ஸ்ரீநகரின் ‘தால்’ ஏரி கருத்துக் கிடந்தது. தங்கியிருந்த
‘போட் ஹவுஸின்’ வராந்தாவில் நாற்காலியொன்றை இழுத்துப் போட்டு, கால்களை நீட்டி அமர்ந்திருந்தேன்.
எதிரே இருந்த குன்றொன்றில் அமைந்த 'சங்கராச்சார்யா கோவில்' கோபுரத்தின் விளக்கு
நீரில் பட்டு பிரதிபலித்துக் கொண்டிருந்தது. நகரெங்கும் நிரம்பியிருக்கும்
மசூதிகளிலிருந்து தொழுகையழைப்பு, காற்றில் மிதந்து
கொண்டிருந்தது.
இரவு ஏழரை மணியானாலும் முழுமையாக இருட்ட ஆரம்பிக்கவில்லை. அடிவானில்
பரவிக்கிடக்கும் வெளிச்சத்தைப் பார்த்தால், இருள் கவ்வ இன்னமும் அரைமணி நேரம்
ஆகும் போலிருக்கிறது.
எனக்கு வித்தியாசமாக இருந்தது. நம் ஊரில் எத்தனைமணிக்கு இருட்டும்? ஊரில் இருக்கும்போது
இதைப்பற்றி நினைத்தாவது பார்த்திருக்கிறோமா.. சிரித்துக் கொண்டேன். புதிய இடத்திற்கு வரும்பொழுது, நம் ஊரில்,
கவணிக்க மறந்த, சர்வ சாதாரணமான விஷயெமல்லாம், இங்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இப்ப, நம்ம ஊரில் எப்படியிருக்கும்?
இருட்டியிருக்குமா? ஊரில் இருந்திருந்தால் என்ன செய்து கொண்டிருப்போம்? எதற்காக
ஆறு மணிக்கு இருட்டிவிடவேண்டும் என எதிர்பார்க் கிறோம்? நவீன காலத்தின் தேவை கருதி, ஒவ்வொரு நாடும்
ஒன்றோ, அதற்குமேலோ தங்கள் நாட்டிற்கு ஸ்டேன்டேர்ட்
டைம் வைத்திருக்கிறார்கள். அலஹாபாத்தில் ஆறாகிவிட்டால், நாகாலாந்திலும் மணிஆறாகிவிடவேண்டுமா என்ன?
படகின் அடியில், மௌனமாக மெல்ல மெல்ல நீர் நகர்ந்து கொண்டிருந்தது. இரவில், பாட்டரி
விளக்குகளைப் பொருத்திக் கொண்ட குட்டிப் படகுகள், இருண்டவானின் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கே மினுக்கிக்
கொண்டிருந்தன. பெயரறியா சொடிகளும் பாசிகளும், நீரினோடே ‘பாகிஸ்தான்’ நோக்கி
பயணப் பட்டுக் கொண்டிருந்தன. மனித உலகிற்ககுத்தான்
எல்லைகளும் விசாக்களும் தேவை! நீரும் பறவைகளும், ஏன், எந்த ஜீவராசிகளும் மனிதன் வரையறுத்த
எல்லைகளை சட்டை செய்வதில்லை. அவை, அதனதன்
நியதிக்குட்பட்டு பயணப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
மௌனம்..எங்கும் மௌனம். செவிடாக்கும் இந்த மௌனம் அனுபவிக்க வேண்டியதா
இல்லை அச்சப்பட வேண்டியதா? காஷ்மீரில் நிலவும் மௌனமும் அமைதியும், எந்தச் சமயத்திலும்
வெடிக்கக் காத்திருக்கும் அமைதியல்லவா?
இருளில், ‘களக்-களக்’ கென துடுப்புபோடும்
சப்தம் அருகில் கேட்டது. எட்டிப் பார்த்தேன். குட்டிப் படகொன்று வெண்ணையில் கத்தி
இறங்குவது போல வழுக்கிக்கொண்டு போட் ஹவுசின் அருகே வந்தது. ஒரு மனிதர் அதனின்றும் வெளிப்பட்டு மேலேறி
வந்தார். கையில் ஒரு மூட்டையுடன்.
காஷ்மீர் சால்வைகள்.. குங்குமப்பூ.. ஷிலாஜித்து
விற்பவர். எனக்குப் பெரும் சங்கடம். ‘வேண்டாம்..’
என்று சொல்லத் தயங்கும் குணவான்.
வந்த மனிதரோ, படபடவென தனது சரக்குகளை
விரித்தார். குங்குமப்பூ டப்பாக்கள்,
ஷிலாஜித் குப்பிகள், சால்வைகள், சுடிதார்கள்.
‘நன்பா.. இவை எதுவும் எனக்கு உபயோகப்படாது.
வீணாகச் சிரமப்படாதீர்கள். தேவையானால் நானே கேட்டு..... ‘ ம்ம்ம்.. வந்த மனிதர் எதையும் காதில் போட்டுக் கொள்ளும்
உத்தேசத்தோடு வந்தவரல்ல. ஷிலாஜித்தின் மகிமையை எடுத்துவிட்டார்.
“பிரமாதமான சக்திதரும் ஐட்டம் சார், உள்
நாட்டில் இது கிடைக்கவே கிடைக்காது. கிடைத்தாலும் ஏக விலை விற்கும், ஒரிஜினலா
இருக்காது”.
“இல்லை..இல்லை எனக்கு ஷிலாஜித்திற்கான தேவையே
இல்லை” எனக் கதற, அப்போதுதான் கொஞ்சம் என்னை உற்றுப் பார்த்தார். வயது
தெரிந்துவிட்டிருக்கும் போல. உடனே
ஷிலாஜித்தின் மகிமையில் முட்டிவலி-முழங்கால் வலி ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டார்.
“எனக்கு முட்டிவலி உபாதைகள் ஏதும் இல்லை..”
மனிதர் ஏமாற்றமடைந்துவிட்டார். உடனே
காஷ்மீரத்து சால்வைகள் பக்கம் தாவினார்.
“ஐயா.. எங்க ஊரில் எப்போதும் கோடைகாலம்தான்.
மார்கழி குளிரெல்லாம் காணாமற்போய் மாமாங்கம் ஆகிறது. உங்க சால்வையைப் போர்த்திக்
கொண்டால், ஜங்கம சொத்துக்கள் எல்லாம் வெந்துபோகுமய்யா...’
மனிதர் கொஞ்சமும் சளைக்கவில்லை. சர்வ ஜாக்கிரதையாக, வேண்டாம் எனச் சொல்ல முடியாதபடி,
குங்குமப்பூவின் மகிமையைச் சொல்ல
ஆரம்பித்தார். அவருக்கென்ன..
வார்த்தைகள்தானே மூலதனம்? தேர்ந்த மேடைப்பேச்சாளரின் லாகவத்தோடும், சாதுர்யத்தோடும்,
மணிப்பிரவாகமாக பொழிந்து தள்ளினார்.
ஏமாந்து போவதில், தனித்திறமையாளன் நான். சற்றே
வற்புறுத்திப் பேசினால் போதும். இளகிவிடுவேன்.
கஷ்டங்களை அடுத்தவர் சொல்லும்போது, அவர் புரிந்து கொள்கிறாரோ இல்லையோ, அவர்
சார்பாக நானே புரிந்துகொண்டு, பரிதாபப்படும் விந்தை ஜீவன். ஏற்கனவே, காஷ்மீர்
இளைஞர்களின் வேலையின்மை குறித்து அனுதாபப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த மனிதரின்
எப்படியாவது வியாபாரம் முடிக்க வேண்டும் என்ற நோக்கம் புரியவே, ‘குங்குமப்பூ
கிராம் எவ்வளவு..?’ என்றேன். என்ன மாயமோ,
இங்குள்ளவர்கள் சாஃப்ரானுக்கு (Saffron) எல்லா மொழிகளிலும்
அதற்குண்டான வார்த்தையைத் தெரிந்து வைத்துள்ளனர். அழகாக தமிழில் ‘குங்குமப் பூ’
சார் என்கின்றனர்.
மீன் தூண்டிலில் சிக்கியது என உணர்ந்து
கொண்டார். ‘சார் மற்றவங்க போல இல்லை சார்.. இங்கே நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள்
உள்ளனர். தேங்காய்ப்பூவில் சாயம் ஏற்றி குங்குமம்பூ என விற்றுவிடுவர். நாக்கை நீட்டுங்க.. அதில்
இரண்டு பூ போடுகிறேன். எப்படி மஞ்சளாகிறது எனப் பாருங்க..” என் நாக்கில் அந்தத் துருவலை தீற்றிவிடும் உத்தேசத்தோடு
பாய்ந்தார்.
“வேண்டாம்..வேண்டாம்.. நான் நம்புகிறேன். உங்களோடது, நிஜமான கு.பூ தான்.. ”
.
‘இல்லைசார். நீங்க நாக்கில்
வைத்துக்குங்க.. நாக்கை நீட்டுங்க.. நான்
மொபைலில் போட்டோ எடுத்துக் காண்பிக்கிறேன்.”
ஐயகோ.. இதென்ன சோதனை.. காளி போல போஸ் கொடுக்கும்
கற்பனையே, பீதியடைய வைத்தது.
“க்ராம் எவ்வளவு என்று சொல்லுங்கள். அது போதும்”. இந்த
ஆளை எப்படியாவது சீக்கிரம் அனுப்பியாகவேண்டும் என்ற பதைப்பு ஏற்பட்டுவிட்டது.
“முன்னூறு ரூபாய்.. உங்களுக்காக 290 ரூபாய்.”
நான் தான் முதலிலேயே சொன்னேனே.. ஏமாறுவதில்
நான் தேர்ந்த திறமைசாலியென...
“சரி.. 250 ரூபாய் போட்டுக்கோ.. இரண்டு கிராம்
கொடு..” இந்த பேரத்தை அவராலேயே நம்ப முடியவில்லை போல. நாலுகிராமா வாங்கிக்கோங்க சார். ஒருகிராம்
ஃப்ரீயா தரேன்.
“வேண்டாம்..வேண்டாம். ரெண்டு கிராம் போதும்..”
‘உங்கள மாதிரி நல்ல மனுஷங்களுக்கு ஒரு கிராம்
ஃப்ரீயா கொடுப்பதில் சந்தோஷம் சார். வாங்கிக்கோங்க...’
‘எவர் வேண்டுமானாலும் மிளகாய் அரைக்கலாம்’ என
வரம் வாங்கிக்கொண்டு வந்துள்ளேன் போல.
ஆயிரம் ரூபாய் காலி.
மேலே குறிப்பிட்ட “குங்குமப் பூ"டயலாக்கை “ அப்படியே ஒருதடவை ரிபீட் செய்யுங்க... அதே வசனங்களைச் சொல்லி, கிராம் முன்னூறு ரூபாய் என ஒரு ‘ஜமீன்தார்” கடை வியாபாரி ஒருவர், இரண்டு கிராம் பூவை என்னிடம் தள்ளிவிட்டார். ஜமீன்தார் கடை கு.பூ தான் ஒரிஜினல் என டிரைவர் சான்றுரைக்க, இந்த வியாபாரம் முடிந்தது.
எல்லாம் முடிந்து, மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு ‘இண்டிகோவிற்கு’, படகில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் சமயம், ஒருஆள் வந்தார். பரிதாபமான தோற்றம். பரம ஏழை என்பது முகத்தில் எழுதிவைத்திருந்தது. ‘சார்.. எல்லாரும் ஏமாத்துக்காரங்க... என்னிடம் கிராம் நூறு ரூபாய்தான். நிஜத்தச் சொல்றேன்.இதை வித்தா, பத்து ரூபா கமிஷன் கிடைக்கும். அவ்வளவு தான் எனக்கு வருமானம் என்றார். இம்முறை அவருக்கு உதவனும் என்றே இரண்டுகிராம் வாங்கினேன். என்னவோ இவரிடம் ஏமாந்தது நிறைவாகவே இருந்தது.
கேட்டவர்களுக்கு கொடுத்ததுபோக, மீந்த ஆறு கிராம் கு.பூக்களை, குப்பியோடு மளிகைச் சாமான்களுக்கிடையே திணித்து வைத்திருந்தேன். தினம் பால் அருந்தும்போது, கொஞ்சம் கு.பூ போட்டு குடிக்க வேண்டும் எனபது எனது திட்டம்.
இந்த திட்டம், தீர்மானமாக, பால் குடித்தபின் நினைவுக்கு வரும்.
இன்று மதியம் உறங்கி எழுந்தபின், “ப்ளாக்கில்” எழுதி நாளாகிவிட்டதே.. அவுட்லைன் போட்டு வைத்திருக்கும் கதைகளில் ஒன்றை எழுதலாமா யோசித்துக் கொண்டிருக்கும் போது, வீட்டில் பாத்திரம் கழுவும் பெண்மணி, ‘இன்னாது... என்னவோ டப்பா டப்பாவ செவப்பா கருப்பா துருவி வச்சுருக்கே.. பூசாணம் புடிச்சுக்கும்.. அல்லாத்தையும் குப்பத்தொட்டில கடாசுட்டேன்.. தேடாதே...” என்று அறிவித்துவிட்டு சென்றார்.
-0-