விஜி (என் மனைவி) இல்லாத இவ்வருட பொங்கல் கடந்து
சென்றது.
1978-ல்
நாங்கள் உற்சகத்துடன் கொண்டாடிய முதல் பொங்கல் முதல், 2013-ல் உடல் நலம் குன்றிய நிலையில் செய்த கடைசி பொங்கல் வரிசையாக
நினைவிற்கு வருகிறது.
35 வருடங்கள் ஊணிலும் உயிரிலும் கலந்து
விட்டதாக கதைத்து – இனி சகலமும் சுகமே என பிதற்றிக் கொண்டிருந்தது நினைவிற்கு
வருகிறது. அவருடன் வாழ்ந்ததெல்லாம் ‘பொய்யாய், பழங்கதையாய், கனவாய்
கரைந்துவிட்டது. நினைத்துப்
பார்க்குங்கால், இவ்வளவுதானா வாழ்க்கை - இவ்வளவே தானா என வியக்கவைக்கிறது. ஆம்..
இவ்வளவேதான். வாழ்வின் அனித்யமும், நிஜமும் - செவிகளில் அறையும் பொழுது,
ஜீரணிப்பது சிரமமாய் இருக்கிறது.
1978-ல் உறவுகளின் எதிர்ப்புக்களிடையே மணம்
செய்து கொண்டது, பெண் மகவை ஈன்றெடுத்தது, அவளை சீராட்டி வளர்த்து, அவளுக்கு
திருமணம் செய்வித்தது, பேரன்களை கொஞ்சி மகிழ்ந்தது – என எல்லாமும் ஒரு மின்னல்
போல நடந்து முடிந்து விட்டன.
மனைவி நிஜமாகவே சென்று விட்டாளா? இனி என்னுடன் ஒருபொழுதும்
பேசவே மாட்டாள்? இனி அப்படி ஜீவன் இல்லவே இல்லையா!
“இல்லை.....நடந்து முடிந்ததெல்லாம் ஒரு கனவு; விஜி
மறையவில்லை, வெளியேதான் சென்றுள்ளாள், இதோ
வந்து விடுவாள்! உன்னுடன் மீண்டும் பேசுவதற்கு, சண்டை போடுவதற்கு வந்துவிடுவாள்”
என எந்த தேவதையும் சொல்லாதா?
‘சை... மூடனே! இந்த பாழும் சுய இரக்கத்தை மூட்டை கட்டி
வை. உலகில் எவரும் நிரந்தரம் இல்லை! நாளை
உனக்கும் – எவருக்கும் இதே முடிவுதான் என உரக்கச் சொல்லிக் கொள்கிறேன். வாழ்வின் உண்மைகள் புரிகிறது! தெரிகிறது!
எனினும் மனது அவ்வப்போது தடுமாறுவதை தவிர்க்க இயலவில்லை.
உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, மனம் விட்டு பெச,
குறைந்த பட்சம் கோபப்பட்டுக் கொள்ள, ஒரு ஜீவன் இல்லாமல் போய்விட்டது.
ஆயிரம் சுற்றங்கள் இருந்தாலும் தம்பதியருக்கு
இடையே நடக்கும் சம்பாஷனைகள் தான் ஜீவன்
உள்ளவை. உண்மையானவை.
சந்தோஷ, துக்க கணங்களை – பாசாங்குகள் ஏதுமின்றி பகிர்ந்து
கொள்ள, குரல் உயர்த்தி பேச, மனதில் தோன்றுபவைகளை தயக்கமின்றி-தாட்சண்யமின்றி சொல்வதற்கு,
மனைவி போல் வேறு எவராவது ஆகுமா?
அவர் இல்லாத நிலையில், பிறாரிடம் எதைச் சொல்ல
வேண்டும்? எதைச் சொல்லக் கூடாது? ஒன்றும் புரியவில்லை. எதைச் சொன்னால் யார்
கோபித்துக் கொள்வார்கள்? எதுவும் புரியவில்லை!
அவ்வளவு கூட வேண்டாம்! சாப்பாடு எது
வேண்டும்-எது வேண்டாம்? தட்டில் இருப்பது போதுமா-போதாதா? ம்..ஹூம் தெரியவில்லை.
விஜி இருக்கும் வரை இதைப்பற்றியெல்லாம் யோசித்தது கூட இல்லை. தட்டில் ஏதோ
போடுவாள். போட்டது போதுமானதாகவே இருக்கும்! சுவையாகவும் இருக்கும். பிடித்ததாகவும்
இருக்கும்.
வேலைகளுக்கிடையே கொஞ்சம் காஃபி குடித்தால்
தேவலை என நினைக்க மட்டுமே செய்வேன். சொன்னதில்லை. அது என்ன மாயமோ தெரியாது. நினைத்த
ஐந்தாவது நிமிடம் கால் டம்ளர் காஃபி வந்துவிடும். உண்மையான அன்பு இருக்கும்
பொழுது, வார்த்தைகளுக்கு தேவையில்லமல் போகிறது. நீண்ட காலம் மனம் ஒருமித்து வாழும்
தம்பதியினருக்கு முகம் கூட ஒத்த ஜாடைக்கு மாறிவிடும் என படித்திருக்கிறேன்.
இப்பொழுது, தனிமை வாட்டுகிறது. ஜனக்கூட்டதின்
நடுவிலும் தனியனாய் உணருகின்றேன்.
பெண்களுக்கு – கருத்து மற்றும் பொருளாதாரச்
சுதந்திரம் பூரண்மாய் வேண்டும் என்ற கருத்து சிறுவயதிலேயே மனதில் ஊறிய காரணத்தால்,
விஜி, தன் வீட்டில் பரிபூரண சுதந்திரத்துடன் உலவினாள். பணம், பொருள் வாங்குவது –
விற்பது, தொழிற்சங்க நடவடிக்கை, உறவுகளுக்கு உதவுவது - நண்ப-நண்பிகளுக்கு உதவுவது, என எதிலும் நான்
தலையிட்டதே இல்லை. அவர் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாயிருந்தது.
எல்லாம் கண நேரத்தில் கனவாகிவிட்டன.
கணவனை இழந்த பெண்கள் ஒருவாறு சமாளித்து,
வாழ்க்கையை எதேனும் ஒரு வகையில் சுவாரஸ்யப்படுத்திக் கொள்கின்றனர். பெரும்
சிக்கல்கள் ஏதுமின்றி எஞ்சிய வாழ்வை ஓட்டி விடுகின்றனர்.
ஆணால், மனைவியை இழந்த கணவர்கள் பாடுதான்
பிரச்சினகள் நிறைந்ததாகிறது. பரிதாபத்திற்குரியதாகிறது.
யாரிடமும் எதுவும் பேச முடியாமல், என்ன செய்வது
எனத் தெரியாமல், மௌனப் புயலாய், அனாதரவாய் திரிய வேண்டியுள்ளது.
என்போல் கொண்ட அன்பினால், என்னை எனது மகளும்
மருமகனும் தங்களிடம் அழைத்து வந்து விட்டனர்.
இங்கு எனது மனம் கொண்ட தமிழும், உற்ற
நண்பர்களும் இல்லை. தமிழ் புத்தகங்களோ, தமிழில் பேசுபவர்களோ இல்லை
மீதி இருக்கும் வாழ்க்கையை சற்று சுவாரஸ்யமாய்,
கொஞ்சமேனும் பிறருக்கு பயன்படும் விதமாய், நான் விரும்பும் வகையில் அமைத்துக்
கொள்ள விரும்புகிறேன். அது எனது உரிமை எனவும் கருதுகிறேன்.
தொட்டியில் வைக்கப்பட்ட செடிபோல, வெறுமனே ஒரு
மூலையில் அமர்ந்து தின்று தூங்கிக் கொண்டிருப்பதில் விருப்பமில்லை.
நிம்மதியும், சந்தோஷமும் வெறும் உணவில் மட்டும்
இல்லை!
கலங்க வைக்கிறது... சம்சாரம் இல்லையென்றால் சகலமும் போச்சி என்பது உண்மை...
ReplyDelete