Saturday, February 1, 2014

கர்ம விணை

                                                      கர்ம விணை



கர்ம விணை என்பதன் பொருள், பெரும் பாலும், பலரால் தெளிவில்லாமலேயே, புரிந்து கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நமது வாழ்வில் எது நடந்தாலும், அது நல்லதோ அல்லது அல்லதோ எல்லாம் கர்ம வினை என்றே சொல்கிறோம் அல்லது அவ்வாறு சொல்லி சமாதானப் படுத்திக் கொள்கிறோம். அதாவது பூர்வ ஜென்மத்தில் நல்லது செய்திருந்தால் இப்பிறவியில் நல்லதும், கெடுதல் செய்திருந்தால் இப்போது தீமைகளை அனுபவிப்பதாகவும் பொருள் கொள்கிறோம்.

இச் சொற்றொடரை  நமக்கு ஏற்றாற்போல, சந்தர்ப்பவசமாக மாற்றிப் பேசுவோம்! எப்படி? நமக்கு நல்லது நடந்தால் அது நம்முடைய புத்திசாலித்தனத்தால் நடந்தது எனவும், கெட்டது நடக்கும் பொழுது ‘நமது விதி’ எனவும் சொல்வோம். ஆனால் பிறருக்கு நல்லது நடக்கும் பொழுது ‘அவனுக்கு அதிருஷ்டம்’ எனவும்; கெடுதல் நடக்கும் பொழுது ‘அவன் புத்திசாலித்தனமாக செயல்படவில்லை’ எனவும் சொல்வோம்.

அது மாத்திரமல்ல, பதவி உயர்வு கிடைக்காமல் போவதற்கோ, உடல் நலம் சரியில்லாமல் போவதோ அல்லது வறுமையில் சிக்கிக் கொள்வதோ எதுவாயினும் அதற்கு கடவுளை நொந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.

நமது கருத்துப்படி கடவுள் என்பவர், ஒன்றிற்கும் மேற்பட்ட தலைகளையும், பற்பல கைகளையும், அவற்றில் ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு, ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு நம்மை ஆசீர்வதிக்கவோ அல்லது தண்டிக்கவோ செய்கிறார் என நாமாகவே நினைத்துக் கொண்டு பல்வேறு கோவில்களுக்கு ‘டெம்போ டிராவலர்களில்’  படையெடுப்பதால் ஒன்றும் நடவாது.

உண்மை என்னவெனில், கடவுள் தனியாக யாரையும் ஆசீவதிப்பதோ அல்லது தண்டிப்பதோ கிடையாது.

அது கிடக்கட்டும். 

உண்மையில் கர்மவினைகள் என்றால் என்ன? நல்ல செயல்கள் – தீய செயல்கள் என வரையறுத்து வைக்கப்பட்டது யாரால்?

பெரும்பாலான ‘நல்வினை’ அல்லது ‘தீவினை’ என்பவற்றை அடையாளம் கண்டுபிடிக்கும் இலக்கணம் நம்மாலேதான் வரையறுக்கப்பட்டது. அதற்கான சட்ட திட்டங்களும் உருவாக்கப் பட்டதும்  நம்மாலேதான்.

எதற்காக? சில சமூக ஒழுங்கு முறைகளுக்காகத்தான். இந்த விதிமுறைகள் நாட்டிற்கு நாடு, மதங்களுக்கு மதம் மாறக்கூடும். எல்லைக்கு இந்தப்புறம் சரியென் கொள்ளப்படுவது, எல்லைக்கு அப்பால் தண்டனைக் குரிய குற்றமாகக் கருதப்படும்.

பிற உயிரினங்கள் உண்ணுவதெல்லாம், பிற மிருககங்களைக் கொன்றோ அல்லது அவற்றிடமிருந்து பிடுங்கியோதான். இது அந்தந்த மிருகங்களின் இயல்புப்படி சரிதான். ஆண் சிங்கங்கள் அடுத்த ஆண்கிங்கத்தை அடித்துவிட்டு, அதன் குட்டிகளையும் கொன்றுவிட்டு பெண்சிங்கத்தை கவர்ந்து கொள்ளுகின்றன. அவற்றின் இயல்பே இதுதான்.
மனித இனம் இம்மாதிரி ‘காட்டு இயல்புப்படி’ வாழ்ந்து விடக்கூடாது (பல்வேறு காரணங்களை உத்தேசித்து) என்பதற்காக பல விதிமுறைகளை உருவாக்கினார்கள். இந்த சட்ட திட்டங்கள் மதங்களினாலும், அரசாங்கங்களினாலும் அமுல்படுத்தப் படுகின்றன. சமூக ஒழுங்கு என்ற அளவில் இவை சரியே. இதோடு விஷயம் முடிந்தது.
கர்மவினைகளுக்கும் இந்த வரைமுறைகளுக்கும் சம்பந்தமில்லை. 

நல்லது கெட்டது என்ற பாகுபாட்டின்படி பார்த்தால்  ‘கசாப்புக் கடைக்காரணுக்கும்’, ‘ போர் புரிபவனுக்கும்’ ஒருபோதும் முக்தி கிடைக்க வாய்ப்பே இல்லை எனக் கொள்ளலாமா? ஏனெனில் கொல்வதுதானே அவர்கள்து தொழில்?

அப்படி அல்ல!

பொதுவாக, அகம் நோக்கி கவணத்தைச் செலுத்தி, ஆன்மாவை உணர யத்தனிக்காமல், புற வாழ்க்கையை வெகுதீவீரத்தோடும், மிகுந்த ஆசையோடும் எதிர்கொள்ளுகிறோம். புலன்களால் உணரப்படுவதை மட்டுமே உண்மை என கருதிக் கொள்கிறோம்.

விளைவு? எவற்றையெல்லாம் மிகத்தீவீரமாக எண்ணுகிறோமோ அவற்றை நிறைவேறிக்கொள்ளத்தான் அடுத்தடுத்த பிறவிகள் வாய்க்கின்றன.

வெறும் செயல்கள் மட்டுமல்ல. எண்ணங்களே பிரதானமானவை. 
பிறவிகள் தொடர்வது, நாம் விடாப்பிடியாக வைத்திருக்கும் எண்ணங்காலும் -ஆசைகாலும்தான். இம்மாதிரியான பற்றுமிக்க எண்ணங்கள் தொடரும் வரை பிறவிகள் ஓயாது.

நாம் மனதளவில் ஒரு பத்துபேரையாவது கொலைசெய்திருக்க மாட்டோம்?  எத்துணை பெண்களை / ஆண்களை மனதிற்குள் என்னவெல்லாம் செய்திருப்போம்?

இவ்வெண்ணத் தொடர்ச்கிகள் எங்கும் போகா!  இவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அடுத்த பிறவி வரும். முடியாவிட்டால் அதற்கும் அடுத்த பிறவி எனத் தொடரும்.

நிறைவேறா ஆசைகளே-எண்ணங்களே, அவற்றின் பலன்களே பிறவிகள். செயல்கள் அல்ல!

இரு முனிவர்கள் வானில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். பருந்து ஒன்று பாய்ந்துவந்து பாம்பினை கொத்திச் சென்றது. இதைப் பார்த்த ஒரு முனிவர், தம் தவவலிமையினைக் கொண்டு பாம்பைக் காப்பாற்றினார். பாம்பை காப்பாற்றியதற்காக பெருமிதமும் கொண்டார். அவருக்கும் அடுத்த பிறவி வாய்த்தது. பாம்பைக் காப்பாற்றியதன் பலனாக ‘செல்வந்தராகப்’ பிறந்தார். கழுகை பட்டினி போட்டதற்காக பிறவியின் இறுதியில் செல்வமனைத்தும் இழந்து வாடினார். நடந்த எவற்றினாலும் பாதிக்கப் படாத, தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு முனிவர் பிறவி நீங்கி, பேராண்மாவோடு ஐக்கியமானார்.

அப்படியானால் உலகில் எது நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா? 

அப்படியில்லை. நமக்கு விதிக்கப்பட்ட கடைமைகளை முழுமையாக நிறைவேற்றித்தான் தீர வேண்டும். வித்தியாசம் எங்கே? அத்தகைய கடமைகளின் ‘பலன்களை’ தன் மீது ஏற்றிக் கொள்ளாத வரை செயல்களினால் பாதகமில்லை.

அர்ஜூனன் ‘குருட்சேத்திரப் போரில்’ ‘நான் யாரையும் கொல்லமாட்டேன். பிற உயிர்களைக் கொன்று நாட்டைப் பெறுவதில் விருப்பமில்லை’ எனச் சொல்லியிருந்தால் ‘கீதைக்கே தேவையில்லை. அர்ஜூனன் அதற்கு முன்னாலும், பின்னாலும் பலபேரை கொன்றவன்தான். கொலை செய்வதில் அவனுக்கு தயக்கமேதும் இருந்ததில்லை. ஆனால், தனது பாட்டனாரை, குருவை, சுற்றங்களைக் கொல்வதில் தயங்கியதால்தான், கண்ணன் ‘கீதையை’ அருளினார்.

கண்ணன் சொல்லும் முறைதான் ‘நீங்கி நின்று செயலாற்றுவது’ என்பது!

இந்த நீங்கி நின்று செயலாற்றும் நிலையில் வினைப் பயன்கள் தொடர்வதில்லை!

ராஜாவாக இருந்துகொண்டும் ரிஷியாக வாழலாம் – ஜனக மன்னர் போல.
பராரியாக இருந்துகொண்டும் முனிவராக இருக்கலாம் -  நாம்தேவரைப் போல

பிறவிகள் தொடர்ச்சியாக, முடிவின்றி அமைவதும் பிறவி அற்றுப் போவதும்தான் வினைகளை பேரவா கொண்டு செய்வதுதான்.

இன்னல்களும், இன்பங்களும் தொடர்வதும் கூட இதன் காரணமாகத்தான்.
நாம் செய்யும் ஒரு நல்ல செயல், நமது தீய செயல்களுக்கான பிராயச்சித்தம் அல்ல. 

நல்லவற்றிற்கான பலன் களையும், அல்லனவற்றிற்கான பலன்களையும்  நாம் தனித்தனியாக அனுபவித்தே தீரவேண்டும்.

கர்ம வினைகள் தீர்ந்தால் மட்டுமே ‘வீடுபேறு’ (முக்தி) சாத்தியப்படும்.
கர்மவினைப்பயன்கள்  யாவும் தண்டனைகளோ அல்லது அவார்டுகளோ அல்ல! மாறாக வினைத் தொடர்ச்சிகள் மட்டுமே!

இந்த வினைப்பயன்களை விளைவிப்பது யார்? கடவுளா? இல்லை!
நமது விடாப்படியான எண்ணங்களும் ஆசைகளும் தான்.

நாம் யார் என்பதை உணர மறந்தது-மறுப்பதும் தான். ஐம்புலன்களும், அவற்றின் மூலம் துய்க்கும் - இன்பங்களும் சாசுவதமானவை என உழன்றுகிடப்பதுதான்.


No comments:

Post a Comment