Thursday, May 24, 2012

சம்மர் கேம்ப்


கோடை விடுமுறையில், பள்ளிக் குழந்தைகளை, பல்வேறு ‘கோர்ஸ் களில் சேர்த்துவிடுவது தற்போதைய நடைமுறை. வீட்டில், தங்களை தொல்லை செய்யாமலிருக்கவும், பிள்ளைகள் ‘டைம் பாஸ் செய்வதற்காகவும், ‘அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் இம்மாதிரியான கோர்ஸ்களில் சேர்ந்துவிட்டபடியாலும்,  நாமும் இவ்வாறே செய்வது அவசியமாகிறது!

இம்மாதிரியான சம்மர் கோர்ஸ்களில்  சில, சுவாரஸ்யமான அனுபவங்களைத் தருவதுண்டு.

வடக்கே, ராணுவத்தில் பணியாற்றும், எனக்குத் தெரிந்த ஒருவரின் குழந்தைகளும், ராணுவத்தினர் ஆரம்பித்து வைத்த, ஒரு சம்மர் கோர்ஸில் சேர்ந்தனர்.

அக் குழந்தைகளுக்கு, இயற்கை சூழ்நிலையில், மிருகங்களைப் பற்றியும் ராணுவத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பதற்காக இந்த கேம்ப் நடத்தினர்.

குழந்தைகள் யாவரும் வட்டமாக அமர்ந்து கொள்ள, நடத்துபவர், (அவரும் ராணுவ அதிகாரிதான்) குழந்தைகளை, அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு ‘ஈஸியாக்குவதற்காக, கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

சில சுவாரஸ்யமான கேள்விகளும் அவற்றிற்கு குழந்தைகளின் கபடமற்ற பதில்களும்:

1.      உங்களுக்கு எதைக் கண்டால் பயம்?

இருட்டைக் கண்டால்.

2.      எந்தப் பாடம் உங்களுக்கு பிடிக்காது?

கணக்கு!

‘ஏன்?

‘கணக்கு டீச்சர், பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பார்.
(டீச்சர்கள் இதைக் கணக்கில் கொள்க!)

3.      சினிமா நடிகர் யாரைப் பிடிக்கும்?

‘நன்றாக ஃபைட் செய்யும் யாரையும்.

4.      நடிகை?

‘ஃபைட் செய்யாத எல்லா நடிகையையும்.

5.      ஸ்கூலில் பிடித்த பீரியட் எது?

எல்லா ஃப்ர்ஸ்ட் பீரியடும், கடைசி பீரியடும்.

‘ஏன்?

‘ஃப்ர்ஸ்ட் பீடியட் ஜாலியாக இருக்கும்! கடைசி பீரியடுக்குப் பின் வீட்டிற்கு போகலாம்.

6.      வீட்டில் எதற்கு திட்டினால் பிடிக்காது?

‘ஹோம் வொர்க் செஞ்சதுக்குப்பின்னும் ‘படி-படின்னு சொன்னால்

7.      பெற்றோர் மேல் எப்ப கோபம் வரும்?

‘கேட்டதை வாங்கித் தரவில்லையென்றால்!

8.      படித்து முடித்ததும் என்ன வேலை பார்க்க ஆசை?

‘பைலட் அல்லது ‘ஆர்மி ஆஃபீஸர்

ஏன், டீச்சர் ஆக ஆசையில்லையா?

‘இல்லை! ஏன்னா, பசங்க சொன்ன பேச்சை கேட்க மாட்டாங்க!

9.      பிடிச்ச சாப்பாடு எது?

‘பீட்ஸா

10.   நம்ம நாட்டிற்கு ஃப்ரண்ட் யார்? எனிமி யார்?

‘எனிமி, பாகிஸ்தானும்-சீனாவும்

‘ஃப்ரண்ட் யாருமில்லை!
 (இதை மன்மோகன் சிங் கவனத்தில் கொள்ள வேண்டும்)


11.  படிச்சு முடிச்சதுக்கப்புறம் வெளி நாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த நாட்டிற்கு போவீர்கள்?

‘அமெரிக்கா

12.  யாரைக் கண்டால் பிடிக்காது / பயம்?

அம்மாவைக் கண்டால் பயம்.
ஏன்? அப்பாவைக் கண்டால் பயமில்லையா?
அப்பாவைக் கண்டால் பயம் இல்லை! ஆனால் அப்பாவிற்கே, அம்மாவைக் கண்டால் பயம்தான்

எல்லாச் சிறார்களின் மனோபாவமும் இப்படித்தான் என, கொள்ளலாமா?

Sunday, May 13, 2012

பெண்ணே!!


அந்த ஃப்ளாட், எல்லா வீடுகளையும் போல, காலை நேர களேபரத்தில் சமையல், பூஜை, குழந்தையின் படிப்பு, வேலைக்காரியிடம் அதட்டல் என அரண்டு மிரண்டு கொண்டிருந்தது. 

ராமானுஜன், எப்போதும் போல பூஜையில் மூழ்கிவிட்டார். ராமானுஜத்திற்கு, காலையில் அம்பாள் பூஜை செய்ய வில்லையென்றால், அன்று முழுவதும் எதையோ பறி கொடுத்தாற்போல இருப்பார். ராமானுஜத்தின் அறுபத்தைந்து வருட வாழ்க்கையில், விபரம் தெரிந்து அம்பாள் பூஜையை நிறுத்தியது மிகச் சொற்பமான நாட்களில் தான். அவ்வளவு ஏன்? அம்பாள் உத்தரவு வரவில்லையென்றால் முக்கியமான விஷயம் ஏதும் செய்ய மாட்டார். வீடு வாங்குவது, பையனுக்கு கல்யாணம், நகை வாங்குவது என, எது வானாலும் சரி, அம்பாள் படத்தின் முன், பூவோ அல்லது திருவுளச்சீட்டு போட்டோ தான் முடிவெடுப்பார்.

அவரது ஒரே வாரிசு 'சீனிவாசனும்' அம்பாள் தாசன்தான். சரியான அம்பா-அப்பா கோண்டு. சுருக்கமாகச் சொன்னால், சினிமாவிற்குப் போகலாமா வேண்டாமா என்பது தான், அம்பாளின் உத்தரவில்லாமல் செய்வது. சீனிவாசனின் மனைவி ‘காயத்ரிக்கு’, திருமணமாகி வந்த புதிதில் இந்த பழக்கம் புதிதாகவும், வினோதமாகவும் இருந்தாலும், இந்திய கலாச்சாரத்தை ஒட்டி, தானும் அவ்வாறே வாழப் பழகிவிட்டாள்.

சீனுவாசன்-காயத்ரி தம்பதியருக்கு, ஆறு வயதில் ஒரு குழந்தை. சியாமளா!

காயத்ரியின் ‘மாமியார், சீதாம்மா அசப்பில் அந்தகால கே.ஆர் விஜயா போல இருப்பாள். அக்கால டிபிக்கல் சினிமா மனைவி போல, புருஷன் மேல்அபாரபக்தி கொண்டவர். சோமவாரம், சனிக்கிழமை, ஏகாதசி என அனைத்து விரதங்களும் அனுசரிப்பார். உச்ச கட்டமாக, ஆடி அமாவாசை போன்ற, சில விசேஷ விரத தினங்களில், மாமியார் மேலே ‘அம்பாள் வந்துவிடுவாள்.அச்சமயங்களில், சில சிக்கலான குடும்ப விஷயங்களுக்கு, 'அம்பாள்' (சீதாம்மா),தீர்வு சொல்லிவிடுவாள்.


மாமனார் ராமானுஜம், கணவன் சீனுவாசன் இருவரையும் அந்த நேரங்களில் பார்க்க வேண்டுமே? 'விஸ்வரூப தரிசனம்' பெற்ற அர்ச்சுனன் போல பவ்யமாகி விடுவர். கொஞ்ச நேரம் கழித்து ‘கற்பூரம் ஏற்றி அம்பாள் மலையேறியதும், அனைவரும் சகஜமாகிவிடுவர்.

காயத்ரிக்கு, இதில் எல்லாம் நம்பிக்கை உண்டா, விருப்பம் உண்டா அல்லது இல்லையா எனச் சொல்லத் தெரியாது! மெஷின்களை யாரும் அபிப்ராயம் கேட்பதில்லை அல்லவா?

காயத்ரி, காலை எழுந்ததும், தினசரி கடமையாக பூஜை ரூமை சுத்தம் செய்து, பூக்களை எடுத்து வைத்து, விளக்குகளை சுத்தம் செய்து, அம்பாள் படங்களை துடைத்து வைத்து, மாமனாரின் பூஜைக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வைத்து விடுவாள். இல்லாவிடில் மாமனாரும்-மாமியாரும் ரௌத்ரதாரிகளாகி விடுவர்.

சீனுவாசன் ஒரு மண். கொஞ்சவும் தெரியாது, ஆத்திரப்படவும் தெரியாது. அவனது அம்மாவோ அப்பாவோ கோபப்பட்டால் இவனுக்கும் கோபம் வரும். இல்லையென்றால் அதுவும் வராது.

பூஜை முடிந்து, ராமானுஜன் வெளியே வந்தார். அம்பாள் பிரசாதம் என்று சொல்லி ஆளுக்கு ஒரு ஸ்பூன் தீர்த்தம் அளித்தார். மகனும், மனைவியும் பவ்யமாக வாங்கிக் கொண்டனர்.

“ஏண்டா, சீனு.. இன்னிக்கு லீவு போடச்சொல்லியிருந்தேனே.. போட்டு விட்டாயா?

“போட்டு விட்டேன் அப்பா... “

‘எத்தனை மணிக்குடா, அப்பாயின்மென்ட் கொடுத்திருக்காங்க? இது சீனுவாசனின் அம்மா

“பத்தரைக்கு போனா போதும் அம்மா..

‘அடியே, காயத்ரி... ‘மச மசன்னு நிக்காம நீயும் சீக்கிரமா ரெடியாகு.. “ என்றாள் மாமியார்.

‘சரிம்மா...

“எல்லாம் அந்த அம்பாள் மனசு வைக்கனும்..என பொத்தாம் பொதுவாக சொல்லிவைத்தாள் சீதாம்மா.

அனைவருக்கும் சாப்பாட்டு போட்டு, இடத்தை சுத்தம் செய்வதற்கும் சீனுவாசன் ‘டிரஸ் பண்ணிக்கொண்டு தயாராவதற்கும் சரியாக இருந்தது.

‘போலாமா, காயத்ரி...?

‘ம்ம்ம்ம்..

“சாப்டாச்சா..?

எப்படி சாப்பிட்டிருக்க முடியும்? இப்பத்தானே எல்லோருக்கும் சாப்பாடு போட்டு, இடத்தை ஒழித்து வைத்தாள்..?இது கூடவா யூகம் பண்ணத் தெரியாது?

‘ம்ம்.. ஆச்சு....

ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து கொண்டாள் காயத்ரி..

‘உனக்கு இஷ்டம் தானே

’..”

“வரும்போது டாக்ஸியில் வந்துவிடலாம்..

‘சரி..

ஸ்கூட்டரை கே.எஸ்.ஜி மருத்துவ மணையில் நிறுத்திவிட்டு, காயத்ரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் சீனு.

"டைம் இருக்கு, டாக்டர் பத்தரை மணிக்குத்தானே டி.ஜி.ஓ அப்பாயின் மெண்ட் கொடுத்திருக்கார்"என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்  சீனு!

“என்ன சீனுவாசன், நல்லா யோசிச்சு முடிவெடுத்திட்டீங்களா.. மாசம் அதிகமாயிடிச்சு. ரிஸ்க் தான், செஞ்சுடலாமா?” என்றார் டாக்டர் சுலோசனா, டி.ஜி.ஓ

நகரில் இந்த மாதிரியான காரியங்களுக்காகவே இருக்கும் ஆஸ்பத்திரி இது.

“ரெண்டு பேருமே பெசி முடிவெடுத்துட்டோம் டாக்டர்.. ரெண்டாவதும் பெண்ணாயிடுச்சே, என்ன செய்வது டாக்டர்? ரெண்டு பெண்களை கரையேத்ததுவது மிகுந்த சிரமம் இல்லியா?"

“எந்த ரெண்டுபேர் பேசி முடிவேடுத்தீங்க?"  கணவனை நோக்கினாள் காயத்ரி!

“அப்ப சரி.. உங்க இஷ்டம்..”  காயத்ரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் டி.ஜி.ஓ.

“குளிச்சுட்டீங்களா காயத்ரி..?என்றார் டி.ஜி.ஓ.

‘தலை குளிச்சுட்டுத்தான் வந்தேன் டாக்டர்”.

டாக்டர் ‘கலைப்பதற்கு தயாராக காயத்ரியுன் உள்ளே போக, வெளியே சீனுவாசன், எல்லாம் நல்லபடியாமுடியனும் என்று வேண்டிக்கொண்டு கழுத்தில் போட்டி ருக்கும் ‘அம்பாள் டாலரை கண்ணில் ஒத்திக் கொண்டார்.

உள்ளே ஒரு ‘அம்பாள் ஜன்னமின்றி மரணத்தை தழுவினாள்.

                              -0-
(13/05/2012 அன்னையர் தினம)

Tuesday, May 8, 2012

மூளையற்றுப் போக அனுமதியோம்!

இந்தியர்களாகிய நமது மனப்போக்கும், நடத்தையும் சில சமயம் அதிர்ச்சியளிப்பதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது! சட்டென அன்பைப் பொழிவதும், சடாரென வெறுப்புக்கு மாறுவதும் நம்மவர்களுக்கு ‘உறுத்தலின்றி வரும் குணாதிசயங்கள். ஒற்றுமை குறித்து தொண்டை வலிக்க உரையாற்றுவோம். பின்னாலேயே ஏதாவது ஒரு காரணம் காட்டி, அடுத்தவர் மீது வெறுப்பைக் காட்டவும் தயங்க மாட்டோம்.  


பொதுவாகவே எல்லா விஷயங்களுக்கும், மிகச் சுலபமாக உணர்ச்சி வயப்படும் நாம், ‘இனத்தின் பேரால், ‘மதத்தின் பேரால், ‘ஜாதியின் பெயரால், ‘கட்சியின் பெயரால், ‘தொழிற்சங்கத்தின் பெயரால்’,  ‘மாநிலத்தின் பெயரால்’, ‘மொழியின் பெயரால் மற்றவர்களின் மீது வெறுப்பை உமிழ்வதற்கு, ஒரு போதும் தயங்குவதில்லை! இந்த விந்தை முரண்பாடுகளின் வெறுப்பு வரிசைகள், கவலைப்படத்தக்க வேண்டிய ஒரு அம்சமாக, தற்போது விரிவடைந்து விட்டது!

தனிமனிதனாக, யோக்யம் நாம், கூட்டமாக மாறும் போது, தனிமனித சிந்தனைப்போக்குகளைத் துறந்து,  வன்முறைகளை தயக்கமின்றி கையிலெடுப்பதை, பல சமயம் பார்த்திருக்கிறோம். சாத்வீகர்கள் கூட ‘கல்லெறிவதற்கு தயாராகி விடுகிறார்கள்!

எங்கோ ஆஸ்திரேலியாவிலோ, ஃபிஜித் தீவிலோ, பிரிட்டனிலோ இந்தியர் களுக்கு அபூர்வமாக ஒருஅநீதி இழைக்கப்பட்டாலோ, வன்முறை பிரயோகிக்கப்பட்டாலோ உடனடியாக “பொங்கியெழும்நாம், மிகச் சுலபமாக, எப்படி நமக்குள்ளேயே வெறுப்பைக் கக்கிக் கொள்ளமுடிகிறது? ஒருவேளை, நம்மவர்களுக்கு,  எதிலும் எப்பொழுதும் ஒரு ‘குழு மனப் பான்மை தேவைப் படுகிறதா?

ஷெட்யூல்ட் மற்றும் மலைவாழ் மக்களிடம் காட்டப்படும் வெறுப்பு மற்றும் அநீதி,  அரசு மற்றும் பொது நல அமைப்புகளின் தொடர் முயற்சியால் பெருமளவு குறைந்திருந்தாலும், முற்றிலுமாக நீங்கி விட்டதாகச் சொல்ல முடியாது. உத்திரப் பிரதேசம், ராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களிலிருந்து அவ்வப்போது வெளிவரும் செய்திகள், ஏன் ‘வச்சாத்திவன்முறைகள் கூட இதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

முஸ்லீம்களை வெடிகுண்டோடும், வன்முறையோடும் சம்பந்தப்படுத்தும் அநாகரீகம், அசிங்கம், புத்தியில்லாத்தனம் உலகெங்கும் நடைபெறுகிறது.  திரு அப்துல்கலாம் முதல் நடிகர் ஷாருக்கான் வரை ‘அமெரிக்க விமான நிலையங்களில் அவமானப்படுவது தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது?

உயர்ஜாதி என்று கருதப்படும் அல்லது அழைக்கப்படும் பிரிவில் உள்ள  சிலரை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம் என்ற முரண் நடந்து கொண்டுதானே உள்ளது!

காவிரிப் பிரச்சினையா? பெங்களூரில் தமிழர்களை உதை. முல்லைப் பெரியார் பிரச்சினையா? தமிழகத்தில் இருக்கும் மலையாளிகளை  அடி! அவர்களது வியாபார இடங்களை (அது டீக்கடையானாலும் சரி) உடை. கர்நாடகத்தில் மராட்டியர்களை நொறுக்கு! சிவ சேனா உபயத்தில், பீகாரிகளை, மும்பையில் அடி!

காஷ்மீரிலிருக்கும் இந்துக்களை, அவர்கள் வாழந்து கொண்டிருந்த இடத்தி லிருந்து துரத்து. சொந்த மானிலத்திலேயே, வீடு நிலங்களை இழந்து, பரம்பரையாக வாழ்ந்து வந்த இடங்கள விட்டு விரட்டப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவலம் இவர்களைச் சார்ந்தது!

எவனோ ஒரு தீவீர வாதி இந்திராகாந்தியை சுட்டுக் கொன்று விட்டானா? உடனே சீக்கியர்களை குறிவைத்து கொலை செய்!

எப்போதிலிருந்து, எதற்காக,  எவ்வாறு நாம், ஒற்றுமையையும், பொறுமை யையும், சகிப்புத் தன்மையையும் இழந்து, எந்தக் காரணத்திற்காகவும் எவரையும், எதற்கும் வெறுப்பதற்குக் கற்றுக் கொண்டோம்?  நமக்கு சொல்லித்தர, வழிகாட்ட உண்மையான, சத்திய சீல தலைவர்கள் அருகி விட்டார்களா? புத்தரையும், காந்தியையும் ‘பரீட்சையில்மார்க்கு வாங்கு வதற்காக மட்டும்தான் படித்தோமா? நன்நெறி நூல்கள் பலவற்றையும் வாங்கி-வாங்கி  என்ன செய்கிறோம்? கடையில் போட்டு வெங்காயம் வாங்கித் தின்றுவிட்டோமா?

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்னாடகத்தை கண்டிக்கும் நாம், வீராணத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம் எனக் கூற தயங்க மாட்டோம்.

அவ்வளவு ஏன்? படித்த, ஒத்த சிந்தனை கொண்ட இடதுசாரி கொள்கைகள் கொண்ட தொழிற்சங்கங்கள் கூட, மாற்று தொழிற்சங்க தொழிலாளி மீது, பகைமையை தூண்டிவட தயங்குவதில்லையே! மாற்று சங்கதொழிலாளிக்கு எதிராக 'சூது' செய்யவும் தயங்குவதில்லை!கோஷம் என்னவோ "உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்" என்பது!

நமது, வெறுப்புகளின் பட்டியலில் தற்போது ‘வட, மற்றும் ‘வடகிழக்கு மாநிலங்களின் சகோதரர்கள் அகப்பட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில், பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகளில், வட மாநில தொழிலாளிகள் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம். அவ்வளவு ஏன்? ஹோட்டல்களில் ‘பேரர் களாக பல வடகிழக்கு மாநிலத்தவர், பெண்கள் உட்பட, பணி புரிவதை காண்கிறோம். நமது மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் வேலை கிடைத்து விட்டதால் இந்த நிலைமை இல்லை! நமது மக்களில் பலர் அந்த மாதிரியான கடின வேலைகளுக்கு தயாராக இல்லை என்பதும் வட மாநிலத்தவர்கள் சற்று குறைவான சம்பளத்திற்கு உழைக்க சம்மதிப்பதுமே, இதற்குக் காரணம்.  (நம்மவர்கள் அன்றைய ‘டாஸ்மார்க் தேவைகளுக்கு, சுலுவான வழிகளில் சம்பாதித்து விட்டால் போதும் என்ற மனோபாவம் வேறூன்றி விட்டது. விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் தினறும் அவலம், விவசாயிகளைக் கேட்டால்தான் புரியும்.)


இப்போது, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர் மீதுதான், லேட்டஸ்ட் தாக்குதல்கள்! சென்னையில் ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வட மாநிலத்தவர் என்பதால், அனைத்து வடவர்களும் ‘கொள்ளைக் காரர்களே! (அம்மாநில மானவர்களும், ஊழியர்களும், சென்னையில்,  வாடகைக்கு வீடு தேடுவதில் படாதபாடு படுகின்றனர்)


தில்லி கோர்கானில், வட கிழக்கு மானிலத்தைச் சார்ந்த (மேகாலயா) ‘டானா சங்மாஎன்ற பெண், தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ‘ரிச்சர்ட் லோய்டம் (மனிப்பூர்) என்ற மானவர் கொல்லப்பட்டார். இந்த இரண்டு இறப்புக்களுக்கும் கல்லூரி நிர்வாகம் காரணமாக இருக்கலாம் என பத்திரிக்கைகள் குற்றஞ் சாட்டுகின்றன. இந்த இரண்டு இறப்புக்களுக்கும் எதிராக வட கிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.


நமது அரசு, நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லை மானிலங்களில் லட்சக் கணக்கான கோடிகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அது தவிர நமது ஜவான்கள் பலர், பணி நிமித்தமாக,  தங்களது உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கின்றனர். அங்கே, உள்ளூர் மக்களின் ஆதரவின்றி நமது ராணுவம் வெற்றிகரமாக செயலாற்ற சிரமப்படுகின்றனர். இம்மாதிரியான கொலைகள், அம்மாநிலத்தவர், இந்தியாவை இன்னமும் வெறுக்கத்தான் வைக்குமே தவிர, நேசிக்க வைக்காது.

அடிப்படையாக, எப்போது நாம், சக மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொள்கி றோமோ அப்பொழுதுதான் நிஜமான மானுடம் நிலைபெறும். பிரச்சினை களுக்கான தீர்வு அங்கிருந்துதான் துவங்குகிறது – அது குடும்பமானாலும் சரி – சமூகமானாலும் சரி. நமது பெரியோர்கள் பல நன்னூல்கள் வழியாக இந்த இணக்கத்தைத்தான் போதித்தார்கள்!

ஆனால், தற்போது உலாவரும் நமது "சமகால அரசியல் தலைவர்கள்",  ‘ஜாதி, ‘இன, ‘மொழி’, ‘பிராந்திய, ‘மத உணர்வுகளைத் தூண்டி, தொண்டை கிழிய பேசுவதில் வல்லவர்களாயிறே? சமூகத்தில் அமைதியின்மையும், கலவரமும், சண்டையும் நடந்து கொண்டே இருந்தால் தானே, அவர்களால், "தொடர்ந்து தொழில் நடத்த" முடியும்? கொள்ளையடிக்க முடியும்? 


அவர்கள் திருந்த மாட்டார்கள்! அவர்களது சீடர்களையும் திருந்த அனு மதிக்க மாட்டார்கள். எனவே மாறுதல் நம் கையில்தான் இருக்கிறது; நாம் தான் அதைச்செய்தாக  என்பதை உணர்ந்தால் நல்லது! 

Friday, May 4, 2012

கொண்டு வந்தான் ஒரு தோண்டி.....


மணி காலை ஐந்தேமுக்கால் தான் ஆகிறது. பொழுது இன்னும் நன்றாக விடியவில்லை. தியாகுவின் நாலு வயதுக் குழந்தை ‘நவீன் இன்னும் எழுந்திருக்க வில்லை. அவன் எழுந்திருக்க மணி ஏழாகும். மனைவி சியாமளா எழுந்து, கணவன் தியாகுவிற்கு ‘காஃபி போட்டுக் கொடுத்தாள். குளித்து முடித்து புறப்பட்டான் தியாகு. இப்போது புறப்பட்டால்தான் ஏழு மணிக்குள் வேலைக்கு செல்லலாம்.

“பத்து மணிக்கு குழந்தைய தூக்கிகிட்டு வந்துடு..எனக்கு லீவு கிடக்கில.. வேணுமினா அப்பாரையும் கூட்டிக்கிட்டு வா..என்றான் தியாகு.

“என்ன சியாமளா, காதுல விழுந்ததா...?

“ம்ம்ம்... இட்டாரேன்.  நீ போ...

வாசலில் ‘பைக் சப்தம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, தனது மாமனாரை எழுப்பினாள்.

‘த்தாஆ... எந்திரி..  பத்து மணிக்கெல்லாம் கொளந்தய இட்டாரச் சொல்லியிருக்கு, ஒம்பையன்..

‘சரி.. நீ போய் உன் சமயல் வேலயப் பாரு.. நான் கெளம்பிடரேன்.  அவசரப்படாம், புள்ளய திட்டாம கெளம்பு..   நம, நேரா ஆட்டோவுல போயிடலாம்..லேட்டாவாது என்றார் அவளது மாமனார்.

தனது ஹீரோ ஹோண்டாவை ஸ்டாஃப்களுக்கான, ‘டூ வீலர் ஸ்டேண்டில் நிறுத்தி பூட்டி விட்டு,  வணக்கம் சொன்ன ‘செக்யூரிட்டிக்கு’, பதில் வணக்கம் சொல்லிவிட்டு, ரிசப்ஷனில் வைக்கப்பட்டிருந்த ‘பயோமேட்ரிக் அட்டென்டென்ஸுக்கு ஆட்காட்டி விரலைக் காண்பித்தான் தியாகு.  அது வழக்கம் போல, பிராம்டாக ‘சாரி..  நாட் மேட்ச்டு.. டிரை அகய்ன்.. என்றது.

தினமும் இந்த மெஷினோடு இதே தொல்லை! சிஸ்டம் அனலிஸ்டிடம் மூணு தடவை சொல்லி விட்டான். என்றாலும் இந்த தொல்லை தொடர்கிறது.  மாற்றாக கட்டை விரலால் ஒத்த, ‘வெல்கம் டு டியூட்டி.. நௌ த டைம் ஈஸ் செவென் ஓ கிளாக்.. என்றது. ‘ஒழிந்து போ... என்று சபித்து விட்டு, லிஃப்டை புறக்கணித்து, இரண்டாவது மாடிக்கு, இரண்டு-இரண்டு படிகாளாய்த் தாவினான் தியாகு. ஃப்ளோர் இன்சார்ஜிடம் சாவி வாங்கி, தனது ‘ஃபார்மஸி கவுண்டரைத் (Counter) திறந்தான்.  
அவன் வேலை செய்வது, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல கேன்ஸர் மருத்துவமணையில். அந்த மருத்துவ மணையில் ஃப்ளோருக்கு ஒரு ஃபார்மஸி வைத்திருக்கிறார்கள்.  அவன் வேலை செய்யும் மருந்தகம், இரண்டாவது மாடியில், கேன்ஸர்  நோயாளிகளுக்கு அளிக்கப்படும் “கீமோ வார்டின் அருகில் உள்ள ஃபார்மஸி.

எனவே, அவன் இருக்கும் ஃபார்மஸியில் ‘கீமோ மருந்துகளும் அதன் சப்போர்டிவ் மருந்துகளும்தான் இருக்கும். கவுண்டர் திறப்பதற்கு முன்னமேயே நாலைந்து பேர்கள் நின்று கொண்டிருந்தனர்.

கதவைத் திறந்து, ‘ஸ்வாப் மெஷினுக்கும்,  கம்யூட்டருக்கும் உயிர் கொடுத்து, தனது யூசர் நேமில் ‘லாகான் செய்தான்.

அந்த நொடி முதல் ‘பர..பர வென இயங்க ஆரம்பித்தான். இயந்திர கதியில், பிரிஸ்கிரிப்ஷனைப் படிப்பதும், அதன்படி மருந்துகளை ஒரு பெரிய டிரேயில் போடுவதும், பின் மருந்துகளைச் 'செக்' செய்து, பிளாஸ்டிக் பையில் போட்டு, ‘சார்.. இவற்றை கீமோ வார்டு நர்ஸிடம் கொடுத்துவிட்டு வாருங்கள். நான் அதற்குள் பில் போட்டு வைக்கிறேன். பிறகு வந்து பணம் கொடுத்துக் கொள்ளலாம்.. என்பதுமாக அன்றைய பணி துவங்கியது.

ஒவ்வொரு பில்லும் பதினைந்தாயிரம், இருபதாயிரம் ஆகும்.  மருந்துகள், நோயாளிகள் ஐ.வி வழியாக, உடம்பில் ஏறுவதற்கு ஐந்து மணி நேரமாவது ஆகும்.  எனவே பணம் பெற்றுக் கொள்ள அவசரமில்லை. முதலில் அனைவருக்கும் மருந்துகளைக் கொடுத்தனுப்பிவிட வேண்டும்.

இங்கு கான்ஸர் மருந்து வாங்க வரும்  நோயாளிகளின் உறவுகள், நட்புகள் முகத்தில், சாசுவதமாக ஒரு இறுக்கம், சோகம், விரக்தி இருந்து கொண்டே இருக்கும். உணர்ச்சிகள் மறத்துப் போன, அழுத்தமான முகங்கள் இந்த வார்டில் அவனுக்கு பழகிப் போய் விட்டது.  அவனைப் போலவே அவர்களும் இயந்திர கதியில் மருந்துகளை வாங்கிச் செல்வார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு நீண்ட தொடர்கதை எழுதப் பட்டிருக்கும்! வாழ்வின் எந்த கட்டத்தில் தாம் இருக்கிறோம்? இறுதியிலா?.. நடுவிலா? கடைசித் தருணங்கள், எந்த நிமிடம் கதவைத் தட்டும்? ‘முடிவில்லாத கவலைகள் அவர்கள் முகத்தில் அட்சய பாத்திரம் போல வந்து கொண்டே இருக்கும். திடீரென ஒரு நாள் காலையில் வாழ்வின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டது போல உணர்வார்கள். முற்றுப் புள்ளிக்கு முன்பாக செய்ய வேண்டிய காரியங்கள் அவர்கள் முன் நாட்டியமாடும்.

பெரும்பாலோனோர் நிசப்தமாக மருந்துகளை வாங்கிக் கொண்டு வார்டுக்குச் செல்லும் போது, சிலர் அவனிடம் பேசுவதுண்டு. “இந்த மருந்துகளாலே, கேன்ஸர் எல்லாம் சரியாப் போயிடுங்களா? எம்மவன் குணமாகி எந்திரிச்சுடுவாங்களா? எல்லாம் நல்ல மருந்துகள் தானே? “

என்ன பதில் சொல்வான்? ஆறு மாதம்தான் என்ற கேஸ்கள் சில வருடங்கள் இருப்பதையும், சில ஆண்டுகள் வாழ்வர் என்ற கேஸ்கள் ஆறே மாதத்தில் போய்விடுவதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான். உண்மையில் இந்த கேள்விகளைக் கண்டு அவன் பயப்படுவான். இந்த கேள்விகளை எவரும் கேட்டுவிடக் கூடாது என வேண்டிக் கொள்வான்.

‘நீங்க.. டாக்டரிடமே கேளுங்க.. நாங்க மருந்து கொடுக்கறவுங்க தானே? சரியாப் போவதற்குத் தானே மருந்து தராங்க..? வேறேங்கோ பார்த்துக் கொண்டு சொல்லிவிடுவான்.

“சே.., என்ன வியாதி இது?  ஒரு ஹார்ட் அட்டாகோ.. ஆக்ஸிடென்டோ கூட பரவாயில்லை! இரண்டில் ஒன்று தீர்மாணமாகி விடும். நோயாளிகளை, மனதாலும் உடலாலும், அனுதினமும் வதைக்கும் இந்த நோயை ஏன் தான் ஆண்டவன் உண்டாக்கினானோ? நொந்து கொள்வான் தியாகு.

வேதனையும், துயரமும் மிக்க இந்த முகங்களைத் தவிர்ப்பதற்காகவே வேறு கவுண்டருக்கு டிரான்ஸ்ஃப்ர் கேட்டிருக்கிறான் தியாகு. ஓரளவு வாழ்ந்து முடிந்தவர்கள் என்றாலும் பரவாயில்லை. ஒன்றுமறியா பச்சிளம் பாலகர்கள், தனக்கு வந்திருக்கும் வியாதியின் தீவீரத்தைக் கூட உணரமுடியாத மூண்று வயது-நாலு வயது குழந்தைகளைப் பார்க்கும் போது, அவனால் ஆண்டவனை சபிக்காமலிருக்க முடியவில்லை. இவர்கள் என்ன பாவம் செய்திருக்க்க் கூடும்? இந்த கொடிய வியாதி வருவதற்கு?

மணி ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. காலை நேர ரஷ் கொஞ்சம் குறைந்து விட்டது. மருந்து வாங்கிச் சென்றவர்கள் யாவரும் பணம் கட்டிவிட்டு பில் வாங்கிச் சென்று விட்டனர். பில்களையும் கேஷையும் சரிபார்த்தான். இந்த கவுண்டரில் பெரும்பாலும் ‘கிரடிட் கார்டுதான் கேஷ் குறைவு. எனவே கேஷ் சரி பார்ப்பதில் பிரச்சினையில்லை. இந்த ஆஸ்பத்திரி கொடுக்கும் மருந்து பில்களுக்கு கேஷ் கட்டுபடியாகுமா?

கடிகாரத்தைப் பார்த்தான் மணி பத்தாகப் போகிறது. அவன் மனைவி, அவர்களது குழந்தையை தோளில் சாத்தியபடியும், அவனது அப்பா ஒரு கனத்த, ‘கட்டப் பையை சுமந்த வாறும் வந்து கொண்டிருக்கின்றனர்.

‘ஏங்க.. நீங்க கொடுக்கும் இந்த மருந்தெல்லாம் நல்லா வேல செஞ்சு, நம்ம மவன் பொழச்சுக்குவாங்களா? என்னோட பையன் பழயபடி விளையாடுவாங்களா...?

எல்லோருக்கும் சொல்லும் பதிலான “நீங்க டாக்டருகிட்டேயே கேட்டுக்குங்க... என்று அவனால், அவனது மனைவியிடம் சொல்ல முடியவில்லை.
 -------
(photo courtesy: Web)

Tuesday, May 1, 2012

“ஒரு மத்திம – தொழிலாளி”

“சாயங்காலம், ஆஃபீஸ் முடிஞ்சு வரும்போது, மறக்காம வெண்ணை வாங்கிட்டு வாங்க! பசங்க நெய் இல்லேன்னா சாப்பிட மாட்டேங்கறாங்க! மறந்துட்டு வந்து நிக்கக் கூடாது, புரியுதா?

“சரி.. சரி.. வங்கிட்டு வர்ரேன்..

மனைவி, வத்ஸலா கொடுத்த "லன்ச் பாக்ஸை" ஸ்கூட்டரின் பாக்ஸில் வைத்துவிட்டு, வண்டியை ஆபீஸுக்கு கிளப்பினார், கோபிநாத்.

“மறக்காம வெண்ணை.....

“ரோட்டில கத்தாத, வாங்கிட்டு வர்ரேன்..என்றார் கோபிநாத்.

கோபிநாத், சென்னை அண்ணா சாலை,ஏ.ஜி அலுவலகத்தில் சீனியர் அக்கவுன்டென்ட். மடிப்பாக்கத்தில் சொந்த ஃப்ளாட். இரண்டு குழந்தைகள்.  நாற்பதாயிரத்தைத் தொடும் சம்பளம்.  அடுத்த வருஷம் கார் வாங்குவதாக உத்தேசித்திருக்கிறார்.

டிராஃபிக் பிடுங்கல்களைத் தாண்டி, ஆஃபீஸுக்குச் சென்று, சீட்டில் அமரும் போது மணி பத்தரை. லேட்டாக வரக்கூடாது என, என்னதான் பிளான் செய்தாலும் லேட்டாகிவிடுகிறது. அவர் பார்க்க வேண்டிய ஃபைல்கள் அவரது டேபிளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. பிறகு பார்க்கலாம், முதலில் கேன்டீனுக்குப் போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து, கிளியர் பண்ணலாம்.

கேன்டீன் வாசலில், சிகப்பு,சிகப்பாய் வைக்கப் பட்டிருந்த பெரிய தட்டிகள்,   நாளை முதல் இரண்டு நாட்கள் “அகில இந்திய வேலை நிறுத்தம் என அறிவித்துக் கொண்டிருந்தன.

"ஆமாம்.. இந்த யூனியன்களுக்கு வேற வேலை இல்லை, வருஷத்துக்கு ரெண்டு தடவை, தெவசம் போல, ஆல் இன்டியா ஸ்டிரைக் செஞ்சாகனும், எல்லாம் சடங்கு, அரசியல்" சலிப்புடன் காஃபி சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வந்தார் கோபிநாத்.

கொஞ்ச நேரத்தில் யூனியன் ஆட்கள் கோஷ்டியாக உள்ளே வந்தனர்.

அகில இந்திய அளவில், அக்கவுன்டன்ட்கள் மற்றும் ஆடிட்டர்களுக்கு இரண்டு யூனியன்கள் இருக்கிறது. இந்த ஆபீஸிலும் அவை இருக்கிறது. இரண்டு பேரும், தாங்கள்தான் பெரிய யூனியன் என்று சொல்லிக் கொள்வார்கள். ஒருத்தரை ஒருத்தர் சாடி, போட்டுக் கொள்ளும் நோட்டீஸ்களுக்கு அளவில்லை.  யூனியன்களின் பாதி எனர்ஜி இந்த சண்டை யிலேயே போய்விடும்.

கோபிநாத் இந்த யூனியன் சண்டையில் ஆர்வமற்றவர். ஏன், யூனியன் என்றாலே பிடிக்காது. அனால் யூனியன் ஆட்கள் சந்தா கேட்கும் போது, எதுக்கு பொல்லாப்பு, என ரெண்டு பேருக்குமே சந்தா கொடுத்துவிடுவார்!
வந்த யூனியன் ஆட்களில் சீனியரான ஒருவர், கோபிநாத் கையில் சிகப்பு கலர் நோட்டீஸைத் திணித்தார்.

“தோழர் கோபிநாத் சார்,  நாளைக்கும், நாளின்னிக்கும் ரெண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. எல்லா யூனியனும் சேந்து செய்கிறார்கள். இந்தியா முழுசும்,எல்லா யூனியன் களும் சேந்து செய்யும் போராட்டம் இது. நீங்களும் கலந்துக்கங்க.  சாயங்காலம் வெளியில, போராட்ட விளக்கக் கூட்டம் இருக்கிறது. டெல்லியிலிருந்து தலைவர்கள் வர்ராங்க... மீட்டிங்கில அவசியம் கலந்துக்கங்க.. நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்.

“அதுக்கென்ன வந்துட்டாப் போச்சு...” என்றார் கோபிநாத்.

அவர்கள் ஒவ்வொரு சீட்டாகப் போய் நோட்டீஸைத் தந்துவிட்டு, வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.  சாயங்கால மீட்டிங்கிற்கும் வருமாறு வேண்டுகோள் வைத்தனர்.

“ஆமாம்.. இந்த யூனியன் ஆட்கள், வேண்டாமென்றால் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கொள்வார்கள். தேவைப்படும் போது கூடிக் கொள்வார்கள். இவுங்க “திட்டிக்கோ... என்றால், நாம ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கனும்.. ‘கூடிக்கோ..என்றால் உடனே கூடிக்கனும். என்ன கொள்கை இது? 

உலகத் தொழிலார்களே ஒன்று படுங்கள் என கோஷமிடுவதில் ஒன்றும் குறைச்சலில்லை.. உள்ளூர் தொழிலார்களை மோதிக் கொள்ளவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.  நாமெல்லாம் பைத்தியங்களா என்ன?

சலிப்புடன் அவர்கள் கொடுத்த நோட்டீஸை, படிக்கக்கூட விருப்பமின்றி எடுத்து, தூர வைத்த்தார் கோபிநாத். அதன்பின் அலுவலக தினப்படி வேலைகளில் முழுகிப் போனார்.

சாயங்காலம், ஆபீஸ் முடிந்து, வீட்டுக்கு கிளம்ப வண்டியை எடுக்கும் போது, குறுக்கே வந்தனர் யூனியன் ஆட்கள்.

“என்ன தோழர், கிளம்பிட்டீங்க.. மீட்டிங் இருக்குல்ல.. தலைவருங் கெல்லாம் வந்துட்டாங்க..கேட்டுட்டுப் போங்க

“போச்சுடா.. இவங்க கிட்ட மாட்டிக்கிட்டேனா? எப்ப மீட்டிங் முடியறது?  எப்ப வெண்ணை வாங்கறது? வீட்டுக்குப் போக ரொம்ப லேட்டாகுமே..?”

வேறு வழியின்றி வண்டியை ஓரங்கட்டிவிட்டு, வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்ட்டிக் சேர்களில், தக்க நேரத்தில், மீட்டிங்கிலிருந்து  நழுவிவிட, வசதியான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டார் கோபிநாத்.

உள்ளூர் மேளங்கள் பேசி முடித்தபின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்.

சுவாரஸயமின்றி, மனதில் “வெண்ணை ஞாபகத்துடன் கவனித்தார்.

மெல்ல,  நிதானமாக, ஒரு கட்டிடம் கட்டப்படுவது போல உறுதியான அஸ்திவாரத்துடன் ஆரம்பித்தார், தில்லியிலிருந்து அழைக்கப் பட்டிருந்த தலைவர் முகர்ஜி. "இந்த போராட்டம் நமது சம்பளத்திற்காக அல்ல" என ஆரம்பித்தார். "இது இந்தியாவுக்கானது; சாதாரண இந்திய தொழிலாளர்களுக்காக-பொது ஜனங்களுக்காக" என உரையைத் துவக்கினார்.

பொதுத் துறை நிறுவனங்களை எதற்காக 'நேருஜி' ஆரம்பித்தார் என தனது உரையை துவக்கினார். தாராளமயம், உலகமயம், தனியார்மயம் என்றால் என விவரித்தார். இந்த LPG யினால் ஏழைகள் எப்படி இன்னும் ஏழையாகின் றனர்; பணக்காரர்கள் எப்படி இன்னும் எப்படி பணக்காரர்களாகின்றனர் என புள்ளி விவரத்துடன் விவரித்தார். 

பொருளாதார நெருக்கடிகளை, சாதாரண மக்கள் தலையில் திணித்துவிட்டு, எப்படி பன்னாட்டு நிறுவன்ங்கள் கொள்ளை லாபமீட்டுகின்றன என உணர்ச்சி பொங்க விவரித்தார். 1% பணக்காரர்களுக்காக எப்படி 99% மக்கள் பிழியப்படுகின்றனர் என்றார். “ஆக்குபை வால் ஸ்ட்ரீட்”  போராட்டம் பற்றி கோடி காட்டினார்.

அவர் பேசப் பேச, கோபிநாத்துக்கு தொழிலாள வர்க்கமும், சாதாரண மக்களும் எப்படி நசுக்கப்படுகின்றனர் என விளங்குவது போல இருந்தது. மத்திய அரசால், எப்படி பொதுத்துறை நிறுவனகள் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன என தீர்க்கமாக அலசினார். பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா, கோல் இந்தியா போன்ற நிறுவனங்களை எப்படி மத்திய சர்க்கார் அழிக்கிறது;  அதன் மூலம் எப்படி பன்னாட்டு நிறுவங்கள் கொழுக்கின்றன, கொள்ளையடிக்கின்றன என புள்ளிவிவரத்துடன் ஸ்தாபித்தார்.

"சுதந்திரப் போராட்டத்தில், பெயர் அறியா தியாகிகள் செய்த தியாகங்களை" விவரித்தார். "அவர்கள் எதற்காக தங்களது உயிர்களைத் துறந்தனர்-இப்படி அதிக்க வர்க்கத்தால் நசுக்கப் படுவதற்கா" என வினவினார்.  சென்ற தலைமுறையினர் செய்த நம்பற்கரிய தியாகங்களினிலால்தான் நாம் இவ்வளவு உரிமைகளைப் பெறமுடிந்தது என்றார்.  அடுத்த தலைமுறைக்காக நாம் செய்ய வேண்டிய சமுதாய கடமைகளின் தேவையை நினைவுறுத்தினார். அவ்வாறு செய்யாவிடில், வர்க்கக் எப்படி கடமையிலிருந்து தவறியவர்களாவோம், என நினைவூட்டினார்.

அடுத்து வந்த பேச்சாளர்களும் இந்த வகையிலேயே போராட்ட விளக்க உரைகளை நிகழ்த்தினர்.

கூட்டம் முடிந்த போது மணி ஒன்பதாகி விட்டிருந்தது. கோபிநாத்துக்கு தொழிலார்கள் பக்கம் இருந்த நியாயம் புரிகிறாற்போல இருந்தது.

இத்தனை மணிக்கப்புறம் எப்படி வண்டியில் வீட்டிற்குச் செல்வது? கோபிநாத்துக்கு இரவில் வண்டி ஓட்டுவதில் சிரமம் அதிகம். எனவே வண்டியை ஆபிசில் விட்டுவிட்டு, ஆட்டோவில் போய் வெண்ணை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்லலாம் எனத் தீர்மாணித்தார்.

ஆட்டோவிற்கு காத்திருந்த சமயத்தில் அவருக்கு ஸ்டிரைக்கில் பங்கேற்பது குறித்து இருவிதமான யோசனை தோன்றியது! மீட்டிங்கிற்கு முன்வரை வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என முடிவாயிருந்தார். உரைகளை கேட்டபின் அவருக்கு குழப்பமாயிற்று. யூனியன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் ஸ்டிரைக் செய்து இரண்டு நாள் சம்பளம் இல்லையென்றால், சம்பளத்தில் இரண்டாயிரம் ரூபாய் போய்விடுமே? மாத சம்பளம் குறைவதில் அவருக்கு உடன்பாடில்லை. என்ன செய்யலாம்? 

பேசாமல் மெடிக்கல் லீவ் போட்டு விட்டால் என்ன? ஸ்டிரைக் செய்வது போல ‘பாவ்லா காட்டிவிடலாம். சம்பளமும் குறையாது. எனவே மெடிக்கல் லீவ் போட்டுவிட தீர்மாணித்து விட்டார்.

அதற்குள் ஒரு ஆட்டோ வந்துவிட்டது. அட.. தெரிந்த ஆட்டோ டிரைவர்தான். மணிகண்டன்.

“என்ன சாரே.. இன்னிக்கு லேட்டு? ஆபீஸுல வேலை இருந்திச்சா?

“அதெல்லாம் ஒன்னுமில்லேப்பா.. யூனியன் மீட்டிங்.. முடியரதுக்கு இன்னேரமாச்சு..

“சரி.. இப்போ எங்கே போவனும்?

“முதலில் டாக்டர் நந்தீஸ்வரன் கிளினிக்குக்கு போ.. ஒம்பதரைக்கெல்லாம் போய்விடுவார். அவருகிட்ட மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கனும். அப்புறம் சங்கர் மளிகைக் கடைக்கு போ.. வெண்ணை வாங்கணும்.. அப்புறம் வீட்டிற்கு...

“சர்தான் சார்..

நல்ல வேளை.. டாக்டர் நந்தீஸ்வரன் இன்னும் கிளம்பவில்லை. இரண்டு நாள் மெடிக்கல் லீவுக்கு சர்டிபிகேட் வாங்கிகொண்டார்.  பின்னர் சங்கர் கடையில் வெண்ணை வாங்கிக் கொண்டார்.

வீட்டிற்குப் போய் ஆட்டோவிற்கு பணம் கொடுத்தனுப்புவதற்கு முன்னால், “மணிகண்டன்...., நாளைக்கு காலையில கொஞ்சம் வீட்டிற்கு வர்ரியா? ஆபீஸ் வரைக்கும் போகனும். மெடிக்கல் சர்டிபிகேட் கொடுக்கனும்.. திரும்பி வரும்போது நான் என் வண்டிய எடுத்துக் கிட்டு வந்துடுவேன்.

‘என்ன சாரே.. உனுக்குத் தெரியாதா..?  நாளைக்கும், அதுக்கு மறுநாளும் ஆட்டோ ஓடாது. ஆல் இண்டியா ஸ்டிரைக். யூனியன்ல ஸ்டிரைக் பண்ணோனும் சொல்லிக்கிறாங்க.. அதை நானு மீற முடியாது. சிட்டி பூராவும் ஆட்டோ ஓடாது.. என்ன வர்ட்டா?

நாளைக்கு மெடிக்கல் லீவு அப்ளிகேஷனை எப்படி ஆபீஸுக்கு கொடுத்து அனுப்புவது என யோசித்துக் கொண்டிருந்தார் கோபிநாத்! டிபிகல் மிடில் கிளாஸ்!!
                                    ---