Wednesday, June 7, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – பகுதி 2

முழுக் காஷ்மீருமே அழகு வனம்தானே? ஆயினும், ஸ்ரீநகரில் ஏராளமான  பூங்காக்கள் அமைத்திருக்கிறார்கள். சில மொகலாயர் காலத்தியது.  ஷாலிமார் பாக் (Shalimar Bagh), Chashmishi Spring Gardan, நேரு பார்க், பரிமஹல் பார்க், அல்மண்ட் பார்க், டுலிப்  கார்டன் போன்றவை பெரியவை. அழகானவை.  அனைத்து பூங்காக்களும் நேர்த்தியாக பராமரிக்கப் பட்டு வருகின்றன. ஸ்பிரிங் பார்க் என்னும் இடம் அமைப்பில் மைசூர் பிருந்தாவன் கார்டனை நினைவு படுத்துகிறது. இந்த ஸ்ப்ரிங் கார்டனின் தண்ணீரைத்தான் நேரு குடித்தார், மருத்துவ குணம் மிக்கது என்றெல்லாம் சொல்வார்கள். தப்பித்தவறி குடித்து வைக்காதீர்கள். பனி உருகி வரும் நீர்தான். என்றாலும் பாசி போன்றவை மிதக்கின்றன. வயிறு கெட்டுவிடப் போகிறது.

அனைத்துப் பார்க்குகளும் திகட்ட திகட்ட இனிக்கிறது.  அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, நிறைந்த நீர்வளம், அக்கறையோடு கூடிய பராமரிப்பு காரணமாக பூத்துக் குலுங்குகின்றன – பளீரென்ற வண்ணத்தோடு. 

ரோஜாச் செடிகளின் விதைகள் விற்கிறார்கள். நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு வளருவது கடினம். மனதை கொள்ளை கொள்ளும் டுலிப் கார்டன் இப்பொழுது சீசன் இல்லை. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மட்டுமே பூக்குமாம்.  மொகல் ஹெரிடேஜ் கார்டன் 12 அடுக்கு கொண்ட நீரூற்றுகளைக் கொண்டு ரம்மியமாக இருக்கிறது.  எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்னும் அளவிற்கு பசுஞ்சோலைகள்; உன்னத அழகுடன்.

ஸ்ரீநகர் கோடைகாலத் தலை நகர். ஜம்மு குளிர்காலத் தலைநகர். இரு செக்ரடேரியட் கட்டிடங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய ஃப்ரான்ஸிக் லேபோரட்டரி இருக்கிறது. வெளியேயிருந்து வேடிக்கை பார்க்கலாம்.

அழகிய குருத்வாராக்கள் இருக்கின்றன (சீக்கியர்களின் கோயில்). நகரில் ஆங்காங்கே டர்பன் அணிந்த சீக்கியர்கள் தென்படுகிறார்கள். 

ஊரின் சற்றுத் தொலைவில் ‘மாதா கீர்பவானி ‘ கோயில் இருக்கிறது. ஜம்மு-கட்ராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்னோதேவி கோயில் தெரியும்தானே? அந்த வைஷ்னோ தேவியின் தங்கைதான் கீர்பவானி. அறுகோன அமைப்பிலான ஒரு வாய்க்காலின் (Man made) நடுவே, மிகப்பெரிய மேம்பிள் மரங்கள் சூழ, அற்புதமாய் அமைந்திருக்கிறது இக்கோயில்.  நான் சென்றிருந்த சமயம் கோயிலில் விழாக் காலம்.  அண்டை மானிலங்களிலிருந்தும்கூட, லட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்களாம். ஆனால் இப்போது நிலவும் சில அசாதாரண சூழல்களால் சில ஆயிரம்பேர்தான் வந்தார்களாம். அமைதியான சூழலில் அழகானதோர் கோயில். வாய்ப்பு கிடைத்தால் தரிசனம் செய்யுங்கள். அபிஷேக பால் வெளியே செல்ல ஒரு சிறிய ஓடைபோல அமைத்திருக்கிறார்கள். கோயிலின் வெளியே இருக்கும்  பல்வேறு கடைகளை நடத்துபவர்கள்/ வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களே!  

நான் தங்கியிருந்த தால் ஏரியின் எதிரே,ஆதி சங்கராச்சார்யார் தபம் செய்த குன்று ஒன்று இருக்கிறது. இரண்டாயிரம் அடி உயரம் இருக்கும்.  குறிப்பிட்ட தூரம் வரை வாகனங்கள் செல்லும். அதன் பிறகு  நேர்த்தியான 247 கருங்கற் படிகள்.  அனைவரும் சோதனைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப் படுகிறார்கள். உள்ளே சென்றால், அங்கே அழகான சிவன் கோயில் இருக்கிறது. கோயிலின் பெயரே ‘சங்கராச்சார்யார் ஜி மந்திர்’ தான்.  கோயிலை ஒட்டிய வனப்பகுதி ரிசர்வ்ட் ஃபாரஸ்ட். இரவு நேரங்களில் சிறுத்தைகள், மான்கள் இருக்குமாம். இங்கேநாமே சிவலிங்கத்தை தொட்டு வணங்கலாம். பெரும்பாலான வட இந்தியக் கோயில்களில் சிவபெருமானை நாமே தொட்டு வணங்கலாம். அபிஷேகம் செய்யலாம். யாரும் தடுப்ப தில்லை. காலை ஆறு முதல் மாலை ஆறு வரை திறந்திருக்கும். ஸ்ரீநகர் சென்றால் அவசியம் இக்கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

பார்க்க வேண்டிய மற்றுமொரு இடம். ஹஸ்ரத்பால் மசூதி.  தால் ஏரியின் பின்புறம், நிஷாத் பார்க்கின் (park) அருகே, பளிங்குக் கற்களால் ஆன முஸ்லீம்களின் பெருமரியா தைக்குரிய மசூதி இது. ஏழைகளின் ஹஜ் என்று உடன் வந்தவர் சொன்னார். மெக்கா யாத்திரை செல்ல இயலாத ஏழைகள் இந்த மசூதிக்குச் செல்லலாமாம். This revered shrine houses the Moi-e-Muqqadus (preserved sacred hair) of Prophet Mohammad. Public display of the hair takes place only on religious occasions. Some of the other names of the Hazrat Bal mosque are Assar-e-Sharief, Madinat-us-Sani and Dargah Sharif. One of the most revered Muslim shrines, Hazratbal is an epitome of the love and respect of Muslims for the Prophet. முஸ்லீம்கள் அல்லாதோர் தொழுகை நடக்கும் இடத்திற்குள் செல்ல அனுமதியில்லை. ஆனால் மற்ற இடங்களைப் பார்க்கலாம்.


சங்கராச்சார்யார் கோயிலின் புகைப்படம் கீழே:



சங்கராச்சார்யார் ஜி மந்திர்.


'தால்' ஏரியின் கடைசியில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் இடம் இருக்கிறது. கபூதர் கானாவைத் தாண்டி. ஏரியின் நீரில்,  ஒரு பலகையின் மேலே நின்று கொண்டு கயிற்றினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நம்மை இழுத்துக் கோண்டு ஒரு விசைப் படகு விரைந்து செல்லும்.  'தேன் நிலவு' திரைப்படத்தில் ஜெமினி கணேசனும் வைஜயந்திமாலாவும் (?) இந்த விளையாட்டை ஆடிக்கொண்டு, சர்ஃபிங் செய்வார்கள். சிறுவயதில் இப்படத்தைப் பார்த்த பொழுது, ஆஹா.. நாமும் இந்த மாதிரி போகமுடியுமா என யோசித்திருந்தேன்.  66 வருடத்திற்குப்பின் அந்த வாய்ப்பு கிடைத்த பொழுது, கொஞ்சம் வெட்கமாகத் தான் இருந்தது. வெளியூர்தானே? யார் பார்க்கப் போகிறார்கள் என 'தைரியமாக' இந்த விளையாட்டை ஆடித்தீர்த்தேன். 




மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களையும் கீழே கொடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பில் பார்க்கலாம். 



Tuesday, June 6, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – ஸ்ரீ நகர் (பகுதி – 1)

எம்.ஜி.ஆர் தனது சினிமாவில் , ‘காஷ்மீர்..ப்யூட்டிஃபுல் காஷ்மீர்’ என டூயட் பாடியது தான் காஷ்மீரைப்பற்றிய முதல் நினைவு. ஏராளமான  இந்தித் திரைப்படங்களில் அந்த எழில் மிகு மாநிலத்தைக் கண்டு களிதத்தோடு சரி. ஒவ்வொரு முறையும் அங்கே செல்லவேண்டும் என திட்டமிடும்போது, அங்கு நிலவும் அசாதாரணச் சூழல்குறித்து பத்திரிக்கைகளும், மீடியாக்களும் அளித்த பிம்பம் அச்சமூட்டுவதாகவே இருந்தது. எனது நன்பர் ஒருவர் சமீபத்தில் இரு நாள் விஜயமாக காஷ்மீருக்கு குடும்பத்துடன் சென்றுவந்து, ஆங்கே நிலைமை அப்படியெல்லாம்ஆபத்தாக இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடம்தான்-பாதுகாப்பானது தான் என சான்றுரைத்தார்.

‘வாழ்வது ஒருமுறை - ஆனது ஆகட்டும்’ எனத் தீர்மாணித்து, மே’2017, 31ந்தேதி அன்று ஸ்ரீநகர் செல்ல விமாணப் பயணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டேன்.விமாணம் தில்லியடையும் வரை மனம் இலேசாகத்தான் இருந்தது. ஸ்ரீநகருக்கு  விமானத்தில் ஏறியதும் ஹார்ட்பீட் கொஞ்சம் அதிகரிப்பதை உணர முடிந்தது. ஒரு குழுவாக்ச் செல்லாமல், தனியனாக அம்மாநிலத்திற்குச் சென்றதும், கழகங்களின் புண்ணியத்தில் ‘இந்தி’ அறவே தெரியாததும்தான் காரணம்.

ஸ்ரீநகர் தில்லியிலிருந்து ஒன்றரை மணி நேரப்பயணம்.  ஜன்னலோர இருக்கை கேட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். 

இமயமலைகளின் ஊடே பறக்கும் பொழுது, கீழே தென்பட்ட காட்சி... அட..அட... என்னே ஒரு ரம்மியம். கருகருவென, வானுயர,  முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கும் இமயமலைத் தொடர்.  குச்சிகுச்சியாக நீண்டிருக்கும் பைன் வகை மரங்கள். சிறிதும் பெரிதுமாக, தெள்ளிய நீருடன் ஆங்காங்கே பாயும் ஓடைகள்/ஆறுகள். ஊடவே பாய்ந்து பறக்கும் பிருமாண்ட வெண்ணிற மேகக் கூட்டங்கள். கொத்து கொத்தாக கிராமங்கள். கிராமங்களைச் சுற்றி நெல் வயல்கள். மீண்டும் காடுகள். இயற்கையன்னை தன் திறமையெல்லாம் ஒன்று திரட்டி,  ஒரே இடத்தில் செய்து வைத்ததுபோல கொள்ளை அழகு!  திகட்ட திகட்ட பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஸ்ரீநகரின் ஓடுபாதையைத் தொட்டது விமானம்.

எல்லா விமான நிலையங்களையும் போலவே, ஏராளமான காவல் துறையினர். கூடவே CRPF. ராணுவ ஜீப்கள்.  ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததுமே, இதமான காற்று வருடியது. வாசலில் 'திரு முகமது அல்டாஃப் சாப்ரி 'அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த ‘ஆதுல்’  என்பவர் எனது பெயர் எழுதிய காகிதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு காத்திருந்தார். (இவரைப் பற்றி தனியாக அடுத்த பகுதியில் எழுதுகிறேன். தங்களது விருந்தினர்களை  கண்போலக் காத்து, உபசரித்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் இவர் போன்ற மனிதர்கள் அபூர்வர்கள். இவரை நம்பி நமது பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். இவரைப்பற்றிய தகவல்களை தனியே தருகிறேன்.)

மற்றவர்களுக்கு எப்படியோ, சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவின் வேறெந்தப் பகுதியைப் போலவே பாதுகாப்பானதுவே. இத்தனைக்கும் நான் ஒரு குழுவாகச் செல்லவில்லை. 'டூர் மேனேஜர்' என எவரும் இல்லை. தனியாள்.  மீடியாக்கள் மிகுந்துரைப்பது போல, ஆங்கே தெருவெங்கும் கல்வீச்சும், துப்பாக்கிச் சண்டைகளும் இல்லை. கலவரம் இல்லை. எப்பொழுதும் போல பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், அலுவலகங்களும், இன்ன பிற துறைகளும் சாதாரணமாகவே இயங்குகின்றன. 

அப்படியானால் துளிக்கூட கலவரம் இல்லையா? இருக்கிறது. எல்லையின் அருகே. ஊருக்குள் எப்போதாவது. தீவீரவாதிகள் பதுங்கும் கிராமங்களில்.  அவை எந்த வகையிலும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்காதவகையில் பார்த்துக் கொள்கிறார்கள்.  

போலீஸ் வாகனங்களும், CRPF வாகனங்ககளும், ராணுவ வண்டிகளும் சதா ரோந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘சாதாரண’ மக்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

நகரின் ஊடே ‘ஜீலம் நதி’  ஓடுகிறது.  அவர்கள் அதை ஜைலம் (Jhelum ) என்கிறார்கள். அந்த நதி Pir Panjal என்னுமிடத்தில் ஊற்று நீராக உருவாகி, ஸ்ரீநகர் ஊடே பாய்ந்து, பின் பாகிஸ்தானுக்குச் செல்கிறது.

விமான நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் பயணத்தில் அமைந்திருக்கிறது டால் ஏரி. ஏரி என்றாலும் அது தேங்கி நிற்கும் நீர் அல்ல. மெல்ல - மெல்ல நகரும் நீரினைக் கொண்டது. கிட்டத்தட்ட 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி. ஏரியில் ஆயிரத்திற்கும் அதிகமான ‘படகு வீடுகள்’.  ஒவ்வொரு படகு வீடும் மினி அரண்மணைபோல அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. படகுவீட்டிற்குச் செல்ல ஏரிக்கரையின் ஓரத்தில் நிறைய படித்துறைகள் அமைத்திருக்கின்றனர்.  நான் சென்ற, ‘சாப்ரி’ குழுமத்தைச் சார்ந்த படகுவீடுகளில் ஒன்றான ‘பாம்பே பிரின்ஸ்’ படகுவீட்டிற்கு அருகில் உள்ள படித்துறை எண் ஒன்பது. 

படித்துறையிலிருந்து படகுவீட்டிற்குச் செல்ல ஏராளமான குட்டிப் படகுகள் சுற்றி வருகின்றன.  குட்டிப் படகுகளுக்குண்டான சவாரிச் செலவை, படகுவீட்டின் உரிமையாளரே ஏற்றுக் கொள்கிறார்.

இரவு நேரத்தில், மின்னும் விளக்கொளிகளின் நடுவே, ஏரியின் மத்தியில் இருக்கும் படகு வீட்டின் முன்னால், நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு, வீசும் தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டு, இரவில் மின்மினி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் சிறுசிறு படகுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு, சலசலக்கும் நீரலைகளை அனுபவிப்பது போல பேரின்பம் ஏதும் உண்டோ? கவிதை எழுத இதைவிட தோதான நேரமும் இடமும் இருக்காது. 

காய்கறிகள், மளிகைச் சாமான்கள், பிஸ்கட்-தீனி வகையறாக்கள், மணிகள், மாலைகள், குங்குமப்பூ வகைகள், குளிர் கால உடைகள்  என அனைத்தும்  சிறு படகுகளில் கொண்டுவந்து விற்கிறார்கள். (இவற்றை வாங்காமல் இருப்பதே உத்தமம்)

தால் ஏரியை வர்ணிப்பதைவிட பார்த்து மகிழுங்கள்:






அடுத்த பகுதியில் ஸ்ரீநகரில்  அமைந்துள்ள சோலைகள், ஹஸ்ரத்பல் மசூதி  மற்றும் இன்னபிற  இடங்களைப்  பார்க்கலாம். (வீ டியோவைப்  பாருங்கள் )

Sunday, May 14, 2017

காசிக்குப் போன சன்யாசி – இறுதிப்பகுதி

கடைசியாகச் சென்றது காசி. 

வாரணாசி, காசி, பனாரஸ் என்ற பெயர்களில் அழைக்கப்படும் புராதனமான புனிதமான நகரம்.  மலைக்க வைக்கும் அகலத்தில் கஙகை. இந்த கோடையிலும் ஓரளவிற்கு நீர் ஓடுகிறது.  

வாரணாசியின் கரைகளைத் தொட்டபடி வளைந்தோடும் கங்கை. 64 க்கும் மேற்பட்ட படித்துறைகள். ஒவ்வொரு படித்துறைக்கும் ஒரு பெயர். ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும், புழங்கும் முடிவில்லா கதைகள். இவ்வளவு பெரிய கதைத் தொகுப்புகள் வேறு எந்த நகரத்திற்காவது இருக்கிறதா எனத் தெரியவில்லை. 

படகொன்றில் ஏறிக் கொண்டு  வாரணாசியின் கரைகளையும், அதன் கரைகளில் கம்பீரமாக கட்டப் பட்டிருக்கும் -  இன்னமும் பெருமளவில் பழமை மாறாத கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டே பயணிப்பது பேருவுகை.  படகில் மிதந்தபடி புகழ்பெற்ற ‘கங்கா ஆரத்தியைக்’ காண்பது இன்னும் பேருவுகை.  

எத்தனை ஆயிரமாயிரம்அரசர்களையும், அவர்தம் வரலாறுகளையும், காலம் காலமாக செழுமைப்படுத்தப்பட்டிருகும் நாகரீக வளர்ச்சியையும்  தனக்குள் புதைத்து வைத்திருக்கிறாளோ இக்கங்கை?  அத்தனையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாகப் பயணிக்கும் கங்கையை ஸ்பரிசிப்பதே ஆனந்தம்.

ஆன்மீகத்தேடலுக்காக எவ்வளவு கோடிப்பேர்கள் இங்கே வந்திருப்பர்?  எவ்வளவு பேர்  ஞானமடைந்திருப்பர். எவ்வளவு பெரிய மகான்கள் கால்பட்ட பூமி!  இப்புரதன நகருக்கு நாமும் வந்துவிட்டோம் என்ற நினைவே சிலிர்க்க வைக்கும். 
ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் யாத்ரீகர்கள் வந்து போகும் நகரம்.

மணிகர்னிகாவிலும் ஹரிஷ்சந்திரா கட்டிலும் முடிவின்றி எரிந்து கொண்டிருக்கும் உடல்கள். கங்கையில் பிணம் நாறாதாம்; மல்லிகை மணக்காதாம்; காகம் கரையாதாம்.  அவ்வளவு உடல்கள் தகனிக்கப்பட்டும் காற்றில் நாற்றமில்லை. காகங்களை எங்கும் காணவில்லை. பூவைப்பற்றித் தெரியவில்லை.  இங்கே சுற்றுவட்டாரத்தில் இறந்தவர்களை கங்கை நதியின் கரைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். எந்த நேரமும் மூன்று உடல்களாவது காத்திருப்பில் இருக்கிறது. எலக்ட்ரிக் க்ரெமிட்டோரியமும் இருக்கிறது என்கிறார்கள். உடல்கள் அரைமணி நேரத்தில் சாம்பலாக்கப்பட்டுவிடுகின்றன. முடிந்தது வாழ்க்கை.

கங்கை  நீராடலும்,   நீத்தார்க்கு திதி கொடுத்தலும் காசி யாத்திரையின்  நோக்கம். நினைத்தபடி இரண்டும் ஹனுமன் கட்டில் நடந்தேறின. 
-0-
முன்பு மணிகர்னிகாவிலும் ஹரிஷ்சந்த்ராவிலும் சாம்பல் குவியல்கள் நதியின் ஓரத்தில் ஏராளமாக மிதந்து கொண்டிருக்கும். பூமாலைகள் துணிகள் என பலவும் மிதக்கும். தற்போது சாலில் வேஸ்ட்கள் அனைத்தையும் அப்போதைக்கப்போது நீக்கிவிடுகிறார்கள். ஐந்தாறு படகுகள் இந்தப் பணிக்காகவே வடிவமைக்கப் பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மற்றபடி நீர் அசுத்தமாகவே ஓடுகிறது.

காசியின் போக்குவரத்து மிரளவைக்கிறது. எவர் வேண்டுமெனினும் எப்படி வேண்டு மானாலும் சாலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.   ஃப்ரீ ஃபார் ஆல்.  குறுகலான சாலைகள். புறநகர் சற்று பரவாயில்லை. விதிகள் எல்லாம் காற்றில். போதாக் குறைக்கு எந்த நேரத்திலும்திம்மென்ற வயிற்றோடு எல்லா இடங்களிலும் சுற்றிவரும் மாடுகள். காற்றில் சாணத்தின் நாற்றத்தை உணராமல், காசியாத்திரை சாத்தியமில்லை.

ஹனுமண் கட்டில் பாரதியாருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். வெங்கட்ராமன் திறந்திருக்கிறார். சிலையின் அடியில் அடுப்புக்கரி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சென்றமுறை சென்றபொழுது சம்ஸா விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது தற்செயலாக தமிழர் ஒருவரைக் காண, அவரும் நானும் சேர்ந்து சிலையைக் கழுவிட்டோம்.
-0-

காசி விஸ்வனாதர், விசாலாட்சி, அன்னபூரணி ஆகியோர் தரிசனமும் திருப்தியாக நடந்தது. இந்த மூன்று கோயில்களும் சிறிய சந்திற்குள் இருக்கின்றன. விஸ்வனாதர் கோயில் நெருக்கியடித்துக் கொண்டு இருக்கிறது.  சாதாரண தினங்களிலும் இருபது-முப்பதாயிரம் யாத்ரீகர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். திக்குமுக்காடுகிறது. கோயில் அமைந்திருக்கும் சந்தினை விஸ்தீரணமாக்கியே தீரவேண்டும்.  மொழிதெரியாத ஒருவர் தலைசுற்றவைக்கும் சந்துகளில், சடுதியில் காணாமற் போய்விடுவது சாத்தியமே.

விஸ்வனாதர் கோயிலுக்குள் செல்ல எப்பொழுதும் போல கெடுபிடி. சோதனை. இப்பொழுதெல்லாம், அன்னிய நபர்கள் நமது உடலைத் தடவிப் பார்ப்பதை சகஜமாக ஏற்றுக் கொள்ள பழகிவிட்டோம். பெரும் மால்கள், திரையரங்குகள், கோயில்கள், விமான நிலையங்கள் எனப் பல இடங்களிலும் ஸ்கேனரும், செக்யூரிட்டியின் கைகளும் வருடிவிட்டுத்தான் உள்ளே அனுமதியளிக்கின்றன. யாரைக் குறை சொல்ல? காலத்தின் கோலம் அப்படி.
-0-

அருகே புகழ்பெற்ற காலபைரவர் கோயிலுக்குச் சென்றேன். கோயிலின் உட்பிரகாரம் முழுவதும் கடைகள். ஒரு வினாடி தயங்கினால், உடனே மயிலிறகு கட்டு ஒன்றினால் தலையில் ஒரு தட்டு தட்டி, ஏதோ மந்திரத்தை முனகி, காசிக்கயிற்றுக் கட்டு ஒன்றினை கையில் திணித்து விடுவார்கள்.  பின் அவர்கள் சொல்லும் விலைதான்.

என்போன்ற பேரம் பேசும் திறனற்றவர்கள் இவ்வூரில் பர்சேஸ் பக்கம் போகக்கூடாது; பட்டுப் புடவைகளுக்கும் இவ்விதி பொருந்தும். உடன் வந்த ஒருவர், கடைக்காரர் ரூ. 1500 சொன்ன  ஒரு பட்டுப்புடவையை(?) சற்றும் தயக்கமின்றி 250/-க்கு கேட்டார்.  கடைக்காரர் எங்கே எங்களை ‘அடித்துவிடப்’ போகிறாரோ என பீதியடைந்த போது, கூலாக பேரம் நடந்து 450/-க்கு விலை படிந்தது. இன்னும் எத்தனை ஜென்மா அடைந்தாலும் இக்கலை வரவே வராது.
-0-

வாரணாசிக்குச் சென்றால் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டியவை 1. கங்கையோரத்தில் மாலைவேளையில் படகுச் சவாரி. 2. படித்துறைகள்  3. மாளவிகா பாலம்.  4. காசியின் சந்து பொந்துகள். 5. கங்கா ஆரத்தி.

-0-





Saturday, May 13, 2017

காசிக்குப் போன சன்யாசி – பகுதி 3 (அயோத்தி)

அடுத்து சென்ற இடம் அயோத்தி.  அயோத்தியின் வரலாறும் அதன் பின்னனியும் யாவருக்கும் தெரிந்தது தானே? முதல் நாள் நகரின் மையத்தில் உள்ள பிர்லா மந்திரின் உள்ளே அவர்கள் கட்டிவைத்துள்ள விடுதியில் தங்கல்.

அயோத்தியின் காற்றில் கூட ராமாயணம் கலந்துவிட்டிருக்கும் போல. நகரெங்கும் ஏராளமான கோயில்கள். அவையாவும்,  ஏதோ ஒரு ராமாயண நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டுள்ளன. எவ்வளவு கோயில்கள்? வால்மீகி, லவகுசா, திருமணத்திற்குப் பின் ராமர்-சீதை வசித்த இடம் என ஏராளமான நினைவிடங்கள்.  ஆரஞ்சு வண்ணத்தில் ஆஞ்சனேயர் கோயில்கள். பார்த்து மாளவில்லை.

இங்கே, ஒரு வொர்க் ஷாப் இருக்கிறது. அங்கே ராமர்ஜென்ம பூமியில் கோயில் கட்டுவதற்கான செதுக்கப்பட்ட தூண்களும், கற்களும், சிலைகளும் அடுக்கப் பட்டுள்ளன. கோர்ட் அனுமதித்தால் மூன்றே மாதத்தில், கோயில் கட்டிமுடித்துவிடுவார்கள் போல.

விடியற்காலை எழுந்து ‘சரயு’ நதியில் நீராடிவிட்டு, அறைக்குத் திரும்பி, ராமர் ஜென்ம பூமிக்கு செல்வதாகத் திட்டம்.
எவ்வளவு அரசியல் போராட்டங்களுக்கு வித்திட்ட இடம். பல அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட இடம்.  சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு இடம். அவ்விடத்திற்குச் செல்கிறோம் என்ற நினைவே, சில்லிட வைக்கிறது.  

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள இடம். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ஏராளமாய். ஓரளவிற்குமேல் வாகனங்கள் செல்லவும் அனுமதியில்லை. காமிரா, மொபைல், எலக்ட்ரானிக் சாதனங்கள் எதற்கும் அனுமதியில்லை.  தின்பண்டங்கள் கூட அனுமதியில்லை.  ஐந்து அடுக்கு சோதனைக்கு, அனைவருமே உட்பட்டாக வேண்டும். அவ்வளவு முன்னெச்சரிக்கை. முதல் கேட்டிலிருந்து, ராமர் சிலைகள் வைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குச் செல்ல, கிட்டத்தட்ட , ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். இரும்புக் கிராதிகள் கொண்டு எவரும் வேறு எங்கும் சென்றுவிடாதபடி வழியமைத்திருக்கிறார்கள். ராமர் சிலைகள் வைக்கப் பட்டிருக்கும் இடம்வரை செல்ல அனுமதிக்கிறார்கள். அந்த இடத்தில், ஒரு தாற்காலிக டெண்ட் போடப்பட்டு, அங்கேதான் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.  ஒரு பண்டா தீர்த்தமும் பிரசாதமும் வழங்குகிறார்.

இந்த இடத்தில் இன்னும் எவ்வளவு இரத்தம் சிந்தப் படவேண்டுமோ தெரியவில்லை.

ராமரைத் தரிசித்துவிட்டு, இறுக்கமாகவே வெளிவர முடிகிறது.
ஆனால், உள்ளூர் மக்கள் இதுபற்றி அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. விரிவாகப் பேசாவிட்டாலும், அவர்கள் அமைதியையும் வியாபாரத்தையும் விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. 

Ayodhya, the Battle for India’s Soul.

















காசிக்குப் போன சன்யாசி (பகுதி-2-KONARK)

மாலை நான்கு மணிக்கு சூரியன் கோவில் எனப்படும் கோனார்க் கோயிலுக்கு சென்ற பொழுது, தொலை தூரப் பார்வைக்கு, ஒரு சிறிய முற்றுப் பெறாத கோயிலைப் போன்ற தோற்றத்தை அளித்தது. அருகில் செல்லச் செல்ல, அக்கோயிலின் பிரும்மாண்டம்,  விஸ்தீரணம், நுணுக்கம் விரிந்து திறக்கிறது.  என்ன ஒரு அமைப்பு? என்ன ஒரு நுணுக்கம்? தங்க நகைகளில்கூட இவ்வளவு வேலைப்பாடு சாத்தியமா என்னுமளவிற்கு கல்லில் கலைவண்ணம். இக் கோயில் யுனஸ்கோவினால் ஹெரிடேஜ் சைட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோனா என்றால் மூலை அல்லது கோணம் அர்க் எனில் சூரியன். எனவே கோனார்க்.ஆயிரம் ஆண்டுகளுக்கு ராஜா நரசிம்ஹதேவ்  அவர்களால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட காலத்தில் கடற்கரைஅருகே இக்கோயில் இருந்ததாம் . தற்போது கடற்கரை ஐந்து கி.மி தள்ளியுள்ளது.

கோயில் பெரும்பாலும் சிதைந்த நிலையில் உள்ளது.  கோயிலைச் சுற்றி 24 ப்ருமாண்டமான சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளன; நுண்ணிய வேலைப்பாட்டுடன். விவரிப்பதைவிட ஃபோட்டோக்களே நிறைய சொல்லும்.

கோயில் ஒழுகில், கோயிலின் எதிரே நூறு பெட்டிக்கடைகளாவது வளையல்கள், கரண்டிகள், வாணலிகள், பொம்மைகள், மணிமாலைகள் போன்ற சமாச்சாரங்களை விற்றாகவேண்டும் என எழுதி வைத்துவிட்டார்கள் போல. த.நாவில் தான் அலுமிணியக் குண்டான்களை விற்கிறார்கள் என நினைத்துவிடக் கூடாது, இந்தியா முழுவதும் இதே கதைதான். கொனார்கில் கோயிலின் எதிரே இருமருங்கிலும் மணிகள், மாலைகள், கரண்டிகள், வளையல்கள். பெண்களும் சளைக்காமல் வாங்கித் தள்ளுகிறனர்; ஊர் திரும்பியதும் வாங்கியவற்றை சீண்டக்கூட இல்லாமல். அப்படியே எங்காவது கொட்டிவைக்க. இம்மாதிரிக்கடைகள் கோயிலின் அழகைக் கெடுக்கின்றன. கொஞ்சம் தள்ளி எங்காவது வைக்கக் கூடாதா?










அருகில் உள்ள ஒரு கடற்கரை 


Friday, May 12, 2017

காசிக்குப் போன சன்யாசி... (பகுதி-1)

காசிக்கும் கயாவிற்கும் சென்றுவரவேண்டும் என்ற அவா,  நமது முயற்சிக்கு அப்பாற்பட்ட பலவேறு காரணங்களால் தள்ளிக் கொண்டே சென்று கொண்டிருந்தது.  இந்த கொளுத்தும் வெய்யிலில் எந்தக் காசிக்குப் போகப் போகிறாய்..., அங்கே கங்கையில் நீர் மிகவும்  குறைவாகத்தான் இருக்கும் என்ற ஆலோசனைகளை மீறி, இம்மாதம் சென்று வந்தேன். காசி-கயாவில் திதி கொடுப்பது, சில அசௌகரியங்களைவிடவும் முக்கியமாகப் படவே புறப்பட்டாயிற்று.

செல்வது எனத் தீர்மாணித்தபின், அப்படியே புவனேஷ்வர், புரி, கொனார்க், அயோத்தி, அலகாபாத் என மேலும் சில ஊர்களும் பட்டியலில் சேர்ந்து கொண்டன.
முதலில் சென்றடைந்த இடம் புவனேஷ்வர், இரவு பதினொரு மணி.  அந்த நேரத்திலும் மக்கள் குறுக்கும் நெடுக்குமாய் போய்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மென்மையான மக்கள். பெயர்ப்பலகைல் குடையை கவிழ்த்துப் பிடித்த்து போன்ற ஒரிய எழுத்துக்கள். தினுசு தினுசாய் இருக்கும் குடையின் கைப்பிடியை வைத்து எழுத்துக்களைப் பேதம் கண்டுகொள்கிறார்கள் போல. பலகைகளிலும், சாலையோர அறிவிப்புகள், மைல்கற்கள் யாவற்றிலும் ஒரியாவும்-ஆங்கிலமும்தான். அத்தி பூத்தாற்போலத்தான் ஹிந்தி. இவர்களுக்கு ‘வ’ வராது போல. ‘வ’ விற்கு பதில் ‘ப’.  புவனேஷ்வரி, புபனேஷ்வரி. பெங்காலிகளுக்கு ‘ப’ வராது.. பிருந்தாவன் என்பது ‘வ்ருந்தாவன்’.

புவனேஷ்வரில் சிறிதும் பெரிதுமாய் ஏகமாய்க் கோயில்கள். பெரியது லிங்கராஜ் கோயில். கோயிலினுள் ஏராளமாய் சன்னதிகள். முக்கிய தேவதை ஹரிஹர புவனேஷ்வரி. மத்திய கோபுரம் 180 அடி.  கோயில் ஏ.எஸ்.ஐ கண்ட்ரோலில் இருக்கும் புராதனமான கோயில்.  நுன்னிய வேலைப்பாடுகள். அசப்பில், தாராசுரத்தை நினைவு படுத்துகிறது. லைம்ஸ்டோன் போல இருக்கும் கற்கள். நிறைய ஸ்தல புராணங்கள் சொல்கிறார்கள்.  ஆண்கள் எல்லாம் ‘சம்போ மகதேவ்..’ என முழங்க, பெண்கள் புடவைத்தலைப்பை தலையில் போர்த்திக் கொண்டு... பக்தி மணக்கிறது.

அடுத்து பூரி ஜெகன்னாதர் ஆலயம். என்ன ஒரு அற்புதமான கட்டமைப்பு? கம்பீரமான கோபுரங்கள். ஜெகன்னாதர், சுபத்ரா, பலராமர் என மரத்தாலான மூலவர்கள். 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவர்களை மாற்றுவார்களாம். புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றதல்லவா? இங்கு மூலவரை அருகில் சென்று பார்க்க முடியாது. அறுபதடிக்கு முன்னாலேயே நிறுத்தி விடுகின்றனர்.  உத்தேசமாக பார்த்து வைக்கணும், குருவாயூர்போல. வடக்கத்தி ஸ்வாமிகள் எல்லாம் கண்களை பெரிசாக வைத்துக் கொண்டு, காளிகள் யாவுரும் நாக்கைத் துருத்திக் கொண்டு இருக்கின்றனர். ஜெகன்னாதரும் அப்படியே.

இதை முடித்துக் கொண்டு சென்ற இடம் கயா.பயணத்தின் நோக்கமே கயாவிலும்-காசியிலும் திதி கொடுத்தலே. அங்குள்ள கர்னாடகா பவனில், இக்காரியங்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து தருகிறார்கள். பல்குணி நதிக்கரையிலும், விஷ்ணு பாதத்திலும், அக்ஷய வடம் என்னும் மரத்தினடியில், ஸ்ரீராமன் தனது தந்தைக்கு திதி கொடுத்த இடத்திலும் பிண்டம் விடவேண்டும். நீத்தாருக்கு கயைபோன்ற இடத்திற்குச் சென்று, திதி கொடுக்க வேண்டும்
கயாவில் தாய்க்கு மட்டும் 16 பிண்டங்கள் விடச் சொல்கிறார்கள். பதினாறு பிண்டங்களை விடுவதற்கான காரணங்களை திதி செய்துவைப்பவர் விவரிக்கும்பொழுது, பலரது கண்கள் கலங்கியது.

இந்தப் பிண்டங்களில் பல்குணி நதியில் 17 பிண்டங்கள் வைத்துப் படைக்க வேண்டும். விஷ்ணு பாதத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். பிறகு இறுதியாக அக்ஷய வடத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். அந்த 64 பிண்டங்களில் தாய்க்கு மட்டும் 16 பிண்டங்கள் உரித்தானவை. அந்த அளவுக்கு தாய்க்கு முக்கிய ஸ்தானம் அளிக்கப்படுகிறது. ஏன்?

நம்மைப் பத்து மாதம் சுமந்து, உதிரத்தைத் தாய்பாலாக்கி அளித்து, பெற்று வளர்த்து ஆளாக்குபவள் அன்னை. அந்த அன்னைக்கு இறந்த பின்னரும் காட்டும் நன்றிக் கடனே மேற்கண்ட 16 பிண்டப் பிரதானம். அதற்கென்று உள்ள மந்திரங்களைச் சொல்லி அந்தப் பிண்டத்தைப் படைக்கின்றனர்.

1. அம்மா, என்னை கர்ப்பத்தில் தாங்கியபடி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அதனால் சொல்லொணா வேதனைகளை அனுபவித்தாயே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தை உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள்வாயாக!
2. ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் உனக்கு வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், அம்மா, ஏற்றுக் கொள்வாயாக!.
3. உன் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனையை நீ சகித்தாய் அம்மா. ஆனால் அதனால் எனக்குச் சேர்த்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.
4. நீ நிறைகர்ப்பிணியாக என்னைச் சுமந்தபோது உனக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்குவதற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் அம்மா, ஏற்றுக் கொள்வாயாக!.
5. அம்மா, உன் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.
6. அன்புள்ள அன்னையே, என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, நீ கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாயே , உனக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், தயை கூர்ந்து ஏற்றுக் கொள்வாயாக!.
7. நான் பிறந்தபோது மூன்று நாள்கள் அன்ன ஆகாரமின்றி பசி என்னும் பெருநெருப்பில் நீ நொந்தாயே அம்மா, உனக்கு என்னால் ஏற்பட்ட இந்தக் கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா!.
8. இரவில் நான் உன் ஆடைகளை மல, மூத்ரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், பெற்றுக் கொள் அம்மா.
9. என் பசி, தாகம் தீர்க்க அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாயே உன்னை அவ்வாறு வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், தயவு செய்து ஏற்றுக் கொள்.
10. அல்லும் பகலும் உன் முலைப் பாலை அருந்தும்போது உன்னை நான் துன்புறுத்தினேன். அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக அம்மா.
11. கோடைக்காலங்களில் என்னைக் காக்கத் உன் உடலை வருத்திக் கொண்டாயே அம்மா! உனக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாவங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் அம்மா.
12. மகன் நோய்வாய்ப்பட்டானே என்ற கவலையால் வாடி இருந்தாயே, அம்மா உனக்கு விளைவித்த அந்த மனத்துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா.
13. என் அன்பார்ந்த அன்னையே, யமலோகம் செல்லும் நீ கோரமானவற்றை எல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் ஏற்றுக் கொள்வாயாக!.
14. உனக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால் புத்திரர்கள் அவர்களின் தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகிறேன் அம்மா! கருணை கூர்ந்து இவற்றை ஏற்றுக் கொள்வாயாக.
15. நான் நன்கு வளர்வதற்காகத் உனக்கு ஆகாரம் இல்லாமல் கூடக் கஷ்டப்பட்டாயே அம்மா, உனக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!
16. கர்ப்பத்திலும், சிசுவாக இருந்தபோதும், நான் மரணவேதனையை ஒத்த பல கஷ்டங்களை உனக்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைப் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக அம்மா!

அக்காலத்தில், தாய்க்கு கொடுத்திருந்த ஸ்தானமும் மரியாதையும் வியக்க வைக்கிறது.ஆனால் தற்காலத்தில் தந்தைக்கும் தாய்க்கும் கிடைக்கும் மரியாதை நினைவில் வந்து போவதை தடுக்க இயலவில்லை.

அக்ஷய வடத்தினருகே ஒரு காய், ஒரு கனி, ஒரு இலை ஆகியவற்றை ஆயுளுக்கும் விட்டுவிட வேண்டுமாம். உண்மையில் அங்கே சென்றுவிட்டு வந்தபின் காம, க்ரோத துற்குணங்களை விட்டுவிடனும். அதற்குப் பதிலாக (!) இவை போலும். அனைவரும் எச்சரிக்கையாக ஈச்சம்பழம், கோவக்காய், ஆலஇலை ஆகியவற்றை விட்டுவிடுகின்றனர்.

எல்லாம் நன்றாகத்தான் நடந்தது.  என்னதான் ‘காண்ட்ராக்டாக’ பேசிக்கொண்டாலும் ஆங்காங்கே, ‘செய்துவைப்பவர்’ உட்பட பலரும் காசு பிடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.  கயா வாசிகளுக்கு திருப்தி என்பதே ஏற்படாது போல. காற்றில் சதா கலந்துவிட்டிருக்கும் சாணி-மற்றும் சாக்கடையின் மணம் போல, ‘ஆசை’ இவர்களது இரத்தத்தில் கலந்துவிட்டிருக்கிறது. கேட்பதில் அவர்களுக்கு தயக்கமொன்றும் இல்லை. நமக்குத்தான் ‘இல்லை’ என்று சொல்ல தயக்கம். அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அடுத்த பகுதியில் கொனார்க், காசி, அயோத்தியா பார்க்கலாம்.




(மேலே கண்ட படங்கள்  நெட்.)


 அக்ஷ்ய வடம்