Tuesday, March 4, 2014

அந்தமானைப் பாருங்கள் அழகு (நிறைவுப் பகுதி)

ஜாலி பாய்


(ஜாலிபாய் போகும்வழியில்...)

(ஜாலிபாய் போகும்வழியில்...)

(ஜாலிபாய் போகும்வழியில்...)

(ஜாலிபாய் போகும்வழியில்...)

(கண்ணாடிப் பட கின் ஊடே.....)

(கண்ணாடிப் பட கின் ஊடே.....)

(கண்ணாடிப் பட கின் ஊடே.....)


போர்ட்பிளேயரிலிருந்து 29 கி.மி தொலைவில் இருப்பது, “மகாத்மா காந்தி  மரைன் நேஷனல்.பார்க்”
 பார்க் என்றதும் ஏதோ ஒரு தரையில் இருக்கும 
பார்க்கை நினைத்துக் கொள்ளக் கூடாது.  281 சதுர கி.மீக்கு விரிந்து படர்ந்திருக்கும்,தீவுகளும் கடலும் சூழந்த் இடத்திற்கு பெயர் இது.  உலகில் இதைவிட பொருத்தமான, அழகான் இடம் உண்டா என சந்தேகமாயிருக்கிறது. இந்தஇடத்திற்குச் செல்லும் வழியே பேரழகு. தினம் தோறும் இங்குள்ள கடலின் நீரைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு 'டிஸ்டில்டு வாட்டரினால் நிரப்பி விடிட்டதைப்போல அப்படி ஒரு தெள்ளத்தெளிவான நீர். கிறங்கடிகடிக்கும் நீலம். ஆஹா..........


இங்கு, Jolly Buoy தீவு மற்றும் ரெட் ஸ்கின் தீவு மிக முக்கியமானவை. சீசனுக்குத்தகுந்தாற்போல, இரண்டு தீவுகளுக்கும் மாறி, மாறி அழைத்துப் போகிறார்கள். டிக்கட் ரூ.800/-

அழகு என்றால் அப்படி ஒரு அழகு. தீவுகளைச் சுற்றிக் காட்ட கண்ணாடி படகுகளில் (அடிப்பகுதி) அழைத்துச் செல்கிறார்கள். கால்களுக்கடியில்  வண்ண வண்ண மீன்கள், விதவிதமான கடல் வாழ் உயிரைனங்கள், வருணிக்க இயலாத வகையில், கற்பனைக்கும் எட்டாத வடிவங்களில், நிறங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கும் கோரல் ரீஃப்கள்.  

வாய் பிளந்து பார்த்தோம் என்பதைவிட சொல்வதற்கு ஒன்றும் தோன்றவில்லை.  ஒரு மணி நேரம் கண்ணாடிப் படகு சவாரி ஒரு நிமிடமாய் மறைந்து போனது. இயற்கை, இதைவிட பெரிய கொடையை இந்தியாவிற்கு வழங்கக் கூடுமா?  நான் எப்படி வருணித்தாலும், அவை யாவும் இத்தீவின் பேரழகிற்கு நியாயாம் செய்ததாகாது. நேரில் பார்த்து அந்த சந்தோஷ கணங்களை நினைவில் நிறுத்திக் கொள்வது மட்டுமே சாத்தியம்.  ஜாலி பாய் செல்லாமல் அந்தமான் பயணம் என்பது இனிப்பு இல்லாத விருந்து என்றால் எப்படியோ,  அப்படியே! 


செல்லுலர் சிறைச்சாலை

சிறை வாசல் 

சிறையின் மாதிரி வடிவம் 

அணையா தியாக தீபம்.
ஒலி - ஒளி காட்சி அரங்கு 
(பின்னணியில் சிறைச் சாலை)

(சித்தரவதைக்கூடம்)


(சிறையின் ஒருபக்கம்)

(மரணக்கிணறு)


(ஒரு செல்)

(தூக்கிலடப்படும் மின்னால் இறுதிசடங்கு நடக்கும் இடம்)

(பணிக் கூடம்)


(வீ ர சவர்க்கார் அடைக்கப்பட்டிருந்த செல்)


(நம்ம ஊரைப்பற்றி)

உலகில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சிறைச்சாலையும் ஓராயிரம் கதை பேசும்.ஒவ்வொரு சிறைக்கதவும் வாயிருந்தால் கைதிகளின் அளப்பரிய சோகக் கதைகளை கதறக் கதறச் சொல்லும்.

மறக்கடிக்கப்படும் தேச வரலாறுகளையும், கைதிகளின் தியாகங்களையும் சொல்லிக் கொண்டே இருக்கும். ஆனாலும், அந்தமான் சிறை ஏற்படுத்திய  தாக்கம், பாதிப்பு போல இன்னொறு சிறை ஏற்பதுமா என்பது சந்தேகமே!

அந்தமான்  செல்லுலார் சிறைச் சாலை, மூன்று மாடிகளோடு, ஏழு திக்குகளில், ஆக்டோபஸைப்போல கிளை பரப்பி நிற்கிறது.


அமிர்தசரஸூக்கு போயிருந்த பொழுது, “ஜாலியன் வாலாபாக் படுகொலை” நிகழ்ந்த இடத்தை தரிசிக்கும் பொழுது, எவ்விதமான உணர்வு, ஆத்திரம், தேச உணர்வு பொங்கியெழுந்ததோ அதே போன்ற உணர்வு இங்கும்,

ஏதோ, கடையில் மிட்டாய் வாங்கி வந்ததைப் போல “காந்திஜி” சுதந்திரம் "வாங்கித் தந்தார்" என குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோமே; இதைவிட தேசத்திற்காக  உயிர் நீத்த தியாகிகளை அவமானப் படுத்த முடியாது. நமது சுதந்திரத்திற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான  மக்களின் உயிர்த்தியாகம் இருக்கிறது. போற்றப்படாத, தியாகிகள்-போராளிகள் இருக்கின்றார்கள். வரலாற்றினால் மறக்கப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். சித்திரவதைகள் இருக்கின்றன.

இங்கு அடைக்கப்பட்டவர்கள் எல்லாம், திருடிவிட்டோ, கொலை செய்துவிட்டோ வந்தவர்களா என்ன?

இந்த தேசத்தின் சுதந்திரக் கனலை ஏற்றி வைத்த ஒரே பாவத்திற்காக அடிபட்டு, உதைபட்டு, வார்த்தைகளால் சொல்ல முடியாத சித்திரவதைகள் அனுபவித்த சுதந்திரப் போராட்ட தியாகிகள்.

சித்திரவதை என்றால், அப்படி ஒரு சித்திரவதை! பதிவு செய்யப்பட்ட அடி உதைகளே இப்படியென்றால் உண்மையில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? பீரங்கியின் வாயில் கைதிகளை கட்டிவைத்து வெடித்திருக்கிறார்கள் இங்கிலாந்தினர்.

மாடு கூட தொடர்ந்து வேலை செய்யாது! அதைவிடக் கேவலமாக, நமது தியாகிகளை கைகளை கட்டிப்போட்டு செக்கு இழுக்க வைத்திருக்கிறார்கள்.

பக்கத்திலேயே, ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிடும் மரணக்கினறு அமைத்திருக்கிறார்கள். இந்த கேலோவினை, மரணைவிதிக்கப்பட்ட கைதிகள் பார்க்கும்படி அமைத்திருக்கிறார்கள். மரணக்கிணறின் வாசலில் தூக்கிலிடப்படுவதற்கு முன் இறுதிச் சடங்குகளை, உயிருடன் இருக்கும் பொழுதே செய்வார்களாம்.

எனன வக்கிரம் இது?

மாட்டுக்குப் பதிலாக கைதிகளைக் கட்டிப்போட்டு செக்கிழுக்க வைத்தது தொடங்கி, தலைகீழாக நிற்க வைத்து அடித்தே கொன்றது வரை பல்வேறு சித்திரவதைகள் பிரிட்டிஷ் சிறை அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டன.
கிரிமினல்களைக் காட்டிலும் அரசியல் கைதிகளே அதிகம் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். மிதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆரோக்கியத்தை இழந்து, உணவை இழந்து, உணர்வை இழந்து அவதிப்பட்டபோதும், சுதந்தர நெருப்பை அணையவிடாமல் காத்தவர்கள் பலர்.

நமது தேசவிடுதலைப் போராட்ட  தியாகிகளின் கதறலும்,  மரண ஓலமும் இன்னமும் அதன் நெடிதுயர்ந்த சுவர்களில் பட்டு எதிரொலிக்கிறது. 

நடந்த வரலாற்றுக் கொடுமைகளுக்கெல்லாம் மௌன சாட்சியாக, இன்னனும் நின்று கொண்டிருக்கிறது அந்தமான் செல்லுலர் சிறைச் சாலையும் அதன் வாயிலில் நிற்கும் பீப்பல் மரமும்.

நெஞ்சில் கொஞ்சமேமேனும் ஈரமும், தேசப்பற்றும் இருந்தால், சிறைச்சாலயில் மண்ணை மிதித்த உடன் மெய்சிலிர்க்க வேண்டும். 

அந்தமான் சிறைச்சாலையின் சுறுக்கமான வரலாற்றை, மாலை 6.15-க்கும், 7.15க்கும் என, இரண்டு ஒலி-ஒளிகாட்சிகளாக வழங்குகிறார்கள். ஆங்கில காட்சி எப்பொழுது என்று கேட்டுக் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில் புரியாத ஹிந்தி ஷோவில் மாட்டிக் கொள்வீர்கள்.
எவரேனும் அந்தமானுக்கு செல்வதாயிருந்தால், உங்கள் குழந்தைகளை இந்த சிறைச் சாலைக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த தேசத்தின் மகத்தான தியாகளை அவர்கள் கொஞ்சமாவது உணரட்டும்-தெரிந்து கொள்ளட்டும்.

வீர்சவர்கரும்-நேத்தாஜியும் மெயின் லேண்டில் மறக்கடிக்கப் பட்டவர்கள்.
இங்கே சிறையிலடைக்கப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களை, தனியாக ஒரு அரங்கில் அமைத்திருக்கிறார்கள். பாருங்கள். அவர்கள் இழுத்த செக்குகளைக் கூட காட்சிப் படுத்தியுள்ளனர்.

ஒலி-ஒளி முடிந்து வெளிவரும் பொழுது கனத்த நெஞ்சோடுதான் வருகிறோம்.

எந்த தேசம்,  நாட்டின் வரலாற்றை மறக்கிறதோ, எந்த தேசம் சுதந்திரப் போராட்ட தியாகிகளை மறந்து  போகிறதோ, அவை யாவும்.... (வேண்டாம்.. நாமே  நம்மை வசைபாடிக் கொள்ளக் கூடாது.

                              -

Monday, March 3, 2014

அந்தமானைப்பாருங்கள் அழகு (பாகம் - 3)

நீல் தீவு:   (Neil Island)

போர்ட் ப் ளெயரிலிருந்து, 36 கி.மீ தூரத்தில் இருக்கும் அழகிய தீவு. ஃபெர்ரி யில் தான் செல்ல வேண்டும்.  நாங்கள் தேரிந்தெடுத்த தனியார் சொகுசுப் படகு, ‘ஹாவ்லெட் தீவு சென்று 
பின் நீல்  
தீவுக்கு சென்றதால் 56 கி.மி ஆகியது. இரண்டு மணி நேர சவாரி. தனியார் சொகுசு படகுகள் அனைத்தும் ஏ.ஸி வசதியுடன், உள்ளேயே கேன்டீன், டாய்லெட் வசதிகளுடன இருக்கின்றன.


ஒவ்வொரு நபருக்கும் சேஃப்டி பெல்ட்கள் வழங்குகிறார்கள். அதை எப்படி அனிந்து கொள்வது,


ஆபத்து காலங்களில் என்ன செய்ய வேண்டும் என டி.வி திரையில் காண்பிக் கிறார்கள். மேக்ரூஸ், கோஸ்டல் குரூஸ் என பல 
சிறு கப்பல் கம்பெனிகள் இருக்கின்றன.

அந்தமானின் பசுமைக் கிண்ணம் இந்த நீல் தீவு. சிறிய கடைத்தெரு.ஏ .டி எம். வசதிகளெல்லாம் கிடையாது.  டிபன், சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்லி வைத்தால்தான் கிடைக்கும். நம் ஊர்போல நேரே கடைக்குப் போய் ஆர்டர் செய்ய இயலாது.  நாங்கள் தங்கியிருந்த ‘ஹவா பில் நெஸ்ட்’ உட்பட.

கடற்கரையோரம் கோரல்கள் மண்டிக் கிடக்கின்றன. வண்ண மயமான கடல் நீர். ஹாவ்லெட் தீவைக் காட்டிலும் அமைதியும், அழகும் நிறைந்த தீவு.

‘ஸ்னார்கலிங்’ மற்றும் ‘ஸ்கூபா டைவிங்’ செய்வதற்கு ஏற்ற இடம். இந்த இரண்டையும் முயன்று பார்த்தோம்.



‘ஸ்னார்கலிங்’ என்றால் கால்களில் ஃபின்களையும், முகத்திற்கு முகமூடி ஒன்றையும் அணிந்து கொண்டு முகத்தை தண்ணீருக்குள் வைத்துக்கொண்டு   நீந்தும் விளையாட்டு. சுவாசிப்பதற்கு முகமூடியுனுள் செருகினாற்போல ஒரு டியூப் வைத்து இருக்கும்; அதனை வாயில் கவ்விக் கொண்டு-வாயலேயே சுவாசித்துக் கொண்டு கடலின் அடிப்பரப்பை தலையை தூக்காமல் நீந்திக்கொண்டே ரசிக்கலாம். 

தெள்ளத்தெளிவான நீராக இருப்பதாலும், நல்ல சூரிய ஒளி இருப்பதாலும், கடலின் ஆழம் குறைவாக இருப்பதாலும் கடல் வாழ் உயிரணங்களை ரசிப்பதற்கு ஏற்ற விளையாட்டு.

‘ஸ்கூபா டைவிங்’ 






‘ஸ்கூபா டைவிங்’ என்பது, முதுகில்  ஆக்ஸி ஜன் 
சிலிண்டரைக் கட்டிக் கொண்டு, உடலில் பிரத்தேகமான ஸ்விம்மிங்க ஸுட் மற்றும் முகமூடி அனிந்து கொண்டு, பயிற்சி பெற்ற டைவர் ஒருவரின் துணை கொண்டு (சுவாசம், முதுகில் கட்டிக் கொண்டிருக்கும் சிலிண்டரிலிருந்து வரும் டியூப் மூலம்), கடலின் அடி ஆழத்திற்கு சென்று பார்ப்பது.

இந்த சாகச விளையாட்டிற்கான  கட்டணம் 3,500 முதல் 4,500 வரை கேட்கிறார்கள். ஆனால் கடலின் அடியில் சென்று பல் வேறு சைஸ்களில், டிசைன்களில், பல நிறங்களில் இருக்கும் உயிர் கோரல்களையும், விதவிதமான வண்ண மீன்களையும், நண்டுகளையும் மற்ற உயிரிணங்களையும் காணும் பொழுது நான் கொடுக்கும் கட்டணம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. பல நல்ல டைவர்கள் இருக்கின்றனர். பப்படத்தேவையில்லை.

நீர் விளையாட்டைத் தவிர, லஷ்மண்பபூர் பீச், பரத்பூர் பீச், சீத்தாபூர் மற்றும் Natural Bridge formation என பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன.

ஹாவ்லாக் தீவு:

நீல் தீவுகளலிருந்து  16 கி.மி. அதே சொகுசு படகுச் சவாரி. விஜய நகர் பீச், யானை பீச் என பல
இருந்தாலும்,  இங்கு ராதா நகர் பீச் பிரசித்தம். அழகோ அழகு.  இங்கும் ஸ்னார்கலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் இருக்கின்றன. இங்கு தனியார் லாட்ஜ்களும், உணவகங்களும் நிறைய இருக்கின்றன.

ரோஸ் தீவு:  (Ross island) (ராஸ் தீவு என்றும் சொல்கிறார்கள்)


முன்பு ஆங்கிலேயர்களுக்கு 1858 முதல் 1941 வரை காபிடலாக இருந்த இடம் இது. சிறிய தீவு.  அவர்கள் பயன்படுத்திய கிளப்கள், தண்ணீர் சுத்திகரிப்பு  நிலையம், அலுவலகங்கள், தேவாலயம்  போன்ற பழைய கட்டிடங்கள் சிதலமடைந்து கிடக்கின்றன. கட்டிடங்களின் மேல் பிரமாண்டமாய் மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன. இன்றைய நிலையில் இந்த மரங்கள் தான் மிச்ச கட்டிடங்களை தாங்கி நிற்கின்றன.






இரண்டாம் உலகப் போரின் பொழுது கட்டப்பட்ட (ஜப்பான் காரர்களால்) பதுங்குக் குழிகள் கூட பல இடங்களில் இருக்கின்றன. அவற்றை

தற்பொழுதும் பராமரித்து சுற்றுலாத் தலங்களாக வைத்திருக்கிறார்கள். 

மான்களும்-மயில்களும் நிறைய இருக்கின்றன.

மௌன்ட் ஹாரியட்:

போர்ட் பிளேயரிலிருந்து தரைவழி சென்றால் 55 கி.மி, ஃபெர்ரி மூலம் சென்றால் 15 கி.மி தூரம். பெரும்பாலும் படகையே பயன்படுத்துகின்றனர். டூ வீலர், ஃபோர் வீலர் என அனைத்தையும்  படகினுள் ஏற்றிச் செல்கின்றனர்.

தெற்கு அந்தமானிலேயே உயராமன சிகரம் இங்குதான் இருக்கிறது.  உச்சிக்கு செல்லும் வழியில் காணும் காட்சிகள் யாவும் மிக ரம்மியனவை. உச்சிக்கு செல்ல ஜீப் வசதி இருக்கிறது.





நமது இருபது ரூபாய் நோட்டின் பின் பக்கம் பார்த்திருக்கிறீகள்    அல்லவா ?  பார்க்க வில்லையெனில் இப்பொழுது பாருங்கள். அங்கு அச்சடித்திருக்கும் இயற்கைக் காட்சி, மௌண்ட் ஹாரியட் போகும் வழியில்தான் இருக்கிறது. மேலே கண்ட இரு படங்களைப் பாருங்கள் தெரியும்.





                                         (டிரெக்கிங்)

மேலே போனால், அங்கிருந்து ‘காலாபானி’ என்றஇடத்திற்கு ‘டிரெக்கிங்’ செல்லலாம். இந்த இடத்திலிருந்து தான் பிரிட்டிஷ் காரர்கள்  நம் நாட்டு கைதிகளை (பெரும் பாலும் விடுதலைப் போராட்ட வீரர்களே) கீழே, கடலினுள்  தள்ளி விட்டு கொலை செய்வார்களாம்.

கொசுறு:

(1) தீவுகளுக்கிடையே, போக்கு வரத்திற்கென, பல தனியார் சொகுசு          படகுகளும், சில அரசாங்க படகுகளும் இயங்குகின்றன. தனியார் படகுகள் ரூ.800 வரை டிக்கட் வசூலிக்கின்றனர். அரசு படகு செம சீப். உதாரணத்திற்கு மௌன்ட் ஹாரியட் செல்லும் (16 கி.மி) அரசுப் படகிற்கு கட்டணம் வெறும் ஆறு ரூபாய் தான். ரூ.800 கொடுத்து, தனியார் படகில் செல்லும் பொழுது வாயை    மூடிக்கொண்டு சமர்த்தாக உட்கார்ந்திருக்கும் பயணிகள், ஆறு ரூபாய் அரசு படகு என்றதும், பார்த்த இடத்திலெல்லாம், இரண்டு தளங்களிலும், உட்காரும் சீட் உட்பட,  பான்பராக் எச்சிலைத்

துப்பிக் கொண்டு, குப்பைகளை எறிந்து கொண்டு, அழுக்குக் காடாக்கி வைத்திருக்கிறார்கள்.  படகினுள் டூவீலர், ப்ஹோர் வீலர் என அனைத்தையும் உடன் எடுத்துச் செல்லலாம் 


(2) ஸ்னார்கலிங் செய்யும் பொழுது எங்களது  வழிகாட்டி டைவர், ஒரு அப்ஜெக்ஷனையும் எனக்குச்  சொல்லவில்லை. திகட்ட திகட்ட அனுபவித்தோம்.

(3)    ஆனால் 'ஸ்கூபா டைவிங்கில்' என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். ‘அடேய் கிழவா.. உனக்கு B.P, முதுகு வலி, கழுத்து வலி என எல்லா உபத்ரவங்களையும் வைத்திருக்கிறாய். உன்னை கடலுக்கடியில் கொண்டுபோய், அங்கே நீ செத்து வைத்தால் யார் பொறுப்பு? பேசாமல் போட்டிலேயே கிட என்றனர். ஆனால் வழிகாட்டி டைவரை,
((இவர் தான் எங்களது டைவர்-வழிகாட்டி ) 

விக்ரமாதித்தன் போல விடாமல் அரித்துப் பிடுங்கி, கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியார் ‘டைவ்’ அடித்துப் பார்த்து விட்டேன்.
    
   3) ஸ்னார்கலிங்க் , ஸ்கூபா டைவிங் பயமாய் இருக்கிறதென்றால் 'சீ வாக்கிங் ' (கடலுக்கடியில் நடப்பது) என்று ஒரு விளயாட்டு  இருக்கிறது. படகிலிருந்து ஏணி வழியே கடலினுள் தண்ணீர் புகா தலைக்கவசத்துடன் இறங்கி (காற்று டியூப் மேலேயிருந்து) கடலினுள் நடைபயிலு வது . சற்று நேரம் மீன்களுடன் பழகி, அவற்றிற்கு உணவளித்துவிட்டு வரலாம்.  டிக்கட் ரூ. 2500 ஆகிறது.

                                                                           -அடுத்த  கடைசிப் பகுதியில் சந்திப்போம் 

Saturday, March 1, 2014

அந்தமானைப் பாருங்கள் அழகு (2)


ராஜிவ் காந்தி நீர் விளையாட்டரங்கு 
(Rajiv Ghandhi Water Sports Complex)

இங்குள்ள தீவுகள், கடற்கரைகள், மலைகள், சிகரங்கள் போன்ற  யாவற்றின் பெயர்களும், ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கோலோச்சிய பிரபுக்களின் அல்லது அவர்களது மனைவிமார் களின் பெயர்களிலேயே இருக்கின்றன. கார்பின்ஸ் கோவ் பீச் (Carbyn’s Cove Beach), Ross island, Mount Harriet, Havelock island, Neil Island போன்றவை உதாரணங்களே! பூர்வகுடிகள் வைத்திருந்த பெயர்கள் என்ன வாயிற்று என்று தெரியவில்லை. அது பற்றிய தகவல்களும் இல்லை. இன்னமும் ஆங்கிலேய பெயர்களையே ஏன் வைத்துக் கொண்டிருக்கிறோம் எனப் புரியவில்லை.






நமது  நாட்டில் பஸ்ஸ்டான்ட் முதல், விமான நிலையம் வரை சில குறிப்பிட்ட தலைவர்களின் பெயர்களையே  மாறி-மாறி வைத்துக் கொண்டிருப்பதும் விநோதம் தான் . வேறு எந்த நாட்டிலாவது இம்மாதிரி செய்கிறார்களா எனத் தெரியவில்லை. 

நாட்டில் வேறு தியாகிகளே இல்லையா என்ன? ஏதோ ஒருவகையில்,  நாம் தனி நபர்களை அடிவருடிக்கொண்டே இருக்கிறோமா என சந்தேகமாய் இருக்கிறது. அந்த வகையில் அந்தமானில் இருக்கும் நீர் விளையாட்ட ரங்கிற்கும் "ராஜிவ்காந்தி" பெயர் சூட்டியிருக்கின்றனர். (Rajiv Gandhi Water Sports Complex)

இந்த இடம், சாகச விளையாட்டு விரும்பிகளுக்கு உகந்த இடம் அல்ல! ஆனால் பாதுகாப்பான, பயமில்லாத பகுதி. குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்கும் அளவிற்கு கடலைத் தடுத்து ஒரு அரங்குபோல அமைத்து இருக்கிறார்கள். Paddle boats, row boats, glass bottom boats etc..  ஆகியவை விளையாடலாம் .

இங்கேயே கொஞ்சம் தள்ளிப்போனால் Jet-Ski, Para sailing கூட போகலாம். விளையாட்டுகளுக்கான டிக்கட்டுகள் யானை விலை சொல்கிறார்கள். 

இந்த காம்ப்ளெக்ஸ் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.  நடுவே ராஜிவின் சிலை!

நம்மவர்களின் கைவரிசையில், காம்ப்ளெக்ஸில் இருக்கும் கடலின் ஓரத்தில், தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட் கவர்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள், ஐஸ்கிரீம் கப்கள் என உள் நாட்டு டூரிஸ்ட்கள், தின்று தீர்த்துவிட்டு கடலில் எறிந்த குப்பைகள் மிதக்கின்றன. ராஜ மன்னார்குடி குளம்போல தூக்கி எறியப்பட்ட பொருட்கள், மலை போல மிதந்து கிடக்கின்றன. இத்தனைக்கும் பத்து அடிக்கு ஒரு குப்பைக் கூடை வைத்திருக்கிறார்கள்.

"அந்தமான் இது பிளாஸ்டிக் ஃப்ரீ இடம்; சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்" என உள்ளூர் அரசாங்கம் போர்டுகள் அமைத்து கதறுகிறார்கள். ம்ம்ம்ம்ம்ம்... நாம் தான், சொன்னாலும் தெரியாது; சுயமாகவும் தெரியாது என்கிற இனமாயிற்றே!  நமது ஜனங்களின் இந்த நடத்தை, பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது. அதுவும் வெளி நாட்டினர் அதிகம் வரும் இடத்தில்! அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று தோன்றவே தோன்றாது போலிருக்கிறது. வெளி நாட்டு டூரிஸ்டு தம்பதியர் ஒருவர், ஆஸ்திரேலியா என நினைக்கிறேன்; வேலை மெனக்கெட்டு  நாம் எறிந்துவைத்த பிளாஸ்டிக் கப்களை சேகரித்து டஸ்ட்பின்னில் போட்டுக் கொண்டிருந்தனர். ம்ம்ம்ம்ம்ம்..

கார்பின்ஸ் கோவ் பீச் (Carbyn’s Cove Beach)

போர்ட் பிளேயரிலிருந்து சாலை வழியே செல்லுக் கூடிய இந்த பீச்சிற்கு செல்லும் வழியே உன்னதாமாய் இருக்கிறது. இரண்டு பக்கமும் அடர்த்தியாக பாக்கு மரங்கள. குளுமையான சூழல். உண்மையிலேயே கண்களுக்கு விருந்து தான்.






எல்லா பீச்களைப் போல இதுவும் வளைந்து-நெளிந்து அமைந்த கடற்கரையைக் கொண்டது.. வெள்ளை வெளேர் என பரந்து விரிந்து (lime stone and)  கிடக்கும் மணற் பரப்ப்பு. மனல் முடிந்ததும் உயர-உயரமான தென்னை மரங்கள், நெருக்கி யடித்து நின்று கொண்டிருக்கின்றன. நடுவே படாக் மரங்கள்.  நிழல்களில், மரத்திலான சாய்வு நாற்காலிகள் அமைத்திருக்கின்றனர் . அதில் படுத்துக் கொண்டு நெடுதுயர்ந்திருக்கும் தென்னைகளைப் பார்த்துக்கொண்டு, எதிரே அழகே வடிவாய் சரிந்து கிடக்கும் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் போல இருக்கிறது. இயற்கையோடு ஒன்றிப்போக உகந்த இடம். வண்ணமாய் இங்கு ஜொலிக்கும் கடல் வேறு எங்கும் காண இயலாத ஒன்று. கரு நீலம், ராமர் நீலம், வெளிர் நீலம் என நேரத்திற்கொன்றாய் விரிகிறது.

சிடியாதபு பீச் (Chidiya Tapu beach)









சிடியாதபு பீச், போர்ட் பிளேயரிலிருந்து 20 கி.மி இருக்கும்.  சாலை வழியே செல்லலாம். இயற்கை வஞ்சனை இல்லாமல் அழகை வாரி இறைத்திருக்கிறாள். வளைந்து நெளிந்து செல்லும் கடற்கரை. கடற்கரை ஓரத்தில் அடர்த்தியாக, நெடு நெடுவென, புரமாண்டமாய் வளர்ந்திருக்கும் படாக் மரக் கூட்டங்கள்.
நல்ல நிழல்.  வண்ணமயமான, நாம் இதுவரை பார்த்தே இராத, வினோதமான பறவைக் கூட்டங்கள், அவற்றின் கீச்சு-கீச்சுக்கள் சொக்க வைக்கின்றன.


அலைகள் அற்ற ஷேலோ வாட்டர். தெள்ளத்தெளிவான நீர். புதுப்பெண்ணின் கைவளையோசை போல, மென்மையாக, சினுங்குவது போல, கொஞ்சுகின்றன சிற்றலைகள்.

ஆங்காங்கே, இயற்கையின் சீற்றத்தினால் கடற்கைரையில்-கடலைத் தொட்டுக்கொண்டு, வீழ்ந்து கிடக்கும் பட்டுப்போன மரங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள். அதுவே பேரழகாக  இருக்கிறது. வெகு தூரத்திற்கு முழங்காலளவே இருக்கும் அமைதியான, அழகான, ஆழமற்ற கடல். குடும்பத்துடன் குளிப்பதற்கும், நீந்துவதற்கும் ஏற்ற இடம். பேரானந்தமான இடம். கொள்ளை அழகு. தமிழ் சொற்களின் மேல் எனக்கு ஆதிக்கம் இல்லாததினால் வருணிக்க வார்த்தைகள் சிக்கவில்லை. பார்க்க வேண்டிய இடம்.

ஆந்ரோபாலிஜிகல் மியூஸியம் 
(Anthropological Museum):

பூர்வ குடிகளின் (Jarwas, Sentinelese, Great Andamanese and the Onges, Mongoloid ribes)  வாழ்க்கை முறைகள், அவர்களது ஆயுதங்கள், கைவினைப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள், அவர்களது குடில்கள், உணவுப் பொருட்கள், படகுகள்

போன்றவற்றை, மூன்று மாடிகளில் காட்சிப் படுத்துயுள்ளனர். ஃபென்டாஸ்டிக்.  பூர்வ குடிகளின் வரலாறு அறிய விரும்புபவர்களுக்கு சுவாரஸ்யமான இடம்.  நுழைவுக் கட்டணம் உண்டு. வேலை நேரம் காலை எட்டரைமுதல் மாலை நான்கரை வரை. வியாழன் விடுமுறை.

சமுத்ரிகா மியூஸியம்.




கடல் சார் உயிரிணங்கள், சிப்பிகள், கோரல்கள், மீன் வகைகள் போன்ற வற்றை வைத்திருக்கிறார்கள். ஒரு அக்கோரியமும் உள்ளது. கோரல் வகைகள் பிரமிப்பூட்டுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கலக்ஷென்கள். விற்பனைக்கு என தனியாக ஒரு ஸ்டால் இருக்கிறது.  சிப்பி, சங்கு, மற்றும் மரத்தினாலான  கைவினைப்பொருட்களை வைத்திருக்கிறார்கள்.  பார்க்க வேண்டிய இடம். நுழைவுக் கட்டணம் உண்டு.  காலை ஒன்பது முதல் மாலை நாலே முக்கால் வரை வேலை நேரம்.

எல்லா மியுஸியத்திற்கும் காமிரா கட்டணம் தனி.
கொசுறு:


எழில் கொஞ்சும் சிடியா தபு கடற்கரையில்,   குழந்தைகள், பெண்டிர் உட்பட பலர் மெய்மறந்து, குதூகலத்துடன் குளித்துக் கொண்டிருந்தனர்.   ஒரு புன்னியவான் வந்தார். எல்லோரும் மேலே வாருங்கள்  ஓடுங்கள்.. ஓடுங்கள், அதோ பாருங்கள், அங்கே  ஒரு முதலை, கடலில்  வந்து கொண்டிருக்கிறது என அலறினார். 
( “அந்தமான் முழுவதும்  உப்பு நீர் முதலைகள் தென்படு கின்றன. எனவே  எச்சரிக்கையாக இருங்கள்”  என அறிவிப்புபலகை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள்.) 

உடனே, அலறிப் புடைத்து எழுந்து ஓடினோம். நான் கையில் வைத்திருந்த சிறிய பனாகுலரை பறித்து, அதன் மூலம் பார்த்தனர்.  ஒரு ஐந்த நீளத்திற்கு கருமையான நிறத்தில் (ஆன்டி லைட்டாதலால் – அனைத்தும் கருமையாகத்தான் தெரியும்) ஒன்று நீந்திக் கொண்டிருப்பது போல இருந்ததாம். அனைவரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது. அனைவரும் பீதியுடன் கடற்கரை ஓரத்திற்கு விரைந்தனர்.

மீண்டும் அந்த புன்னியவான் அலறினார். “அதோ பாருங்கள். இன்னொரு முதலை. அதைவிட பெரிதாக... “ என்றார். தண்ணீரில் மூழ்கி மூச்சு விடும்பொழுது ஏற்படும் பப்பிள்கள் கூட தெரிகின்றன என்றார். இம்முறை நானே பைனாகுலரில் பார்த்தேன். முதலை போல தோன்றவில்லை. ஆனால் ‘அது எது’  என உறுதியாகச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. முதலைகளின் வேட்டை குணம் என்ன வென்று தெரியுமாதலால், அது முதலை அல்ல என அறுதியிட்டு சொல்லி, ரிஸ்க் எடுக்க விழையாமல் வெளியேறினோம். இன்னும் கொஞ்ச நேரம் இந்த பீச்சில் விளையாடி இருக்கலாம். முதலை எங்களைத் துரத்திவிட்டது.
எங்களது ஆனந்தமும் அற்பாயுளில் முடிந்த்து. சூரிய அஸ்தமனத்தை கரையிலிருந்து பார்த்துவிட்டு திரும்பினோம் 

உன்மையில் நடந்தது என்ன வென்றால், அது ஒரு ஷேலோ வாட்டர் பீச். ஆதலால், மாலை நேரங்களில் கடல் உள்வாங்கும் தன்மையுடையது. 

மாலை நேரம் ஆக, ஆக, கடல் உள் வாங்க ஆரம்பித்திருக்கிறது. இதனால், ஆழமும் குறையு மல்லவா?   கடல் உள்வாங்க-உள்வாங்க நீரில் மறைந்திருந்த பாறைகள் யாவும் ஒவ்வொன்றாய் வெளியே தலை நீட்ட ஆரம்பித்திருக்கின்றன. அவ்வளவே!

பாறைகளை முதலைகள் என்றென்னி ‘கரடி’ விட்டிருக்கின்றனர். வதந்திகளை விரும்பி வரவேற்கும் நாம், உண்மைகளை எவராவது சொன்னால், நம்ப மறுக்கிறோம். அது மாஸ் சைக்காலஜி!

அடுத்த பகுதியில் (பகுதி மூன்றில்) சந்திப்போம்