Saturday, September 12, 2015

நான் எதைச் சாப்பிட வேண்டும்?

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், இருவேளை உணவை உறுதிசெய்ய இயலாத நிலைதான் இன்று இருக்கிறது. தொலைதூரங்களிலும், மக்கிப்போன குடிசைகளிலும், தெருவோரங்களிலும் வசிப்போருக்கு அடுத்தவேளை உணவைப் பற்றித்தான் கவலை. ஆனால் அரசாங்கங்களுக்கு, வேறு ஒரு கவலை. யார் யார், எந்தெந்த ‘கறி’ சாப்பிடலாம் அல்லது சாப்பிடக்கூடாது என நிர்ணயிக்கும் அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கவலைப்படுகிறார்கள்.

அடுத்த மனிதரைக் கொன்று, அல்லது திருடி உண்ணாதவரை, ஒரு தனிமனிதன் என்ன சாப்பிட வேண்டும் என்பது அடிப்படை உரிமையா இல்லையா?

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ‘பதார்த்தங்களை’ தடுப்பதற்கு அரசு உரிமை பெற்றவையே. எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதற்காக, போதை மருந்துகளை உண்ணவோ அதை விற்கவோ உரியையில்லை.. சரிதான்.

ஆனால் இந்தந்த நாட்களில் இதை இதை சாப்பிடக்கூடாது என்பதைச் சொல்ல அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டா?

ஜெயின் சமூகத்தினரின் “ பர்யுஷான் “  பண்டிகையை ஒட்டி, மாட்டிறைச்சி விற்க தடைவிதித்திருக்கிறது மகாராஷ்ட்ராவும் ராஜஸ்தானும். ராஜஸ்தான் இன்னும் ஒருபடி மேலே போய், அந்த பன்டிகை தினங்கங்களில் மீனும் விற்கக் கூடாது என சட்டம் போட்டுவிட்டனர். இந்த என்ன மாதிரியான கேலிக்கூத்து? கேட்டால், இந்தத் தடை  அக்பர் காலத்திலிருந்தே இருக்கிறதாம்!

இறைச்சிக் கடைக்காரர்கள், ‘இன்று நீ கறி சாப்பிட்டே ஆகனும்’ என ஜெயின் சமூகத்தினரின் வாயில் ஊட்டி விடுகிறார்களா என்ன? அவரவர்கள் அவரவர்களின் மத-குடும்ப நம்பிக்கையை ஒட்டி எதையாவது சாப்பிடட்டும் அல்லது சாப்பிடாமல் போகட்டும்.  அது அவர்களது விருப்பம். அதில் மூக்கை நுழைக்க எவருக்கும் அதிகாரமில்லை.  ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை என்பதற்காக ஊரில் எவருமே கறி சாப்பிடக் கூடாது என சட்டம் போடுவது என்ன நியாயம்?

நான், கறி சாப்பிடுவதை அனுமதிக்காத ‘புரிஷ்யான்’ பண்டிகையை கொண்டாட ஜெயின் சமூகத்தவர்க்கு தடை விதிக்க வேண்டும் என கோரினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம், அவர்களுக்காக மற்றவர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது என்பதும்.

இன்று ஏகாதசி விரதம், அமாசை விரதம் எனவே எங்கும் கறி விற்கக் கூடாது என கிளம்பலாமா? புரட்டாசி மாதங்களிலும், ஐயப்பன் விரதம் இருக்கும் நாட்களிலும் மாட்டுக் கறி விற்கக் கூடாது என ஆரம்பிக்கலாமா?

இது என்ன விபரீதம்?

இந்திய அரசியல் கட்சிகள் யாவும், ஓட்டுகளுக்காக ‘ஜிம்மிக்’ அரசியல் செய்கின்றனவே தவிர, கொள்கை-நியாயம் எதுவும் கிடையாது. சிவசேனா, கறி விற்பனைத் தடையை எதிர்த்து, கறிக் கடைபோடுகிறார்களாம்! பி.ஜே.பி க்கு ஏதேனும் ஒரு நெருக்கடி-சங்கடம்-நெருடல் உண்டாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறேன்ன காரணம் இருக்க முடியும்?

இவ்வருட ஆரம்பத்தில், மகாராஷ்டிர அரசு, பசுக்களை கொல்லக் கூடாது, அதன் கறியை விற்கக்கூடாது, வைத்திருக்கக் கூடாது  சட்டம் இயற்றியது. பால் வற்றிய மிருங்களை வேறு என்னதான் செய்வது? யார் பராமரிப்பது? அதற்காகும் செலவை யார் ஏற்றுக் கொள்வது? ஈகலாஜிகல் பேலன்ஸ் என்ன ஆவது? அவற்றை முக்கிய உணவாகக் கொண்டிருப்போர் என்ன செய்வார்கள்? இந்த தடை அவர்களது உரிமையை பரிப்பதாகாதா? இறைவனின் படைப்பில் படைப்பில் சகல ஜீவன்களுமே சமம்தானே? சிலஉயிரினங்கள் மட்டும் எப்படி ‘புனிதமாகி’ விடும்? மற்றவை எப்படி ஹீனமாகிவிடும்? புராணங்களில், மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதாக வருகிறதே?

சரி... அவரவர்கள்  நம்பிக்கையின்படி எதைவேண்டுமானாலும் புனிதமாக வைத்துக் கொள்ளட்டும். அது கழுதையோ அல்லது கரப்பான் பூச்சியோ, அவற்றை அவர்கள் மட்டும் ஹிம்சை செய்யாமலிருந்தால் போதாதா?

எத்தனையோ நாட்டில் ‘பாம்புகளும்’, ‘நாய்களும்’, ‘பன்றிகளும்’ முக்கிய உணவு! அந்த நாட்டினருடன் ‘வணிக உறவு இல்லை’ எனற நிலையெடுக் கலாமா?

பண்டிகை நாட்களில் அமலுக்கு வரும் இந்த மாதிரியான ‘டோக்கன்’ தடைகள் நகைப்புக்குரியன. (தேர்தல் நாள் அன்று சாராய விற்பனை தடை.. புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அக்டோபர் இரண்டு மட்டும் ‘சாராயம்’ விற்கக் கூடாது. மற்ற நாட்களில் ‘மட்டையாகி’ ரோடில் கிடக்கலாம்? இது என்ன வகையான லாஜிக்?)

மத சார்பற்ற நாடு என்றால், வீட்டின் பூஜையறையில் அல்லது வழிபாட்டுத் தலங்களில் அவரவர்களுக்கு விருப்பமானவர்களை வழிபடும் உரிமையை உறுதி செய்வதும், அதற்கு குந்தகம் விளைவிபோரை தண்டிப்பதும் தான். வீட்டைத் தாண்டி தெருவிற்குள் வந்துவிட்டால் இந்திய அரசியல் சட்டத்தின் முன் அனைவரும் சமம். எவருக்கும் மதத்தின் பேரால் சலுகையோ அல்லது சலுகை மறுப்போ இருக்கக் கூடாது. அவ்வளவே!

இன்று நான் எதைச் சாப்பிடக் கூடாது என சட்டம் போடுவதெல்லாம், கடைந்தெடுத்த பிற்போக்குத் தனம்.



Sunday, September 6, 2015

மோடியும் – தமிழும்.


மோடியைப் பிடிக்காது. எனவே அவர் என்ன சொன்னாலும் எதிர்த்தாக வேண்டும். எது செய்தாலும் ரகளை செய்யனும் என்பது நம்மைப் பீடித்துள்ள சின்ட்ரோம்.

தனது கடுமையான நிகழ்ச்சி நிரலிலும், தலை நகரிலிருந்து ஒரு பிரதமர், ஒரு புத்திசாலி தமிழ்ப் பெண்ணிடம் உரையாடுகிறார், என்பதை மறந்துவிட்டு, அந்த பெண் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு ஏன் இந்தியில் பதில் சொன்னார் என ஆரம்பித்துவிட்டனர்.

அவர் ஒரு தமிழ் மாணவியிடம்தான் உரையாடினார் என்பதை சௌகரியமாக மறைத்துவிடுவர். அந்தப் பெண் என்ன பேசினார் என்பதைப் பற்றி ஒரு ரிப்போர்டிங் இல்லை. அதற்கு பிரதமர் என்ன பதில் சொன்னார் என்பதைப் பற்றியும் அக்கறையில்லை. அவ்வளவுதான் நாம்.

அந்தப் பெண் தமிழிலா பேசினார்? இல்லையே? ஒரு அயல்மொழியில் தானே? அதற்கு பிரதமர் ஸ்பேனிஷிலோ, ஃபிரஞ்சிலோ பதலிளித் திருந்தால் கோபப்படலாம். அட... குஜராத்தியில் பதில் சொல்லியிருந்தால் கூட ஆட்சேபிக்கலாம். இந்தியில்தானே சொன்னார். அந்தப் பெண்ணிற்கு இந்தி தெரியாது என யாராவது சொன்னார்களா?

சரி.. அவர் பேசியது நாட்டிற்கே புரியனும் என்று ஆரம்பித்தால், எந்த மொழியில் பேசினால் அதிகம் பேருக்கு புரியும்? பரவலாகப் பேசப்படும் மொழி எது? அதில்தானே பதில் சொன்னார்?

அந்த பெண் ஏன் தமிழில் பேசவில்லை என யாரும் ஆட்சேபிக்க வில்லை? அப்படி கேட்டிருந்தால், தமிழ்நாட்டில் அனைவருக்கும் புரிந்திருக்குமே? மோடி கூட இதை வரவேற்றிருக்கக் கூடும். ஒரு இன்டர்ப்ரட்டர் போட்டு, மோடி பேசியதும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். இந்தியில் பேசுவது ‘திணிப்பு’ என்றால் அன்னிய மொழியில் பேசுவது எந்த வகையில் சேர்ப்பது?

வெளினாட்டு ஆங்கிலம் கற்றாலும் கற்றுக்கொள்வொமே தவிர இந்திய மொழிகள் வேண்டாம் என்பதுதான் நிலைபாடு என்றால், அது தமிழுக்கு நல்லதல்ல. இந்த நிலைபாட்டினால்தான், தமிழக பள்ளிகளில் தமிழே இல்லாமல் போய்விட்டது.

இந்தத் தலைமுறையினருக்கு தமிழில் தொடர்ச்கியாக பேசவே வரவில்லை. அவர்களது வொகபலரி ஐம்பது வார்த்தைகளுக்குள் அடக்கம். அதுவும் சென்னைத் தமிழ் என்றால், அந்த ஐம்பது வார்த்தைகளுமே படுகொச்சையாக இருக்கும். கனவான்களே, கொஞ்சம் பள்ளிகள்-கல்லூரிகள் பக்கம் போய்ப் பாருங்கள். அவர்கள் வாயில் தமிழ் வருகிறதா என்று கவணியுங்கள்.

அட.. புத்திசாலிகளே! தமிழுக்கு ஆபத்து இந்தியினால் அல்ல; ஆங்கிலத்தால்தான். இதை எந்த காலத்தில் புரிந்து கொள்வீர்களோ தெரியவில்லை! ஒருவேளை தமிழ் வெறும் பேச்சு மொழியான பின்னால் புத்தி வருகிறதோ என்னவோ?

இத்தாலியில் சோனியா பேசினால் ஒத்துக் கொள்வார்கள். இந்தியை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு, பாராளுமன்றத்தில் பேசும் நபர்களை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு பிரதமர் இந்திய மொழியில் பேசினால் கொலைபாதகச் செயல்.. இல்லையா?

இந்திய வரலாற்றில் எந்தப் பிரதமர், ஒரு 15 வயது சிறுமியிடம், அவரது புத்திசாலித் தனத்திற்காகவே, கூப்பிட்டு பேசியிருக்கிறார்? இதையே காங்கிரஸ் செய்திருந்தால், ஒரு தமிழ்ப்பெண்ணிடம் ராகுலோ-சோனியாவோ பேசிவிட்டார் என தம்பட்டம் போட்டிருக்க மாட்டார்கள்?


நம்மைப் போல ஆங்கில அடிமைகள் உலகில் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள். 

Saturday, September 5, 2015

'நல்லவர்களே!"

நல்லவர்களும், திறமையானவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்” – ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு மோடி அவர்கள் அறைகூவல். 

இந்திரா காந்தி காலத்திலிருந்து, இந்த வசனங்களைக் கேட்டு அலுத்துவிட்டது. சுதந்திரப் போராட்ட காலத்தில்,  “நல்லவர்களே, போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்” எனத் தலைவர்கள் கேட்டுக் கொண்டா அரசியலுக்கு வந்தனர்? அது தன்னிச்சையாக  நடந்தது!

பி.ஜே.பி-காங்கிரஸ் உட்பட, அரசியல் கட்சிகளில், நல்லவர்களும் திறமை யானவர்களும் இல்லவே இல்லையா? அவர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி சீட் கொடுத்தீர்களா? ஒரு சிலரைத் தவிர்த்து, கிரிமினல் பிண்ணனி உள்ளவர்களும், குண்டர்களும், தாதாக்களும்தானே ‘சீட்’ பெறுகின்றனர்?
இந்த பாராளுமன்றம் உட்பட, எத்தனை பேர் கிரிமினல் பின்ன்னி கொண்டவர்கள் என்பது ரகசியமா என்ன? எடியூரப்பாக்கள் தானே முதலமைச்சராக முடிந்தது?  நீங்கள் குறிப்பிடும் ‘நல்ல நபர்கள்’ கையில் அதிகாரம் இருந்திருந்தால், இன்று ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

அரசாங்கத்தை விடுங்கள்...அரசியல் கட்சிகள், கட்சித் தலைமைப் பதவிகளில், எளிமையானவரை-நேர்மையாளவர்களை அமர்த்தி யிருக்கின்றனவா? பணபலம்-அதிகார பலம்-தாதாக்கள்-குண்டர்கள் இவர்கள்தானே வரமுடிந்திருக்கிறது? இல்லையென்றால் வாரிசு மயம்!

நல்லவர்கள், அதிகாரத்திற்கு வந்துவிடாமல் பார்த்துக் கொண்டு, பிறகு அரசியலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுப்பது என்ன நாடகம்? கொடி ஒட்டுவதற்கா?

நாட்டில் உலவும்  நக்ஸல் போன்ற, பல தீவீர வாதக் குழுக்கள் (நம்ம ஊர் ஈய வாதக் குழுக்கள் அல்ல), அரசியல் கட்சிகளின் மேல் நம்பிக்கை இழந்து, வெறுப்படைந்து, சாதாரண மக்களுக்கு ஏதேனும் நல்லது உடனடியாக செய்யவேண்டும் என்ற ஆக்ரோஷத்தினால் உண்டான வைதான். இதை எங்களைவிட  நீங்கள் நன்றாகப் புரிந்து வைத்திருபீர்கள். ஆனாலும் அவர்களை ‘சட்ட ஒழுங்கு’ பிரச்சினை செய்பவர்களைப் போலத்தானே அணுகுகிறீர்கள்?

அரசியல் கட்சிகளை விடுங்கள்... குறைந்த பட்சம், உங்களது மொழியில் ‘நல்ல-திறமையான’ அதிகாரிகளை எப்படி நடத்துகிறீர்கள்? அரசு இயந்திரத்தை உங்களது கொள்ளைக்கு பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற நுணுக்கம் உங்களுக்கு கைவந்த கலையாயிற்றே? உங்களது கொள்ளைக்கு உடன்பட மறுத்தால், பழிவாங்குவீர்கள்! ட்ரான்ஸ்வர் செய்வீர்கள்! டம்மி பீஸாக்குவீர்கள்!  எத்தனை எத்தனை உதாரணங்கள்  இருக்கின்றன!!  (நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேய அரசாங்கத்தில் ‘யேல்’ என்ற அதிகாரி ஒருவர் இருந்தார். உங்களது யூகம் சரி. அண்ணாவை கௌரவப் படுத்திய அதே பலகலைக் கழகத்திற்கு உதவியவர் தான். அவர்மேல் வருமாணத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த்தாக வழக்கு தொடர்ந்து, அரஸ்டும் செய்த்து பிரிட்டிஷ் அரசாங்கம்)

நிருபன் சக்ரவர்த்தியையும் காமராஜையும் இன்றும் எங்களால் மறக்க முடியவிலை என்றால், அவர்களுக்கு நீங்கள் வைக்கும் ‘கட்டவுட்’ களால் அல்ல..  நேர்மையாக-திறமையாக-எளிமையாக வாழ்ந்து காண்பித்ததால்.

ஆசிரியர் தினம் போல, ஏதோ ஒரு தினம், அனுதினமும் வந்துகொண்டே தான் இருக்கிறது. நீங்களும் அந்த தினத்திற்கேற்றாற் போல, செக்ரடரியோ அல்லது நீங்களாகவோ எழுதிவைத்த ஒரு அறிக்கையை படித்துவிட்டுப் போவீர்கள். பத்திரிகைகளிலும் அவை பக்கங்களை நிரப்பிக் கொள்ளும்!


அட..போங்க, சலித்து விட்டது!! இந்தியாவில் மாறுதல் என்று வருமோ தெரியவில்லை!    

Thursday, September 3, 2015

மொய்

“Things aren’t often what they appear to be at first blush. But embarrassment is.” 


மாதம் ஒரு நூறு கிராமுக்கு குறையாமல், திருமண அழைப்பிதழ் வந்து விடுகிறது. தினுசு தினுசாக பத்திரிகை டிசைன் வருவது போல, ‘பத்திரிகை வைப்பதும்’ பலவிதங்களில் ‘நவீனமாகி’ விட்டது. பத்திரிகையை ஸ்கேன் செய்து எல்லோருக்கும் மெயில் அனுப்பி, கூடவே ஃபோனில் கூப்பிட்டு சொல்வது வழக்கமாகிவிட்டது.   ‘என்னங்கானும், நீர் கல்யாணத்துக்கு வரவேயில்லை’ என்ற ராமர் அம்புக்கு, ‘அப்படியா, பத்திரிகை வரவேயில்லையே?’ என்று போஸ்டல் மேல் பழியைப் போடமுடியாது. இந்த வழக்கம் ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. பேப்பர் செலவு மீதி. மரங்கள் இல்லாவிடினும் சில கிளை களாவது தப்பும். தாமதம் இல்லை. நேரம் மிச்சம்.

சில ‘ஆபீஸர்ஸ்’ இருக்கிறார்கள். “நீங்க என் ஆபீஸுக்கு வந்து, என் மகன்/ள் கல்யாணப் பத்திரிகையை வாங்கிக் கொள்கிறீர்களா?” என்பர். அதெற்கென்ன...ஹி..ஹி வந்தே வாங்கிக்கொள்கிறேன் என வழிவோர் சிலர் இருந்தாலும், என் நண்பர் ஒருவர் சட்டென், ‘மொய்க் கவர் வீட்ல வந்து வாங்கிக்கிறீங்களா?’ எனக் கேட்டுவிட்டதாகச் சொன்னார்.  அது உண்மையோ இல்லையோ, மிகச் சரியான பதில் அதுதான்.

அலுவலகங்களில் பார்க்கலாம். சம்பந்தமில்லாத ஒருவர், ‘இன்னாருக்கு கல்யாணம்.. இந்தாங்க பத்திரிகை..’ என தகவல் சொல்லிக் கொண்டே, காலை தினசரி பேப்பர் மாதிரி போட்டுக் கொண்டே செல்வார்.

மௌனகுரு மாதிரி, வாயைத்திறக்காமல், தன் வீட்டு விழாவிற்கான பத்திரிகையை சுண்டல் மாதிரி கொடுத்துவிட்டுச் செல்வோரும் உண்டு.

“நோட்டீஸ் போர்டில்” பத்திரிகையை ஒட்டி ‘அனைவரையும்’ அழைப் போரும் உண்டு.

நமக்கு நல்ல அறிமுகமான நண்பர் வருவார். அவருடனே,  கை  நிறைய பத்திரிகையோடு இருக்கும் மற்றொருவரையும் அழைத்து வருவார். அவரை எந்த ஜென்மத்திலும் பார்த்திருக்க மாட்டோம். பார்க்கப் போகும் வாய்ப்பும் இருக்காது. ஆனால் நமது நண்பர், ‘சார்... என்னோடு ஃப்ரண்டு, அவரது வீட்டுக் கல்யாணம்.. பத்திரிகை வைக்கிறார்..’ என்பார். அந்த திடீர் நட்பும்,  நம்மிடமே, நமது பேரைக் கேட்டு அழைப்பிதழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதி பத்திரிகை நீட்டுவார்.

இதுதான் சங்கடம். இந்த திருமணத்திற்கு போவதா வேண்டாமா? ஒரிஜினல் நண்பருக்கு என்றால் அவசியம் போகணும்.. அவர் மூலம் வரும் திடீர் நட்புக்கு என்ன செய்வது?

இப்படி ஒரு கல்யாணம் நேர்ந்துவிட்டது. 

வேலைமெனக்கெட்டு, வழியில் பார்த்து அந்த கல்யாணத்திற்கு வந்துவிடனும் என்ற வேண்டுகோள் வேறே!  நாள் நெருங்கட்டும் பார்க்கலாம் என தீர்மாணிப்பதை ஒத்திவைக்கும் போது, வெளியூரிலிருக்கும் வேறு ஒரு நண்பர் கூப்பிடுகிறார்.

‘சார்... அந்த திருமணத்திற்கு போகிறீர்களா?’

‘போகக்கூடும்..ஏன்..?’

‘நான் வெளியூரில் இருப்பதால். வர இயலாது..!’

‘ஒஹோ.. உங்களுக்கு தெரிந்தவரா?’

‘இல்லை... பத்திரிகை வைத்துவிட்டார். நீங்கள் போகும் பொழுது எனக்கும் சேர்த்து மொய் வைத்துவிடுகிறீர்களா?’

‘அதுக்கென்ன வைத்துட்டா போகுது...?’

இக்கட்டான சூழல்களில் வலுவே சென்று மாட்டிக் கொள்வது எமது குல வழக்கம். சரி... போய்த்தான் வந்துவிடலாமே, என முடிவெடுத்து விட்டேன். மண்டப வாசலில் இயல்பாக கண்கள், எனது நண்பரைத் தேட.. அவர் தென்படவே இல்லை...’

மண்டபத்தில், ஏகக் கூட்டம். பெரிய கை போலிருக்கிறது. தெரிந்த முகம் யாதொன்றும் இல்லை. ஏற்கனவே சங்கோஜி…


யாரோ ஒருவர் சாப்பிட வாருங்கள் என அழைக்க, சங்கடமாக சாப்பாட்டு ஹாலில்.

அப்புறம், மொய்க்கவர் கொடுக்கணுமே?

சம்ரதாயங்கள் முடியாததால், பலரும் மொய்க் கவர்களை மணமகள் தந்தையிடத்திலோ அல்லது மணமகன் தந்தையிடத்திலோ கொடுத்துக் கொண்டிருந்தனர்.

வந்தது சந்தேகம்.  யாரிடம் கொடுப்பது? யார் பத்திரிகை வைத்தது? பையன் அப்பாவா? பெண்ணின் அப்பாவா?

மறந்துவிட்டதே...வெளியில் வைத்திருக்கும் போர்டையும் கவணிக்க வில்லையே?

பையன் பக்கம்தான் பத்திரிக்கை கொடுத்ததாக நினைவு...
அப்படி என்றால், இதில் பையனின் அப்பா யார்? பெண்ணின் அப்பா யார்?

இருவருக்கும் என்னைத் தெரியாது, என்னையும் இருவருக்கும் தெரியாது..

எனக்கு பின்னே ஒரு இருநூறு பேர், கையில் மொய்க்கவருடன் வரிசையில்..

பின்னே இருப்பவரின் காதைக் கடித்தேன். ‘இதில் பையனின் அப்பா யார்?’ அவர் விந்தையாகப் பார்த்துவிட்டு, ஒரு தம்பதியினரைக் காட்டினார். அவரிடம் கவர்களைத் திணித்துவிட்டு..

விடு ஜூட்....


Saturday, August 29, 2015

கண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே

ஏதோதோ பண்டிகைகள் வந்து போகின்றன.  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தினுசான நைவேத்தியங்கள் இறைவனுக்குச் செய்கிறார்கள். சிலவற்றிற்கு கொழுக்கட்டை, சிலவற்றிற்கு போளி, சிலவற்றிற்கு பக்ஷனங்கள்.... இப்படி. இதன் காரணகாரியம் புரியாவிடினும், பண்டிகைகள் தரும் உற்சாகம், சந்தோஷம் அலாதி.

என் மனைவிக்கு, பண்டிகைக்கு ஏற்றவாறு நைவேத்தியங்கள் செய்வதில் அலாதி ப்ரியம். எடுபிடி வேலைகளுக்கு தோதாக நான் இருந்ததால் , சில இம்சைகள் இருந்தாலும், அவருக்கு சௌகரியமாகவே இருந்தது.  சொப்பு செய்வது, மாவு பிசைவது, பிழிவது இப்படி.

அவருக்கு இத்தகைய விசேட தினங்களில் ‘வைத்துக் கொடுப்பது’ மிகவும் விருப்பமான செயல். ‘வைத்துக் கொடுப்பது’ என்றால் நன்பர்கள், உறவினர் களுக்கு சேலை, ரவிக்கைத் துணி கொடுப்பது. 

இவை, அனேகமாக எல்லா பெண்களும் செய்யக் கூடியது தான்.  ஆனால் என் மனைவிக்கு, வேறு ஒன்றில் மிக விருப்பம்.  தனக்கு ஆட்டோ ஓட்டுபவருக்கு பெண்ட்-சட்டை, ஆபீஸில் தரை துடைப்பவர்களுக்கு புடவை, ஏதாவது சிறு பெண்களுக்கு பாவாடை-சுடிதார், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு புடவைகள், என வழங்க வேண்டும். அதுவும் யாருக்கும் தெரியாமல், சத்தமின்றி. வெளியூர் சென்றால் கூட அவரது சினேகிதிகளுக்கு வாங்கி விட்டுத்தான், பிறகு தான் வீட்டிற்கு..

அந்த உத்தமி மறைந்து, இதோ இருபது மாதங்களாகிவிட்டன. எந்த பண்டிகை வருகிறது, போகிறது என்ற பிரக்ஞை இல்லாமல் இருக்கிறேன். இன்று அவிட்டமாம். நேற்று வரலக்ஷ்மி விரதமாம். ஆரவாரமாக அவர் கொண்டாடும் விசேடம். வெகுனாள் முன்பாகவே, புடவைகளும்-ரவிக்கைத் துணிகளுமாய வாங்கி அடுக்கிக் கொள்வார். ‘வைத்துக் கொடுக்க’. 

அவர் செய்யும் அம்மனின் அலங்காரம் கொள்ளை கொள்ளும். அன்பானவர்கள் எது செய்தாலும் அழகு மிளிர்வது இயல்புதானே? அவரின் நினைவு நேற்று மேலிடவே,  இரவு தூக்கம் பிடிக்கவே இல்லை. யூடியூபில், அவருக்கு பிடித்தமான பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘கர்ணன்’ திரைப் படத்தில் ‘கண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே’ என்று ஒரு பாடல். சொக்க வைக்கும் இசை. அப்படிப்பட்ட பாடல்கள் இனி கிடைக்குமா என ஏங்க வைக்கும். அப்பாடலை என் துணைவியார் இனிமையாகப் பாடுவார். தூக்கம் கொள்வதற்கு முன்னால், ஒரு அரை மணி நேரம் அவருக்கு இசை நேரம். இப்பாடல் ‘மத்யமாவதியா’ வேறு ஒரு ஒன்றா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.  

அதை விசாரித்துக் கொள்வது இப்பொழுது பெரியவிஷயமில்லை. ஆனால், அந்த சந்தேகம் நிவர்த்திக்கப் படாமலேயே இருக்கட்டும்.

இன்னும் எத்தனையோ விசேட தினங்கள் வரத்தான் போகிறது. இருக்கும் வரை எனக்கு எல்லா நாட்களும் ஒரே நாளே.

அவரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருந்தேன். இவ்வளவு விரைவில் முடிவு வந்துவிடும் என நினைக்கக் கூட இல்லை. இறுதி தினங்களில் என்னால் ஆன அனைத்து உபசரணையும் செய்தேன்; அவர் முகத்தில் ஒரு கணமெனும் மகிழ்ச்சி இருக்காதா என ஏங்கினேன். யாரிடம் பேசினால், அவர் மகிழ்ச்சி கொள்கிறார் என அலைந்தேன். அவர் நாலு வாய் சாதம் உண்டாலே பரம சந்தோஷம் ஆகும். என்ன செய்து என்ன? பல்வேறு காரணங்களால், அவர் இறுதி தருணங்களில் மகிழ்ச்சியாக இல்லை. அவர் எதிர்பார்த்தது அன்பான, கனிவான வார்த்தைகளை, ஆறுதலை, நேசத்தை.  அது எவரிடமிருந்தும் கிடைக்காமல், ஏமாற்றத்தோடே போய்விட்டார். ‘நானிருக்கிறேனே..’, உனக்கு வேண்டியதைச் செய்கிறேனே என்று சொல்வேன். புன்னகையோடு தலையாட்டுவார்.

இது கழிவிரக்கமோ, சுயபுராணமோ அல்ல. தெளிவாகத்தான் இருக்கிறேன்.

இதை ஏன்  இங்கே பகிர வேண்டும் என்ற என் கேள்விக்கு என்னிடமே பதில் இல்லை.. ஒருவேளை, என் விஜியைப் பற்றி யாரிடமாவது பேச விழைகிறேனோ என்னவோ? அந்த மகோன்னதமான ஜீவனை, அவரது பெருமைகளை சொல்ல வேண்டும் எனத் தவிக்கிறேன். கேட்பார் எவரும் இல்லாத இந்த சூழலில், தனியனாக என்னிடமே நான் சொல்லிக் கொள்ளும் முறையோ என்னவோ?



Thursday, August 27, 2015

GSLV

உள்நாட்டுத் தொழில் நுட்பம்.

வெளி நாடுகள், தொழில் நுட்பத்தை தர மறுத்த நிலையில், ருஷ்யாவின் க்ரையோஜனிக் இயந்திரம் தொடர் தோல்விகளைத் தந்த பின், நமது விஞ்ஞானிகள் உருவாக்கிய ராக்கெட். இரண்டு டன்களுக்கு மேல் பளு. PSLV ன் தொடர் வெற்றிகளுக்குப் பின், நாம் க்ரையோஜனிக்கிலும் ஜெயிக்க முடியும் என உலகுக்கு நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம்.

நமது S பேண்ட் தேவைகள் மிக அதிகம். கம்யூனிகேஷன் சேடிலைட் இன்றி அமைவதில்லை.

நமது முயற்சி வெற்றி கான விழைவோம்..


Monday, August 24, 2015

வெங்காயம்..

இந்தியாவில் 'வெங்காய அரசியல்' அரசுகளை வீழ்த்தும் வல்லமை வாய்ந்தது என்பது தெரிந்தது தானே? இந்த வருடம், விளைச்சல் எவ்வளவு இருக்கும், தேவைக்கு போதுமா, டிமான்ட் எவ்வளவு என்பது போன்ற தகவல்களைக்கூட முன்கூட்டியே திரட்ட இயலாத, திராணியற்றவர்களா நாம்?  மந்திரிமார்கள் எல்லாம் பின் என்னதான் செய்கிறார்கள்? செக்ரடரி நீட்டும் ஃபைல்களில்  கையெழுத்து போடுவதோடு சரியா?

கண்ட குப்பைகளையெல்லாம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யத் தெரிகிறது, வெங்காயப் பற்றாக்குறை வருமென யூகித்து, முன்னாலேயே டெண்டர் விடத் தெரியவில்லையா?  உள்ளுர் கொள்ளைக்காரர்கள் எல்லாம் பதுக்கிவைத்து லாபம் ஈட்ட வழி வகுக்கிறார்களா?

காங்கிரஸ் இருந்தபோது, வெங்காய மாலை போட்டுக் கொண்டு, தில்லியில் நர்த்தனமாடிய பா.ஜ.க,  இப்போது என்ன செய்கிறது?    ஏன் முன் கூட்டியே திட்டமிடவில்லை? வெங்காய தட்டுப்பாட்டை எதிர்பார்த்தார்களா இல்லையா?

வடக்கே வெங்காயம் இல்லையென்றால், சமையலே இல்லை என்பதும், சாதாரண மக்களின் இந்த  குறைந்த பட்ச தேவையைக் கூட நிறைவேற்ற முடியவில்லையெனில், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டிவரும் என்ற 'வோட்டு அரசியல்' கூடவா மறந்து போயிற்று?

அரசு இயந்திரத்தை முடுக்கத் தெரியாமல், என்ன Governance நடக்கிறதோ புரியவில்லை?

உத்தமமான காரியங்கள் சில

 அ. சிலவற்றை மறந்துவிடுதல்


  •       நன்றியற்றவர்கள் செய்யும் செயல்கள்.
  •      சீர் செய்ய முடியாத துக்கங்கள்.
  •       வேறு மாதிரியாக செய்திருந்தால் இன்னமும்  
         
    நன்றாக  இருந்திருக்குமே  என்ற சிந்தனைகள். 
  •      என்றோ ஏறுக்குமாறாக செய்துவிட்ட Embarrassing  ஆன செயல்கள்.
  •        பிறருக்கு செய்த உதவிகள்.    

   ஆ. சிலவற்றை மன்னித்துவிடுதல்:

            1.       செய்யத் தவறிய கடமைகளுக்காக வருந்துதல்..
            2.       திரும்பப் பெறமுடியாத அழகிய தருணங்களைப்  பற்றிய நினவு 
      3.       உறவுளின் தூஷனைகளை..
            4.       நட்புக்களின் பாரா முகத்தை..
            5.       பெரியோர்களின் தவறுகளை..
            6.       திரும்ப வாழமுடியாத காலங்களை எண்ணுவதை..

   இ. சிலவற்றை தவிர்த்துவிடுதல்

           1.       கூடா நட்பை...
           2.       தரமற்றவர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதை...
           3.       சபலப்பட்டுவிடுவோம் என உணர்ந்தால், அம்மாதிரியான 
               சந்தர்ப்பங்களை..
           4.       தகுதிக்கும் திறமைக்கும் அப்பாற்பட்டவற்றை பந்தாவிற்காக ஏற்றுக் 
               கொள்வதை..
           5.       வாக்குவாதம் வரும் என்று தெரிந்தால், அவற்றை..
           6.       உணர்ச்சிமயகாக இருக்கும் போது, முடிவெடுப்பதை..

   ஈ. சிலவற்றை விரும்பி நாடிச் செல்லுதல்..

          1.       உத்தமமானவர்களின் சேர்க்கை. சத் சங்கம்.
          2.       நல்ல புத்தகங்கள்.
          3.       ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தை..
          4.       மனதுக்குப் பிடித்த அமைதி தரும் இசை..
          5.       மலைகள், கடல்கள், ஆறுகள்..அருவிகள்.. வழிபாட்டுத் தலங்கள்.

 உ. சிலவற்றை கண்டும் காணாமற் போய்விடுதல்.

1. குழந்தைகளின் சிறு சிறு பொய்கள்.
2. வேலையாட்களின் / கீழ்-உடன் பணைபுரிவரின் சிறு தவறுகள்.
3. வாழ்க்கைத் துணையின் பலவீனங்களை..
4. உயரதிகாரிகளின் அற்ப அபத்தங்களை...
5, சமூக வலைத்தளங்களில் யாராவது, சானி வாரி அடித்தால்..  
  ஹி..ஹி..

  ஊ.  சிலவற்றை தவிர்க்கக் கூடாது..

             1.       தன் நலமே பாராது, ஆபத்துக் காலங்களில் எல்லோருக்கும் உதவி...
            2.       உறவுகளின் / நட்புக்களின் சுப /அசுப காரியங்களில் பங்கேற்பது..
            3.       தன்னையும்,தன் வீட்டையுமாவது சுத்தமாக வைத்திருத்தல்...
            4.       யோகாசனங்கள், தியானம்...
            5.       பசியோடிருப்போருக்கு உணவிடுவதை..

  எ.  சிக்கலில் மாட்டிகொள்ளும்  சூழல்கள்.

           1.       பொறாமை, கர்வம், அகங்காரம் கொள்ளுதல்..
           2.       திட்டமிடாமல் துவங்கும் எந்த செயலும்..
           3.       மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்ந்துகொள்ளௌம் சூழல்கள்..
          4.       யோசிக்காமல் பேசிவிடும் வார்த்தை..
          5.       பழி வாங்க நினைத்தல்..


Monday, August 3, 2015

இது நல்ல தருணம்.

புருஷன் ஓங்கி அறைஞ்சாலும் அறைஞ்சான், கண்ணுல இருக்கும் பீளை போச்சு என ஒரு வழக்கு மொழி சொல்வார்கள். அரசியல் காரணங்களுக் காகவோ அல்லது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காகவோ, தமிழ் நாட்டில் பூரண மது விலக்கு என்னும் கோஷம் தீவீரமாகியுள்ளது. எதுவானாலும் கண்ணில் இருக்கும் பீளை போகவேண்டும்.

பலர், மாநிலம் பெரும் பாய்ச்சலுக்கும் புரட்சிக்கும் தயாராகிவிட்டது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்த முயன்றாலும் உண்மை நிலவரம் அப்படி இல்லை. எப்படியும் மதுவிலக்கு வந்துவிடாது என குடிமக்கள் நம்புகிறார்கள். அரசியல்வாதிகள் மேல் அவ்வளவு நம்பிக்கை.

ஆனாலும் நிலைமை படு மோசமாகிவிட்டது எனப் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  சாலையோரங்களிலும், பஸ் நிலையத்திலும் ஆங்காங்கே சிலர் ஆடை விலகியிருப்பது கூடத்தெரியாமல், நினைவிழந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதை, சலனிமின்றிப் பார்க்கும் அளவிற்கு மிதமிஞ்சிய குடி தினசரி நிகழ்வாகிவிட்டது.

பார்த்தவர்களுக்குத் தெரியும். சாலையோர புளியமரத்தடியோ, சிதைந்து போன கோயிலோ, கட்டிடமோ, பாலத்தடியோ எதுவானாலும் அங்கே காலிபாட்டில்கள் இறைந்து கிடக்கும்.  சுற்றுலாத்தலம் ஒன்று பாக்கி யில்லை; எங்கும் பாட்டில்கள்.

சமுதாயத்தில் குறைந்த பொருளாதர வசதியுள்ள ஆட்களே கடுமையாகப் பாதிக்கப் படுகிறார்கள்.

ஆண்களில் பலர் உழைக்கத் தயாராக இல்லை. அன்றைய குடிக்கு சம்பாதித்து விட்டால், அதற்கு மேல் உழைக்கத் தேவை இல்லை என்கிறார்கள். வேலைக்கு ஆள் இல்லை என்பதே இங்கு நிலை. வட இந்திய மாநிலங்களிலிருந்து கடினமாக வேலைகளுக்கு ஆட்கள் இறக்குமதியாவதன் ரகசியம் இதுவே.

காலை ஐந்து மணிக்கெல்லாம் கூட, சாரயக்கடை வாசல்களில் ஒரு நூறு வாகனங்களையாவது பார்க்க முடிவதே, நாடு எந்த அளவு சீர்கெட்டுப் போயுள்ளது என்பதை விளக்கப் போதுமானது.

சாவோ, கல்யாணமோ, திருவிழாவோ, அரசியல்கட்சிகளின் ஊர்வலமோ அல்லது பொதுக் கூட்டமோ எந்தக் கொண்டாட்டம் ஆனாலும் சாராயம்தான் மையப்புள்ளி. அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டம் என்றால், டாஸ்மாக் வருமானம் எகிறும். படையாகக் குடித்துவிட்டு கண்ணில் தென்படுவதை யெல்லாம் உடை. சட்டமாவது-ஒழுங்காவது?

உளரீதியாக, சாராயம் குடிப்பது என்பது ஒரு விஷயமே அல்ல என்பது போன்ற ஒரு நிலை தமிழ்னாட்டில் உருவாகிவிட்டது. முன்பெல்லாம் குடித்துவிட்டு எங்கோ கிடக்கும் புருஷனையோ, மகனையோ இழுத்துவரும் நிலைமை மாறி எங்கு நோக்கினும் மட்டையாகிக் கிடப்பது சர்வசாதரணமாகிவிட்டது.

அடிமட்ட மக்களின் வருமாணம் அட்டை போல டாஸ்மாக்கால்  உரிஞ்சப் படுகிறது. உரிஞ்சப் பட்ட அவர்களின் பணம்தான் ‘விலையில்லா பொருளாக’ எச்சமிடப்படுகிறது என்பது புரியாத கூட்டம்.  புரிந்தாலும் மீண்டுவர இயலாத/முடியாத மக்கள்.

‘அட போப்பா...’ மதுவிலக்கெல்லாம் வராது என்பதே,  நவீன இளைஞர்கள் மற்றும் அடித்தள மக்களின் நிலை.

எதுவாயினும், மதுவிலக்கு ஒரு கோஷம் என்றளவிலாவது அங்காங்கே புகைவது நல்லதே.

பள்ளிச் சிறுவர்கள் கூட குடிக்கும் அளவிற்கு நிலைமை படுமோசமா கியுள்ளது. கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என அரசியல் கட்சிகள் சொல்வதைப் பயன்படுத்திக் கொண்டு, மது விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர இதுவே சந்தர்ப்பம்.  இதைச் செய்தால் கூடவே கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதும் அதிகரிக்கும்.

இந்த விஷச் சாராய ஊறல்களைச் செய்வோர் உள்ளூர் தாதாவாகவோ அல்லது அரசியல் ஈடுபாடு உள்ளோர்களாகவோ இருப்பர்.  உறுதியான அரசியல் நிலைபாடும் நேர்மையான காவல்துறையும் இருந்தால் மதுக்கட்டுப்பாடும்-விலக்கும் சாத்தியமானதே!

பக்கத்து மாநிலம் கேரளா அரசின் நிலைபாடு, யதார்த்தமானது. அங்கே பார்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன.  ஊருக்கு ஒரு சில கடைகள் மட்டுமே. அவர்களது அனுபவம் நமக்கு உதவக்கூடும். கூடவே மதுவிற்கு எதிரான வலுவான பிரச்சாரம்.


இது சரியாண தருணம்.. செய்வார்களா?