மணி காலை ஐந்தேமுக்கால்
தான் ஆகிறது. பொழுது இன்னும் நன்றாக விடியவில்லை. தியாகுவின் நாலு வயதுக் குழந்தை ‘நவீன்’ இன்னும்
எழுந்திருக்க வில்லை. அவன் எழுந்திருக்க மணி ஏழாகும். மனைவி சியாமளா எழுந்து, கணவன்
தியாகுவிற்கு ‘காஃபி’ போட்டுக்
கொடுத்தாள். குளித்து முடித்து புறப்பட்டான் தியாகு. இப்போது புறப்பட்டால்தான் ஏழு
மணிக்குள் வேலைக்கு செல்லலாம்.
“பத்து மணிக்கு
குழந்தைய தூக்கிகிட்டு வந்துடு..எனக்கு லீவு கிடக்கில.. வேணுமினா அப்பாரையும்
கூட்டிக்கிட்டு வா..” என்றான் தியாகு.
“என்ன சியாமளா, காதுல விழுந்ததா...?”
“ம்ம்ம்...
இட்டாரேன். நீ போ...”
வாசலில் ‘பைக்’ சப்தம் மறையும் வரை பார்த்துக்
கொண்டிருந்துவிட்டு, தனது மாமனாரை எழுப்பினாள்.
‘த்தாஆ...
எந்திரி.. பத்து மணிக்கெல்லாம் கொளந்தய
இட்டாரச் சொல்லியிருக்கு, ஒம்பையன்..”
‘சரி.. நீ போய்
உன் சமயல் வேலயப் பாரு.. நான் கெளம்பிடரேன்.
அவசரப்படாம், புள்ளய திட்டாம கெளம்பு.. நம, நேரா ஆட்டோவுல போயிடலாம்..லேட்டாவாது” என்றார் அவளது மாமனார்.
தனது ஹீரோ
ஹோண்டாவை ஸ்டாஃப்களுக்கான, ‘டூ வீலர் ஸ்டேண்டில்’ நிறுத்தி பூட்டி விட்டு, வணக்கம் சொன்ன ‘செக்யூரிட்டிக்கு’, பதில் வணக்கம் சொல்லிவிட்டு, ரிசப்ஷனில்
வைக்கப்பட்டிருந்த ‘பயோமேட்ரிக் அட்டென்டென்ஸுக்கு’ ஆட்காட்டி விரலைக் காண்பித்தான் தியாகு. அது வழக்கம் போல, பிராம்டாக ‘சாரி.. நாட் மேட்ச்டு.. டிரை அகய்ன்..’ என்றது.
தினமும் இந்த மெஷினோடு இதே தொல்லை! சிஸ்டம் அனலிஸ்டிடம் மூணு தடவை சொல்லி
விட்டான். என்றாலும் இந்த தொல்லை தொடர்கிறது.
மாற்றாக கட்டை விரலால் ஒத்த, ‘வெல்கம் டு டியூட்டி.. நௌ த டைம் ஈஸ் செவென்
ஓ கிளாக்..’ என்றது. ‘ஒழிந்து போ...’ என்று சபித்து
விட்டு, லிஃப்டை புறக்கணித்து, இரண்டாவது மாடிக்கு, இரண்டு-இரண்டு படிகாளாய்த்
தாவினான் தியாகு. ஃப்ளோர் இன்சார்ஜிடம் சாவி வாங்கி, தனது ‘ஃபார்மஸி கவுண்டரைத் (Counter) திறந்தான்.
அவன் வேலை செய்வது, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல கேன்ஸர்
மருத்துவமணையில். அந்த மருத்துவ மணையில் ஃப்ளோருக்கு ஒரு ஃபார்மஸி
வைத்திருக்கிறார்கள். அவன் வேலை செய்யும்
மருந்தகம், இரண்டாவது மாடியில், கேன்ஸர்
நோயாளிகளுக்கு அளிக்கப்படும் “கீமோ வார்டின்’ அருகில் உள்ள
ஃபார்மஸி.
எனவே, அவன் இருக்கும் ஃபார்மஸியில் ‘கீமோ மருந்துகளும்’ அதன்
சப்போர்டிவ் மருந்துகளும்தான் இருக்கும். கவுண்டர் திறப்பதற்கு முன்னமேயே நாலைந்து
பேர்கள் நின்று கொண்டிருந்தனர்.
கதவைத் திறந்து, ‘ஸ்வாப் மெஷினுக்கும்’, கம்யூட்டருக்கும் உயிர் கொடுத்து, தனது யூசர்
நேமில் ‘லாகான்’ செய்தான்.
அந்த நொடி முதல் ‘பர..பர வென இயங்க ஆரம்பித்தான். இயந்திர கதியில், பிரிஸ்கிரிப்ஷனைப்
படிப்பதும், அதன்படி மருந்துகளை ஒரு பெரிய டிரேயில் போடுவதும், பின் மருந்துகளைச் 'செக்' செய்து, பிளாஸ்டிக் பையில் போட்டு, ‘சார்.. இவற்றை கீமோ வார்டு நர்ஸிடம்
கொடுத்துவிட்டு வாருங்கள். நான் அதற்குள் பில் போட்டு வைக்கிறேன். பிறகு வந்து
பணம் கொடுத்துக் கொள்ளலாம்..’ என்பதுமாக அன்றைய பணி துவங்கியது.
ஒவ்வொரு பில்லும் பதினைந்தாயிரம், இருபதாயிரம் ஆகும். மருந்துகள், நோயாளிகள் ஐ.வி வழியாக, உடம்பில்
ஏறுவதற்கு ஐந்து மணி நேரமாவது ஆகும். எனவே
பணம் பெற்றுக் கொள்ள அவசரமில்லை. முதலில் அனைவருக்கும் மருந்துகளைக்
கொடுத்தனுப்பிவிட வேண்டும்.
இங்கு கான்ஸர் மருந்து வாங்க வரும்
நோயாளிகளின் உறவுகள், நட்புகள் முகத்தில், சாசுவதமாக ஒரு இறுக்கம், சோகம்,
விரக்தி இருந்து கொண்டே இருக்கும். உணர்ச்சிகள் மறத்துப் போன, அழுத்தமான முகங்கள்
இந்த வார்டில் அவனுக்கு பழகிப் போய் விட்டது.
அவனைப் போலவே அவர்களும் இயந்திர கதியில் மருந்துகளை வாங்கிச் செல்வார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு நீண்ட தொடர்கதை எழுதப் பட்டிருக்கும்!
வாழ்வின் எந்த கட்டத்தில் தாம் இருக்கிறோம்? இறுதியிலா?.. நடுவிலா? கடைசித்
தருணங்கள், எந்த நிமிடம் கதவைத் தட்டும்? ‘முடிவில்லாத கவலைகள்’ அவர்கள்
முகத்தில் அட்சய பாத்திரம் போல வந்து கொண்டே இருக்கும். திடீரென ஒரு நாள் காலையில்
வாழ்வின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டது போல உணர்வார்கள். முற்றுப் புள்ளிக்கு
முன்பாக செய்ய வேண்டிய காரியங்கள் அவர்கள் முன் நாட்டியமாடும்.
பெரும்பாலோனோர் நிசப்தமாக மருந்துகளை வாங்கிக் கொண்டு வார்டுக்குச்
செல்லும் போது, சிலர் அவனிடம் பேசுவதுண்டு. “இந்த மருந்துகளாலே, கேன்ஸர் எல்லாம்
சரியாப் போயிடுங்களா? எம்மவன் குணமாகி எந்திரிச்சுடுவாங்களா? எல்லாம் நல்ல
மருந்துகள் தானே? “
என்ன பதில் சொல்வான்? ஆறு மாதம்தான் என்ற கேஸ்கள் சில வருடங்கள்
இருப்பதையும், சில ஆண்டுகள் வாழ்வர் என்ற கேஸ்கள் ஆறே மாதத்தில் போய்விடுவதையும்
பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான். உண்மையில் இந்த கேள்விகளைக் கண்டு அவன்
பயப்படுவான். இந்த கேள்விகளை எவரும் கேட்டுவிடக் கூடாது என வேண்டிக் கொள்வான்.
‘நீங்க.. டாக்டரிடமே கேளுங்க.. நாங்க மருந்து கொடுக்கறவுங்க தானே? சரியாப்
போவதற்குத் தானே மருந்து தராங்க..?” வேறேங்கோ பார்த்துக் கொண்டு சொல்லிவிடுவான்.
“சே.., என்ன வியாதி இது? ஒரு
ஹார்ட் அட்டாகோ.. ஆக்ஸிடென்டோ கூட பரவாயில்லை! இரண்டில் ஒன்று தீர்மாணமாகி விடும்.
நோயாளிகளை, மனதாலும் உடலாலும், அனுதினமும் வதைக்கும் இந்த நோயை ஏன் தான் ஆண்டவன்
உண்டாக்கினானோ?” நொந்து கொள்வான் தியாகு.
வேதனையும், துயரமும் மிக்க இந்த முகங்களைத் தவிர்ப்பதற்காகவே வேறு
கவுண்டருக்கு டிரான்ஸ்ஃப்ர் கேட்டிருக்கிறான் தியாகு. ஓரளவு வாழ்ந்து
முடிந்தவர்கள் என்றாலும் பரவாயில்லை. ஒன்றுமறியா பச்சிளம் பாலகர்கள், தனக்கு
வந்திருக்கும் வியாதியின் தீவீரத்தைக் கூட உணரமுடியாத மூண்று வயது-நாலு வயது
குழந்தைகளைப் பார்க்கும் போது, அவனால் ஆண்டவனை சபிக்காமலிருக்க முடியவில்லை.
இவர்கள் என்ன பாவம் செய்திருக்க்க் கூடும்? இந்த கொடிய வியாதி வருவதற்கு?
மணி ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. காலை நேர ரஷ் கொஞ்சம் குறைந்து விட்டது.
மருந்து வாங்கிச் சென்றவர்கள் யாவரும் பணம் கட்டிவிட்டு பில் வாங்கிச் சென்று
விட்டனர். பில்களையும் கேஷையும் சரிபார்த்தான். இந்த கவுண்டரில் பெரும்பாலும் ‘கிரடிட்
கார்டுதான்’ கேஷ் குறைவு. எனவே கேஷ் சரி பார்ப்பதில்
பிரச்சினையில்லை. இந்த ஆஸ்பத்திரி கொடுக்கும் மருந்து பில்களுக்கு கேஷ் கட்டுபடியாகுமா?
கடிகாரத்தைப் பார்த்தான் மணி பத்தாகப் போகிறது. அவன் மனைவி, அவர்களது
குழந்தையை தோளில் சாத்தியபடியும், அவனது அப்பா ஒரு கனத்த, ‘கட்டப் பையை’ சுமந்த வாறும்
வந்து கொண்டிருக்கின்றனர்.
‘ஏங்க.. நீங்க கொடுக்கும் இந்த மருந்தெல்லாம் நல்லா வேல செஞ்சு, நம்ம மவன்
பொழச்சுக்குவாங்களா? என்னோட பையன் பழயபடி விளையாடுவாங்களா...?
எல்லோருக்கும் சொல்லும் பதிலான “நீங்க டாக்டருகிட்டேயே கேட்டுக்குங்க...” என்று அவனால்,
அவனது மனைவியிடம் சொல்ல முடியவில்லை.
-------
(photo courtesy: Web)
மனதை கனக்க வைத்த கதை, உங்களை follow செய்கிறேன் , இணைந்திருப்போம்
ReplyDeleteThank U Seenu.
ReplyDeleteமனம் 'நிச்சயம் வேலை செய்யும்! குணமாயிடும் !'
ReplyDeleteஎன்று கண்ணீருடன் சொல்ல விழைகிறது
உள்ளம் நெகிழும் பதிவு!உணர்வுப் பூர்வமாக வந்துள்ளது வாழ்த்துக்கள்!
ReplyDeleteசா இராமாநுசம்
புலவர் பெருந்தகை திரு.சா.ராமாநுசம் மற்றும் நண்பர் திரு. அன்பு அவர்கட்கு எனது நன்றி
ReplyDelete