Tuesday, July 3, 2018

பத்ரிநாத் யாத்திரை


இந்துக்களுக்கு சார் தாம் என்று குறிப்பிடப்படும் (நான்கு புன்னியத் தலங்கள்) கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் யாத்திரை என்பது மிக முக்கியமான ஒன்று.  

பொதுவாக தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே பூரிஜெகன்னாதர், மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத் என நான்கு தலங்களை ‘சார் தாம்’ என்று குறிப்பிட்டாலும்  நடைமுறையில் ‘சார் தாம்’ என்பது மேலே சொன்ன நான்கு தலங்களாக கொள்ளப் படுகிறது. 

வாழ்வின் அந்திமக்காலத்தில், அதாவது வயதானபின், இமயமலைத்தொடரின் ஓரத்தில் உள்ள பத்ரி யாத்திரை செல்வது என்பது வழக்கமாகிவிட்டது. இனியும் அப்படித்தான் தொடரும் போல.  இவ்வளவு வசதிகள் இருக்கும் இக்காலத்திலேயே சலித்துக் கொள்ளும்பொழுது, ஒரு வசதியும் இல்லாத அக்காலத்தில், இக்கோயிலைச் நிறுவிய, ஆதி சங்கரர் எப்படித்தான் இங்கு சென்றாரோ?  

அக்காலத்தில்தான் பத்ரி யாத்திரை சவாலான ஒன்று. நவீன வசதிகள் வந்துவிட்டபின், இவ்வித யாத்திரைகள் எளிதாகி விட்டன.  முடிந்தால் பத்ரிக்கு மட்டும் செல்லாமல், ஜோதிர்லிங்கங்கத் தலமான கேதார்நாத்திற்கும் செல்வது உகந்தது. பத்ரியிலிருந்து கேதார்நாத் ஏரியல் டிஸ்டன்ஸ் 41கி.மீ என்றாலும் சாலைவழி 200 கி.மீக்கும் அதிகமாகிறது.

ஹரித்வார்தான்  (ஹரியைத் தரிசிக்க்ச் செல்வதற்கான நுழைவாயில்) சார் தாம்களுக்குச் செல்வதற்கான கேட்வே. எனவே முதலில் ஹரித்வார் சென்றோம்.  

ஹரித்வார்:

கங்கை, சமவெளியில் பாய்வதற்குத் தயாராகும் இடம் இது. கங்கை இங்கே சுத்தமாக இருக்கிறது.   ஆசை தீர,  நினைத்த போதெல்லாம் பன்முறை நீராடும் வாய்ப்பு! சீறிவரும் கங்கையில் நீராட வசதியாக தடுப்புக் கம்பிகள், சங்கிலிகள் வைத்துள்ளனர். தைரியமாகக்   குளிக்கலாம். மாலையில் கங்கைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்.  ஹரிகிபூரி(டி) என்று ஒரு இடம் இருக்கிறது ஹரித்துவாரில். இங்கேயிருந்துதான் யாத்ரீகர்கள், கங்கைத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள்; ஆரத்தியும் இங்கேதான்.  ஹரிகிபூரி என்றால் விஷ்ணுபாதம் என்று பொருள் கொள்ளலாம். கங்கையம்மன்  கோயிலும் இங்குதான்.

பார்ப்பதற்கு ஏகப்பட்ட கோயில்கள் – இடங்கள் இருந்தாலும் சில ஸ்னான கட்டங்கள், ஹரிகிபூரி, மானஸ் மந்திர், ஸ்ராவண மகாதேவ் கோயில், வில்வகேஷவர் கோயில், நீலேஸ்வரர் கோயில், வராக கம்பா கோவில், போலாகிரி கோயில், நவக்ரக கோயில் ஆகியவை தவறவிடக் கூடாத இடங்கள்.  ஏராளமான துறவியர். ஏகாந்தமாக அமர்ந்து தியானிக்க ஏகப்பட்ட இடங்கள். 

கோடையில் வெயில் வாட்டும். குளிக்க கங்கை அருகே ஓடுவதால் சிரம்மில்லை.

மானஸதேவி மந்திர் ஒரு மலைக்கோயில். ரோப் காரிலோ அல்லது நடந்தோ போகலாம்.  ரோப் காருக்கு காத்திருக்க வேண்டும். மேலோ சென்றால் கூட்டம் அம்முகிறது! 

ஹரித்வாரில் பல்வேறு பகுதியினருக்கும் அவரவர்கள் சம்பிரதாயத்திற்கு ஏற்றாற்போல (காசி போன்று)  ஏராளமான மடங்கள் கட்டிவைத்துள்ளனர். பெரும்பாலும் இவை இலவசம். அன்னதானம் பல இடங்களில்  நடைபெறுகிறது. எல்லா ஊர்களுக்கும் போக்குவரத்து வசதி இருக்கிறது. இது தவிர தனியார் லாட்ஜ்கள் ஏராளம்.

ரிஷிகேஷ்:

ஹரித்த்வாரிலிருந்து 30 கி.மீ தொலைவில், மேலே  ரிஷிகேஷ். சிவானந்தா ஆசிரமாம். லக்ஷ்மண் ஜூலா, சக்தி பீடம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.  இங்கும் ஏகக் கூட்டம். இந்தியாவில் பொதுவாக சுற்றுலாவென்றால் கோயில் சுற்றுலா என்றாகி விட்டதால்  எங்கு சென்றாலும் ஜன நெருக்கடி. ரிஷிகேஷும் விதிவிலக்கில்லை. ருத்ராட்சம் வாங்கு, ஸ்படிக மாலை வாங்கு என ஒரு கூட்டம், யாத்ரீகர்களை ஏய்க்க காத்துக் கொண்டிருக்கும். கவனம். 

ப்ரயாக்குகள்.

இதிகாச புராண காலங்களிலேயே இமயமலைச் சாரல் தவத்திற்கும் தியாணத்திற்கும் உகந்த இடமாக அறியப்பட்ட இடம்.   நதிக்கரைகளில் ஏகப்பட்ட கோயில்கள்.  எங்கெல்லாம் உபநதிகள், கங்கையில் கலக்கின்றனவோ அவையெல்லாம் ப்ரயாக்குகள். இந்த வழியில் ஏராளமான சிறுநதிகள் கங்கையில் கலக்கின்றன; எனவே ஏகப்பட்ட ‘ப்ராய்க்’கள்; கோயில்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை.

அல்கனந்தாவும், பாகிரதியும் ‘தேவ்ப்ரயாகில்’ கலக்கும்; ‘ருத்ர பிரயாகில்’ மந்தாகினி. ‘விஷ்னுப்ப்ரயாகில்’ மீண்டும் அல்கனந்தாவும் தவுலி கங்காவும்; ‘கர்ணப்ரயாகில்’ பிந்தரி.  
சுறுக்கமாக எங்கெல்லாம் உப நதிகள் கங்கையில் கலக்கிறதோ அதுவெல்லாம் ப்ரயாக்குகள்.  ஒவ்வொன்றிலும் இறங்குவது சாத்தியமாகாது, ஆனால் சற்று நின்று தரிசிப்பது  நல்லது. இறைஉணர்வுக்காக இல்லாவிடினும், அங்குள்ள கண்கொள்ளா காட்சிக்காகவேணும். நான் தேவ்ப்ரயாகில் மட்டும் குளித்தேன்.

பத்ரிக்கு...

சீறிவரும் நதிகள் கற்பனைக்கும் எட்டாத ஓவியங்களை வரைந்து கொண்டு உடன் வருகையில், பயணம் சலிக்குமா என்ன? யப்பா... என்ன மாதிரியான காட்சிகள்? உயரும் மலைகள்; சரேலெனச் சரியும் சமவெளிகள், சுழன்று-சுற்றி இடுக்குகளில் பாய்ந்து வரும் நதிகள்!  முழுமையாக ரசிக்க வேண்டுமெனில் பறவையாக மாறி, நதிகள் பயணப்படும் மலை இடுக்குகளில் பறந்துதான் பார்க்க வேண்டும் போல. கவிஞர்களாக இருப்பின் எழுதித் தள்ளியிருப்பார்கள்.  அவ்வளவு பேரழகு! அதுவும் விஷ்ணுப் ப்ரயாகிலிருந்து  பத்ரி செல்லும் மலைவழிச் சாலை ஒரு திகில் அழகு!  ‘போங்கப்பா... ஊரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்.. நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்..’ என்று எண்ணவைக்கும் அற்புதக் காட்சிகள்.

எல்லாமே சுகமாகச் சென்றால் எப்படி? இடையூறு வேண்டாமா? வழியில் மிகப்பெரிய நிலச் சரிவு நிகழ்ந்தது! கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் தேங்கின.  வாகனம் நின்ற இடத்தில், மிக அழகான நதியொன்றும் பெரிய மணல் திட்டு ஒன்றும்!   ஆற்றையொட்டி சரேலென பல்லாயிரம் அடி உயரும் மலையொன்று!  உடனே ஒரு சமவெளி!

ஒரு பஞ்சாபிப் பெண் குதூகலம் கொண்டு, ‘ட்ராஃபிக் நின்றுவிட்டாலும், இப்படிப்பட்ட சொர்க்கத்தில்தானே நிறுத்தியிருக்கிறார்.. ஆனுபவிப்போம் வா... ஆண்டவனுக்கு  நன்றி..’ எனத் துள்ளிக் குதித்துக் கொண்டு தன் கணவனை  இழுத்துக் கொண்டு மணல் திட்டிற்கு விரைந்தார். அனுபவிக்கப் பிறந்த பெண்.

ஜெசிபிக்கள் சுழன்று சுழன்று சேற்றையும் கற்களையும் அள்ளி அள்ளி ஓரமாகத் தள்ளின. பாதை சரியாக வெகு நேரம் பிடித்தது.  பின் வழியில் பீப்பள்கட்டில் தங்கிவிட்டு, காலை பத்ரி பயணத் தொடக்கம்.

பத்ரியி என்றால் 'இலந்தை' !   நாலாபுறமும் மலை சூழ் பகுதி! எனவே, சூரியன் மேலேறும்வரை குளிருகிறது. அதே போலவே மாலையானதும். 

வருடம் முழுவதும் கோயில் திறந்திருக்காது!  ஏப்ரல் 30 வாக்கில் திறந்து, பனிக்காலத்தில் மூடப்பட்டுவிடும். மே-ஜூனில் கூட்டம் அதிகம் இருக்கும். கோயிலில் நம்பூதிரிகள்தான் பூஜை செய்கிறார்கள். காலை நான்கரை மணிக்கு திறந்து மதியம் ஒருமணிக்கு நடை அடைக்கப்படும். பிறகு மாலை நான்கு மணிக்கு திறந்து இரவு ஒன்பதுக்கு அடைக்கிறார்கள். 

பனிக்காலத்திற்காக நடை சாத்தப்படும் பொழுது, ஏற்றப்படும் தீபம், மீண்டும் ஆறு மாதம் கழித்து திறக்கப் படும்வரை எரிந்து கொண்டிருக்கும்; அதுவரை நாரத முணி பூஜை செய்து கொண்டிருப்பார் என்று சொல்கிறார்கள். 

பனிக்காலத்தில் கோயில் மூடப்படும்பொழுது, உற்சவர் கீழே இருக்கும் ஜோஷிமட்டிற்கு அழைத்து வரப்பட்டு  அங்கிருக்கும்  வாசுதேவர் கோயிலில் எழுந்தருளச் செய்வர்.
ஜோஷிமட்டில் ஒரு நரசிம்மர் கோயில் இருக்கிறது.  நீங்கள் பேக்கேஜ் டூரில் சென்றால், ஜோஷிமட்டிற்கும், முக்கியமான ப்ரயாக்களுக்கும் அழைத்துச் செல்வார்களா என்பதி உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிடில் நேராக பத்ரியை அரைகுறையாகக் காட்டிவிட்டு திரும்ப அழைத்து வந்துவிடுவர்.  

என்னைக் கேட்டால், ரிஷிகேஷிலிருந்து தனியாக ஒரு வாகனம் அமர்த்திக் கொண்டு, பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியல் இட்டுக்கொண்டு, சாலை திறந்திருக்கும் நேரத்தையும் கணக்கில் கொண்டு, நிரலைத் தயார் செய்து கொள்வது நல்லது.  அவ்வளவு தூரம் சென்றுவிட்டு, எதையும் பார்க்காமல் திரும்ப வருவது வீண்.  அந்த வகையில் ஜோஷிமட் பார்க்க வேண்டிய ஒன்று.

பத்ரிநாதர் கோயிலின் அடியில் கங்கை ‘சில்லென’ ஓடிக் கொண்டிருக்கும்! குளிப்பதற்கு வசதியாகவும் இருக்காது; அந்தச் சில்லிப்பையும் தாங்க முடியாது. ஆனால் கொதிக்க கொதிக்க வெண்ணீர் ஊற்றுக்கள் இருக்கின்றன. நிர்வாகத்தினர் வெண்ணீரையும் தண்ணீரையும் சரிவிகிதத்தில் கலக்குமாறு செய்து, அங்குள்ள சப்த குண்டத்தில் விழுமாறு செய்துள்ளனர். அவ்விதம் மூன்று தொட்டிகள் உள்ளன! ஆனந்தமாக நீராடலாம. எடுத்தவுடன் ‘தடால்’ என தொட்டிக்குள் இறங்கிவிடாமல், கொஞ்சம் உடலை சுடுநீரின் சீதோஷ்ணத்திற்கு சில் நொடிகள் பழக்கப்படுத்திவிட்டு, பின் முழுவதுமாக இறங்க வேண்டும்.

ஆறங்கரையில் மூதாதையர்களுக்கு திதி (சிரார்த்தம்) கொடுக்கலாம். அவரவர்கள் வழக்கப்படி செய்துவைக்க ஆட்கள் இருக்கிறார்கள்.  இடையில்  'ப்ரோக்கர்கள்' அதிகம். சற்றே கவனம்,  அதிகமாக சார்ஜ் செய்வார்கள். நேரிடையாக சம்பந்தப்பட்ட ஆட்களிடம் சென்றுவிட்டால், ஓரளவு கட்டனம் குறையும்.  திதிகொடுத்தபின், பிண்டங்களை அருகிலேயே உள்ள பிரம்ம கபாலத்தில் காண்பித்துவிட்டு, பின் கங்கையில் கரைக்க வேண்டும்.

அந்த சடங்குகளை முடித்தபின்,  உடைமாற்றிக் கொண்டு, பத்ரிநாதரைத் தரிசித்தேன். ஆஹா... இதற்காகவன்றோ காத்திருந்தேன். திவ்ய தரிசனம்.

அவரை, யார் யார் எவ்விதமாகப் பார்க்கிறார்களோ அவ்விதமாகவே தோன்றுவார் என்று சொல்கிறார்கள்.  சிவனாகப் பார்த்தால்-சிவன்; பெருமாளாகப் பார்த்தால் பெருமாள்; காளியாகப் பார்த்தால் காளி.  நான் எவராகவும் பார்க்கவில்லை; எங்கும் உறை பரம்பொருளாக, உங்களுக்குள், எனக்குள், சகல ஜீவராசிகளுக்குள்ளும்,  சகல அண்ட-ப்ருமாண்ட்த்திற்குள்ளும் - அதுவாகவே இருக்கும் யூனிவர்ஸல் சக்தியாகவே பார்த்தேன்; எப்பொழுதும் போல!

பத்ரிநாதரை மிக அருகில் சென்று தரிசிக்கலாம். ‘ஜெருகண்டி’ வெளியே இழுத்துத் தள்ளிவிடுவது ஆகியவை இல்லை; மிக மரியாதையாகவே அடுத்தவருக்கு இடம்விடும்படி கேட்டுக்கொள்கிறார்கள். மறுபடியும்  தரிசிக்க வேண்டுமெனில், வெளியே உள்ள உயராமன மேடையிலிருந்தும் பார்க்கலாம்;  மிக  நல்ல முழு தரிசனம் கிடைக்கும்.எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.

நான் தங்கியிருந்த லாட்ஜின் எதிரே ஒரு விபத்து நிகழ்ந்து, லாரி ஒன்று தலைகுப்புற மண்ணில் புதைந்துவிட்டதால், சாலை சரியாகும்வரை, இருதினங்கள்  பத்ரியிலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. இதை இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு பன்முறை கோயிலுக்குச் சென்றுவந்தேன்.

அனைத்தும் பத்ரிநாதர் அருளால் செம்மையாக நடந்து முடிந்தது.

குறிப்பு:

1.     எந்த இடங்களைப் பார்க்கப் போகிறோம் என்பதை கூகுளித்துவிட்டு செல்வது நல்ல உபாயம்.

2.     பேக்கேஜ் டூராக இருப்பின், எந்த எந்த இடங்களைக் காண்பிப்பார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அனுபவமிக்க டூர் ஆபரேட்டர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

3.     கோடைகாலமாக இருப்பின், இரவில் தங்குவதாக இருந்தால் மட்டும் பத்ரிக்கு குளிருடை அவசியம். அன்று மாலையே திரும்புவதாக இருந்தால் ஒரு குல்லாவே போதும்.

4.     தேவையற்ற ல்க்கேஜ்களை ரிஷிகேஷோ அல்லது ஹரித்வாரோ எங்கிருந்து புறப்படுகிறீர்களோ, அங்கே விட்டுச் செல்லுங்கள்.

5.     மிகவும் டைட் ஷெட்யூல் போட்டுக் கொள்ளாதீர்கள். கைவசம் உபரியாக இரு தினங்களாவது வைத்துக் கொள்ளுங்கள். இயற்கை இடர்கள் அதிகம் நிகழும் இடம்.

6.     ஆதார் அட்டை அவசியம். ‘சார்தாமில்’ எந்த தாமிற்குச் சென்றாலும் ரிஷிகேஷில் கேட்பார்கள்.

7.     மருந்துகள், டார்ச் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

8.     மிக வயதானவர்களை சுமந்து செல்ல ஆட்கள் இருக்கின்றனர். தேயிலைத் தோட்டங்களில் தேயிலை பறித்துப்போட ஒரு கூடை ஒன்றை முதுகில் கட்டியிருப்பார்களே, அது போல ஒரு கூடை ஒன்றை முதுகில் கட்டி, அதனுள் பயணிகளை அமரச் செய்து,  அனாயாசமாக நடக்கிறார்கள்.

9.     ஆக்சிஜன் சற்றே குறைவு என்பதால் (பெரும்பாண்மையினருக்கு பிரச்சினையே இல்லை, வெகுசில நோயாளிகளுக்கு மட்டும்) கவனம் தேவை. வெளியில் மொபைல் எமர்ஜென்ஸி மெடிகல் கேர் வாகனங்கள், அத்தியாவசிய உபகரணங்களுடன் இருக்கின்றன.

10.  வழியெங்கும் தடையில்லா செல்போன் சிக்னல் கிடைக்காது. எனக்குத் தெரிந்து, சற்றே ‘வீக்காக்’ இருந்தாலும் பி.எஸ்.என்.எல் பெரும்பான்மையான இடங்களில் சிக்னல் கிடைக்கிறது.

 புகைப்படங்கள் : சில  படங்கள் நெட்; சில என்னடையது 














Monday, July 2, 2018

முக்திநாத்திற்கு ஒரு பயணம் – இறுதிப் பகுதி.

முதல் பகுதி லிங்க: Click here 

என்ன இந்த ஆள்? நாள் முழுவதும் அலுப்பான பயணத்தை முடித்துவிட்டு, அதி காலையிலேயே எழு என்கிறாரே.. என சலித்துக் கொண்டு உறங்கப் போனேன்.  ஆனால் பயாலஜிகல் க்ளாக் சரியாக மூன்றரைக்கு எழுப்பிவிட்டுவிட்டது!

வெளியே வந்தால், அதிகாலை நான்கிற்கே வானம்  பளீர். எதிரே வெள்ளிக் கவசமிட்டது போல, பனிச் சிகரம். சற்று நேரத்தில் சூரிய ஒளி பட்டு, தங்கம் போல ஜொலிக்கும் பாருங்கள் என்றார் ஒருவர். உண்மைதான். சூரியக் கிரணங்கள் பட்டதும் பனி மூடிய வெள்ளிச் சிகரங்கள், தங்கக் கவசம் பூட்டிக் கொண்டன.

ஜொம்சொம்மிலிருந்து முக்திநாத் கோயிலின் ராணிபாவா கிராமம், 22 கி.மீ தூரம். ஆச்சர்யமென்னவென்றால்,   இந்த இடைப்பட்ட தூரத்திற்கு அருமையான வழு வழு தார்ச்சாலை அமைத்திருக்கிறார்கள்.  தனியாகச் செல்பவர்களுக்கு மோட்டார்பைக் சவாரியும் வாடகைக்குக் கிடைக்கும்.

கோயிலிற்கு இரு கி.மீ தூரத்திற்கு முன் வண்டி நிறுத்தப்படும். அதன் பின் நடந்து செல்ல வேண்டும். முடியாதோர் குதிரையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கிராமத்தில் கடைகள் இருக்கின்றன. பெரும்பாலும் குளிர் உடைகள்தான் விற்பனை! நடக்கக் கூடிய தூரம்தான் என்பதால், குதிரை வேன்டாம். நடுவே பெரிய புத்தர் சிலை. அதைத் தாண்டி உள்ளே சென்றால், முக்திநாத் கோயில். ஆஹா... இதைக் காண்பதற்குத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன். உள்ளம் நெகிழ்ந்தது.  

கோயிலுக்கு பின் புறமாக 108 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றை வரிசையாக குழாய் போல, நந்தி வடிவில் அமைத்திருக்கிறார்கள். நாம் முதல் தீர்த்தத்தில் ஆரம்பித்து 108வது வரை தலையையும் உடலையும் காட்டிக்கொண்டே செல்ல வேண்டும். பின்னர், கோயிலுக்கு முன்புறமாக இருக்கும் பாப குண்டம் – புன்னிய குண்டம் என்ற  இரு சிறிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். அதன் பிறகு முக்தி நாதரை தரிசிக்கலாம்.

குளிர் என்றால் அப்படி ஒரு குளிர். சட்டையைக் கழற்றியதுமே உடல் நடுங்கியது! க்ளேசியரிலிருந்து உருகி, அப்படியே வரும் நீர் போல! அதில் போய் எப்படி நீராடுவது என ஒரு கணம் யோசித்தபோது, ஒரு மூதாட்டி சற்றும் தயக்கமின்றி நாராயணா..நாராயணா என ஜபித்துக் கொண்டே, நீராடிச் சென்றார். அவரின் செயலைப் பார்த்த்தும் சற்றே வெட்கமாகிவிட்டது. 

108 தீர்த்தங்களிலும் நீராடி, பாப-புன்னிய குண்டங்களிலும் நீராடி பின் நாராயணனைத் தரிசித்தேன்.  ஒரு நிமிடத்தில் உடல் இந்த குளிருக்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டுவிட்ட்து.

முக்திநாத்  105வது திவ்ய தேசமாகும்.  எட்டு அதிமுக்கிய கோயில்களில் ஒன்று.  புஷ்கர், ஸ்ரீரங்கம், பத்ரிநாத், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், நாங்குனேரி ஆகியன பிற ஏழு!

கூட்டம் அதிகமில்லை!  நிம்மதியாக ஆர அமர மெய் சிலிர்க்கும் தரிசனம் கிடைத்தது.  பெருமாளைக் கண்ட திருப்தி வெகுநாள் மனதை ஆக்கிரமித்திருக்கும்.

சூரியன் மேலேற, குளிர் குறைந்தது. பசுமையான நினைவுகளோடு, ஜீப்பில் பொக்காரா வந்தடைந்தேன்.

தில்லியிலிருந்தும், பொக்காராவிலிருந்தும் ஏராளமன டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் முக்திநாத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். தனியாகவும் செல்ல்லாம். பயமில்லை. இந்தி தெரிந்தால் போதுமானது.

கவனம்:  எல்லா இடங்களிலும், ருத்ராட்சம் விற்கிறேன், சாலிக்கிராமம் விற்கிறேன் என பலர் சூழ்ந்து கொள்வார்கள். ஒரிஜினல் சாலிக்கிராமம் தேர்ந்தெடுக்கத் தெரிந்தவர்கள் மிகக்குறைவு! சாதாரண கல்லை, ரூ 1000, 2000 எனத் தலையில் கட்டிவிடுவார்கள்.  ஒரிஜினல் போல பிளாஸ்டிக்கிலும் செய்கிறார்கள். அதே போல ருத்ராட்சமும். அவர்கள் வைத்ததுதான் விலை! 

நாராயாணா....





108 தீர்த்தம் (படம் நெட்)

கெண்டகி நதி  (நெட்) 
மூலவர் (நெட்)

பாப குண்டம் 



புண்ணிய குண்டம் 





Sunday, July 1, 2018

முக்திநாத்திற்கு ஒரு பயணம்.



காலன் வருமுன்னே, கண் பஞ்சடையுமுன்னே, பாலுண்கடைவாய்ப் படுமுன்னே, மேல்விழுந்து அழ, உற்றார் எவருமில்லாவிடினும் -  உடலைச் சுடுவதற்குள் சில இடங்களைக் காண வேண்டும் என்ற அவா வலுப்பெற, ‘முக்திநாத்’ சென்று வரத் தீர்மாணித்தேன். தலத்தின் பெயரிலேயே ‘முக்தி’இருக்கிறதே!.

‘முக்திநாத்’ புத்த மதத்தவர்கட்கும்-ஹிந்துக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது! புனிதமானது! புத்தமதத்தில் ‘சுமிக் கியட்சா’ (நூறு தீர்த்தங்கள்) என்று அழைக்கிறார்கள்.

கோயில் ஒன்றும் பிரமாண்டமானது அல்ல! புத்த ‘பக்கோடா’ ஸ்டைலில் அமைந்துள்ள சிறு கோயில்தான். ஆனால், கீர்த்தி அபரிமிதமானது!  இத்தலத்தை அடைய உடல்பலமும், மனோதிடமும் அவசியம். ‘நாராயணனை முன்னிறுத்தி-சௌகரியங்களைப் பின்னிறுத்தினால், எளிமைதான்.
சாத்தியமானால்  முக்திநாத் நாராயணனைத் தரிசிப்பது-வேறெதும் நிகழ்ந்துவிட்டால் வைகுண்டத்தில் நாராயணனைப் பார்த்துவிடுவது என தீர்மாணித்து விட்டதால்,  எல்லாவற்றையும் குதூகலத்துடன் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

சாலைவழியே, இந்தியாவில் உள்ள கோரக்பூர் சென்றடைந்தேன். இவ்விடத்திலிருந்து, நேபாள எல்லைச் சிற்றூரான, ‘சொனாலி’ சென்று, அங்கிருந்து பொக்கரா செல்வது முதல் பாதி திட்டம்.

கோராக்பூர் நெருக்கடியான நகரம். ஊரைத் தாண்டுவதற்குள் மூச்சு முட்டிப் போகிறது. சாலைவிதிகள், அவர்கள் கேள்விப்படாத ஒன்று போல! ஃப்ரீ ஃபார் ஆல்!

திட்டமிட்டபடியே, மாலைப் பொழுதில் சொனாலி சென்றடைதேன்.  சர்வதேச எல்லையாயிற்றே! சிங்கப்பூர்-மலேஷியா எல்லைச் சாவடி போல நேர்த்தியாக இல்லாவிடினும், ஓரளவிற்காவது அழகாக இருக்கும் என நினைத்ததுதான் தவறு! ஆட்டோக்களும், லாரிகளும், ரிக்ஷாக்களும், சுற்றுலாவாகனங்களும், பயணிகளும் நெருக்கியடித்துக் கொண்டு.... உஃப். கள்ளக்குறிச்சி பஸ்ஸ்டாண்ட் போல இருக்கு!  45 டிகிரி வெயில்.. பிசுபிசுப்பு.. ஜன நெருக்கடி! நேபாள பர்மிட் வாங்க முட்டிமோதும் டிரைவர்கள். 

சற்றே  விலகி,  நேபாள ‘சிம் கார்டு’ வாங்கிக் கொள்ளலாம் என சுற்றுமுற்றும் தேடினால், அந்த சந்தைக்கடை நெருக்கடியில், சிறு கூரைக்குள் இருவர் அமர்ந்துகொண்டு, ‘சிம் கார்டு 100 இந்திய ரூபாய்’ என்றனர். வாய்க்குள்  மிக்ஸரை திணித்துக்கொள்வதில் சுவரஸ்யமாய்  இருந்தனரே தவிர,  ‘டேட்டா’ எவ்வளவு என்ற  சந்தேகத்தைத் தீர்க்கவில்லை! அடுத்தவாய் மிக்ஸரை வாயில் கொட்டிக்கொள்வதற்குள், பாய்ந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டு, ‘டேட்டா உண்டா இல்லியா ...  சொல்லித் தொலையுமையா.’ என்றால், 250 எம்.பி என சொல்லிவிட்டு, சடாரென மிக்ஸரை வாயில் கவிழ்த்துக் கொண்டுவிட்டார்.

நேபாளத்திற்குள் நுழைய ‘ஆதார்’ போதும். ஆனால் சிம் கார்டு வாங்க, பாஸ்போர்ட் அல்லது எலக்ஷன் ஐ.டி, மற்றும் புகைப்படம் ஒன்று ஆகியவை தேவை. கவனம்.

ஒரு இந்திய ரூபாய்க்கு, 1.6 நேபாள ரூபாய் கிடைக்கவேண்டும்.  ஆனால் கடைகளிலும்-லாட்ஜ்களிலும் 1.2 முதல் 1.5 வரைதான் தருவார்கள். முன்னதாக நேபாள ரூபாயாக மாற்றிக் கொள்வது நல்லது. 1.2 பரவாயில்லை என்றால், நேபாளத்தின் எந்த இடத்திலும் இந்திய ரூபாயை ஏற்றுக் கொள்வார்கள்.

எல்லைக்கு அப்பாலும் சொனாலிதான். அங்கே ‘மானசரோவர்’ என்ற லாட்ஜில் தங்கினேன். சுமாரான இடம். இரவுத் தங்கல் மட்டுமே என்பதால், இதுவே போதும்.
நேபாளமெங்கிலும், ரொட்டி-சாதம்-சப்ஜி கிடைக்கும். சில மார்வாரி ஹோட்டல்களில், இட்லி தோசை கிடைக்கும்.  நேபாள நேரம் இந்திய நேரத்திற்கு 15 நிமிடம் வித்தியாசம்.

காலை எழுந்து, போக்கரா பயணம்.  அழகிய சீனரிகள் நிறைந்த மலைச் சாலைகளில் ஒன்று சொனாலி-போக்கரா சாலை. திகட்ட திகட்ட காட்சிகள். கம்பீரமாய் நிற்கும் இமயமலைத் தொடர்கள். பசுமை போர்த்திய சிகரங்கள். கற்பனைக்கும் எட்டாத மலைச் சரிவு காட்சிகள். ஆங்காங்கே சலசலக்கும் ஓடைகள். ஆறுகள். நீறுற்றுகள். ஆஹா...  நெடிய-இனிய பயணம்.  



நேபாளத்திற்குச் செல்வோர், விமானப்பயணத்தை ஒன்வேயாக வைத்துக் கொண்டு, சாலைவழிப் பயணத்தை மற்றொருவழியாகக் கொள்வது, அருமையான அனுபவத்தைக் கொடுக்கும்.

பொக்காரா செல்லும் போது மதியத்திற்கு மேலாகிவிட்டது. பொக்காரா நமது ‘ஊட்டி’ போன்ற ஒரு இடம். எப்ப மழைவரும் என கனிக்க இயலாது.  அங்கே ஊர் சுற்றிப் பார்க்க அரை நாள் போதும். ஆனால் அனுபவிக்க இரு நாட்களாவது வேண்டும். அங்கே ஒரு ஏரி (ஃபெவா லேக்) இருக்கிறது பாருங்கள்... என்னே அழகு! மயக்கும் மாலையில், சாரல் மழையில், ஏரிக்கரையில் நடப்பது சுகானுபவம். படகுச் சவாரி உண்டு! மாலை ஐந்துமணி வரைதான். இது தவிர ஏகப்பட்ட கோயில்கள். கடைத்தெருக்கள். தெருவிற்கு பத்து மசாஜ் பார்லர்கள். சைவம்தான். 

டிரெக்கிங் ஆசையுள்ளவர்களுக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள்.

அடுத்த நாள் காலை, பொக்காராவிலிருந்து, ‘ஜொம்சொம்’ என்ற இடத்திற்கு விமான டிக்கட் வாங்கியிருந்தேன். சிறிய 12 சீட்டர் விமானம்.  ஜொம்சொம்மிலிருந்துதான் முக்தியடைய வேண்டும். காத்திருந்தேன். ஆனால் விமானம் செல்லாது எனத் தகவல் வந்தது. வானிலை சரியில்லையாம். 

‘ஏன்... எல்லாமே நன்றாகத்தானே இருக்கிறது..’ என விண்ணைப் பார்த்தால், இங்கேயில்லை, ஜொம்சொம்மில் வானிலை மோசம் எனப் பதில் வந்தது. ஜொம்சொம் என்பது, முக்திநாத் கோயிலுக்குச் செல்லும் அடிவாரத்தில் உள்ள நகரம். அரை மணி நேர விமானப் பயண தூரம். ஆனால், சதா வலுவான காற்றடிக்கும் ஊர். சிறிய ரக விமானங்கள் இதைத்தாக்குப் பிடிக்காது.  எனவே, முக்திநாத் செல்பவர்கள், டைட் ஷெட்யூலில் செல்லக் கூடாது.  உபரியாக இருதினங்களாவது கைவசம் வைத்திருப்பது உசிதம்.  

மாற்று ஏற்பாடாக ஸ்கோர்பியோ ஒன்றை அமர்த்திக் கொண்டேன். எல்லாம் நல்லபடியாக இருந்தால், 12 மணி நேர சாலைப் பயணம். நிலச்சரிவுகள், வெள்ளம், காற்று போன்ற இயற்கை இடர்கள் நேரின்,  பயண நேரம் உத்திரவாதம் அல்ல! இது தவிர அரசியல் பந்த் ஏதும் நடைபெறாமல் இருக்க வேண்டும். அங்கே ‘பந்த்’ என்றால், கொழுக்கட்டை கணக்கு போல 108 மணி நேர பந்த் என்பார்கள். இப்பொழுது பொலிடிகல் ஸ்டெபிலிடி உள்ளதால், பந்த்கள் குறைவு.

ஒரு வழியாக இருதினங்களுக்கு மட்டும் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு, மீதி லக்கேஜ்களை க்ளோக் ரூமில் அடைத்துவிட்டு, முக்தினாத் நோக்கி ஸ்கோர்பியோவில் பயணப்பட்டேன்.  

‘பேணி’ என்ற  இடம் போக்ராவிலிருந்து 80 கி.மி தூரம். அது வரை சாலையென்று ஒன்று இருக்கும்.  தூக்கித் தூக்கிப் போட்டாலும், 30 கி.மீ வேகத்தில் பயணப் படலாம். ஆனால் பேணியிலிருந்து ஜொம்சொம் நகரத்திற்குச் செல்லும் வழி அபாயகரமானது.. பெரும்பாலும் சாலையென்று ஒன்று இருக்காது. கற்கள் துருத்திக் கொண்டிருக்கும், சேறும் சகதியுமான தடத்தில் செல்ல வேண்டும். 15 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல இயலாது. செங்குத்துத் தடம். த்ரில்லிங் அனுபவம். 

சிண்டு வைத்துக் கொண்டு, கடுக்கணும்-ஜீன்ஸும் அணிந்த இளைஞ டிரைவர், இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, பேசாமல் வாருங்கள் என்றார்.

'அட.... இட்ஸ் ஹேப்பனிங்க்... உண்மையாகவே முக்தினாத் சென்றுகொண்டிருக்கிறேன்', என்ற எண்ணம் குதூகலத்தை அளித்தது. கூடவே கெண்டகி நதி, சுழன்று, பருத்து ,சீறி, அமைதியாக உடன் பயணப் பட்டது. இந்த நதியில்தான் ‘சாலிக்கிராம கற்கள்’ கிடைக்கும்.

உலகிலேயே மிக ஆழமான கார்ஜ் காளி கண்டகி நதிதான். இரு மலைச் சிகரங்களுக்கிடையே உள்ள கிடுகிடு பள்ளத்தில் ஓடுகிறது இந்த நதி. 18,000 அடிக்கு மேல் ஆழம். அழகான ராட்சசி கண்டகி.  

அன்னபூர்ணா ரேஞ்ச், காஜா போன்று பல இடங்களில் சுற்றுலா வாகணங்களும், பயணிகளும் அனுமதி பெற்றாக வேண்டும்.  இவற்றை வாகன ஓட்டுனரே கவணித்துக் கொள்வார்.

வழியில் டடோபாணி  என்ற இடத்தில் மலைக்க வைக்கும் அருவி ஒன்று இருக்கிறது. கண் கொள்ளாக் காட்சி! இலங்கையில் உள்ள ராவணன் நீர்வீழ்ச்சியைவிட உயரமானது. அழகானது.

சாலையின் ஓரத்தையொட்டிச் செல்லும் வண்டிச் சக்கரத்திற்கு அப்பால், பல்லாயிரம் அடி ஆழம்.அந்தச் சாலையில் நடனமாடிக்கொண்டே சென்றது வாகணம்.  

திடீரென ஜீப் நின்றுவிட்டது. எங்கோ நிலச் சரிவு ஏற்பட்டுவிட்டதாம். ஜேசிபிக்கள்  தனது இரும்புக்கைகளைக் கொண்டு பாறைகளை அப்புறப்படுத்தியபின் தான் புறப்படஇயலும்.

மூன்று மணி நேர காத்திருப்பிற்குப்பின் ஒருவழியாக மீண்டும் புறப்பட்டோம். நான்கு சக்கரங்களையும் இயக்கும் வாகணமாதலால், புதைச்சேறுகளையும், கற்குவியல்களையும் எளிதாகக் கடக்க முடிந்தது. வழியெங்கும் ஜேசிபிக்கள் தேனீக்கள் போல இயங்கிக் கொண்டே இருக்கின்றன. சாலைக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மன்னராட்சி முடிந்து, மக்களாட்சி வந்ததால் கட்டமைப்புகள் வேகமாக நடைபெறுகிறது என்கிறார்கள்.

இருட்டிவிட்டது! சாலையெது? மலைமுகடு எது? பள்ளம் எது? நதி எது...? மின்சாரம் இல்லை. ஊர்களும் இல்லை. ஒன்றும் புரியவில்லை. டிரைவர் உண்மையிலேயே மிஸ்டர் கூல்தான். அவர்பாட்டிற்கு கீதாச்சார பாவத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென கெண்டகி நதியின் உள்ளேயே வண்டியைச் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ‘கரகரவென’ சரளைக் கற்களுக்கிடையேயும், தண்ணீருக்கிடையேயும் அரைபட்டுக்கொண்டு சென்றது சக்கரம்.  இந்த மனுஷன் எப்படிதான்  வழியைக் கண்டுபிடிக்கிறார் எனக் கேட்க விருப்பம் கொண்டு, பின் வாயை மூடிக் கொண்டேன்.

குளிர்காற்று.. கும்மிருட்டு.  தலைக்கு மேலே வெள்ளம் போனால், ஜானென்ன முழமென்ன?

இரவு மணி பத்து.. ஜொம்சொம் எப்ப வரும்?

பிடித்துக் கொண்டது  நல்ல மழை.

நல்ல வேளை.. கெண்டகி நதியில் சென்றுகொண்டிருக்கும் போது மழை இல்லை! திடீரென ஃபளேஷ் வெள்ளம் வராமலிருக்க வேண்டுமே?

ஒரு வழியாக ஜொம்சொம் ஊரை அடையும்போது மணி 11ஐத் தொட்டது.  அந்த நேரத்தில், ஏற்கனவே புக் செய்திருந்த லாட்ஜ் ஒன்றில், சுடச் சுட சப்பாத்தி-ரசம்-தயிர் கொடுத்தார்கள். தேவாமிர்தம்.

டிரிங்க்ஸும் வைத்திருக்கிறார்கள்.

டிரைவர் அறிவித்தார். ‘நாளை விடியற்காலை நாலு மணிக்கு ரெடியாக வேண்டும். நேராகக் கோயிலுக்குச் சென்று குளித்து, பின் ஸ்வாமி தரிசனம் முடித்துவிட்டு, திரும்ப லாட்ஜுக்கு வந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, போக்காரா செல்ல வேண்டும். லேட் செய்யாதீர்கள்.”

இப்பவே மணி 11... எப்ப தூங்கி, எப்படி நாலு மணிக்கு, இந்த நடுங்கும் குளிரில் தயாராவது?

ஜொம்சொம் அடிவாரத்திலிருந்து, முக்திநாத் 22 கி.மீ தூரம். 

நாலாபுறமும் தௌலகிரி மலையும், சிறிய ரன்வேயும், நில்கிரி மலையும் சூழ்ந்த ஊர் ஜொம்சொம்.

காலை எழுந்து, ராணிபுவா ஊரை அடைந்து, பின் முக்தி நாதரை தரிசித்த  விபரங்கள் அடுத்த பகுதியில்.........












Wednesday, May 2, 2018

Cry Alone, But Laugh In The Crowd

Cry Alone, But Laugh In The Crowd .....By Dr M S Krishnamurthy.

The words of the great visionaries have a lot to teach for designing our better tomorrows. Their words of wisdom always hide out the experience they have gained during their long journey or due to the situations they have faced in their critical moments of life and profession.

“Cry Alone. But, Laugh In Crowd” is the famous proverb of ancient Indians. This gives us a strategy to follow when we are in loss or gain.

Cry Alone

Everybody faces defeat, defame, fatigue, failures in their life in one or the other times. Many a time, we share those things in the public or social media.
The Indian proverb does not approve of this. In stead, it guides us to hide our sorrows from the crowd. It is our problem. We need to solve it by ourselves.

It does not mean that we should not share our grief with closed ones or a doctor. It only means, avoid crying about it in the public. Surely, our friends and family can help, console, encourage and support us but even with them, you need to be choosy to share what, how much and with whom.

Your tears are precious. Let them not become public property.
Your feelings should not become toys at the hands of public. Never listen to your pseudo friends.

If the problems are shared in social media, the masses may fake to be concerned about it, without any solutions. In your back, they make take your advantage and back stab.

In the moment of desperation and disappointment, seek the help of your own soul first. “Each soul is potentially divine” – Swami Vivekananda.
The inner strength will increase with self confidence. Believe in yourself. Tell to yourself that you can do it. You can overcome the loss. You have the power within you to tackle this situation.
Set up a master plan. Take the help of the minimum possible friends and get over your problems.

The only thing that matters now is cry in front of God –
If you do not find any shoulder to rest your head and cry, cry in front of a photo of your favorite God. Divine Park explains – tears in the prayer is like sticking the stamp on to the postal letter. The delivery is guaranteed.
With tearful prayer, at the moment of difficulty, you may not find immediate solution. But your soul gets connected to the supreme soul with the fuel of your tears. That Supreme Soul make sure that you win at the end.

Laugh in crowd

This is how we should celebrate or respond to even the smallest joyful moments. It is very essential to showcase our successful endeavors as it will boost the morale and mood of the beloved ones and team mates. Also, this will reduce the strength of the opponents, competitors.

Laugh is contagious. Smile is endemic. It spreads positive vibes in and around us. With your achievements, you may be inspiring so many distressed souls. So, find the way to celebrate the joy in every possible cases and never cry for your failures in public.
You are free to share the response of your fellow people in your pleasure and sorrowful moments of the life. Depressive symptoms: When to seek for medical help during depression?
Power Of The Heart Is In Loving Everything Imperfect
My Favorite Five Words That Rule My Life. What Is Yours?
Reader Interactions

Friday, April 27, 2018

சிங்கப்பூர் – மலேஷியா – தாய்லாந்து


காலை இட்லி டிஃபன், மதியச் சாப்பாடு, பின் தூக்கம் என எத்தனை நாட்களுக்குத்தான் போரடித்துக் கொண்டிருப்பது? மகளுக்குத்  திருமணம், பேரன்களைப் பார்த்தல் என அனைத்தும் முடிவடைந்துவிட்டது. பணி ஓய்வுக்குப் பின் பெறும் பென்ஷனைச் சேர்த்துவைத்து, அவ்வப்போது காணடித்துக் கொண்டிருப்பது (தொலத்துவிடுவது) சலிப்பாக இருக்கவே, பட்ஜட்டுக்கேற்ற வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொள்வது எனத் தீர்மாணித்தபொழுது, டெம்ப்ளேட்டாக அனைவரும் முதலில் விரும்பும் சிங்கப்பூர்-மலேஷியாவைத் தேர்ந்தெடுக்காமல், இலங்கை சென்றேன்.பின் பாலி, துபை சென்றேன். இன்னமுமா ‘சிங்கை’ செல்லவில்லை என்ற இரங்கற்பா துரத்த, சிங்கை-மலேஷியா-தாய்லாந்து செல்ல, ‘சேர்க்க’ ஆரம்பித்தேன்.

சிங்கப்பூர் குறித்து ‘மயக்கம்’ ஏதுமில்லை.  யாரும் பார்க்காத, எழுதாத புதிய  விஷயங்கள் ஒன்றுமில்லை. 

ஆனால் கன்வென்ஷன்லான  ரிவர் சைட் சிட்டி, பார்க், பறவைகள் பூங்கா, மிருகக்காட்சி சாலை ஆகியவற்றைத்தவிர, என்னைக் கவர்ந்த ஒரு இடம் ‘கார்டன்ஸ் பை தெ பே’  !

அது ஒரு மகாப் பெரிய தோட்டம். உலகின் அனைத்துத் தாவர மாதிரிகளையும் மிகப் பிரமாண்டமான குளிரூட்டப்பட்ட அரங்கில் நிர்மாணித்திருக்கிறார்கள். அடேயப்பா...  அதை அரங்கமென்று சொல்வது தவறு! ஒரு குட்டி நகரமே! எவ்வளவு பெரிதாக செய்திருக்கிறார்கள்? ஆர்கிடெக்கின் அற்புதம் அது.

‘அவதார்’ படம் நினைவிருக்கிறதா? அதில் ஒரு மாய அருவி கொட்டுமே, அதை நினைவூட்டும் வகையில் ஒரு செயற்கை அருவி! என்னே அழகு!   இருபத்தைந்து மெகா செயற்கை மரங்களும், பயோ டோம்களும் பிரமிக்க வைக்காவிட்டால்தான் ஆச்சர்யம். இந்த அலங்காரங்களை இரவில் பார்க்க வேண்டும். ஒரு குட்டித் தீவில், இத்தனை ஜாலங்கள் சாத்தியமா?

யூனிவர்ஸல் ஸ்டுடியோ என்று ஒரு ஹைடெக் தீம்பார்க். 4டி தியேட்டர்கள், மாளாத ரோலர் கோஸ்டர்கள், ஒலி-ஒளி ஏற்பாடுகள் என ஒரு சுற்றுலாத் தலத்திற்கு என்னென்ன செய்யமுடியுமோ, அத்தனையும் இங்கே! ஜுராஸிக் பார்க் ரைட்,  எகிப்து மம்மி ரைடுகள் கிரங்கடிக்கும். அருகே ஒரு மிகப் பெரிய அக்கோரியம்.

சிங்கப்பூர் சரவணா ஸ்டோரான ‘முஸ்தஃபா’ கடைக்கு, ஏதோ நேர்த்திக் கடன்போல அழைத்துச் செல்கிறார்கள். ‘வேணாம்யா...  நான் வர்ல...எல்லா ஊர்லேயும் எல்லாமும் கிடைக்கிறது.. ‘ என்றாலும்  விடமாட்டேன் என்கிறார்கள். லிட்டில் இந்தியாவை மட்டும் தண்ணீர் தெளித்து விட்டார்கள் போல. இங்கே மட்டும் தெருவில் குப்பைகள்.
மாலையில், கடற்கரையில், கடல் நீரைப் பீய்ச்சியடித்து-அதன் நீர்த்துவாலைகளில், லேசர் ஒளிக்கற்றைகளால், வர்ணஜாலம் காட்டுகிறார்கள். ஸ்டன்னிங் ஷோ.

சிங்கை முடித்து, சாலை வழியே மலேஷியா!

பத்துமலை முருகன் கோயிலையும், அதன் சுற்றுப்புரத்தையும்  எதற்காக இவ்வளவு குப்பையாக வைத்திருக்கிறார்களொ தெரியவில்லை.  கிட்டத்தட்ட  நம் ஊர் கோயில் போல மாற்றிவைத்திருக்கிறார்கள். (அருகில் இருக்கும் டார்க் கேவ்ஸ் அவசியம் செல்லுங்கள்.) 

பேக்கேஜ் டூரில் சென்றால், இரட்டைக் கோபுரத்தைப் பார், முருகனைப் பார், ஜென்டிங் மலை-கேசினோக்களைப் பார், பார்லமெண்டைப் பார்..  என்று சம்பிரதாயமான இடங்களுக்கு. என கடிவாளம் கட்டி அழைத்துச் செல்வர். சுல்தாணின் அரண்மணையை தூர இருந்து பார்க்கலாம். உண்மையில் ஜெம் ஐலண்ட், பினாங்க், செலங்கோர், Teluk Senangin, Perak  என மறைவாக இருக்கும் சொர்க்கங்கள் ஏராளம். மலேஷியாவை அனுபவிக்க, சென்னையிலிருந்து இயங்கும் பேக்கேஜ் டூர் உகந்தது அல்ல.  நாமே டூரிஸ்ட் விசா வாங்கிக்கொண்டு, கோலாலம்பூர் சென்று, உள்ளுர் டூர் ஆபரேட்டர்களிடம் சொல்லி நமக்குத் தேவையான இடங்களுக்குச் செல்வது தான் உசிதம்.

பின், கோலாலம்பூரிலிருந்து, பாங்காங்கிற்கு ஏர் ஏஷியா விமானம்.  நம் ஊர் பெரியார் பஸ் போல நெருக்கடியான சீட்டிங்குகள். பைலட் என்னவோ, தொண்டை கட்டிக் கொண்ட சவுண்ட் சிஸ்ட்த்தில், கிணற்றுக்குள்ளிருந்து பேசினார். நல்ல வேளையாக ‘டாய்லட் போக’ காசு கேட்கவில்லை.

விமானத்தில் சதா,  ‘லபா..லபா’ வெனப் பெருங்குரலில் கத்திக்கொண்டே இருக்கும் சீனர்கள். லேண்ட் ஆன மறுகணம், பாய்ந்து சென்று கேபின் லக்கேஜ்களை உருவுகிறார்கள். விட்டால் ஜன்னல்களைத் திறந்துகொண்டு கீழே குதித்துவிடுவார்கள் போல! இடித்துப் பிடித்திக்கொண்டு இறங்கி ஓடுகிறார்கள். 

சீனாவில் பெண்கள் மொபலைப் பிரசவித்துவிட்டு, பின் இலவச இணைப்பாக, ஒரு குழந்தையைப் பிரசவிப்பார்கள் போல!  ஸ்மார்ட் ஃபோண் அவர்களுக்கு மற்றுமொரு உடல் உருப்பு.  இமிக்ரேஷன் கவுண்டரில் நிற்கும்போது கூட சோஷல் மீடியாவை நோண்டல்! இமிக்ரேஷன் அதிகாரி, ஸ்கேலால் அதட்டி ‘காமிராவை’ பார்க்கும்படி முறைக்கிறார்கள். இந்திய எல்லைக் கோட்டில், சீன ராணுவத்தினருக்கு ஆளுக்கொரு மொபைலை இந்தியாவே கொடுத்துவிட்டால், அவர்கள் பாட்டிற்கு ஃபோனில் தலையை விட்டுக் கொண்டிருப்பார்கள். டோக்லாம் பிரச்சினை தீர்ந்தது.

தாய்லாந்தில்  இந்தியர்களுக்கு ‘விசா ஆன் அரைவல்’. ஆனால், இமிக்ரேஷன் ஃபாரம்களை எங்கே பதுக்கியிருக்கிறார்கள், அதை ஃபில் செய்து எங்கே கொடுக்க வேண்டும் என்பது தெரிய, நீங்கள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். விபரமாக ஒரு வழிகாட்டும் போர்டு வைக்க்க் கூடாதா?  இவ்விஷயத்தில், துபையின் ஏற்பாடுகள் அற்புதம்.

பாங்காக்கில் பார்க்கும் இடமெல்லாம் தங்க புத்தர்கள். அற்புதமான கட்டிடங்கள், புத்த விகாரங்கள், அரண்மணைகள்.  இரவுகளில் படகில் ஆடல்-பாடல் இத்தியாதிகளோடு அனுபவிக்கலாம்.  என்ன? வயது காணாது! ஒரு இருபது வருடமாவது முன்பாக வந்திருக்கலாம்.  எழுபது வயதில் ஆடவா இயலும்? வைல்ட் லைஃப்  சஃபாலி..சாரி சஃபாரி, டால்பின் ஷோ, டைகர் பார்க், பறவைகள் பார்க் எல்லாம் உன்னதம்.

பட்டாயாவில்  நுழைந்தபோது ஏராளமான மழை. கடற்கரைச் சாலையில் சாக்கடை பெருக்கெடுத்தோடியது. இதை ஃபோட்டோ எடுத்து முகனூலில் போடட்டுமா  என்றேன். கைடு முறைத்தார்.

அவர்களது ஆங்கில உச்சரிப்பு, பாடாய்ப் படுத்துகிறது.. சஃபாலி என்றல் சஃபாரி. மெத்தோ என்றால் மெட்ரோ, தாக் என்றால் டாக். லைத் என்றால் அது ரைட்.  மேலும் ஒரு மாதிரியாக வெட்டி வெட்டி பேசுகிறார்கள். நல்லவேளையாக, அவர்களது ஆங்கில உச்சரிப்பு எப்படி இருக்கும் என கூகுளித்துவிட்டுப் புறப்பட்டதால் ஓரளவிற்கு தப்பித்தேன்.  என்றாலும் நான் தங்கியிருந்த ‘கோல்டன் பீச்’ ஹொட்டலுக்கு வழிகேட்டு மாய்ந்துவிட்டேன்.  

பட்டாயவில் டூ வீலர் டாக்ஸி இருக்கிறது. கூசாமல் 100 பாட் என்பார்கள். நாமும் அதிரடியாக 5 பாட் என்று கேட்கணும். பத்து பாட்டுக்கு வருவார்கள்.

பட்டாயா தூங்கா நகரம். அங்கே இரவுதான் பகல். மதுவும்-மாதுக்களும் ஏராளம். நகரெங்கும் ஏராளமான இரவு விடுதிகள். மதுபான விடுதிகள். ஆண்கள்தான் பட்டாயாவிற்கு என எண்ண வேண்டாம். ஏராளமான   பெண்களும்  வருகிறார்கள் .  அவர்களுக்கென தனியாக மஸாஜ் சர்வீஸ்கள் உண்டு.

எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், கேன் கேனாக, தொடர்ந்து பீரைக் குடித்துக்கொண்டே இருந்துவிட்டு, இலை போன்ற வயிறும் - மெல்லிய கைகால்களும் இந்தப் பெண்களுக்கு எவ்விதம் சாத்தியமாயிற்று என்பது தான். பெருந்தொந்தியோடு இருந்தால் அவர்கள் அனேகமாக, இந்தியர்களாகவோ இல்லை அமெரிக்கர்களாகவோதான் இருப்பார்கள்.  

வாக்கிங் ஸ்ட்ரீட், பீச் ரோட், சோய் 6, செகண்ட் ஸ்ட்ரீட் போன்றவை பிரசித்தம். 
இந்த வயதில், இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க தேர்ந்தெடுத்தது எம்பாரஸிங் தான். ‘ஹாய் இண்டியன் ஓல்ட் மேன்,  வாட் டூ யூ வாண்? அடப் போங்கப்பா...

ஆனாலும் என்ன? அருகில் இருக்கும் கோரல் ஐலன்டில், ஸ்பீட் போட்டில் சென்று, எனக்குப் பிடித்த ஸ்கூபா டைவ், பாரா செய்லிங், அண்டர் சீ வாக் ஆகியவற்றைப் அனுபவித்தாயிற்றே!

ஒரு சில புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்குங்கள்!  Click here






Monday, March 5, 2018

விஜய் டி.வி

சிலநாட்கள் முன், நண்பரொருவர் இல்லத்திற்கு சென்ற வேளையில், விஜய் டி.வி யில், நிகழ்ச்சியொன்றைக்  காண நேர்ந்தது.

கைத்தறிப்  பட்டுச்சேலை  நெசவு செய்யும் குடும்பத்தைச் சார்ந்த பெண் ஒருவர், நசிந்துவரும்  கைத்தறித் தொழில் பற்றி உண்மையிலேயே நெகிழ்ச்சியான நாட்டுப்புறப் பாடலொன்றைப் பாடினார்.

விஜய் டி.வி தனக்கே உரிய பகட்டுடனும், டிராமாவுடனும் அதை ஒளிபரப்பியது! வழக்கம் போல விஐபிக்கள்  வசனங்களை உதிர்த்தனர். கண்ணீர் சிந்தினர். சோக இசை ஓடியது!

இந் நிகழ்ச்சியின் நாடகங்கள் ஒரு புறமிருக்க, கைத்தறியினால் மட்டுமே,  நாட்டின் துணித்  தேவைகள், விரும்பும் டிசைன்கள்,  தேர்வுகள் அனைத்தையும் பூர்த்தி செய்வது சாத்தியமா  என்ற புராதன கேள்வி எழும்பியது!

பல தொழில்கள், தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக வழக்கொழிந்து போயிற்று. தந்திச்  சேவைஅளித்தோர், சுவர்களில் விளம்பரம் செய்வோர்/ஓவியம் வரைவோர், அச்சு கோர்ப்போர், கைத்தறி செய்வோர்...... என எண்ணற்றோர்  தங்களது தொழிலைவிட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு  தங்களை மாற்றிக் கொண்டு விட்டனர்.

விடாமல், தாங்கள் அறிந்திருக்கும் வழக்கொழிந்த  தொழில்களையே  புரிவோர் மீது அனுதாபம் கொள்வதா  அல்லது கால ஓட்டத்திற்குத் தகுந்தாற்போல, தங்களைத் தகவமைத்துக் கொள்ளாத இவர்கள் குறித்து வருந்துவதா எனப் புரியவில்லை!

காலத்தைப் பின்னோக்கித்  செலுத்துவது சாத்தியமானதல்ல; நவீனமயம்  எவராலும் புறக்கணிக்கணிக்கக் கூடியதே அல்ல! வளர்ந்து வரும் மக்கள் தொகையின் பகாசுர  தேவைகளை இயந்திரங்களின் துணையின்றி  பூர்த்தி செய்வது சாத்தியமல்ல!

 எனினும் புராதனத்  தொழில் புரிவோரின்  உற்பத்தியை Antique என்ற வகையில், விலை அதிகமாயினும், இயன்றவர்கள்  வாங்குவது அவர்களது ஜீவனத்திற்கு உதவக் கூடும்!! கோபிநாத் மட்டுமே,  சரியாக core Point ஐப் பிடித்தார்.

தொ.கா யினைப்  பார்ப்பதை நிறுத்தியது தவறோ  என்ன எண்ணம் அவ்வப்போது தோன்றும்! விஜயின்  ஸ்டேஜ்  ஷோவைப்  பார்த்தபின்  தொ.கா.பெ யை மூடியது  தவறெனத் தோன்றவில்லை!

Sunday, March 4, 2018

ஸ்ரீதேவி

ஶீதேவிக்கு இரங்கற்பா பாடும் சமுதாயம், எல்லையில் உயிரிழக்கும் வீரர்களைப் பற்றிக் கவலைப் படிவதில்லை என்ற 'கவலையை' சமூக வலைத் தளங்களில் காண்கிறேன்.
எல்லா இறப்பும், ஶீதேவி உட்பட, இரங்கலுக் குரியதே! ஶீதேவியின் மறைவு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இயல்பான ஒன்று!
இதையும் சோல்ஜர்ஸையும் ஒப்பிடுவது சரியா எனத் தோன்றவில்லை!
எனது கவலை வேறு!
ஒரு ஜவானின் உயிர் எளிதில் இழக்கக் கூடிய ஒன்றல்ல! ஒரு கேப்டனை உருவாக்க ஏகமாகச் செலவிடுகிறோம்! ஏராளமான உழைப்பு, பயிற்சி, அனுபவம், தியாகம் எல்லாம் பின்னால் இருக்கிறது!
எல்லையில் ஒரு வீரனை இழக்கிறோம் என்றால், அதற்கு விலையாக எதிரி ஏகப்பட்ட உயிர்களைக் கொடுத்திருக்க வேண்டும்! ஒரு அமெரிக்க, ருஷ்ய வீரரின் உயிரை எளிதாக எடுத்துவிட முடியாது; எந்த வகையான கடினச் சூழலிலும்!
ஆனால் இங்கே நிலைமை வேறு வகையாக இருக்கிறது! அடிக்கடி, நம் வீரர்கள் எல்லையில் உயிரை விடுகிறார்கள். அந்தத் தியாகத்திற்கு மரியாதை செலுத்து கிறோம்; இரங்கல் தெரிவிக்கிறோம் என்பது வேறு விஷயம்.
அதெப்படி இந்திய வீரர்களை just like that கொல்ல முடிகிறது?
நமது மேஜர்கள் இதுகுறித்து சிந்திப்பார்கள், strategy யை மாற்றியமைப்பார்கள் என நம்புவோம்....

Jio


BSNL வருவதற்கு முன்னால், தனியார் அலைபேசி   நிறுவனங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே,  நிமிடத்திற்கு  பத்து ரூபாய் வசூலித்த காலமெல்லாம் உண்டு. BSNL அலை பேசிச் சேவையை அளிக்க, அனுமதி மறுத்த அரசாங்கம், பல ஆண்டுகளுக்குப்பின்,  DoT அதிகாரிகள் முன்முயற்சியெடுத்ததால்,   அனுமதித்தது.
எடுத்த எடுப்பில், BSNL  நிமிடத்திற்கு  ஒரு ரூபாய்தான் கட்டணம் என ஆரம்பித்ததால், வேறு வழியின்றி தனியார் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களைக் குறைக்க ஆரம்பித்தன. அந்த கட்டணம்தான் உண்மையானது. அதனால்தான் அனைத்து நிறுவணங்களும் தாக்குப்பிடிக்க முடிந்த்து. தனியாரின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.
இன்று தொலைத் தொடர்புத் துறையில், மீண்டும்  பழைய தணியார்களின் ஏகபோக கொள்ளைக்கு, நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அலைபேசிச் சேவையில், சமீப ஆண்டுகளில், இன்டர்னெட் சேவை பிரதானமாகிப்போய், வாய்ஸ் கால்ஸ்களை (Voice calls) இலவசமாகவே கொடுக்கும் காலம் வந்துவிட்டது.  VoIP (Voice over internet protocol) அறிமுகப்படுத்தப்பட்டபின் மலிவான குரல்சேவை சாத்தியமாயிற்று.
இந்த அதீத போட்டியின் காரணமாக, ஜியோவின் இலவசங்களைச் சமாளிக்க இயலாமல், நட்டமாகிப் போய், ஏர்செல் திவாலாகி விட்டது.
ஏர்செல்லின் உள்அரசியல் ஒருபுறம் இருக்க, இது இந்திய தொலைத் தொடர்பு வரலாற்றில், ஏர்செல்லின் மறைவு, தொலைதொடர்பில், ஜியோவின் ஏகபோக ஆட்சியின் துவக்கமாகவே கருதுகிறேன்.
முன்னாள் BSNL ஊழியன் என்பதற்காக இதைக் கூறவில்லை. தொலை தொடர்பில் ஏகபோகம் ஆபத்தானது மட்டுமல்ல;  பொதுத் துறை நிறுவனமான BSNL காணாமற் போவது மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல என்பதால் கூறிகிறேன்.
ஒருவருடம் இலவசமாகவே பிராட்பேண்ட் சேவையை ஜியோ அளித்தது; இது வரை நாம் கண்டிராத வேகத்தில். 4ஜி தொழில் நுட்பத்தின் காரணமாக இந்த வேகம் சாத்தியமாயிற்று.
அதிவிரைவு இண்டர்னெட் சேவையை, இலவசமாக அளித்ததால், இதுவரை உலகம் கண்டிராத வளர்ச்சி விகிதத்தை  ஜயோ கண்டது;  கூடவே சக தொலை தொடர்பு கம்பெணிகள் நஷ்டத்தின் காரணமாக  லாப விகிதங்கள் கடுமையாக குறைந்தது.  நட்டத்தைத் தாங்க முடியாத ஏர்செல், திவாலாக உள்ளது. வோடஃபோண் தடுமாறிக் கொண்டுள்ளது. ஏர்டெல்லின் வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. வருமாணம் பாதிப்பு. அதே நிலைமைதான் ஐடியாவிற்கும், BSNL க்கும். இது எந்த வகையிலும் வரவேற்கத்தக்க நிகழ்வல்ல. இன்று ஏர்செல்லுக்கு நிகழ்ந்தது  நாளை ஏர்டெல்லுக்கும் மற்ற நிறுவனகளுக்கும் நிகழலாம்.
எல்லா நிறுவணங்களையும் ஒழித்தபின், ஜியோ ஏகபோகமாகி, பின் அது வைத்ததுதான் கட்டணம் என்றாகிவிடும்.
அந்தக் காலத்தில், அரசாங்க டெண்டர்களில், ஏகபோகம் எதிலும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு,  ஒரு விதிமுறை உண்டு. Unreasonably low tenders will not be accepted என.
ஜியோ விவகாரத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இலவசமாக சேவையளித்து, சக போட்டியாளர்களை ஒழித்துக்கட்டும் முயற்சிக்கு TRAI (தொலைதொடர்பு  ஒழுங்குமுறை ஆனையம்) துணைபோவது போல் தெரிகிறது.  இலவச சேவையளிக்க ஏன் TRAI ஒப்புக் கொள்ள வேண்டும்? ஜியோவின் இலவசங்கள் சக நிறுவணங்களை ஒழித்துக் கட்டும் முயற்சியென் TRAI க்குத் தெரியாதா?  இன்று இலவசங்களுக்கு தலையாட்டும் டிராய், நாளை, கடுமையான கட்டணங்களுக்கு தடைவிதிக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
ஜியோவிற்கு இந்த அளவு இலவச சேவை அளிக்க முடிந்தது எப்படி?  எந்த வங்கி, எந்த அளவு ஜியோவிற்கு கடன் கொடுத்துள்ளது? குறுகிய காலத்தில் இந்த அளவு முதலீட்டை யார் செய்தது? மாதம் பத்தாயிரம் டவர்களுக்கு மேல் நிறுவுவது அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? இதுபற்றி மக்களுக்குத் அறியப்படுத்த வேண்டாமா?
அதே சமயம், இது நாள்வரை BSNL 4ஜி சேவை அளிப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லையே,, ஏன்?  அந்த நிறுவனத்திற்கு, 4ஜி சேவையை அளிக்க தேவையான மூலதனத்தை அரசாங்கம் ஏன் தர மறுக்கிறது?
தொலை தொடர்புத் துறையில் நடப்பன எதுவும் சரியெனப் படவில்லை!
எந்தத்துறையிலும் ஏகபோகம் என்பது, நாட்டிற்கும் மக்களுக்கும் கேடு!