Monday, June 23, 2014

சண்டை

மக்கள் ஏதாவது ஒரு காரணத்தை உத்தேசித்து, அடுத்தவர்களுடன் சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர்.  நிரம்பவும் ‘நல்ல ஆட்கள் போல காட்டிக் கொள்ளும் மனிதர்கள் கூட தனக்கென வரும் பொழுது, ஈகோ பிராண்ட ஆரம்பித்து, ரௌத்ரதாரிகளாகி விடுகின்ன்றனர்.

தனி நபர்களுக்குள் சண்டை, குழுக்களுகிடையே சண்டை, குழுக்ளுக் குள்ளேயும் சண்டை, ஊருக்குள்ளே, ஊர்களுக்கிடையே, உறவுகளுக் கிடையே என அலுக்காமல் சலிக்காமல் ஆர்வத்தோடு ஓயாது சண்டை போட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த சண்டை இலக்கணத்தை, மாவட்டம், மாநிலம், நாடு என எங்கு விரிவுபடுத்திப் பார்த்தாலும் பொருந்தி வரும்.

விலங்குகளுக்குள்ளும் சண்டைவரும். அவையனைத்தும் உணவு, பாலுறவு, எல்லை மூன்று விதங்களுக்குள் அடங்கிவிடும். ஆனால், மனித இனத்திற்கு மட்டும் சண்டைக்கான காரணங்களுக்கு அளவே இல்லை. சும்மா, டைம்பாஸிற்காகக் கூட சண்டை போட்டுக் கொள்வார்கள் போல.

நாம் எதற்காக சண்டை போட்டுக் கொள்ள வேண்டும், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை போன்ற நற்குணங்களை கைக்கொண்டால், அமைதிதானே மிஞ்சும் என்ற ‘தத்துவ விசாரணைக்குள் நுழைய வேண்டாம்.  மிகப்பெரிய மகான்களும், அவதார புருஷர்களும் முயன்று தோற்றுவிட்ட ஒரு விஷயத்தை ஏன் ஆராய வேண்டும்?

குறைந்த பட்சமாக ‘உதைத்துக் கொள்வதற்கு என சில வழிமுறைகளை (அக்காலத்தில், போரில், இரவுக்கு மேல் சண்டையில்லை, பெண்டிரையும்-குழந்தைகளையும் விட்டுவிடுதல் போல) வகுத்துக் கொண்டு, அதற்குள்ளாக சண்டையிட்டுக் கொண்டால் பரவாயில்லை.

சண்டையிட்டுக் கொள்வதில் பல தினுசுகள் இருக்கின்றன.

-காபி டம்ளரை ‘டொம் என வைத்தாலோ அல்லது ‘சாப்பிட வரலாம் என பொத்தாம் பொதுவாக அழைப்பு வந்தாலோ, மனைவி, கணவனிடம் சண்டைக்குத் தயார் என அர்த்தம்.

-யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிட மறுத்து (வரும் வழியில் ஒரு கட்டு கட்டிவிட்டு வருவது  வேறு விஷயம்) ஆபீஸ் விட்டு வந்ததும்  ரூமிற்குள் போய் புகுந்து கொண்டால் கணவன், மனைவியிடம் சண்டை என அர்த்தம்.

-“வந்தவர்களை ஏன் குறை சொல்லனும், நம்ம சரக்கு சரியில்லை என வசனம் வந்தால், மாமியார் மருமகள் மீது சண்டைக்கு தயார்.

-சுவற்றைப் பார்த்து உட்கார்ந்து கொண்டு, எவரிடமும் பேசவில்லை என்றால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது சண்டை.

-கண்டும் காணாமல் சென்றால் நண்பர்களுக்கிடையே சண்டை.

-ஜாடைமாடையாக பேசினால் உறவுகளுக்கிடையே சண்டை.

-சர்வ தேச விவகாரங்களில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ஒரு அரசாங்கம் சொன்னால்,  சண்டையில் யார் பக்கம் ‘சைடு எடுப்பது குறித்து இன்னமும்  முடிவெடுக்க வில்லை என அர்த்தம்.

-உலகில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்- மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வந்தால், ‘பெரியண்ணண் குண்டு போடத் தயார் என அர்த்தம்.

-என் மீது வீண்பழி சுமத்தாதீர்கள். தொண்டர்களும்-மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு அரசியல்வாதி சொன்னால், கூலிப்படை ஏவி விடப்படுகிறது என்று பொருள்.

தற்போதெல்லாம் போர்களில், பல யுக்திகள் வந்துவிட்டாலும், ‘சில பாரம்பர்ய போர் முறைகளை இன்னமும் வழக்கொழிந்தபாடில்லை.

அந்தக் காலத்தில் பெண்களுக்குள் சண்டை வந்தால், அடுத்தவள் முடிக்கு வந்தது ஆபத்து! சிண்டைப் பிடித்து இழுத்துக் கொள்வர். பின்னலைப் பற்றிக்கொண்டு விட்டால் குரங்குப் பிடிதான். ஒரு பத்து பேர் வந்து பிடுங்கி விட்டால்தான் ஆயிற்று.

ஆண்களுக்கு உபயம் ‘கழிகளும், முஷ்டிகளும் .

கட்சிகளில் சண்டை வந்தால், அவர்களுக்கு என சில பிரத்யேகமான் அஸ்திரங்களை வைத்திருக்கின்றனர். அஸ்திரங்களைக் கொண்டே எய்தவர் யார் என கண்டுவிடலாம்.

சில கட்சியினருக்கு, உட்கட்சி சண்டை வந்தால், நாற்காலிகளுக்கு வநத்து ஆபத்து!   நாற்காலியின் கால்களைப் பிடித்து சுழற்றி எதிராளி மீது வீசியெறிந்தால், ரெண்டு பல்லாவது போகனுமல்லவா?

வேறு சில ‘மைக்மோகன்களுக்குஒலி பெருக்கி மீது தீராக் காதல். அதன் கழுத்தைத் திருகி, பிடிங்கி எதிராளி மண்டை மேல் ஓங்கி போடுவர்.

வேறு சிலர், குண்டாந்தடிகளை எங்கே மறைத்து வைத்து கொண்டுவருவார்களோ தெரியாது. சில சமயம் முதுகுக்கு பின்னாலிருந்து அரிவாள் வெளிவரும்.

இவையெல்லாம் ‘அசைவ போர் முறைகள். சில ‘சைவ யுக்திகள் இருக்கின்றன. சில கட்சியினருக்கு, சண்டைவந்ததும், அடுத்தவன் கட்டியிருக்கும் வேட்டி மேலே அலாதி பிரியம் வந்துவிடும். ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அடுத்தவன் வேட்டியை உருவினால்தான் நிம்மதி. மல்லுக்கு நின்றாவது வேட்டியை பிடுங்கி உருவியாக வேண்டும். திகம்பர சாமியார்கள்.

சில குடிமகன்கள்  இருக்கின்றனர். அவர்களுக்குள் சண்டை வந்தால், என்ன தோன்றுமோ தெரியாது! அடுத்தவன் காதைப் பிடித்து கடித்து துப்பிவிடுவான். ‘ஏண்டா...., காது என்னடா பண்ணிச்சு உண்ணை? அதைப் போய் ஏன் கடிக்கிறாய் என  எவரும் கேட்க முடியாது. இன்னும் சில அதீத சண்டையாளிகள் இருக்கின்றனர். சரக்கு ஏறிவிட்டால், காதை மாத்திரமில்லை; வேறு ஒன்றையும் கவ்விக் கொண்டுவிடுவர்.

சிலருக்கு, இந்த மாதிரியான காலாவதியான டெக்னிக்குகளில் நாட்டம் இல்லை. அவர்களுக்கு தலைவர்கள் மேலே, பாதரட்சைகளை விட்டெறிவது ஃபேஷன்.  குறி தவறாமல் மேலே படுகிறதோ இல்லையோ, ஒரு விளம்பரம் கிடைக்குதில்ல....

அவ்வளவு ஏன்? FB –ல் சில கமெணன்ட்கள் வரும் பாருங்கள். அடாடா... 
படிப்பதற்கு இரு கண்கள் போதாது. இந்த விஷயத்தில் அமெச்சூர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க முடியாது. ஆசிட் தோய்ந்த வார்த்தைகள் சரளமாக விழும். சில சென்சிடிவான சப்ஜட்டுகள் இருக்கின்றன. சாகபட்சினிகளும் பூச்கிகளும் அந்தப் பக்கம் போகாமல், அதைத் தொடாமல் நகர்ந்து கொண்டால், இரவுத் தூக்கம் உத்தரவாதம்.

சண்டைகளுக்காண காரணங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. அமைதிக்கும் சமாதானத்திற்கும்தான் காரணம் தென்படவேயில்லை.

3 comments:

  1. Interesting. I like your writings. Continue

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது . சிலருக்கு சண்டை போட்டால்தான் தூக்கமே வரும் . சண்டைகோழி குணம் மாற்ற கடினம் .நாம் பேசிய விஷயங்களை கொண்டு வந்துவிட்டீர்கள் . பேஷ் .

    அரசு .

    ReplyDelete
    Replies
    1. Thank u Srini & BT. BT, u know Who is Srini? Go to his FB account. U may remember.

      Delete