Sunday, July 24, 2016

சென்னை விமானப் படை விபத்து

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகார் அவர்களுக்கு,

இந்திய விமானப் படையின் AN32 போக்குவரத்து விமானம், அதில் பயணம் செய்த 29 பேர்களுடன் காணாமற்போய் மூன்று நாட்களாகி விட்டன. “அதிகாரத்துவ மொழியில்” நீங்கள் காணாமற் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டாலும், விலை மதிப்பற்ற 29 உயிர்களை இழந்தது விட்டோம் என்பது தான் உண்மை.

ருஷ்யத் தயாரிப்பான AN32, முப்பது வருடங்கள் பழமையானது என்றாலும், இந்திய விமானப் படையில் இன்னமும் முக்கியமான-கேந்திரமான போக்குவரத்து விமானமாக இதை வைத்திருக்கிறீர்கள். இதுவரை, 77 முறை இந்த வகை விமானம் விபத்தில் சிக்கி யிருக்கிறது. இந்த 29 பேர் நீங்கலாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட விமானப் படை வீரர்கள் உயிரழந்துள்ளனர் என கூகுள் சொல்கிறது. இந்தியா, போர்க்காலத்தில் இழந்த விமானப்படை விமானங்களை விட, அமைதிக் காலத்தில் இழந்தவையே அதிகம் போலும்.

உலகில், பாதுகாப்புப் படைகளில் விபத்துக்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. நடக்கும்; அத்தி பூத்தாற்போல; கடுமையான சூழ்நிலையில். ஆனால் இந்தியாவில் நடப்பது போல இவ்வளவு கேஷூவலாக, இழப்புக்களை வேறு எந்த நாடாவது சந்தித்திருக்குமா என்பது சந்தேகம். பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு; சப்மரீன் வெடித்து உயிரழப்பு; விமானம் வெடித்துச் சிதறி உயிரழப்பு. பறக்கும் சவப்பெட்டியாக உலவிக் கொண்டிருந்த ‘மிக்’ விமானங்கள்.

நாங்கள் செய்தித் தாள்களில் அறிந்து கொண்ட வகையில், விபத்துக்குள்ளான விமானம் இந்த மாதமே, மூன்றுமுறை டெக்னிகல் ஸ்னாக் ரிப்போர்ட் ஆகியுள்ளதாம். ஏர் வொர்த்தினஸ் என்ன ஆச்சு?
சம்பிரதாயமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்து பார்த்துவிட்டார்.

ராணுவ ரகசியங்கள் உங்களுடையதாக இருக்கலாம்; வைத்துக் கொள்ளுங்கள்! ஆனால் உயிரழந்த வீரர்கள் எங்களைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கென்று குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் சிவிலியன்களான எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு விபத்துக்கள் நடக்கின்றன, விமானிகளின் உயிருக்கு தேவையற்ற வகையில் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க என்ன செய்தீர்கள் என எங்களுக்கு விளக்க கடமைப் பட்டுள்ளீர்கள்.

வாங்கிய காலத்தில் AN 32 கடுமையான சூழ்னிலையிலும் பறக்கும் திறன் கொண்டது என்றாலும், அவைகளுக்கு வயதாகிக் கொண்டிருப்பதையும், மாறுபட்ட சூழ்னிலையில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து விமானங்கள், பெரிய எண்ணிக்கையில் தேவைப்படும் என்பதையும் காலத்தே உணர்ந்தீர்களா? அதற்காக காலத்தே திட்டமிட்டீர்களா?

பெரிய எண்ணிக்கையில் Antonov AN 32 க்களை வைத்துக் கொண்டு, அதற்காக ஸ்பேர்களை போதுமான அளவு வைத்துக் கொண்டிருந்தீர்களா? சரியான முறையில் அவற்றைப் பராமரித்தீர்களா? சரியான சமயத்தில் உதிரிகளையும் பராமரித்தலையும் டிஃபன்ஸ் செக்ரடரி உறுதி செய்தாரா? இல்லை மற்ற பொதுத் துறை நிறுவனங்களைப் போல, அதிகார வர்க்கம் தன் மூக்கைவிட்டு, நிலைமையை மோசமடையும் வரை காத்திருந்தார்களா? பராமரிப்புக்காக தேவையான நிதி ஒதுக்கீடு இருந்ததா?

தற்போது AN32 க்களை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும், உக்ரைனுடன் சரியான வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளீர்களா? இழந்த விமானங்களுக்கு அவர்கள் ஏதேனும் பொறுப்பு ஏற்கிறார்களா? காலத்தே முடிவெடுத்தீர்களா? அவர்கள் சென்னைக்கு வந்தார்களா?

ஒரு பைலட்டை உருவாக்க எவ்வளவு செலவு செய்கிறோம், அதற்காக எவ்வளவு காலம் பிடிக்கிறது என்பதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு விமானம் போய்விட்டால், இன்னொன்றை பெங்களூரிலோ அல்லது யூக்ரைனிலோ வாங்கிக் கொள்வீர்கள். ஆனால் இழந்த உயிர்களை திரும்பப் பெறமுடியுமா?

நடந்த விபத்து எங்களுக்கு பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. சீனாவும், பாகிஸ்தானும் தங்களது பாதுகாப்பு சாதனங்களை, தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது இந்திய பாதுகாப்பு படை இருக்கிறதா? அவர்களுக்கு தேவையான நவீன தளவாடங்கள் வழங்கப் படுகிறதா? அதி நவீன Sukhoi போர் விமானம் கூட எப்படி விபத்துக் குள்ளானது?

அரசியல் வாதிகள் “நமது படைகள் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவைகள்” என கோஷம் எழுப்புதை இனி நாங்கள் நம்பத் தயாரில்லை.

இனி ஒரு பாதுகாப்புப் படை வீரர், இந்த மாதிரியான ‘தவிர்த்திருக்கக் கூடிய’ விபத்துக்களில் உயிரிழப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. நெருக்கடியான காலங்களில் ‘செயல்படும் அளவிற்கு’ பயிற்சியளிக்கப் பட்டார்களா.. அது உங்கள் நிரலில் இருக்கிறதா எனவும் அறிய விரும்புகிறோம்.

இழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள். கால நிர்ணயத்துடன் கூடிய, அதிகாரம் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து, நமது படைகளில் எங்காவது பலவீனம்-ஓட்டை இருக்கிறதா எனக் கண்டுபிடித்து, சரியான பயிற்சி மற்றும் மறு பயிற்சி ஆகியவற்றை உறுதி செய்யுங்கள்.

ஒரே நாள் இரவில் எந்த விமானப் பிரிவினையும் ஒழித்துவிட முடியாதென அறிவோம். எனினும் குறிப்பிட்ட காலக் கெடுவில் காலாவதியான விமானங்களையும் தளவாடங்களையும் மாற்றுங்கள்.

இந்தியத் திருநாட்டில், மனித உயிர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது, எவர் கவலைப் படப்போகிறார்கள் என்பதை நன்கறிவோம். . அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை 29 என்பது ஒரு எண்ணிக்கை. எங்களுக்கு அவர்கள் உற்றார்-உறவினர்.



கோஷங்களை விடுத்து செயல்படுங்கள்! அதுவே எங்களது வேண்டுகோள்.

1 comment:

  1. இந்தியா பாதுகாப்பு விசயத்தில் தொடர்ந்து மெத்தனமாகவே செயல்படும்.! ஜனத்தொகை அதிகமில்லையா.!

    ReplyDelete