ விலக்கப்படுவதும்  விரும்பத் தக்கதாக இருந்ததில்லை. எனவே குற்றாலம் சுகமே ஆயினும், இந்த இம்சைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு வினாடி மௌனம் சாதித்தேன்.

“இங்கே உட்கார்ந்து கொண்டு என்னத்தைக் கிழிக்கப் போகிறீர்.. ? வாருமைய்யா... நீரே உமக்கு ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதற்குள்ளேயே ஏன் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறீர்?  கண்களைத் திறந்து பாருங்காணும்... ரசிக்க, ருசிக்க, பார்க்க நிறைய உலகில் நிறைய இருக்கிறது; ரெண்டு நாள் வெளியே போய்வரலாம்.. .”

“சரி.. வருகிறேன்... ஆனால் ஒரு விண்ணப்பம்....”

“ஒண்ணும் பேசப்படாது.. எதுவாயினும் பார்த்துக் கொள்ளலாம்..”

13/7/14, ஞாயிறு அன்று குற்றாலம் நோக்கி பயணம்.
14/07/14 அன்று விடியற்காலையில் குற்றாலத்தை அடைந்தோம்.

என்ன அநியாயம்?  தமிழகம் தானா இது?

வாடைக் காற்று மெற்கிலிருந்து வலுவாக வீசிக் கொண்டிருந்தது!

மேகக் கூட்டங்களை கிரீடமாகத் தரித்துக் கொண்டு, கம்பீரமான மலைகள்!

மலைகள் யாவும் பச்சைபோர்த்திக் கொண்டு.. ஆஹா..  என்ன ரம்மியம்!

ஊரெங்கும் பூந்தூற்றலை இறைத்துக் கொண்டிருந்தன, கரு மேகங்கள்!
பகுதி முழுவதும் இதமான குளிர்.
அதிசயமாக குறைவான கூட்டம்.

“அட அல்பங்களே... எமக்கு முன் மானிடர்கள் எல்லாம் எம்மாத்திரம்?” என எள்ளி நகையாடுவது போல பேரிரைச்சலோடு, கம்பீரமாக, ஆணவத்தோடு, ஆக்ரோஷத்தோடு ஆர்ச்சைத் தாண்டி விழுந்து கொண்டிருந்தது பேரருவி.

பாறைகளில், அசுர பலத்துடன் முட்டி மோதி, சிதறி, ஆர்ச்சைத் தாண்டி
சீறிப் பாயும் அழகை எப்படி வர்ணிப்பது?

அருவிகளிலிருந்து எழும் சிதறல்களே அருவிபோல யாவரையும் நனைத்துக் கொண்டிருந்தது.


அப்படியே மேலெழுந்து, அருவியினோடே கீழே ஸ்லோ மோஷனில், சினிமா போல, கீழே இறங்கி வந்து பார்க்க விழைந்தது மனது.

மதயாணை போல விழுந்த அருவி, தரையைக் தொட்டு ஆறாக மாறியதும் குணம் மாறிப் போய் நளினத்துடன், அமைதிகொண்டு நெளிந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது- ஆழமான,அர்த்தமான புன்னகையுடன்.

மனம் சடாரென உற்சாக களம் கொண்டது.  “புதிய வாணம்.. புதிய பூமி.. எங்கும் சாரல் மழை பொழிகிறது”  என்ற எம்.ஜி.ஆர் நிணைவுக்கு வந்தார். சரோஜாதேவிதான் மிஸ்ஸிங்.

அங்கே இருந்த  நாட்கள் முழுவதும் வஞ்சனையின்றி ‘சாரல் மழையை’ மேற்கு மலைகள் அள்ளி-அள்ளி தெளித்தன. One cannot ask more.

சந்தடி இன்றி, ஐந்து, சிற்று, புலி, பழைய என அனைத்து அருவிகளிலும் அதிகாலை, மதியம், மாலை, இரவு என தலா இரண்டு மணி நேரத்திற்கு குறைவில்லாமல் குளியில்.

இக்கணமே வாழ்வின் இறுதி நொடி என்பது போலவும், வாழ்க்கையின் நோக்கமே இதுதான் என்பது போல அள்ளி அள்ளி அனுபவித்தோம்.

உணவு, சாரலில் நனைதல், அருவியில்  நீராடுதல் இவை மாத்திரமே செய்து கொண்டிருந்த கணங்களாக, தினங்களாக கழிந்தன.

Manimutha Falls


உபரி சந்தோஷங்களாக அகத்தியர் அருவி, மணிமுத்தா அருவிக் குளியல்கள்.

மணிமுத்தா அருவியில் எங்களைத்தவிர எவருமே இல்லை. அச்சுறுத்தும் ஆர்பாட்டமோ அல்லது சிறு நீர்த்தாரைபோல ஒழுக்கோ இல்லாமல் நிறைவாக விழுந்து கொண்டிருந்தது மணிமுத்தா. அகத்தியரும் அதுபோலவே!

எங்களின் சில ஆர்வக் கோளாறிகள், அருவிக்கடியில் படுத்துக் கொண்டும் உட்கார்ந்து கொண்டும் அலம்பல். அனுபவம் யாவும் திகட்ட-திகட்ட!

அருகில் இருக்கும் தென் காசிவிஸ்வனாதர் கோயில்’ அனைவருக்கும் தெரிந்தது தான். கோயில் விசேஷம் என்னவென்றால், நாம் கோயில் கோபுரத்தை நெருங்கும் பொழுது, கோயிலின் உள்ளிருந்து காற்று வெகு வேகமாக வெளியே வீசுகிறது. ஆளை வெளியே தள்ளுவது போல!

மெல்ல கோபுரத்தைக் கடக்கிறோம். இப்பொழுதும் நம்மை வெளிப்புறம் தள்ளும் காற்று.

கோபுரத்தைக் கடந்து, கோயிலினுள் நுழைகிறோம். காற்று இல்லை! இரண்டு அடிக்கு தூரத்திற்கு அமைதி.

இன்னும் ஒரு அடி நடக்கிறோம். இப்பொழுது நேர் எதிராகா,  அதாவது, கோயிலின் வெளிப்புறத்திலிருந்து சந்நிதானத்தை  நோக்கி, உட்புறமாக,  வலுவாக காற்று வீசுகிறது.

சட்டென திசைமாறி காற்று வீசுவதற்கு கோயிலின் கோபுர அமைப்பு காரணமா எனத் தெரியவில்லை. வீடியோ பார்க்க, இந்த லிங்க்கைத் தொடருங்கள். 

பாப நாசம் சென்று ‘பாப நாசநாதரையும், உலகம்மையையும் (என்ன ஒரு அழகான தமிழ்ப் பெயர்!) வணங்கி வரவேண்டும்’ என்ற  நெடுநாளைய ஆசை நிறைவேறியது. கோயிலின் முன்னால் தாமிரவருணி நதி பேரழகுடன் பாய்கிறது. ஆற்றில் இறங்கிக் குளிக்க பிரம்மாண்டமான, அழகான படிக்கட்டுகள். படிகளை நிறைத்துக் கொண்டு தாமிரவருணி பிரவாகமாம செல்கிறாள். 

ஆற்றில் இறங்கி (Seshtai பார்க்க சேஷ்டைகளுடன் குளித்து பாவங்களைத் தொலைத்து பாபநாச நாதரை வணங்கி வந்தேன்.

கொசுறு:

செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் குண்டார் அணைக்கும், அதற்கும் மேலே இருக்கும் ஒரு அருவிக்கும் சென்று வர திட்டமிட்டோம். அதன்படியே காலையில் புறப்பட்டும் சென்று கொண்டிருந்தோம்.

போகும் வழியில் நடுவில் ஒரு ஊரில், ஒரு பெண் நாய்க்காக, இரண்டு தெரு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஓட்டுனர் நாய்களைக் கவனித்து வேகத்தைக் கட்டுப்படுத்துக் கொண்டார். சாலையின் அந்தப் பக்கம் இருந்த ஆண் நாய் ஒன்று, என்ன நினைத்ததோ தெரியவில்லை, சடாரென வேனின் நடுவே பாய்ந்தது. முன் சக்கரம் கடந்து போய் விட்ட நிலையில் ஓட்டுனரால் ஏதும் செய்ய இயலவில்லை.

‘உச்..’ கொட்டிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மேலே சென்று, அணையை பார்க்க யத்தணித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு இருசக்கர வாகணத்தில் ஒருவர் வந்தார். மிரட்டும் தொனியில், என் நாயை அடித்துப் போட்டுச் சென்றதும் இல்லாமல் நிறுத்தாமல் சென்றது ஏன் சண்டைக்கு வந்தார்.

இதோ பாரப்பா.. எவரும் வேண்டுமென்றே எதுவும் செய்ய மாட்டார்கள். தெரு நாய் குறுக்கே பாய்வதெற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும்.
வீட்டு நாய் என்றால் உள்ளே கட்டி வைத்திருக்க வேண்டுமல்லவா?

அந்த மனிதர் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. சமாதாணம் ஆவதாகவும் தெரியவில்லை.

“முடிவாகச் சொல்லு, உனக்கு என்ன தான் வேண்டும்” என்ற வினாவிற்கும் பதிலளிக்கத் தெரியவில்லை.

திடுதிப்பென்று, “மூவாயிரம் ரூபாய் கொடுங்கள்” என்றார்.

“ஹாங்க்.... மூவாயிரமா? தெரு நாய்க்கா?  “
“எந்த ஊரில் ஒரு தெரு நாய், மூவாயிரத்திற்கு விற்கிறார்கள்?”
“நீதான் அந்த நாய்க்கு முதலாளி என்பதற்கு ஆதாரம் என்ன?  “
“நாயின் கழுத்தில் பட்டை கட்டியிருக்கிறாயா? “
“வா. போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம்”

வரிசையாக முண்டா தட்டி, தாக்குதல் தொடுத்தனர், வேன் நண்பர்கள்.

அணையையும் பார்க்காமல், அருவியையும் பார்க்காமல் நாங்கள் போலீஸ் நிலையத்திற்கு விரைந்தோம்.

ஆனால் அந்த நபர் அம்பேல்.

காசு பிடுங்குவதற்கு, மக்கள் என்னவெல்லாம் யோசனை செய்கிறார்கள்?

திடீரென்று, எங்கள் கோஷ்டியில் இருந்த ஒருவர், மெய்ஞானம் பெற்று விட்டார்!

“இந்த நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிகிறது?” என்றார்.

“சொல்லுங்கள்?”

“காமத்தில் நிதானம் இழந்து, அங்கும் இங்கும் ஓடினால், அடிபட்டு சாக வேண்டியது தான்”.

“அட கடவுளே.. பாபநாச  நாதரே.. பாவிகளை ரட்சியும்...”
-0-


1 comment:

  1. Dear Raji... I am very sorry that your comment was inadvertently got deleted. Its my touch screen error. Pl bear with me.
    And for you comment for 'Saroja Devi..', my SD is no more..

    ReplyDelete