Saturday, July 19, 2014

உறவுச் சிக்கல்கள்:

சேர்ந்து வாழ்ந்த மனிதரெல்லாம் சேர்ந்து போவதில்லை!

தெரிந்த விஷயம் தான். என்றாலும் சேர்ந்து வாழ்ந்தவர் மறைந்தபின், எவ்வளவு குழப்பங்கள்? சங்கடங்கள்? யோசிக்கிறேன்.

இந்த சிக்கல், சங்கடம் எனக்கு மட்டும் தானா? இதே மாதிரியான 
துயரத்தை எதிர்கொண்டவர்கள், எதிர்காலத்தை எவ்விதம் எதிர் கொள்கிறார்கள்? தனிமைத் துயரை எவ்விதம் சந்திக்கிறார்கள்?

ஒரு ஜீவன் மறைந்தபின் நெருங்கிய உறவுகள் கூட, 
ஏன் சிக்கல் நிறைந்ததாகிவிட்டன?

சமூகம் நம்மை பார்க்கும் விதமே மாறிவிட்டதா?
அன்று நான் எப்படியோ அப்படியேதானே இருக்கிறேன்!
அன்று சகித்துக் கொள்ளப்பட்டவன், இன்று ஏன் நிராகரிக்கப் படுகிறேன்?


மிகச் சாதாரண சொற்கள்கூட, எப்படி-ஏன் விபரீதமாக
பொருள் கொள்ளப் படுகின்றன?

சில ‘அரசியல்கள்’ ஏன் புரியமாட்டேன் என்கிறது?
அல்லது மிகத் தாமதமாக புரிகிறது?

என்னிடம் எந்த மாற்றமும் இருப்பதாக உணரவில்லை!

மனைவி ஒரு மந்திரசாலிதான்!
அவருக்கு சிக்கலைத் தீர்க்கும் கலைகள் கைகூடி வந்திருந்தன!
எல்லாவற்றிற்கும் அவரிடம் விளக்கம் இருக்கும்!

சிலர் திடீரென பேசினால் என்ன அர்த்தம்?
பேசுவதை நிறுத்திவிட்டால் என்ன பொருள்?
நீண்ட நேரம் ஏன் பேசுகிறார்கள்?
ஏன் சட்டென முடித்துக் கொள்கிறார்கள்?
கூறப்பட்ட வாக்கியத்தின் பொருள் என்ன?
வாக்கியத்தின் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன?
-யாவும் அவருக்குத் தெரியும்

-எல்லாவித ‘டிப்ளமசிகளயும்’ புரிந்துகொள்ளும்,  நிர்வகிக்கும் திறன்வாய்ந்தவராக இருந்தார்.

கழைக்கூத்தாடிகள் மெல்லிய கயிற்றில் கூட சுமையைத் சுமந்து கொண்டு, பாலன்ஸ் செய்தபடி, கீழே விழாமல் அந்தப்பக்கம் சென்றுவிடும் நுணுக்கம், சாமர்த்தியம், நிதானம் – இவை எவற்றிற்கும் சளைக்காத திறமைகளோடு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் இருந்தவரை எந்த சிக்கல்களும் எழுந்ததில்லை. எழுந்தாலும் சிடுக்கெடுக்கும் தந்திரம் தெரிந்து வைத்திருந்தார்!


அவர் இறந்த  சில நாட்களிலேயே, வம்புகளும் சிக்கல்களும் வெள்ளமென ஏன் வருகின்றன? மறைந்த அந்த உன்னத ஜீவனுக்கே மரியாதை இல்லாத பொழுதில், அவரை அண்டி வாழ்ந்த என்னை எவர் சீண்டுவர்?

பேசாமல் ஓரிடத்திலேயே அமர்ந்திருந்தாலும், நிர்பந்தங்களும் – அழுத்தங்களும் ஏன் தேடி வருகின்றன?

என்னால் எவருக்கும் பளு இல்லை;
எந்த எதிர்பார்ப்பும் எவரிடமும் இல்லை;
எவரிடமும் எதுவும் நானாக கேட்டதில்லை;
இருந்தும் ஏன் இரக்கமின்றி நடத்தப்படுகிறேன்?
என் சொற்கள், ஏன் வலிந்து பொருள் கொள்ளப் படுகின்றன?
என்னை வசைபாட, ஏன் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்?
விலகி-விலகி சென்றாலும் கூரான சொற் கற்கள் ஏன் துரத்துகின்றன?

எனக்கான உணவு ஒதுக்கப் பட்டிருக்கிறது என்றே நம்புகிறேன்;
அதுவும் கூட இல்லையென்றால்  நான் என்ன வாகியிருப்பேன்?

இனி ஓடி ஒளிய, என்னிடம் இடம் இல்லை;
உடல் மரத்துவிட்ட்து;
உள்ளம் காய்த்து விட்டது;
பெருகிவரும் அன்பைத் தேக்கி வைத்திருக்கிறேன்;
கொள்வார் எவருமில்லை!

பழைய் திரைப்படப் பாடல் ஒன்று:
“வற்றாத நதியே காஞ்சு போனால்,  நான் எங்கு செல்வது” என்று.

“அன்பு நீர் வற்றாது என நினைத்த நதியே  நம்மை காய்ச்சும் பொழுது..” இனி எதை நம்பியும் பலன் இல்லை.

“நன்றி கெட்ட மாந்தரடா.. இது நானறிந்த பாடமடா..”
இது தான் ஞானம் போலும்.

தவறு என்னிடம் தான்.

எல்லாவற்றையும் “கே.வி (என் மனைவி)” பார்த்துக் கொள்வாள் என விட்டுவிட்டு, அலுவலகத்தையும், வெட்டி சித்தாங்களையும், புத்தகங்களையும்,  விடாமல் உபாசித்ததால், மனிதர்களை புரிந்தும் கொள்ளும் பாங்கை விட்டு விட்டேன்.

ஒப்புக் கொள்கிறேன். சொற்களின் நேரடிப் பொருளும், அவற்றின் மறைமுகப் பொருளும் விளங்கவில்லை. மனிதர்களை புரிந்து கொள்ள இயலவில்லை. கே.வி யை சார்ந்தே இருந்து விட்டதால், புதிதாக வாழ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது!

தாய்-தந்தையை பார்த்தது கூட இல்லை;  
நான் மழலையாய் இருக்கும் பொழுதே மரித்தனர்.

ஊரார் தயவில் படித்து,
பெற்ற மதிப்பெண்களால் வேலை கிடைத்து,
பிறவிப் பலனால் ‘அவர்’ என்னைத் தேர்ந்தெடுத்து......
இதனால் மனிதர்களை புரிந்துகொள்ளும் வாய்ப்பற்றிருந்தது!
அனைத்தும் கனவு போல இருக்கிறது.

அவர் கையைப் பிடித்துக் கொண்டே காலைத்தை ஓட்டிவந்த நான், 
படகு கவிழந்தபின், புதிதாக நீச்சல் கற்றுக் கொள்கிறேன்.

சுழல் மிகுந்த வாழ்க்கை ஆறு!
ஆற்றின் போக்கு புரியவில்லை!
நீச்சலும் கைவரவில்லை!
மூப்பினால் தளர்ந்து விட்டேன்!
ஆற்றின் கரையில் பத்திரமாக இருப்பவர்கள்
என் மீது கல்லெறிகிறார்கள்!
ரத்தம் வடிவதைப் பார்த்து சிரிக்கிறார்கள்!


இத்தனையும் தாண்டி கரை சேர்வேனா?
அல்லது மூழ்குவேனா?
புரியவில்லை!

புரிந்தது இதுதான்:

அவரவர்கட்கு அவரவர் வேலை!
எவரிடமும் அன்பை எதிர்பார்க்காதே!
சோகத்தைச் சொல்லாதே!
உலகு உன் துயரத்தைக் கண்டு கெக்கலிக்குமேயன்றி
கைகொடுக்க முன் வராது!

அன்பு உன்னதமானதுதான்!
எல்லோரிடமும் செலுத்தத்தான் உரிமையுண்டு!
திரும்ப செலுத்துபவர் மரணித்து விட்டார்!

சவங்கள் நடமாடும் உலகில், மனிதர்களை எதிர்பார்த்தால் எப்படி?

இறைவன் அழைக்கும் வரை போராடு!
மனிதர்களைப் புரிந்து கொள்!
பிடிக்காதவற்றை ஏற்றுக் கொள்ளாவிடினும்
சகித்துக் கொள்ள கற்றுக் கொள்.

இன்று - நாளை, என்று நாளை எண்ணிக் கொண்டிருப்பேன்.
என்று உந்தன் சன்னதியில் என்னை
ஏற்றுக் கொள்வாயோ - அதுவரை!!



6 comments:

  1. அன்பு உன்னதமானதுதான்!
    எல்லோரிடமும் செலுத்தத்தான் உரிமையுண்டு!
    >>
    நிஜம்

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=dgn-9SX6VYA

    ReplyDelete
  3. http://www.youtube.com/watch?v=dgn-9SX6VYA

    ReplyDelete
  4. http://www.youtube.com/watch?v=dgn-9SX6VYA

    ReplyDelete
    Replies
    1. அவர் துன்பத்தில் சொல்கிறார் . நீங்கள் ஏன் அழ சொல்கிறீர்கள் சார்

      அரசு

      Delete
  5. புறநானூறு
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ யானாது
    கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 129)

    பொருள்


    எல்லா ஊரும் எம் ஊர்
    எல்லா மக்களும் எம் உறவினரே
    நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
    துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
    சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
    இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
    வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
    பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
    இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
    தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
    ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
    சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
    பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

    பெரிய தத்துவம் தான் சோர்ந்து துன்பத்தில் மூழ்காதே நண்பா .
    எல்லாம் நம்மை சுற்றி உள்ளன . எதை கொள்ளவேண்டும் என பாருங்கள் .
    வாழ்ந்து காட்டுவோம் .

    அரசு

    ReplyDelete