Friday, August 26, 2016

மீண்டும் வாழ்ந்தால் ...

இன்றும் வழமை போல, வாட்சப் நிரம்பி வழிந்தது. நேர்மையாகச் சொன்னால், பலவற்றைப்  படிப்பதே இல்லை. ஒரே விஷயம், நூறு பேரிடமிருந்து வந்தால், சலிப்பாகத்தானே  இருகும்?  எனவே, " க்ளியர் ஆல் " சௌகரியமான தேர்வு.

இன்று வந்தஒரு   தகவல், 'பாம்பு' என ஆரம்பிக்ககவே, 'அம்புலிமாமாவி' ன் சுவாரஸ்யத்தில் முழுவதும் படித்தேன். சுருக்கம் கீழே!

பாம்பொன்று,  வளைந்து நெளிந்து  ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு  குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாக, அருகே  போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச
நேரத்திலேயே மற்ற குரங்குகள்  கூட்டமாக  கூடி வந்துன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு  பிடியை விட்டதுமே பாம்பு அதைப்   போட்டுடும். தப்பிக்கவே முடியாது " என்று அதன் காதுபட பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனைபட்டது  , எந்த நேரமும் கொத்திச் சாகடிக்க காத்திருக்கும் நச்சுப் பாம்பு,  மரண பயம் குரங்கை  வதைத்தது.  "ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.  அட.. . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா . குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நாமும்எ த்தனையோ  கடந்து போன கவலைகளையும், வன்மங்களையும், ஆத்திரத்தையும், ஈகோவையும், அந்தக் குரங்கு போல,   செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
                                                           
சோஷயல் மீடியாக்கள் பிரபலமான பின், தகவல்களும் அறிவுரைகளும் கொட்டேஷன்களும் நம்மைப் பந்தாடுகின்றன.    பகிர்பவர் உட்பட , எல்லோரும் கவல்களைக்  "கேட்டுக்" கொள்கிறோம்...ஆனால் "உணர்ந்து" கொள்கிறோமா என்பது சந்தேகம்தான்.

மேலே சொன்ன குரங்குக்குக்  கதையை 1973லேயே பெங்களூரில், ஒரு பிரசங்கத்தில் கேட்டிருக்கிறேன். ஆனாலும் எத்தனை பாம்புகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தேன்? இக்கதையை "உணர்ந்து" கொள்ள 43 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது!!

வயதும், காலமும் சிந்தனையோட்டத்தை புரட்டிப் போட்டு விடுகின்றன.  தற்போது திருமூலரையும், ராமணரையும் (தி.மலை) படித்தால், அவர்களின் பாடல்களின் பொருள் வேறு ஒரு டைமன்ஷனில்  விளங்குகிறது.

சில்வர் டங் "சீனிவாஸ சாஸ்திரிகள்" ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

சி.ட. சீனிவாச சாஸ்திரி , மிகப் பெரிய தேசபக்தர், பன் மொழி வித்தகர், பேரறிஞர், நம்பற்கரிய நாவண்மை படைத்தவர்.. இவரது பேச்சாற்றலைக் கண்டு வியந்துதான்  ஆங்கிலேயர்  அவருக்கு   "சில்வர் டங்" பட்டம் கொடுத்தனர்.

இவர் எழுதிய ஓரு புத்தகம் "மீண்டும் வாழ்ந்தால்..".

மீண்டும் வாழ்வது என்றால், ஒபாமாவாகவோ, அம்பானியாகவோ, ஐஸ்வர்யாவாகோ  பிறப்பதன்று.  இதே பெயரில், இதே நாட்டில், இதே குடும்பத்தில், இதே தகுதிகளுடன், இதே  அடையாளத்தில்,  இப்படியே   மீண்டும் வாழ்ந்தால், இதே வாழக்கையை எப்படி திருத்தி வாழ்வோம் என .

அருமையான புத்தகம்.

நமக்கு மீண்டும், இதே வாழ்க்கையை வாழும் வாய்ப்பு கிடைத்தால்..? குறைந்தபட்சம் இப்போது கிடைத்திருக்கும் புத்தித் தெளிவோடு...!!

சுவாரஸ்யமான கற்பனை!


If I had my life to live over again,
I’d dare to make more mistakes next time.
I’d relax.
I’d limber up.
I’d be sillier than I’ve been this trip.
I would take fewer things seriously.
I would take more chances,
I would eat more ice cream and less beans.
I would, perhaps, have more actual troubles but fewer imaginary ones.
you see, I’m one of those people who was sensible and sane,
hour after hour,
day after day.

Oh, I’ve had my moments.
If I had to do it over again,
I’d have more of them.
In fact, I’d try to have nothing else- just moments,
one after another, instead of living so many years ahead of each day.
I’ve been one of those persons who never goes anywhere without a thermometer, a hot-water bottle, a raincoat, and a parachute.
If I could do it again, I would travel lighter than I have.

If I had to live my life over,
I would start barefoot earlier in the spring
and stay that way later in the fall.
I would go to more dances,
I would ride more merry-go-rounds,
I would pick more daisies.

– Nadine Stair

Monday, August 22, 2016

ஆஸ்பத்திரி தினங்கள்.

மருத்துவ மணை வாசலை மிதிக்காத தருணங்கள் வாய்க்கப் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள். ஆஸ்பத்திரி திங்கள் அச்சமூட்டாவிட்டாலும், நேசம் கொள்ளத்தக்கதாக இருப்பதில்லை!    நீருக்குள்ளிருந்து மூச்சுக் காற்றுக்காக வெளிவரத்துடிக்கும் மனோ நிலைதான் சகலருக்கும். நிலைமை சற்றே சீரானவுடன், எப்பொழுது  ‘டிஸ்சார்ஜ்’ என்பதுதான் அடுத்த விசாரணை. அன்றாட வாழ்வுக்கு, கூடிய விரைவில் திரும்புவதையே அனைவரும் விரும்புகிறோம்; வாழ்க்கை எவ்வளவு சலிப்பாக, சந்தோஷமற்றதாக, இனிமையற்றதாக இருந்தாலும்.

மருத்துவமணைகள் கற்றுத்தரும் பாடங்கள் அனேகம். மனிதர்களை நேயமிக்கவர்களாக மாற்றும். நேசமிக்கவர்களாக மாற்றும். வாழ்வின் அனித்தியத்தை முகத்தில் அறைந்து உணரவைக்கும். அதிலும் சற்றே அபாயகரமான நிலையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வரும்  நோயாளிகள், உணர்ச்சி நிலையில்,  சக மனிதர்களுடனாண அணுகுமுறையில், வாழ்க்கை மீதான பிடித்தத்தில்  என ஏதாவது ஒன்றிலாவது மாற்றம் கொண்டிருப்பார்கள். குறைந்தபட்சம் கொஞ்சம் ‘மென்மையாக’ யாகவாவது மாறியிருப்பார்கள்.

என்னுடைய சில உபாதைகளுக்காக, கோட்டக்கல் ஆர்யவைத்திய சாலையில் வருடம் ஒருமுறை, அனுமதிக்கப் பட்டு, சில நாட்கள் சிகிச்சை பெறவேண்டும் என்பது எனக்கு விதிக்கப்பட்டது.
  
புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் லிஸ்டில் இணைந்துவிட்டபின், இம் மருத்துவ மணையின் உள்ளே நுழையும்போதெல்லாம், மனதின் ஓரத்தில், தீற்றலாக ஒரு சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கும். அனைவரும் மனைவியோ, மகனோ, மகளோ  ஏதோ ஒரு துணையோடு வந்திருக்க,  நான் மட்டும் இப்படி தனியாகவா என்ற எண்ணத்தை சம்மட்டிகொண்டு அடித்து சுக்கு நூறாக்கியது, அங்கே பெற்ற அனுபவம்.

சின்னஞ்சிறு குழந்தைகள் குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை நடக்க இயலாமல், தானே உணவருந்த இயலாமல், தன் முகத்தைக் கூட தானே துடைத்துக் கொள்ள இயலாமல், துவண்டுவிட்ட கால்களோடு, கண்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்க, கை கால்கள் அவர்களின் இச்சைக்குட்பட்டு இயங்காமல்,  அவை தானாக, வேறு ஒரு கதியில் துடித்துக்கொண்டிருப்பதைக் காண நெஞ்சம் பதறுகிறது.  இரண்டு வயது கூட நிரம்பாத பாலகர்கள் என்ன பாவம் செய்தார்கள்?  சுருண்டுபோன கால்களோடு.. கடவுளே!  

மனம் நிறைய நம்பிக்கையோடு, கோட்டக்கல் வருகிறார்கள். சிகிச்சை  நூறு சதம் பலனளிக்கிறதா என்பது உறுதியாகச் சொல்லமுடியாத சூழல்தான்.  ஆனால், அச்சிறார்களும், பாதிக்கப்பட்ட பொரியோர்களும்தான்   நாம் உயிரோடிருப்பதும், அவயவங்கள் சரியாக இயங்கிக் கொண்டிருப்பதும், எப்பேற்பட்ட ஆசீர்வாதங்கள் எனப்புரியவைப்பர்.  

யாரோ எவரோ தெரியாது.  நோயாளி ஒருவர் சற்றே தடுமாறினாலும் அவரைத் தாங்கிப் பிடிக்க,  பத்து கரங்கள் நீளுகின்றன. ஆறுதல் கூற, ஆயிரம் வார்த்தைகள் போட்டியிடு கின்றன.  உதவி தேவைப்படுபவர்களைப் பார்த்து பதறிப் போகின்றனர். இங்கே நிகழும் நேயம் வெளியுலம் முழுவதும் நீளாதா என ஏக்கமாய்த்தான் இருக்கிறது. வெளியே, மூர்க்க வார்த்தைகளில் மூழ்கிப்போய், குரூரமாய் நடந்து கொள்ளும் அற்பர்கள் பல்கிப் போய்விட்டார்களா என சந்தேகமாய் இருக்கிறது.

சோப்புக் குமிழ்களையாவது எப்போது உடையும் எனக் கணக்கிடலாம். மனித உயிர் எப்போது உடையும் கணம் எப்போது என யாரறிவர்?அக்குமிழ்கள் மேலே, வண்ணங்கள் பல தோன்றும் கவனித்திருக்கிறீர்களா? வாழ்க்கையும்  அத்தகையதோர் குமிழ்தானே? வண்ணங்களை நிரந்தரமென்று நினைத்துக் கொண்டிருக்கும் தருணத்திலேயே, குமிழிகள் வெடித்துச் சிதறுவதைப் போல,  நமது கனவுகளும் சிதறிப் போகின்றன.  குமிழ் உடையாதிருக்கும் பொழுதே, வண்ணங்களை எல்லோருக்கும் அளிப்போம். அன்பும் கருணையும் தான் மனிதம். காழ்ப்பையும் வெறுப்பையும் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும் பயிலுவதாகத் தெரியவில்லை.

வெள்ளம், புயல், விபத்து போன்ற ஆபத்துக் காலங்களில், ‘வாலண்டியர்கள்’  உதவ முன் வருகிறார்கள்.  அந்த லிஸ்டில், மருத்துவ மணைகளில் வாலண்டியர்களாக வருடத்திற் கொருமுறையாவது மக்கள் பணியாற்றினால், தேவைப் படுபவர்களுக்கு உதவி கிட்டுவது மட்டுமன்றி, தங்கள் மனங்களை  செழுமைப் படுத்திக் கொள்ளவும் உதவும்.


-------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, August 18, 2016

ஆதலினால் அன்பு செய்வீர்.

ரக்ஷா பந்தன். பந்தங்களை ரக்ஷிப்போம். அதாவது  உறவுகளைக் காப்போம். ஆனால் நடைமுறையில் எல்லாம் தலைகீழாக!!

எக்காலத்திலும் உறவுகட்கிடையே சச்சரவு கள் இருந்து கொண்டுதான் இருந்தன; ஆனால் ஒரு எல்லைக்குட்பட்டு.

இக்காலம் போன்று தன்வயிற்றைத்  தாண்டி எதையும் யோசிக்க இயலாத, ஈன சமூகமாய்  எப்படி மாறிப்போனோம் எனத் தெரியவில்லை. அனைவரிடத்தும் ஈகோ வியாபித்து, தலைவிரித்தாடுகிறது.

இப்போது போல, சண்டைக்கு அலையும் தினங்களைக் கண்டதில்லை.  காதில் விழும் வதந்திகளையும், உள்நோக்கத்தோடு  கூடிய பொய்யுரைகளையும் நம்பிக்  கொண்டு, விரோதித்துக் கொள்ள காத்திருக்கின்றனர்.

சகிப்புத் தன்மையும், பொறுமையும், அனுசரித்துச் செல்வதையும் மறந்து போன சமூகமாக மாறிப் போனோம்.  பெரியோர்களை அற்பமாக நடத்துவது அன்றாட நிகழ்வு.

இதைவிட பிறரது துயரத்தில் இன்பம் காணும்  அவலம்;

நன்றி மறப்பது குறித்து எவருக்கும் நாணமில்லை.

"..........உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு' என்பதைப் படித்திருந்தால் தானே?

தாய் மொழியை-அது போதிக்கும் நன்னெறிகனை   மறந்தோர் அனைத்தையும் இழந்தோர்  ஆவர்.

இந்தியக் கலாச்சாரம் குடும்பத்தைப் பேணும் கலாச்சாரம். குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரம்.  அதையே ஆட்டம் காண வைத்து விட்டோம் என்றால், நமது எண்ணிலடங்கா   ஆழமான புராண இதிகாசங்களிலிருந்து எதைக் கற்றுக் கொண்டோம் என விளங்க வில்லை.

வசதியில்லை  என்பதால், உறவுகட்கு  உதவாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களை நேசியுங்கள். குறைந்த பட்சம் அவர்களது துயரங்களைப் புரிந்து கொள்ளவாவது முயலுவோம்.

“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே”
என்று மிக அழகாகப் பாடுகிறார் வள்ளலார். எங்காவது மலை கைப்பிடியில் அகப்படுமா? அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்கிறார். குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் அரசனும் விரும்பி நுழைவான் என்கிறார்.

அன்பு நெடிய சாந்தமும் தயவுமுடையது; அன்பிற்கு பொறாமையில்லை;
அன்பு தன்னைத் தானே புகழாது;
இறுமாப்பாயிராது;
அயோக்கியமானதைச் செய்யாது; தற்பொழிவை நாடாது;
சினமடையாது;
தீங்கு நினையாது;
அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்;
சகலத்தையும் தாங்கும்;
சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும்;
சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது.”

ஆதலினால் சொந்தபந்தங்களையாவது நேசிப்போம்.

ரக்ஷா பந்தன் கயிறு கட்டுவதில் இல்லை!

Wednesday, August 3, 2016

இருக்கும் இடத்தை விட்டு.....

இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைவானேன்?

ஆன்மிகம், ஆத்மா,  இறை, பிரபஞ்ச சக்தி.... எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அவையாவும் உங்களுக்கு உள்ளே தான் இருக்கு!  பிண்டத்தில் இருப்பதுதான் அண்டத்திலும்.  உங்களுக்குள்ளே தேடுங்கள்.  கிடைக்கும். கண்டுவிட்டால், விண்டெடுப்பதற்கு ஏதுமில்லை எனவும் விளங்கும்.

யாரோ ஒருவர் சரியான வழியைச்  சுட்டிக்காட்டினாலே போதும். கைகாட்டியை சுமந்து கொண்டு திரியவேண்டும்  என்ற அவசியமே இல்லை. "மானச குரு" நிறையபேர் நம்மிடையே உண்டு. அத்தகைய சரித்திரங்களும் நிரம்ப உண்டு. அத்தகையோர்  தற்போது உயிரோடிருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

முக்திக்கு எவரும் உத்தரவாதமளிக்க முடியாது. உங்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று இறையடியில் விடுவது என்பதெல்லாம்  நடவாது. அதற்கு, நாமே, நாம் மட்டுமே பொறுப்பு.

"எல்லாம்" என பொதுமைப் படுத்துதல் தவறென்றாலும், பல பீடங்களுக்குப் பின், பணம், அதிகாரம், அரசியல், பாலியல் தொல்லை இருக்கத்தான்  செய்கின்றன.
எச்சரிக்கை தேவை.

நம்மிடம் இருப்பதைப் போன்ற செரிந்த  தத்துவங்கள் எவரிடமும் இல்லை. சரியான சமயக் கல்வி... குறிப்பாக தமிழின் தேர்ந்த சமய நூல்கள் (திருமூலர்-திருமந்திரம், தேவார திருவாசகங்கள், திவ்ய புராணங்கள், திருவருட்பா போன்றவை) சொல்லாததை யாரும் புதிதாகச்  சொல்லிவிட முடியாது.

Monday, August 1, 2016

“பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா?”



“There is a hidden message in every waterfall.

  It says, if you are flexible, falling will not hurt you!” 

                                             ― Mehmet Murat ildan

வாழ்வில், உற்சாகம் தொற்றிக்கொள்ள ஒரு சில வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறது.  வற்றிப்போகவும் அப்படியே!

“குற்றாலம் போகலாமா?” 

இந்த வினா, சட்டென இளமையையும் மீட்டெடுத்து, துள்ளலையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. பணி ஓய்வுபெற்ற, என் வயதொத்த பலர் ஒன்று கூடி, வருடமொரு முறை குற்றாலம் சென்றுவருவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறோம். வாடிக்கை மறந்திடலாமா? இந்த வருடமும் அவ்வாறே!

பல வருடங்களாகத் தொடரும் பயணம். நடுவில் வந்தோர் பலர். விலகியோர் சிலர். வாழ்க்கையைவிட்டே அகன்றவர் சிலர். எனினும் மறைந்தவர்களின் நினைவுகளைச் சிலிர்த்து நினைத்துக் கொண்டு, பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆயிரம்? லட்சம்? கோடி? எத்துனை ஆண்டுகளாக குற்றால அருவிகள் பொழிந்து கொண்டிருக்கின்றன? எத்தனை மகான்களையும், சித்தர்களையும், அரசர்களையும், ஆண்டிகளையும் பார்த்திருக்கிறது? யாரறிவர்? 

ஆனவங்களையும் அகங்காரங் களையும் ஒரே சிதறலில் வீழ்த்திவிட்டு, ஆர்பரிக்கும் மௌனத்தோடு புன்னகைக்கும் குற்றாலத்தைக் கண்டுதான்,  “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்; ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்” என்று ஒரு புலவர் பாடினார் போலும்.

‘ஹோ..’ என்ற அருவியின் இறைச்சல் காதுகளுக்கு இன்ப ரீங்காரம்.  கருத்த மத  யாணைகள் போல மதமதப்புடன் அலட்சியமாக அமர்ந்திருக்கும் குன்றுகளுக் கிடையே, சீறிப்பாயும் நீர். திகட்டாத இன்பம்! மாறா இளமை! இயற்கையென்னும் இளைய கன்னியின் உச்சம் தொட்ட அழகை உறையவைத்து, வண்ணமயமாய் தீட்டிவைத்துக் கொண்டுள்ளது குற்றாலம்.  வயது, பால், இன வேறுபாடின்றி அனைவரும் குழந்தைகளாய் மாறி குதூகலிக்க அருவிகளைப்போல மற்றொன்று இல்லை.


மதிய நேரம். மெயின் அருவியில் திளைத்தெழுந்த பொழுது உணராத வெயில், வெளியே வந்ததும் சுட்டெரித்தது. பழைய குற்றாலத்தில் அவ்வளவாக நீரில்லை. தகித்தெடுத்தது. சற்றே ஏமாற்றத்துடன் ரூமிற்குத் திரும்பினோம். மாலை நெருங்கிற்று. தென்மேற்கில் மேகம் திரண்டெழுந்தது. மேற்கு மலைகளை, தன் கருத்த உடலால் போர்த்திற்று!  மலைகளும் காடுகளும் திரையிட்டுக் கொண்டன. அருவிகளும் கூட குதூகலித்து கூடுதல் சப்தமிட்டன. நிமிடங்களில் ஊரெங்கும் சாரல் வீசிற்று.  ‘சில்லென்ற’ காற்று வீச,  இறகுகளால் வருடுவது போல உடலெங்கும்  மழைப் பூக்கள் சொரிந்தன.  “இதற்காகத்தானே இங்கு வந்தாய்? இந்தா பெற்றுக் கொள்... வேண்டுமளவு பெற்றுக் கொள்...” என  சாரலும் காற்றும் இதமாகச் சூழ்ந்து கொண்டன! 


அறுசுவை உணவு அளவின்றி பரிமாறப்படும் பொழுது, அறையில் பட்டினி கிடக்க பைத்தியமா எங்களுக்கு? ஓட்டமாக ஓடினோம் ஐந்தருவிக்கு!  ஆஹா.. பிறவிப் பயனை அடைந்தோம். அருவியில் கூட்டமில்லை. ஐந்து கிளைகளிலும் நீர் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.   சூரியனின் பிரகாசத்தைப் பார்த்து வியந்து, அதனைப் அப்படியே பறிக்க முயன்றானாம் ஹனுமன். அதுபோல ஐந்து அருவிகளையும் அப்படியே விழுங்கவிட ஆசைகொண்டது மனது.  ஆனந்தக் குளியல். ஏகாந்தக் குளியல். திளைத்துக் கொண்டிருக்கும் பொழுதே.. நீர் இன்னமும் வேகமாக பெருக்கெடுத்தது. உற்சாகமும் தான். சுற்றிலும் நீர்த்துளிகள். அருவியின் சிதறலா ? சாரலின் தீவீரமா?  பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, நீர் பழுப்பு நிறமாயிற்று. ஐந்து கிளைகளும் ஒரே கிளைகளாக மாறிவிட்டதோ  என அஞ்சுமளவிற்கு நீர். ஆனந்தம்.. பரமானந்தம். அவ்வளவுதான், போதும் கிளம்புங்க.. நீர் அபாய அளவை அடைந்துவிட்டது  என காவல்துறை எச்சரிக்க, போதும் போதும் என்னும் அளவு நீராடிவிட்டு, புது மனைவியைப் பிரியும் மனோபாவத்தோடு விலகினோம்.


குற்றாலத்தின் அருகில் இருக்கும் மற்றொரு சொர்க்கம். பாலருவி.  வித்தியாசமான அருவி. மலையின் உச்சியிலிருந்து, தடுக்கி தடுக்கி பூஞ்சிதறலாய் கீழே இருக்கும் ஒரு தேக்கத்தில் விழும் அருவி. அருவியை அடைய நீந்தித்தான் செல்ல வேண்டும். (ஒரு கயிறும் கட்டியிருக்கிறார்கள்) சடசட வென ஓங்கியடிக்கும் வேகம் இல்லை. மஹா உயரத்திலிருந்து விழுவதால், தேக்கம் முழுவதுமே பூஞ்சிதறல்களாய் நீர். நீந்திச் சென்று அருவியில் நனைந்து,  நீரின்  ஓட்டத்தினால் வெளியே தள்ளப்பட்டு, பின் மீண்டும் ஓரமாய் நீந்திச் சென்று, மீண்டும் விலக்கப் பட்டு... என்னே ஒரு அனுபவம்.

நண்பர்களுடன் அறைகளுக்குத் திரும்பினோம். அதில் ஒரு நன்பர்; விபுலானந்தன்  என்று பெயர். சாதாரணமாக காணவியலாத பெயர். (மயில்வாகணன் என்ற இயற்பெயர் கொண்ட ஒரு யாழ்ப்பாணத்து முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்)

நன்பரேயாயினும் 'நல்ல பாடகர்' என்பது அறியாத ஒன்று. பல பழைய பாடல்களைப் பாடினார். நாங்கள் விரும்பிக் கேட்டது "  பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..” என்ற கண்ணதாசன் இயற்றிய, நிச்சயதாம்பூலம் திரைப்படப் பாடல்.

உண்மைதானே...? பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தான் உடைமாறி, உருவம் மாறி, திசை மாறி, சிந்தனை மாறி சிதறிப் போனோம். ஆனால் குற்றாலத்து நங்கை,  என்றும் இளமையாய், “பாவாடைத் தாவணியில் பார்த்த அதே ரூபத்தில்” மோகம் பொங்க,  காதல் தளும்ப,  கிரங்கடிக்கும் அழகோடு, மயக்கும் சிரிப்போடு  நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறாள்.

அப்பாடலில் ஒரு பத்தி வரும்...

தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா? 
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா?
முத்தமிழே! முக்கனியே! மோகவண்ணமே! 
முப்பொழுதும் எப்பொழுதும் எனது சொந்தமே 

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா 
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா 

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும், 
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்,
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும், 
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் !!


கடைசி பத்தியில் யாரை நினைத்தேன் எனச் சொல்லவும் வேண்டுமா?

Sunday, July 31, 2016

கர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா?

கர்னாடகாவில், மீண்டும் ஒரு மாநிலம் தழுவிய ‘பந்த்’. இம்முறை, மகதாயி என்னும் நதியின் நீர்ப்பங்கீடு குறித்து, நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்த்.  

அவர்களுக்கு, எல்லோரிடமும் எல்லாவற்றிலும் சண்டை. மகாராஷ்ட்டிராவுடன், கேரளாவுடன் எல்லை மற்றும் நதி நீர் குறித்து சண்டை.  ஆந்திரத்துடன் கிருஷ்ணா நதி  நீர் சண்டை.  பெல்காம் குறித்த எல்லைச் சண்டை பிரசித்தமானது. கேரளத்துடன் காசர்கோடு குறித்து எல்லை சண்டை.  தமிழ்நாட்டுடன், காவிரி உட்பட சகலத்திலும் சண்டை.

அந்த மானிலத்தில் பிறந்த ரஜினிகாந்த், ஜெயலலிதா போன்றோர் தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்தாலும் அவர்களை எதிர்த்தும் சண்டை.  பெங்களூரில், தமிழ்த்திரைப்படங்கள்  திரையிடும் அரங்குகள் எத்தனை தடவை கல்லடி வாங்கியிருக்கின்றன?   சண்டியர் நிறைந்த மானிலமாக கர்னாடகம் மாறிவருகிறது.

தமிழ் நாட்டில் மொழிவெறி, பிராந்திய வெறி, ஜாதி வெறி போன்றவற்றைத் தூண்டிவிட சில சக்திகள் விடாது முயற்சிப்பது போல, கர்னாடகத்திலும் ‘வட்டாள் நாகராஜன்’ போன்ற பல ஆசாமிகள் இருக்கிறார்கள். எப்பொழுது, எந்தமாதிரி சண்டை கிளப்பிவிடக் கிளம்பலாம் எனக் காத்திருக்கும் ஆசாமிகள் இவர்.  ஒரு கொலை விழுந்தால் கூடப் போதும் உடனே இந்த ‘மாமனிதர்கள்’ ஆஜராகி பிரச்சினை கிளப்புவதிலும், திசை திருப்புவதிலும் நிபுனர்கள்.  மகதாயி நதிநீர் குறித்து நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வந்ததுமே களத்தில் குதித்து ரகளை. பேச்சுவார்த்தை, சுமுகமான உடன்பாடு, நீதியை மதிப்பது எல்லாம் இவர்களுக்குத் அன்னியமான  நடவைக்கைகள்.

மொழிவாரி மாநினிலங்கள் இந்தியாவில் அமைந்தது,  நன்மைகளை விட தீமைகளையே அதிகம் விளைவிக்கிறது எனத் தோன்றுகிறது.   

நூறு சதம் இல்லாவிடினும், மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பிராந்திய மொழிகளின் அடிப்படையில் பிரித்தறிவதுதான்  சரி.  பிராந்திய மொழிகளின் அடையாளம் காக்கப் படவேண்டும் என்பது மொழிவாரி மானிலங்கள் அமைக்கப்பட்டதன் முக்கியமான காரணிகளில் ஒன்று. ஆனால் அந்தக் காரணிகள் யாவும் முற்றாக முறியடிக்கப் பட்டுவிட்டன. தெலுங்கு, தமிழ், கர்னாடகம் ஆகியவை வெறும் பேச்சுமொழியாகவே மாறி விடும் துரதர்ஷ்டமான நிலைமை வெகுவிரைவில் வாய்த்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. ‘மராட்டிய மொழி’ அந்த நிலைமையை கிட்டத்தட்ட அடைந்து விட்டது.  மலையாளம் ஓரளவு இந்த அபாயத்திலிருந்து தப்பிவிடுகிறது. அம்மானிலத்தின் செரிந்த இலக்கியங்களும், தேர்ந்த படிப்பாளிகளும் இதை சாத்தியமாக்கியுள்ளனர்.

மற்ற தென்னிந்திய மானிலங்களில், அரசியல் வாதிகள் கிளப்பிவிட்டதைப்போல  ஆபத்து ‘இந்தி’ யிடமிருந்து வரவில்லை; மாறாக  ஆங்கிலத்திலிருந்து!!  நகரப் பள்ளிகளின் பெரும்பாலான மானவர்களுக்கு, அவரவர் தாய்மொழியில் சரளமாகப் பேசவராது.  எழுத வராது. ஆங்கில மோகம் சிறு நகரங்களையும் கிராமங்களையும் கூட வேகமாக பாதித்துவருகிறது என்பது தெரிந்தது தானே? பெற்றோர்களுக்கு, என் மகன்/ள் களுக்கு தாய்மொழி தெரியாது என்பது ஒரு ‘கௌரவமான’ விஷயம்.  அது ஒருபுறம் இருக்கட்டும். விரிவாக பின்னர் பார்க்கலாம்.

இப்பொழுது கர்னாடகத்தின்  சண்டித்தனத்தைப் பார்ப்போம். 

நாடுகளுக்கிடையே நதி நீர்ப்பங்கீடு குறித்து போர்கள் வராமலிருந்ததே இல்லை. ஆனால், வெகு வருடங்களுக்கு முன்பே, இத்தகைய சண்டைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து ஒரு தெளிவான வழிகாட்டுதல் உலக நாடுகள் இடையே ஏற்பட்டுள்ளது.  ஒரு நதியில் 1000 டி.எம்.ஸி தண்ணீர் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.  அந்நதி ஆறு நாடுகள் வழியாக ஓடுகிறது எனக் கொண்டால்,  தண்ணீரின் மூலாதாரம்(கேட்ச்மென்ட்) எந்த நாட்டிலிருந்து கிடைக்கிறது எனக் கருதாமல், ஒவ்வொரு நாட்டிலும், அந்த நதி கடக்கும் தூரத்திற்கு ஏற்றாற்போல கிடைக்கும் தண்ணீரை விகிதாச்சார முறைப்படி பங்கிட்டுக்கொள்வது ஏற்றுக் கொள்ளப் பட்ட நடைமுறை.  இந்த அடிப்படையில், நாடுகளுக்கிடையே (இந்தியா-பாகிஸ்தான்-வங்காளதேசம் உட்பட) இந்த சச்சரவு பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டது. ஆனால் ஒரே நாடாக, இந்தியாவிற்குள் நடக்கும் சண்டைகளுக்கும் அழும்புகளுக்கும் கணக்கே இல்லை.  சதா எல்லோரிடமும் தகராறு.

இந்த சண்டைகளுக்கான தீர்வு என்னவென்று, இந்த அரசியல் வாதிகளுக்குத் தெரியாதா என்ன? நன்றாகத் தெரியும். ஆனால் ‘நியாயப்படி, நியதிப்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று மக்களுக்குச் சொன்னால், பிறகெப்படி ஜாதி,மொழி,மாநில, இன வெறிகளைத் தூண்டிவிட்டு பிழைப்பை ஓட்டுவது? எல்லாத் தண்ணீரும் எங்களுக்கே வேண்டும், எனக் கிளப்பிவிட்டால்தானே சில்லறை பார்க்கலாம்? ஓட்டு வாங்கலாம்?

சரி... அரசியல்வாதிகள் நியாயத்தைச் சொல்லி மக்களை ஏற்க வைக்கும் அளவிற்கு நல்லவர்களும் அல்ல வல்லவர்களும் அல்ல. ஆனால் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றபின்னும், நீதிபதிகள் பல்வேறு விஷயங்களை ஆய்ந்து ஒரு முடிவிற்கு வந்து தீர்ப்பளித்தபின்ன்ரும், நீதிமன்றங்களையே எதிர்த்து பந்த் நடத்துவது என்ன வகையில் சரி? மகதாயி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கன்னட  அமைப்புகள் சார்பாக முழு அடைப்பு நடைபெற்றுள்ளது. வழக்கம்போல கன்னட திரைப்பட அமைப்பைச் சார்ந்தவர்கள் பந்திற்கு முழுஆதரவு தெரிவித்து, போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். ஒழுங்கான சினிமா எடுப்பதைத் தவிர மற்ற மீனவர்,  நதி நீர், எல்லைத் தகராறு போன்ற எல்லாவற்றிலும் சினிமாக்காரர்கள் ‘கருத்து’ சொல்லத் தயார்.  தமிழக பேருந்துகள் கர்னாடகத்திற்குள் செல்லவிலை, கோவா மற்றும் மகாராஷ்டிர பஸ்களும் அப்படியே!

தேசிய-சுதேசி-இடது கட்சிகள் யாவும், ‘மொழி மற்றும் நதி’ விஷயங்களில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. கேரள முதல்வர் ப்ரணயி விஜயன் அவரது அரசியல் சிந்தனை காரணமாக ‘முல்லை அணை’  நன்றாகத்தான் இருக்கிறது; நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்கிறோம் என தைரியமாக அறிவித்துவிட்டு பின்னர் ஜகா வாங்கியது நினைவிற்கு வருகிறதா?

நீதி மன்றங்களின் தீர்ப்பை மதிக்காவிட்டால், அராஜகவாதம் மட்டும் தானே மிஞ்சும்? பொறுப்பற்ற இந்த அமைப்புகளிடமிருந்து ஜன நாயகத்தை மீட்டெடுப்பது யார்?  இன்னும் எத்தனை காலத்திற்குத்தான்  மானிலங்களுக்கிடையே நிலவிவரும் எல்லை-நதி நீர்ப்பிரச்சினைகளை தீர்க்காமலிருப்பார்கள்? குறுகிய இன-மொழி-பிராந்திய வாதங்களையும், ஓட்டு அரசியலையும் தாண்டி ஒரு தீர்வுக்கு தலைவர்கள் உடன்பட வேண்டும் என்பதை எப்போது உணர்வார்கள்?

இவர்களுக்கு புத்தி வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர, வேறு வழி ஏதாவது...? 

Sunday, July 24, 2016

சென்னை விமானப் படை விபத்து

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகார் அவர்களுக்கு,

இந்திய விமானப் படையின் AN32 போக்குவரத்து விமானம், அதில் பயணம் செய்த 29 பேர்களுடன் காணாமற்போய் மூன்று நாட்களாகி விட்டன. “அதிகாரத்துவ மொழியில்” நீங்கள் காணாமற் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டாலும், விலை மதிப்பற்ற 29 உயிர்களை இழந்தது விட்டோம் என்பது தான் உண்மை.

ருஷ்யத் தயாரிப்பான AN32, முப்பது வருடங்கள் பழமையானது என்றாலும், இந்திய விமானப் படையில் இன்னமும் முக்கியமான-கேந்திரமான போக்குவரத்து விமானமாக இதை வைத்திருக்கிறீர்கள். இதுவரை, 77 முறை இந்த வகை விமானம் விபத்தில் சிக்கி யிருக்கிறது. இந்த 29 பேர் நீங்கலாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட விமானப் படை வீரர்கள் உயிரழந்துள்ளனர் என கூகுள் சொல்கிறது. இந்தியா, போர்க்காலத்தில் இழந்த விமானப்படை விமானங்களை விட, அமைதிக் காலத்தில் இழந்தவையே அதிகம் போலும்.

உலகில், பாதுகாப்புப் படைகளில் விபத்துக்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. நடக்கும்; அத்தி பூத்தாற்போல; கடுமையான சூழ்நிலையில். ஆனால் இந்தியாவில் நடப்பது போல இவ்வளவு கேஷூவலாக, இழப்புக்களை வேறு எந்த நாடாவது சந்தித்திருக்குமா என்பது சந்தேகம். பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு; சப்மரீன் வெடித்து உயிரழப்பு; விமானம் வெடித்துச் சிதறி உயிரழப்பு. பறக்கும் சவப்பெட்டியாக உலவிக் கொண்டிருந்த ‘மிக்’ விமானங்கள்.

நாங்கள் செய்தித் தாள்களில் அறிந்து கொண்ட வகையில், விபத்துக்குள்ளான விமானம் இந்த மாதமே, மூன்றுமுறை டெக்னிகல் ஸ்னாக் ரிப்போர்ட் ஆகியுள்ளதாம். ஏர் வொர்த்தினஸ் என்ன ஆச்சு?
சம்பிரதாயமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்து பார்த்துவிட்டார்.

ராணுவ ரகசியங்கள் உங்களுடையதாக இருக்கலாம்; வைத்துக் கொள்ளுங்கள்! ஆனால் உயிரழந்த வீரர்கள் எங்களைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கென்று குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் சிவிலியன்களான எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு விபத்துக்கள் நடக்கின்றன, விமானிகளின் உயிருக்கு தேவையற்ற வகையில் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க என்ன செய்தீர்கள் என எங்களுக்கு விளக்க கடமைப் பட்டுள்ளீர்கள்.

வாங்கிய காலத்தில் AN 32 கடுமையான சூழ்னிலையிலும் பறக்கும் திறன் கொண்டது என்றாலும், அவைகளுக்கு வயதாகிக் கொண்டிருப்பதையும், மாறுபட்ட சூழ்னிலையில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து விமானங்கள், பெரிய எண்ணிக்கையில் தேவைப்படும் என்பதையும் காலத்தே உணர்ந்தீர்களா? அதற்காக காலத்தே திட்டமிட்டீர்களா?

பெரிய எண்ணிக்கையில் Antonov AN 32 க்களை வைத்துக் கொண்டு, அதற்காக ஸ்பேர்களை போதுமான அளவு வைத்துக் கொண்டிருந்தீர்களா? சரியான முறையில் அவற்றைப் பராமரித்தீர்களா? சரியான சமயத்தில் உதிரிகளையும் பராமரித்தலையும் டிஃபன்ஸ் செக்ரடரி உறுதி செய்தாரா? இல்லை மற்ற பொதுத் துறை நிறுவனங்களைப் போல, அதிகார வர்க்கம் தன் மூக்கைவிட்டு, நிலைமையை மோசமடையும் வரை காத்திருந்தார்களா? பராமரிப்புக்காக தேவையான நிதி ஒதுக்கீடு இருந்ததா?

தற்போது AN32 க்களை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும், உக்ரைனுடன் சரியான வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளீர்களா? இழந்த விமானங்களுக்கு அவர்கள் ஏதேனும் பொறுப்பு ஏற்கிறார்களா? காலத்தே முடிவெடுத்தீர்களா? அவர்கள் சென்னைக்கு வந்தார்களா?

ஒரு பைலட்டை உருவாக்க எவ்வளவு செலவு செய்கிறோம், அதற்காக எவ்வளவு காலம் பிடிக்கிறது என்பதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு விமானம் போய்விட்டால், இன்னொன்றை பெங்களூரிலோ அல்லது யூக்ரைனிலோ வாங்கிக் கொள்வீர்கள். ஆனால் இழந்த உயிர்களை திரும்பப் பெறமுடியுமா?

நடந்த விபத்து எங்களுக்கு பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. சீனாவும், பாகிஸ்தானும் தங்களது பாதுகாப்பு சாதனங்களை, தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது இந்திய பாதுகாப்பு படை இருக்கிறதா? அவர்களுக்கு தேவையான நவீன தளவாடங்கள் வழங்கப் படுகிறதா? அதி நவீன Sukhoi போர் விமானம் கூட எப்படி விபத்துக் குள்ளானது?

அரசியல் வாதிகள் “நமது படைகள் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவைகள்” என கோஷம் எழுப்புதை இனி நாங்கள் நம்பத் தயாரில்லை.

இனி ஒரு பாதுகாப்புப் படை வீரர், இந்த மாதிரியான ‘தவிர்த்திருக்கக் கூடிய’ விபத்துக்களில் உயிரிழப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. நெருக்கடியான காலங்களில் ‘செயல்படும் அளவிற்கு’ பயிற்சியளிக்கப் பட்டார்களா.. அது உங்கள் நிரலில் இருக்கிறதா எனவும் அறிய விரும்புகிறோம்.

இழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள். கால நிர்ணயத்துடன் கூடிய, அதிகாரம் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து, நமது படைகளில் எங்காவது பலவீனம்-ஓட்டை இருக்கிறதா எனக் கண்டுபிடித்து, சரியான பயிற்சி மற்றும் மறு பயிற்சி ஆகியவற்றை உறுதி செய்யுங்கள்.

ஒரே நாள் இரவில் எந்த விமானப் பிரிவினையும் ஒழித்துவிட முடியாதென அறிவோம். எனினும் குறிப்பிட்ட காலக் கெடுவில் காலாவதியான விமானங்களையும் தளவாடங்களையும் மாற்றுங்கள்.

இந்தியத் திருநாட்டில், மனித உயிர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது, எவர் கவலைப் படப்போகிறார்கள் என்பதை நன்கறிவோம். . அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை 29 என்பது ஒரு எண்ணிக்கை. எங்களுக்கு அவர்கள் உற்றார்-உறவினர்.



கோஷங்களை விடுத்து செயல்படுங்கள்! அதுவே எங்களது வேண்டுகோள்.

Friday, July 22, 2016

அலி சகோதரர்கள்.



அலி சகோதரர்கள்.

பொதிகைத் தொலைக்காட்சியில்,  ஒவ்வொரு வெள்ளியன்றும் காலை 0845 மணிக்கு, விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி, சுதந்திரப் போராட்டத்தில் அவர்களது மகத்தான பங்கு, தியாகம் பற்றி நாம் கேட்டே இராத தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், திரு முரளி என்பவர். ஒரு வருட்த்திற்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சி.

இரண்டாவது வாரமாக ‘அலி சகோதரர்களைப் பற்றி’ இன்று குறிப்பிட்டார் திரு முரளி. அலி சகோதரர்கள் தேசவிரோத குற்றம் சாட்டப்பட்டு (தேசவிரோதம் என்றால் – அக்காலத்தில் சுதந்திரப் போராட்டம்) கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இருவரில் முகமது அலி மிகச் சிறந்த பேச்சாளர். அறிஞர். அவரது வாதத் திறமை குறித்து, நீதிபதிகளே வியப்பர். தீவீரமான தேசபக்தர். 

அவர் கராச்சி சிறையில் தனிக் கொட்டடியில் பட்ட சித்திரவதைகள், அவமானங்கள் குறித்து விரிவாகப் சொல்லிவிட்டு, கடைசியில் ஒரு தகவல் சொன்னார் பாருங்கள்!  சிலிர்த்துப் போனது.  

பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சமரசத் திட்டத்தை உருவாக்கி, அதற்கு அலி சகோதரர்கள் ஒப்புக்கொண்டால், சிறையிலிருந்து விடுதலையாகலாம், சித்தரவதைகளிலிருந்து மீளலாம் என்பதே அது.  

இம்மாதிரி பல விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆசைகாட்டப் பட்டு, அவர்கள் அதை மறுத்து, தூக்குக் கயிற்றை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம்-ஏராளம். 

ஆனால், அலியின் தாயார் செய்த ஒரு காரியம், மகத்தானது. நம்ப முடியாதது.  பிரமையுறச் செய்வது.
(அந்தமானுக்குச் சென்றிருந்த போது, அங்கே உள்ள கொடுமையான சிறையில், நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்ட வார்த்தைகளில் வடிக்க இன்னல்கள், கற்பனைகூட செய்யமுடியாத கொடூரங்கள், கொலைகள் ஆக்யவற்றைப் படித்து, ஒலி-ஒளிக் காட்சியாகப் பார்த்துவிட்டு, பல நாட்கள் தூக்கத்தைத் தொலைத்தேன்)

அந்தப் பெண்மணி, தன் மதத் தலைவர்களிடமிருந்து ஒரு நீண்ட வாளினைப் பெற்றுக் கொண்டு, அதைத் தன் உடையில் மறைத்து வைத்துக் கொண்டு, சிறையில் வாசலில் காத்துக் கொண்டிருந்தாரம். எதற்காக?  ஒருவேளை தன் மகன், அரசாங்கம் தரும் ‘சமரச் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, விடுதலை பெற்று வெளிவந்தால், அந்தக் கத்தியாலாயே தன் மகனை வெட்டித் தள்ளிவிட்டு, அவரைப் பெற்ற தன் வயிற்றையும் கிழித்துக் கொள்வேன்’ என்றாராம்.

இதைப் பற்றி வா.வே.சுப்ரமணிய ஐயர், குறிப்பிடும்போது, நாம் ஜான்ஸி ராணி மறைந்துவிட்டார் எனக் கவலைப்பட்டோம். இல்லை.. இல்லை இந்தத் தாயின் உருவில், பல ஜான்ஸிராணிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றாராம்.

எப்படிப்பட்ட தலைவர்களைப் பெற்றிருந்தோம் நாம்.
எந்தத் தேசம், தன் வரலாற்றை மறக்கிறதோ, தன் தியாகிகளை மறக்கிறதோ அவை மீண்டும் இருண்ட காலத்திற்கே செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.

சில வாரங்களுக்கு முன் சுப்ரமணிய சிவாவைப் பற்றி சிலவாரங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் திரு முரளி. கேட்கும் போது, நம்மையறியாமல் கண்களில் நீர் திரளும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளி காலை 0845க்கு முடிந்தால் பொதிகை பாருங்கள்.

Tuesday, June 28, 2016

உயர்ந்த கரங்கள்…

வழமையாக, முதல் நாள் நடக்கும் திருமண வரவேற்பிற்குச் செல்ல இயலாததால், அடுத்த நாள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்.  மிகவும் தெரிந்தவர்கள், மற்றும் உறவினர்களைத்தவிர மீதியுள்ள அனைவரும் வரவேற்பிற்கு மட்டும் செல்வது நடைமுறையாகிவிட்டதே!   

தாலிகட்டும் நேரம் நெருங்கியது. அனைவரின் கையிலும் பூவிதழ்களும் அட்சதைகளும் வழங்கப்பட்டன. அனைவரது வாழ்த்தும் மணமக்களுக்குக் கிட்டட்டும்  என்பதற் காகத்தானே, இவை அனைவரது கையிலும் தரப்பட்டன? 

ஆசீர்வதிக்கத் தயாராகும் பொழுது, திடீரென, எங்கிருந்து முளைத்தார்களோ தெரியவில்லை, பத்து பதினைந்து  நபர்கள்,  தங்கள் கையில் மொபைல் ஃபோண்களை நீட்டிக்கொண்டு, மணமக்களை மொத்தமாகச்  சூழ்ந்து கொண்டனர்; அவையில் இருக்கும் அனைவருக்கும் தங்களது ப்ருஷ்ட பாகங்களைக் காட்டிக் கொண்டு!  தாலி கட்டும்  நிகழ்ச்சியைப் பதிவு செய்து கொள்கிறார்களாம்.  நல்லது! ஆனால், மலர்களையும் அட்சதையையும் யார்மேல், எதன் மேல்  தூவ?  அழிச்சாட்டியம்!

கூடியிருந்தவர்கள் பலரும் இதனைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை இல்லை. ஒரு தோராயமாக, அட்சதைகளை,  மணமக்கள் மேடை நோக்கி, தங்கள் புஜ சக்திக்கு ஏற்றவாறு வீசி யெறிந்துவிட்டு,  நடையைக் கட்டினர்.  முன்வரிசையில் இருந்தோர் அனைவரும் தங்கள் தலையில் விழுந்த அரிசிகளை தட்டிவிட்டுக்கொண்டனர்.

ஸ்மார்ட் ஃபோன் வந்தாலும் வந்தது,  அனைவரும் புகைப்பட நிபுணராகிவிட்டனர். Auto மோடில் போட்டால் அனைத்தை யும் ஸ்மார்ட் ஃபோணே பார்த்துக் கொள்ளும்.  நிபுனத்துவம் ஏதும் பெற்றிருக்க வேண்டியதில்லை.  முன்பெல்லாம் ஒரிரு ஃபோட்டோகிராபர்கள்தான், மணமக்களை மறைத்துக் கொள்வர். அதற்கே காண்டு வரும். இப்பொழுது சிறியவர் முதல் பெரியவர் வரை, அவரவர் வசதிக்கேற்ப ஒரு ஸ்மார்ட்ஃபோன் என்கிற ஆயுதத்தோடு,  ஒரு படையே திரண்டு, மேடையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.  

இந்த வாரம் ‘The Hindu’  நாளிதழ்  (24/06/2016) ஒரு கட்டுரையை வெளியிட்டி ருக்கிறது. கட்டுரையாளர் (எஸ். புரபு) மிகவும் நொந்து போய்விட்டார் போலிருக்கிறது. மனிதர் சென்னையில் பிரம்மோத்சவம் ஒன்றிற்கு, சாரி..சாரி, செல்ஃபோன் உற்சவத்திற்குச் சென்றிருக்கிறார். அதே கடுப்பில் கட்டுரை எழுதிவிட்டார். அதன் சுருக்கம் கீழே:
---

கோயில், பக்திப் பிரவாகமிட்டிருந்தது.  மிக நீண்ட வரிசைகள்.  தாள இயலாத கூட்டம்.  “சிறப்பு தரிசன” வரிசைகளும்,  நெரிசலில் பிதுங்கிக் கொண்டிருந்தன.  கவலை, தேவை, பிரார்த்தனை, நன்றி தெரிவிக்க அல்லது சும்மா தரிசிக்க என பல்வேறு நோக்கங்களை உத்தேசித்து கோயில்களில் கூட்டம்  நிரம்பி வழிகிறது. அதுசரி... ஏன் கோயிலுக்கு வரவேண்டும்?  இறைவனுக்கு முன்னால், ‘தன்னை’ இழந்து, அவனது அருளில் கரையவேண்டும்  என்பதற்குத்தானே?  கண் இமைக்காது, அபிஷேக ஆராதனைகளை காண விருப்பம் கொண்டிருக்க வேண்டும். அவனை இரு கரம் கூப்பி வணங்கவேண்டும். அதற்காகத்தானே?  

ஆனால், தற்போதும் கரங்கள் கூப்பப்படுகின்றன. உயருகின்றன! வணங்குவதற்கல்ல!  கூப்பிய கரங்களுக்குள் கைபேசிகள் தான் இருக்கின்றன.  ஆமாம். பக்தி, எலக்ட்ரானிக் கருவிகளால் ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டது. இறைவனை தனது கேமிராவிற்குள் கொண்டுவர, படுபிரயத்தனம் நடைபெறுகிறது.

கோயில் சுவர்களில், புகைப்படம் எடுக்கத் தடைசெய்யப்ப ட்டுள்ளது என்ற அறிவிப்புகளை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.  பக்தர்களின் கவனம் முழுவதும் முக்கியமான தருணத்தை மொபைல்களில் பதிவு செய்துகொள்வதில் இருக்கிறதே தவிர, தரிசிப்பதில் இல்லை.

சமயக் குரவர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனின் வீதி உலாக்களும்,உற்சவங்களும், ஆராத னைகளும், பக்தர்களின் மீது எவ்விதம் நேர்மறையான சக்தியைச் செலுத்தும், என எழுதி வைத்துள்ளனர்.  திருவாரூர் தியாகராஜர், சென்னை கபாலீஸ்வரர் மற்றும் ஆரூத்ரா தரிசனங்கள் யாவும் வீதியில் கூடியிருந்த மக்களின் கண்களில், எப்படி கண்ணீரை வழிந்தோடவைத்தன, அவர்கள் உற்சவம் முடிந்து வீடு திரும்பும் பொழுது, எவ்வளவு இனிய கணங்களைச் சுமந்து சென்றனர் என கரைந்துருகி  பாடிவைத்துள்ளனர். 

முக்கியத் தருணங்களில் எல்லாம், பக்தர்களின் கரங்கள் பரபரப்பாக செயல் படுகின்றன. வணங்குவதற்கல்ல; புகைப்படமெடுக்க. நீ  நன்றாக எடுத்தாயா, நான் நன்றாக எடுத்தேனா என்று போட்டி வேறு.  சரணாகதி என்பது இறைவனிடம் நடக்கவில்லை; செல் ஃபோண்களிடம்தான்.

‘பிரார்த்தனைகள் யாவும் அமைதியுடன் கட்டுப்பாட்டுடன்’ என்பது காலாவதியான சங்கதி போலும்.


வீட்டிற்கு வந்தாலும், நன்றாக தரிசனம் கிட்டிற்றா என்ற விசாரிப்பைவிட, ‘எங்கே எடுத்த ஃபோட்டோக்கள்? ... காண்பி’ என வினவப்படுவதே அதிகம்.  கோயில் பிரகாரங்களில் வலம் வரும்பொழுதுகூட, செல் ஃபோண்களில் ‘செய்திகளை டைப் கொண்டு’ தானே செல்கிறார்கள்?

வழிபாட்டுத் தலங்கள் வழிபாட்டுக்கு மட்டும்தான் என எப்பொழுது மக்கள் ‘தாங்களாகவே’ உணர்வார்கள்?
                                                            ---


அது சரி..... காலம் மாறிப் போச்சு, செல்ஃபி மோகத்தில் உயிரையே விட்ட பலர் இருக்கும் பொழுது, ஆஃப்டரால், தரிசனமா முக்கியம் என்கிறீர்களா?







Friday, June 24, 2016

.ஆல்....

வாழ்க்கைப் பாதையில், ஒவ்வொரு கட்டத்திலும்,  ‘..ஆல்ஒரு 
மௌனமான திருப்பு முனை. இன்னும் கொஞ்சம் 
படித்திருந்தால்,இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால், வேறு 
மாதிரி முடிவெடுத்திருந்தால், இந்த புத்தி அப்போதே 
இருந்திருந்தால், அட.. அல்பமா  டிரைவிங்கில் 
சற்று  அவசரப்படாமல் இருந்திருந்தால்... இப்படி ஒவ்வொரு 
'ஆலும் ..' ஒரு  மௌணவெடியல்லவா? பெர்முடேஷன்-
காம்பினேஷன் போல, முடிவில்லா சாத்தியங்களுடன்
ஒவ்வொரு ‘..லும்..’,  வாழ்க்கை திசைமாறிப் 
போகவைக்கும் வலு  கொண்டது.

ப்ரோக்ராம்களில் வேண்டுமானால் if... else போட்டு எப்படி 
விரும்புகிறோமோ அப்படி முடிவெழுதிக் கொள்ளலாம். 
நிஜத்தில் if க்குள் இருப்பதா else க்குள்  செல்வதா
என்பது ஒவ்வொரு கட்டத்திலும் திணறும் குழப்பம். அடுத்த 
else க்குள்  என்ன இருக்கிறது என்பது மர்மவெடி.  மகிழ்ச்சிக் 
கொத்தாய்ப்  பூப்போமா  அல்லது வெடித்துச் சிதறுவோமா
லூப்பின் முடிவு யார் கையில்இறைவனிடத்தா?  தெரிய 
வில்லை. எனினும், தத்துவங்கள், அனுபவ மொழிகள்
பட்டறிவு,  கல்வியறிவு, சான்றோர்கள்   வழிகாட்டுதல் 
கொண்டு , எந்த சமயத்தில் எப்படித் தீர்மாணிப்பது என 
ஓரளவே யூகித்துச் செல்லலாம்.

தத்துவங்கள் ரெடிமேட் சட்டையா, அப்படியே 
அணிந்து பயணிக்க? அவை கானகத்தில்காரிருளில் 
கையிலிருக்கும் ஒளிவிளக்கு போல. ஒளிகொண்டு வழியை
நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும்.  கிணற்றில் விழுவதும் 
கிழக்கில் வெளியேறுவதும் நம் கையில்.


-- ஆல் .....

உன்னைச் சுற்றியோரது விரல்கள் யாவும்,
விளைந்தனவற்றிற்கு நீயே பொறுப்பென சாட்டும் பொழுது,
உலகு உனைச் சந்தேகிக்கும் பொழுது,
உன்மேல் நீ நம்பிக்கை கொண்டு தலைஉயர்ந்து 
நிற்பாயேயானால்...

காத்திருந்து காத்திருந்து உடலும் மனமும் சோராதிருந்தால்..
பொய்யுரைகள் யாவும் உன்னிடம் பொய்த்துப் போனால்,
வெறுப்புரைகள் யாவும் உன்னை வீழச் 
செய்யாதிருக்குமானால்,
உன் கனவுகளுக்கு நீயே பொறுப்பேற்றால்,

உச்சமும் நீச்சமும் எளிதாக உன்னைக் கடந்துபோனால்,
முட்டாள்களின் - சுய நலமிகளின் வலையில்  தப்பித்தால்,
உன்மைகள் உன்னை வைதாலோ வாழ்த்தினாலோ
நீ உடைந்து போகாமலிருப்பாயேயானால்,

மீந்த சக்திகளைத் திரட்டி மீண்டுடெழுவாயானால்,
உச்சத்தில் தலை கனமாகாமலும்நீச்சத்தில் தலை 
கவிழாமலும் இருக்க முடியுமானால்மாந்தரிடமும் 
மந்திரியிடமும் நிலையிழக்காமல் பழக முடியுமானால்,

உற்றமும் துரோகமும் உனைக் காயப்படுத்த 
அனுமதிக்காமலிருப்பாயேயானால்,
கற்றவர்களை நாடி கலந்துரையாட முடியுமானால்,
எவரும் உன்னைத் தூசியென வீசியெறிய முடியா 
நிலையில் இருப்பாயானால்
எதையும் எப்போதும் மன்னிக்கும் மனம் 
பெற்றிருப்பாயானால்,

நீயே மனிதன்..
உலகு உனக்கே!
---

எனக்கும் ஒரு ஆல்பற்றிய ஒரு மயக்கம் இருக்கிறது. அது 
என் துணைவிபற்றியது. அவர்  மறையாமல் இருந்திருந்தால்.  
26/06/16 - ஞாயிறு அன்று   மறைந்தஎன் மனைவியின்
பிறந்த நாள். 

அவர் இருந்திருந்தால் அன்றுடன் அவருக்கு அறுபது வயது  
நிறைவு.   அவர் இம்மாதம்  பணியிலிருந்து ஓய்வு 
பெற்றிருப்பார்.

பணி  ஓய்வுகுறித்தும், ‘பணிஓய்விற்குப் பின்...’ எனவும் என 
அவர் வைத்திருந்த  நிரல்கள் ஏராளம்.  ஆனால் இறைவன் 
அவருக்கு நிரலில் இறுதியை  சீக்கிரமே கொடுத்து விட்டான். 

அவரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்! எனது 
ஆரோக்கியத்தின் இலட்சனத்திற்குநான் வெகுசீக்கிரமே 
போய்விடுவேன். உனை வெறுப்போர் உலகில் இல்லாத 
படியால்நீ சுற்றங்களோடு இறுதிவரை பத்திரமாக 
இறுதிவரை இருக்கலாம்.என்று. 

நாம் போடும் ஆல்’ களுக்குப் பொருள் இருக்கிறதா என்ன
இப்பொழுது எல்லாம் தலைகீழ்.

உன் பிறந்த நாளில் உனை வணங்குகிறேன். உடன் 
ணங்கவும்  ஆளின்றி!